Monday, 28 September 2020 01:46

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

Rate this item
(5 votes)

 திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 79

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமலையப்பன் 

 

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இந்தி வந்துவிட்டது இனி என்ன?

ஒருகை பார்க்க வேண்டியதுதான் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரம் அல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும், அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த இந்தியைக் கட்டாயமாக நுழைக்க முயன்றதுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும், அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது இந்தியைப் புகுத்திவிட்டுதான் மறுகாரியம் பார்ப்பது என்கிற விரதம் பூண்டு விட்டார். எனவே, இனி கேட்டுக் கொள்ளுவதாலோ, கெஞ்சிக் கொள்வதாலோ, சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கிற நிலைமை காணப்படுகிறது.

முயற்சி எல்லாம் பாழாய் விட்டது

இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க, வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத்துணிந்து அவருக்கும் இது சம்பந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லை என்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளைச் சொல்லிக்கொள்ளப் பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்றும் முடிவு கூறிவிட்டார்.

இனி செய்ய வேண்டியது என்ன?

இனித் தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்கு முன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்குப் பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத்தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேட்பாராற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய்க் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்குச் சமாதானம் தெரிந்த பிறகு மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒருவிதப் பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.

அலட்சியத்துக்குக் காரணம்

தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் தமிழ் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ, வீரமோ, இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்குப் பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய, தலைமைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்றுத் தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும்தான் ஆதாரங்கள் காட்டலாமே ஒழிய பிரத்தியட்ச அல்லது சமீப சரித்திரச் சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராணகாலம் தொட்டுச் சூத்திரராக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப்பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.

50 வருஷகால வாழ்வு

இவை தவிர, நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான்; தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.

தமிழ்நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களில் சமீபகால சரித்திரமும், வாழ்க்கைக் குறிப்புகளும், தற்கால நிலையும், அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமேதவிர, வீரனென்றோ, மாமணியென்றோ, தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர், உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர், நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காணமுடியாதது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இன்றுதானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள, பொதுநல உணர்ச்சியுள்ள, தனி சுயநலமற்ற, ஒரு தமிழ் மன்னனோ, ஒரு தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்குப் பூர்வகாலந்தொட்டு, வேத, புராண, சரித்திர காலந்தொட்டு எதிரியாய் - பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களைத் தாழ்த்தி அழுத்தி, இழிவுப்படுத்தி வரும் பார்ப்பனர்க்கு அடிமையாய், ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழிகுணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

மாபெரும் விரோதி ஆகவே. இவையும், இவை போன்ற இன்னும் பல காரணங்களும், ஏராளாமாய் இருக்கும் போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை, வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் எம்னாய், உளைமாந்தையாய் இருக்கும் இந்தி பாஷையைப் பார்ப்பனர்கள் கட்டாயமாகத் தமிழ் மக்களுள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படித் தடுக்க முடியும் என்று கேட்கின்றோம்.

கனம் ஆச்சாரியார் பார்ப்பனராயிருந்தாலும், இந்தியை ஒரு தமிழ் மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி, பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு, அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.

ஆச்சாரியார் மூர்க்க

பலம் மற்றும் கனம் ஆச்சாரியார் என்னும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ் மக்கள் சமூகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும்படி சூத்திரர்களாக ஆக்க இந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் ஆம், ஆம், நன்று, நன்று, நடத்து, நடத்து" என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனைத் தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ் மக்களுக்குப் பிடித்தமில்லாத - தமிழ் மக்களுக்குக் கேடு சூழும் படியான இந்தியைக்கனம் ஆச்சாரியார் மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.

ஆகவே, தமிழ்மக்களின் பழம்பெருமைகளும், பாட்டிக் கதைக்ளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக்கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.

இதனால், எந்தத் தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்தியைத் தடுப்பதற்காக நாம் செய்யப்போகும் காரியங்களைத் திட்டபடுத்துவதற்கு முன் நம் நிலைமையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி, அதாவது மாற்றான் வலியையும், நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய, நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் வேண்டுபவர்

உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் இரத்தம் ஓடும் வாலிபர்களே இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.

எப்படிப்பட்ட பார்ப்பனத் தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.

பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது. இரண்டிலொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும், ஒரு சமயம் கிடைக்காமல் போய் விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு, கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத்தக்கதாகும்.

அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம், ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடிய வேண்டியதாகிவிடும்.

காலம் அடுத்து விட்டது

கோடை விடுமுறை முடிந்த உடன் இந்தி கட்டாயப் பாடமுறை அமலுக்கு வரப்போகிறது. ஆகையால், அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும், அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும்.

தோழர்கள் எஸ். எஸ். பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

சிறை புகுவது அற்ப விஷயம்

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்குச் சிறை செல்லுவது என்பது மிகச் சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக் காரியமாகவும் கருதிவிடக்கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாளச் சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராக இருந்தால் போதாதா? என்று எண்ணிவிடக்கூடாது, சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ, நஷ்டமோ கிடையாது. அதை 3 ஆம் தரக்காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும், அடிப்படவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில், நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக் கமற்ற மரத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொரு வினைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்த வேண்டும்.

இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் அய்யமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை இந்தி எதிர்ப்புப் போருக்கு நான் தயார், நான் தயார், நானும் என் மனைவியும் தயார், உண்ணாவிரதத்துக்கு தயார், உயிரை விடத்தயார் என்பதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிப்படவும், ராப்பட்டினி, பகல் பட்டினி கிடக்கவும், தொலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர்முனைச் சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடி பணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம்

பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்குப் புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு என் பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள். அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஞாபகத்தில்வையுங்கள்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை

தமிழ்ச் செல்வர்களே, உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்துவிடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா, இறப்பதா? என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும், பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள். நடந்தது நடந்து விட்டது. அதைப் பரிகரிக்க உங்களால் செய்யக்கூடியது நீங்கள் மானத்திலும், உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தைத் தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொதுமக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்

பொதுத்தமிழ் மக்களுக்கு ஒரு மாபெரும் விண்ணப்பம். தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப் பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாசிரமப் புரோகிதர் ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ்மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதைவிட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல் அவர்களும், நாமும் நமது பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சிப்போராக, முயற்சியாகக் கருதுங்கள். உங்கள் சௌகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களைப் போருக்குக் கச்சைக் கட்டி விரட்டி அடியுங்கள்.

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இதுவரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ்நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது.

ஆகவே, பொதுமக்களே, இளைஞர்களே, தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.

- குடிஅரசு; 08.05.1938.

இந்திப்போர்


இந்திப்போர் ஆரம்பமாகிவிட்டது. இந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப்படுத்ப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாக கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும், மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திரபோஸ் இந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று இந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும் காங்கிரஸ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

தோழர் சி.டி. நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்து இந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டுமென்றும், இது விஷயமாக ஒரு முடிவு ஏற்படும் வரை இந்தி கட்டாயபாட விஷயமாக எதுவும் செய்யக்கூடாதென்று கனம் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் காங்கிரஸ் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இது விஷயமாக நமக்கு இன்று வரை இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியிடமிருந்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. எனவே, பிரஸ்தாப விஷயமாக நாம் எதுவும் கூற முடியவில்லை. தோழர் சுபாஷ் போஸ் மெய்யாகவே தோழர் சி.டி. நாயகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தால் சென்னை காங்கிரஸ் சர்க்கார் இந்தி எதிர்ப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? என்ற சந்தேகமும் நமக்கு உண்டாகிறது.

காங்கிரஸ் ராஜ்ஜியத்திலே சர்வ ஜனங்களும் பூரணமான பிரஜா, சுதந்திரங்கள் இருந்து வரும் என காங்கிரஸ்காரர்கள் விளம்பரம் செய்தனர்; செய்கின்றனர். ஆனால், அவர்களது பிரஜா சுதந்திரம் எத்தன்மையது என்பதை சென்னை மெயிலைப் போலவே நம்மாலும் உணர முடியவில்லை ஒருக்கால் அவர்கள் கூறும் பிரஜா சுதந்திரம் காங்கிரஸ் காரருக்கு மட்டும்தான் உண்டா? சமீபத்தில் சென்னையில் கிராம்பு மறியல் நடைபெற்றது. மாகாண காங்கிரஸ் தலைவர் ஆதரவிலேயே அந்த மறியல் போர் நடைபெற்றது. விவசாய மந்திரி கனம் முனுசாமிப் பிள்ளையும் அந்த மறியல் போரைக்கண்ணுற்றார்.

ஆனால், அந்த மறியல்காரர்மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, காங்கிரஸ் சர்க்கார் பிரஜா சுதந்திரத்துக்கு வழங்கியிருக்கும் பொருள் நமக்கு மர்மமாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போர் அனாவசியமாகவும், அக்கிரமமாகவும் தொடங்கப்பட்டதல்ல. காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் காங்கிரஸ் காரியக்கமிட்டியே நிர்ணயம் செய்யுமெனச் சொல்லப்படுகிறது. பொது பாஷை ஒரு அகில இந்தியப் பிரச்சினை சென்னை மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. தேசிய பொதுபாஷையைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் இதுகாறும் முடிவு செய்யவே இல்லை. ஹரிபுரா காங்கிரசிலும் கூடத் தேசிய பொதுப்பாஷை விஷயம் பரிசீலனை செய்யப்படவில்லை. சென்ற பொதுத்தேர்தலுக்கு முன், தேசிய பொதுப்பாஷையைப் பற்றிக் காங்கிரஸ்காரர் ஒரு வார்த்தையாவது பேசவுமில்லை. எனவே திடும் பிரவேசமாய் இந்தியைத் தமிழ்நாட்டில் புகுத்தப்போவது நேர்மையே அல்ல.

இது பல இந்தி எதிர்ப்பு மகாநாட்டு முடிவுகள் மூலம் சென்னை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திக்கு தென்நாட்டில் இருந்துவரும் எதிர்ப்பின் வன்மை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியாததுமல்ல. இந்தி கட்டாயப் பாட விஷயமாக சென்னை முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியாரும், கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்பராயனும் தம் அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டு வந்திருப்பதே இந்தி எதிர்ப்பின் வன்மையை சென்னை காங்கிரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. ஈரோடு பொதுக்கூட்டத்தில் கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் பேசுகையில் இந்தியில் பரீட்சை நடத்தப் போவதில்லையென்று கூறினார்.

சென்னை மாகாணம் முழுவதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாகக் கூறிய கனம் முதல் மந்திரி 125 பள்ளிக் கூடங்களிலே பரிட்சார்த்தமாக இந்தியை கட்டாயப் பாடமாக்கப் போவதாகவும் இந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மற்ற பாடங்களில் போதிய அளவுக்கு மார்க்கு வாங்கியிருந்தால் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றும் இப்பொழுது கூறுகிறார்.

கல்வி மந்திரி இந்தியில் பரீட்சையே நடத்தப்பட மாட்டாது என்று கூறி இருக்கையில், இந்திப்பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என கனம் முதல் மந்திரி யார் கூறுவதின் மர்மம் என்ன? இதனால் இந்தி விஷயமாக பிரதம மந்திரிக்கோ, கல்வி மந்திரிக்கோதிடமான கொள்கை இல்லை என்பது விளங்கவில்லையா? சென்னை மாகாண மாணவ, மாணவிகளின் ஷேமத்தைப் பாதிக்கக்கூடிய கல்வி விஷயத்தில் இம்மாதிரி வழவழாக் கொள்கையைக் காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்றுவது நேர்மையாகுமா? தென்னாட்டு மக்களில் 100 - க்கு 93 பேர் எழுத்து வாசனை இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய்மொழிப் பயிற்சியிலேயே சென்னை மாகாணம் இவ்வளவு மோசமாக இருந்து வருகையில் இந்தி கட்டாய பாடத்தைச் சென்னை மாகாண சிறுவர், சிறுமியர் தலையில் ஏற்றுவது என்ன நீதி? சென்னை மாகாணக் கல்வி இன்மையைப் போக்க சென்னை பிரதம மந்திரி ஏன் முயற்சி செய்யவில்லை? கல்வி இன்மையைப் போக்க வேண்டியதல்லவா பொறுப்புடைய ஒரு மந்திரியின் முதல் வேலை.

அய்க்கிய மாகாணத்திலே கல்வியின்மையைப் போக்க 10 லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து வேலைகள் நடைபெற்று வருவதை சென்னைப் பிரதம மந்திரி அறியாரா? கல்வி விஷயத்தில் அய்க்கிய மாகாண மந்திரி ஒரு விதமாகவும், சென்னை மாகாண மந்திரி வேறு விதமாகவும் நடப்பது காங்கிரஸ் மாகாணங்கள் எல்லாம் ஒரே மாதிரிக் கொள்கையையே பின்பற்றும் எனக்கூறப்படுவது சென்னை மாகாணத்துக்கு மட்டும் பொருந்தாதா? எப்படிப் பார்த்தாலும் சரி, சென்னை முதல் மந்திரியார் போக்கு ஆதரிக்கக்கூடியதே அல்ல.

ஆகவே, சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் முடிவுகளை நிறைவேற்றி வைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே நிர்வாகக் கமிட்டியார் கட்டளைப்படி நடக்கத் தென்னாட்டவர் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

- குடிஅரசு; 05.06.1938.

நமது விண்ணப்பம்

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7 - 1 - எ படி, 4 மாதம், 6 மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்துக் கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.

மற்றும் தோழர்கள் சி.டி. நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த சுவாமி (ஒரு சன்யாசி), கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ.பி.எல்., சண்முகானந்த சுவாமி (ஒரு சன்யாசி), சி.என். அண்ணா துரை எம்.ஏ., (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரிநாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3 வருஷம் வரை தண்டிக் கும்படியான இண்டியன் பீனல் கோர்ட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். இந்த சுயராஜ்ஜிய சர்க்கார் இந்தக் காரியங்கள் மாத்திரம்தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்து விடுவார்கள் என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக்கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி நமது தோழர் சாத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அருப்புக்கோட்டை அரசியல் மகா நாட்டுத் தலைமைப் பிரசங்கத்தில் இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும், அவர்கள் மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப்போடும் படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக தயாள குணத்தோடு இளகிய மனம் கொண்டு பேசியிருக்கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்துத் தலையங்கம் எழுதி இருக்கிறது.

மெயில் விளாசல்

அதாவது, தோழர் சத்தியமூர்த்தியாரே, நீர் இந்தியை எதிர்க்கிறவர்களுடைய தலைகளையெல்லாம் வெட்ட வேண்டும் என்று சொல்லுகிறீர்களே, அப்படியானால் சென்னைக் கடற்கரையில் தோழர் ஈ.வெ. ராமசாமி பேசும்போது 50,000 (அய்ம்பது ஆயிரம்) ஜனங்கள் கேட்டுக் கொண்டிருந்ததோடு, திருச்சி கே. எ.பி. விஸ்வநாதம் அவர்கள் சர்க்காரைக் கண்டித்துத் தீர்மானம் பிரேரேபித்ததற்கு அந்த 50,000 பேர்களும் ஏகமனதாய் ஓட்டுக் கொடுத்திருக்கிறார்களே! ஆதலால் இந்த 50,000 பேர்களுடைய தலைகளையும்தானே வெட்ட வேண்டும். இதுதானா உமது சுயராஜ்ஜியம்? இதுதானா காந்தியார் கூறும் அன்பினால் ஆளப்படும் ராஜ்ஜியபாரம்? என்று கேட்டிருக்கிறதே தவிர, மற்ற எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும், எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது மாத்திரமில்லாமல், அதைப்பற்றி இதுவரை எந்தக் காங்கிரஸ் தலைவர் என்பவர்கள்ளும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்றால், இன்றைய சுயராஜ் ஜியத்தில் தமிழ்மக்களின் தலை, உயிர் எவ்வளவு அற்பமாய் மதிக்கப் படுகின்றது என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்று கேட்கிறோம்.

ஆச்சாரியாருக்கு மூர்த்தியார் உதவி

உண்மையில் தோழர் சத்தியமூர்த்திக்கும், கனம் ஆச்சாரியாருக்கும் ஒருவருக்கொருவர் தனிமையில் கண்டால் வெட்டிக் கொள்ளும் படியான ஆத்திரமும், குரோதமும் இருந்து வருவது யாவரும் அறிந்ததாகும். அதாவது, சத்தியமூர்த்தியாருக்குக் கிடைக்க வேண்டிய மந்திரி பதவியைத் தோழர் ஆச்சாரியார் திடீரென்று திருச்சி டாக்டர் ராஜனுக்குக் கொடுத்துவிட்டதால் அன்று முதல் இன்றுவரை ஆச்சாரியாரை வைத வண்ணமாகவும், அவர் மீது எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த வண்ணமாகவும் இருந்து வருகிறார். அப்படிப்பட்டவர் ஆச்சாரியாரின் இந்தி கட்டாய நுழைப்பும் எதிர்ப்பும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற விஷயமாக இருந்து வருகிறது என்று தெரிந்தவுடன், இந்தியை எதிர்ப்பவர்களை ஆச்சாரியார் 6 மாதமும், 3 வருஷமும் தண்டித்தால் போதும் என்று சொன்னால், தோழர் சத்தியமூர்த்தியார் இந்தியை எதிர்ப்பவர்களை ஆயுள் பரியந்தம் தண்டிக்க வேண்டும் அல்லது தலையை வெட்ட வேண்டும் என்று பகிங்கிரமாக ஒரு பொது மேடையில் பேசி ஆச்சாரியாருக்கு உதவி செய்கிறார்.

- குடிஅரசு; 03.07.1938.

சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

சட்டமறுப்புக் காலத்திலே கிரிமினல் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியபோது இந்திய தேசியவாதிகள் எல்லாம் ஒரு முகமாக எதிர்த்தனர். அச்சட்டங்களை நிறைவேற்றிய பிரிட்டிஷ் சர்க்கார் மீது ஓயாது வசை புராணம் பாடினர். தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்து காங்கிரஸ்காரர் பதவியேற்றால், அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்துப் பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கிரஸ்காரர் செய்த விஷமப் பிரச்சாரத்தின் பயனாகவும், காங்கிரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதன் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கிரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், எல்லைப்புற மாகணத்தைத் தவிர வேறு எந்தக் காங்கிரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக, காங்கிரஸ்காரரால் வெறுக்கப்பட்ட சி.அய்.டி.களும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவை யென்றும், அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கிரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்து விட்டார்கள். காங்கிரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜதுரோகக் குற்றஞ்சாட்டி, வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

அவர்கள் செய்த குற்றம் ?

