கோயில். குடி அரசு - கட்டுரை - 01.08.1926

Rate this item
(0 votes)

இந்து மதத்தினரெனக் கூறப்படும் மக்கள் பல பிரிவும் பல வகுப்பும் பல குலமுமாக எண்ணுதற்கரிய சாதி சாதியென்று பிளவுண்டு ஓர் வகுப்பினருடன் மற்றோர் வகுப்பினர் சேராமலும் ஓர் குலத்தினரிடம் மற்றோர் குலத்தினர் உண்ணல் - தின்னல் கிடையாமலும் இருந்து வருகின்றனர். எவரிட்ட சாபமோ இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் ஒரே மதத்தினர் என்று கூறிக் கொண்டு இவ்வாறு பல பிரிவினராயிருந்து வருகின்றனர். இத்தகைய பிரிவிற்கெல்லாம் மூலகாரணம் “பனவராம் பெரும் படிறற் உஞயற்றிய கள்ளமாயை”. அதாவது சூழ்ச்சியிலேயே ஊறிப் பிறந்த வஞ்சகர்களான பார்ப்பனர்கள் என்னும் இரு பிறப்பாளர்கள் ஏற்படுத்திய திருட்டு வித்தியாசத் தத்துவமே யாகுமென்னும் பெரியார் வாக்கினின்று பார்ப்பனர்களே என்பதை அறிவாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டிலேயுள்ள கோயில்களெல்லாம் பண்டைத் தமிழ் வேந்தர்களால் சமரசம், ஒற்றுமை, நல்லொழுக்கம், பக்தி முதலிய தூய எண்ணம் துலங்க வேண்டுமெனக் கருதியே கோயில்கள் நிருமாணிக்கப் பெற்றதாகும். இதற்காக மானியங்களும் அவைகளைக் கட்டிய தமிழரசர்களால் ஏராளமாக விடப்பட்டிருக்கின்றன. பஞ்ச தந்திரத்தில் பெயர் பெற்று விளங்கும் பார்ப்பனக் கூட்டம் தந்திரமாய் தமிழரசர்களின் தயவாலும் பல தமிழர்களின் மூட நம்பிக்கையினாலும் சன்னஞ் சன்னமாக கோயில் அர்ச்சகர்களென்றும் ஆலயங்களை சுத்தப்படுத்துவோர் என்றும் புகுந்து நாளடைவில் கோயிலையே தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள்.

 

இப்பொழுது சைவ வைணவ கோயில்களிலெங்கும் பார்ப்பன ஆதிக்கமே மல்கிவிட்டது. நாட்டின் நல்ல காலமாக, கோயில் பொருளாதார விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கமில்லாதபடி- பார்ப்பனர் இஷ்டம் போல் செலவு செய்து கணக்கெழுதுவதற்கு முடியாதபடி- இந்து மத பரிபாலனச் சட்டம் என ஒரு சட்டம் வந்து அவர்களின் அகங்காரத்தை ஒருவாறு ஒடுக்கிற்று. இவ்வாறு பார்ப்பனர்களின் “கொள்ளை”த் தொழிலுக்கு இந்துமத பரிபாலனச் சட்டம் ஓரிடராயிருப்பதன் பொருட்டே பார்ப்பன ராஜ்யத்தை நிலை நாட்டுதற்கு முயன்று வரும் சீனிவாசய்யங்கார் கோஷ்டியினர் அச்சட்டம் கூடாதெனத் தங்கள் ஊத்தை வாய் திறந்து உளறியும் அதை அழிக்க வேண்டுமென்ற ஒரே பெருங்கருத்துடன் சட்டசபைக்கு மெஜாரிட்டியாகச் செல்ல முயன்றும் வருகின்றனர்.

