மானங்கெட்டவர்கள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள்!

Rate this item
(0 votes)

தீபாவளி பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம்மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாட வேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர, நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ, கவலையோ இருப்பதில்லை.

ஒருவனை நாம் ‘பிராமணன்' என்றால் நாம் யார்? அவனை ‘பிராமணன்' என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்வில்லை என்றாலும் கூட, தன் கருத்து என்ன ஆகியது? அவனை ‘பிராமணன்' என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை ‘பிராமணன்' என்று அழைக்கின்றோம். நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரச்சாரங்களும், வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும்.

அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான், இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதாரங்களாகிய வேத, சாஸ்திர, புராண இதிகாசம்; அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரச்சாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.

இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் - இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரணங்களாகும்.

இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத - மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி, வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைப் போட்டவர்களாகி, நம் பின் சந்ததிகளுக்குமான உணர்ச்சி ஏற்படாமலும் இழிவுபடுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.
 
கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு, மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும் உரிமையையும், நடப்புகளையும், கீழ்ச்சாதியார் எதிர்த்து செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும். இது தான் தேவாசுர (சுரர் - அசுரர்) போராட்டமாகவும், ராட்சத சம்ஹாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும். எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும், இழிவும் ஏற்பட்டது என போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா என்பதுதான் இன்றைய பிரச்சினையாகும்.
 
இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஒன்றுதான் தீபாவளி. முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும் அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம்.தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்று தான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே, அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில், நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான் (கந்த புராணம் - இந்திரன் மனைவியை சூரன் சிறைப்பிடித்த கதை; ராமாயணம் - சீதையை ராவணன் சிறைப்பிடித்த கதை; தீபாவளி - நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை) மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன்.

இது தவிர இவன் பிறப்பும் வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனை கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவியாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை. அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம். இதுதான் "தீபாவளித் தத்துவம்'. ஆதலால் திராவிட மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.