Tuesday, 29 September 2020 01:08

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 82

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா. கருமலையப்பன்

 

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்


பிள்ளையாரை உடைப்பது

ஒரு பிரச்சாரமேயாகும்

27-ஆம் தேதி பிள்ளையார் பொம்மை உடைக்கும் காரியம், மக்களுக்கு மெய்ஞ்ஞான நிலை உண்டாக்கும் ஒரு பிரச்சார காரியமேயாகும். அதாவது கணபதி முதல் கிருஷ்ணன் ஈறாக உள்ள குறிகளை நபர்களை நமக்குக் கடவுள்கள் என்று ஆரியப் பார்ப்பனர்கள் பலவித ஏமாற்றுப் பிரச்சாரம் செய்து, நம் பிறவியை இழிவாக்கி, நம் செல்வாக்கைக் கவர்ந்து இன்று நமக்கு ஆட்சியாளர்களாகி, அந்த ஆட்சியில் நம்மை எக்காலத்திற்கும் தலை எடுக்கவிடாதபடி அழுத்தல் ஆட்சி - கொடுங்கோன்மைச் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆதிக்க அட்டூழியத்தை அஸ்திவாரத்தோடு பெயர்த்து அழிக்கவே, இந்தக் கடவுள்கள் அஸ்திவாரத்தோடு பெயர்க்கப்படுகின்றன. இதை ஏற்காத முன்வர முடியாத கோழை சோம்பேறிகள், பொம்மைக் கடவுளை ஏன் உடைக்கிறீர்? நீர் ஆண்பிள்ளையாய் இருந்தால் கோவிலில் வந்து உடையும் என்று மொட்டைக் காகிதமும், போக்கிரிக் காகிதமும் எழுதுகிறார்கள். இப்போதைய நமது போராட்டம் கோவில் இடிப்புப் போராட்டமல்ல. கோவில் சாமி விக்கிரக உடைப்பு போராட்டமல்ல.

இந்தக் கணபதி முதல் கிருஷ்ணன் ஈறாக உள்ள சாமிகள் என்பவை நமது கடவுள்கள் அல்ல; நமது அடிமைத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டும் சின்னம் ஆகும்.

இதை நாம் உணர்ந்து விட்டோம் என்பதற்கு அறிகுறியாக அச்சின்னத்தை உடையுங்கள். இதில் கலவரம், எதிர்ப்பு, சர்க்கார் பிரவேசம் முதலியவை இல்லாதிருக்கும்படி பார்த்து மற்றவர்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்பி இந்த உண்மை அறியும்படியான தன்மையில் காரியம் செய்வது மூலம் பிரச்சாரம் செய்யுங்கள் என்கிறேன்.

இதைப் பயன் இல்லை - கோவிலில் போய் உடைப்பதுதான் பயன் உள்ளதாகும் என்று கருதுகிற வீரசிகாமணி தனக்கு இதில் கவலை இருந் தால் தன் சொந்தப் பொறுப்பில் கோவிலில் சென்று உடைப்பதை நான் ஆட்சேபிப்பதில்லை. ஆனால், தகவல் கொடுத்து விட்டுப் போகட்டும்.

ஒன்றும் இல்லாமல் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் சோம்பேறிகள், செய்கையை விட்டுவிட்டுப் பிறத்தியானுக்கு புத்தி சொல்ல வருவது கீழ்மைத்தனமேமாகும்.

ஆகவே, பிள்ளையார் சிலை உடைப்பது ஒரு பிரச்சாரமேயாகும்.

- விடுதலை; 15-03-1953.

முதலில்

பிள்ளையாரை உடைப்போம்!

நம்மை சூத்திரனாக தாழ்ந்த ஜாதி மகனாகப் பிறப்பித்து இன்னொருவனை மேல் ஜாதிக்காரனாக, பிராமணனாகப் பிறப்பித்து, ஒருவன் சதா காலமும் உழைத்துப் போட்டு ஒன்றுமில்லாமல் வாடவும், தற்குறியாய் இருக்கவும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக்காமல், மேல் ஜாதிக்காரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கிற இன்றைய கடவுள்கள் என்பவைகளை ஒழிக்க வேண்டும்; உடைத்துத் தள்ள வேண்டும்!

