ஜாதி ஒழிய வேண்டுமானால்... உண்மை - 14.9.1970

Rate this item
(0 votes)

ஜாதி ஒழிய வேண்டுமானால் கடவுள், மதம் ஒழிய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போலவே அவசியமான மற்றொரு காரியமான ஏழை, பணக்காரத் தன்மை ஒழிய வேண்டுமானால், தனியுடைமைத் தத்துவம் ஒழிந்தேயாக வேண்டும்.

ஜாதி ஒழிப்பு என்னும் காரியம் இன்றைய நிலையில் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி, அரசியல் சட்டப் பாதுகாப்பு இருப்பதுபோல், ஏழை, பணக்காரத் தன்மையும் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி இன்றைய அரசியல் சட்டம் தடையாய் இருக்கிறது. இவற் றிற்குக் காரணம் நமது அரசியல் சட் டத்தை உருவாக்கினவர்கள் பார்ப்பனரும், செல்வவான்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆனதால், அவர்கள் தங்களுக்கு நல்ல பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதே!

 

என்ற போதிலும் மக்களுக்குள், சென்ற 30, 40 ஆண்டுகளாகப் புகுத்தப்பட்ட இன உணர்ச்சி காரணமாக சட்ட மில்லாமலேயே ஜாதி ஒழிப்புக் காரியம் ஓரளவு மக்கள் உணர்ச்சியில் ஊறி வருகிறது. ஜாதியால் தாழ்த்தப்பட்டவர்கள், கீழ் ஜாதியார் என்பவர்கள் ஆகிய எல்லோருடைய உணர்ச்சியிலும் தங்களுக்கு மேல் ஒரு ஜாதி இருக்கக் கூடாது என்ற எண்ணம் நல்ல வண்ணம் வளர்ந்து- வலுப்பெற்று இருக்கிறது. என்றாலும், தங்களுக்குக் கீழ் உள்ள ஜாதியார் என்பவர்களிடம் புழங்குவதில் ஓரளவு இசைந்தாலும், கொள்வினை கொடுப்பனை என்பது, மேல்- கீழ் மக்கள் என்பவர்களிடம் பெரும் வெறுப்பாய்த் தான் காணப்படுகிறது.

 

கல்வி பெற்றவர்கள் என்பதிலும் இந்தத் தடை இருந்துதான் வருகிறது. இந்தத் தடை ஒழிய வேண்டுமானால், அரசியல் சட்டம் மாற்றப்படுவது மாத்திரமல்லாமல், புரட்சிகரமான ஜாதி ஒழிப்புச் சட்டமும் கொண்டு வர வேண்டும். எப்படி யென்றால் :-

1. உத்தியோகத் துறையில் தாழ்ந்த (தாழ்த்தப்பட்ட) ஜாதியாரும், உயர்ந்த ஜாதி என்று கருதப்பட்டவர்களும் தங்களுக்குள் திருமணம் செய்து கொண் டவர்களுக்குத் தாம் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.

 

2. தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோ ருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப் பட்டதாரிகளாக ஆக்கிவிட வேண்டும்.

3. அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

4. ஆண்களில் மேல் ஜாதியார் என்பவர்களிலும், கல்வித் தகுதி சிறிது குறைவாய் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மணம் செய்து கொண்டவர்களுக்கு முதல் உரிமை என்று வைத்துவிட வேண்டும்.

5. சர்க்கார் லைசென்ஸ் கொடுக்கும் தொழில், வியாபாரம், தொழிற்சாலை முதலியவற்றிலும் இந்த முறைகளைக் கையாள வேண்டும். இவற்றால் தகுதிக் குறைவோ, நிர்வாகக் குறைவோ ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

உயர் தகுதி (தேவையில்லாத தகுதி) என்பதுதான் குறைவாக இருக்கலாமே ஒழியத் தேவையான அளவு தகுதி என்பது எந்த விதத்திலும் குறைந்து விட முடியாது.

 

இன்று என்ஜினீயரிங், வைத்தியத்துறை முதலியவற்றிக்கு நாம் உயர்ந்த கல்வித் தகுதி, மார்க்குத் தகுதி, பாஸ் செய்த தகுதி என்பவற்றை எவ்வளவு கட்டுப்பாடு இருந்தும் அவை காரணமாக ஏற்றுக் கொள்வதே இல்லை. தெரிந்தெடுக்கும் கமிட்டியாருடைய சுதந்திரத்திற்குத் தான் பரீக்ஷிக்க விட்டிருக்கிறோம்.

