Tuesday, 29 September 2020 01:07

வகுப்புரிமைப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 81

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா. கருமலையப்பன்

 

வகுப்புரிமைப் போராட்டம்

வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்

(சாதிவாரி இட ஒதுக்கிடு)

- சித்திரபுத்திரன்

தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும் ஒற்றுமையின்மைக்கும் வகுப்புத்துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் குடி அரசின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக்கூடிய வகுப்பைச் சேர்ந்ததான சுதேசிமித்திரன் பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி யோசிப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது. அதாவது பிரதிநிதிச் சபைகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமே ஜஸ்டிஸ் கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், அது தற்கால ஏற்பாடு. அதை ஒரு ஸ்திரமான ஏற்பாடாகக் கொண்டால், அது நம் தேசிய இயக்கம் சிதறுண்டு போகும்படி செய்யக் கூடியது. திராவிடன் பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது. சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரி பிரதிநிதித் துவம் இன்றிமையாதது. இக்கொள்கை புதிதானதல்ல. சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்த பின்னர் ஏற்பட்டதல்ல. இம்மாகாணத்தைத் திறமையாய் முன்னர் ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே இதை ஒப்புக் கொண்டு 1840ஆம் ஆண்டில் போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125 இல் அமைத்திருக்கிறார்கள். ஆனால், தற்கால முறையாய் ஏற்பட்டதென்பதை நீங்கள் உணரவேண்டும். நிலையாகவோ, முதன்மையாகவோ அஃதிருப்பின் தேசிய அபிவிருத்திக்குக் கெடுதிவிளைவிக்கும். எல்லா சமூகத்தார்களும் சமூக, அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும் என்று பேசியிருக்கிறார். இவற்றிலிருந்து சுதேசிமித்திரன் பத்திரிகை ஜனங்களை எப்படித் தனது சூழ்ச்சிகளால் ஏமாற்றி வருகிறதென்றும், அதை நம்பி ஜனங்கள் எவ்வளவுபேர் ஏமாந்து போகிறார்களென்றும் வாசகர்களே அறிந்து கொள்ளலாம். மந்திரி ஸ்ரீமான் பாத்ரோ அவர்கள் தற்கால நிலைமைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேவையென்று சொல்லுவதோடு நிரந்தரமாய் அது நமக்கு இருக்கவேண்டியதில்லையென்றும் எல்லா சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீர வேண்டும் என்றும் சொல்லுகிறார். நமது தேசத்தில் எல்லா சமூகத்தாரும் ஒற்றுமைப்பட்டு ஒருவருக் கொருவர் நம்பிக்கை உண்டாகி, ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்கும் வழக்கம் நீங்கி எல்லோரும் சமம், சகோதரர்கள் என்கிற உணர்ச்சி வரும்பொழுது ஒரு தேசத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியதில்லைதான். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால், தற்காலம் தேச முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது ஒற்றுமைக்குறைவு என்பதையும் ஒற்றுமைக் குறைவிற்குக் காரணம் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் தாழ்த்தி ஏமாற்றி மோசம் செய்துதான் முன்னுக்குவரப் பார்ப்பதுதான் என்னும் வியக்தமாய் தெரிந்து கொண்ட பிறகு தர்ம சாஸ்திரம் பேசுவது ஒழுங்காகுமா? இந்தியக் கிறிஸ்துவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் சில இலாகாக்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்துவிடவில்லையா? அதுபோல், பிராமணர், பிராமணரல்லாதோர் என்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிடின் தேசத்திற்கு என்ன கெடுதி சம்பவிக்கும்? இந்து, மகம்மதியர், கிறிஸ்துவர் முதலியவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும், நம்பிக்கையும் பிராமணர், பிராமணரல்லாதார் என்கிற வகுப்பினருக்குள் இருக்கிறதா? ஒரு மதஸ்தர்களுக்குள்ளாகவே ஒருவர் தான் பிறவியினாலேயே உயர்ந்தவரென்றும் தான் எவ்வளவு ஈனராயிருந்த போதிலும் பிறவியின் காரணமாகவே தனக்குச் சில பெருமைகளும் உரிமைகளும் உண்டென்றும் பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவராயிருந்த போதிலும் அவர்கள் தாழ்ந்தவர்களென்றும், அவர்களைத் தொட்டால், பார்த்தால், நெருங்கினால், தெருவில் நடந்தால் பாபமென்னும் தத்துவங்களையும், கொள்கைகளையும் மத ஆதார மூலமாக வைத்துக் கொண்டு இருக்கிறவரையில், இரு வகுப்பாருக்குள்ளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் அன்பும் எப்படி உண்டாகும்? மகம்மதியரும் பிராமணரல்லாத இந்துக்களும் இந்தியக் கிறிஸ்துவர்களும் ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும் ஒரு சமயம் ஒற்றுமை ஆனாலும் ஆகலாம். ஆனால் பிராமணரும், பிராமணரல்லாத இந்துக்களும் ஒற்றுமையாக ஏதாவது இடமிருக்கிறதா? இந்துக்களில் பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் சூத்திரர்களென்றும், அவர்கள் பிராமணர்களுக்கு ஊழியர்களென்றும், அடிமைகளென்றும், தாசி மக்களென்றும். அவர்கள் சொத்துக்கள் வைத்திருப்பதற்குப் பாத்தியமில்லையென்றும், சூத்திரர்களின் சொத்துக்களை பிராமணர்கள் பலாத்காரமாய் பிடிங்கிக் கொள்ளலாமென்றும் மனுதர்ம சாஸ்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 413, 415, 417 சுலோகங்களாக எழுதி வைத்துக் கொண்டு அவற்றையே இந்து சமூகத்திற்கு ஆதாரமாக்கி, அதற்குத் தகுந்த மாதிரியாக வாழ்க்கையையும் நடத்திக் கொண்டு அதையே தங்கள் தந்திரங்களாலும் செல்வாக்கினாலும் பாமர ஜனங்களையும் நம்பும்படி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதியுடன் எப்படி மற்றொரு சாதி ஒருமைப்பட முடியும். