மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகும் ரகசியமும் காங்கிரசின் பிரதிநிதித்துவ தன்மையும். குடி அரசு - கட்டுரை - 19.12.1926

Rate this item
(0 votes)

சென்ற கான்பூர் காங்கிரசின் போது மகாத்மா காந்தி காங்கிரஸ் காரியங்களில் இருந்து விலகிக் கொண்டது முதல் இது வரையில் எவ்வித காரியங்களிலாவது நிர்வாகத்திலாவது கொஞ்சமும் கலந்து கொள்ளாமல் இருப்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனால் இவ்வருஷம் பரிசுத்தமாய் பார்ப்பனர்களினுடையவும் படித்தவர்களுடையவும் காங்கிரசாய்ப் போய் விட்டதால் பொது ஜனங்களும் மகாத்மாவைப் போலவே காங்கிரஸ் காரியங்களிலிருந்து பெரும்பான்மையாய் விலகி வருகிறார்கள் என்பதை நமது பார்ப்பனர்கள் உணர்ந்து பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக பண்டித மோதிலால் நேரு என்கிற பார்ப்பனரை விட்டு மகாத்மா காந்தியை காங்கிரசில் கொண்டுவந்து காட்டி ஏமாற்றுவதற்கு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால் மகாத்மா இந்த தந்திரத்தை அறிந்தே “நான் காங்கிரஸுகு வேடிக்கைப் பார்க்கப் போகிறேனே அல்லாமல் காங்கிரஸ் காரியத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை” என்று பொது ஜனங்களுக்கு அறிவித்து விட்டார். ஏனென்றால் மகாத்மா பெயரையும் மற்றும் ஜெயிலுக்குப் போன தேச பக்தர்கள் பெயரையும் சொல்லிப் பொது ஜனங்களை ஏமாற்றி சட்டசபைக்கும் முனிசிபாலிட்டி தாலூக்கா போர்டுக்கும் நமது பார்ப்பனர் போனது அவருக்கு நன்றாய்த் தெரியுமாதலால், இனியும் பொது ஜனங்கள் ஏமாறாதிருக்க வெளிப்படுத்தி விட்டார். ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் இம்மாத ஆரம்பத்தில் மகாத்மாவைப் பார்க்கப் போயிருந்த இரகசியமும் இதுவே தான். எப்படியாவது மகாத்மாவை கையைப் பிடித்து சாணியை அள்ளச் செய்வது போல் கட்டாயப்படுத்தி காங்கிரஸுக்குப் போகச் செய்து பார்ப்பன காங்கிரஸ் அல்ல, மகாத்மா காங்கிரஸ்தான் என்று சொல்லி பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரம் தேடவே அவர் கஷ்டப்பட்டிருக்கிறார்.

 

அது மாத்திரமல்லாமல் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பனரல்லாதார்களும் வந்திருந்தார்கள் என்று பேர் பண்ணுவதற்காக சில பார்ப்பனரல்லாத கூலிகளுக்கும் ரயில் சார்ஜ்ஜும் டெலிகேட் கட்டணமும், சோறு, காப்பி, உப்புமா முதலியதுகளும் கொடுத்து கூட்டிக் கொண்டு போகப் போகிறார்கள். அதற்கு வயிற்றுச் சோற்று ‘தேசபக்தர்’களாகவே பலர் விண்ணப்பம் போட்டிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் அய்யங்கார் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான கூலிகள் மாத்திரம்தான் இதில் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

