பள்ளிக் கூடத்தில் மதப்படிப்பு! விடுதலை - 07.08.1959

Rate this item
(0 votes)

(பெரியார் - நண்பர் உரையாடல்)

நண்பர்: பள்ளிக்கூடத்தில் மதப்படிப்பு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கல்வி - நிதிமந்திரி சுப்ரமணியம் சொல்லுகின்றாரே, அது பற்றி என்ன?

பெரியார்: அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் கவுண்டர் என்றாலும் அந்தக் காலத்துக் கவுண்டர் அல்ல. அதோடு கவுண்டர்களிலேயே கொஞ்சம் சூட்டிப்பும், பகுத்தறிவு உணர்ச்சியும் உள்ளவர்! அது மாத்திரம் அல்ல, கொஞ்சம் சீர்திருத்தவாதியுங்கூட! அப்படிப்பட்ட அவர் பள்ளிக்கூடத்தில் மதப்படிப்பு தேவை என்றால் அவை எல்லாம் நம் சித்தார்த்தன் சொல்லுவதுபோல சும்மா "டூப்" விடுகின்றார் என்றுதான் அர்த்தம்.

நண்பர்: என்ன அப்படிச் சொல்லுகின்றீர்கள்?

பெரியார்: இராஜாஜி மதம் என்று சொன்னாலே நான் "அவர் மேஜிக் பண்ணுகின்றார்" என்று சொல்லுகின்றவன். அப்படி இருக்க அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மதம் என்றால் "டூப்" விடுகின்றார் என்று சொல்லுவது மரியாதையான வார்த்தை என்றே கொள்ள வேண்டும்.

நண்பர்: என்ன இருக்க இருக்க பெரிய வார்த்தைகளை உபயோகப்படுத்திச் சொல்கிறீர்களே!

 

பெரியார்: பெரிய வார்த்தை என்ன வந்தது? "கொங்கருக்கு மதம் ஏது? கொழுக்கட்டைக்கு தலை ஏது?" என்பது பழமொழி. கொங்கர் என்பது கன்னடத்திலும், தெலுங்கிலும் குடியான கவுண்டர்மார்களைக் குறிக்கிற சொல் எனக்கு அவர்களை 75-வருடங்களாகத் தெரியும். அவர்களுடைய மதம் எல்லாம் ரொம்பவும் சிறிய உச்சிக்குடுமி, அதாவது மொட்டைத் தலைபோல் தெரியும்படி 3, 4-அங்குல நீளத்திலே ஒரு 10-மயிரை மாத்திரம் விட்டு முடிச்சுப் போடாமல் அப்படியே தொடைத்து விட்டுவிடுவதும்; மீசையை மொட்டை அடித்துக் கொள்வதும், தலை, நெற்றி உட்பட நிறைய சாம்பலைப் பூசிக்கொள்வதும் - அவ்வளவுதான். மதம் இப்படிப்பட்டவர்களில் 1000-இல் ஒருவர் மாமிசம் சாப்பிடமாட்டார். மற்றவர்கள் எல்லாம் அரைவாசி வெந்தாலே போதும்! இந்த நிலையிலே நல்ல காலையிலேயே, இறக்கிய தோப்பு அடிக்கள்ளு இன்றைய காஃபிப் போலப் பயன்படும் இதுதான்.

 

இவர்களில் பெரிய படிப்பாளி திருவிளையாடல் புராணத்திலே 4-பாட்டு, அருணாச்சலப் புராணத்திலே 4-பாட்டு, இவ்வளவுதான் பெரும் புலமை! இதற்குக் காரணம் அந்தக் காலத்துப் புலவர்கள் என்பவர்களுக்குப் பிச்சை எடுப்பதுதான் தொழிலாக இருந்ததனால் அவர்கள் எப்படியாவது பெரிய கவுண்டர்மார்களுக்கு 4-பாட்டு வரப்பண்ணிவிடுவார்கள். பெரிய கவுண்டர்மார் வீட்டில் இந்த இரண்டு புத்தகங்களும் இருக்கும். ஆனால் கோயம்புத்தூர் ஜில்லாதான் கொலைக்குப் பேர் போன ஜில்லா.

(நாங்கள் நாயக்கன்மார்கள். எந்த அளவிலும் இதற்கு இளைத்தவர்கள் அல்ல. பன்றிக்காலை சுட்டு ஒரு கையில் வைத்துக்கொண்டு, கள்ளு மொந்தையை இன்னொரு கையில் வைத்துக் கொண்டு, நாலாயிரம் பிரபந்தம் படிப்பவர்கள் தான். ஆனால் 60, 70-வயது ஆகிவிட்டதனால் இப்போது நாங்கள் சீமை படிப்புக்காரர் ஆகிவிட்டோம்)

 

என் தமையனார் மகனை 1911-இல் அவனது 11-வது வயதில் சீமைக்கு அனுப்பினேன்.

