Monday, 28 September 2020 01:45

கோவில் நுழைவுப் போராட்டம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 78

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமலையப்பன்

 

கோவில் நுழைவுப் போராட்டம்

கோவில் நுழைவும்

தீண்டாமையும் தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத்தன்மைக்கு விரோதமான தென்பதையும் அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்து வமும் நிலவமுடியுமென்பதையும் இப்பொழுது அநேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றி, அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமூக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன் வந்திருக்கின்றனர்.

தீண்டாமை ஒழிந்து விட்டால், அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்களுக்கும், வைதிக மதங்களுக்கும், அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகிவிடும் என்பதை அறிந்திருக்கின்ற திரு. எம். கே. ஆச்சாரி யார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதிகர்களையும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் அகப்பட்டுக் கிடக்கும் பொதுஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்கவில்லையென்று துணிந்து கூறலாம்.

தீண்டாமையை ஒழித்து, அதனால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை கைதூக்கிவிட வேண்டியது ஒழுங்கும் நியாயமும், அவசியமும் ஆகும் என்ற உணர்ச்சி தற்போது நமது நாட்டு உயர்ஜாதி மக்கள் எனப்படுவோர்கள் சிலருடைய மனத்தில் பட்டிருப்பதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் செய்யும் கிளர்ச்சியும், சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக நமது இயக்கம் செய்துவரும் பிரச்சாரமுமே என்பதை மறுக்க முடியாது. ஆனால், தீண்டாமையை எந்த வகையினால்ஒழிக்க முடியும் என்பதை ஆலோசிக்கும் போது, எல்லோரும் கீழ்க் கண்ட விஷயங்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாது.

இந்து மதத்தைச் சாராதவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களும் இந்துமதப் பற்றுடைய மக்களால், அந்நியர்கள், மிலேச்சர்கள் என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்ஜாதி இந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நீண்ட காலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்ஜாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும், அவர்கள் வசிக்கும் தெரு, குளம், கிணறு, பள்ளிக்கூடம், கோயில் முதலியவைகளைச் சமத்துவமாக அனுபவிக்க முடியாதவர்களாகவும் சண்டாளர்கள் என்றும், பாவிகள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பாதகர்கள் என்றும், புலையர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர். இந்தத்தகாத நடத்தைக்குக் காரணம் என்னவென்பதைக் கொஞ்சம் பொறுமையோடு ஆலோசித்தால் விளங்காமற் போகாது.

அந்நியராகவிருந்தாலும் அவர்களிடம் மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்களைப் போல கல்வியும், செல்வமும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் அமைந்திருப்பதே அவர்கள் மற்ற உயர்ந்தஜாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும்.

சகோதர இந்துக்கள் என்று சொல்லப்பட்டாலும் தாழ்த்தப்பட்டவர்களிடம் படிப்பும், செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் இல்லாமையே இவர்கள் உயர்ஜாதி என்று சொல்லப்படுகின்ற இந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமைப் படுத்தப்படுவதற்குக் காரணமாகும்.

ஆகையால், உண்மையில் தீண்டப்படாத சகோதரர்கள் சமூக சமத்துவம் பெற வேண்டுமானால் அவர்கள், கல்வியிலும் திறமையிலும், செல்வத்திலும், செல்வாக்கிலும், ஒற்றுமையிலும் மற்றவர்களைப் போல சமநிலையை அடைய வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இக்காரியத்தை இப்பொழுதோ அல்லது இன்றைக்கோ அல்லது நாளைக்கோ அல்லது மறுநாளோ அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டுச் செய்துவிட முடியாது. நாளடைவில்தான் இதைச் செய்யமுடியும். ஆனால், தற்போது, அவர்களுக்குச் சமத்துவ மளிக்கச் செய்யப்படும் சாதகமான செயல்கள் கோயில் பிரவேசம், தெரு, குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளைத் தடையின்றி அனுப்விக்க இடமளிப்பது போன்ற காரியங்களாகும் என்பதும் உண்மையேயாகும்.

ஆகவே, இவைகளில் தீண்டப்படாதவர்கள் சமத்துவ உரிமை பெறும் விஷயத்தில் அரசாங்கத்தாரும், சமூக - அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்பதில் அய்யமில்லை.

ஆனால், பொதுஜனங்களோ இன்னும் வைதிகர் வசப்பட்டவர் களாகவும் ஜாதி, மதம், தீண்டாமை முதலியவைகளில் கொண்டுள்ள நம்பிக்கை மாறாதவர்களாகவும் இருந்து வருவதினால், தீண்டப்படாத சகோதரர்கள் மேற்கூறியவைகளில், சமத்துவம் பெறுவதற்கு கஷ்டமாக இருந்து வருகிறது. இவற்றுள் மற்றவைகளைக் காட்டிலும் கோயில் பிரவேசம் என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது.

இந்தக் கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூர், நாசிக் முதலிய இடங்களில் சத்தியாக்கிரகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முன் பல தடவைகளில் மதுரை, திருச்சிராப்பள்ளி. நாகர் கோவில், ஈரோடு முதலிய இடங்களில் கோயில் சத்தியாக்கிரகங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை பயனின்றிக் கழிந்தன.

