நாங்களா தேசத்துரோகிகள்? விடுதலை-27.05.1949

Rate this item
(0 votes)

இவ்வித கொள்கையுடன் அமைதியான முறையில் தொண்டாற்றி வரும் எங்களைத் தேசத்துரோகிகள் என்றும், கடவுள் விரோதிகள் என்றும் தூற்றுவதும், எங்கள் கூட்டங்களுக்கும், பத்திரிக்கை நாடகம், புத்தகங்களுக்குத் தடை விதிப்பது நீதியோ, அறிவுடமை கொண்டதோ ஆகுமா என்று காங்கிரஸ் தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்!

நாங்களா தேசத்துரோகிகள்? பார்ப்பனர்கள் தேசத்துரோகிகளாயிருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் வடநாட்டானுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நேரில் காண்கிறோம். பார்ப்பானுக்கு நாட்டுப் பற்றில்லாமலிருக்கலாம். ஊசி, ஊசி என்று கூப்பாடு போட்டு நம் நாட்டில் பிழைத்து வரும் குருவிக்காரர்களைப் போன்று வேறு துறையில் பிழைக்க, வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்களுக்கு நம் நாட்டின் நலனைப்பற்றி எப்படி அக்கறை இருக்க முடியும். எனவேதான் நமது நாட்டுப்போர், மொழிப் போரில் பார்ப்பனர்கள் வடநாட்டானிடம் கூடிக்கொண்டு நம்மை எதிர்ப்பதின் ரகசியமாகும்.

 

காட்டிக் கொடுத்து வாழும் கூட்டம் தேசப்பக்தர்கள்! நாம் தேசத் துரோகிகளா? உங்களுக்கு இவைகளைச் சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா?

மற்றும் நாங்கள் சிறைக்குச் செல்ல பயந்தவர்களென்று யாராவது கூறமுடியுமா? கனம் ஆச்சாரியார் கூட பெரிய தியாகிதான்; சந்தேகமில்லை. ஆனால் இன்று 10- வருஷ சம்பளத்தை ஒரே வருஷத்தில் வாங்குகிறாரே! இவர் சங்கதியே இப்படியிருந்தால், மற்ற காங்கிரசார் தங்களது தியாகத்தைப் பண்டமாற்று போல விலை பேசுவதில் ஆச்சரியம் என்னயிருக்கிறது?

 

நானோ என்னைச் சார்ந்தவர்களோ பொதுவாழ்வின் காரணமாக, சொந்த வாழ்க்கையில் அப்படி உயர்ந்திருக்கிறோமா? காங்கிரஸ் திராவிடனே! எனது ஜாதகத்தைச் சற்று நிதானமாய்ப் பார்!

என் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்பட்டேனா? எனக்குள்ள சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதிலே கவலை கொண்டேனா? அவைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்தேனா? சிறை வாசமும், பொதுத் தொண்டுமே எனது வாழ்வாயிருக்கிறதேயன்றி எந்த வகையில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ காங்கிரஸ்காரர்கள் போல பொதுத் தொண்டை பேரம் பேசுகிறோம்? கொஞ்சமேனும் உங்களுக்கு நன்றி வேண்டாமா? எனக்காகவா இவ்வாறு பாடுபடுகிறேன். எந்தக் கட்சியினராயினும் பொதுவாக திராவிட மக்கள் அனைவரும் பஞ்சமன், சூத்திரன், இழிமகன் என்பது இதிகாசம், சாஸ்திரம், சட்டங்களிலும் நடைமுறையிலும் இருப்பது ஒழிய வேண்டும், எல்லோரும் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பதுதானே எனது கொள்கையும், கழகத்தின் பணியுமாகும்.

 

மந்திரிப் பதவி சட்டசபை முதலியவற்றை உங்களுக்கே விட்டுவிட்டு உங்களுக்கு அனுகூலமாக நாங்கள் சமுதாய இழிவு ஒழியப்பாடுபடும் போது நீங்களே எங்களை எதிர்க்கின்றீர்களே, பார்ப்பானுக்கு இது கஷ்டமாயிருக்கலாம், ஏனெனில் எங்கள் முயற்சி வெற்றியடைந்தால் அவர்களது ஏமாற்று உல்லாச வாழ்வுக்கு இடமிருக்காது என்ற காரணத்தினால் அருமைக் காங்கிரஸ் திராவிடனே நீயும் அவர்கள் பேச்சை நம்பி உனது நன்மைக்காகப் பாடுபடும் எங்களை உனது இனத்தவர்களாகிய எங்களை வீணாக விரோதித்துக் கொள்கிறாயே! இந்த 1949-ம் ஆண்டிலுமா அருமைக் காங்கிரஸ் தோழனே! உன் புத்தி, கோணல் தன்மையில் இருக்க வேண்டும்!