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ஆறு ஏழு கோடி ஜனங்கள் தங்கள் நாட்டில் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்காத வர்களாகவும் பார்க்காதவர்களாகவும் கருதப்படுகிறார்களென்றால் இனி எந்தக் காலத்தில் இவர்களுக்கு விமோசனம் உண்டென்று நம்ப இடமிருக்கிறது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பு என்பாரும், உயர்ந்த சாதி என்பாரும், இந்த அரசாங்கத்தாரும் நாளது வரையில் இந்தத் தீண்டாதாருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? இனிமேலும் என்ன செய்வார்கள் என்று நம்ப இடமிருக்கிறது? சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னராவது இந்தத் தீண்டாதாருக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கொடுத்திருந்தால் இவர்களின் நிலை இன்று இப்படி இருக்குமா? இந்துக்களில் சிலர் மகம்மதியர்களையும் கிறிஸ்துவர்களையும் மிலேச்சர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த மனப்பான்மை இப்பொழுது எப்படி மாறிற்று? அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்காமலிருந்தால் அவர்கள் முன்னுக்கு வந்திருப்பார்களா? நாமும் அவர்களைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டி எறிய வேண்டும் என்றுதானே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றதெனச் சொல்லிக் கொண்டிருப்போம். ஒன்றரை நூற்றாண்டு பிரிட்டிஷ் ராஜ்ஜியபாரம் நடந்தும் பிரிட்டிஷார் வருமுன் ராஜ்ஜியபாரம் செய்து கொண்டிருந்த சாதியெல்லாம் பிற்போக்கான சாதிகளில்தானே சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம், இவர்களை நம்பி வாழ்ந்தவர்களெல்லாம் முற்போக்குள்ள சாதிகளில் சேர்க்கப்பட்டு போய்விட்டது. இந்தத் தீண்டாதவர்களும், பிற்பட்ட சாதிகளும் எந்தக் காலத்திற்குத் தீண்டக் கூடியவராகவும், முற்போக்குள்ள சாதியர்களாகவும் ஆகப்போகின்றனர்? சட்டசபைகளில் சகல சாதிகளுக்கும் உத்தியோகங்கள் சரிவர நிரப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்களே! அது அமுலில் வருகிறதா? சர்க்காருக்கு சம்பந்தப்பட்ட சகல தெருக்களிலும், சர்க்காரின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டென்று ஒரு தீர்மானம் செய்தார்களே! அது அமுலில் வருகிறதா? காங்கிரஸில் தீண்டாமை ஒழியவேண்டும் என்று தீர்மானம் செய்தார்களே! அதை காங்கிரஸில் உள்ளவர்களாவது ஒப்புக்கொண்டு அமுலில் கொண்டு வந்தார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி கூட்டத்தில் பிறவியினால் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ்வாதிகளாவது ஒப்புக் கொண்டார்களா? பறையனுடன் சாப்பிடுவேன்; இன்னும் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன்; என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன். என் இனத்தார்கள் மாத்திரம் பிராமணரல்லாத பையன்களுடன் உடன் உண்ணலை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்லித் தியாகிகள் என்போரும், யோகிகள் என்போரும் காங்கிரஸில் தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஒடிப்போகவில்லையா? எங்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மனப்பான்மையே இப்படியிருந்தால், ஒருவேளை ஒரு பிராமணரல்லாத பிள்ளையுடன் ஒரு பிராமணப் பிள்ளை உட்கார்ந்து உணவுண்டதாக கேள்விப்பட்டால் ஒரு மாதம் பட்டினி விரதம் இருப்பேன் என்று சொல்லும் கூட்டத்தாரிடம் நாம் எப்படி ஒத்து வாழ வேண்டும்? நமக்கும் அவர்களுக்கும் எப்போதாவது ஒற்றுமை ஏற்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். இம்மாதம் திருச்சியில் நடந்த கூட்டத்தில் சுயராஜ்யக்கட்சித் திட்டத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற தத்துவத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னதில் சுயராஜ்யக் கட்சியின் தலைவர் இத்திட்டத்தை நீங்கள் அதில் சேர்க்கப் பிரயத்தனப்படுவீர்களானால் கொஞ்சம் நஞ்சமுள்ள பிராமணர்களும் காங்கிரசை விட்டுப் போய்விடுவார்கள் என்று பயமுறுத்தினார். தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று மகாத்மா வாயளவில் சொன்னபொழுது கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டிருந்தவர்கள் அது அமுலில் வருகிற காலத்தில் ஒருபக்கம் மகாத்மாவின் செல்வாக்கைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறார்கள்; குறைத்தும் விட்டார்கள். இவற்றையெல்லாம் அறிந்த பிராமணரல்லாதாரில் சிலரும் பிராமணர்களிடத்தில் தங்களுக்குச் செல்வாக்குக் குறைந்து விடும் என்கிற பயத்தினாலும், அவர்களால் தங்களுக்கு புகழும் கீர்த்தியும் இல்லாமற் போய்விடுமே என்கிற பயத்தினாலும் விபூஷணாழ்வாரைப் போல் நடிக்கிறார்கள். ராமர் ராஜ்ஜியத்திலே விபூஷணர்கள் இருப்பது அதிசயமா? அடிமை வியாபாரத்தை ஒழிக்க சட்டமேற்படுத்தப்பட்ட காலத்தில் அடிமைகளே அச்சட்டத்தை எதிர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனபோதிலும் வாஸ்தவத்திலேயே வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் வந்தால் தேச முன்னேற்றம் தடைபட்டு போய்விடுமோ என்று தெரிந்தோ, தெரியாமலோ பயப்படுகிற உண்மையாளர் சிலர் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. மகம்மதியர், கிறிஸ்தவர் முதலானவர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பின் எவ்வித முற்போக்கிற்குத் தடை ஏற்பட்டு விட்டது? கடைசியாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருப்பவர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். இவர்கள் எப்பொழுதாவது பிராமணர்க ளும், பிராமணர் அல்லாதாரும் ஒன்றுபடுவார்கள், பிராமணரல்லா தாரை அவர்கள் சுயமரியாதைக்குப் பங்கம் இல்லாதபடிக்கு எப்பொ ழுதாவது மதிப்பார்கள், பிராமணரல்லாதாருக்கும் தீண்டாதாருக்கும் இப்பொழுது இருக்கும் குறைவுகள் எல்லாம் நீங்குவதற்கு பிராமணர் கள் அனுகூலமாய் இருப்பார்கள் என்று உண்மையாய் நம்புகிறார்களா? தீண்டப்படாதார் என்னும் ஏழுகோடி ஜனங்களுக்கு பிராமணரல்லாத இந்துக்கள் என்ற முறையில் இன்னும் நாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க மறுப்போமேயானால் மகம்மதியர்கள் என்கிற பெயராலோ, கிறிஸ்துவர்கள் என்ற பெயராலோ சீக்கிரத்தில் நாம் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறோம்.

- குடிஅர”; 16.08.1925.

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கேட்பது

நேற்றா? இன்றா?