ஆனால், அக்காலத்தில் கோயில் சத்தியாக்கிரகத்திற்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் இப்பொழுது கொஞ்சம் அதிக ஆதரவே இருந்து வருகிறது என்று கூறலாம். இந்த ஆதரவைக் கொண்டு விடா முயற்சியுடன் கோயில் நுழைவுக்காகப் பாடுபட்டால் அவ்வுரிமை கிடைத்து விடும் என்பதிலும் அய்யமில்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறு தீண்டாத சகோதரர்கள் கோயில் நிழைவு உரிமை பெறுவதினால் அவர்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதைப் பற்றியே இப்பொழுது நாம் குறிப்பிட விரும்புகின்றோம். அவர்கள் மற்றவர்களுடன் சமத்துவமாகக் கோயில்களுக்குச் செல்லும் உரிமை பெறுவதன்மூலம் ஓரளவு தீண்டாமை ஒழிகின்றதென்பதையும் சமத்துவம் கிடைக்கின்றதென்பதையும் நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். இதுவும் ரயில் வண்டிகளிலும் திருவிழாக் காலங்களிலும் கோயில்களின் தேர்களை இழுக்குங் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படுகிறதோ, அந்த அளவில்தான் கோயில் நுழைவினாலும் தீண்டாமை ஏற்படும் என்பதே நமது கருத்தாகும். ஆகவே, கோயில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமையொழிவோ, சமத்துவமோ, எற்பட்டுவிட முடியாது என்பதைப் பற்றி யாரும் அய்யுற வேண்டியதில்லை. ஆகையால், பொது இடத்திற்குப் போகக்கூடிய உரிமை தீண்டாதவர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் கோயில் பிரவேச முயற்சி நடைபெறுமானால் அதை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கவே கடமைப்பட்டுள்ளோம் என்பதில் அய்யமில்லை.

இவ்வாறில்லாமல் தீண்டாதவர்களும், கோயிலில் சென்று அங்கு இருப்பதாகச் சொல்லப்படும் கடவுள் என்கின்ற குழவிக்கல்லுகளையும், பதுமைகளையும் தொழுவதற்கும், அவைகளின் பேரால் மற்ற மூடமக்களைப் போல் பணம் செலவு பண்ணுவதற்கும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பக்திமான்கள் ஆவதற்கும் மோட்சம் பெறுவதற்கும் கோயில் பிரவேசம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப்படுமானால் இம்முயற்சி கண்டிப்பாகத் தீண்டாதவர்களுக்குக் கேடு சூழும் முயற்சியே என்றுதான் கூறுவோம்.

இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள் காரணமாகவும், அவைகளின் சார்பாகவும் நடைபெற்று வரும் திருவிழாக்களின் காரணமாகவும் இவைகளின் மேல் பாமர மக்களுக்கு உள்ள நம்பிக்கை, பக்தி முதலியவைகளின் காரணமாகவுமே பொது ஜனங்களின் செல்வம் பாழாகின்றதென்பதை யாரும் மறுக்க முடியாது.

இதோடு மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அறியாமை நிறைந் தவர்களாகவும் மூடநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருந்து வருகின்றதற்கும் கோயில்களே காரணமாகும். இந்த நிலையைக் கருதும் பொழுது தீண்டப்படாத சகோதரர்களும் மூடநம்பிக்கை காரணமாக கோயில் நுழைவு உரிமை பெறுவார்களாயின் அவர்களும் தங்கள் பொருளைச் சிறிதும் பயனில்லாமற் பாழாக்கி என்றுமுள்ள வறுமை நிலையில் இருந்து வரவேண்டிதைத்தவிர வேறு வழியில்லை என்றே கூறுகிறோம். ஆகையால் தீண்டப்படாத சகோதரர்களும் அவர்கள் சமூக சமத்துவத்தில் ஆவலுடைய மற்றவர்களும் பக்தி என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு கோயில் நுழைவுக்குப் பாடுபடாமல் பொது இடத்தில் எல்லா மக்களுக்கும் உரிமை வேண்டும் என்ற உறுதியுடன் கோயில் நுழைவுக்கு முயற்சி செய்ய வேண்டுகின்றோம். இவ்வகையில் தீண்டப்படாத சகோதரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம். உண்மையில் தீண்டாமைக் கொடுமையொழிந்து மற்ற மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்கு அடிப்படையான காரணங்களாக இருக்கும் செல்வம், கல்வி, திறமை, செல்வாக்கு, ஒற்றுமை முதலியவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டுகிறோம்.

- குடிஅரசு; 08.05.1932.

கோவில் பிரவேசம் தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பது, பார்ப்பனனுக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அக்கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடையூறாகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவைகளுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதைச் செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது, சாமி என்று ஒன்று இருந்தால் அங்குதான் இருக்கக் கூடுமென்றோ, அந்தக் கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால் அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக் கும்படியான அவ்வளவு முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சமஉரிமைக் கேட்கவில்லை.

- குடிஅரசு;19.08.1928.


ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும்


அதிகாரிகள் பிரவேசமும்

ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்து மதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க, இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக்குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக் கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். இப்போது அதிகாரிகள் பிரவே சித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம் சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது, திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமினில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்குவதாய் மாஜிஸ்திரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள் மீது சுமத்தப் பட்ட குற்றம் இன்னது என்று தெரியக்கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை. ஆகையால், வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்திரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக் கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரிய வேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னார்களாம்.

எதிரிகள் மேஜிஸ்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப் பதாலும் உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக்கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம். உடனே, மேஜிஸ்ட் ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்திரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்களாம். திங்கட்கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது. ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகலமாகவும் இருக்கின்றது.

கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டு விட்டு இதையே சத்தியாக்கிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும், எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து, பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. எதற்கும் திரு. ஈ. வெ. ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால், அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும், கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்டபடியும் போக வேண்டியிருந்ததால் இக்காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன் ஜாக்கி ரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும், பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டு விட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம்.

ஆதலால், தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் எடுத்துக்கொள்ள விட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும் மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரச்சாரம் செய்வதும், பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக்கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலய பிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம் மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இதுசமயம் அனுகூலமாகவே இருக்கின்றன.

அதாவது, சமய சம்பந்தமாக வைணவ, சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரஸ்கள் சுயராஜ்ஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சைக் கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி மற்றம் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள், மகாநாடுகள், இந்து மகா சபை, மார்வாடி சபை மற்றும் அநேக பொதுக்கூட்டங்களும் கடைசியாக எல்லாக் கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யாதாஸ்துக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப் கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் என்டோ மெண்ட் போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர்மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்து வருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே, இம்மாதிரியான முயற்சிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கிய மென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

- குடிஅரசு; 21.04.1929.

