சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே! விடுதலை- 23.1.1971

Rate this item
(0 votes)

தலைவரவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.

தலைவரவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்றால் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.

 

ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி, சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கின்றான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.

மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால் அது அவனுடைய அறிவின் பலனாலேயேயாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்றிருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.

 

பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிரயாயத்திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டுகளுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.

மற்ற மதக்காரனை விட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்கமாகத் திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.

 

நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால் இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறிஸ்துவனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்ற சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன என்பதற்கு எந்தப் பதிலைச் சொல்ல முடியும்?

இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றிக் காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துமதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை.

நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ திட்டுகிறோமென்றால் அதில் நம்மைத் திட்டியிருக்கிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால் நீ நான்காம் ஜாதி, இழி ஜாதி சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள் தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே கோயிலுக்குப் போகிறாய், முட்டாளாக இருப்பதால்தானே சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொள்கின்றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?

கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிகச் சுத்தமாகக் குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது; நீ சூத்திரன்; வெளியே நில்! என்கின்றான். அதைக்கேட்டு நீ வெளியே நின்று கன்னத்திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில்லையே! இப்படிச் செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா? என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும் சிந்தனையும் இல்லாததால்தானே!

6.12.1970 அன்று கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை

விடுதலை- 23.1.1971

Read 42 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.