இந்தி எதிர்ப்பாளர் செய்த குற்றம் என்ன? முதல் மந்திரியார் வீட்டு முன்னும் ஒரு பள்ளிக்கூடத்தின் முன்னும் நின்று கொண்டு இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்று கத்தினார்களாம். இதுதான் அவர்கள் பேரில் கூறப்படும் குற்றச்சாட்டு; மற்றபடி பலாத்காரம் செய்ததாவோ, இடைஞ்சல் உண்டு பண்ணியதாகவோ, காலாடித்தனம் செய்ததாகவோ இதுவரை தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் எவரும் சாட்சியம் கூறவில்லை; பொது ஜனங்களும் புகார் செய்யவில்லை. சென்னையில் காங்கிரஸ் தலைவர்கள் மேல் பார்வையில், போலீஸ் பந்தோபஸ்தில் சமீபத்தில் நடைபெற்ற கிராம்பு மறியலின்போது காங்கிரஸ் தொண்டர்களால் கிராம்பு வியாபாரிகளுக்கும், பொது ஜனங்களுக்கும் உண்டான இடைஞ்சல் கூட இந்த இந்தி எதிர்ப்புத் தொண்டர்களால் எவருக்கும் உண்டாகவில்லை. மாஜி காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவகர்லால் தோற்றுவித்த பிராஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தார் கொள்கைப்படி, சர்க்கார் முறை ஜனங்களுக்குத் திருப்திகரமானதாய் இல்லாதிருந்தால் சாந்தமான முறையில் மறியல் செய்ய எல்லாருக்கும் உரிமையுண்டாம். நமக்கு இதுவரை கிடைத்துள்ள செய்திகளினால் அந்த சாந்தமான முறைப்படியே சாத்வீக முறைப்படியே இந்தி எதிர்ப்பாளர் மறியல் செய்து வருவதாய்த் தெரிகிறது.

பம்பாய்ச் சங்கத்தார் கண்டனம்

இம்மாதிரி சாத்வீக மறியல் செய்து வரும் இந்தி எதிர்ப்பாளர் மீது அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்வது அடாத செயலெனப் பம்பாய் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தாரும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், தேசியவாதிகள் மீது அந்நிய சர்க்கார் அச்சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் பொதுஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அச்சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டெனச் சில குறுகிய புத்தியுடைய காங்கிரஸ் பக்தர்கள் கூறுகிறார்கள். இது திருடன் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும், நண்பர்கள் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டெனக் கூறுவதற்கு ஒப்பாகவே இருக்கிறது. சட்டமறுப்பு காலத்திலே அந்நிய சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்களின் படி அளித்த தண்டனைகள் எவ்வளவு கொடுமையாக காங்கிரஸ்காரர்க்குத் தோற்றப்பட்டதோ, அவ்வளவு கொடுமையாகவே இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அளிக்கும் தண்டனைகளும் தோற்றப்படுகின்றன. அடக்குமுறைச் சட்டக் கொடுமைகளை அனுபவித்தறிந்த காங்கிரஸ்காரர் தமது ஆட்சியிலே அதே சட்டங்களை எதிரிகள் மீது பிரயோகம் செய்வது நீசத்தனமாகும்

காங்கிரஸ்காரர் அதிர்ஷ்டம்

காங்கிரஸ்காரர்களுக்கு ஏராளமான பத்திரிகைகளும், ஏஜெண்டுகளும் இருந்ததனால் காங்கிரஸ்காரர் சிறைகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒன்று பத்தாக பெருக்கி விளம்பரம் செய்யப்பட்டன. அந்த வசதிகள் இந்தி எதிர்ப்பாளருக்கு இல்லாததனால் அவர்கள் அனுபவிக்கும் சிறை கஷ்டங்களைப் பொதுஜனங்கள் அறிய முடியவில்லை. சிறையிலே இந்தி எதிர்ப்பு கைதிகள் சரியாக நடத்தப்படாததனால் அநேகருக்கு வயிற்றுக் கடுப்பு முதலிய நோயுண்டாயிருப்பதாயும், ஒருவருக்கு டபிள் நிமோனியா நோயுண்டாகி ஆஸ்பத்திரி சிகிச்சையில் இருந்து வருவதாயும் தெரிகிறது. தென்னாட்டார் பொதுவாக உண்பது அரிசிச் சாதமே. இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவர் களெல்லாம் அரிசிச் சாதமுண்டு பழகியவர்களே. கேப்பைக்களி தமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதென்றும், அரிசிச் சாதம் போட உத்தரவளிக்க வேண்டுமென்றும் அவர்கள் செய்து கொண்ட விண்ணப்பம் அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லையெனச் சொல்லப்படுகிறது. பத்து மந்திரிகளும், பத்து பார்லிமெண்டரிக் காரியதரிசிகளும் இருந்தும் இவர்களில் ஒருவராவது இந்தி எதிர்ப்புக் கைதிகளைப் பார்த் ததாகவோ, அவர்களது குறைகளைப் பரிகரித்ததாகவோ தெரியவில்லை. ஜனங்களால் தேர்தெடுக்கப்பட்ட சர்க்கார் நிர்வாகத்திலே நம்ப ஆட்சி அமலில் இருக்கும் இந்நாளிலே காந்தியாரின் அன்பு ராஜ்ஜியம் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்காலத்திலே சாத்வீக மறியல் நடத்திய தொண்டர்களை இம்மாதிரி கொடுமைப்படுத்துவது நீதியாகுமா? தருமமாகுமா? அகிம்சாவாதிகளான காங்கிரஸ்காரர் ராஜ்ஜியத்தில் இம்மாதிரி கொடுமைகள் நடப்பது அகிம்சாவாதிகளுக்குப் பெருமையளிக்கக் கூடியதாக இருக்குமா?

கைது செய்யாததனால் வந்த மோசம் என்ன?

கொள்ளையடித்ததற்காகவும், கொலை புரிய முயன்றதற்காகவும் மற்றும் பல கிரிமினல் குற்றங்கள் செய்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசம் செய்தவர்கள் விடுதலை பெற்றுவரும் இக்காலத்திலே, சாத்வீக மறியல் செய்பவர்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கும், இம்சைகளுக்கும் ஆளாவதென்றால் இதற்கு ஜவாப்தாரியாயுள்ள சர்க்கார் என்றோ, பொறுப்புடைய சர்க்கார் என்றோ, ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்காரென்றோ, அன்பு ராஜ்ஜியம் நடத்தும் சர்க்கார் என்றோ கூறமுடியுமா? சென்ற இரண்டு மூன்று தினங்களாகப் பிரதம மந்திரி வீட்டு முன் மறியல் செய்வோர் கைது செய்யப்பட வில்லையெனத் தெரியவருகிறது. வாஸ்தவத்தில் அவர்கள் செய்யும் மறியல் துரகிருதமானதாயிருந்தால் பலாத்காரமுடையதாயிருந்தால் எவ்வித அசம்பாவிதங்களும் உண்டாகவில்லையென்றே தெரியவருகிறது. ஆகவே, சாத்வீக மறியல் செய்யும் அவர்களைக் கைது செய்வதும் தண்டிப்பதும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்துடனேயே அன்றி அவர்களால் ஆபத்துண்டாவதனால் அல்ல என்பது விளங்கவில்லையா? இந்தி எதிர்ப்பாளருக்குத் தாம் பயப்படப் போவதில்லையென்றும் அவர்கள் சிறைபுகுந்தால் மோரும், சாதமும் அளித்துக் காப்பாற்றத் தயார் என்றும் பொதுக்கூட்டங்களில் ஜம்பம் பேசிய சிறை மந்திரி கனம் ராமன் மேனோன் என்ன செய்கிறார்? இந்தி எதிர்ப்புக் கைதிகளின் நிலைமையை ஒரு நாளாவது அவர் நேரில் சென்று விசாரித்தாரா?

ஹம்பக் பேச்சு

காங்கிரஸ்காரர் உயிருக்கும் உடலுக்குத்தான் மதிப்புண்டு; ஏனையோர் உயிருக்கும் உடலுக்கும் மதிப்பில்லையென்பது சிறை மந்திரியார் கருத்தா? இந்தி எதிர்ப்பாளர் சிறையில் கொடுந்துன்பம் அனுபவித்து வருகையில் காங்கிரஸ்காரர் அகிம்சையைப் பற்றியும், அன்பு ராஜ்ஜியத்தைப் பற்றியும் பேசுவது ஹம்பக் பேச்சுத்தானே! பிரிட்டிஷ் சர்க்கார் மேற்பார்வையில் நடக்கும் மாகாண சுய ஆட்சியிலேயே சர்க்கார் கொள்கையைக் கண்டிப்பவர்களுக்கு இக்கதியானால் பிரிட்டிஷ் தொடர்பற்ற பூரண சுயராஜ்ஜியத்திலே ராம ராஜ்ஜியத்திலே அன்பு ராஜ்ஜியத்திலே சர்க்கார் கொள்கையை எதிர்ப்பவர்கள் கதி என்னாகும்? காங்கிரஸ்காரரின் மாகாண சுய ஆட்சி அனுபவங்களை முன்னிறுத்திப் பார்க்கும் எவனாவது காங்கிரசின் பூரண சுயராஜ் ஜியத்திலே பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும், அபிப்பிராய சுதந்திரமும் உடல் பொருள் ஆவிப் பாதுகாப்பும் கிடைக்கும் என நம்புவானா? வரப்போகும் காங்கிரஸ்காரரின் பூரண சுயராஜ்ஜியத்திலே ஒடுக்கப்பட்டவர்கள் நிலைமை என்னவாகும்? மைனாரிட்டிகள் நிலைமை என்னாகும்? கராச்சித் தீர்மானப்படியுள்ள பிரஜா உரிமைகள் எங்கே? மாகாண சுயாட்சியைக் காங்கிரஸ்காரர் கைப்பற்றியதும் அந்தக் கராச்சித்திட்டம் பிரஜா உரிமைகள் செத்துப் போய்விட்டனவா? காங்கிரஸ்காரருக்கு மட்டுந்தான் அந்த பிரஜா உரிமையுண்டா? பார்ப்பன அடிமைகளுக்குத்தான் அந்தப் பிரஜா உரிமைகள் உண்டா? அப்படியானால் காங்கிரஸ்காரர் கோரும் சுயராஜ்ஜியம் காங்கிரஸ் காரருக்கு மட்டும் அல்லவென்றும், சர்வ ஜனங்களுக்கும் அந்த உரிமை
உண்டென்றும் காங்கிரஸ் நண்பர்களும், காங்கிரஸ் எதிரிகளும் சம்மான உரிமைகள் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுவதற்குப் பொருள் உண்டா? மதிப்புண்டா? காங்கிரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால், யோக்கியப் பொறுப்புடையவர்களானால், நேர்மையுடையவர்களானால் அடக்குமுறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?

அடக்குமுறைச் சட்டங்கள் ஏன் ஒழியவில்லை ?

அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க மசோதா கொண்டு வந்தால் கவர்னர் அனுமதிப்பாரோ மாட்டாரோ என்ற பீதியினால், அவைகளை ரத்து செய்ய சென்னைப் பிரதம மந்திரியார் ஒருக்கால் முயற்சி செய்யா திருந்தாலும், அதை உபயோகப்படுத்தாமல் துருப்பிடித்துத் தன்படியே ஒழியும்படியாவது விட்டுவிடக்கூடாதா? சட்டங்கள் எவ்வளவு கொடியனவாயிருந்தாலும் அவைகளைக்கையாளப்பட்டவர்கள் நேர்மையு டையவர்களாயும், நீதி போதமுடையவர்களாயும் இருந்தால் அச்சட்டங்களினால் மக்களுக்குத் தீமையுண்டாகாது. சட்டங்களைக் கையாளுகிறவர்கள் பழிக்குப்பழி வாங்கும் இயல்புடையவர்களாயிருந்தால் குற்றமற்ற சட்டங்களாலும் கூடப் பொது ஜனங்களுக்குத் துன்பங்கள் உண்டாகும். தோழர் டி.டி. கிருஷ்ணமாச்சரியார் கொண்டு வரப்போகும் அடக்குமுறையொழிப்பு மசோதாவைப்பற்றி அபிப்பிராயம் கூறிய அசெம்பிளி உபதலைவர் அம்மையார் ருக்மணி லட்சுமிபதி பேச்சு சுதந்திரத்துக்கும் செயலாற்றும் சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கும் கிரிமினல் திருத்தச்சட்டம் ஒழிய வேண்டியதுதான் என்று சொன்னாராம். தோழர் கிருஷ்ணமாச்சாரியார் கொண்டுவரப்போகும் மசோதாவை எந்தக் காங்கிரஸ் சர்க்காரும் ஆட்சேபிக்க முடியாது.

முதல் வெற்றி

வாஸ்தவத்தில் இந்த மசோதாவைக் காங்கிரஸ் சர்க்காரே கொண்டுவந்திருக்க வேண்டும் என தோழர் ராமதாஸ் பந்துலு கூறினாராம். சென்னை காங்கிரஸ் சர்க்கார் சுயமதிப்பைக் காப்பாற்றும் பொருட்டாவது கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஒழிக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என சென்னை மாஜி அய்கோர்ட்டு நீதிபதி தோழர் வி.வி. ஸ்ரீநிவாச அய்யங்கார் அபிப்பிராப்பட்டாராம். இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கடைசி முடிவு எப்படியானாலும் சரி, காங்கிரஸ்காரரின் சுயரூபத்தையும் பழிக்குப்பழி வாங்கும் நீச குணத்தையும், சிவில் உரிமைகளைக் காப்பாற்றுவதில் அவர்களுக்கு இருந்து வரும் ஆர்வத் தையும் வெட்ட வெளிச்சமாக்க ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டது அவ்வியக்கத்துக்கு ஒரு முதல் வெற்றியே. அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதைத் தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழித்தும் ஒரு மசோதாவை அக்கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப் பமளித்த காங்கிரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக் கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கிரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

பாஷ்யம் முயற்சி

மற்றும் சென்னை பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் தோழர் கே. பாஷ்யம் அய்யங்கார் பிரஜா உரிமைளைப் பற்றியும், இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகம் செய்வது பற்றியும் யோசிக்க, சென்னை பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கக் கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டப் போவதாகச் சொல்லப்படுகிறது. இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்வது தப்பென பம்பாய் பிரஜா உரிமை சங்கம் ஏற்கனவே அபிப் பிராயம் கூறியிருக்கிறது. அதை ஆட்சேபித்த ஒரு காங்கிரஸ் பத்திரிகை சாத்வீக மறியல் செய்வதுதான் பிரஜா உரிமையென்றும் இந்தி எதிர்ப்பு பலாத்காரமானதும், துராக்கரமானதுமாக இருப்பதினால் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்வது சரிதானென்றும் அபிப்பிராயம் கூறியிருக்கிறது. தோழர் பாஷ்யம் அய்யங்கார் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தைக் கூட்டப் போகும் நோக்கம் என்ன? பம்பாய் சங்க அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? சென்னைக் காங்கிரஸ் பத்திரிகை அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? தோழர் கே. பாஷ்யம் அய்யங்கார் மந்திரி கட்சியைச் சேர்ந்தவராயிருப்பதினால் பம்பாய்ச் சங்க அபிப்பிராயத்தைக் கண்டிக்கும் பொருட்டு சென்னைச் சங்கத்தைச் கூட்டுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படலாம். ஆகவே, சங்கம் கூட்டி முடிவு செய்யும் வரை நாம் காத்திருந்து பார்ப்போமாக!

- குடிஅரசு; 24.07.1938.

லட்சியத்திற்காகவே

உயிருள்ள அளவும் பாடுபட்டு சாவேன் தோழர்களே!


இன்றைய கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்காகச் செல்லும் படையை வழியனுப்புவற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப்பம் விளைவிக்க, நினைத்தது சுத்த முட்டாள்தனமாகும். இந்தக் கூட்டத்தில் இரண்டொருவர் காந்திக்கு ஜே போடு வதும் இந்தி வாழ்க என்று கத்துவதும், மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வ தும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தை கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கி இராவிட்டால் இன்று பலர் உதைபட்டுத் துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்தச் சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத்தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலிபுல்லா சாயபு கேட்டபோது கை தூக்கிய எண்ணிக்கையிலிருந்தே இத்தொல்லைக்காரர்களின் யோக்கியதை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரிதும் பார்ப் பனர்களாகத்தான் இருந்திருப்பதாய்த் தெரிகிறது. இம்மாதிரிக் காலித் தனத்தால் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இப்பார்ப்பனர் வெற்றிபெற முடியும்?

நாங்கள் உண்மையிலேயே இந்தியை எதிர்ப்பவர்கள், இந்தி பார்ப்பன ஆதிக்கத்துக்காக புகுத்தப்படுவது என்பதை இக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்களே மெய்யாக்கி விட்டார்கள். தமிழ் மக்கள் வயிறு எரிந்து மனம் நொந்து கிடக்கும் காலத்தில், அதுவும் பிரிந்து ஆதரவற்றுக் கிடக்கும் இந்நாளில் ஏதோ சில கூலிகள் தங்கள் வசத்தில் இருப்பதாகக் கருதி எங்கள் முயற்சிகளை இப்படி அடக்கப் பார்ப்பது தர்மமா? என்று கேட்கின்றேன்.

எதிரிகள் சூழ்ச்சி

எங்களுடைய சேதிகளைப் பொதுப்பத்திரிகை எனச் சொல்லும் பார்ப்பனப் பத்திரிகைகள் கேலி செய்து, கிண்டல் செய்து மறைத்துத் திரித்துக் கூறுகின்றன. சில அடியோடு அடக்கி விடுகின்றன. எங்கள் ஒற்றுமையைக் கலைக்க சூழ்ச்சி செய்கின்றனர். மக்கள் அநீதியாகச் சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

எங்களுக்குள்ளாகவே துரோகிகள் கற்பிக்கப்படுகிறார்கள். கீழ் மக்களைச் சுவாதீனம் செய்து அவர்கள் மூலமாக நம் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்யப்படுகின்றது. இந்தி எதிர்ப்பு ஜஸ்டிஸ் கட்சியின் மற்றோரு அவதாரம் என்றும் பழி சுமத்தப்படுகின்றது.