ஈரோடு ஆலயப்பிரவேசம்

ஈரோடு ஆலயப்பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரிகையில் சில விஷயமும் காணப்படுகிறது.

அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் ஆலயப்பிரவேசதீர்மானம் செய்யப்பட்டது முதல் தமிழ்நாடு பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப்பிரச்சாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய்க் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறைவேறியபின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப்பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்து விட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால், நம்மைக் கேட்காமல் திடீரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்த போது சிலர் ஆலயப்பிரவேசத்திற்கு நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப்பற்றி நீ கேட்க வேண்டியதில்லை என்று சொன்னார்கள். இதை அனுசரித்து திரு. ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பிவிட்டார். இருந்தபோதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டாலும் அக்கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்தோம். இந்தக் கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக்கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப்படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜெண்டு திரு. காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்க்கு மேலாகவே வசூல் செய்தனுப்பப்பட்டது. நமது மைத்துனர் திரு. மாப்பிள்ளை ராமசாமி, ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். இது தவிர, இக்கேசு சம்பந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருக்கும் ஜாகை சௌகரியம், சாப்பாடு ஆகியவைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது. திரு. ஈஸ்வரனுக்கும் அவரது சினேகிதர்களுக்கும் கேசு ஆரம்பித்தகாலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளிவந்த மறுநாள் வரை சாப்பாடு நமது வீட்டில் தான் நடந்து கொண்டு வந்தது; வருகிறது. அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில் தான் சாப்பிட்டு வருகிறார். தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ்வக்கீல்களையே கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும், இதுவிஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதானால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்ட்டுக்கு வந்துவிட்டுப் போன தற்குக்கூட நாம்தான் மலாய் நாட்டிலிருந்த வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம். மலாய் நாட்டுக்குப் புறப்படும் போதும் ரயிலேறியபின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத் தான் பயணம் சொல்லிக்கொண்டோம். இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு. கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப் போகும் போது நமது வீட்டில்தான் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். கோவிலுக்குள் இருந்தபோது கூட நாம் ஊரில் இல்லாவிட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வளவு காரியங்களையும் பெற்றுக் கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும், யாரையும் உதவி செய்ய விடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைக்கப்பட்ட திரு. பி. வரதராஜூலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேற நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும்.

செய்துவிட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை. நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்குப் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால், நாம் ஒன்று ஒப்புக்கொள்ளுகின்றோம். அதாவது இக்கேசுக்குப் பணம் கொடுக்கும்படி பொதுஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஓர் அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு. காரணம் கேசுக்கு அதிக பணச் செலவில்லை. ஏனெனில், சாப்பாடு நம்முடையது. வக்கீல்களுக்குப் பீசு கிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும்தான் வேண்டியது. இதற்கு அதிகமான பணம் தரவேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல் கண்டபடி ஒரு தடவை கூட இல்லை என்று சொல் லாமல் பணம் கொடுத்திருக்கின்றோம். அடிக்கடி பொது ஜனங்களைப் பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்துவிடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம்.

மற்ற காரணங்களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூறுகளையும், நஷ்டங்களையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வந்த நமது சகிப்புத்தன்மையும், பின்னால் விவரமாய் எழுதுகிறோம். ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகுவீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும் தமிழ்நாடு திரு. பி. வரதராஜூலு, திரு. ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாற்றியதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா என்றாவது, இது மாத்திரமல்லாமல் வேறு எந்த சத்தியாக்கிரகத்திலாவது கையெழுத்தும், வாக்குத்தத்தமும் செய்து நாணயமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப் பார்த்தால் இவ்வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படுவாரென்றே சொல்லுவோம்.

- குடிஅரசு; 02.02.1930.

கோவில் பிரவேச மசோதா அடுத்து வரப்போகும் சென்னை சட்டசபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப்பிரவேசமசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும் ஆர்வமும், செய்கையளவில் நடத்திக்காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, இப்பொழுது அவர் கொண்டு வரப்போகும் ஆலயப்பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் பெறும் புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன் வந்திருக்கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமூகத்தின்பாலும் கொண்டிருக்கும் உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே தாழ்த்தப்பட்ட வர்களுக்கும் கோயில்களில் சமவுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று அய்யமறக் கூறுவோம்.

ஆனால், இம்மசோதா சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை. ஆனால் அரசாங்கத்தார், இம்மசோதாவுக்கு ஆதரவளிக்காவிட்டாலும்கூட, மனம் வைத்தால், சென்னை சட்டசபை அரசாங்கத்தின் தயவில்லாமலே, இம்மசோதாவைச் சட்டமாக்கி விட முடியும். எப்படியெனில், இப்பொழுது சென்னைச் சட்ட சபையில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியும், மெஜாரிட்டியாகயிருக்கும் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியாகும். இப்பொழுது ஆலயப்பிரவேச மசோதாவைக் கொண்டு வரப்போகும் திரு. சுப்பராயன் அவர்கள் எதிர்க்கட்சியின் தலைவராவார். ஆகவே, திரு.சுப்பராயன் அவர்களின் மசோதாவை அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆதரிப்பார்கள் என்பதில் அய்யமில்லை. சட்டசபையின் மெஜாரிட்டிக் கட்சியினரான ஜஸ்டிஸ் கட்சியினரும் இம்மசோதாவை ஆதரிப்பார்களானால், அது சட்டமாகி விடுமென்பதற்குச் சந்தேகமில்லை.

ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தக் கொள்கையையே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினர்களுக்கும் ஆலயங்களில் சமவுரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகையால், அவர்கள் தமது எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்க மாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகின்றோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர், திரு. சுப்பராயன் அவர்களுடைய கட்சிக்கும், தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும் எதிர்க் கட்சியினர் எந்த நல்ல மசோதாவைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே நமது கடமை என்னும் அரசியல் வஞ்சந்தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை அதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும் அல்லது எதிர்த்தாலும் அது மிகவும் வெறுக்கத்தகுந்த செய்கையாகுமென்றே நாம் கூறி எச்சரிக்கின்றோம்.

