சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம். குடி அரசு - சொற்பொழிவு - 12.09.1926

Rate this item
(0 votes)

எனதருமை வாலிப சகோதரர்களே!

 இச்சங்கத்திற்குப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் எனப் பெயரிட்டிருப்பதே பார்ப்பனரல்லாதாராகிய நமது பிற்கால ஷேமத்தில் மிகுதியும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்றைய தினம் வாலிபர்களாயிருக்கிற உங்களில் இருந்துதான் புத்த பகவானும், மகாத்மா காந்தியும், நாயர் பெருமானும், தியாகராயரும் போன்றோர் தோன்ற வேண்டும். இவர்கள் எல்லாம் உங்களைப் போல் வாலிபர்களாயிருந்தவர்கள்தான். எந்தத் தேசமும் எந்தச் சமூகமும் பெரும்பாலும் அவ்வத் தேசத்திய வாலிபர்களைக் கொண்டுதான் முன் வந்திருக்கிறதே அல்லாமல் பெரியோர்களையும் முதியோர்களையும் கொண்டல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்ட பெரியோர்களிடம் பொது நலமும் தியாக புத்தியும் காண்பது மிகவும் அரிது. சுயநலந்தான் வளர்த்து கொண்டு போகும். அவர்கள் பொதுநலத்திற்கு உழைப்பதாய்க் காணப்படுவது அவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்துத்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். மகாத்மாவைப் போலவும் நாயர் பெருமான் போலவும் தியாகராயர் போலவும் சிலரே உண்மையான பெரியோர்களாய் இருக்கக்கூடும். உதாரணமாக, நாயர் பெருமானுக்கும் தியாகராயருக்கும் பதிலாக வந்த கஷ்டத்தை ஈடு செய்ய முடியவில்லை என்பதை அனுபவத்தில் அறிந்து விட்டோம்.

33 கோடி மக்களில் மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக இன்னொருவரை நினைக்க முடியாமலிருக்கிறது. ஆதலால் உலக வாழ்க்கையில் ஈடுபடாத வாலிபர்கள் ஆகிய உங்களுடைய மனம்தான் பொது நலத்திற்கு ஏற்ற பரிசுத்தமான தன்மையுடையது. உங்களிடம்தான் எவ்வித தியாகத்தையும் எதிர்பார்க்கலாம். ஆனால் இதுபோழ்து நமது நாட்டில் வாலிபர் முன்னிலையில் மிகவும் மலிந்து கிடப்பது ராஜீய விஷயம். அது உங்களைப் போன்ற வாலிபர்களுக்கு மிகவும் ஆபத்தான காரியம் என்று எச்சரிக்கை செய்கிறேன். பொதுவாகவே ராஜீய விஷயமென்பது ஒரு நாணயக் குறைவான காரியம். இதைப்பற்றி அனேகம் பெரியோர்கள் ராஜீய விஷயத்தில் ஈடுபடுவதென்பதை மனிதன் எல்லாவித அயோக்கியத்தனமான காரியங்களையும் செய்து பார்த்தும் பிழைக்க முடியாவிட்டால் கடைசியாகப் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொள்ளத்தக்க அயோக்கியத்தனம் என்று சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய ஆறேழு வருஷ கால அனுபவத்தினால் அது சரி என்றே உணர்கிறேன். ஆதலால் உற்சாகமாகப் பேசும் வயிற்றுப் பிழைப்பு அரசியல்வாதிகளைக் கண்டும் அவர்கள் பேச்சைக் கேட்டும் ஏமாந்து போகாதீர்கள்.

 

உண்மையான அரசியல் சுதந்திரத்திற்கு இருக்க வேண்டிய பக்குவமே வேறு. நம் மக்களுக்கு இருக்க வேண்டிய நிலைமையே வேறு. இந்த நாட்டுக்கு எந்த விதத்திலும் இப்போது அரசியல் சுதந்திரம் அவ்வளவு முக்கியமானதல்ல. இந்நாட்டு மனித சமூகத்திற்கு வேண்டியதெல்லாம் முதலில் சுயமரியாதைதான். அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமை. பார்ப்பனரல்லாத வாலிபர்களாகிய உங்களிடமிருந்து உங்கள் சமூகம் இது சமயம் எதிர்பார்ப்பதெல்லாம் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொடுக்கும் படியாகத்தான். பார்ப்பனரல்லாத சமூகத்தில் பெரிய மனிதர்களானாலும் சரி, அரசியலில் பெரிய உத்தியோகம் பெற்றவர்களானாலும் சரி, சிறந்த மனிதர்களானாலும் சரி, துடிக்கும் ரத்தமுள்ள உங்களைப் போன்ற வாலிபர்களானாலும் சரி, தற்போது சுயமரியாதையற்றுத் தானிருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