காஞ்சிபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங்களாகி விட்டது. மகாநாட்டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால், அம்மகாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் ராஜிய நாடகத்தில் பிராமணரல்லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்திர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த்தோன்றும். இம்மூவர்தான் காங்கிரசில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை பிராமணரல்லா தார் ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப் பட்டவர்கள்.

தென்னிந்திய நல உரிமை

கூட்டுறவு சங்கம்

அதோடு மாத்திரமில்லாமல் காங்கிரஸ் பிராமண ராஜ்யம் ஸ்தாபிக்கத்தகுந்த சாதனமென்றும் சுயஆட்சி என்பது பிராமண ஆட்சிதா னென்றும் கருதிய பெரியோர்களான டாக்டர் டி.எம்.நாயர், ஸர்.பி.தியாகராய செட்டியார் போன்ற தேசாபிமானமும் அனுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை ஒதுக்கி தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்பதாக ஓர் சங்கத்தைக் கண்டு அதன்மூலமாய் பிராமணரல்லாதார் நன்மைக்கென ஜஸ்டிஸ், திராவிடன் என்கிற இரண்டு பத்திரிகைகளையும் தோற்றி தீவிரப்பிரச்சாரங்கள் செய்து, அதுகாலையில் பிராமணர்கள் வயப்பட்டுக் கிடந்த பெருவாரியான பல அதிகாரங்களையும் பதவிகளையும் பிராமணரல்லாதார் தங்கள் உரிமைக்குத் தகுந்த அளவு அடைய வேண்டும் எனக்கருதி பிரச்சாரமும் தொடங்கினார்கள். சென்னை மாகாண சங்கம் அச்சமயத்தில் மேற்படி சங்கமும், பிரச்சாரங்களும் தென்னிந்திய மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல வென்றும், ஏதோ சிலர் அரசாங்கத்தின் வயப்பட்டு அவர்கள் தூண்டு கோலால் நடைபெறுகிற சங்கமென்றும், இதில் பிராமணரல்லாதார் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தென்னிந்திய பிராமணரல்லாத மக்களுக்கு நன்மை செய்யவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை அளிக்கவும் சென்னை மாகாணச்சங்கம் என்பதாக ஓர் சங்கத்தை தோற்றியிருக்கி றோம். அதில் பிராமணர்கள் யாரும் கலப்பில்லை. அதன் தத்துவமே காங்கிரஸ் மூலமாகச் சுயராஜ்யம் பெறுவதும், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறுவதும்தான் முக்கியமானது என்றும் அதன் அக்கிரசனாதிபதி திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளையா கவும், உப அக்கிரசனாதிபதி ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலியோராகவும், காரியதரிசி ஸ்ரீமான் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு முதலியோராகவும் இதற்குப் பிரச்சார பத்திரிகைகள் ‘ இந்தியன் பேட்ரியாட்‘ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் ‘தேசபக்தன்‘ என்கிற தமிழ்ப் பத்திரிகையையும் இவற்றிற்கு திவான் பகதூர் சி.கருணாகர மேனன், திருவி.கலியாணசுந்தர முதலியார் ஆகியவர்கள் முறையே பத்திராசிரி யர்களாகவும் இருந்து நடந்து வரப்பட்டதோடு, இதன் பலனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு பிராமணரல்லாத பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமற் செய்ததுடன், காங்கிரஸ்தான் தேச விடுதலைக்குச் சாதனமென்றும், சென்னை மாகாணச் சங்கம்தான் பிராமணரல்லாதாரின் நன்மையைக் கருதக்கூடியதென்றும் சென்னை மாகாணத்திலுள்ள பிராமணரல்லாத மேற்கண்ட முக்கியஸ்தர்கள்தான் தென்னாட்டுப் பிராமணரல்லாதார் பிரதிநிதிகளென்றும் சன்னது கிடைத்தாய்விட்டது.

வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்

இதோடு மாத்திரமல்லாமல், தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரும், சென்னை மாகாண சங்கத்தாரும் போட்ட வகுப்புவாரி பிரதி நிதித்துவ கூச்சல்களினால் கிறிஸ்துவர், மகமதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ - இந்தியர் முதலிய வகுப்பாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்து வமும், விவசாயிகள், லேவாதிக்காரர், இந்திய வியாபாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள் முதலிய தொழிலாளிகளுக்கு தொழில்வாரி பிரதி நிதித்துவமும், தேர்தல்களில் கொடுக்கப்பட்டதோடல்லாமல், பிராமணரல் லாதாருக்கென பலஸ்தானங்களையும் ஒதுக்கி வைக்கப்பட அரசாங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இப்படி இருக்க, ராஜ்ய சபைகளான காங்கிரஸ் முதலிய சபைகளிலும் மகமதியர், கிறிஸ்துவர் முதலியோருக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்களோடு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது. இதுமாத்திரமேயல்லாமல் காங்கிரஸ் ஸ்தாபனங் களிலும் உதாரணமாக எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், மகமதியர்களுக்கு இத்தனை ஸ்தானம், கிறிஸ்துவர்களுக்கு இத்தனை ஸ்தானம், தீண்டாதாருக்கு இத்தனை ஸ்தானம், இவை நீக்கிய மற்ற வர்களுக்கு இத்தனை ஸ்தானம் என மாகாண வாரியாக ஒதுக்கி வைக்கப்பட்டு - அந்தப்படி இப்பொழுது காங்கிரஸிலும் அமுலில் நடந்து வருகிறது. இவ்வளவிருந்தும் மேலும் மேலும் இவை போதா தென்றும் இன்னும் சில ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டுமென்றும், ராஜ்ய காங்கிரஸிலும், கான்பரன்ஸ்களிலும் கிளர்ச்சிகளும் முயற்சிகளும் செய்து கொண்டே வரப்பட்டிருக்கிறது.

காக்கி நாடா காங்கிரஸ்

உதாரணமாக, காக்கிநாடா காங்கிரஸில் ஸ்ரீமான் தாஸ் அவர்களால் கொண்டு வரப்பட்டு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரால் ஆமோதிக்கப்பட்ட கல்கத்தா பேக்டினாலும் (அது தோற்றதிற்கும் ஒரு காரணம் உண்டு, ஆனால் ரகசியம்) டாக்டர் அன்சாரி, லாலா லஜபதி ராய் முதலியோர்களை இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிகாண ஒரு ஏற்பாடு கண்டுபிடிக்கும்படி காக்கினாடா காங்கிரஸில் ஏற்படுத்திய கமிட்டியினாலும் அதன் குறிப்புகளினாலும் நன்றாய் விளங்கும். இன்னமும் தமிழ்நாட்டில் நடந்த மாகாண கான்பரன்ஸ்களின் போதெல்லாம் நடந்த பிராமணரல்லாத தனி கூட்டங்களாலும் நன்றாய் விளக்கலாம். அதாவது;

25-வது ராஜ்ய மாகாண மாநாடு

1919-ஆம் வருடத்தில் திருச்சியில் நடைபெற்ற 25-வது ராஜ்ய மாகாண கான்பரன்சின்போது அதே கொட்டகையில் ஸ்ரீமான் சோம சுந்தர பாரதியாரின் அக்கிராசனத்தின்கீழ் இதைப்பற்றிப் பேசி, ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்கத்தை நடத்தவேண்டுமென்றும், அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டு அது போலவே தீர்மானமும் நிறைவேறியும் இருக்கிறது.