இப்பொழுது வரப்போகும் ஆலயப்பிரவேச மசோதா சட்டமாகுமானால், அதன் மூலம் எல்லா வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும், இந்து மதக் கோயில்களில் தடையில்லாமல் செல்லுவதற்கு உரிமையுண்டாகுமென்பது நிச்சயம். ஆதலால், இத்தகைய மசோதா ஒன்று சென்னைச் சட்டசபையில் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே, நமது நாட்டு வைதிகர்கள் அதைக் கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த மசோதாவைச் சட்டசபையில் கொண்டு வர அனுமதியளிக்கக் கூடாது என்று மேன்மை தங்கிய வைசிராய், கவர்னர் முதலியவர்களுக்கு தந்திகளும், தீர்மானங்களும் அனுப்பியிருக்கிறார்கள்; இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல பொதுக்கூட்டங்கள் என்னும் பெயரால் வைதிகர்கள் இம்மசோதாவைக் கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தீண்டாதார்களுக்கு ஆலயப்பிரவேசம் அளிப்பது, சாஸ்திரங்களுக்கு விரோதம், மதத்திற்கு விரோதம், பழக்க வழக்கங்களுக்கு விரோதம். ஆகையால், தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும் படியான சட்டஞ் செய்யக்கூடாது என்று கூச்சலிடுகின்றனர். இக்கூச் சலைச் சட்டசபை உறுப்பினர்களும், அரசாங்கத்தார்களும் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாமல், டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவைச் சிறந்த திருத்தங்களுடன் சட்டமாகச் செய்ய ஆதரவளிக்க வேண்டுகிறோம். வெகுகாலமாக நமது நாட்டில் கோயில் பிரவேசத்திற்குத் தடை செய்து கொண்டிருந்த சமூகம் பார்ப்பன சமூகம் ஒன்றேயாகும். இன்று அச்சமூகத்திலும் பகுத்தறியும் மூளையற்ற - சாத்திப்பித்தும், சுயநலப் பித்து கொண்ட வைதிகர்களே கோயில் பிரவேசத்திற்குத் தடை கூறிக் கொண்டிருக்கின்றவர்கள். ஆதலால், மற்ற சமூகங்களின் ஜனத்தொகையைவிட மிகக் குறைந்த ஜனத் தொகையையுடைய ஒரு சமூகத்திலுள்ள சில எண்ணிக்கையையுடைய வைதிகர்களின் கூச்சலுக்கோ, தடைக்கோ, பயந்து சென்னைச் சட்டசபையானது இம்மசோதாவை நிராகரிக்குமாயின் அதைவிட பேடித்தன்மையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை முன்னெச்சரிக்கையாகவே கூறிவிட விரும்புகின்றோம்.

இச்சமயம், தீண்டாதார்களின் ஆலயப்பிரவேசத்திற்குப் பொது ஜனங்கள் விரோதமாக இருக்கிறார்கள் என்னும் சாக்குச் சொல்ல முடியாது. இந்தியா முழுவதும் சுதேச சமஸ்தானங்களிலும்கூட தீண்டாதார்க்கு ஆலயப்பிரவேச உரிமையும் மற்றும் இந்துக்களுடன் சம் உரிமையும் இருக்க வேண்டும் என்னும் கொள்கையை ஆதரித்து வருகிறார்கள். பொதுஜனங்களின் அபிப்பிராயம் அவர்கள் சமத்துவ உரிமைக்குச் சாதகமாகவே திரும்பி இருக்கிறது என்பதை நாட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுவரும் நிகழ்ச்சிகளைக் காண்போர் தெரிந்து கொள்ளலாம். ஆதலால், அரசாங்கத்தாரும் சட்டசபை உறுப்பினர்களும் இச்சந் தர்ப்பத்தைக் கைநழுவ விடாமலிக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட்டு விடுவார்களானால், அவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தை அலட்சியம் செய்தவர்களாகவும் பொது ஜன நம்பிக்கைக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாகவும், ஆகிவிடுவார்களென்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமூகங்களும் ஒற்றுமையடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில் எல்லோரும் அதாவது, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.

இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக்களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்கவேண்டும் என்று கோருவதாகத் தெரிகிறது. ஆகையினால், இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ்வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லிம்களுடைய மசூதிகளில் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லிம்கள் அந்நிய மத்தினரைத் தங்கள் மசூதிக்குள் வரக்கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அதுபோலவே, கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத்தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இதுபோலவே, புத்தர் கோயில்களிலும் எந்த மத்தினர்களும் தாராளமாகச் செல்லலாம். இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய்விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வதனால் பல மதத்தினர்க்குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழியாகும். ஆகையால், இம்முறையில் மசோதாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென்னைச் சட்டசபை தைரியமாக முன்வருமா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறை வேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு. இதற்கு மாறாக, இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என்றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்க வேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது அல்லது கடவுளிருக்கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும், தேசத்தின் பொதுச் சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அல்லது சும்மாவோ அவைகளுக்குள் நுழையக்கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே நாம் கோயில் பிரவேசத்தை முழு மனதுடன் ஆதரிக்கின்றோம். இதற்காகச் சட்டஞ் செய்யப்படும் முயற்சியையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு; 08.01.1933.


சுப்பராயன் மசோதா

விளம்பரம் கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதாவுக்கு, சிறிது காலத்துக்கு முன்ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப்பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால், மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரச்சாரம் மகாத்மாக்களாலும், தேசிய பத்திரிகைகளாலும் நடைபெறுகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப் போகாது. ஆதலால், அது சம்பந்தமாக வந்திருக்கும் பலவிஷயங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொறுத்துக் கொள்வார்களாக.

- குடிஅரசு; 30.10.1932.