 

சமத்துவம் விரவ வேண்டுமெனக் கட்டப்பட்ட ஆலயம் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு இப்பொழுது உதவி வருகிறது. சுவாமியிருக்கும்படியான கற்பக் கிரகத்திற்குள் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் தான் போகவேண்டுமென்றும் மற்ற வகுப்பார் போகக் கூடாதென்றும் இன்னின்ன வகுப்பார் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கவே கூடாதென்றும் இதைமீறி ஆண்டவன் பக்தியால் கோயிலுக்குள் பிரவேசித்துவிட்டால் அதனால் ஆலயத்தின் தூய்மையே அழிந்து விட்டதென்றும், அதனால் ஏற்பட்ட “தீட்டைப்” போக்க பார்ப்பனர்களே கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்றும் பார்ப்பனர்கள் பணித்து விட்டனர். இதனைச் சீர்திருத்தம் செய்வதற்கு தமிழ் நாட்டிலே ஓர் பெரும் எழுச்சி ஏற்படல் வேண்டுமென்பது நமது முக்கியக் கருத்துக்களிலொன்று. இந்துமத பரிபாலனச் சட்டம் சமூக சம்பந்தமாய் ஆலயத்தில் நடக்கும் அக்கிரமங்களை ஒன்றும் செய்வதற்கில்லை. தமிழர்களே இதற்கெனத் தனித்ததோர் பெருங்கிளர்ச்சி செய்தல் வேண்டும். இப்பொழுது நமது பார்ப்பனக் கட்சியினர் ஆலய விஷயத்தில் அக்கறை காட்டுவதெல்லாம் தங்களதும் தங்கள் வகுப்பினரதும் வயிற்றுப் பிழைப்பைக் கருதியேயாகும். எனவே கோயில் விஷயமாய்க் கிளர்ச்சிசெய்து பெருஞ் சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழர்களின் கடனேயாகும்.

 

பினாங்குவாசியான திரு.வை.க.சபாபதி முதலியார் கோயிலைக் காப்பாற்றுங்களென்று ‘தமிழ்நாடு’ வாயிலான் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்களில் பார்ப்பனர் செல்வாக்கு மிதமிஞ்சியிருத்தலை அழுத்தமாகக் கண்டிக்கிறார். கோயில்களில் பூசை செய்யும் பார்ப்பன அர்ச்சகர்களிற் பலர் ஒழுக்கங் குன்றி இழித கைமை உடையோராய் இருக்கிறார்களென்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறார். இதற்குச் சான்றாக,

சத்தியமின்றித் தனி ஞானந் தானின்றி

ஒத்தவிடயம் விட்டு ஓரும் உணர் வின்றிப்

பத்தியு மின்றிப் பரன் உண்மை யின்றி ஊண்

பித்தேறும் மூடர் பிராமணர்தான் அன்றே.

என்ற திருமூலர் வாக்கை தமிழர்கள் கவனிக்குமாறு அவர் எடுத்துக் காட்டி இடித்துக் கூறுவதோடு படிற்றொழுக்கம் மல்கி அந்தணத்தன்மை அருகி, பஞ்சமா பாதகம் நிரம்பியுள்ள ஒரு கூட்டத்தை பிறப்பளவில் உயர்ந்தோரெனக் கருதி கோயில் பூசை செய்ய விடுவதை விலக்கிவிட்டு ஒழுக்கத்தால் வேதியராக உள்ள நல்லோர்கள் எந்த சாதியில் இருந்த போதிலும் அவர்களை நமது கோயில்களில் பூசை செய்யுமாறு வேண்டுவன செய்தல் வேண்டுமெனப் பொறித்துள்ளார். ‘லோகோபகாரி’ பத்திரிகை இதைப் பற்றி எழுதி விட்டு தன்னுடைய முடிவுரையாக ‘‘நமது கோயில்கள் இன்னும் சீரழியாமலிருக்க வேண்டுமானால் நமது சமயம் சிறந்தோங்க வேண்டுமானால், இந்தச் சீர்திருத்தத்தை நம்மவர்கள் இன்னும் தாமதமின்றி உடனே செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளது. இதனைத் தமிழர்கள் கவனிப்பார்களாக.

(குடி அரசு - கட்டுரை - 01.08.1926)

Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.