ஒவ்வொரு கடவுளாக உடைக்கும் பணியை திராவிடர்கழகம் விரைவிலே ஆரம்பிக்கப் போகிறது. அதற்காக விரைவில் ஒரு நாள் போடப்போகிறேன். சென்னை சென்றவுடன் நாள் குறித்து விடுதலையில் எழுதுவேன். திராவிடர் கழக தோழர்களே! தயாராய் இருங்கள்! கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு, விரைவில் நாள் தரப்போகிறேன். இப்போதே மண்ணுடையாரிடம் சொல்லி வைத்து அட்வான்சாக கடவுள் என்று சொல்லப்படுகிற உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ண பொம்மைகள் அதையாவது வாங்கி ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே நடுரோட்டிலே, முச்சந்தியிலே பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய்ப்போட்டு, இன்ன காரணத்துக்கு ஆக பொம்மையை உடைக்கிறேன்; என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்கு ஆக உடைக்கிறேன்; என்னை சூத்திரன், வேசி மகன் என்று கற்பித் ததற்காக உடைக்கிறேன் என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும்!

உடைப்பதற்கு முதல் கடவுளாக எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன்! தோழர்களே! தயாராய் இருங்கள்! பொம்மைகளை இப்போதிருந்தே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நாள் கொடுப்பேன்.

விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன், கோயிலுக்குள் போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம். இந்தப்படி கோயிலுக்குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. கோயிலுக்குள் ஒருவரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு இன்றைய கோயிலில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச்சொல்லி, அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம்மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு நடுரோட்டிலே போட்டு உடைப்போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரத்தை பெயர்த்துக் கொண்டு வரும் வேலையையோ, அல்லது அவைகளுக்குச் சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதுபற்றின பூரா விவரங்களையும் சென்னை சென்றவுடன் தெரிவித்து உடைப்பதற்கு தேதியும் கொடுக்கிறேன்.

இந்தப் புத்தாண்டு திட்டமாக சில காரியங்கள் செய்ய வேண்டுமென்று, விடுதலையில் கொஞ்ச நாளைக்கு முன் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே இந்தக் காரியம் துவங்கப்படுகிறது.

பலதோழர்கள் எனக்குப் பல ஊர்களிலிருந்தும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதாவது திராவிடர் கழகத்தார் கோவிலுக்குக்குள் புகுந்து கோயில் விக்கிரகங்களை சித்திரை துவக்கநாளில் உடைக்கப்போகிறார்கள் என்று கருதி பலத்த போலீசு பாதுகாப்பு வைத்திருப்பதாகவும், இந்தப்படி உடைக்கப்போகிறார்களா? என்று போலீசார், கழக நிர்வாகிகளைக் கூப்பிட்டுக் கேட்டதாகவும், இன்னும் சி.அய்.டி.கள் தொடருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். அதனால்தான் சொல்லுகிறேன், நாங்கள் கோயிலுக்குள்ளே புகுந்து அந்தக் கோவில் விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் பயப்படத் தேவையில்லை என்று.

மேலும், இந்தநாட்டில் வழிவழியாய் இருந்துவரும் சமுதாய அமைப்பை விளக்கியும், இப்படிபட்ட அமைப்பின் காரணமாக ஒரு ஜாதி வேதனைப்படவும், இன்னொரு ஜாதி சுகப்படவுமான தன்மை இருந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி, வேத சாஸ்திரங்கள் என்பவைகளின் பித்தலாட்டத்தை விளக்கியும், இந்தக் கடவுள்கள் என்பவைகளின் யோக்கியதையை விளக்கியும், நடத்தையின் ஆபாசங்களை எடுத்துக்காட்டியும், இன்றைய சமுதாய அமைப்பு மாறினால்தான் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காணமுடியுமேதவிர, பொருளாதார உரிமை, ஜனநாயகம் என்று பேசிக் கொண்டிருப்பதால் எந்தவித பலனும் ஏற்பட்டுவிடாது!

- விடுதலை; 04-05-1953.

 பிள்ளையார் சிலையுடைப்பைத் தவிர

வெறு வழி என்ன?

பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை; தயங்கவேண்டியதில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, மண்ணு பிள்ளை யாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அது போன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல! வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல! கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை! கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது. கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த் தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல! காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சி யேதான் இந்த 1953-ஆம் ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும்போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது? யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம், ஃபோர்ஜரி, பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக்களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள் கேட்க, தலைவணங்க சித்தமாக இருக்கிறேன்.

- விடுதலை; 07.05.1953.


கணபதி உருவப்பொம்மை

உடைப்பு

27.05.1953 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கணபதி உருவப் பொம்மையைத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கி விடுங்கள்!

