பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். விடுதலை-10.6.1971

Rate this item
(0 votes)

நம் மக்கள் ஆரிய மாயையில் சிக்கி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இத்திருமண முறை என்பதாகும். இம்முறை மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நம்மிடையே புகுத்தப்பட்டதாகும். பெண்ணடிமை, மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகிய மூன்று காரியங்களே அவையாகும்.

இம்மூன்றையும் ஒழிக்க வேண்டுமென்று இந்த நாட்டில் யாருமே பாடுபட முன்வரவில்லை. தோன்றிய மகான்கள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் எல்லாம் மனிதனின் மானமற்ற தன்மை. மூடநம்பிக்கை, ஜாதி இழிவு ஆகியவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதோடு, இவற்றை நிலைநிறுத்தவே பாடுபட்டு வந்திருக்கின்றார்கள்.

 

சுமார் 30 ஆண்டு காலத்திற்குமுன் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது மனித சமுதாய மடமையையும், ஜாதி இழிவையும், பெண்ணடிமையையும் ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருவது. ஆகையால், இவற்றை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பழைய திருமண முறையினை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.

நமது நாட்டில் மொத்த ஜனத்தொகையில் சரி பகுதியாக இருக்கிற பெண்கள், மனித சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆண்களுக்கு அடிமையாகிப் பிள்ளை பெறுவதையும், அதைக் காப்பதையுமே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் தற்போது பெண்ணடிமை நீங்கி வருகின்றது.

 

எனக்கு இப்பெண்ணடிமையை நீக்க, திருமண முறையையே நீக்கவேண்டும், சட்ட விரோதமாக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகின்றது. நம் நாட்டில் அடிமை முறை இருந்தது, பெண்களை விற்கும் முறை, உடன்கட்டை ஏறும் முறை, குழந்தைகளைப் பலியிடும் முறை போன்ற அனேகக் கொடுமைகள் இருந்தன. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது இக்கொடுமைகள் யாவும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டன.

அதன் பின்னும் வெள்ளையன் ஆட்சியின் போது பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பால்ய விவாகம் என்கின்ற மணமுறை, கணவன் பிடிக்காமல் பிரிந்து சென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரால் மிகச் சிறிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. நமது இயக்கம் தோன்றிய பின்தான் இவையெல்லாம் நம் போராட்டத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக மாற்றியமைக்கும்படிச் செய்தோம்.

 

நமது நாட்டு இலக்கியங்கள், தோன்றிய பெரியவர்கள், அறிவாளிகள் என்பவர் யாவரும் பெண்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களே ஒழிய, பெண்கள் சுதந்திரத்தோடு வாழ வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை.

வள்ளுவனைச் சொந்த புத்தியுள்ளவன் என்பார்கள். அவனும் ஒரு சில இடங்களில் பார்ப்பன புத்தி கொண்டவனே யாவான். அவன் பெண்களை அடிமையாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றான். நம் பெண்கள் பகுத்தறிவு பெற்றிருந்தால் இப்போதிருப்பது போல் இரண்டு மடங்கு வளர்ச்சியினை இந்நாடு அடைந்திருக்கும்.

பெண்கள் குறைந்தது 20 வயதுவரைப் படிக்கவேண்டும். கோவில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும். அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். உத்தியோகத்திற்குச் செல்பவர்களைத் தவிர மற்ற பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.

நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு உள்ள பெண்கள் சிங்காரித்துக் கொள்வது கிடையாது. லுங்கி கட்டிக் கொள்கிறார்கள். மேலே சட்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் யாவருடனும் கலந்து பழகுகிறார்கள். தன் கணவனைப் பிடிக்கவில்லையென்றால், வேறு பிடித்த ஆணோடு சென்று விடுவார்கள். அங்கு அது குற்றமாகக் கருதப்படுவது கிடையாது.

இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதால் அவர்களுக்கு உலக அறிவு வளர முடியாமல் போய்விட்டது. இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் பழைமையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார்களே ஒழிய, கோவிலைக் கட்டி மக்களை மடையர்களாக்கிப் போனார்களே ஒழிய, மனிதனுக்கு அறிவு இருக்கிறது, அதைக் கொண்டு சிந்தித்து அதன்படி நட என்று எவனும் சொல்லவில்லை. உலக வளர்ச்சியில் நம் நாட்டு மக்களுக்கு ஒரு சிறு பங்குகூட இல்லையே!

கல்லையும், செம்பையும் உருவமாக்கி _ கடவுளாக்கி அவற்றை வணங்கும்படியாகச் செய்து, திருவிழா, உற்சவம் என்று நடத்தி மக்களை மடையர்களாக்கினரே ஒழிய, அறிவுப்படி நட என்று எவனுமே சொல்லவில்லை. காரணம் தெரியாத _ சமாதானம் சொல்ல முடியாத காரியங்களை மனிதன் கைவிடவேண்டும்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும். நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் மக்கள் அறிவு வளர்ச்சி பெற முடியாமல் போனதற்குக் காரணமே கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றாலேயேயாகும். இவற்றையெல்லாம் மாற்றினால் நம் மக்களின் அறிவு வளர்ச்சியடையும். மற்ற மக்களுக்கு நம் அறிவு பயன்படும்; நம் அறிவிற்கு அவ்வளவு சக்தியுண்டு.

இறுதியாக, மணமக்கள் வாழ்வில் சிக்கனமாக வாழவேண்டும். ஆடம்பரமாக வாழக் கூடாது. பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். லுங்கி அணியவேண்டும், சட்டையணிந்து கொள்ளவேண்டும். நகை அணியக் கூடாது. வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். கூடுமானவரை குழந்தை பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று மிஞ்சினால் இரண்டு. அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

 

11.4.1971 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை-10.6.1971

Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.