நுழைவுத் தேர்வு கூடாது. விடுதலை- 17.7.72 Featured

Rate this item
(1 Vote)

    கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர - சேர்த்துக் கொள்ளத் தகுதி உடையவன் என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும் பார்ப்பனியமா? அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பான் மூளையில் தோன்றியதுதானே?

     பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?

    கல்வித்துறையில் அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்துக்கு ஆவது வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு? வரி கொடுப்பதில் யார் 1 க்கு 3 ஆக, 4ஆக வரி கொடுக்கிறார்கள்? ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்? நாளைக்குப் பதவிக்கு, நிருவாகிகள் ஆசைப்பட்டால் ஓட்டர்களில் இதை எண்ணிப் பார்க்கமாட்டார் களா? கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்திரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்?
 
   உத்தியோகத்திற்குத் தகுதி - திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்கவேண்டுமென்றால் பெரிதும் ஜாதித் தரம் தவிர வேறு தரம் என்ன? நாம்தான் பாஸ் பண்ணாதவனைப் பெயில் ஆக்குகிறோமே! தகுதி - திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே?

   நான் மனித சமுதாயத்தின் தகுதி, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடையவன், அவைகளைப் பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக உழைத்து வந்தவன் - வருபவன் நான். மந்திரிகள் முதல் அவர்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்.

    கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிட காமராஜர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆக்கிவிடக்கூடாது.

   பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய் மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்கவேண்டும்.

    கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.

விடுதலை- 17.7.1972

Read 197 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.