26 - வது ராஜ்ய மாகாண மாநாடு

1920 - ஆம் வருடம் திருநெல்வேலியில் நடந்த 26 - வது ராஜ்ய மாகாண கான்பரஸின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீமான் ஈ.வி. இராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின்கீழ் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகத்திலும் ஜனசங்கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தைக் காலஞ்சென்ற ஸ்ரீமான் சோம சுந்தரம் பிள்ளை, ஸ்ரீமான்கள் வி.ஒ.சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை மற்றும் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களிலுள்ள சில வக்கீல்களும் ஆகச் சேர்ந்து உடனே விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத்தீர்மானத்தை, ஸ்ரீமான் ஈ.வி. இராமசாமி நாயக்கர் பிரேரேபிக்க, ஸ்ரீமான்கள் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் ஆமோதிக்க, காலஞ்சென்ற ஸ்ரீமான் எஸ். கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுத்து வீதாச்சாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாக போதுமான என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத்தகுந்த அடிகுவேட்லி (Adequately) என்கின்ற பதத்தைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபனை கொண்டு வந்தார். இந்த அடிகுவேட்லி என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஸ்ரீமான் ராம சாமி நாயக்கர் அம்மகாநாட்டிற்கு அக்கிராசனாதிபதியாயிருந்த இதே ஸ்ரீமான் எஸ். சீனிவாசயங்காரவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம்தான். ஆனால், பெர்சண்டேஜ் என்பதை விட அடிகுவேட்லி என்பது நல்ல வார்த்தையென்று சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். இதுசமயம் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் அக்கூட்டத்தில் ஆஜராகித்தான் இருந்தார்கள். அதோடு ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப்பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும் செய்முறையும் தமிழ் கல்விக்கும் இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு, ஸ்ரீமான் வி.ஒ. சிதம்பரம் பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு அடிகுவேட்லி என்பதற்கும் பர்சண்டேஜ் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அவர்கள் அடிகுவேட்லி என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது யோக்கியதைக்குத் தகுந்த என்கிற பொருள்கூடக் கொள்ளலாம் என்றும், பெர்சண்டேஜ்ட் என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன்னார்கள். பிறகு மகாநாட்டில் இத்தீர்மானம் வரும் போது, பெர்சண்டேஜ் என்கிற வார்த்தையை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீமான்கள் நாயக்கரும், தண்டபாணி பிள்ளையும் அக்கிராசனார் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார்களிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக் கொண்டார். கடைசியாக மகாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்கிர சனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்கிரசானரைக் கூட்டத்தில் கேட்டார். அக்கிரசனார் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் அது பொதுநன்மைக்கு விரோதமான தீர்மானமாதலால் அவற்றை ஒழுங்குத் தவறானது என்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லி விட்டார். உடனே ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை எழுந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத் தவறு என்று கேட்டார். அப்போது அங்கிருந்த பிராமணர்கள் ஸ்ரீமான் பிள்ளையை உட்காரும்படிக் கூச்சல் போட்டு அடக்கி விட்டார்கள். கடைசியாக முடிவுரையில் ஸ்ரீமான் அய்யங்கார் காஞ்சி மாநாட்டில் ஸ்ரீமான் முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னது போல் வருத்தப்படுவதாகப் பொய்வேஷம் போட்டு மறைத்து விட்டார்.

27-ஆவது ராஜ்ய மாகாண மகாநாடு

பின்னர் 1921-ஆம் வருடம் தஞ்சையில் நடந்த 27 - ஆவது தமிழ் மாகாண மகாநாட்டில் கோயம்புத்துர் ஜில்லா பிரதிநிதிகள் கொட்டகையில் ஸ்ரீமான் சர்க்கரை செட்டியார் அக்கிராசனத்தில் தமிழ் நாடு பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தைப் பற்றிப்பேசி ஸ்ரீமான்கள் சென்னை சிங்காரவேலு செட்டியார், கல்யாணசுந்தர முதலியார், சர்க்கரை செட்டியார், கல்யாணசுந்திர முதலியார், சர்க்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர் ஆகியவர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று நியமித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு வேண்டிய வேலை செய்யவும், ஜஸ்டிஸ் கட்சிக்குப் போட்டியாய் ஆரம்பித்த சென்னை மாகாண மகாநாட்டைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

28-ஆவது ராஜ்ய மாகாண மகாநாடு

1992-ல் திருப்பூரில் கூடிய 28-வது மாகாண மகாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப்பிரவேஷம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும், பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர் மானமானதை வெளி மகாநாட்டில் பிரேரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும், கடைசியாக பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார் பிரேரேபிக்க, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதன்பேரில் ஸ்ரீமான்கள் எஸ்.சத்தியமூர்த்தி, மதுரை ஏ.வைத்தியநாதய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆக்ஷேபித்து கூச்சல்களையும், கலகத்தையும் உண்டாக்கி எப்படியோ அத்தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல் அதன் ஜீவநாடியை எடுத்துவிட்டு ஒரு சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு மதில்மேல் பூனை போலவே நடந்து கொண்டார் என்கிற பழியும் அவருக்கு வந்தது.

மதுரை-இராமநாதபுரம் மாநாடு

1923 - ஆம் வருஷத்திய மதுரை - இராமநாதபுரம் மகாநாட்டிலும், பிராமணர் - பிராமணரல்லாதார் தகராறு ஏற்பட்டது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியார் இதில் சிக்கிக் கொண்டு வெகு பாடுபட்டார். 1923 - ஆம் வருஷத்தில் திருச்சியில் டாக்டர் ராஜன் வீட்டில் கூட்டிய மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஸ்ரீமான் பி.வரதராஜுலு நாயுடு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை அடுத்த மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய்த் தள்ளி வைத்து விட்டார்.

