சூத்திரத்தன்மை - இழிவை நிலைநிறுத்தவே கோயில்கள்! விடுதலை-12.07.1969

Rate this item
(0 votes)

திராவிடர் கழகத்தின் கொள்கை சமுதாயத் தொண்டு, சமுதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமுதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும் என்பதோடு, இதற்காகத் தேர்தலில் ஈடுபடாமல் பதவிக்குப் போகாமல் மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்களைத் திருத்த வேண்டும் என்பதாகும்.

முன்னேற்றக் கழகத்தின் கொள்கையும் இதுதானாகும் என்றாலும், அவர்கள் தேர்தலுக்கு நின்று ஆட்சிக்குப் போய் அதன் மூலம் திருத்தம் செய்ய வேண்டும் என்கின்ற கொள்கை உடையவர்கள். அதன்படி தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியமைத்து இருக்கின்றனர். அதன் மூலம் தொண்டாற்றுகின்றனர்.

 

சமுதாயத் தொண்டு செய்கிறவர்களுக்குக் கடவுள், மதம், சாஸ்திரம், அரசியல், பதவி, மொழி, இலக்கியம், புராணம், இதிகாசம் ஆகிய எவற்றிலும் பற்றிருக்கக் கூடாது. இதில் எந்தப் பற்றிருந்தாலும் அவனால் உண்மையான சமூதாயத் தொண்டு செய்ய முடியாது.

கடவுளின் பெயரால் தான் மதத்தை, சாதியை, சாஸ்திரத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். எனவே, கடவுள் ஒழிந்தால் தான் மதம் ஒழியும், ஜாதி ஒழியும், சாஸ்திரம் ஒழியும் என்பதால் தான் கடவுள் ஒழிய வேண்டும் என்கின்றோம். கடவுள் இல்லை என்று நாங்கள் சொன்னது இங்குள்ள பலருக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால், கடவுளை உண்டாக்கியவனே அது இல்லை என்று சொல்லித்தான் உண்டாக்கி இருக்கிறான். கடவுளை உண்டாக்கிய போதே அது உன் கண்ணிற்குத் தெரியாது, உன் கைக்குச் சிக்காது, மனோவாக்குக் காயங்களால் அறியப்பட முடியாதது என்று சொல்லித்தான் - இல்லை என்பதற்கு என்னென்ன சொல்ல முடியுமோ, அவ்வளவையும் சொல்லித்தான் உண்டாக்கி இருக்கிறான். அவன் மறைத்துச் சொன்னதை நாங்கள் வெளிப்படையாகச் சொல்கின்றோம். இந்த கடவுளால் தான் நம் மக்கள் இழி மக்களாக, சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றார்கள்.

 

ஒரு மனிதன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி – அதிகாரம் உள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய படிப்பு எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படிப்புப் படித்திருந்ததாலும், அவன் கோயிலுக்குப் போகிறான் என்றால் அவன் தன்னைச் சூத்திரன் என்பதை ஒப்புக் கொண்டுதானே போகின்றான். அப்படி அவன் தன்னைச் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதால்தானே அவன் கோயிலுக்குப் போய் வெளியே நிற்கின்றான். அப்படி இல்லை என்றால், பார்ப்பான் இருக்கிற இடம் வரைக்கும் அவன் செல்லலாமே!

நம்மை விட இழிவான பார்ப்பான், சிலைக்குப் பக்கத்திலிருந்துக் கொண்டு நம்மைப் பார்த்து நீ சூத்திரன், வெளியே நில் என்கின்றான். இப்படி ஒரு சமூதாயத்தை இழிவு படுத்துவதற்காகவா கோயில் இருக்க வேண்டும்? கடவுள் இருக்க வேண்டும்?

 

நீ எதனால் சூத்திரன் என்றால் கடவுள் அமைப்பால், மதப்படி, சாஸ்திரத்தில் உள்ளபடி சூத்திரன், என்கின்றான். கடவுளே நான்கு சாதியை உண்டாக்கினார். கடவுளின் முகத்தில் பிறந்தவன் பார்ப்பான், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்கின்றான்.

உன்னைப் போலத்தான் துலக்கனும், கிறிஸ்தவனும், கடவுள் நம்பிக்கைக்காரர்கள். அவர்களுக்கும் மதம் இருக்கின்றது, கடவுள் இருக்கிறது. அவர்களில் எவனும் உன்னைப் போல குரங்கையும், கழுதையையும், மாட்டையும், கடவுள் என்று கும்பிடுவது கிடையாது. அதற்கு ஆறுகால பூசை செய்வது கிடையாது. 6-கை, 12-கை, 4-தலை, 6-தலை என்று உருவம் அமைத்து வணங்குவதும் கிடையாது. மனத்தில் நினைத்து தொழுவதோடு சரி; அதனால் அவனில் பறத்துலுக்கன், பார்ப்பனத் துலுக்கன், பறக் கிருஸ்தவன் - பார்ப்பனக் கிறிஸ்தவன் என்கின்ற வேறுபாடியில்லாமல் துலுக்கன் என்றால் அத்தனை பேரும் சமம். அது போலக் கிறிஸ்தவன் என்றால், அத்தனை பேரும் சமம் என்று வாழ்கின்றனர். அவர்களுக்குள் ஏழை, பணக்காரன் என்பதைத் தவிர வேறு எந்த பேதமும் இல்லை.