ஜஸ்டிஸ் கட்சிக்குச் சட்டசபையில் உள்ள இரண்டு தலைவர்களும் பார்ப்பன தாசர்களாய் இருக்கும் போது, இது எப்படி ஜஸ்டிஸ் கட்சிக் காரியமாக இருக்கமுடியும். இந்தி எதிர்ப்பு பார்ப்பன துவேஷத்துக்கு ஒரு கருவி என்று சொல்லப்படுகிறது. தோழர்கள் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி, கே. நடராஜன், வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, சி.வி. விஸ்வநாத சாஸ்திரி, உ. வே. சாமிநாதய்யர், பரவஸ்து ஆச்சாரியார், கே. பாஷ்யம் அய்யங்கார், வி. பாஷ்யம் அய்யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார், குன்ச்ரு, டில்லி நிர்வாகசபை வர்த்தக மெம்பர் சர். மகம்மது யாகூப் இவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா?

"சென்டினல்", "அமிர்த பஜார்", "மாடர்ன் ரிவ்யூ, முதலாகிய பத்திரிகைகள் ஐஸ்டிஸ் பத்திரிகைகளா? அல்லது பம்பாயிலும், சென்னையிலும் உள்ள பிரஜா உரிமைச் சங்கங்கள் ஜஸ்டிஸ் கிளைச்சங்கங்களா? அடக்கு முறையை ஒன்று. இரண்டு தடவையாவது கண்டித்து எழுதிய சுதேசமித்திரன் ஜஸ்டிஸ் பத்திரிகையா? இப்படியெல்லாம் இருக்கத் தமிழ் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு அவர்களை அடிமை கொள்ளச் செய்யும் இம்மாதிரியான சூழ்ச்சியும் கொடுமையும் நியாயமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

சில்லரை சேஷ்டை செய்வது நியாயமா?

நாங்கள் சொல்வதும் செய்வதும் தப்பானால் நாளை இங்குக் கூட்டம் போட்டுப் பாருங்கள்; உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். மற்றபடி பொய்யாகவாவது கூட்டத்தில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டது என்று எழுதுவதற்கு ஆகவே இங்கு விஜயம் செய்திருக்கும் சில அயோக்கிய நிருபர்களுக்குச் சேதி கொடுக்க வேண்டும் என்று கருதிச் சில்லரை சேஷ்டைகள் செய்வது நியாயமா? என்று கேட்கிறேன்.

இன்றைய ஆட்சியில் தங்கள் அபிப்பிராயம் சொல்லக் கூடவா இடமில்லை? இந்தக் கூட்டத்தில் காந்திக்கு ஜே ஏன் போட வேண்டும்? இவர்கள் காந்தியை யோக்கியர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா? அல்லது தங்களையாவது காந்தி சிஷ்யர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா? நான் பார்த்தேன், ஒருவன் மண்ணை வாரி இறைத்துக் கொண்டு காந்திக்கு ஜே போட்டான். முதுகில் இரண்டு அப்பாளம் விழுந்தவுடன் அறுத்து விட்ட கழுதைகள் போல் பலர் ஓட்டமெடுத்தார்கள். இந்த சமயம் நான் பயந்து விட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ, நம் ஆள்களுக்கோ பந்தோபஸ்தில்லை என்று நான் கவலைப்படவில்லை. ஆத்திரத்தோடு கை கலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும்? அப்புறம் இந்தி எதிர்ப்புக்காரர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்வதா? அப்புறம் இந்தி எதிர்ப்புக்கஷ்டப்பட்டு பலாத்காரம் ஏற்பட இருந்ததை இப்போது அடக்க வேண்டியதாயிற்று. போலீசார் கூட்டத்திற்குக் காவல் அளிக்க வேண்டியதில்லை என்றாலும், காலிகளுக்காவது காவல் அளிக்க வேண்டாமா? இன்று இவ்வூர் போலீசு தண்டோரா அடிக்கக்கூட அனுமதி கொடுக் கவில்லை. நோட்டீசு அச்சடிக்க அச்சாபீசுகள் பயப்படுகின்றன.

தொண்டர்களுக்குத் தண்டனையா?

தொண்டர்களைச் சிறைபிடிப்பதையும், தண்டிப்பதையும், அவர்களை நடத்துவதையும் சற்று பாருங்கள். 150 பேர்களைச் சிறைப்பிடித்துத் தண்டித்துவிட்டு இப்போது அந்தக் காரியத்திற்குச் சிறைப்பிடிப் பது நிறுத்தப்பட்டுப் போய்விட்டது என்றால் இதுவரை பிடித்தது ஒழுங்கா, நியாயமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றிக் காங்கிரஸ் காரியக் கமிட்டி தப்பு அபிப்பிராயத்தின் மீது அக்கிளர்ச்சி நடப்பதால் அதை விளக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரமளித்திருக்கிறது என்று தீர்மானித் திருக்கிறது.

அப்படியானால், அபிப்பிராய பேதத்தினால் நடத்தும் காரியத்துக்கு 6 மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் கடின காவலா என்று கேட்கின்றேன். இதுதான் ஜனநாயகமா? இதுதான் அபிப்பிராய சுதந்திரமுள்ள பிரஜா உரிமை ஆட்சியா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்த அரசாங்கம், இந்தி எதிர்ப்புக் கமிட்டியைச் சட்டம் மீறுவதற்கும், ஆயிரக்கணக்கான மக்களைச் சட்டம் மீறித் தீர வேண்டுமென்று கட்டாயப்படுத்தவும், தூண்டச் செய்கிறது. இதில் சர்க்காருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? என்று கேட்கிறேன்.

அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்து போவது அவமானம் என்று மக்கள் கருதும்படி செய்கின்றது.

நாம் என்ன செய்வது, கிளர்ச்சி கூட செய்யக்கூடாதா? தோழர் சத்தியமூர்த்தியார் இந்திக் கிளர்ச்சிக்காரரை ராஜ துரோக சட்டப்படி வழக்குத் தொடுத்து தூக்கில் போடும்படி சர்க்காருக்கு யோசனை கூறுகிறார். இப்போது நடத்தும் சட்டமே கொடுங்கோலாட்சி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, காங்கிரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அதைக் கையாளும் பார்ப்பனர்கள் யோக்கியதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தொண்டர்களுக்கு உபதேசம்

இப்படையை நடத்துகிறவர்கள் பொறுப்புள்ள பெரியார்கள். இவர்கள் நடத்தையில் படை வெற்றிகரமாய் முடிவு பெறும் என்ற கருதுகிறேன். ஒற்றுமை, சிக்கனம், சமரச எண்ணம் ஆகியவை தலைவர்களுக்கு வேண்டும். தொண்டர்களுக்குப் பொறுமை, சகிப்புத் தன்மை, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் தன்மை ஆகியவை வேண்டும்.

எதிரிகள் பல சூழ்ச்சி செய்வார்கள். சிறியதைப் பெரியதாக்கிப் பழிகூற பல எதிரிகள் இருக்கிறார்கள். எதிரியிடம் கூலி வாங்கிக் கொண்டு நம்மைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பல ஈனர்கள் நமக்குள்ளாகவே இருந்து குடிகெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்கத்துக்கு கேடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எவ்வளவு பழிசுமத்தினாலும், எவ்வளவு இழிவு படுத்தினாலும், இவற்றை எவ்வளவு பேர் நம்பினாலும் நான் மாத்திரம் களைத்துப் பின்வாங்குகிறவனல்ல. எனக்கு எனது லட்சியம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதற்காகவே உயிர் உள்ள அளவும் பாடு பட்டுத்தான் சாவேன். யார் என்ன சொன்னாலும் வெட்கப்படப் போவதில்லை. யார் என்ன மோசம் செய்தாலும், பூமித்துரோகம் செய்தாலும் சரி வாழ்நாள் முடிகிறவரை கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு காரியம் செய்கிறதென்ற முடிவில்தான் இருக்கின்றேன். ஆகவே, தோழர்களே! இம்மாபெரும் லட்சியத்திற்குத் தொண்டாற்றும் வேலை யாவரும் தங்கள் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் லட்சியத்துக்குத் தங்களால் கூடுமானவரை தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(01.08.1938 அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் படை வழியனுப்பு விழாக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய தலைமை உரை

- குடி அரசு ; 07.08.1938)

இந்தி எதிர்ப்பும்

பார்ப்பனப் பத்திரிகைகளும்

இந்தி எதிர்ப்பு விஷயமாய்ச் சென்னை மாகாணத்தில் இருந்து வரும் கிளர்ச்சியைப் பற்றியும், அது விஷயமாய்ச் சர்க்கார் கையாளும் கொடுங்கோன்மை அடக்குமுறையைப் பற்றியும், அந்த அடக்கு முறையை சரியென்று சொல்லிப் பொதுஜனங்களைச் சமாதானப் படுத்த அரசாங்கத்தார் சொல்லும் காரணங்களாகிய, அதாவது, இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு தாராளமான பணம் இருப்பதாகவும், கட்டுப்பாடாக இயக்கம் நடத்தப்படுவதாகவும், அதனால் தொண்டாகள் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல் புறப்பட்டு தித்குமுக்காடச் செய்வதால் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டி இருந்தது என்று சொல்வதுடன், ஒரு பெரிய மெஜாரிட்டியில் தேர்ந் தெடுக்கப்பட்ட மந்திரிகள் தங்கள் இஷ்டப்படி காரியம் செய்யாமல் தடுக்கும்படியான பெரிய கிளர்ச்சியாய் போய்விட்டதால் இப்போது இதை அடக்கத் தங்களுக்கு இருக்கிற அதிகாரமும், சட்டப் பாதுகாப்பும் போதவில்லை என்று தாங்கள் கருதுவதாகவும் சொல்லி, ஆதலால் இதைவிட, அதாவது இப்போது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்கு வதற்காகப் பயன்படுத்தும் சட்டத்தைவிட, அடக்குமுறைக் கொள்கைகளைவிட இன்னமும் கொடுமையான சட்டங்களைக் கூடிய சீக்கிரம் செய்யவேண்டி இருக்கிறது என்றும், மந்திரிகள் பதறித் துடிதுடிப்பதுவும் ஆகிய பேச்சுகளும், காரியங்களும் மந்திரிகள் கடற்கரையில் பேசின பேச்சுன் மூலமும், சட்டசபைப் பேச்சின் மூலமும் வாசகர்கள், பொதுஜனங்கள், மெயில், சுதேசமித்திரன் பத்திரிகைகளின் மூலமே பார்த்திருக்கலாம்.

கூலிப் பத்திரிகைகள் விஷமம்

குறிப்பாகக் கடற்கரையில் அய்யங்கார், ஆச்சாரியார் ஆகிய இரு பார்ப்பன மந்திரிகள் பேசிய பேச்சுக்களில் சிலவற்றை எடுத்து அப்படியே போட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விளக்கமும், சமாதான மும் சென்றவார குடி அரசு தலையங்கத்தில் பிரசுரித்திருந்ததை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

அவ்வளவு தூரம் அவற்றைத் தெளிவாக எடுத்துப் போட்டு அதுவும் பச்சைப் பார்ப்பன, அதிலும் அய்யங்கார் ஆதிக்கப் பத்திரிகையா கிய சுதேசமித்திரனில் இருந்தது போலேவே தேதி, பக்கம், கலம் முதலியவைகளையும் குறிப்புக்காட்டி எடுத்துப்போட்டு விளக்கிய பிறகும், சில பார்ப்பனக் கூலிப்பத்திரிகைகளும், எச்சிக்கலைக் காலிப் பத்திரி கைகளும் மக்களை ஏமாற்றிப் பார்ப்பனரல்லாத பொதுமக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டு தங்கள் ஜாதி சோம்பேறி வாழ்வுக்கும், ஊரார் உழைப்பை நோகாமல் பயன்படுத்தி ஏமாற்றி வாழும் இழி வாழ்வுக்கும், அனுகூலமாக சூழ்ச்சியும், பித்தலாட்டமும் செய்து மானம் கெட்டாவது, ஈனத்தனத்தை லட்சியம் செய்யாமலாவது வாழக்கருதும் சில பத்திரிகைகள் இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துப்போய் விட்டது; அதற்குக்கருமாதி ஆகிவிட்டது; சமாதி கட்டிப் பாறாங்கல்லைத் தூக்கி வைத்தாய் விட்டது என்று ஜாடைமாடையாயும், வெளிப்படையாயும் எழுதி வருகின்றன.

இதிலிருந்தே அந்த ஜாதியோ, அல்லது அந்த ஜாதிப் பத்திரிகையோ யோக்கியமாய், நாணயமாய், மனிதத் தன்மையாய், இந்த நாட்டில் வாழமுடியாத கேடான நிலைமைக்கு வந்துவிட்டது என்பது கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் பச்சையாய் விளங்கிவிடும் என்றே சொல்லலாம்.

ஆண்மையுள்ளவர்கள், சுத்தரத்த ஓட்டமுள்ள மனிதத் தன்மையுள்ளவர்கள் ஒரு காரியத்தையோ அல்லது தங்களுக்கு இஷ்டமில்லாததோ, அன்றி தங்களுக்குக் கேட்டதைத் தருவதோயான ஒரு இயக்கத்தையோ எதிர்ப்பதாய் இருந்தால் நேரிய முறையில், வீரத்தன்மையில் எதிர்க்க வேண்டும்.

ஈனத்தனமான முயற்சிகள்

அல்லது சரியான, நாணயமான சமாதனத்தைச் சொல்லி முறியடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஈனத்தனமான முறையில் இழி தன்மையான பொய்யையும், பித்தலாட்டத்தையும் பேசியும், எழுதியும்தகாத கேவலமான மாதிரி சூழ்ச்சிகள் செய்தும் ஒழிக்கப் பார்ப்பது எப்படி யோக்கியமானது என்று சொல்லமுடியும்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டது என்று விஷமத்தனமான முறையில் ஒரு பக்கம் அயோக்கியப் பிரச்சாரம் செய்வதும், மற்றோரு பக்கம் ஈசல் புற்றுப்போல் புலபுலெனப் புறப்பட்டால் நான் என்ன செய்வது என்று கோழைப் பேச்சு பேசிக் கொடுமையான காரியத்தைச் செய்ய முயற்சிப்பதும், கோர்ட் என்று சொல்லப்படும் நீதி ஸ்தலங்களில் உண்மையான தொண்டர்களைத் தாறுமாறான கேள்விகள் கேட்டு யோக்கியமற்ற முறையில் நீதி செலுத்துவதும், நீதிபதி என்பவர்களே அதிகப் பிரசங்கித்தனமான முறையில் ஈ. வெ. ராமசாமிதானே உங்களை அனுப்புகிறார்? என்று கேட்டு ஒப்புக்கொள்ளச் செய்ய முயற்சிப்பதும், எச்சிலை சோம்பேறிப் பையன்களைப் பிடித்து கூலி கொடுத்து, இந்தியை எதிர்ப்பதுபோல் வஞ்சக வேஷம் போடச்செய்து, இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குள் புகுத்தி மறியல் செய்யச் செய்து போலீசாரை பிடித்துப் போகச்சொல்லி கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கும் போனபின்பு, ஈ.வெ. ராமசாமிதான் தன்னை அனுப்பினான் என்று வாக்குமூலம் கொடுக்கும்படியும் மாய்மால் அழுகை அழுகும்படியும் சொல்லிக் கொடுத்து இயக்கத்தைப் பரிகாசம் செய்ய முயற்சிப்பதுமான பல இழிவான காரியங்கள் செய்யப்பட்டு வருவது யாருக்குத் தெரியாது என்று கேட்கின்றோம். இவற்றுள் எதையாவது யோக்கியமான காங்கிரஸ்காரனோ, காங்கிரஸ் பத்திரிகையோ மறுக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.மற்றும், காங்கிரஸ் பத்திரிகைகள் கையாளும் முறைகளில் ஒரு விஷமத்தனமான இழிமுறைப் பத்திரிகையின் செயலையும் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆச்சாரியார் பொய்ப் பிரச்சாரம் அதாவது, கனம் பொப்பிலி அரசர் சென்னை வந்து சேர்ந்தவுடன் பொப்பிலி அரசர், கனம் பிரதம மந்திரி ராஜகோபாச்சாரியாரை சந்தித்ததாகவும், இந்தி எதிர்ப்பை பொப்பிலி ராஜா அவர்கள் ஆதரிக்கவில்லை என்றும், இந்தி எதிர்ப்பை நிறுத்திவிடப் போவதாக ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக கூட்டத்தில் பிரேரேபிக்கப் போவதாகவும் சிறிதும் மானம், வெட்கம், நாணயம், ஒழுக்கம் இல்லாமல் எழுதி இயக் கத்தின் வேகத்தை குறைக்க முயற்சித்து இருக்கிறது. அதன் உண்மை என்ன என்று விசாரிக்கப் புகுந்தால் கனம் பிரதம மந்திரியே பொப்பிலி ராஜா வீட்டிற்குப் போய் அவரிடம் உண்மைக்கு மாறான அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லி இந்தி எதிர்ப்பு முறையின் மீது ராஜா அவர்கள் அதிருப்திப்படச் செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு ராஜா அவர்கள் அம்முறைகள் உண்மையானால் அது கைவிடப்பட வேண்டியதுதான் என்று அபிப்பிராயப்பட்டதாகவும் தான் நடந்திருக்கிறது.

அப்படி இருந்தாலும் கனம் பொப்பிலி ராஜா பத்திரிகைகளில் வெளியிட்ட சேதிகளில் கனம் ஆச்சாரியார் தன்னைச் சந்தித்த போது பல பொதுவாழ்க்கை விஷயங்களைப் பற்றித்தான் பேசப்பட்டதே ஒழிய, மற்றபடி சென்னைப் பத்திரிகைகளில் எழுதப்பட்ட விஷயம் அபாண்டமானது என்று கண்டிருக்கிறது.

மனந்துணிந்த கற்பனை

எனவே, பத்திரிகைகளின் விஷமப்பிரச்சாரம் எவ்வளவு தூரம் மனந்துணிந்த கற்பனை பித்தலாட்ட நடவடிக்கை கொண்டவைகளாக இருக்கின்றன என்பதற்காக இந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறோம்.