29-வது ராஜ்ய மாகாண மாநாடு

1923 ஆம் வருடத்தில் சேலத்தில் கூடிய 29வது தமிழ் மாகாண மகாநாட்டு விஷயாலோசனைக் கமிட்டியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அதுசமயம் இல்லாவிட்டாலும், அவருக்காக அவர் நண்பர்கள் ஸ்ரீமான்கள் தண்டபாணி பிள்ளையோ அல்லது பவானி சிங்கோ இதே திர்மானத்தைப் பிரேரேபித்த போது ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் இதுசமயம் ஒத்துழையாமையே போய்விடும்போல் இருக்கிறது. டெல்லி மகாநாடு தீர்ந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அதை நிறுத்தச் செய்து விட்டார்கள்.

30-வது ராஜ்ய மகாநாடு

பின்னர் கூடிய 1924 ஆம் வருடத்திய திருவண்ணாமலையில் கூடிய 30 - வது தமிழ் மாகாண மகாநாட்டில் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி விசேஷமாய் சொல்லப்பட்டும் இருக்கிறது.

பெல்காம் காங்கிரஸ்

பெல்காமில் கூடிய ராஜ்ய காங்கிரசின் போதும் பிராமணரல் லாதாருக்கெனத் தனியாக ஒரு மகாநாட்டைக் கூட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசியதோடு ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றியும் தீர்மானம் செய்திருக்கிறது அதேசமயம் மகாத்மாவினிடமும் இதைப்பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதோடு ஸ்ரீமான்கள் ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிச் சொல்லியும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் யோசித்து தக்கது செய்வதாய் சொல்லியும் இருக்கிறார்.

தஞ்சை தேசிய பிராமணரல்லாதார் மகாநாடு

இவ்வருடம் தஞ்சையில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் உட்பட பிரதிநிதிகளாய் இருந்த தேசிய பிராமணரல்லாதார் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி இருக்கிறது.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சரித்திரத்தைப் பற்றியும் தலைவர்கள் என்று சொல்லப்படுவோரின் தந்திரம், சூழ்ச்சி, குட்டிக்கரணம், குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புத் தன்மை முதலியவற்றைப் பற்றியும் விரிவாய் எடுத்துச் சொல்ல அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறோம். அல்லாமலும் பிராமணரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அடுத்தாற்போல் எழுதலாம் என்றிருக்கிறோம்.

- குடிஅரசு; 06.12.1925.

காஞ்சிபுரம்

பிராமணரல்லாதார் மகாநாடு

தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசிய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்பந்தமான சகல பதவிகளிலும் இந்து சமூகத்திலும் பிராமணர் - பிராமணரல்லாதார், தீண்டாதார் என் போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத் தொகையை அனுசரித்து பிரதிநிதி ஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாகாண மாநாட்டைக் கேட்டுக் கொள்வதோடு இத்தீர்மானத்தை மாகாண மகாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியு றுத்தும்படி தீர்மானிக்கிற என்னும் தீர்மானத்தை பிரேரேபித்துப் பேசியதாவது: நாம் ஒவ்வொருவரும், சுயராஜ்யம் அடைய பாடுபடுவதாய் சொல்லுகிறோம். அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம். சுயராஜ்யம் கிடைத்தால் அது பொதுமக்கள் ராஜ்யமாய் இருக்க வேண்டாமா? நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால் சுயராஜ்யம் என்பது பிராமணர் ராஜ்யம்தான் என்னும் பயம் இப்போது மக்களிடம் உண்டாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிபுரிகிற இக்காலத்திலேயே மனிதர்களைத் தெருவில் நடக்கவிடக்கூடாது. குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்க விடக்கூடாது என்னும் பலகொடுமைகள் நடைபெறுகிறபோது ராஜ்ய அதிகாரம் ஒரு வகுப்பார் கைக்கே வந்து விடுமானால் இனி என்ன கொடுமைகள் செய்ய அஞ்சுவார்கள் என்று ஜனங்கள் பயப்படுகிறார்கள். தேச விடுதலைக்கு தியாகம் தேவையாய் இருந்த காலத்தில் புறமுதுகு காண்பித்து ஓடிப்போன ஆசாமிகள் எல்லாம். ஏதோ சிலர் செய்த தியாகத்தினால் ஏற்பட்ட பலனை அனுபவிக்க வெட்கம் இல்லாமல் முன்வந்து சூழ்ச்சிகள் செய்து பலனடைவதைப் பார்க்கிறபோது இவர்களை எப்படி நம்ப முடியும்? வெட்கங்கெட் டவன் சொந்தக்காரன் என்பது போல விவஸ்தையற்ற ஒரு கூட்டத்தார் தேசத்தில் இருந்து கொண்டு, தேசத்தைப் பாழ்பண்ணிக் கொண்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். சாதுக்களான ஏழுகோடி ஜனத்தொகை கொண்ட ஒரு பெரியகூட்டம் மிருகங்களினும் கேவலமாய் நடத்தப்படுவதையும் பார்த்து வருகிறோம். இப்படி ஏன் இருக்க வேண்டும்? அந்தந்த கூட்டத்திற்கு தகுந்த அளவு, அவரவர்களுக்கு அரசியல் முதலிய உரிமைகளை ஒதுக்கிவைத்து விடுவோமேயானால் சாதுக்கள் எல்லாம் மிருகங்களாகவும், அயோக்கியர்களெல்லாம் சுவாமிகளாகவும் ஆகிவிட முடியுமா? கட்டுதிட்ட அளவில்லாததனால் கையில் பலத்தவன் காரியமென்பதுபோல், ஏமாற்ற சக்தி உள்ளவனும் செல்வாக்குள்ளவனும் மேலே வந்து விடுகிறான். இதனால் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை இல்லாமலும் ஒற்று மையில்லாமலும் இவர்களை எப்படி ஏமாற்றலாம் என்பதே ஒரு கூட்டத்தாருடைய ஜென்மக் கூறாகவும் இவர்கள் தந்திரத்தில் இருந்து எப்படி தப்புவதென்பது மற்றக் கூட்டத்தாருடைய கவலையாகவும் போகிறது. இந்த நிலைமை அரசாட்சி புரிபவர்களுக்கு வெகு அனு கூலமாய் ஏற்பட்டு போய்விடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல் அரசாங்கத்தை நடத்தி வைக்க வகுப்புக்கு வகுப்பு போட்டி போட்டுக் கொண்டு ஒற்றர்களாகவும் அடிமைகளாகவும் அரசாங்கத்தையே நாடுவதாய் விடுகிறது. இக்குணங்கள் நமது நாட்டை விட்டு அகல வேண்டுமானால் ஒரு வகுப்புக்கு மற்றொரு வகுப்பு நம்பிக்கை ஏற்படும்படி ஒருவர் பாத்தியத்தில் மற்றொருவர் பிரவேசிக்க முடியாதபடி பந்தோபஸ்து ஏற்பட்டு போகவேண்டும். அவ்வித பந்தோபஸ்துதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது. நான் பிரேரேபித்திருக்கிற தீர்மானத்தில் இந்த தத்துவம்தான் அடங்கி இருக்கிறது. இது இப்பொழுதுமாத்திரம் ஏற்பட்டதல்ல. நீண்டநாளாகவே இக்கிளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டிருந்தாலும் எப்படியெப்படியோ அதை ஒரு வகுப்பார் கட்டுப்பாடாய் சூழ்ச்சிகள் செய்து சமயத்திற்கேற்றவாறு நடந்து பாமர ஜனங்களை சுவாதினப்படுத்திக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் அடக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆகையால் நீங்கள் எல்லோரும் நன்றாக யோசித்து பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