எந்த வகையில் திராவிடர் கழகம் காங்கிரசின் கொள்கைக்கு விரோதமானது; கூற முடியுமா? இந்நாட்டிலே "பறையன் - சூத்திரன் - பிராமணன்" என்ற பிரிவினைகளும், அதற்கான புராண இதிகாசங்களும் இருந்தால் அதைத் தழுவி எவரேனும் நடந்தால் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பேன் என்று நாளைக்கே சட்டம் செய், அவ்வித புராண இதிகாசங்கள் தீக்கிரையாக்கப்படும். மக்களுக்குச் சரிசமத்துவ நிலையையும் அறிவுமயமான உணர்ச்சியளிக்கும் வரலாறுகளே நாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவு போடு, நாளைக்கே நாங்கள் கழகத்தைக் கலைத்துவிட்டுக் காங்கிரசிலே சேருகிறோம்.

 

தந்தியையும், தபாலாபீசையும் தகர்த்த வீராதி வீரர்களே! தர்ப்பைப் புல் தத்துவத்தைக் கண்டு நடுங்கிறீர்களே. உங்களது வீரமெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாயிருந்துவரும் மக்களின் இழிவை ஒழிக்க பயன்படாதா? பதவிப் போட்டிக்குத் தான் பயன்படுமா? இது கேவலமல்லவா? ஏன் இதைச் செய்ய உங்களுக்குத் தைரியமில்லை; உங்களுக்குத்தான் தைரியமோ, சூழ்நிலையோ யில்லாவிட்டாலும் அதற்காகப் பாடுபடும் எங்களுக்கு ஏன் வீண் தொல்லை விளைவிக்கிறாய்?

உனது சுயராஜ்யத்திலே பிறவியின் பேரால் ஒரு கூட்டத்துக்கு ஒரு நீதியும், நாட்டுக்குரிய பெரும்பான்மையோரான சமூகத்துக்கு அநீதியாகவும் இருப்பது. இதற்குப் பெயர் ஜனநாயகமா? மக்கள் ஆட்சியா?

இதை நாங்கள் கேட்டால் கருப்புச் சட்டைக்காரர்களை விடாதே, அவர்கள் பேச்சைக் கேட்காதே, சமயம் நேர்ந்தால் கல்லெடுத்துப்போடு என்று எங்களை உன் எதிரி மாதிரி நடத்துகிறாயே!

அருமைத் திராவிடர்களே! இது ஒரு நல்ல சர்ந்தர்ப்பம், இதை நாம் நழுவவிட்டால், அல்லது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இன்னும் நூறு வருஷங்கள் ஆனாலும் நம்முடைய இழிதன்மையும், நாட்டின் வறுமையும் தீராது. எதிர்காலத்தில் துப்பாக்கி, வாள், கத்தி ஏந்தி ஒருவரோடு ஒருவர் கலவரம் விளைவித்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும். இன்றுள்ள அமைதி எதிர்காலத்தில் இருப்பது அரிது. எனவே அமைதியான காலத்தில்தான் அறிவு வளர்ச்சியைப் பெருக்க நாம் முற்பட வேண்டும்.

 

நமது புத்த பெருமான் இக்காரியங்களைத்தான் செய்தார். விக்கிரக ஆராதனை கூடாதென்றார். மக்கள் ஒழுக்கமாகவும், அறிவு கொண்டும் வாழ வேண்டுமென்றும் பாடுபட்டார். மூடப்பழக்க வழக்கம் ஒழிந்து மனிதத் தன்மையுடன் வாழ வகை செய்தார். அவர் கதி என்ன ஆயிற்று? அவரது இயக்கத்தை அடியோடு நாசம் செய்தனர். அவர்களது இடங்களைக் கொளுத்தினர், அவர்களை வெட்டினர் இந்நாட்டுப் பார்ப்பனர்கள். கடைசியாக புத்தரது சீரிய கொள்கையும், அவரது இயக்கத்தவர்களும் ஜப்பான் நாட்டிலே தஞ்சமடைய நேரிட்டது. இதனால் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் நஷ்டமேற்பட்டது.