மற்றும் கனம் பிரதம மந்திரி ஆச்சாரியார் அவர்கள் சென்னைக் கவர்னர் பிரபு வீட்டிற்கும், சென்னை வெள்ளை அதிகாரிகள் வீட்டிற்கும், தமிழ்ப் பிரமுகர்கள் வீட்டிற்கும் சென்று இந்தி எதிர்ப்பு முறைகளைப்பற்றி எவ்வளவு துணிவாக உண்மைக்கு விரோதமான பேச்சுக்களைக் கட்டுப்பாடாகச் சொல்லி அவர்களுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் மீதும், எதிர்ப்பாளர்கள் மீதும் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படி செய்து வருகிறார் என்பதற்குச் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

பிரதம மந்திரியார் மாயக் கண்ணீ ர்

அதாவது, கனம் ஆச்சாரியார் அவர்கள் இந்தி எதிப்பைப் பற்றித் தனக்குக் கவலையில்லை என்றும், எதிர்ப்பாளர்கள் தன்னைப் பற்றியும், தம்பெண்டு பிள்ளைகளைப் பற்றியும், ஆபாசமான வார்த்தைகளை அசிங்கத்தனமான வார்த்தைகளால் காதால் கேட்க, வாயால் உச்சரிக்க முடியாத அவ்வளவு கொடூரமான வார்த்தைகளைப் பேசுவது தன்னால் சகிக்க முடியவில்லை என்றும், உங்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் வேறு, என் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் வேறா என்று கண்ணில் தண்ணீர் விட்டு அழுதுகொண்டு பேசுகிறார் என்றும் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து சேதி வந்திருக்கிறது.

அதாவது, இன்று ஆச்சாரியார் வகிக்கும் ஸ்தானத்துக்கு எந்த விதத்திலும் கீழானதல்லாத ஸ்தானம் வகித்தவர்களே பல பெரியார்கள் தங்களிடம் இப்படிச் சொன்னதாகச் சொல்கிறார்கள். கனம் ஆச்சாரி யார் அவர்கள், அவர்களிடம் (பல பெரிய மனிதர்களிடம்) சொன்னது மாத்திரமல்லாமல் சட்டசபையிலும் பொதுக்கூட்டத்திலும் கூட இப்படிச் சொல்லி இருக்கிறார்.

இதுதானா நேரான போர்முறை ? என்று கேட்க வேண்டியிருக்கிறது.

சாட்சிகள் சொன்னதென்ன?

ஏறக்குறைய சுமார் 100 தொண்டர்களின் கேசுகள் நீதி ஸ்தலத்தில் விசாரணை ஆகும் போது நேரில் இருந்தவர்களும் மற்றும் பக்கத்தில் இருந்த தக்க பொறுப்புள்ளவர்களும் இன்றும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வந்து சொல்லத் தயாராய் இருக்கிறார்கள். என்னவென்றால் கோர்ட்டு விசாரணையில் தொண்டர்கள் மீது குற்றம் கூறிச் சாட்சிகள், போலிசுக்காரர்கள் சொன்னதெல்லாம், இத்தொண்டர்கள் பிரதம மந்திரியார் வீட்டுக்குப் பக்கம் நின்று கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று சொன்னார்கள் என்றும், கத்தினார்கள் என்றும், கூப்பாடு போட்டார்கள் என்றும் தான் பெரிதும் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மேல் சுமார் 100 தொண்டர்கள் வழக்கு நடந்து தண்டிக்கப்பட்ட பிறகே ஆச்சாரியார் ஆட்சி ஒழிக! பார்ப்பன ஆட்சி ஒழிக!! என்று சொன்னதாகச் சாட்சிகள் சொன்னார்கள். பிறகு அடக்கு முறை வலுவடைந்த பிறகு ஆச்சாரியாரும், அவர்கூடப் பத்திரிகைகளும் ஆளுகளும் ஆணவமாகவும் திமிராகவும் பேசவும் எழுதவும் செய்த பிறகு பூணூல் ஆட்சி ஒழிக! உச்சிக் குடுமி ஆட்சி ஒழிக! என்று கூப்பாடு போட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இவைகளை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், இது எப்படி பெண்டு பிள்ளைகளை பற்றி இழிவாக, ஆபாசமாக அசிங்கமாகப் பேசியதாகச் சொல்ல முடியும்?

நம்புவதைச் சொல்வது தப்பா?

பார்ப்பன ஆட்சி என்பதும், பூணூல், உச்சிக்குடுமி ஆட்சி என்ப தும் ஒரே கருத்தைத் தான் குறிப்பதாகும். அதாவது இன்று நடைபெறு கிற ஆட்சிமுறை பார்ப்பன சமூகத்துக்கு மாத்திரம் பயன்படத்தக் கதாகவும், மற்ற சமூகத்துக்குக் கேட்டை விளைவிப்பதாகவும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியாகவும் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ உணருகிற ஒருவன் அதைச் சொன்னால் தப்பு என்ன? என்று கேட்கின்றோம்.

இதே பார்ப்பனர்கள் கனம் ஆச்சாரியார், அய்யங்கார், அய்யர்கள் உள்பட காங்கிரஸ்காரர்கள், வெள்ளையர் ஆட்சி ஒழிக! என்று சொல்லவில்லையா? ஜமீன்தார்கள், சரிகைக் குல்லாய்க்காரர்கள் ஆட்சி ஒழிக! என்று கூப்பாடு போடவில்யையா? பனகல்ராட்சத ஆட்சி ஒழிக! பொப்பிலி அரக்கர் ஆட்சி ஒழிக! என்று கூப்பாடு போட வில்லையா?

அப்போது கனம் ஆச்சாரியார் காதை மூடிக்கொண்டாரா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர் சொன்னவைதானே

மற்றும், பனகல் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டதாகக் கருதிப் பனகல் டெட் (பனகல் செத்தான்) என்று பார்ப்பனர்கள் வீட்டுக்கு வீடு புகையிலை வழங்கவில்லையா? தெருவில் சங்கு ஊதச் செய்து பனகல் சங்கதி சங்கூதிப் போச்சுது என்று சொன்னதோடு இவைகள் காங்கிரஸ் பத்திரிகைகளில் கூடக் கொட்டை எழுத்துக்களில் போடப் படவில்லையா? என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் இந்து ஆட்சி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லையா? வில்லிங்டன் ஆட்சிக்குச் சாவுமணி அடித்தாய்விட்டது என்று சொல்லவில்லையா? என்ன வார்த்தைகள் இதுவரை காங்கிரஸ்காரரும் பார்ப்பனப் பையன்களும் சொல்லாததைவிட இந்தி எதிர்ப்புக்காரர்கள் சொன்னார்கள் என்று கேட்கின்றோம். மற்றும் வெள்ளையர் ஆட்சி ஒழிக! பணக்கார ஆட்சி ஒழிக!! ஜமீன் ஆட்சி ஒழிக!!! முதலாளி ஆட்சி ஒழிக!!! என்று கூப்பாடு போட உரிமை இருக்கும்போது, இந்த நான்கு கூட்டத்தை விட நாட்டுக்கு, மக்களுக்கு கேட்டையும், தொல்லையையும் இழிவையும், சுரண்டுதலையும் உண்டாக்கும் சோம்பேறி விஷம் சூழ்ச் சிக்காரப் பார்ப்பன ஆட்சி ஒழியவேண்டும் என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா? என்று கேட்கின்றோம். வெள்ளை ஆட்சி ஒழிக! சரிகைத் தலப்பா ஆட்சி ஒழிக! என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இருக்கும்போது, பார்ப்பன ஆட்சி ஒழிக! உச்சிக்குடுமி ஆட்சி ஒழிக!! பூணூல் ஆட்சி ஒழிக! என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா? என்று கேட்கின்றோம்.

பெண்களை அவமானப்படுத்தியவர் யார்?

பெண்டு பிள்ளைகளைப் பற்றி பேசுவது என்பது குற்றம்தான்; கூடாததுதான். ஆச்சாரியார் பெண்டு பிள்ளைகளைப் பற்றி மாத்திரம் அல்ல விபச்சாரத்தையும், குச்சிக்காரத் தொழிலையும் குலத்தொழிலாய் குடும்பத் தொழிலாய் கொண்டிருக்கும் பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேசினாலும் குற்றம் என்றுதான் சொல்லுகிறோம். அவர்கள் பெண்டு பிள்ளை வேறு; அவர்களுக்கு வரும் அவமானம் இழிவு வேறு, நமது பெண்டு பிள்ளைகள் வேறு, இவர்களுக்கு வரும் அவமானம் இழிவு வேறு என்று நாம் கருதவில்லை; கருதுவதுமில்லை என்று உறுதி கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும், கூப்பாடு போட்டவனையும் எப்படித் தண்டிப்பதிலும், எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் நமக்குச் சிறிதும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அப்படி இதுவரை யார் சொன்னார்கள். அது எங்கே பதிவு செய்யப்பட்டது. அது உண்மையானால் அதற்குத் தனிப்பட்ட நடவடிக்கை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டாமா? என்று கேட்கின்றோம். அதற்கு யார் பொறுப்பாளி என்று கண்டுபிடிக்க என்ன முயற்சி செய்யப்பட்டது என்று கேட்கின்றோம்.

கட்டுக் கதை

இவைகளுக்குச் சரியான சமாதானம் இல்லை என்றால் இந்தப் பேச்சு கற்பனைப் பேச்சு என்றும், கனம் ஆச்சாரியார் தாம் செய்யும் அடாத காரியத்துக்கு நேரடியாக சமாதானம் சொல்ல முடியாமல் பொய்மாலப் புரட்டு செய்து பழிவாங்கப் பார்க்கிறார் என்றுதானே சொல்ல வேண்டும். ஒரு மாஜி கவர்னரும் இந்த விஷமப்புரட்டுக்கு உதவி யாய்த் தன் பங்காச்சாரம் தானும் இப்படித்தான் இந்தி எதிர்ப்புக்கா ரர்கள் மீது பழிசுமத்தி வருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம். ஆதலால், இந்த விஷயம் அதாவது மந்திரிகள் குறிப்பாகப் பிரதம் மந்திரிகள் பெண்டு பிள்ளைகளைப் பற்றித் தொண்டர்கள் கேவலமாகப் பேசியது என்பது கட்டுக்கதை, ஜோடிப்பானது. நியாயமான ஒரு கிளர்ச்சிக்கு அதன் எதிரிகள் நேரிட்டுச் சமாதானம் சொல்லவோ, முகம் கொடுக்கவோ சக்தி இல்லாமல் அதன் மீது எவ்வளவு நெஞ்சுத் துணிவுடன் பழிசுமத்தி அதை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்பதை இதிலிருந்தாவது பொதுஜனங்கள் உணர வேண்டுகிறோம்.

- குடிஅரசு; 28.08.1938.

ஆச்சாரியார் இதற்கென்ன

பதில் சொல்லுவார்?

சென்னையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்து சிறைப்பட்ட பெண்களது வழக்கு விசாரணையில் முடிவு சொன்ன நீதிபதி அவர்கள் எழுதிய தீர்ப்பு "விடுதலை" யில் பிரசுரிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"கிளர்ச்சி செய்த பெண்களில் இருவர் கவுரவமான பெண்கள் மற்றும் சிலர் வயதானவர்கள். ஆதலால், அவர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதாவது, அவர்கள் "ராஜகோபாலாச்சாரியார் ஒழிக" என்றும், "பார்ப்பனர் ஒழிக" என்றும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அன்றியும் "தமிழ் வாழ்க" என்று கோஷிப்பதாலும் குற்றமில்லை என்றும், அந்த வார்த்தைகள் குற்றமானவை அல்ல என்றும் ஒப்புக்கொள்கிறேன்" என்பதாகும்.

இதிலிருந்து நீதிபதி அவர்கள் போலீசாரை நம்பவில்லை என்பதும், போலீசார் சொன்ன சாட்சியம் உண்மை அல்ல என்பதும் நன்றாய்க் காணக்கிடக்கின்றது. இந்தப் போலீசார்தான் இதுவரை அநேகத் தொண்டர்கள் மீது இதே மாதிரி சாட்சி சொல்லி தண்டிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர்வார்களாக.

அதோடு மாத்திரமல்லாமல் சில பார்ப்பனப் பத்திரிகைகளும், அவர்கள் தம் அடிமைகளும் இந்தி எதிர்ப்புக்காரர்கள் யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்யவில்லை என்றும், கெட்ட வார்த்தைகள் சொல்லி பிறர் மனதை நோகச் செய்கிறார்கள் என்றும், துராக்கிரகம் செய்கிறார்கள் என்றும் சொன்னதும், சொல்லி வருவதும் முழுப்பொய் என்பதும், அயோக்கியத்தனமாகவும் அற்பத்தனமாகவும் வேண்டுமென்றே செய்யும் விஷமப்பிரச்சாரமே ஒழிய, சிறிதும் உண்மையல்ல என்றும் கருத இடம் தருகிறது.
இவை மாத்திரமல்லாமல் வாக்குச் சுதந்திரமும், நியாயமான கிளர்ச்சி சுதந்திரமும் மக்களுக்கு அளித்திருப்பதாய் கூறும் காங்கிரஸ் காரர்கள் யோக்கியதையும், அவர்களது ஆட்சி யோக்கியதையும் எப்படிப்பட்டது என்பதும் நன்றாய் விளங்குகிறது.

கவுரமான பெண்கள், வயது முதிர்ந்த பெண்கள், தெருவில் நின்று "இந்தி ஒழிக" "தமிழ் வாழ்க என்று சொல்வது கிரிமினல் அமெண்டு மண்ட் ஆக்ட்டுப்படி எப்படிக் குற்றமாகிறது என்பதைப் பொதுமக்கள் தான் யோசித்து முடிவு செய்யவேண்டும். இந்தக் காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவதுதானாகட்டும், எப்படி உடந்தைக் குற்றமாகின்றது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

ஆகவே, காங்கிரஸ் ஆதிக்கமானது தனது அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் அதை எந்தவிதமான முகாந்திரத்தைக் கொண்டும் வெளியிடக்கூடாது என்பதும், காங்கிரசுக்கு விரோதமாக யாரும் நினைக்கவும், பேசவும் கூடாது என்பதுமான காட்டுராஜா ஆதிக்கம் செலுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோழர்கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மேல் குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்புக்கு என்ன பதில் சொல்லுகிறார் என்று கேட்கின்றோம்.

நீதிபதி அவர்கள் "கிளர்ச்சி செய்தவர்கள் கவுரமானவர்கள், அவர்கள் கோஷம் செய்த வார்த்தைகளும் குற்றமானவை அல்ல" என்று சொல்லிவிட்டார்.

மேலும் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பிள்ளைகளையும் செல்லாமல் தடுக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவருகிறது. சாட்சி சொல்லுவது என்னவெனில், இவர்கள் கூட்டத்தால் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குள் போக முடியவில்லை என்றும், உள்ளே இருக்கிற பிள்ளைகள் இந்த சத்தம் கேட்டு வெளியில் வருகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். இதைப்பற்றி ஒரு பையனாவது, ஒரு உபாத்தியா யராவது சாட்சி சொல்லவே இல்லை. அப்படியே இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கும் கிரிமினல் அமெண்டுமெண்ட் ஆக்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றும், பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் ஏகபோக ஆட்சியில் இந்தமாதிரியான காரியங்களுக்காக இந்த ஆக்டை உபயோகித்தார்களா? என்றும் யோசித்துப் பார்த்தால் காங்கிரஸ் ஆட்சியின் யோக்கியதையாருக்கும் புலப்படாமல் போகாது.

தவிரவும் நீதிபதி அவர்கள் தீர்ப்பில், மறியல் செய்த பெண்மணிகள் கவுரவமானவர்கள். டாக்டர்கள் என்று எழுதியிருந்தும் கூட, போலீசார் அவர்களுக்கு அன்று பகல் முழுதும் பட்டினி போட்டு இங்குமங் குமாய் இழுத்தடித்திருக்கிறார்கள் என்றால், காங்கிரசின் நீதி எங்கே என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர்கள் இக்கிளர்ச்சியை அழிப்பதற்காக இதுவரை எத்தனையோ வித சூழ்ச்சிகள் செய்து பார்த்துவிட்டார்கள். இனி மேற்கொண்டு பெண்கள் இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக ஏதேதோ சூழ்ச்சி செய்வதாகவும், அதற்கு சில பெண்களை விலைக்கு வாங்குவதாகவோ, வாங்கி இருப்பதாகவோ நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதிகள் வருகின்றன. இது உண்மையானால் ஒரு உண்மையான இயக்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்க இம்மாதிரி இழிவான முயற்சிகளைக் கையாளுகின்ற ஒரு இயக்கமும், அதன் தலைவர்களும் யோக்கியமானவர்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ் பத்திரிகைகள் மிக்க இழிவான முறையில் இவ்வுண்மைகளையும் கிளர்ச்சியின் உண்மையான நடவடிக்கைகளையும் மறைக்கவும் திரித்துக் கூறவும் விஷமத்தனம் செய்யவுமான காரியங்கள் சிறிதும் கை கூசாமல் மான, வெட்கமின்றி செய்து வருகின்றன. பாமர மக்கள் இப்பத்திரிகைகளின் உண்மை யோக்கியதையை உணர முடியாத நிலையில் இருப்பதால் இப்பத்திரிகைகளின் அட்டூழியங்கள் செலவாணியாகிக் கொண்டு வருகின்றன.

ஆதலால், இனிமேல் மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ செய்ய வேண்டிய அருந்தொண்டு என்னவென்றால், இவ்வற்ப அயோக்கியப் பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டியதே முதல் கடமையாகும் என்று கூட கருத வேண்டியதாய் இருக்கிறது.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், சில சூழ்ச்சிப் பத்திரிகைகளுக்கும் சில துரோக கூலிப் பத்திரிகைகளுக்கும் நாட்டில் செல்வாக்கு ஏற்பட்டதன் பயனே நாட்டில் இவ்வளவு அக்கிரமங்களும், அநீதிகளும், கொடுமைகளும் ஏற்படவும், அதுபோன்றவைகளுக்கு அதற்கேற்றதுமான மக்கள் ஏற்படவும் இடமேற்பட்ட தென்பதே நமதபிப்பிராயமாகும்.