(22.11.1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மகா நாட்டில் சொற்பொழிவு.)

- குடிஅரசு; 06.12.1925.)

 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நமது பார்ப்பனர்கள் ஒரே கூச்சலாக தேசம்போச்சுது! ஒற்றுமை குலைந்தது! வகுப்புவாதம் மிகக்கெட்டது! என்று ஒரே கூச்சலாக எல்லாப் பார்ப்பனர்களும் ஒன்றாய்க் கூப்பாடு போடுவதுடன் கூலி கொடுத்தும் நம்மவர்களைப் பிடித்தும் அப்படியே கத்தச் சொல்வதும் நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏன் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு காரணம் ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரி யார் கொஞ்ச நாளைக்கு முன்பு பொய்மான் வேட்டை என்று நவசக்திக்கு எழுதிய ஒரு வியாசத்தில் தன்னை அறியாமலே காட்டிவிட்டார். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களை இனி நீங்கள் நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டியதில்லையென்று ஒதுக்கி வைப்பதாகும். பல்லாயிர வருஷங்களாக நாட்டுக்குத் தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியினரை இவ்வளவு சுலபத்தில் (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம்) ஒதுக்கிவிட முடியாது. அறிவும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்கள் நாட்டிற்கு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதில் உள்ள மற்ற அம்சங்களைப் பற்றி இப்போது கவனிக்காவிட்டாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பனருக்குத்தான் கெடுதி என்பதாக அவரே வெளியிட்டிருக்கும்போது மற்ற பார்ப்பனர்கள் ஆக்ஷேபிப்பதற்குக் காரணம் வேண்டுமா? அது மாத்திரமல்லாமல் இப்பார்ப்பனர்கள் தங்களுக்கு கெடுதி என்று வெளிப்படையாய்ச் சொல்லிக் கொள்ள யோக்கியதையும் தைரியமும் இல்லாததால் தேசத்திற்கு கெடுதி என்று வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள்; ஜெர்மானியர்கள் சொன்னார்கள்; ஜப்பானியர்கள் சொன்னார்கள்; துருக்கியர்கள் சொன்னார்கள் என்றும் சமாதானமும், ஆதாரமும் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்லுவதானது பள்ளிக்கூடத்து குழந்தைகள், பள்ளிகூடம் போக திருட்டுத்தனம் செய்து விட்டு மறுநாள் போகும்போது உபாத்தியாயர் நேற்று ஏன் பள்ளிகூடத்திற்கு வரவில்லை என்று கேட்டால் எனக்கு நேற்று வயிற்று வலி சார் என்கிறதும், வயிற்று வலி என்றால் என்ன என்று கேட்டால் அதென்னமோ எங்கள் அம்மா சொன்னாங்க சார் என்கின்றதும் போல் இருக்கிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கெடுதி, கெடுதி என்றால் யாருக்குக் கெடுதி; பார்ப்பனருக்குக் கெடுதி. இதற்காக அவர்கள் மற்றவர்களை ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்ளும்படியும் வைதுகொள்ளும் படியும், தங்களை வந்து அடைக்கலம் புகும்படியும் செய்து வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு வைசிராய் பிரபுவும் கவர்னர் பிரபுவும் வகுப்புவாதம் கூடாது என்று சொன்னார்கள் என்றும் அதை தங்களுக்கு ஆதரவாய் வைத்துக் கொண்டும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடைசியாய் பார்க்கிறபோது மேன்மை தங்கிய வைசிராய் பிரபுக்கும் கவர்னர் பிரபுக்கும் முதலாளிகளான வெள்ளைக்காரர்கள் கான்பூரில் கூடிய எல்லா இந்தியா ஐரோப்பிய சங்கத்தின் மகாநாட்டில் இந்தியாவின் இயற்கை நிலையை உத்தேசித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு அவசியம் வழங்க வேண்டும் என்பதாகவே பேசியிருக்கிறார்கள். தவிரவும் தற்காலம் நடைபெறும் அரசியல் விவகாரங்களில் வகுப்புப் பிரச்சனைகள் இல்லாத இலாக்காவோ, ஸ்தாபனமோ. தேர்தல்களோ கண்டிப்பாய் இல்லை என்றே சொல்லலாம். தவிரவும் அரசாங்கத்தாரால் அளிக்கப்படும் உத்தியோகங்களும், நியமனப்பதவிகளும், வகுப்புப் பிரச்சினையின் பலனாகவே அழிக்கப் பட்டு வருவதும் பொதுஜனங்களாலும் கேழ்க்கப்பட்டு வருவதும் இரகசியமானதால்ல, அப்படியானால் எதற்காக இனியும் கேழ்க்க வேண்டும் என்கிற கேள்வி பிறக்கலாம். உத்தியோகங்களும் பதவிகளும் சர்க்கார் தயவாலும், தேர்தல்களில் ஸ்தானங்கள் பார்ப்பனர்களின் தயவாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்தும் பெறக் கூடியதாயிருப்பதால் மக்கள் தங்கள் தங்கள் தேச சமூக நலத்தையே கவனிக்காமல் அனேக சமயங்களில் தேசத்தையும் வகுப்பையும் சர்க்காருக்கும் பார்ப்பனருக்கும் காட்டிக் கொடுத்தும் துரோகம் செய்து ஸ்தாபனம் பெறவேண்டி யிருக்கிறது. உதாரணமாக சட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு வியாக்யானம் செய்வதிலேயே ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் போன்றவர்கள் சமயத்திற்குத் தகுந்தபடி பார்ப்பனர்களுக்கு பயந்துக் கொண்டு பேச வேண்டியதில்லை. ஸ்ரீமான் டி.எ.ராமலிங்கம் செட்டியாரும் அது போலவே வகுப்புப் பேரைச் சொன்னதினால்தான் அரசியல் உலகில் அன்னியர்களுக்கு மனிதர்களாக காணப்படுகிறார். ஸ்ரீமான் முத்தையா முதலியார் வகுப்புவாரிப் பேச்சு வெளியான பிறகுதான் அரசியல் உலகில் அப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியப்பட்டார். டாக்டர் வரத ராஜுலு நாயுடு என்பவரும் வகுப்புவாரிப் பேச்சில்லாமல் இருந்தால் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அரசியலில் கண்ணுக்குத் தென்படாத நிலையில் இருப்பார். ஸ்ரீமான் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் என்பவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொதுமக்கள் ஞாபகத்துக்கு வரக்கூடாதவராகவே இருந்திருப்பார். இம்மாதிரிச் செய்ய நமது பார்ப்பனருக்கு சக்தி உண்டு. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கை முற்றத்தான் ஸ்ரீமான்கள் பாவலர், குப்புசாமி முதலியார் குழந்தை வெங்கிடகிருஷ்ண பிள்ளை, ஷாபி முகம்மது சாயபு அமீத் கான் சாயபு முதலிய கனவான்கள் பெயரும் பிரபலமாகவும் அவர்களே பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகவும் இடம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது (தலைவர் பட்டம் ஒருவருக்கே சாஸ்வதமா?) அல்லாமலும் வகுப்புவாரி உரிமை சட்டத்தில் இல்லாததால்தான் எல்லாத் தலைவர்களும் ஒரு நாள் வகுப்புவாரி உரிமை கேட்கவும், மறு நாளைக்கு வேண்டாம் என்கவும், ஒரு நாள் காங்கிரஸ்தான் நாட்டுக்கு நல்லதென்கவும் மறுநாளைக்கு எல்லோருக்கும் உரிமை இல்லாத நாட்டில் காங்கிரஸ் கேட்டை விளைவிக்குமென்கவும், ஒரு நாள் செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருக்கும் நிலைக்காதென்கவும், மறு நாளைக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார்தான் யோக்கியமான தலைவர் என்கவும், ஒரு நாளைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கையில் ஜால்ரா கொடுக்கவும், மறு நாளைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லவும் நேரிடுகிறது. இப்படிப்பட்ட கன வான்களையே இன்னமும் தாராளமாய் ஆயிரக்கணக்காய் நமது பார்ப்பனர்கள் சிருஷ்டிக்கவும் அழிக்கவும் முடிகிறது. இந்த தைரியத்தால் தான் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை போன்றவர்களை அரசியல் மகா நாட்டிலிருந்து அடித்து துரத்தி விடலாம் என்கிற தைரியமும் அவர்களுக்கு உண்டாகிறது.

