‘பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்? விடுதலை - 01.05.1957

Rate this item
(0 votes)

ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

 

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

 

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

 

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!

இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

விடுதலை-01-05-1957 

Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.