கூலிப் பத்திரிகைகளும் மலிந்துவிட்டன. என்ன எழுதியாவது, எந்த இழிவான காரியம் செய்தாவது வயிறு வளர்க்கலாம், உயிர் வாழலாம் என்ற இழிகுண மக்களே பெரிதும் பத்திரிகையாளுபவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த நாட்டின் ஈனநிலைக்கு இவர்கள் இருப்பதே ஒரு மாபெரும் உதாரணமாகும். இதைப் பொதுமக்கள் உணருங் காலம் வரும்போதுதான் மக்களுக்கு மானமுண்டு, மான உணர்ச்சி உண்டு என்று சொல்லக்கூடும் என்பதே நமதபிப்பிராயமாகும். ஆகவே, மக்கள் உண்மையை உணர வேண்டுமானால் பார்ப்பனரல்லா தாராலும், பார்ப்பனக் கூலிகள் அல்லாதவர்களாலும் நடத்தப்படும் பத்திரிகைகளைப் பார்த்தால் தான் உண்மையை உள்ளபடி அறியலாம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தி எதிர்ப்பு விஷயத்திலும், அதன் கிளர்ச்சி விஷயத்திலும் காங்கிரஸ் பத்திரிகைகள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்று சொல்லுவோம். இவைகள் என்ன செய்தும் இந்தி எதிர்ப்பு தினத்துக்கு தினம் மேலோங்கிக் கொண்டு வருவதுடன் அது கூடிய சீக்கிரத்தில் இன்னமும் புதிய புதிய முறையில் கிளம்பப் போகிறது என்பதை இப்பொழுதே "ஜோசியம்” கூறுகிறோம்.

- குடிஅரசு, 20.11.1938

ஆயிரக்கணக்காக

சிறை செல்ல வேண்டும்

தாய்மார்களே! தோழர்களே!

அருமைச் சிறுவன் லூர்துசாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கி விட்டது. அதனால், நான் பேசக் கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6 வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்க வேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமில்லை. கஷ்டமென்று நினைப்பவர்க்கு வெளியில் கூட கஷ்டமாய்த்தானிருக்கும். என் அனுபவத்தில் 5,6 முறை சிறை சென்றிருக்கின்றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து மூத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில்தான். அவ்வளவு கொடுமையாக இருந்தது; கேள்வி முறையில்லை. ஆனால், இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கிரஸ்காரர் சிறை சென்ற காலத்து பெருங்கூச்சலிட்டு வேண்டிய வசதிகள் செய்துவிட்டார்கள். அங்குள்ள சில அதிகாரிகள் ஒருவித வன்மத்துடன் பார்த்தால் சிறிது கஷ்டம். உண்மையாகவே நடப்பார்களானால் சிறை செல்பவர்கட்கு ஒருவிதத் தொல்லையுமில்லை. சிறையில் வார்டர்கள் நேசிக்கிறார்கள். சில அதிகாரிகள் மட்டும் வகுப்பு கருதி நம்மை வெறுக்கின்றார்களெனக் கேள் விப்படுகின்றேன்.

கடினமனம் மாறும் விதம்!

வீட்டில் ராஜாவாயிருந்தாலும் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. சிறையில் ஏழையானாலும் நேரத்தில் உணவு, மணியடித்தால் சாப்பாடு (கைதட்டல்). அப்படிக் கஷ்டமென்றே வைத்துக்கொள்வோம். சாப்பாட்டை நினைத்தா சிறைக்குப் போகின்றோம்? காரியத்தின் மேலுள்ள ஊக்கம், உணர்ச்சி அல்லவோ நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது. யார்மேலும் கோபத்தாலோ, அன்றி விரோதத்தாலோ நாம் சிறை செல்லவில்லை. தமிழர்கட்கு ஒரு சமூகத் தாரால் செய்யப்படும் இன்னல்களை தொல்லைகளை ஒழிக்கவே செல்ல நேரிடுகிறது. நீங்கள் இந்தியை எதிர்ப்பது உண்மையானால் ஆயிரக்கணக்காகச் சிறை செல்லவேண்டும். இந்நிலையில் கவர்னர் கெட்டவருமல்ல; அவ்வளவு முட்டாளுமல்ல. அவருக்கு இன்னும் தமிழர்கள் இந்தியை உண்மையில் எதிர்க்கின்றார்களா என்பது சந்தேகமாகவிருக்கின்றது. எனவே, அவருக்கு நன்றாகத் தெரிவிப்பதற்காக பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை செல்ல வேண்டும். பட்டினி கிடக்கச் செல்லவேண்டும். ஒரு சிறிதும் நன்மை கேட்கக் கூடாது. இந்த உணர்ச்சி தமிழர்கட்கு இருந்தால் அவர்களது கடினமனம் மாறும். தோழர் ஆச்சாரியார் புத்திசாலி , அவர் மனத்தில் இன்னும் படவில்லை. அவர் கூறுகின்ற மாதிரி நீங்களும் சில சமயங்களில் உணர்ச்சி மிகுதியில் நானேதான் என்று கூச்சல் போட்டு விடுகின்றீர்கள். இந்தி எதிர்ப்பை விட்டு ராமசாமி ஓடினாலும் நாங்கள் விடப் போவதில்லை என்று காட்டினீர்களானால் அவர் இந்தியை விட்டு விடுவார்.

ஆச்சாரியாருக்கு நடுக்கம்

இன்று பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேட்டவுடன் ஆச்சாரியாருக்கு நடுக்கம் ஏற்பட்டிருக்கும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் சிறைக்குள் சென்றார் என்பதைக் கேட்க அளவுக்கு மீறி நடுங்கி இருப்பார். இன்று கோர்ட்டில் தாய்மார்கள் இந்தி ஒழியவேண்டும் அல்லது நாங்கள் ஒழியவேண்டும் என வீரத்துடன் பதில் கொடுத்தார்கள். ஆனால், ஆச்சாரியார் இனி வேறு பெண்களில்லை எனச் சமாதானப்பட்டிருப்பார். யாராவது துர்மந்திரிகளும், அவ்வளவுதான் இனிப் பெண்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருப்பார்கள். இல்லாவிட்டால், நான் பழகியவரை ஆச்சாரியார் இப்படிக் கவலையில்லாதிருக்கமாட்டார். மேலும் 2, 3 சாமியார்கள்தான் இருக்கிறார்கள்; சிலர்தான் எதிர்க்கின்றார்கள் என்று அவர் கருதக்கூடாது. அதற்கு ஆவன நீங்கள் செய்ய வேண்டும். தோழர் பொன்னம்பலம் அவர்கள் கூறியதுபோல் ஒன்றரை ஆண்டில் 4 1/2 கோடி கடன் வாங்கி விட்டனர். அதைப் பார்த்து கவர்னருக்கு இப்பொழுதுதான் சிறிது தலைவலிக்க ஆரம்பித்திருக்கின்றது. இது 2 நாளில் நின்றுவிடும் என ஆச்சாரியார் நினைக்கின்றார்.

நாட்டில் இந்நிலையை அவர் உண்டாக்கி இருக்காவிட்டால் இவர்கள் எனது தாய்மார்கள் முன் வராதிருப்பார்களா? தாய்மார்கள் வந்து எங்கட்குப் புத்தி கற்பிக்க ஊக்கமூட்ட வேண்டுமென்றால் இது யாருடைய தர்மம்? தோழர் ஆச்சாரியார் அளித்ததுதானே! அவர் அன்புடன் நல்கியதுதானே! உண்மையோடு உழைப்பதன் மூலம் வெற்றியடைந்து, இனி தமிழர்களிடத்து வால் நீட்டக் கூடாது என்ற எண்ணத்தை அவர்கள் அடையுமாறு செய்யவேண்டும். தமிழர்கள் தமிழ்ப் பெண்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்றுதான் அவர் கொடுமை செய்து வந்தார். இப்பொழுது சற்று யோக்கியமாக நடந்து வருகிறார்.

தமிழர்கள் வெறுப்பிற்குப் பயந்து, பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இரகசியங்களில் காரியங்கள் செய்து வருகிறார். இன்றைய தாய்மார் களைப்போல் நாமும் நடந்தால் நமது தொல்லைகள் நீங்கும். சிறை செல்லச் சிறிதும் பயப்படக்கூடாது. இத்தகைய நிலையில் பெண்களைச் சிறையிட்ட அரசு எங்கும் கிடையாது. அரசாங்கத்திற்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால், சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. ஆனால், இன்றைய ராமராஜ்யத்தில் தாய்மொழியிடத்து அன்பு கொண்டால் போதும், உடனே சிறைத்தண்டனை. நமக்குப் பல காலமாகத் தொல்லை கொடுத்து வருவதோடல்லாது வீணே இன்று சிறை என்றால் என்ன நினைப்பது?

தமிழன் வாழ்வு அவருக்கு பொறுக்கவில்லை !

நேற்றுவரை சட்டம் மீறலைத் தவறெனக் கண்டித்து வந்தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக்கூடாது என்று நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக்கூடத்தை மாமனார் வீடு போலவும், படுக்கையறை போலவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. ஒருவரை வையவோ, அன்றி அடிக்கவோ வேண்டுவதில்லை. "தமிழ் வாழ்க" என்றால் போதும்; உடனே தம்பி! வா என ஆச்சாரியார் அழைத்துக் கொள்ளுவார். நான் பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாகவேண்டுமென நினைக்க வேண்டாம்.

தமிழன் வாழ்வு அவர்களுக்குப் பொறுக்கவில்லை. என்றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகின்றார்களென்றும் சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். பனகல் அரசர் வெற்றிபெற்ற காலத்து பனகல் இறந்தார் என ஒரு செய்தியைப் பரப்பி புகையிலை வழங்கினார். ஜஸ்டிஸ் மந்திரிகளை இராட்சதர் களென்றும், அரக்கர்கள் என்றும், இராவணர் என்றும் கூறினார். ஆனால், இன்று உச்சிக்குடுமி ஒழிக என தொண்டர்கள் கூறினார்க ளென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுகிறார். உச்சிக்குடுமி ஒழிக என்றால் என்ன? உச்சிக்குடுமித் தன்மை தானே ஒழிக வேண்டுமென்பது. இதற்கு இவ்வளவு ரோஷம் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று சரிகைக் குல்லாய் ஒழிக என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000 தர்ப்பையோ அன்றி உச்சிக் குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிக என்றதற்குச் சரியாகாதே! (கைத்தட்டல்) பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான் இராவணன் என்று கதை எழுதிவைத்து, அந்தப்பெயரால் தமிழர்களை அழைக்கும் போது உச்சிக்குடுமி, டவாலி , தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத்தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள்.

விநோத சாட்சியம்!

இன்று காலை, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் கவனித் தேன். ஒரு சாட்சியம் கூறும் சப் இன்ஸ்பெக்டர், தாய்மார்கள் கூறாத வற்றைச் சேர்த்துக் கூறுகின்றார். அவரது மயிர்க்காம்பிலுள்ள ஒவ்வொரு துளி ரத்தமும் நம்முடைய உழைப்பினால் கிடைத்த பணத்தினால் ஊறியது என்பதை நினைக்கவில்லை. அவர் என்ன செய்வார்? மேலே உள்ளவர்களின் தயவுக்காக கிளிப்பிள்ளை போல் கூறுகிறார். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. இதுதானா சத்திய ஆட்சி, ராம் ராஜ்ய ஆட்சி, காந்தியின் அகிம்சா ஆட்சி என கேட்கின்றேன். எனக்கு சத்தியத்தில் சிறிதும் நம்பிக்கையில்லை. ஆனால், உண்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றேன். சத்தியம் என்று நினைத்தால் பழுக்கக் காய்ந்த கொழுவை உருவலாம் என்றும், பண்டைப்பெண்கள் மணலைச்சோறு ஆக்கியிருக்கின்றனர் என்றும் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே கொழுவை இன்று சத்தியத்தில் நம்பிக்கையுள்ள சத்தியமூர்த்தி யாலும் உருவமுடியாது; அல்லது காந்தியாலும் முடியாது. (கைத்தட்டல்) எனவே, எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கையில்லை. இன்று தாய்மார்கள் எந்தப் பையனை அல்லது உபாத்தியாயரை காலைக் கட்டி பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாதெனத் தடுத்தனர்.

ஆனால், சென்ற ஆண்டு காங்கிரஸ்காரர்கள் கிராம்பு மறியலில், கப்பலை விட்டு மூட்டைகளை இறக்கக்கூடாதெனத் தடுத்தனர். மூட்டை ஏற்றிய வண்டியை ஓட்டவிடாது சக்கரத்தின் கீழ் படுத்துத் தடுத்தனர். கடையில் விற்கக் கூடாதென்றும், வாங்க வருபவர்களையும் தடுத்தனர். இதற்குக் காங்கிரஸ் மந்திரிகள் உத்தரவு கொடுத்தனர். தொண்டர்களைப் பாராட்டினர். அதைவிட இந்தி ஒழிக என்று கூறுவது தவறானதா? இந்தி உண்மையில் ஒழிந்துவிட்டது. செத்த பாம்பை ஆச்சாரியார் ஆட்டுகிறார். இந்தி எதிர்ப்பாளர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு 18 மாதம், 2 வருஷம் தண்டனை விதிக்கப்படுகிறது.

மனம் மாறாவிட்டால் .....?

உண்மையில் சொல்லுகிறேன். தினம் 5 பேர் வீதம் பெண்கள் ஒரு மாதம் தொடர்ச்சியாகச் சென்றால் கட்டாயம் ஆச்சாரியார் நிலை மாறும். மாறாவிட்டால் தமிழர்கள் இரத்தம் கொதிக்கும்; உணர்ச்சி பெருகும். உதாரணமாக, சென்ற வாரம் நான் திருவிதாங்கூர் சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற அடக்குமுறை காரணமாக தோழர் சி.பி.ராமசாமி அய்யர் எதேச்சையாக வெளியில் வரமுடியவில்லை. பொதுமக்கள் மனத்தில் உண்டாயிருக்கும் கொதிப்பு கண்டு பயப்படுகிறார். இதைச் சமாளிக்க, சிறையிட்டவர்களையெல்லாம் வெளியில் திறந்துவிட்டார். மக்கள் மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மீண்டும் ஒரு வக்கீல் அம்மையார் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இதைப்பற்றி தோழர் ராமசாமி அய்யரின் அடக்கு முறையைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது கண்டித் தெழுதிற்றா?

கவர்னருக்குப் பயந்து தேசியக்கொடி, மூவர்ணக் கொடியாயிற்று இன்று காந்தியார் அக்கொடியைக் கண்ட இடத்தில் கட்ட வேண்டாம்; யூனியன் ஜாக் இருந்தால் அவிழ்த்து விடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மட்டும் இன்னும் அதைத் தேசியக் கொடியென்றே பொய் சொல்லி வருகின்றனர். முஸ்லிம்கள் எதிர்ப்பிற்குப் பயந்து வந்தேமாதரம் கைவிடப்பட்டது. விசுவ பிராமணருக்குப் பயந்து விசுவகர்மா உத்தரவு நீக்கப்பட்டது. பேரிச் செட்டிகளுக்குப் பயந்து, தணிகாசலம் ரோடின் பெயர் மாற்றம் தள்ளப்பட்டது. வக்கீல்கள் எல்லாம் சேரவே பப்ளிக் பிராசிகூட்டர் நியமன உத்தரவு பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. 1500 ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மாகாண அதிகாரியைத் தள்ளி வைத்தனர். நமக்கு உண்மையான உணர்ச்சியிருக்கின்ற தென்று தெரிந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது அவர்கட்குத் தெரியும். சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்வார்கள். எதற்கும் அவர்கள் பார்ப்பனர்களல்லவா! (கைத்தட்டல்)

ஒரு கதை

நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால், நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவர் இருந்தார். " தேங்காய் முடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும். உடனே கோபம் வந்துவிடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்களுக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதேபோல் இன்று இந்தி ஒழிக! என்று எங்கு, யார் சொன்னாலும் போதும்; ஆச்சாரியார் அங்கு உடனே ஓடி வருவார். ஏன்? இனி தேங்காய் முடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைத்தட்டல்) ஏன்? அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையைப் பார்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வரவேண்டியதுமில்லை. வெளியில் 5,6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100 - க் கணக்காய் இருக்கின்றது தேங்காய் முடிக் கதை.

நமது நண்பர் இராமநாதன், ஆச்சாரியார் பக்கத்திலிருந்து கொண்டு நெருப்பு சிலீரென்றிருக்கிறது என்று கூறிவருகின்றார். அவருக்கும் சுட்டால் தெரியும். இன்று சென்ற தாய்மார்களைப்போல் நாளையும் தொடர்ந்து நடக்குமென்று நம்புகிறேன். தொண்டர்களும் கருத்து வேற்றுமையை விளக்கிக் கூறிவந்தால் இரண்டு கட்சிகளிலும் சேராது பொதுவில் இருக்கின்றவர்களும் இதில் ஈடுபடுவார்கள். நாம் சொல்லும் காரணங்களைப் பார்த்து நம்மிடத்துக் குற்றமில்லை என்றால், தானே வருகின்றார்கள். 75 ரூபாய் வாங்கும் சில பெரியார்களுக்குக் கூட இன்றைய நிகழ்ச்சியால் மனமிளக்கம் ஏற்பட்டிருக்கும்.

தூங்கினால் தலையெடுக்க முடியாது

ஒரு எம்.எல்.சி. கூறினார்; ஆச்சாரியைவிட டாக்டர் ராஜன் செய்வது பிடிக்கவில்லையென்று. நம்மைப் பற்றியும், நம் தாய்மார்களைப் பற்றியும் பல பத்திரிகைகள் கேவலமாக எழுதி வருவது எனக்குத் தெரியும். கொச்சி திவான் தோழர் சண்முகம் செட்டியார் யாராலும் செய்யமுடியாத பொறுப்பாட்சியை வழங்கி சுதேச சமஸ்தானங்கட்கு வழி காட்டினார். இதைச் செய்ய மற்ற திவான்கள் பயப்படுகிறார்கள். செட்டியார் சிறந்த அரசியல் அறிவாளி. அவரைப் பற்றி ஒரு சமயம் ஒரு குரங்குப் பத்திரிகை அவர் ஜாதியை இழித்து, செக்குப்படம் போட்டு கேலி செய்திருந்தது. ஆனால், இன்று திருவிதாங்கூரில் ஒரு அய்யர் அமளிப்படுத்துகின்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் செக்கோவைப் பற்றியும், ஸ்பெயின், சீனாவைப் பற்றியும் உருகி தலையங்கம் எழுதுகின்றன. இந்தச் சமயம் தூங்கிவிட்டார்களானால் இனி என்றென்றைக்கும் தலையெடுக்க முடியாது. தமிழர்களைப் பற்றிப் பேச சட்டசபையில் சர். பன்னீர் செல்வம் தேடவை எழுந்தார். ஆனால், அவரைப் பேசவிடாது அடக்கி விட்டனர்.