 

சுப்பராயன் மசோதாவின்

ரகசியம் டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவானது தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் ஏதோ பிரமாதமான நன்மை செய்துவிடப் போவதாக ஜனங்களுக்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதைப்பற்றி முன் ஒரு குறிப்பு காட்டி இருந்தோம்.

அதன் இரகசியம் என்ன என்பதும், எதற்காக அந்தப்படி பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பதும் அநேகர் அறிந்திருக்கவே மாட்டார்கள். இருந்தபோதிலும் அந்த மசோதாவின் யோக்கியதை என்ன என்பதும் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதும் அடியில் குறிப்பிட்ட தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரின் இரண்டொரு வாக்கியத்தில் இருந்து ஒருவாறு உணரலாம். அதாவது, "டாக்டர் சுப்பராயனின் கோவில் பிரேவசமசோதாவை அவர்கள் (வைதீக ஜனங்கள்) எதிர்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது.

ஹரிஜனங்களை கோவிலுக்குள் விட்டே தீர வேண்டுமென்றும், அம்மசோதா சொல்லவில்லை. அம்மசோதா சட்டமானவுடன் ஹரிஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள் என்று யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்" என்று 09.01.33 ந் தேதி சுதந்திரச் சங்கு என்னும் பேப்பரில் 5-வது பக்கம் இரண்டாவது கலத்தில் எழுதி இருக்கிறார். இதைப்பற்றி வியாக்கியானம் ஒன்றும் தேவையில்லை என்றே கருதுகிறோம்.

நிற்க. இந்த விளம்பரத்தின் இரகசியம் என்ன என்பது பற்றி மற்றொரு சமயம் வெளியாகும்.

ஆலயப்பிரேவச மசோதா

கருவிலேயே கருகிவிட்டது இந்திய சட்டசபையில் இருந்த ஆலயப்பிரேவசமசோதா 28ந் தேதி இந்திய சட்டசபை கூட்டத்துக்கு வந்து பொதுஜன அபிப்பிராயம் விரோதமாய் இருக்கின்றது என்கின்ற காரணத்தால் சர்க்காரால் வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி கேழ்க்கப்பட்டு அது வாப்பீசு வாங்கிக் கொள்ளப்பட்டதால் அது கருவிலேயே கருகி விட்டது.

- பகுத்தறிவு; 26.08.1934.

கோயில் நுழைவும்

ஒற்றுமை மாநாடும்

இன்று இந்திய தேசிய துறையில் கோயில் நுழைவு பிரச்சாரத் திற்கும் ஒற்றுமை பிரச்சாரத்திற்கும்தான் அதிக விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், தோழர் ராம்சேமாக்டானால்டு அவர்களின் வகுப்புப் பிரச்சனை தீர்ப்புக்காகவென்று தோழர் காந்தியவர்களால் செய்யப்பட்ட பட்டினியின் பிரச்சாரம் பொது ஜனங்களின் மனதைக் கவரும்படி செய்து விட்டது. மற்றொருபுறம் வைசிராய் அவர்களின் அடக்கு முறை பெருவாரியான தேசபக்தர்கள் என்பவர்களுக்கு தேசிய வேலை செய்ய இடமில்லாமல் செய்து விட்டதால் எப்படியாவது ஒரு புதிய துறையைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆகவே, இவ்விரண்டின் பயன்களால் கோவில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும் உச்சஸ்தானம் பெற்று விட்டன. 

இக்காரியங்கள் இரண்டும் ஒன்று தேசியத்திற்காகவே செய்யப் படுவதாய் கூறப்பட்டும், அந்தப்படி மக்களை நம்பும்படியும் செய்திருந் தாலும் நாம் அதை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், தேசியம் என்பதின் தத்துவம் எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் தேசியத்திற்காகவென்று இவ்வளவு பாடுபடுகின்றவர்கள் தோழர் ராம்சேமாக்டனால்ட் தீர்ப்புக்கு முன் இவ்விஷயங்களில் இவ்வளவு பாடு பட்டிருந்தால் அதற்கு ஏதாவது ஓர் அர்த்தமுண்டு என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் வட்டமேஜை மகாநாட்டில் எல்லா வகுப்புக்களுக்கும் நாங்கள்தான் பிரதிநிதிகள். எதைப்பற்றியும் பேச எங்களுக்குத் தான் உரிமை உண்டு. மற்றவர்களெல்லாம் சரியான பிரதிநிதிகள் அல்ல, சுயராஜ்யம் கொடுத்துவிட்டால் வகுப்புத் தகராறுகள் எல்லாம் தானே தீர்ந்து விடும். வகுப்புத் தகராறுக்கெல்லாம் சர்க்காரே காரணம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு எங்கள் உயிர் போனாலும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்க மாட்டோம் என்பதாகவெல்லாம் சொல்லியபின், சர்க்காரே பிரவேசித்து வகுப்புத் தகராறு விஷயத்தில் தங்கள் தீர்ப்புகளை ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து அந்த வகுப்பு மக்களை தாங்கள் சுவாதீனம் செய்து கொண்ட பிறகு, இப்போது அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கக் கருதி சர்க்கார் கொடுத்ததைவிட தாங்கள் அதிகமாய் கொடுப்பதாகச் சொல்லுவது போல் பேசி சில ஏற்பாடுகளையும் செய்துகொண்டு கோயில் நுழைவைப் பற்றியும் வேற்றுமையைப் பற்றியும் பேசினால் இதில் நாணயம் இருப்பதாய் யார்தான் நம்புவார்கள்? இதை இந்து சமூகம் செய்யும் இந்து மதப்பிரச்சாரம் என்று சொல்லாமல் பொது நல நன்மையான காரியம் என்று எப்படி சொல்ல முடியும்? ஏனெனில், தோழர் ராம்சேமாக்டனால்டின் தீர்ப்பானது தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதியின் மூலம் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்ததானது அவர்களை (தாழ்த்தப்பட்ட மக்களை) நாளடைவில் இந்து சமூக அடிமை வாழ்விலிருந்து பிரித்து பொது சமூக வாழ்வில் ஒரு அளவு சுதந்திரர்களாக ஆக்கி விடுகிறது. அதாவது, மகமதியர்களுக்கு சுமார் 20 வருஷங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட தனித்தொகுதியானது எப்படி மகமதிய சமூகத்தை இந்து சமூகத்திலிருந்து நிரந்தரமாய் பிரித்து விட்டதோ அதுபோலவே, இந்தத் தாழ்த்தப்பட்ட சமூகமும் தனித்தொகுதி பெற்றால் கண்டிப்பாய் அது இந்து சமூகத்திலிருந்து பிரிந்தே போய்விட்டதாகத்தான் முடியும். ஆனால், மகமதிய சமூகம் தனித்தொகுதி பெற்ற பின்புதான் அது தன் காலிலேயே நிற்கக் கூடிய ஒரு பலத்தையும் சவுகரியத்தையும் பெற்றது என்பது எவராலும் மறுக்க முடியாததாகும். அதுபோலவே தாழ்த்தப்பட்ட சமூகமும் தனித் தொகுதி பெற்றுவிட்டால், அடுத்த 10 வருஷ காலத்திற்குள் அது மற்ற எவருடைய உதவி யையும், தயவையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நிற்கக் கூடிய பலத்தையும் சவுகரியத்தையும் பெற்று விடும் என்பதில் சிறிதும் சந்தேகிக்க இடமில்லை.