ஆனால், நீ வணங்குகின்ற கடவுள் - உன்னைச் சூத்திரனாகப் படைத்த கடவுள் நீ பின்பற்றுகின்ற மதம் - உன்னைச் சூத்திரனாக வைத்திருக்கின்ற மதம். நீ கடைப்பிடித்து நடக்கிற சாஸ்திரம் உன்னைச் சூத்திரனாக்கி வைத்திருக்கின்ற சாஸ்திரமாகும். இவை உன் சூத்திரத்தன்மைக்குப் பாதுகாப்பாக – அவை அழியாமல் நிலை நிறுத்தப்படுவதற்காக இருக்கின்றனவே ஒழிய, இவற்றால் நம் சமூதாயம் அடைந்த பலன் என்ன? எதற்காக மனிதனில் ஒருவன் பார்ப்பானாக இருக்க வேண்டும்? எதற்காக ஒருவன் பறையனாக – கீழ் மகனாக சூத்திரனாக உயர்ந்தவனாக இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? என்று இந்நாட்டில் எங்களைத் தவிர எவனுமே சிந்திக்கவில்லையே!

 

மனித அறிவின் சக்திக்கு, இன்னும் எல்லை கண்டுபிடிக்க முடியவில்லை – வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய மனிதனின் சக்தியால் மனிதன் சந்திர மண்டலம் வரை சென்று திரும்புகின்றான். இன்னும் சில நாட்களில் அதிலிருந்து சாமான்கள் கொண்டுவரப் போவதாகச் சொல்கின்றான். இதோடு மனித அறிவு நின்று போய்விடவில்லை. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அடுத்தடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான்.

மனிதனின் அறிவு வரவர வளர்ச்சியடைந்து, மணிக்கு 20- ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, நம் மக்களின் அறிவு இன்னமும் 2- ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கியதாகவே இருக்கின்றது. இன்னமும் நாம் கோயிலையும், குழவிக் கல்லையும் கட்டிக் கொண்டு எல்லாம் கடவுள் செயல், எல்லாம் கடவுள் செயல் என்று இன்னும் மடையர்களாக இருக்கின்றோம்.

வெள்ளைக்காரன் 150-ஆண்டுக் காலம் நம்மை ஆண்டு - நம் இயக்கம் 4-ஆண்டுக் காலம் ஆற்றிய தொண்டால் நம் மக்கள் சற்று மாறி இருக்கின்றனர் என்றாலும் இன்னும் பழைய செயல்களை பழைமையைக் கைவிடாமலேயே இருக்கின்றோம்.

கடவுள் இல்லை என்று சொல்லிக் கோயில்களை எல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கிய பின் தான் ரஷ்யா அறிவு புரட்சி பெற்று பல விஞ்ஞான சாதனைகளைச் செய்திருக்கின்றனவே ஒழிய, அதை நம்பிக் கொண்டு காரியங்கள் செய்வது கிடையாது.

எனவே, நம் மக்கள் அறிவு பெற வேண்டுமானால், மான உணர்ச்சி பெற வேண்டுமானால், இந்தக் கடவுள் நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும். கடவுள் உருவங்களை உடைத்தெறிய வேண்டும். மத, சாஸ்திர, புராண, ஆதாரங்களை - நம்மை இழி மக்களாக்கி வைத்திருக்கின்ற இலக்கியங்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.

நம்முடைய நல்வாய்ப்பாக இன்று தமிழர்கள் - அதுவும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு ஆட்சி நமக்குத் தெரிய இந்த நாட்டில் அமைந்ததே கிடையாது. என்ன விலை கொடுத்தாவது இந்த ஆட்சி ஒன்றால் தான் நம் இழிவை சூத்திரத்தன்மையை மானமற்ற தன்மையை ஒழிக்க முடியும்.

ஏனென்றால், இந்த ஆட்சியிலுள்ளவர்கள் கடவுள் - மத – சாஸ்திரங்களை சாதிகளை ஒழிக்க வேண்டுமென்ற கொள்கையுடையவர்கள்; தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டுமென்கின்ற இலட்சியம் உள்ளவர்கள். ஆனதால், இவர்கள் தான் நம் இழிவைப் போக்கக் கூடியவர்கள் ஆவார்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறி பொது மக்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

22.06.1969- அன்று லால்குடி சிறுதையூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய நொற்பொழிவு.

விடுதலை-12.07.1969

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.