பார்ப்பனர் விஷமப் பிரசாரம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1927)

Rate this item
(0 votes)

மதுரை முனிசிபல் சேர்மனுக்கு மாதம் 1க்கு ரூ. 900 சம்பளம் கவுன்சிலர்களால் நிர்ணயிக்கப்பட்டவுடன் அச்சேர்மென் ஒரு பார்ப்பனரல்லாதாராயிருப்பதோடு பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட மறுப்பவராயிருப்பதால் நமது பார்ப்பனர்கள் ஒப்பாரி வைத்தழுது கூச்சல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மதுரை முனிசிபாலிட்டியானது சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் லக்ஷத்து நாற்பதினாயிரம் ஜனத்தொகையும், சுமார் 3. 4 லக்ஷ ரூபாய் வரும்படிக்கு மேற்பட்டதுமான பெரிய முனிசிபாலிட்டி. அதன் சேர்மென் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடு பாரிஸ்டர் பரீக்ஷை தேறினவரும், பாரம்பரியமாய் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஒரு கண்ணியமான கனவான். மதுரை மகா ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அவரது வேலையையும் மதுரைப் பட்டணத்தின் நிலைமையையும் உத்தேசித்து பெரும்பான்மையான கவுன்சிலர்களால் மாதம் 1க்கு ரூ. 900 கொடுக்க வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டு அந்தப்படி தீர்மானித்து இருக்கிறார்கள்.

இதனால் பொறாமை கொண்ட பார்ப்பனர்களிற் சிலர் தங்கள் ஜாதிப் புத்திக்கு ஏற்ப “பணம் போச்சே”, “பணம் போச்சே” என்று மாரடித்துக் கொள்ளுவதின் அர்த்தமென்ன? இந்தப் பார்ப்பனர்கள் தங்களும் தங்களது சிஷ்யர்களுடனும் வெளியேறினதாகச் சொல்லும் வெட்கங் கெட்ட வெளியேற்றத்தின் அர்த்தமென்ன? இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் உண்மையிலேயே பணம் நஷ்டமாகிறதே என்கிற கவலை இருக்குமானால் மாடு மேய்க்கக் கூடத் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகள் எல்லாம் க்ஷ.ஹ,க்ஷ.டு., என்கிறதாக பேர் வைத்துக்கொண்டு ஒரு பலகையை போட்டுக்கொண்டு ஜட்ஜ், முனிசீப் மேஜிஸ்திரேட் இவர்களை சரிப்படுத்திக் கொண்டு மாதம் 500, 1000, 5000, 10000 என்பதாக ஏழைகளின் தலையிலும் முட்டாள்களின் தலையிலும் கை வைத்து கொள்ளை அடித்து நாட்டைப் பாழாக்கி “அந்நிய அக்கிரம ஆட்சிக்கு” ஒற்றர்களாயிருக்கிறார்களே அதைப்பற்றி இவர்கள் கவனிக்கக் கூடாதா?

 

சராசரி மாதத்தில் நாலுநாள் வேலைகூட இல்லாத வெறும் வேலையான சட்டசபைத்தலைவர் உத்தியோகத்திற்கு மாதம் 1க்கு ரூ. 2000, 3000, சம்பளம் வாங்குகிறார்களே அதுவும் இந்த வருஷம் பார்ப்பனர் கட்சியான சுயராஜ்ஜியக் கட்சியாரே தங்களுடைய பக்த கோடிகளில் ஒருவரை நியமித்தார்களே அதில் ஏன் மாதம் ரூ.1900 குறைத்துக் கொள்ளக் கூடாது? இந்த 2000 ரூபாய்க்கு வேலை என்ன இருக்கிறது? 128 மெம்பர்களில் இந்த மெம்பரும் ஒருவர் தானே; அவர்களுக்குள்ள மெனக்கேடு தானே இவருக்கும்; இதைப்பற்றி எவருக்காவது “பணம் போச்சே, பணம் போச்சோ” என்கிற விசாரமிருக்கிறதா? மற்றபடி முனிசிபாலிட்டிகளில் தான் இவர்களுக்கு அதிக கவலை என்று வைத்துக் கொண்டால் ஈரோடு முனிசிபாலிட்டி யில் உள்ள சேர்மன் முனிசிபல் சொத்தைக் கொள்ளை அடிப்பதும் ரிகார்டுகளைத் திருத்தி பணம் திருடுவதும், கவுன்ஸிலில் பாசாகாத பொய்த் தீர்மானங்களை மினிட் புஸ்தகத்தை வீட்டிற்குக் கொண்டுபோய் புகுத்தி முனிசிபல் சொத்தை அனுபவிப்பதும் தனது சகாக்களான கவுன்சிலர்களுக்கும் முனிசிபல் சொத்தை வாரி இறைப்பதுமான அநேக அக்கிரமங்கள் செய்யப்படுகின்றன.

 

இதை எந்தப் பார்ப்பனராவது அவர்களது கட்சியாவது கவனிக்கின்றதா? எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது பார்ப்பன நிரூபங்களாவது கண்டித்ததா? அல்லது மந்தரிகளாவது கவனிக்கின்றார்களா? ஏன் கவனிப்பதில்லை என்று பார்த்தால் இத்திருடர்கள் பார்ப்பனரின் தாளத்திற்குத் தகுந்த படி ஆடிவிடுகிறார்கள். பார்ப்பன தேர்தலுக்கு வேலை செய்து வருகிறார்கள். அதோடு சில வெள்ளைக்காரருக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள். வெள்ளைக்காரர்கள் தயவும் பார்ப்பனர்கள் தயவும் இருந்து விட்டால் உலகத்தில் என்ன அக்கிரமம் செய்தாலும் கேள்வி இல்லாமற் போய் விடுகிறது. மந்திரிகளுக்கோ பார்ப்பன சிபார்சுகள் வந்துவிடுகிறது. அவர்களும் தங்களது வாழ்வு நீர்மேற்குமிழியாயிருப்பதால் பயப்படுகிறார்கள். இப்படி இன்னமும் எத்தனையோ இலாகாக்களில் உபயோகமில்லாமல் அவசியமுமில்லாமல் எத்தனையோ ஆட்கள் இருந்துகொண்டு மாதம் 1000, 5000 கொள்ளை அடிப்பதற்குச் சமானமாகவும் மற்றும் பல பெயரினாலும் கண்ணியமற்ற வழிகளில் தின்கிறதைப் பற்றி இந்தப் பார்ப்பனருக்கு ஒரு சிறிதும் கவலை இல்லாமல் வீண் வேஷம் போடுவதை ஜனங்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள். அப்படி இந்தப் பார்ப்பனருக்கு உண்மையில் அக்கரை இருக்குமானால் மந்திரிகள் சம்பளத்தை மாதம் 1000 ரூபாய் ஆக்கினால் ஆக்க தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முயற்சித்தால் இவர்கள் யோக்கியர்கள் தான். மதுரை சேர்மெனை விட இந்த மந்திரிகளும் சட்டசபைத் தலைவரும் எந்த விதத்திலும் அதிக யோக்கியதாம்சமுடையவர்கள் அல்ல என்பதனை சிறு பிள்ளைகள் முதல் யாரும் ஒப்புக் கொள்ளக் கூடியது தான். இதையெல்லாம் விட்டுவிட்டு யாராவது தங்களுக்கு அடிமைப்படவில்லையானால் அதற்காக கூப்பாடு போட்டு ஜனங்களை ஏமாற்றுவதென்பதை பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் என்பதல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1927)

 
Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.