இவ்விரு சமூகமும் அதாவது, மகமதிய சமூகமும், தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகமும் சமூக வாழ்வில் சுதந்திரம் பெற்று மற்றவர்களுடைய தயவும், பிச்சையும் அவசியமில்லாமல் தங்கள் தங்கள் கால்களிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால் இந்து சமூகம் என்ப தானது இன்று சொல்லிக் கொள்வது போல இந்தியாவில் ஒரு பெரிய பலம் பொருந்திய சமூகம் என்பதாகச் சொல்லிக் கொள்ள இடமில் லாமல் போவதோடு, மகமதிய சமூகமும் தாழ்த்தப்பட்ட சமூகமும் அதனதன் சமூகக் கொள்கையின் பயனாகக் கலந்து கொள்ள ஒன்றுக் கொன்று அன்னியோன்னியம் ஏற்பட்டுவிட நேரும்போது இந்து சமூகம் சிறுபான்மை சமூகம் என்று சொல்லும்படியான நிலைமைக்கும் பரிகசிக்கத்தக்க நிலைமைக்கும் வந்துவிடும். அதோடு மாத்திரமல்லாமல் இந்து சமூகத்தில் இருக்கின்ற காரணத்தில் இன்னும் எந்தெந்த உள் சமூகங்கள் சமூக வாழ்வில் சுதந்திரமும் சமத்துவமும் அற்று இழிவுப்படுத்தப்படுகின்றனவோ அவையெல்லாம் இப்படியே வெளிக்கிளம்பவும் நேரிட்டு விடும். அப்போது, இந்து சமூகம் என்பது தானாகவே அழுவாரற்ற பிணமாய் ஒழிந்து விடும். இந்தக் காரணங்களாலேயே மக்களுக்கு சமூக வாழ்வில் சமத்துவமும் சுதந்திரமும் இல்லாவிட்டாலுங்கூட இந்து சமூகம் மேன்மையாய் இருந்து ஆதிக்கம் செலுத்துவதை மாத்திரம் விட்டுவிடக் கூடாது என்கின்ற இந்து சமூகத் தலைவர்கள் என்பவர்களின் எண்ணமே இந்த ஒற்றுமை மகாநாடுகளுக்கும், கோவில் நுழைவுக்கும் அஸ்திவாரமாய் இருந்து வருகின்றது.

தோழர் ராம்சே மாக்டனால்டின் வகுப்பு தீர்ப்பு ஒழிந்து, தனித் தொகுதி மாறி, பொதுத் தொகுதி நிலைநின்று அரசியலிலும் இந்து சமூகத்திற்கே ஆதிக்கம் வந்து விட்டது என்று ஆனவுடன் கோவில் நுழைவு சுயராஜ்ஜியம் கிடைத்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஒற்றுமை என்பது சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு தானாகவே ஏற்பட்டு விடும் என்றும் தாராளமாய் சொல்லப்பட்டு விடும். பிறகு பழைய குருடி கதவைத் திறடி என்கின்ற நிலைமை ஏற்படுவதில் சந்தேகமிருக்க நியாயமில்லை.

தவிரவும், இந்த கோவில்களுக்கு செல்வாக்குகள் இருந்த காலத்தில் கோவில் நுழைவைப் பற்றி பேசுவது பெருத்த அபவாதமாகவும், மதத் துரோகமாகவும், கலகஸ்தமாகவும் இருந்து வந்தது. இன்றைய தினம் உலகத்தில் கோவில்களுக்கு மதிப்பு குறைந்து சில தேசங்களில் கோவிலுக்குப் போவது முட்டாள்தனம் என்று கருதப்படும் சில தேசங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டும் போனபின்பும் நமது நாட்டிலும் கோவில்களின் புரட்டுகள் வெளியாக அவற்றின் மதிப்பு குறைந்து அதன் பேரால் உயர் நிலையில் இருப்பவர்களுடையவும், வயிற்றுப் பிழைப்பு மதக்காரர் களுடையவும் யோக்கியதை வெளியாகி, அவர்கள் மக்களால் வெறுக்கப் பட ஆரம்பித்த பிறகே தான் இப்போது கோவில் நுழைவு இவ்வளவு முக்கியஸ்தானம் பெற்று விட்டது.

