மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள். விடுதலை - 03.04.1969

Rate this item
(0 votes)

இந்த நிகழ்ச்சியானது வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி மாத்திரமல்லாமல் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் வழிசெய்யும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் சற்றேறக் குறைய 2000, 3000-ஆண்டு காலமாக விவாகம், முகூர்த்தம், கல்யாணம் என்னும் பெயர்களால் பெண்களை அடிமையாக்குவதையே அடிப்படையாகக் கொண்டு திருமணங்கள் நடைபெற்று வந்தன என்பதோடு, ஜாதி இழிவை நிலைநிறுத்தவும், மக்களின் மூட நம்பிக்கை - மடமை - முட்டாள்தனம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதை முக்கியமாகக் கொண்டு நடைபெற்று வந்தன.

இதை மாற்றிப் பெண்கள் ஆண்களைப் போன்ற சம உரிமை உடையவர்கள் என்பதையும், மனிதனிடையே ஜாதியின் காரணமாக இருக்கும் உயர்வு, தாழ்வையும், ஜாதியையும் ஒழிக்கவும், மக்களிடையே இருக்கும் மடமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை - பகுத்தறிவற்ற தன்மை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் சுயமரியாதை இயக்கமானது இம்முறையை மாற்றி, ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணமும், ஜாதி பாகுபாடு, உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிலைநிறுத்தவும், பகுத்தறிவிற்கு ஏற்ற வகையில் முட்டாள்தனமான - மூடநம்பிக்கையான சடங்குகள் இன்றித் தேவையானவற்றைக் கொண்டு 1928-முதல் இந்நாட்டில் பகுத்தறிவுத் திருமணம் - சுயமரியாதைத் திருமணம் - சீர்திருத்தத் திருமணம் என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது என்றாலும், இதுவரை நம் நாட்டில் இருந்து வந்த ஆட்சிகள் யாவும் ஜாதியைப் பாதுகாப்பதையும் - மக்களின் முட்டாள்தனம், மூட நம்பிக்கை - மடமை ஆகியவற்றை நிலை நிறுத்துவதையும் தங்கள் கொள்கையாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்ததால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லத்தக்க தல்ல என்று சட்டம் செய்திருந்தன.

 

தற்போது அமைந்திருக்கும் ஆட்சியானது திராவிட முன்னேற்ற கழகப் பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால், இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி உள்ளது. அதற்கு முதலில் நாம் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

இம்முறை தவிர்த்து இதுவரை நம் மக்களால் பின்பற்றி நடத்தப்பட்டு வந்த திருமணங்கள் என்பவை யாவும் பெண்ணடிமை - ஜாதி இழிவு - மூட நம்பிக்கை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு, அவற்றை நிலைநிறுத்தும் வகையில் நடைபெற்று வந்ததுதான் இதுவரை நம்மிடையே நடைபெற்ற திருமணங்கள் ஆகும்.

 

பெண் என்பவள் தன் கணவனுக்கு அடங்கி அவன் சொற்படிக் கேட்டு, அவன் மனம் கோணாமல், நடந்து கொள்ள வேண்டியது அவளுடைய கடமையாகும்.

நம் இலக்கியங்கள் - புராணங்கள் - நீதி நூல்கள் என்பவை யாவும் பெண்ணடிமையை வலியுறுத்துபவையே யாகும். ஒருவன் தன் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கலாம். அடகு வைக்கலாம் தான் பட்ட கடனுக்கு ஈடாக அவளை வைக்கலாம் என்று சாஸ்திரம் இருப்பதோடு, இது போன்று நடைபெற்றதாகப் பல புராணக் கதைகளுமிருக்கின்றன.

 

சமீப காலம் வரைத் திருமணம் என்கின்ற நிகழ்ச்சி பார்ப்பான் தவிர்த்த சூத்திரன் யாருக்கு நடந்தாலும் முதலில் அப்பெண்ணைப் பார்ப்பான் அனுபவித்த பின் தான் திருமணம் செய்து கொண்டவன் அனுபவிக்க வேண்டும். 100-வருஷங்களுக்கு முன் வரை கணவன் இறந்தால் அவனோடு அவன் மனைவியையும் உயிரோடு வைத்து எரிக்கும் (உடன்கட்டை ஏற்றும்) பழக்கம் இருந்தது. வெள்ளைக்காரன் வந்து பல ஆண்டுகளுக்குப் பின்தான் அதைச் சட்டவிரோதமாக்கினான்.

பெண்ணடிமை நீங்க வேண்டுமானால் பெண்கள் நல்ல வண்ணம் படிக்க வேண்டும். தங்களுடைய வாழ்வைத் தாங்களே நடத்திக் கொள்ளும் அளவிற்கு ஊதியம் வரக்கூடிய ஒரு தொழிலைப் பயின்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய தொண்டின் காரணமாக இன்று பெண்கள் ஓரளவு படிக்க முன் வந்திருக்கின்றனர்.

ஆண்கள் பார்க்கும் வேலைகள் அனைத்தும் பெண்களும் பார்க்க உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்களைப் போல் சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கிருக்க வேண்டும். இன்றைக்குப் பெண்கள் ஆண்களைப் போல் மனித சமுதாயத்திற்குப் பயன்படாமலே இருந்து வருகின்றனர். அந்நிலை மாற்றப்பட வேண்டும்.

அடுத்து, மூட நம்பிக்கையை வலியுறுத்தும் வண்ணம் ஜாதகம், பொருத்தம், ஜோசியம், நாள், நட்சத்திரம், நேரம் என்பவையெல்லாம் பார்ப்பதோடு, அறிவிற்கும், தேவைக்கும் கொஞ்சமும் சம்பந்தமற்ற வகையில் பானைகள் அடுக்குவது, அம்மியை மிதிப்பது, பட்டப்பகலில் விளக்கை ஏற்றி வைப்பது, குச்சிகளை போட்டு நெருப்பை உண்டாக்கி அதில் நெய்யைக் கொட்டித் தீ மூட்டுவது போன்றவை மனிதனின் மூடநம்பிக்கையும் - மடமையையும் - முட்டாள்தனத்தையும் பாதுகாப்பதற்காகவே தவிர, இவற்றால் எந்த ஒரு பலனும் கிடையாது.

இவை அனைத்தும் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் என்பவை தான் சீதை, சந்திரமதி, சாவித்ரி, கண்ணகி ஆகியோருக்கு நடந்தவை என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லக் கூடியவனாக இல்லை. இதிலிருந்தே ஜாதகம், பொருத்தம், ஜோசியம் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே தவிர, அதனால் எந்தச் சிறு பலனும் இல்லை என்பதை உணரலாம்.

இதுபோன்று தான் ஜாதி பார்ப்பது என்பதாகும். ஜாதி பார்த்துச் செய்வதால் ஆணுக்கேற்ற பெண்ணும், பெண்ணுக்கேற்ற ஆணும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஜாதி என்பது நம் இழிவைப் பாதுகாக்கப் பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தவிர, வேறல்ல என்பதையும் உணர்ந்து, மணமக்கள் தங்களின் வாழ்ககையில் சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கையான காரியங்களில் ஈடுபடக் கூடாது. குழந்தைகள் பெறுவதைக் கூடியவரைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் சமுதாயத்திற்குத் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

27.03.1969 அன்று கீழ்த்திருப்பூந்துருத்தியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை-03.04.1969

Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.