அது எப்படி நடந்த போதிலும், அந்தக் காரணத்தினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எவரிலும் அந்தக் கல்வியில் தவறியோ தகுதியற்றோ, போனவர்களோ, போனவர்களாக ஆக்கப் பட்டவர்களோ, மற்றும் தொழில் பாஸ் செய்து தொழிலுக்குப் போனவர்களில், தொழிலுக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டோ, தள்ளப்பட்டோ போன வர்களோ, என்பதாக இதுவரை யாரையும் ஆக்கவில்லை, சொல்லவும் முடியவில்லை. அது மாத்திரமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்விக்கென்று ஏராளமான பணத்தை ஒதுக்கி வைத்துச் செலவழிக்கிறோம். இதைப் பற்றி இது வரை யாரும், எந்த மேல் ஜாதிக்காரரும் குறை கூறவேயில்லை.

மற்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் மிகமிகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று அவர்களது ஜனத்தொகை விகிதாசாரமாக 100க்கு 16 பேர்களுக்குப் பதவிகளை ஒதுக்கி, எப்படியோ பாஸ் செய்தால் போதும் என்று திட்டம் வைத்து இருக்கிறோம். இந்த முறையை - அந்த விகிதத்தை (அய்க் கோர்ட் நீதிபதிப் பதவி ஒன்று போக மற்ற) எல்லாப் பதவிகளிலும் நிறைவேற்றி வரு கிறோம். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாம் ஜாதி காரணமாக ஒதுக்கி வைத்து இருக்கிறோம். இவை மாத்திரமா! பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளைச் சேர்ப்பதிலும் இந்த முறையைக் கண்டிப்பாய் நிறைவேற்றி வருகிறோம். அதாவது முதல் வகுப்பில் தேறியவனை விட்டுவிட்டு மூன்றாவதாகத் தேறியவனைச் சேர்த்துக் கொள்கிறோம்.

இவற்றால், உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள், உயர்ந்த எண்ணிக்கை மார்க்கு வாங்கினவர்கள் முதலியவர்கள் இவற்றை வாய்மூடி ஏற்றுக் கொண்டுதான் வருகிறார்கள்.

இவற்றிலிருந்தே தகுதி , திறமை, அனு பவம் என்பவை எல்லாம் பலித்தவரைப் பார்த்துக் கொள்வது என்று, ஒரு பித்த லாட்டத் தத்துவத்தில்தான் இருக்கிறதே தவிர, எந்த நியாயத்தையும், நேர்மையை யும் கொண்டல்ல என்பது யாருக்கும் நன்றாய் விளங்கும்.ஆகவே ஜாதி அமைப்பு, ஜாதி முறை, ஜாதிப் பிரிவு, ஜாதி உணர்ச்சி ஒழிய வேண்டும் என்றால் மேற்கண்ட மாதிரியான ஒரு முறையைக் கையாண்டு தான் தீர வேண்டும். இதற்கேற்ற அரசியலை அவசிய மேற்பட்டால் பலாத்காரத்தின் மூலமாவது, மேலும் அவசியப்பட்டால் இதற்கு இணங்குகிற அன்னிய ஆட்சி யாரின் உதவி கொண்டாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசிய மாகிறது.

ஏனெனில், ஒரு நாட்டு மக்கள் சமுதாயத்தில் 100-க்குத் 97 பேர்கள் கீழ் ஜாதி மக்களாய்க் கடவுள் செயல்படி, மதக் கட்டளைப்படி, சாஸ்திர தருமங் களின்படி, சட்டத்தின்படி, நடப்புப்படி பல்லாண்டுகளாய் இருந்து வருவது என்றால், அது மாத்திரமல்லாமல் எந்த விதத் தனி யோக்கியதையும், தகுதியு மில்லாமல் 100-க்கு மூன்று பேர்களாக இருக்கும் ஒரு சிறு கூட்டத்தார், பல தந்திரங்களால் அரசியல் ஆதிக்கம் பெற்று, அதன் காரணமாக மேல் ஜாதி யாக, முதல் ஜாதியாக, மற்றவர்களைத் தொட்டால் தீட்டு, மற்றவர்கள் கண் ணால் கண்ட உணவை உண்டால் தீட்டு, மற்றவர்கள் மொழியைப் பேசினால் தீட்டு என்றும் கூடத் திட்டம் வைத்துக் கொண்டு, பெரும் பாலானவற்றை அமுலிலும் நடத்தி வரும் போது, இதற்கு ஆட்சியும் இடம் கொடுத்து வரும்போது, அதை இந்த ஆட்சியால் மாற்ற முடியா விட்டால், ஏன் அவசியப்பட்டால் அன்னிய ஆட்சியாளரைக் கொண் டாவது இதற்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடாது? என்பதுதான் எனக்குக் கவலை கொண்ட சிந்தனை யாக இருந்து வருகிறது. அதனால் தான் ஜாதி ஒழிப்பு என்று மேற்கண்ட திட் டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏழை பணக்காரன் என்கின்ற நிலைமை ஒழிக்கப்படுவதற்கும் இதுபோன்று ஒரு திட்டம் தயாரித்துத்தான் ஆக வேண்டும்.

தந்தை பெரியார்.

உண்மை-14.9.1970

Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.