கோவில் நுழைவு வெற்றி பெற்றால் இந்து சமூகம் சிறிது பலப் படும் என்றும், இன்னும் கொஞ்ச காலத்திற்காவது அதற்கு அழிவு வராமல் காப்பாற்றலாம் என்றுமே இப்போது கோவில் நுழைவுக்காரர்கள் கருதி வேலை செய்கிறார்களேயொழிய சர்வ சமரச கடவுளின் தரிசனத்தையும் அருளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்பதாக ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டதற்காக அல்ல என்பதை சிறிது யோசனை உள்ளவர்களும் உணர்ந்து விடக்கூடும். அன்றியும் பகுத்தறிவையும் சம்சுதந்திர நோக்கத்தையும் கொண்டு இப்போது கோவில் நுழைவுக்கு அதரவு தேட எவரும் - வரவில்லையென்பதும், கோவில் நுழைவு பிரச்சாரத்தின் உபன்யாசங்களையும் எடுத்துக்காட்டும் ஆதாரங்களையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். மற்றெதற்கென்றால் மதத்தில், மத சாஸ்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவை ஆட்சேபிக்க இடமில்லை என்றுதான் சொல்லப்படுகின்றது.

ஆகவே, மதத்தில், மத சாஸ்திரத்தில் ஆட்சேபணை இருந்தால் அவர்கள் கதி என்ன ஆவது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மதத்தையும் மத சாஸ்திரத்தையும் பற்றி பேசி அடைகின்ற ஆதரவை நாணய மானதென்றோ, நிலைக்கக் கூடியதென்றோ நாம் ஒருக்காலும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் ஆதரவு இருக்கின்றதா? இல்லையா? என்பது சுலபத்தில் முடிவு கட்டக்கூடிய காரியமல்ல. ஏனெனில், இந்து மதம் என்று ஒரு மதமுண்டா? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சாஸ்திரமோ, ஆதாரமோ உண்டா என்பது போன்ற விஷயங்களும் விவகாரங்களும் யாவரும் அறிந்ததேயாகும். ஆனால், ஒரு சிலரின் நன்மைக்கு ஏற்றவிதமாக மாத்திரம் வியாக்கியானங்கள் செய்து கொள்ளலாம் என்கின்ற சவுகரியம் மாத்திரம் இந்து மதம் என்னும் பேரால் இருந்து வருகின்றது. இந்த சவுகரியமும் சந்தர்ப்பமும் தீர்ந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் ஆதாரம் கிடைக்கக் கூடும். எப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் செய்யலாம். ஆதலால், இந்த ஆதரவைக் கொண்டு கோயிலுக்குள் நுழைய விடுவது என்பது ஆபத்தானது என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் இருத்தல் வேண்டும்.

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்திற்கு அஸ்தி வாரமாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். பொருளாதார வித்தியாச தத்துவத்திற்கு ஆதாரமாய் இருப்பது மதமேயாகும். இந்த இரண்டும் இருக்கிறவரை ஒற்றுமைக் குறைவும், தீண்டாமைத் தன்மையும் ஏதாவது ஒரு வேஷத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசமானது ஏதோ முட்டாள்தனத் தினால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லுவது ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது. மற்றென்னவெனில், அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன் ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத்தனத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற்கே சாஸ்திர ஆதாரங்களும் மதக் கோட்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டவைகளாகும். அன்றியும் இன்றையத் தினம் நமது நாட்டில் தீண்டாமையும் ஜாதி வித்தியாசமும் செய்யும் கொடுமையின் பயனெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிதும் பொருளாதாரக் கொடுமையை விளைவிப்பதல்லாமல் மற்றபடி கடவுள் தரிசனமும் மோட்ச சாதனமும் கிடைக்காமலிருப்பதல்ல. அப்படிப்பட்ட, அதாவது பொருளாதாரத் துறையில் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களில் உள்ள கடவுள் தரிசனத்தால் என்ன பயன் கிடைக்கக் கூடும்? ஏதோ அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த சிறிது பொருளையும் கோவிலுக்குக் கொண்டு போய் கடவுள் தரிசனை என்னும் பேரால் தொலைத்துவிட்டு அடிமைத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் பெற நேரிடுவதைத் தவிர வேறு என்னலாபம் அடையக் கூடும்? ஆகவே, இந்த கோவில் நுழைவுப் பிரச்சாரம் இப்போது கடவுள் பிரச்சாரத்துக்கும், மத பிரச்சாரத்துக்கும், சாஸ்திர புராண பிரச்சாரத்துக் கும்தான் அஸ்திவாரமாகப் பயன்படுகிறது என்பதே நமது அபிப்பிராயம்.

நம்மைப் பொறுத்தவரை நாம் கோவில் பிரவேசம் என்பதற்கு அனுகூலமாகத்தான் இருக்கின்றோம். எதற்காக என்றால், உயர்வு, தாழ்வு, மேல்ஜாதி, கீழ்ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை, கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும், அவற்றை அனுபவத்தில் நடத்தவும், நிலைநிறுத்தவும், ஏற்பட்ட பல சூழ்ச்சி ஸ்தாபனங்களில் கோவில் பிரவேசத் தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்பதாகத்தான் கருதி இருக்கிறோம். ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில் நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்காவே வென்றும் சொல்வதையும் அதன் பேரால் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப் பதையும் கண்டிக்காமல் இருப்பதற்கில்லை. ஒற்றுமை என்னும் விஷயத்திலும் மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமூகத்திற்கு உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. சுயராஜ்யம் என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு விடாது.

உதாரணமாக, இன்றைய தினம் துருக்கியும் சுயராஜ்யம் பெற்ற நாடு. கிரீஸ் தேசமும் சுயராஜ்யம் பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அபிப்பிராயப் பேதத்தால் கிரீசில் இருந்த இஸ்லாமியர்கள் பத்து லட்சக்கணக்காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள். துருக்கியிலிருந்து கிறிஸ்தவர்கள் பத்து லட்சக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால், இதற்குச் சமாதானம் அவர்கள் துரத்தப்பட வில்லை, தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு ஓடிவிட்டார்கள் என்று சொல்லக் கூடும். எப்படியிருந்தாலும் அபிப்பிராய பேதமேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு, பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும்படியாய் ஏற்பட்டு, இன்று சாப்பாட்டிற்கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மற்றும் சில சுயராஜ்ய நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டாஸ்டெண்டுகளுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டு பல கொடுமைகள் அடைந்து வருகிறார்கள். இவற்றிற்கெல்லாம் அந்நிய ஆட்சி இருந்து கலகங்களையும் அபிப்பிராய பேதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதென்றே சொல்லிவிட முடியாது.

