மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. விடுதலை- 03.02.1964

Rate this item
(0 votes)

நான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள். இந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.

கோழிப்பண்ணை என்று சொன்னாலே தானிய விவசாயம் போல இதுவும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடுகின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படுகின்றது.

 

இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.

சிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்லப்பட்டு தின்னப்படுகின்றன.

 

இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய்யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப்பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.

உண்மையாக மாமிசம் தின்னாதவர்கள் 2 கோடி கூட இருக்க மாட்டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடுவான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடியவர்களும் உள்ளார்கள்.

 

நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லைச சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின்றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடுகின்றார்கள்.

நான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான்ச சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள்.

மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங்களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.

மேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தினார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்!

 

மேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதியற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.

சைனாக்காரனையும், மலாய்க்காரனையும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண்டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடையாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளையும் சாப்பிடுவான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின்றார்கள்.

நாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.

இதன் காரணமாகத்தான் தொழிலாளர்கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர்களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம்பேறியாகி விட்டார்கள்.

அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.

அரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின்றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.

அரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.

நாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடுகின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம் அரிசி சோறு மிகுதியாகவும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.

நமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக்கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமிசத்தை உண்ண மறுக்கின்றார்கள்.

தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமாயணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.

பிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.

30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல.

அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின்றார்கள்.

மாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்?

அரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக்குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங்களுக்கு விலை இறங்கினால் நமக்கெல்லாம் நல்லது.

ஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறைவில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராளமாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய்கின்றார்கள்.

இந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.

மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும்.

21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.

விடுதலை- 03.02.1964

Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.