 

எங்கள் கொள்கை அப்போது 'பலிஜபிட்டகா புட்டவாலா பந்தாயிபுட்டி கொட்டவாலா' (தெலுங்கு)

"ஹீட்டியிறே பல்ஜிநாநேஹீட்டபேக்கு; ஹொடதறே பிராந்தி பொட்டியிந ஹொடைய பேக்கு" (கன்னடம்)

ஆனால் எங்கள் வீட்டில் எங்கள் தகப்பனாருக்குப் பிறகு கள்ளு, சாராயம் எங்கள் வீதி வழியில் கூட செல்லக்கூடாது என்றாலும் அதனால் நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை.

அந்த ஜில்லாவில் பெரும்பாலும் கணக்கன்கள் சோழிய வேளாளராகவே இருப்பார்கள்; இவர்கள் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். சுமார் 60- வருடங்களுக்குப் பிறகுதான் பார்ப்பனர்கள், கவுண்டர்கள் வீட்டுச் சடங்குகளில் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது என்று சொல்லலாம். ஆனாலும் 60-வயது கவுண்டரை 5-வயது பார்ப்பனப் பையன் "அடே கவுண்டா" என்றுதான் கூப்பிடுவான்.

ஊர்கள் தோறும் மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் கண்டிப்பாய் இருக்கும். மற்றபடி சிவன் கோயில் என்பது எங்கோ ஒவ்வொரு ஊரில் இருக்கும். இவ்வளவோடே நிறுத்திக் கொள்ளலாம். இவர்களுக்கு என்ன மதம் இருக்க முடியும்? மதக்கோட்பாடு என்ன இருக்க முடியும்? இந்த நிலையிலே இவர்கள் முன்னுக்கு வந்தது என்ன? அல்லது மதம் இல்லாமல் இவர்கள் கெட்டுப் போனது என்ன?

 

கவுண்டர்கள் ஆங்கிலம் படித்தார்கள். டவுனுக்குத் (நகரம்) தைரியமாகவும், தாராளமாகவும் வந்தார்கள். தேர்தல் காரணத்தினால் கவுண்டர் தயவு எல்லோருக்கும் வேண்டி இருந்தது. விரைவாக மேலே வந்துவிட்டார்கள். ஜனங்களுக்கு இப்போது நன்றாகத் தெரிந்திருக்கின்றது. சுயராஜ்ஜியம் என்றால் கவுண்டர் (படையாச்சி) இராஜ்ஜியமாக இருக்கணும். அதாவது எந்த நாட்டில் 100-க்கு 51-மக்கள் எந்த ஜாதியோ அந்த மக்கள் ஆட்சிதான் சுயராஜ்ஜியம் என்பது சித்தாந்தமாகிவிட்டது. நானும் அதற்குத்தான் பாடுபடுகிறேன். சுயமரியாதை இயக்கம் செய்த வேலையும் அதுதான். இந்த அளவிலே உள்ள மக்களுக்கு மதம் எதற்காக?

நண்பர்: என்ன ஆனாலும் மனிதனுக்கு ஓர் மதம் வேண்டாமா?

பெரியார்: சரி, மதம் என்றால் என்ன? இந்த நாட்டிலே பார்ப்பானை வாழ்விக்க வந்த பண்டங்கள் மூன்று.

1. கடவுள், 2. மதம், 3. சாதி.

இந்த மூன்றில் முதல் இரண்டு உலகத்தையே பற்றியவையாகும். நம் நாட்டை கடவுள், மதம், சாதி என்று மூன்றும் பற்றிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் நமக்குப் பெரிதும் கடவுளும் இல்லை; மதமும் இல்லை, காக்கை, குருவி, பாம்பு முதற்கொண்டு எழுத்து, கவி எல்லா ஜீவன்கள், வஸ்துக்கள் யாவற்றையும் சாதி பற்றிக்கொண்டு இருக்கிறது. இதிலே (சாதி) இருந்து தப்பித் தவறி திமிறி வெளியேறியவர்கள்தான் கக்கன், காமராஜர், சுப்பிரமணியம், அண்ணாத்துரை போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்கள் இந்த நிலைமைக்கு வந்தது இவர்களைச் சாதி தொடர்ந்து கொண்டே இருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?

இவர்கள் சாதிப்பிடியில் இருந்து திமிறி வெளிவந்ததற்குக் காரணம் மதத்தை ஒழிக்கும் வேலையில் தீவிரமாய் ஈடுபட்டிருந்த நிலைதான் என்பதல்லாமல் வேறென்ன?