1919 வருஷக் கடைசியில் திருச்சிராப்பள்ளியில் தில்லை நாயகம் பிள்ளை படித்துறையில் பார்ப்பனப் பெண்கள் தண்ணீர் மொள்ளக்கூட யோக்கியதை இல்லாமல் நடுக்கமுற்றுக் கிடந்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும், வரதராஜுலு நாயுடுவும், கலியாணசுந்தர முதலியாரும் வீரர்கள் போலவும், தென்னாட்டுத் திலகர்கள் போலவும், சாதுக்கள் போலவும் காணப்பட்டார்கள். அவர்களை திருச்சிக்கு கூட்டிக் கொண்டு போயும் பார்ப்பனரல்லாதார் கட்சியை திட்டச்செய்தும் வையச்செய்தும் தாங்களும் தங்களது பெண்களும் தாராளமாயத் தெருவில் நடக்கும் யோக்கியதையைப் பெற்றார்கள். இப்போது இவர்களுக்குப் பதிலாய் ஸ்ரீமான்கள் பாவலர், குப்புசாமி முதலியார், குழந்தை முதலியவர்களை ஏற்பாடு செய்து கொண்டவுடன் இவர்களையே அதாவது, ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையை அடிக்கவும், வரதராஜுலு நாயுடுவை ஒழிக் கவும் கல்யாணசுந்திர முதலியாரை மிரட்டவும் துணிந்து வெற்றி பெற்றும் வருகிறார்கள். அதற்குப் பயந்து கொண்டு இவர்களும் நிமிடத்திற்கு ஒருவேடம் போடவும் துணிகிறார்கள். ஆதலால், பார்ப்பனர்களுக்கு நம்முடைய தலைவர்களை ஆக்கவும் அழிக்கவும் சக்தியில்லாமல் செய்ய வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவும் சர்க்கார் தயவும் இருந்தால்தான் தலைவராகலாம்; பதவி பெறலாம்; மந்திரியாகலாம்; உத்தியோகம் பெறலாம் என்கிற எண்ணத்தால் தேசத்தையும் சமூகத்தையும் பார்ப்பனருக்கு விட்டுக் கொடுக்காமலிருக்க வேண்டுமானாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது சட்டத்தில் ஏற்கப்பட்டு விடவேண்டுமே அல்லாமல் சர்க்கார் தயவிலும் பார்ப்பனர் தயவிலும் இருக்கக்கூடாது என்பதுதான் நமது கட்சி.

- குடிஅரசு; 26.12.1926.

 

 மந்திரி எஸ்.முத்தையா முதலியார்

வாழ்க வாழ்க! வாழ்க!

உத்தியோகத்தில்

வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம்

நமது மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்பதாக ஒரு விதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபுவாலும் மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வர வேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப் பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில்

பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து 5, பார்ப்பனர்களிலிருந்து 2, மகம்மதியர்களிலிருந்து 2, ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள் அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து 2, தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 1 ஆக 12 நபர்களை வகுப்புவாரிமுறையில் தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார்.

எனவே, மேல்படி இலாக்காவுக்கு எவ்வளவுபேர் தேவை இருந்தாலும் இந்த விகிதப்படியே நியமிக்கப்படவேண்டும் என்பதாகும். இந்தத் திட்டத்தின் விகிதங்களில்100-க்கு 3 வீதம் ஜனத் தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு16 உத்தியோகம் வீதமும், 100 -க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100க்கு 16 வீதமும், 100 க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற வகுப்பாருக்கு 100 - க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக் கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம். ஒரு சமயம் உத்தியோகத்திற்கு ஏற்ற நபர்கள் குறைவான பங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம் சொல்ல வருவார்களானால் அது அந்த வகுப்பார்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதில் அவர்களுக்கு செய்திருக்கும் கொடுமையைவிட பல மடங்கு மேல்பட்ட கொடுமையாகும். என்னவெனில், உத்தியோகப் பங்கில் மண்ணைப் போட்டதல்லாமல் அந்த வகுப்புகளை உத்தியோகத்திற்கு லாயக்கில்லை என்று அவமானப்படுத்தியதாகும். இந்தத் திட்டத்தை மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒப்புக் கொள்வதா னது பிச்சை போடாவிட்டாலும் கவலையில்லை தயவுசெய்து நாயை பிடித்துக் கட்டுங்கள் என்றபடி, ஒரு வீட்டில் பிச்சைக்கு போன ஒருவர் மீது வீட்டுக்காரர் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கச் சொன்னபோது எஜமானனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சினது போல்தான் ஆகும்.