33 கோடி ஜனங்களுக்குப் பிரதிநிதித்துவம் என்று பார்ப்பனர்களால் பறையடிக்கும் காங்கிரசின் யோக்கியதை என்ன என்பதும், அதை நடத்துகிறவர்கள் யார் என்பதும், இதைப் பார்த்து ஏமாறுகிறவர்கள் யார் என்பதும், இதனால் பலனடைகிறவர்கள் யார் என்பதும் கடுகளவு சுயமரியாதையோடு யோசித்தால் களிமண் மூளைக்காரருக்கும் விளங்காமல் போகாது. அதாவது எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார், மாஜித் தலைவர் சரோஜினி தேவி பார்ப்பனத்தியார், காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார், உதவி காரியதரிசி ஸ்ரீமான் ராஜாராவு, காங்கிரஸில் பிரதான ஆதிக்கம் பெற்ற எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவர் பண்டித மோதிலால் நேரு, ஒரு காரியதரிசி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி, தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீனிவாசய்யங்கார். மாஜித் தலைவர் ஸ்ரீனிவாசய்யங்கார், காரியதரிசி சத்தியமூர்த்தி சாஸ்திரி, குமாஸ்தாக்கள், மானேஜர்கள், பார்ப்பனர்கள் (ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரை தேவஸ்தான ஆக்டை ஆதரித்ததற்காக கமிட்டியில் இருந்து நீக்கியாய் விட்டது) தமிழ் மாகாண சுயராஜ்யக் கக்ஷித் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், காரியதரிசி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, ஆந்திரா மாகாண மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் டி.பிரகாசம், பிராமணர் தமிழ் மாகாண கான்பரன்ஸ் மகாநாட்டுத் தலைவர் கே.வி.ரங்கசாமி அய்யங்கார், உபசரணைத் தலைவர் ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் (ஆனால் ‘குடிஅரசு’ க்குப் பயந்து கொண்டு ஏ.ரெங்கசாமி அய்யங்கார் மூலவராயிருந்து பார்ப்பனரல்லாதாரில் ஒரு உற்சவரைப் பிடித்து தன் இஷ்டப்படி காரியத்தை நடத்தி பொது ஜனங்களை ஏமாற்றினார்) தமிழ் மாகாண மகாநாட்டிலோ இரண்டு தலைவர்களும் தங்கள் பிரசங்கங்களைப் படித்ததும் ஆங்கிலத்தில். மகாநாட்டுக்கு 12 ஜில்லாக்களும் 2 1/2 கோடி ஜனங்களுக்கும் பிரதிநிதிகளாகப் போயிருந்த டெலிகேட்டுகள் 200 க்குள்.

 

அதிலும் பார்ப்பனர்கள் 100-க்கு 75. சென்னை மாகாணத்தில் நடைபெறும் ‘தேசீயப் பத்திரிகை’களோ நான்கு. ‘இந்து’ அய்யங்கார் எடிட்டர், ‘மித்திரன்’ அய்யங்கார் எடிட்டர், ‘சுயராஜ்யா’ பந்தலு எடிட்டர், ‘தமிழ் சுயராஜ்யா’ அய்யர் எடிட்டர், ‘காங்கிரஸ் விளம்பர சபை’ சத்தியமூர்த்தி அய்யர் எடிட்டர், ஆங்காங்கு நிரூபர்கள் அய்யர். அய்யங்கார், சர்மா, ராவு, சாஸ்திரி. பார்ப்பனரல்லாத கனவான்களும் கலந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமோ ஸ்ரீமான் அமீத்கான் சாயபு, ஷாபி மகம்மது சாயபு, பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப் பிள்ளை, குழந்தை, ஜயவேலு இவர்களே முக்கியமாய் காரியத்தில் கலந்து கொள்ளும் சகல வகுப்புப் பிரதிநிதித்துவமும் பொருந்திய பார்ப்பனரல்லாதாராயிருக்கிறார்கள். பெயர் கடன் கொடுப்பதற்கோ ஸ்ரீமான்கள் மருதவானம் பிள்ளை; எழுதிக் கொடுத்ததை வாசிப்பதற்கோ ஸ்ரீமான்கள் கோவிந்தராஜ முதலியார், முத்துரங்க முதலியார்; சமயத்தில் ஒத்தாசை செய்வதற்கோ ‘தமிழ் நாட்டுத் தலைவர்கள்’. ஆகவே தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இதற்குள் அடக்கி விட்டது. ஆதலால் சுயராஜ்யத்திற்கும், சுயமரியாதைக்கும், வகுப்பு உரிமைக்கும் என்ன குறை என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

(குடி அரசு - கட்டுரை - 19.12.1926)

Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.