கிறிஸ்தவனும், முஸ்லிமும் மதப்படிப்புக் கொடுத்து மதத்தைப் பாதுகாக்கின்றான் என்றால், அவன் தனது நேஷனை (தனது சமுதாயத்தை)ப் பாதுகாக்கின்றான். அவர்கள் மதத்தைப் பாதுகாப்பது. சமத்துவம், சகோதரத்துவம்.

அது அவர்கள் மதக்கடமை. சுப்பிரமணியமும், காமராசரும் மதத்தைப் பாதுகாக்கிறார்கள் என்றால், இவர்கள் கொள்கை என்ன? அதற்கு என்ன ஆதாரம்? இது அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர் "டூப்" விடுகிறார் என்று நினைக்கிறேன். இந்தக் காலத்திலே கடவுளைக் காப்பாற்றுகின்றேன் என்பவர்களைப் பார்த்தாலே பித்தத்தை வாந்தி எடுக்கின்றார்கள் என்று தோன்றுகின்றது.

அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மதத்தைக் காப்பாற்றுவது என்றால் யாருக்குப் பயந்துகொண்டு இந்த "டூப்" (பொய்யுரை) விடுகிறார் என்பது தெரியவில்லை. இன்றைய நிலைக்கு நாடு போகின்ற போக்குக்கு மதம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியம் இராஜாஜிக்கும், சங்கராச்சாரிக்கும், பாபு இராசேந்திர பிரசாத்துக்கும், இரகசியத்திலே நேருவுக்கும் தேவையானதுதான். நமக்கு எதற்குத் தேவை என்றே விளங்கவில்லை.

காமராசருக்கு அடுத்து முதன்மையான மந்திரி சுப்பிரமணியமாக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக மாட்டைக் கொன்று செருப்பு தானம் பண்ணவது போல் மதத்தைக் காப்பாற்றி முதன் மந்திரியாகப் பார்ப்பது மும்மடமை என்றுதான் சொல்ல வேண்டும்.

கல்வி மந்திரி என்கின்ற முறையில் அமைச்சர் அவர்கள் பள்ளியில் மதத்தைக் கற்றுக் கொடுக்கின்றேன் என்று சொன்னாலும், என் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தன்மையில் ஈரோட்டில் "சிக்க நாயக்கர் மகாஜனக் காலேஜ்" என்று ஒரு காலேஜ் மகாஜன அய்ஸ்கூல் என்கின்ற முறையில் ஒரு அய்ஸ்கூல், (உயர்நிலைப் பள்ளி) திருச்சியில் பெரியார் பயிற்சிப்பள்ளி என்ற பேரில் ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் (பயிற்சிப் பள்ளி) மாடல் ஸ்கூல் (மாதிரிப் பள்ளி) என்கின்ற பேரில் ஓர் எலிமெண்டரி ஸ்கூல் (தொடங்கப் பள்ளி) ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளில் கல்வி நிருவாகத்தில் நான் சிறிதும் தலையிடுவதில்லை. ஆசிரியர்களிடமோ, பிள்ளைகளிடமோ, கல்வியைப்பற்றி நான் பேசுவதும் இல்லை; பேசப்போவதும் இல்லை. ஆனால் அமைச்சர் அவர்கள் எதையாவது திணிப்பாரேயானால் என்வசம் உள்ள பள்ளிகள் என்பது மாத்திரம் அல்லாமல், மற்ற எல்லாப் பள்ளிகள் விஷயத்திலும் நான் அதற்குப் பரிகாரம் செய்துதானே ஆகவேண்டும்?

அமைச்சர் மதம் என்கின்ற பேரால் கீதை மதத்தைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தால், நான் ஏன் மதம் என்கிற பேரால் புத்தக் கொள்கையையும், சார்வாகக் கொள்ளையையும், உலகாயுதக் கொள்கையையும், அருகக் கொள்கையையும் சொல்லிக் கொடுக்கக் கூடாது? இவர்கள் எல்லாம் கீதாசிரியனைவிட யோக்கியர்களல்லவா? யோக்கியர்களாக இல்லாவிட்டாலும் தாழ்ந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

கீதாசிரியனோ - அவன் சரித்திரத்திலேயே உலகமறிந்த இழிமகன். மற்றவர்கள் உலகப் புகழ்பெற்ற மகான்கள். ஆகவே மதப்படிப்பு வைப்பதென்றால் யார் யாருக்கு என்ன என்ன மதம்? அதற்கு என்ன கொள்கை? என்பது வரையறுக்கப்பட வேண்டும். அப்படிக்கில்லாமல் குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொள்ளப்பட்டதாக இருக்கக் கூடாது என்பது என் ஆசை.

நண்பர்: மிகவும் நன்றி; மற்ற விஷயம் நாளை சந்திப்போம்.

பெரியார் - நண்பர் உரையாடல்.

விடுதலை - 07.08.1959

Read 54 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.