எனவே, யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை தீர்மானித்துக் கொள்ளும் விஷயத்தில் சற்றுக் கஷ்டமோ, அதிருப்தியோ இருந்தாலும் சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொதுசொத்தென் பதையும் அதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக் கொண்டு பங்கு பிரித்துக் கொடுக்கவும் பங்கு பிரித்துக் கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக் கொள்ள இடம் கிடைத்ததே இதுசமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும். இதுபோலவே மற்ற இலாக்காக்களும் ஒரு விதி ஏற்பட்டு விடுமானால், நமது நாட்டைப் பிடித்த கேட்டில் பெரும் பாகம் தொலைய மார்க்கமேற்பட்டு விட்டதென்றே சொல்லுவோம். இந்த முறைக்கு ஒரு சமயம், அதிகப் பங்குகளுக்கு பல வழிகளிலும் முயற்சித்து கொள்ளை அடித்து அனுபவித்து வரும் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டாலும், நமது அரசாங்கத்தார் ஒப்புக்கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். நமது நாட்டில் வெள்ளைக்கார ஆட்சியானது இந்நாட்டு மக்களின் இவ்வளவு அதிருப்தியின் மீதும் கவலையற்று பொருத்தமற்ற கொடுங்கோன்மை முறையில் நடைபெற்று வருவதற்கு கார ணமே, ஒரு வகுப்பை ஒரு வகுப்பார் ஏய்த்து கையில் வலுத்தவன் காரியம் என்பது போல் வலுத்தவன் ஏகபோக உரிமை அடையும்படியான மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கும் தன்மைதான் என்றே சொல்லுவோம்.

இத்தன்மையே உள் கலகங்களுக்கும் வகுப்புச் சச்சரவுகளுக்கும் ஒற்றுமையின்மைக்கும் இடமாய் இருந்து வருகின்றது. எனவே, அவர்களுக்குள்ள இந்த சவுகரியமான தன்மையை மாற்றி விடக் கூடியதும் அடியோடு கவிழ்த்துவிடக் கூடியதுமான வகுப்பு உரிமைக் கொடுத்து விட்டால் எப்படி ஏகபோக உரிமை போய்விடுமோ அதைப்போல் ஏகபோக ஆட்சியும் போய்விடும். ஆதலால், ஏகபோக ஆட்சியை எதிர்பார்க்கும் எந்த அரசாங்கத்தாரும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சாமர்த்தியமாகவோ, தந்திரமாகவோ நமது திரு.எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விதி ஏற்படுத்திக் கொண்டதுபோல் மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் ஒரு விதி செய்து கொண்டார்களானால், அதிலும் முக்கியமாக திருவாளர்கள் கிருஷ்ணன் நாயர் அவர்களும் மகமது உஸ்மான் அவர்களும் தங்கள் தங்கள் இலாக்காவுக்கு திரு.முத்தையா முதலியாரைப் பின்பற்றி இம்மாதிரி ஒரு ஏற்பாடு செய்து வைப்பதில் கவலை எடுத்து வெற்றி பெறுவார் களானால், அதுவே அவர்களது உத்தியோக காலத்தை வெற்றி பெற நடத்தியதாகும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம். அப்படிக்கில்லாமல் 30 நாளை எண்ணிக் கொண்டிருப்பதும் அது எண்ணி முடிந்தவுடன் ரூபாய் 5333-5-4 ஐ எண்ணுவதும் ரூ.5833-5-4ஐ எண்ணி ஆனவுடன் மறுபடியும் 30 நாட்களை எண்ணுவதும் மீதி ஏதாவது கொஞ்சநஞ்ச நேரமிருக்குமானால் தங்கள் அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், சினேகிதன், அடிமை முதலியவர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதிலும் மறுபடியும் தங்களுக்கு மேல் உத்தியோகங்கள் கிடைப்பதற்கு தந்திரமும் சூழ்ச்சியும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதில் செலவழிப்பதுமான காரியத்தை செய்து கொண்டிருந்தால் அவர்களை என்னவென்றழைப்பது என்பதை பொதுஜனங்களுக்கே விட்டு விடுகிறோம்.

இந்த நிலையில் பச்சைப் பார்ப்பனப் பத்திரிகையாகிய சுதேசமித்திரன் 08.11.1928 தேதி தலையங்கத்தில் வகுப்புப்பித்தம் தலைக்கேறி விட்டதா? என்கின்ற தலைப்புக் கொடுத்து தனது ஆத்திர விஷத்தைக் கக்கியிருக்கிறான். அதாவது, எடுப்பிலேயே ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகளாக இருந்த காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை கணம் எஸ். முத்தையா முதலியார் செய்யத் துணிந்து விட்டார் என்று ஆரம்பித்து இது சட்டவிரோதமான காரியமாகும் என்று முடித்திருக்கிறான்.

மித்திரனின் ஜாதிப்புத்தி இதுதான் என்பது ஏற்கனவே எல்லோரும் அறிந்ததுதான். என்னவெனில் பார்ப்பனருக்கு இஷடமில்லாத எந்தக் காரியமானாலும் அதைப்பற்றி உலகமே முழுகிப் போய் விட்டதுபோல முதலில் கூப்பாடு போடுவார்கள். அது பலிக்கவில் லையானால் பிறகு சட்டத்தைக் கொண்டு வந்து சட்டம் பேச ஆரம்பித்து விடுவார்கள். மனுதர்ம சட்டத்தைப் போலவே வெள்ளைக்கார சட்டமும் பார்ப்பனர்கள் பிழைப்புக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதால் அவர்களுக்கு சட்டம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எப்படியும் பேசலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இந்த நினைப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் நியாயத்திற்கு விரோதமாய் இருக்கும் எந்த சட்டத்தையும் மண்டையில் அடித்து உடைத்து சுட்டுப் பொசுக்கத் தயாராயிருக்க வேண்டும்.

- குடிஅரசு ; 11.11.1928. 

Read 1068 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.