ஆகவே, மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டு மானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக்கும் சமத்துவம் இருக்கும்படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்யப்பட்டாலொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்படக் கூடியதில்லை என்றே சொல்லுவோம்.

எனவே, அதைவிட்டுவிட்டு ஒற்றுமை மகாநாடுகளும் கோவில் நுழைவு பிரச்சாரமும் செய்வது மேற்கூறிய படி, இந்து மதப் பிரச்சாரமும் சாஸ்திர புராணப் பிரச்சாரமும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி பிரச்சாரங்களால் நாட்டிற்கோ மனித சமூகத்திற்கோ ஒரு நன்மையையும் செய்துவிட முடியாது. இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள அதிகாரம், பதவி, பட்டம், செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில மக்களைத் திருப்தி செய்யலாம். அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை ஏமாற்றி அடக்கி வைக்கலாம். இவ்வளவுதானே ஒழிய, சமூக சமத்துவத்தையோ, சமூக ஒற்றுமையையோ, பொருளாதார சமத்துவத்தையோ நிலை நிறுத்தி விட முடியாது.

அரசாங்கத்தாரும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து இந்த தந்திரங்களுக்கு உடந்தையாயிருந்து தங்களது இரட்டை பங்குக்கு மோசமில்லாமல் நடந்து கொள்ளலாம். அரசாங்க கொள்கையெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களும், ஏழைத் தொழிலாளிகளும் கிளர்ச்சி செய்யும் போது படித்தக் கூட்டத்தையும் பணக்காரர்களையும் ஆதரிப்பதற்கும் காப்பாற்றுவதற்குமே தாங்கள் இங்கு இருக்க வேண்டியதாய் இருக்கிறது என்று சொல்லுவதும், படித்த மக்களும் பணக்காரர்களும் கிளர்ச்சி செய்யும் போது பாமர மக்களின் நன்மைக்காகத் தாங்கள் இருக்க வேண்டியதாயிருக்கிறது என்று சொல்லுவதுமான தந்திரங்களை அனுசரித்தே ஆட்சி நடத்த வேண்டியவர்கள் ஆகி விட்டதால், அவர்கள் யாருக்கு எவ்வளவு பங்கு எதில் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதித்துத் தங்கள் பங்கை பெருக்கிக் கொண்டு வருகிறார்கள்.

எனவே, தேசியமும், ஒற்றுமையும், அரசாங்கமும், சீர்திருத்தமும் பொருளாதாரத்திலும் சமூக வாழ்விலும் சமத்துவமில்லாமல் இழிவு படுத்தப்பட்ட மக்களை அந்நிலையிலேயே நிலைநிறுத்தி மேல்நிலையில் இருந்து வாழக்கருதும் சோம்பேறிகளுடையவும், செல்வவான்களுடையவும் அரசாங்கங்களுடையவும் சூழ்ச்சிகளேயாகும்.

- குடிஅரசு, 20.11.1932.

காந்தியின்

ஆலயப்பிரவேச நோக்கம் தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப்பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன; ஆலயப் பிரவேசத் தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை ஆனால் பிறருடன் சரிசமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது. ஆலயப்பிரவேசத்தால் பொருளாதாரம், கல்வி முன்னேற்றம் ஏற்படும் என்ற குறிப்புகள் இருக்கின்றன. இவைகளில் ஏதாவது இன்றைய அனுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா என்பதை யோசிக்க வேண்டும்.

இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேசசம் உரிமையை தாராளமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற்றுக்கு தொண்ணூற்றேழுபேர்கள் தற்குறிகளாகவும், நூற்றுக்குத் தொண்ணூத்தொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர்களது பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி கொடுக்கவோ, நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம். இன்று மக்களுக்கு பொதுவாக, அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாடதவர், தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் மனிதத் தன்மையிழந்து, மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும், மிருகங்களுக்கு இருக்கும் நிலைமையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும், கோவிலையும் காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.

இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும், படிப்புக்கும் காந்தியார் கண்டுபிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய பட்டினிக்கும், படிப்புக்கும், காந்தியார் கண்டுபிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள். இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும், பணக்காரர் கொள்கை கொண்ட அரசாங்கத்திற்கும் உள் ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நண்பராய் இருந்து உதவி செய்தவராகிறாரா? என்பதை உணர்ந்து பாருங்கள்.

- குடிஅரசு; 26.02.1933.

இரண்டு வழக்குகள்


விடுதலை ஈரோடு ஆலயப்பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்குகள் ஹைக்கோர்ட் அப்பீலில் இருந்தது நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். அதுபோலவே, சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும்.

இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக் கப்பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு வழக்குகள் விடுதலையாகிவிட்டன.

முதல் வழக்கு, அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாருடைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரிகள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தினார்கள் என்பதாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டாவது வழக்காகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரம மாகவே நடத்தப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜ்மெண்ட் கீழே குறிப்பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோடுகூட ஒரு நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம்கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், அங்குள்ள பார்ப்பன ஆதிக்கமானது இவ்வளவு தொல்லையைக் கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் அய்கோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால், சாதாரண ஜனங்களுக்குச் சாத்தியப்படக் கூடியதாகுமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப்படையாயும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும்.

பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தியா சமும் உயர்வு, தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்பனர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது போலவே, மகமதியர்கள், வெள்ளைக்காரர்கள், கிறித்தவர்கள் ஆகியவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆதலால், இந்துக்கள் ஜாதி வித்தியாசம் உயர்வு, தாழ்வு ஆகிய வைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர்களின் விரோதத்தையும், அவர்களால் செய்யப்படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

நிற்க; இவ்விஷயங்களில் இனிமேல் நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.

- குடிஅரசு: 09.11.1930. 

Read 2437 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.