சுயமரியாதைக்காரர்கள் கயவர்களா? விவேகமற்றவர்களா? புரட்டர்களா? குடிஅரசு - 04.10.1947

Rate this item
(0 votes)

"சுயமரியாதைக்காரர்கள் கடவுள் இல்லை, ஜாதி சமயம் இல்லை என்னும் கயவர்கள். வேத சாஸ்திரங்களையும் இதிகாச புராணங்களையும் மறுக்கும் விவேகமற்றவர்கள், நாஸ்திகர்கள்" என்று கூறும் ஆஸ்திகர்களே! சுயமரியாதைக்காரர்களைக் குறைகூறவும், வாயில் வந்தவாறு திட்டவும் பழகிக் கொண்டிருக்கிறீர்களேயல்லாமல் உண்மை என்ன என்பதை ஒருபோதாவது சிந்தித்தீர்களா?

மக்களது உழைப்பின் பயனை உறிஞ்சுவதற்காகவே ஜாதியும் சமயமும் திராவிடர்க்கிடையே புகுத்தப்பட்டன. மக்களைத் தத்தம் நிலைமையறியவொட்டாமல் மிருகங்களாக்குவதே இதிகாசங்களும் புராணங்களும். இழிநிலையில் வாழ வேண்டியதே இறைவனின் கட்டளையாகும் என எண்ணச் செய்வதே வேதங்களும் சாஸ்திரங்களும். மக்கள் மானத்தை விட்டொழித்து மண்ணுலகில் மெய் மறந்து வாழவேண்டுமென்பதற்காகப் படைக்கப்பட்டதுதான், விசித்திரமிக்க கடவுள்கள் இவை சுயமரியாதைக்காரன் கூறுவதுதான்.

இந்த மாதிரி, சுயமரியாதைக்காரன் கூறுவது பொய்யா? உலகத்தில் யாராயிருந்தாலும் அனைவருக்கும் அறிவுண்டு எனக் கூறுகிறவன் சுயமரியாதைக்காரன். ஆதலால் அறிவுபெற்று விளங்கும் ஆஸ்திகர்களே! சிந்தியுங்கள்! நன்றாகச் சிந்தியுங்கள்!

"கொள்ளை வினை
கூட்டுறவால்
கூட்டிய பல் சமயக்  
கூட்டமும் அக்
கூட்டத்தே கூவுகின்ற
கலையும்,
கள்ளமுறும் அக்கலைகள்
நாட்டிய பல்
கதியும், காட்சிகளும்
காட்சிதரு கடவுளரும்
எல்லாம் பிள்ளை
விளையாட்டு" என்று

பேசுகின்றவர் யார் தெரியுமா?

"நால் வருணம் ஆச்சிரம - ஆசாரணம் முதலாம் நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டு" என்பவர் யார்?

"இயல் வேதம் ஆகமங்கள்
புராணங்கள்
இதிகாசம் இவைமுதலா
இந்திரசாலம் கடையாய் உரைப்பர்
மயலொரு நூல் மாத்திரந்தான்
சாலமென அறிந்தார்
மகனே நீ நூல் அனைத்தும்
சாலமென அறிக" என்று
சாற்றுபவர் யார் தெரியுமா?
"நான்முகர் நல் உருத்திரர்கள்
நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல்
மதத்தலைவர் எல்லாம்
தேன் (மது) முகந்து உண்டவர்
எனவே விளையாடா நின்ற
சிறு பிள்ளைக்கூட்டமே" யாம்
என்று செப்புகின்றவர் யார்.
தெரியுமா?
இருட் சாதித் தத்துவச்
சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில்
ஒருவாக்கிப் போட்டு
மருட் சாதி சமயங்கள்
மதங்கள் ஆச்சிரம
வழக்க மெல்லாம் குழிக்கொட்டி
மண் மூடிப் போட்டு"

என்று சாத்திரங்களை எரித்துச் சாம்பராக்கி எருவாக்குக என்றும் மதங்களையும் வருணாசிரம வழக்கங்களையும் குழியில் கொட்டி மண்மூடிப் புதைக்க வேண்டும் என்றும் கூறுகின்றவர் யார். தெரியுமா?

"மதத்திலலே சமய வழக்கிலே
மாயை மருட்டிலே
இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்து
வீண் பொழுது கழிக்கின்றார்" எனவும்,
"குலத்திலே சமயக் குழியிலே
நரகக் குழியிலே
குமைந்து வீண்பொழுது
நிலத்திலே போக்கி மயங்கி
ஏமாந்து நிற்கின்றார்"

எனவும், உங்களின் உண்மையான நிலையை உரைப்பவர் யார். தெரியுமா?

"ஜாதியிலே மதங்களிலே சமய
நெறிகளிலே சாத்திரச் சந்தடி
களிலே கோத்திரர் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து
அலைகின்ற உலகீர்"
என்று உங்களை அழைத்து
"அலைந்தலைந்து வீணே நீர்
அழித்தல் அழகலவே"

என்று உங்கள் நிலைக்கு மனமிரங்கு பவர் யார் தெரியுமா?

இவ்வாறு கூறுகின்றவர் சுயமரியாதைக் கவிஞரல்ல. ஆஸ்திரர்களாகிய உங்களின் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரியவரான வடலூர் இராமலிங்க சுவாமிகளாவார்.

இவர் இவ்வாறு எழுதி வைத்திருக்கும் நூலைத் திரு அருட்பாவைச் செப்பி, மாலையைச் சாற்றி மண்டியிட்டு வணங்கின்றீர்கள். இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றவர்களை மருளர் என்றும் செப்பி மண், கல்லை வாரி எறிந்து மல்லுக்கு நிற்க வருகின்றீர்கள்.

இப்பொழுது என்ன கூறுவீர்கள்? சுயமரியாதைக்காரர்கள் கயவர்களா? விவேகமற்றவர்களா? புரட்டர்களா? நாஸ்திகர்களா?

சுயமரியாதைக்காரர்களைக் குறை கூறும் ஆஸ்திகர்களே உங்களின் உண்மையான நிலை என்ன என்பதை நீங்களே சிந்தித்து முடிவு கட்டுங்கள்.

சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள். சிந்தித்துத் தெளிவடைய முடிகிறதா எனப் பாருங்கள்!

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

குடிஅரசு - 04.10.1947

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.