நிற்க, இன்று "விடுதலை" மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் வாதாட பிரத்யேகமாக பல ஆயிரக்கணக்கான செலவில் தோழர் எத்தி ராஜை கோவைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஏன்? கோவையில் தகுந்த வக்கீலில்லையா? "விடுதலை" யை எப்படியாவது அழுத்திவிட வேண்டுமென்றுதானே எண்ணம்? எனவே, இன்று விடுதலை மயிர்ப் பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் நம்மவர் தோல்வியடைந்தால் நம் பின் சந்ததியின் கதி என்னாவது? தனிப்பட்ட முறையில் எங்கட்கு என்ன வேண்டும்? எங்கள் வாழ்க்கையை ஊரிலிருந்தே எங்களால் நடத்த முடியாதா? அல்லது தோழர் ராமநாதனைப் போல் ஆச்சாரியாரிடம் நான் சென்றால் எனக்கு ஒரு மந்திரிபதவி கிடைக்காதா? எனது காரோட்டிக்கு ஒரு மந்திரி பதவி கொடு என்றால் ஆச்சாரியார் கொடுக்க மாட்டாரா?

ஆகவே, நாமனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டால் தான் வெற்றியடைய முடியும். நம்மை சூத்திரன் என்றும், பலவிதத்தில் இழித்துக் கூறிவரும் அவர்களை இன்றும், சாமி, இட்லி கொண்டு வா என்றுதானே கேட்கின்றோம். நாட்டை யாராண்டாலும் நமக்குக் கவலையில்லை. நமக்கு வேண்டியது நன்மையே. எனவே, நான் கூறியுள்ளவைகளை ஆராய்ந்து பாருங்கள். இன்று சென்னையை, ஏன், தமிழ் நாட்டையே சிறப்பித்த தமிழ்ப் பெண்களின் வீரத்தை இந்தியா முழுவதும் அறியச் செய்த தாய்மார்களைத் தொடர்ந்து அவர்களுக்குக் கவுரவமளிக்க வேண்டுகிறேன் (நீண்ட கைத்தட்டல்).

(14.11.1938 ஆம் தேதி சென்னை பெத்தநாயக்கன்பேட்டையில் தமிழர் கழகம் ஆதரவோடு நடைபெற்ற பொது கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற் பொழிவு.

- குடிஅரசு, 27.11.1938)


பெரியார் சிறைவாசம்

டிசம்பர் 6ஆம் தேதி தென்னாட்டு சரிதத்தில் ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் சுயமரியாதை இயக்கத்தலைவரும், ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஆகப் போகிறவரும், தமிழர்களைத் தட்டி எழுப்பி சுயமரியாதையுடன் வாழக் கற்பித்தவரும், தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமி தமிழர் விடுதலைக்காகச் சிறைபுகுந்தார். தமிழர் சரிதம் எழுதப்படும் போது அந்நன்னாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதற்கு அய்யமே இல்லை. ஒரு பெரியார் சிறைபுகுந்த நாளை நன்னாள் எனக்கூறியது பலருக்கு வியப்பாக இருக்கலாம். சிறை புகுவது துன்பம் தரக்கூடியதாகையால் சிறை புகும் ஒரு நாளை நன்னாள் எனக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காதிருக்கலாம். நாம் வேண்டுமென்றே அந்நாளை நன்னாள் என்றோம். அந்நாள் பெரியாருக்கு துன்பகரமான நாளாயிருந்தாலும் தமிழர்களுக்கு நலம் தரக்கூடிய நாளாகும். பெரியார் சிறை புகுந்தது மூலம் தமிழுலகம் புத்துயிர் பெறப்போகிறது; தமிழர்கள் அடிமை வாழ்வு நீங்கி சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு வாழப் போகிறார்கள். நமது சந்ததிகள் ஆரியப் பீடையிலிருந்து விடுபட்டு தனித்தமிழ் வாழ்வு, திராவிடப் பெருவாழ்வு, நல்வாழ்வு வாழப் போகின்றனர். எனவே, டிசம்பர் - 6 ஆம் தேதி நன்னாள் எனக் கூறுவது குற்றமாகுமா? ஆகவே ஆகாது. பெரியார் சிறை புகுந்த அந்நாள் தமிழர்களுக்கு நன்னாளே, பொன்னாளே ஆகும். பிறப்பால் கன்னடரான பெரியார், தாம் குடி புகுந்த நாட்டுப் பெருங்குடி மக்களின் விடுதலைக்காக தம்மையும், தம் குடும்பத்தையும், தம் செல்வத்தையும் தயக்கமின்றி சந்தோஷமாக அர்ப்பணம் செய்துவிட்டார்.


சிறை புகுந்ததேன்?

சிறை வாழ்வே சுகவாழ்வெனத் துணிந்துவிட்டார். ராஜபோகம் அனுபவிக்கும் வசதிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சுயமாகவே வெறுத்து, சிறை புகுந்து, கூழும் கஞ்சியும் உண்டு, கல் அடித்தும், மண் சுமந்தும், உடலை வருத்தி தமிழர்களை ஈடேற்றத் தவம் செய்யச் சென்றுவிட்டார். அவர் சிறை வாழ்வைப் பெருவாழ்வாகக் கொள்ளும் நோக்கம் என்ன? "தமிழ்நாடு தமிழருக்கே" சொந்தமாக வேண்டும். முழு உரிமையுடையதாக வேண்டும், வட ஆரியருக்கு உரிமையாகக் கூடாது. தமிழன் எந்நாளும் தமிழனாகவே வாழவேண்டும்” என்பதற்காகவே அவர் சிறை புகுந்தார். அவர் எத்தகைய கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. சட்ட மறுப்புச் செய்யவோ, பலாத்காரச் செயலில் ஈடுபடவோ அவர் எவரையும் தூண்டவில்லை. பலாத்காரம் அல்லது அகிம்சை அவருக்கு உடன்பாடானால் காங்கிரஸ் பத்திரிகையான "இந்தியன் எக்ஸ்பிரஸ்" கூறுவதுபோல், அதைப் பகிரங்கமாகக் கூறப் பயப்படும் கோழையல்ல நமது பெரியார். தமது மனதில் தோன்றியதை எவருடைய விருப்பையும் வெறுப்பையும் லட்சியம் செய்யாமல் பகிரங்கமாகக் கூறும் ஆண்மை நமது பெரியாருக்குண்டு. அவரது பெருந்தன்மைக் குணங்களைப்பற்றி காங்கிரஸ் பத்திரிகையான "நவசக்தி" கூறுவதைப் பாருங்கள்.

பெரியார் மாட்சி

சிறைப் பறவையாகிய இராமசாமி நாயக்கர் வரலாற்றை வரித்துக் கூற வேண்டுவதில்லை. அவர்தம், வரலாற்றில் அறியக் கிடைக்கும் நுட்பங்கள் பல உண்டு. அவற்றில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும்திறன், காவு, சூழ்ச்சியின்மை முதலியன.

உத்தமரைச் சிறைப்படுத்தும் ஆட்சி நீதியுடைய ஆட்சியா?"

நவசக்தி" சமயப் பற்றும், காங்கிரஸ் பற்றும் உடைய பத்திரிகை. பெரியாரோ, சமய வெறுப்பும், காங்கிரஸ் வெறுப்பும் உடையவர். ஆகவே, பெரியாருக்கு "நவசக்தி" எதிரியென்றே கூற வேண்டும். பெரியார் கொள்கைகளைத் தாக்கி "நவசக்தி” எத்தனையோ முறை எழுதியுள்ளதை தமிழுலகம் நன்கறியும். அத்தகைய "நவசக்தி”யுங் கூட பெரியார் குணவிசேஷங்களைப் புகழ்ந்தெழுத வேண்டுமானால், பெரியார் ஒரு உத்தம புருஷராக இருக்க வேண்டும் என்பது மிகையாகுமா? தமது எதிரிகளிடமிருந்தும் இத்தகைய நற்சாட்சிப் பத்திரம் பெறும் மாட்சிகள்யுடையவர் தமிழ்நாட்டில், ஏன்? இந்தியாவில் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள்? இத்தகைய ஒரு உத்தமனை தண்டித்துச் சிறையிலடைக்கும் ஒரு சர்க்கார் நீதியுடைய சர்க்காராகுமா? ஜனநாயக சர்க்காராகுமா? அவரைச் சிறைப்படுத்திய காங்கிரஸ் சர்க்கார் அவர்மீது சுமத்தும் குற்றமென்ன? 1983 மார்ச்சு 21 ஆம் தேதி 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கியிருப்பதாக காங்கிரஸ் சர்க்கார் பிறப்பித்த உத்தரவை பலாத்கார முறைகளால் ஒழிக்கத் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கத்துக் காரணஸ்தர் நமது பெரியாரென்றும், மறியல் செய்ய மக்களைத் தூண்டினாரென்றும் ஆச்சாரியார் சர்க்கார் பெரியார் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது எவ்வளவு தப்பான குற்றச்சாட்டெனருசுப்படுத்த அவ்வளவு பிரயாசைப்படத் தேவையில்லை. வாஸ்தவத்தில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல.

இந்தி எதிர்ப்பு

தோன்றியது எப்போது?

1930இல் அதாவது கனம் ஆச்காரியார் கட்டாய இந்தி உத்தரவு பிறப்பித்த 23.04.1938- க்கு எட்டு வருஷங்களுக்கு முன் நன்னிலத்தில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் இன்று விளம்பர மந்திரியாக இருக்கும் கனம் எஸ். ராமநாதனே இந்தியைக் கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். கனம் ஆச்சாரியார் மந்திரியாக வருவாரென்றும், கட்டாய இந்தியை 125 பள்ளிக் கூடங்களில் புகுத்துவாரென்றும் அக்காலத்து யாராவது எண்ணியிருந்தார்களா? மற்றும் 1937ஆம் வருஷத்திலேயே மறைமலை அடிகள் "இந்தி பொது மொழியா?" என்ற கண்டனச் சிறுநூலும் வெளியிட்டிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தோழர் சோமசுந்தர பாரதியாரும் கட்டாய இந்தியைக் கண்டித்து கனம் ஆச்சாரியாருக்கு ஒரு பகிரங்கக்கடிதம் எழுதியுள்ளார். 1937 டிசம்பரில் திருச்சியில் கூடிய தமிழர் மகாநாட்டார் இந்தியைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதுடன், கவர்னர் பிரபுவிடம் தூது செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். மற்றும் 1938 பிப்ரவரியில், காலஞ்சென்ற திவான் பகதூர் சர். கிருஷ்ணன் நாயரவர்களால் திறக்கப்பட்டு சர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் தலைமையில் கூடிய காஞ் சிவரம் மகாநாட்டிலும் இந்தியைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 1938 ஏப்ரல் 21ஆம் தேதி கட்டாய இந்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே சில சுயநலக்காரரால் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதென்றும், அதற்குப் பெரியார் ஈ.வெ.ரா.வே காரணமென்றும் கூறுவது எவ்வளவு உண்மைக்கு மாறானதென்று நாம் கூறவும் வேண்டுமா?

இந்தி எதிர்ப்பு

தமிழர்களுக்கெல்லாம் பொது

மற்றும் இந்தி எதிர்ப்பு சில சுயநலக்காரராலோ, காங்கிரஸ் எதிரியான பெரியார் ராமசாமியாலோ, தோற்றுவிக்கப்பட்டதல்ல. இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழர்களுக்கெல்லாம் பொதுவான இயக்கம். தமிழர்களான இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்சி வாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் - சுயமரியாதைக் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி மெம்பர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மதவாரியாகப் பார்த்தால் சைவர், வைஷ்ணவர், நாஸ்திகர், சந்தேகிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் முதலியவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் ஈ.வெ.ராமசாமியே இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கர்த்தா, அவராலேயே இந்தி மறியல் நடக்கின்றது எனக் கூறுவது எவ்வளவு அபாண்டப் பழி! வெறுக்கத்தக்க பொய்! படுமோசப் பிதற்றல்! பெரியார் ஈ.வெ. ராமசாமியைச் சிறைப்படுத்துவதற்கு சர்க்கார் கூறும் பகிரங்கக் காரணங்கள் கண்துடைப்புக் காரணங்களே; ஊற்றுக்கு நிற்காத காரணங்களே. அவரைச் சிறைப்படுத்தியதற்கு அந்தரங்கக் காரணங்கள் சிலவுண்டு. அது விஷயமறிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்தவைதான். தென்னாட்டு அரசியல், சமூக நிலைமையை அறிந்தவர்கள் எல்லாம் உணர்ந்தவைதான். எனினும், பொதுமக்கள் அறிந்திருக்கும் பொருட்டு சுருக்கமாக்கிக் கீழே விளக்குகிறோம்.

அந்தரங்கக் காரணம்

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றங் கருதித் தோன்றிய "ஜஸ்டிஸ்" கட்சியார் உழைப்பின் பயனாய் அரசியல் உலகத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒருவாறு ஒழியவே, பார்ப்பனர்கள் காங்கிரஸ் பேரால் ஜஸ் டிஸ் கட்சியைத் தாக்கிப் பொய்ப்பிரச்சாரம் செய்து அதன் செல்வாக்கை ஓரளவு குறைத்தனர். அத்தருணத்திலே நமது பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் தோற்றுவித்து பார்ப்பனர் செல்வாக்குக்கும், மதிப்புக்கும் காரணமாயிருக்கும் பார்ப்பன மதத்தைத் தாக்கிப் பிரச்சாரம் செய்யவும் எழுதவும் தொடங்கினார். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சுகவாசிகள்; அறைக்குள் இருந்து கொண்டு கட்சிப் பிரச்சாரம் செய்பவர்கள்; பெரியார் அப்படிப்பட்டவரல்ல; ஊரூராய்க் கிராமம் கிராமமாய்ச் சென்று பிரச்சாரம் செய்பவர். ஆகவே, தென்னாடு முழுதும் சுற்றுப்பிரயாணம் சென்று பிரச்சாரம் செய்து தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார். ஆகவே, பார்ப்பன மதச் சூழ்ச்சிகளையும், புரோகிதக் கொடுமைகளையும், கொள்ளைகளையும், பாமர மக்கள் நன் குணர்ந்து கொண்டு விட்டனர். மதத்தின் பேரால், மோட்ச - நரகத்தின் பேரால் பாமர மக்களைப் பார்ப்பனர் ஏமாற்றி வந்த காலம் மலையேறி விட்டது. பார்ப்பனரை அய்யரென்ற காலமும் போச்சே என பாரதியார் பாடியது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதான் மெய்யாயிற்று. தென்னாட்டுச் சமூக வாழ்விலே பார்ப்பனருக்கு இருந்துவந்த மதிப்பு 100க்கு 75 குறைந்து விட்டதென்று தைரியமாகச் சொல்லலாம். இவ்வண்ணம் சுயமரியாதை இயக்கம் காரணமாக பார்ப்பனர் சம்ஸ் கிருதத்தின் கிளையான இந்தியைத் தென்னாட்டில் புகுத்தி பார்ப்பனி யத்துக்கும், ஆரிய மதத்துக்கும் நாகரிகத்துக்கும் புத்துயிரளிக்கலாமென எண்ணினர்.

1923இல் எச்சரிக்கை

இச்சூழ்ச்சியை முதன் முதலில் கண்டறிந்தவர் நமது பெரியாரே. பார்ப்பன ஜீவனத்துக்கு வழி விடுவதை மனதில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் பார்ப்பனர் தென்னாட்டில் இந்திப் பிரச்சார சபை ஏற்படுத்தி பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பணம் வசூல் செய்து இந்திப் பிரசாரத்துக்கு உதவி செய்து வரும் சூழ்ச்சியை உணர்ந்த பெரியார் 1926 மார்ச்சு 14ஆம் தேதியிலேயே இந்திப் பிரச்சாரச் சூழ்ச்சியைக் கண்டித்து எழுதினார். அப்பால் காங்கிரஸ்காரர் சென்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றபோது, காங்கிரஸ்காரர் பதவியேற்றால் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்யக்கூடும் என அவர்கள் பதவி ஏற்கு முன்னமேயே ஒரு வதந்தி இந்தியா முழுதும் பரவிற்று. அதை உணர்ந்த திருச்சி கான்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்கள் இடைக்கால மந்திரியாக இருந்தபோது ராஜகிரி பிரசங்கத்தில் இந்திப் புரட்டை வன்மையாகக் கண்டித்துப் பேசினார். இந்தியை தேசியப் பொதுப் பாஷையாக்கச் செய்யப்படும் முயற்சி மாகாண மொழிகளுக்கு உலை வைப்பதுடன் இஸ்லாம் நாகரிகத்தையும், கலைகளையும் ஒழிக்கும் சூழ்ச்சி எனவும் அவர் வற்புறுத்தினார். அப்பால் மறைமலையடிகள், சோமசுந் தர பாரதியார் போன்ற கல்விமான்களும் இந்திப் புரட்டின் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கினர்.

பார்ப்பனத் தலைவர்கள் எதிர்ப்பு

தோழர்கள் டி. ஆர். வெங்கடராம சாஸ்திரியார், சாரநாத அய்யங்கார் போன்ற பார்ப்பன அறிவாளிகள் எதிர்ப்பும் இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு உரமளித்தது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். காங்கிரஸ்காரர் எதிர்பாராதபடி இந்தி எதிர்ப்பு வலுப்பெற்று விட்டதினால் அதை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற துணிச்சல் காங்கிரஸ் மந்திரிகளுக்குண் டாயிற்று. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கு நமது பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதாய் முன்னாடியே வெளிவந்த செய்தி காங்கிரஸ் மந்திரிகளுக்கு அதிக பீதியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். பெரியார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவரானால் 6 மாத காலத்துக்குள் ஜஸ்டிஸ் கட்சி பழைய சக்தியைப் பெற்று விடுமென்றும், பெற்றால் அது காங்கிரசுக்கு பெரிய எதிரியாகித் தீருமென்றும் காங்கிரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே, பெரியார் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுத் தலைவராகு முன்னமே சிறைக்கனுப்பப் பட்டிருக்கிறார் எனப் பலர் ஊகிப்பது அவ்வளவு தப்பான ஊகம் என்று கூறுவதற்கில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒரு திருடனாக உவமைப்படுத்தி, அந்தக் திருடனைக் கையில் கிடைத்த ஆயுதத்தால் தாக்குவது குற்றமில்லையென கனம் ஆச்சாரியாரே பகிரங்கமாகக் கூறியிருப்பதினால், மேலே எடுத்துக் காட்டியபடி ஊகிப்போரை யாரும் கண்டிக்க முடியாது.