 

இன்னும் எவ்வளவு பெரிய அரசியல் உரிமையும், உத்தியோகமும், பதவியும், கீர்த்தியும் பெற்று வாழ்ந்தாலும் அவையெல்லாம் தனித்தனி மனிதன் அனுபவித்து ஒழியத்தக்கதேயல்லாமல் அவர்கள் சாகும்போதே அவர்களுடைய சந்ததிகள் சுயமரியாதையற்றுத்தான் நடைப்பிணமாய் இருந்து சாவார்கள். ஆதலால் உங்கள் உழைப்பு பொது நலமும் தியாகமும் சுயமரியாதை பெறுவதற்குத்தான் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் நமது அரசியல் சுதந்திரத்தை விட நமது சுயமரியாதைக்குத்தான் விரோதிகள் அதிகமாயிருக்கிறார்கள். ஆதலால் இவ்வேலையில் இறங்குவதில் அஞ்சாமையும் மன உறுதியும் சலிப்பின்மையும் இருக்க வேண்டும். ஏனெனில் நமது சுயமரியாதைக்கு எதிரிகள் பெரும்பாலும் நமது நாட்டிலேயே இருக்கும் பார்ப்பனர்களே ஆனதால் அவர்களை வெல்லுவது சுலபமான காரியமல்ல. இதற்கு ஒற்றுமையும் தியாகமும் வேண்டும். இதுகள் உங்களிடம்தான் எதிர்பார்க்கலாம். ஆதலால் உங்களுக்குத் தன்னம்பிக்கையும் வேண்டும்; உங்களுக்குள் இருக்கும் பல குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். இதற்கு முதலாவது பிறவி காரணமாய் உங்களை விட உயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதையும், உங்களை விட தாழ்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் உங்கள் மனதைவிட்டு அறவே வெளியேற்ற வேண்டும்.

 

உங்கள் வாழ்க்கைச் சடங்குகளிலும் வைதீகச் சடங்குகளிலும் உங்களை விட பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் ஒழிய வேண்டும். பார்ப்பனரல்லாதாரில் பார்ப்பனரல்லாதாருக்குழைப்பதாய்ச் சொல்லும் வெகு பெரியார்களுக்கு இந்தக் குருட்டு நம்பிக்கை இருக்கிறதை நான் பார்க்கிறேன். உங்கள் கலியாண காலங்களில் பார்ப்பனர் இருந்து நடத்தி வைத்தால்தான் அக் கலியாணம் செல்லுபடி உள்ளதென்றும் நல்ல வாழ்க்கை ஏற்படும் என்றும் நம்புகிறீர்கள். உங்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு பார்ப்பனர் பக்கத்தில் இருந்து வீட்டிற்குள் தள்ளிக் கதவு மூடினால் தான் நல்ல குழந்தை பிறக்குமென்று நம்புகிறீர்கள். உங்கள் பெரியோர்களை நீங்கள் பார்ப்பனருக்குப் பணம் கொடுத்து மோக்ஷமடையச் செய்யலாம் என்று நம்புகிறீர்கள். இவற்றை ஒழியுங்கள்; ஒழிக்கப் பிரசாரம் செய்யுங்கள்.

நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இந்தப் பிரசாரத்திற்கு கொஞ்சமும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சரியான கட்டுப்பாடு வேண்டும். ஒவ்வொரு ஊர்களிலும் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஏற்படுத்த வேண்டும். இதற்கென்றே சிலர் புறப்பட வேண்டும். இதற்குப் பொருள் வேண்டும். பொருள் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. மகாத்மா காந்திக்கும் ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததால்தான் இவ்வளவு காரியங்கள் செய்ய முடிந்தது. இன்னும் ஒரு கோடி அவர் கையில் இருந்தால் இன்னும் இரண்டு வருஷத்திற்கு அவரது ஒத்துழையாமை நிலைத்திருக்கும். ஆதலால் பொருள் மிகவும் அவசியமானது. இதற்காகப் பொருள் சேர்க்க வேண்டும். கடைசியாக பிச்சை எடுக்கவும் தயாராயிருக்க வேண்டும். சரியானபடி கணக்கு வைக்க வேண்டும். யார் இதில் மும்மரமாய் வேலை செய்கிறார்களோ அவர்களை ஒழிக்க நமது எதிரிகள் பெரும் பழிகளைச் சுமத்துவார்கள். அதற்குப் பயப்படுவதனால் நாம் ஒரு காரியத்திற்கும் உதவ மாட்டோம். அனேக கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு வேலை செய்வது எப்படி தியாகத்தில் சேர்ந்ததோ அது போலவே எதிரிகளின் பழியை லக்ஷியம் செய்யாமலும் அதனால் நம்முடைய பெயர் கெட்டுப்போகுமே என்று பயப்படாமலும் கெட்டாலும் அனாவசியம் என்று எண்ணிக் கொண்டு வேலை செய்வதும் ஒரு பெரும் தியாகம்தான். மகாத்மா மீதில் என்ன என்ன பழியோ நமது பார்ப்பனர்கள் கட்டி விட்டார்கள். அவரது அஞ்சாமையும் பரிசுத்தத் தன்மையும் எதிரிகளின் பழிகளை எல்லாம் சாம்பலாக்கிவிட்டன.

 

உங்களுடைய விடுமுறை நாட்களை வீணாக்காதீர்கள். இச் சங்கத்தைப் பற்றி நமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இதன் காரியதரிசி ஸ்ரீமான் கூ.சு.சுந்தரம்பிள்ளையவர்கள் உண்மையான ஊக்கமுள்ளவர். அவரிடம் அற்புதசக்தி இருக்கிறது. அவர் பிடித்த காரியத்தை சாதிக்கும் ஆவேசம் உடையவர். அவர் கோயமுத்தூரில் தங்கியிருந்த சில நாளில் அபூர்வ வேலை செய்திருக்கிறார். ஸ்ரீமான் ஊ.ளு..இரத்தினசபாபதி முதலியாரின் அளவு கடந்த வெற்றிக்கு நமது பிள்ளை அவர்கள் முக்கியக் காரணமாவார். உங்கள் சங்கத் தலைவர் ஸ்ரீமான் ஆரியா ஒரு உண்மை வீரர். அவரைப் பற்றி நான் உங்களுக்கு சொல்வது தகப்பன் வீட்டுப் பெருமையை தங்கை தமையனுக்கு எடுத்துச் சொல்வது போலிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் சென்னையில் இருந்து நேரில் பார்த்து வருகிறீர்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றி என்ன என்னமோ கரடி விட்டாலும் அவர் அதை ஒரு சிறிதும் லக்ஷியம் செய்யாமல் கருமமே கண்ணாயிருக்கிறார். இப்படிப்பட்ட வீரர்கள் நமது சங்கத்திற்குக் கிடைத்தது நமது பாக்கியம்.

தவிர வரப்போகும் தேர்தல்களில் உங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்குப் பாடுபடுபவர்களுக்கு வெற்றி சம்பாதித்துக் கொடுங்கள். பார்ப்பன வாலிபர்கள் தேர்தலில் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பாடுபடுபவர்க்கு அவர்கள் தங்கள் படிப்பைக் கூட விட்டு விட்டு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பாடுபடுகிறார்கள். ஆதலால் நீங்களும் அவர்களைப் போலவே வீதி வீதியாய் ஊர் ஊராய்த் திரிந்து உங்கள் சுயமரியாதைக்கு வெற்றி அளியுங்கள்.

படுக்கையில் இருந்து எழும்போது இன்று உங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள். படுக்கைக்குப் போகும் போது இன்று என்ன செய்தோம் என்று நினையுங்கள். ஒன்றும் செய்யாத நாள் வீணாய்ப் போனதாகவும், உங்கள் வாழ்வில் ஒரு நாள் குறைந்ததாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய தபசு இருங்கள் . இனி எனக்கு விடை தாருங்கள். கை குலுக்கிப் போகிறேன் (பெருத்த கரகோஷம்)

குறிப்பு : 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதக் கடைசியில் சென்னை சர்.தியாகராயர் நினைவுச்சின்ன கட்டடத்தில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்து ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 12.09.1926

Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.