பிறகு சமணர்களது காலம் வந்தது. அவர்களும் இதே பிரசாரம் செய்தனர். ஆண்டவன் பேரால் யாகம் செய்வதையும், ஜீவவதை புரிவதையும் எதிர்த்தனர். அவர்களையும் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் உயிரோடு கழுவில் ஏற்றி வதைத்தனர். கதையைப் பாருங்கள்; மதுரையில் இன்றும் உற்சவம் நடை பெறுகிறது. பதினாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியுள்ளனர். திருமறை - தேவாரங்களில் சமணர்களைத் திட்டித்தான் பாடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிறேன், சமணர்கள் செய்தது அல்லது அவர்களது கொள்கை மனித சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதென்று யாராவது கூறமுடியுமா? அப்படியிருக்க, இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அவர்களையும் அக்கிரமத்தால், சூழ்ச்சியால், வஞ்சகத்தால் ஒழித்தார்கள். பிறகு அம்மதம் ஒழிந்தது.

அருமைத் திராவிடர்களே! அப்படிப்பட்ட கூட்டத்தாரிடந்தான் இன்று அரசியல் அதிகாரம் வந்திருக்கிறது. அவர்கள் எங்களை மட்டும் வாழ வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியுமா? எங்களை விட்டுத் தொலையுங்கள். காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே! இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி! என் கதி எப்படியாகுமென்று நினைத்துப்பார்க்கவும் பயமாயிருக்கிறதே.

 

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தது போலவே காலம் கழித்து வருகிறேன்.

எனவே இப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு உணர்ச்சி வராவிடில், பின்னர் எப்போதுதான் சமயம் வாய்க்குமென்று நினைக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான முறையில் என்னைத் தவிர வேறு யாராலும் இயக்கத்தை நடத்த முடியாது என்று கூறுவேன். நான் பெருமைக்காக கூறவில்லை. மற்றவர்களெல்லாம் பெரிய பெரிய அரசியல் மேதாவிகளாகவும், பிரபுக்களாகவும் இருக்கலாம். அரசியல் செல்வாக்கும் பெறலாம். அதில் நான் தகுதியற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் சமுதாயத் துறையிலே நம் மக்களுக்கு இருந்து வரும் அடிமைத்தனத்தை ஒழிக்க எங்கள் இயக்கம் அதாவது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் செய்து வரும் பொறுப்புடைய காரியத்தைப் போல வேறு எவரும் எக் கட்சியும் இந்நாட்டிலே செய்தது கிடையாது.

எனது தொண்டும், சுயமரியாதை திராவிடர் இயக்கங்களின் பெருமுயற்சியுமில்லாவிடில் இன்றைய நிலையில் பார்ப்பனர்கள் நம்மை நெற்றியிலே சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று இறுமாந்து கூறியிருப்பார்களே?

அது மட்டுமா, தாழ்த்தப்பட்ட சமுதாயம் சற்றாவது தலை நிமிர்ந்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் எனது தொண்டல்லவா? எங்கள் இயக்கத்தின் முயற்சியல்லவா?

இன்னும் கூறுவேன் 15- ஆண்டுகளுக்கு முன் உத்தியோகத்துறையில் நமது நிலை எப்படியிருந்தது? இன்று எப்படியிருக்கிறது? நீதிபதிகளிலே முன்பு நம்மவர்கள் இருக்க முடிந்ததா? இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே? இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே? இம்முயற்சி யாரால் வந்தது? எங்களுடைய உழைப்பால் அல்லவா? வேறு யார் இந்த முயற்சிகளுக்குப் பாடுபட்டனர். கனம் ஆச்சாரியாரே கூறுவாரே, எங்களது தொண்டு இந்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்னீயத்தின் ஏக போக உரிமையை எவ்வளவு குறைத்திருக்கிறதென்று.


திருச்சி பீமநகரில், 24.05.1949- அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை-27.05.1949

Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.