எதிரிகள் நோக்கம் பலிக்குமா!

எந்த நோக்கத்துடன் பெரியார் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, இந்தி எதிர்ப்பு இயக்கம் அடங்காதென்றும், ஆரிய மதமும், நாகரிகமும் தமிழ் நாட்டில் பழைய செல்வாக்கைப் பெறாது என்பதும் உறுதி, சென்ற 16 வருஷகாலமாக பெரியார் செய்த பிரச்சாரம் வீண் போகவே செய்யாது. புராணப் புரட்டுகளையும், ஆரிய மத ஆபாசங்களையும் மக்கள் நன்குணர்ந்து விட்டனர். அவர் நாட்டிலே விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் முளைத்து, பூத்து, காய்த்து, பழுத்து, பலன் தரத் தொடங்கி விட்டன.

பாமர மக்கள் கூட பகுத்தறிவு உணர்ச்சி உடையவர்களாகி விட்டனர். இனி எதையும் குருட்டுத்தனமாய் நம்ப மாட்டார்கள். பெரிய பெரிய சீர்திருத்தக்காரர்கள் பன்னூற்றாண்டு உழைத்துச் சாதியாத காரியங்களை நமது பெரியார் சுமார் 15 வருஷ உழைப்பினால் சாதித்துவிட்டார். ஜாதிக்கோட்டை தகர்த்தெறியப்பட்டுவிட்டது. கலப்பு மணங்கள், புரட்சிகரமான கலப்பு மணங்கள் தாராளமாக நடைபெறத் தொடங்கிவிட்டன. வாயில்லாப் பூச்சிகளாய் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் கூட, சுதந்திர உணர்ச்சியும் ஆண்மையும் பெற்றுவிட்டனர். ஆகவே, பெரியார் சிறைப்பட்டதினால், அவரைச் சிறைப்படுத்தியவர்கள் நோக்கம் எதுவாயிருப்பினும் சரி, அது நிறைவேறாதென்று தைரியமாகச் சொல்லிவிடலாம்.

குடி அரசு அபிமானிகளுக்கு

வேண்டுகோள்

கடைசியாக "குடி அரசு" அபிமானிகளுக்கு ஒரு வார்த்தை. சென்ற 15 வருஷ காலமாக "குடி அரசை' வளர்த்து வந்த பெரியார் சிறைக்குச் சென்றுவிட்டார். ஆகவே, "குடி அரசைப்” பேணும் பொறுப்பு முழுதும் அதன் அபிமானிகளையே இப்பொழுது சார்ந்திருக்கிறது. அவர் வெளிவரும் வரை அவரது இறகுப் பிறப்பான அருமையான வியாசங்கள் "குடி அரசு" வாசகர்கள் காணமுடியாது. எனினும், அவரது லட்சியங்களையும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் உணர்ந்த அறிவாளிகள் வியாசங்கள் குடி அரசில்” வெளிவந்து கொண்டிருக்கும். சிறைபுகுந்த பெரியாருக்கு தம்மைப் பற்றியோ, தமது குடும்பத்தைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலை இல்லை. அவர் தோற்றுவித்து வளர்க்கும் பத்திரிகைகளான "விடுதலை", "குடி அரசு", "பகுத்தறிவு" முதலியவற்றைப் பற்றியே கவலை. ஆகவே, அப்பத்திரிகைகளை வியாசங்கள் மூலமும், பணவுதவி மூலமும் ஆதரிக்க வேண்டியது பெரியார் மீது உண்மைப் பற்றுடையோரின் நீங்காக்கடன். அவரது பத்திரிகைகள் முட்டின்றி நடப்பது சிறையிலிருக்கும் அவருக்குப் பெருமகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்குமாகையினால் பத்திரிகைகளுக்கு தேவையான உதவிகளை எல்லாரும் மனமுவந்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

- குடிஅரசு; 11.12.1938.

திருச்சி ஜெயிலில்

இந்தி எதிர்ப்புத் தொண்டர்களுக்குத்

தொல்லைகள் !

1. சென்னையிலிருந்து 4 தடவைகளில் 120 இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் மாற்றப்பட்டு வந்திருக்கின்றனர்.

2. பிராமண டாக்டர்கள் கவனிப்பதே கிடையாது.மருந்தும்கவனித்துக் கொடுப்பதில்லை. டிஞ்சர் ஐடின் சீசாவில் ஒரே இறகை பலநாள் போட்டு, பலபேருக்கு மருந்து தடவி வருகிறார்.

(அ) சுப்பிரமணியன் என்ற தொண்டன் குழம்பு தூக்கி வரும் போது அண்டாதவறி காலில் விழுந்து, பெரிய வெட்டுக்காயமாகி ஆஸ்பத்திரியில் வைத்துக் கொள்ளாமல் வேலைக்குப் போய் விடும்படி ஆர்டர் போட்டு ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பி விட்டார்.

(ஆ) மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியே போய்விடத் தொண்டரை அசிங்கமான வார்த்தைகளால் வைது ஒத்தைக் கொட்டடியில் சீப் வார்டர் உதவியால் 23.09.1938 இல்லாக்கப் செய்திருக்கிறார்கள்.

(இ) அதற்குமேல் மற்றவர்களையும் பயமுறுத்தி 51 பேர்களிடம் மன்னிப்பு எழுதி வாங்கப்பட்ட தொண்டர்களைப் பிரித்துத் தனியாக 2ஆம் பிளாக்கில் வேலை கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள்.

3. வாரம் ஒருமுறை வருகின்ற பெரிய டாக்டரிடம் முறையிட்டுப் பரிகாரம் கேட்ட பொழுது இந்தி படித்தால் என்ன? உங்களுக் கென்ன கவலை? ஏன் நீங்கள் வந்து ஜெயிலில் கஷ்டப்படவேண்டும்? சாப்பாடு சரியில்லாவிடில் சாப்பிடாமல் பட்டினி கிடங்கள் என்று கூறினார்.

4. இதனால் வாடிப்பட்டி எம். கே.மணி, விருதுநகர் மைக்கேல் ஆகிய இருவரும் 19.09.1938 திங்கள் முதல் உண்ணாவிரதமிருந்து வருகிறார்கள். இன்று 8 ஆம் நாளாகும். கடைசிவரை உண்ணாவிரதமிருப்பதாகத் தெரிகிறது.

5. குடிப்பதற்கு வருகிற நல்ல குழாய்த் தண்ணீரை கைதிகளைக் கொண்டு டிரம் வண்டிகளில் ஏற்றி ஜெயில் அதிகாரிகள் வீடு அத்தனைக்கும் சப்ளை செய்யப்படுகிறது. இந்தி எதிர்ப்புக் கைதிகள் உள்பட மற்ற கைதிகளுக்கும் 6 ஆம் பிளாக்கில் உள்ள பாசம் பிடித்ததும், புழு நிறைந்ததுமான கிணற்று உப்புத் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படுகிறது. டாக்டரிடம் சொன்னால் கிளாசில் வடிகட்டிக் குடி என்று கூறுகிறார்.

6. குளிப்பதற்குப் பாசம் பிடித்ததும், கொக்கிப் புழு உள்ளதுமானமேற்படி தண்ணீரில் 8 சிறிய குவளை மட்டும் அனுமதிக்கிறார்கள். 9 வது குவளை தண்ணீரைத் தொட்டால் வார்டர்களைக் கொண்டு அடி கொடுக்கப்படுகிறது.

7. இந்தி எதிர்ப்புக் கைதிகளை ஜன்மப் பகையாளிகளாக கருதி 16, 25ஆம் நெம்பர் வார்டர்கள் மிகக் கொடுமையாக அடித்து
வருகிறார்கள்.

8. மன்னிப்புக் கேட்டு வெளியே போக விரும்பாத இந்தி எதிர்ப்புத் தொண்டர்களை நெல் குத்தும்படி இம்சை செய்கிறார்கள்.

- அ.யி. சையது, ஜெயில் நெ.5792.

(இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்று, தண்டனை அடைந்து, விடுதலை அடைந்த தொண்டர் அ.யி. சையது (ஜெயில் எண் : 5792) அவர்கள் எழுதிய தகவல் - குடிஅரசு; பெட்டிச்செய்தி - 02.10.1938)

இந்தி எதிர்ப்புக்கு முதற்பலி

வீரன் நடராஜன் இறுதிச்சடங்கு

5.12.1938இல் இந்தி எதிர்ப்பில் கலந்து இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்து நீதிபதி கனம் அப்பாஸ் அலியால் தண்டிக்கப்பட்ட (தண்டனை காலம் 6 மாதம். அபாரதம் ரூ.50 கட்டத் தவறினால் ஆறுவாரம்) சென்னை 11 ஆம் டிவிஷன் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெரு 2/2 நெ. இல்லத்தில் இருக்கும் ஆதி திராவிட தோழர் லட்சுமணன் அவர்களின் ஒரே குமாரனாகிய தமிழ் வீர இளங்காளை எல். நடராஜன் சென்னைச் சிறையில் பலநாள் நோய்வாய்ப்பட்டிருந்து, சிறை ஆஸ்பத்திரியில் குணம் காணாமல் 30.12.1938இல் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு நேற்று 15.01.1939 தேதி பகல் சுமார் 2.45 மணிக்கு உயிர் நீத்தார்.

உடல்நிலை, தன் குடும்பநிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரனின் பிரேதத்தை மாலை 5 மணிக்குச் செட்டிநாட்டு குமாரராஜா முத்தையா செட்டியார் அவர்களின் விருப்பப்படி ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து காரில் வைத்து கருப்புக் கொடிகள் தாங்கிக் சென்றார். தாய்மார்களும், தலைவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

பலர் வழிநெடுக ஊர்வலத்தை நிறுத்தி, பிரேதத்திற்கு மலர் மாலைகள் சூட்டினர். ஊர்வலம் அரைமைல் நீளத்திற்கு மேல் அமைதியாகவும், இந்தி எதிர்ப்பு வாக்கியங்களை முழங்கிக்கொண்டும் பகல் 11.30 மணிக்கு மயானத்தை அடைந்தது. வழிநெடுக இருமருங்கிலும் நின்ற மக்கள் கண்ணீர் வடித்தனர்.

பிரேத ஊர்வலம் மாயனம் அடைந்ததும் கார்ப்பரேஷன் அங்கத்தினர் தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் அனுதாபக்கூட்டம் நடைபெற்றது. தொண்டரின் மன உறுதியைக் குறித்தும், காங்கிரஸ் காரர்கள் போக்கைக் கண்டித்தும் தோழர்கள் அண்ணாதுரை, பொன்னம்பலனார், காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார், வேலூர் அண்ணல் தங்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணியம்மை முதலியவர்கள் பேசினார்கள்.

- குடிஅரசு; 22.01.1939.

வீரர் தாளமுத்து (நாடார்) மறைவு

இடுகாட்டில்

தலைவர்களின் துக்கம்

இந்தி எதிர்ப்பிலீடுபட்டுச் சிறையிலிருந்த தோழர் தாளமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் நேற்று மாலை 5 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப் பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன. தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும் மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர்களும், இளம் மனைவியும் சவத்தின் மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல் மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், தோழர்களும் கண்ணீர் விட்டனர். 10,000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாய்ப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழக்கிச் சென்றார். ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக்கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ்பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.

ஊர்வலம்

ஊர்வலம் தங்கசாலை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் வந்ததும் மக்கள் அனைவரும் பள்ளியின் முன் நின்று இந்தி ஒழிக காங்கிரஸ் ஆட்சி ஒழிக! தமிழ் வாழ்க! என அரை மணி நேரம் கூச்சல் போட்டனர். தலைவர்கள் எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை. போலீசார் வேண்டுதலும் பயன்படவில்லை . இறுதியில் தலைவர் மிகவும் கேட்டுக்கொண்டு ஊர்வலத்தை அழைத்து வந்தனர்.

வழிநெடுகத் தோழர் நாடாரின் சவத்தின் மீது ஏராளமான மாலைகள் போடப்பட்டன. ஊர்வலம் சுமைதாங்கி வந்ததும் இருட்டிவிட்டமையால் பின்னர் ஏராளமான லாந்தர் விளக்குகளுடன் ஊர்வலம் சென்றது. வழி நெடுக ஒவ்வொரு வீட்டின் மெத்தையிலிருந்தும் ஆண்களும் பெண்களும் வருந்திக் கண்ணீர் சொரிந்தனர்.

இரவு 7.30 மணிக்குத் பிரேத ஊர்வலம் மூலக்கொத்தளம் சுடு காட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்திக்கு முதற்பலியான தோழர்ல. நடராஜன் சமாதியின் அருகிலேயே தோழர் நாடாருக்கும் குழி வெட்டப்பட்டிருந்தது. தோழர் தாளமுத்து நாடாரைப் புதைப்பதற்கு முன்பு அவர் உடலின் எதிரிலேயே ஒரு இரங்கற் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் தோழர் சி. பாசுதேவ் பி.ஏ., பி.எல்., எம்.சி. அவர்களைத் தலைமை வகிக்குமாறு தோழர் என்.வி. நடாஜன் கேட்டுக் கொண்டார். அக்காலை அவர் பேசியதாவது:

இன்று இராயபுரத்தில் நடத்தவேண்டிய கூட்டத்தை இந்த ஈமக் காட்டில் நடத்துகிறோம். ஆச்சாரியார் ஆட்சியில் தமிழர்கள் உயிருடன் வாழ்வது சந்தேகமாக இருக்கின்றது. அன்று ஒரு நடராஜனைச் சவக்குழியில் கிடத்தினோம். இன்று தோழர் தாளமுத்துவிற்கு குழிகள் வெட்டியுள்ளோம். இன்று தமிழர்கட்காக வெட்டப்படும் இதே குழிகள் வருங்காலத் தமிழர் ஆட்சியில் பார்ப்பனியத்திற்கும் வெட்டப்படும் என எச்சரிக்கின்றோம். இக்குழி காங்கிரசிற்கு வெட்டப்படும் குழியாகும். இன்றைய ஆட்சியின் கொடுமையால் தமிழர்கள் மாளவேண்டுமானால், வருங்கால ஆட்சியில் இதேபோலப் பார்ப்பனர்களும் மாளவேண்டியதே நியாயம். நமக்கு மனத்கொதிப்பு இருக்கின்றது. அதற்காக நாம் பலாத் காரத்திலிறங்க வேண்டாம். தமிழுக்காக ஒருவரல்ல, இருவர் உயிரை விட்டனர். இன்னும் இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர்களை விடத் தயாராயிருக்கின்றனர்.

தோழர் பாசுதேவ் தலைமை வகித்து ஆங்கிலத்தில் பேசியதைத் தோழர்த.பா. நித்தியானந்தம் மொழிபெயர்த்துக் கூறினார். அது வருமாறு: அகிம்சா ஆட்சியின் கீழ் இங்கு துக்கமான நிலையில் கூடியுள்ளோம். தோழர் தாளமுத்து நாடார் தமிழ்நாட்டிற்கு 2 ஆவது பலியாக்கப்பட்டார். முன்பு இறந்த நடராஜனும் இவரும் மிகவும் வருந்தத்தக்க நிலையிலேயே இறந்தனர். இவர் இறந்த சர்ட்பிகேட்டை டாக்டர்களிடமிருந்து பெறவே, கடைசி நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் போலும், இவர் இறந்த செய்தி வெகுநேரம் கழித்தே குடந்தையிலுள்ள பெற்றோர் கட்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெகுநேரம் நம்மில் யாருக்கும் இச்செய்தி தெரியவில்லை. தோழர் நாடார் சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். அவர் இரண்டு கைகளிலும் சந்தே கத்திற்கிடமாக 2 கட்டுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தேகத்தை நீக்க சர்க்கார் என்ன செய்ய போகிறார்கள்? மாலையில் நடந்த பெரிய ஊர்வலம் நமது கட்சியின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையில் திரிபுரா செய்திகள் உங்கட்குத் தெரியும். தோழர் காந்தி அகிம்சையைப் பூஜித்துக் கொண்டே தோழர் சுபாஷைக் கொலை செய்கிறார். ஈரத்துணியைப் போட்டுக் கழுத்தையறுப்பதென்பது இதுதான் போலும். நாளைக் காலை சுபாஷ் காலமானார் என்னும் செய்தி வந்தால் அதைக் கேட்டு படேல் கும்பல் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும். அக்கும்பல்களில், ஒருவரான தோழர் ஆச்சாரியார் ஆட்சியில் இத்தகைய மரணத்தைத்தவிர வேறு எதை எதிர்ப்பார்க்கலாம்?

