கல்பாத்தி. குடி அரசு - கட்டுரை - 31.10.1926

Rate this item
(0 votes)

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக்கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தேசித்து சென்னை சட்டசபையில், “பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம்” என்று ஒரு தீர்மானம் நிறை வேற்றியதும் ஞாபகமிருக்கலாம். அத்தீர்மானம் அமுலுக்கு வருவதற்கில்லாமல் “வேலையிருந்தால்தான் போகலாம்” என்று சட்ட மெம்பர் வியாக் யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களும் பலர் செல்ல முயற்சித்தும் அவர்களுக்கு 144 உத்திரவு போடச் செய்ததும் ஞாபகமிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டு களில் விசார ணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம். மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்பனர்கள் பேரில் நடவ டிக்கை நடத்தப் பட்டு தண்டிக்கப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மாஜிஸ்ட்ரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. “பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும்” என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் “திருட னைத் தேள் கொட்டியது போல்” மௌனம் சாதிக்கிறார்கள். பார்ப்பனரல் லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச் சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிறபோதும், சட்டங்களும் அநுகூலமாயிருக்கிற போதும், தேர் தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமை கூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்தத் தயாராயிருப்பார்களேயானால், இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்து விட்டால் நம்மை என்ன செய்ய மாட்டார் கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

குடி அரசு - கட்டுரை - 31.10.1926

 

Read 52 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.