மனம் கலங்குகிறது

தோழர் அறிஞர் அண்ணா பேசியதாவது: முன்பு தோழர் நடராஜன் அடக்கமான காலத்து, மீண்டும் இத்தகைய சம்பவம் தமிழர்கட்கு ஏற்படாதென நினைத்தேன். ஆனால், நாடார் திலகம் தோழர் தாளமுத்து இறந்ததைக் காண மனம் கலங்குகிறது. வழியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருத்தம் தெரிவித்தனர். வடக்கே நருமதை ஆற்றங்கரையில் (திரி புரியில்) தோழர் ஆச்சாரியார் ஆனந்த வெறியிலிருக்கும் போது இங்கு நாம் துக்க சாகரத்தில் இருக்கின்றோம். நமது உயிர் நம்மிடமில்லை. தமிழர் ஆட்சி இல்லாவிட்டால் என்ன தீமை வந்துவிடும் என்கிற காங்கிரஸ் தமிழர்கள் இதைக் கவனிக்கவும். என்னைப் பெறுத்தவரை தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன். முன்பு நான் சாக்கோட்டை மாநாட்டில் பேசும் போது நாடார் சகோதரர்களை தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தியழைத்தேன். அக்காலத்திலும் நீங்கள் அனுப்பவேண்டும். ஆனால், அவர்களைத் திருப்பிக் கொடுப்பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்தேன். அதேபோல அங்கிருந்து தோழர்கள் வந்தனர்; தாளமுத்து இறந்தார். முன்பு இறந்த நடராஜன் மணமாகாதவர். ஆனால், தாளமுத்து மணமானவர். குடும்பத்தை ஒழுங்காக நடத்த இருந்த சமயத்தில் தாளமுத்து இறந்துவிட்டார். இன்று தாய் தந்தை மனைவிக்குப் பிரேதமாகக் காட்சியளிக்கிறார். இச்சமயத்து ஆச்சாரியார் மார்தட்டி, கண்ணாடியைத் துடைத்துப் பேசுவார். ஏன்? தமிழன் ஆச்சாரியார் காலின் கீழிருக்கின்றான். அவர் நினைத்தால் பல தாளமுத்துக்கள் மயானம் வரமுடியும். ஏன்? ஆச்சாரியார் நினைத்தால் நீங்களும் நானும் இங்கு (மயானம்) வரவேண்டியதுதான். மிகவும் வெட்ககரமான நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். எதைச் செய்து, எதைச் சொல்லித் தமிழன் முன்னேறுவது, விடுதலை பெறுவது என்று தெரியவில்லை. 2 மணிகளை இழந்தோம். தமிழராட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படும். இவர் மாண்டார். நாம் கண்ணீர் விட்டோம். இதைவிட்டு வெளியில் சென்றவுடன் நம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடக் கூடாது. வேண்டிய செய்ய வேண்டும். நாளை ஆச்சாரியார், யாரோ நாடார், யார் பேச்சைக் கேட்டுக் கொண்டோ வந்தார்; மறியல் செய்தார்; இறந்தார் என்றுதான் சொல்லப்போகின்றார். காங்கிரசின் 3 ஆண்டு சத்யாக்கிரக காலத்து எந்தத் தொண்டனாவது இறந்தானா? எந்த ராட்சத சர்க்காராவது இக்கொடு மையைச் செய்ததா? அன்று சத்தியமூர்த்திக்கு சிறையில் உடல்நலமில்லையெனக் கரடியாகக் கத்தினர். பாஷியம் அய்யங்காரைப் பற்றிப் பார்லிமெண்ட் வரை கேள்வி கேட்டனர். தோழர் தாளமுத்து இறந்தது நீண்ட நேரம் வரை யாருக்கும் தெரியாது.

எங்கள் நோக்கம்

இந்நிலையில் திரிபுரியில் எனது மாகாணத்தில் 62,000 பேர் இந்தி படிக்கின்றனர் என்று பெருமை பேசுகிறார். ஆனால், 900 பேர் சிறை செய்யப்பட்டனர் என்றாவது ஆயிரக்கணக்கானவர் கூட்டத்தில் எனது ஆட்சியை வெறுக்கின்றனர் என்றாவது கூறினாரா? இனி இந்தி படிக்கும் மாணவர், இருவர் உடலைத் தாண்டிக் கொண்டுதான் படிக்கச் செல்ல வேண்டும். தமிழன் உயிர் தமிழன் கையிலிருக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். நம்மில் மாறுபட்ட தமிழரைத் திருப்ப வேண்டும்.

வருங்காலத்தில் பெரியாரை மத்தியில் வைத்து இறந்த 2 மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவம் எழுப்ப வேண்டும். ஏன்? பெரியார் தளரும் காலத்து இந்த இரண்டு சமுகங்களும் அதாவது நாடார் ஆதி திராவிடர் சமூகங்கள் தான் உதவி செய்து வந்திருக்கிறது.

அடுத்த வாரம் குடந்தை செல்லப்போகின்றேன். எனது நாடார் சகோதரர்கட்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து, மாறுபட்ட காங்கிரஸ் தமிழர்களையும் நம்முடன் சேர்த்துத் தமிழராட்சியை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். இறந்த நாடார் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.

- குடிஅரசு; 19.03.1939.


கட்டாய இந்தி ஒழிந்தது

ஆச்சாரியார் சர்க்கார் புகுத்திய இந்தி உத்தரவை ரத்து செய்து இந்தியை இஷ்டபாடமாக்கி வெளியிட்டுள்ள சார்க்கார் அறிக்கை வருமாறு :

தங்கள் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தியை இஷ்டபாடமாக்குவது பற்றி சர்க்கார் சிறிது காலமாக யோசித்து வந்திருக்கிறார்கள். கட்டாய இந்திமுறை, பொதுமக்களில் பெரும்பகுதியினரிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையும் விளைவித்திருக்கிறது. முடிவாக முதல் மூன்று பாரங்களில் பரீட்சை எதுவுமில்லாமல் இந்தியை கட்டாயப் பாடமாக மட்டும், கற்றக் கொடுப்பதால் மாணவர்களுக்கு அந்த பாஷையில் போதிய அறிவோ, திறமையோ ஏற்படாதென்றும் சர்க்காருக்குத் தோன்றுகிறது. இந்தியை இஷ்டபாடமாக 4,5,6 பாரங்களிலும் விஸ்தரிக்க வேண்டுமென்றும், அதை ஒரு பரீட்சைப் பாடமாக்க வேண்டுமென்றும் சர்க்கார் கருதுகிறார்கள். இந்தி பேசப்படும் இதரப் பிரதேசங்களிலுள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள இந்திப்படிப்பு இம்மாகாண வாசிகளுக்கும் பெரிய உதவியாயிருக்குமென்று சர்க்கார் நினைக்கிறார்கள். இப்போழுது இந்தி கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட்டு வரும் பள்ளிக்கூடங்களில் இந்தி வகுப்புகளுக்கு மாணவர்கள் போவது இனி அவர்கள் இஷ்டத்தைப் பொறுத்துதென்று மேற்படி பள்ளிக்கூடங்களுக்கு உடனே உத்தரவிடப்படும்.

வெற்றி! வெற்றி!

தமிழர்களின் சளையாத உழைப்புக்கு தமிழர்களின் தீவிரக் கிளர்ச்சிக்கு, தமிழர்களின் தளராத கட்டுப்பாட்டுக்கு தமிழ்நாட்டுத் தலைவர்களின் முயற்சிக்கு, வெற்றி! வெற்றி! வெற்றி!.

எனவே, வெற்றிகண்ட தமிழரே! வீறு கொண்டேழுங்கள்! வெற்றிவிழா கொண்டாடிக் களியுங்கள்! உங்களது "சக்தி" இதுவென உணருங்கள்! உங்களால் தான் இத்தகைய வெற்றி காணமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி வீரரே! உங்கள் உழைப்பின் பலன் கண்டு விட்டீர்கள் ! இனி தயாராக இருங்கள் அடுத்த போரட்டத்திற்கு! வீரத்தமிழன்! வெற்றி நமதே!!

- குடிஅரசு; 25.02.1940.

மகனை இழந்த வருத்தமும் மறைந்தது!

கட்டாய இந்தி ஒழிந்தது!

என் களிப்புக்களவில்லை !

வீர நடராஜன் தந்தையார் விண்ணப்பம்


இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர் நடராசன் தந்தையார் தோழர் கோ.லட்சுமணன் பின்வருமாறு எழுதுகிறார்.

திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்காள்! திராவிடத் தனி மொழியாம் தமிழைக் கெடுத்து நமது தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி செய்து சுமத்தின இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய்நாட்டின் நலங்கருதி எதிர்த்தொழிக்க எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன் என்னிடம் கேட்ட போது, நான் மன மகிழ்ந்து ஒத்துக்கொண்டேன். அப்பெரும் போர்ப்புயலில் எனது மகன் 15.01. 1939 இல் மாண்டான் என்ற செய்தி கேட்டு மனம் நொந்து மதி மயங்கி வாழ்ந்து வந்தேன். அந்த துக்கச்செய்திக்குப் பிறகு ஓராண்டுக்கு மேற்சென்றன. அதன் பிறகு தாய்நாட்டில் பல மாறுதல்கள் கண்டேன். எனது மனம் மட்டும் ஆறுதலடையவில்லை .

02.02.1940 பத்திரிகைச் செய்தியை பார்த்தும் நான் எனது வாழ் நாளில் அடைய முடியாததும் அடைந்திராதுமான மகிழ்ச்சியுற்றேன். சர்க்காரின் பிடிவாதத்தை தகர்த்து கட்டாய இந்தியை ஒழித்தது எனது மகனும், அவனைப் போன்ற ஆயிரக்கணக்கான வாலிபர்களும் செய்த தியாகம் அல்லவா என்பதை நினைத்தபோது நான் அடைந்த களிப்பை என்னென்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் "முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும்" என்பதற்கேற்ப நமது திராவிட மக்கள் தாய் நாட்டிற்காக வெற்றி காணும் வரை உழைத்து வெற்றி கண்டு மகிழ் வதற்கு கட்டாய இந்தி நுழைவு, தமிழ் அறப்போர், திராவிடர் சிறை புகல், நடராசன், தாளமுத்து மரணம், பெரியார் கர்ஜனை, கட்டாய இந்தி ரத்து முதலிய சரித்திர சம்பந்தமான உண்மைகளை மகிழ்ச்சி யோடு எடுத்துக்காட்டுகிறேன். நாம் தொடுத்த போராட்டம் முடிந்து விட்டது. இனி அதில் நுழைய வேண்டியதில்லை என்றிருக்க வேண்டாம். இனியும் போர் இருக்கிறது. அவைகளிலும் தங்களது கட்டுப் பாடும் உழைப்பும் உதவியும் தந்து திராவிடர்களின் வெற்றிக்
கொடியை நாட்ட வேணுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். திராவிடம் வாழ்க ஆரியம் வீழ்க!

இங்ஙனம்,

கோ. லட்சுமணன்

- குடிஅரசு; 30.03.1940.

கட்டாய இந்தி

ரத்தானது எப்படி?

தாய்மார்களே, தோழர்களே!

இன்று நாம் இவ்வாண்டு விழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சி யுற்றிருக்க வேண்டிய நிலையில் நாம் சிறிது துக்கமாகவும் இருக்க நேரிட்டிருக்கிறது. நமது சர். பன்னீர்செல்வம் அவர்கள் சென்ற விமானம் காணாமற் போய் விட்டதாக வந்திருக்கும் செய்தியைக் கண்டு மனம் வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும், அவருக்கு யாதொரு விதமான ஆபத்தில்லாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்று நாம் உறுதி கொண்டு மேலால் காரியத்தை நடத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். (இந்நிலையில் பெரியாரவர்கள் கண் கலங்கினார்கள். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் மற்றும் முக்கியஸ்தர்களும் கண்க ளில் நீர்ததும்ப வருத்தப்பட்டனர். பின்னர் பெரியார் அவர்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மிக உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்) தோழர்களே! கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் செய்து வந்த தீவிரக் கிளர்ச்சியின் பயனாக நம் மொழிக்கு காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து ஒருவாறு நீங்கிற்று. அது காரணமாகக் சென்னையில் நடைபெற்ற பலவித நிகழ்ச்சிகள் தாங்கள் அறிந்ததேயாகும். ஆனால் நமக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றியைப்பற்றி காங்கிரஸ்காரர்களும் மனந்தாழாமல் கண்டவாறு பேசித் திரிவது பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.

எனது கேள்வி

நான் கேட்கிறேன் காங்கிரஸ் தலைவர்களை, கடந்த 52 வருடமாக நாட்டிற்கு சுயராஜ்யம் தேடித்தருகிறோம் என்றும் மற்றும் பலவாறாகவும் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து உண்மைக்கு மாறாக, மக்களிடத்தில் பொய் சொல்லி ஓட்டும் பணமும் பெற்று சட்டசபையிற் சென்று மந்திரிகளாகியும் ஒரு இம்மி அளவா வது வெற்றி பெற்றார்களா? என்று. அதற்குப் பதிலாக சர்க்காரிடத்தில் எத்தனையோ முறை சரணாகதியடைந்து ஒப்பந்தம் செய்ததைத்தான் கண்டோம். உதாரணமாக காந்தி இர்வின் ஒப்பந்தம் என்று சொல்லப் படுவது என்ன? நாங்கள் போராட்டத்தை நிறுத்தி விடுகிறோம். எங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்காதீர் என்று கெஞ்சுவதுதானே பொருள். இதை லார்டு இர்வின் அவர்களிடத்தில் சொல்வானேன். சாதாரணப் போலீஸ்காரரிடத்தில் சொன்னால் கூட சரி, இனி சண்டித் தனம் செய்யாதே, யானும் உன் பக்கம் வரவில்லை என்று சொல்லியிருப்பார்களே! இப்பேர்ப்பட்ட கோழைத்தனத்திற்கு காந்தி இர்வின் ஒப்பந்தம் என்று பிரமாதமாகப் பேசி, அவர்களின் தோல்வியை மக்கள் உணராதவாறு செய்யவில்லையா? உப்பு சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றதா? பதவியேற்கும் போது எங்களுக்கு உறுதிமொழி வேண்டும் அப்பொழுதுதான் பதவியேற்போம் என்று பிடிவாதம் மாதிரி செய்தார்களே, அதில் ஜெயித்தார்களா? காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொன்றையும் படாடோபமாகப் பேசுவதும் கடைசியில் சரணாகதியாவதும்தான் அவர்களின் இன்றைய நிலை வரையில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு சுயமரியாதை இருக்குமானால் திரும்பித் திரும்பி இப்பேர்ப்பட்ட தகிடுதத்த காரியங்களை செய்யத் துணிய மாட்டார்கள். இப்பொழுது கூட வைசியராய் மாளிகைக்கு 5 முறை காவடி எடுத்துத் திரிந்து மன்றாடிக் கொண்டிருக்க வில்லையா? ஆனால், நமது போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் பத்து பனிரெண்டாயிரம் ரூபாய் செலவும், 1500 பேர்களுக்கு சிறைவாசமும் இரண்டு வருடம் கிளர்ச்சியும் ஆக இச்சொற்ப அளவிற்குள்ளாகவே நாம் இதுவரை சரித்திரம் காணாத ஓர் வெற்றியை அடைந்துள்ளோம்.

சாதாரண வெற்றியல்ல

நாம் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல. நமக்கு கிடைத்திருக்கும் இவ்வெற்றியில் நம்மை ஆளும் பிரிட்டிஷ் சாக்காருக்கும் ஓர் எச்சரிக்கையும் செய்தவர்களாயிருக்கிறோம். இந்தி கட்டாய பாடம் ரத்தானது பெரிதல்ல, இத்தனை நாளாக கனமாயிருந்த ஆச்சாரியாருடன் உறவு கொண்டு திராவிட மக்களை அலட்சியம் செய்ததன் பயனாக கவர்னரின் போக்கை யானும் மற்ற தலைவர்களும் கண்டித்துப் பேசிவந்த பிறகுதான் சரி, திராவிட மக்களுக்கு ஒற்றுமையும் ஓங்குகிறது. தவிர, காங்கிரஸ்காரர்களைப் போல நம்மை குரோட்டன்ஸ் செடி என்று சொல்லும் கூட்டமல்ல என்று கவர்னருக்கும் தோன்றிற்று. அதன்பயனாய் கட்டாய இந்தியும் ஒழிந்தது. வெள்ளையர்களும் திராவிட மக்களின் உணர்ச்சியை அறியவுமாயிற்று. உண்மையாகவே சொல்லுகிறேன். இந்தி பாடத்தை எப்போதே கவர்னர் தலையிட்டு ரத்து செய்திருக்க வேண்டியது. ஏன் இத்தனை நாள் பொறுத்து செய்தார் என்றால் அதற்குக் காரணம் கனமாயிருந்த ஆச்சாரியாரேயாவார். பதவியிலிருந்தபோதும் வெளியில் தள்ளப்பட்டுங்கூட கவர்னரிடம் சென்று கட்டாய இந்தியை எடுக்காதீர்! எங்கள் மரியாதையே போய் விடும் என்று கெஞ்சி அதற்காக கவர்னரை குரோட்டன்ஸ் வழிகாட்டி ஞானாசிரியன் என்றும் புகழ்ந்து பேசி வந்ததோடல்லாமல் வெள்ளையார் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் அவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து வந்ததேதான்.

ஒன்றுபட்டுழைக்க வேண்டும்

கடைசியாக, நம்முடைய எதிர்ப்புத் தன்மையும் பாதிக்கிறது என்று தெரிந்த பின்னர்தான் கவர்னரும் இதேது பார்ப்பனீயத்தைப் பிடித்தது நம்மையும் பிடிக்கிறது என்று உணர்ந்து ஆச்சாரியாருக்கு மரியாதை தேடிக் கொள்வதற்கு நாம் ஏன் கண்டனத்திற்கு ஆளாக வேண்டுமென்று கருதி கட்டாய இந்தி பாடத்தை ரத்து செய்தார். கவர்னரிடம் யான் பேசும்போதுகூட காங்கிரஸ்காரர்களைப்பற்றி எவ்வாறு கருதுகிறார் என்பதையும் ஒருவாறு குறிப்பிட்டார். உண்மை யிலேயே நாட்டில் காங்கிரஸ் அடிமைகள் போல வேறெங்கும் அகப் படமாட்டார்கள் என்று சொல்லக் கூடிய அளவில்தான் அவர் மதிக்கிறார். கனமாயிருந்த ஆச்சாரியார் முதற்கொண்டு மற்ற காங்கிரஸ் காரர்களையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டேன் என்ற பெருமை யுடன்தான் கவர்னர் செல்கிறாரே தவிர வேறில்லை. அதே போன்று திராவிட மக்களின் கலை, நாகரிகம், விடுதலை ஆகியவற்றிக்கு விரோதமாக செய்யும் எந்த ஆட்சியும் திராவிட நாட்டில் நிலைக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்து செல்கிறார் என்றும் நான் பெருமையாக சொல்லுகிறேன். ஆனால் நாம் இதையே பிரமாதமாகக் கருதிவிடாமல் இந்நாட்டில் இனி ஒருவிதத்திலும் பார்ப்பனீயமோ, அதை தாங்கி நிற்கும் வேறு சக்திகளோ அறவேயில்லாமல் செய்ய வேண்டியது நமது அடுத்த இன்றியமையாத போராட்டமாகும். அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு முன்னைவிட அதிகமாக உழைக்க வேண்டுகிறேன். அதேபோன்று இக்கழகத்தினரும் வேலை செய்ய வேண்டுவதுடன் பொது மக்களும் இக்கழகத்திற்கு ஒத்தாசையாக இருந்து நாட்டின் விடுதலைக்கும் பாடுபட வேண்டும்.

(03.03.1940 அன்று சென்னை பெத்து நாயக்கன்பேட்டையில் தமிழ்க் கழக ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.)

- குடிஅரசு; 17.03.1940.

Read 1294 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.