திராவிடத் தோழர்களே! இந்தியாவில், வெள்ளைக்காரச் சக்கரவர்த்தி ஆட்சி ஒழிந்து, பார்ப்பன ஆதிக்க ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து - இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாசிரம தர்ம ஆட்சி வளர்ந்து, வளம் பெற்று வருகிறது.

வருணாசிரம தர்மத்தைப் புகுத்த - பார்ப்பன ஆதிக்க ஏகபோக ஜனநாயக ஆட்சியானது ஆட்சி மூலம் பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும், திராவிட நாட்டில் - தமிழ்நாட்டில் - தென் இந்தியாவில் - சென்னை இராஜ்யத்தில் வெள்ளைச்சக்கரவர்த்தி காலத்தில் ஒரு அளவுக்கு முன்னேற்ற மடைந்திருக்கிற திராவிடர்களை மனுக்காலச் சூத்திரர் ஆக்கத் திட்டம் கொண்டு உத்தியோகத்துறையிலும் கல்வித்துறையிலும் திட்டம் வகுத்துச் செயலில் இறங்கி விட்டது.

1. சூத்திரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சூத்திரர் வகுப்பு உரிமை அரசியல் சட்டத்தின்மூலம் உறுதியாகி அமலுக்கு வந்து விட்டது. இதிலிருந்து சூத்திரர்கள் உத்தியோக உரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.

2. சூத்திரர்களுக்கு கல்வித்துறையில் ஒரு அளவுக்கு பெரிய கிளர்ச்சிமீது சிறிய உரிமை இருந்தது; அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது.

3. கல்வித்துறையில், மேல்வகுப்பு - அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புத்தான் சூத்திரர்களுக்கு உரிமையில்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டு விட்டது என்றாலும், பொதுக்கல்வி என்பது கூடச் சரிவரப் பெறுவதற்கில்லாமல், அடிப்படைக்கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை - பரம்பரைத் தொழிலைப் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசயமுறையானது, நாட்டு நலனுக்காகவோ, கல்வி நலனுக்காகவோ, ஆட்சி நலனுக்காகவோ அல்லது மக்கள் ஒழுக்க நலனுக்காகவோ அல்லாமல் பார்ப்பன நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்குமாகவுமே ஏற்படுத்தப்பட்டு, இருந்துவருகிற வருணாசிரமத்தர்ம புதுப்பிப்புக்காகவே (Reviving-க்காகவே) இந்த ஜனநாயக ஆட்சி என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

இந்தத் திராவிடநாட்டுத் திராவிட மக்கள் இன்று தங்கள் நாட்டிலேயே, தாங்கள் 100க்கு 90க்கு மேற்பட்டு ஓட்டுரிமை பெற்றிருந்தும், ஜனநாயக ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது, சூத்திர, பஞ்சம் நிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால், இதை மாற்றி இந்து வருணாசிரம முறையை அழித்து ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும், யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாக - சித்த சுத்தியாக நம்புவதால், வருணாசிரம் முறையை அழிக்க முற்படும் முறையில் முன்னுரையாக இதைக் கூறுகிறேன்.

சமீப காலமாகவே பொதுமக்கள் உணரலாம்; என்னவெனில், ஆட்சியின் வேலையும் அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர்வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம், வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் பிரச்சாரம் செய்வதும், இந்தியப் பிரசிடெண்டு, இந்தியப் பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்யப் பிரதமர்கள் முதல் யாரும் பார்ப்பனர்களாகவே ஆகிக்கொண்டு, மேற்கண்ட வேத, சாஸ்திர, புராண முதலிய பிரச்சாரங்களும் செய்துவருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உட்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?

மற்றும் இவை மாத்திரமல்லாமல் நமது சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியல் விளம்பரம், பதவி பெற்ற உலக விளம்பரச் சீமான்கள் முதல் எச்சக்கலைச் செல்வவான்கள் வரையில் 100க்கு ஒருவருக்குக் கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நாம் காணும் போது 75 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான் 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி, மக்களைத் துறந்து சந்நியாசியாக நம் திராவிட மக்களுக்கு இந்தச் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மென்றே பாடுபட்டு வந்த - வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம், ஏன் 50 ஆயிரம் ரூபாய் கூட வரும்படி உள்ள தான என் எஸ்டேட்டைப் பாழடைய விட்டுவிட்டு , பரதேசியாய்ப் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்துவரும் நான் - இதற்கு, இந்த வருணாசிரம தர்மமுறை ஒழிப்புக்கு ஏதாவதொரு காரியம் செய்யாமல் என் உயிர்போக , எப்படி என்னால் விட்டுக் கொண்டிருக்க முடியும்?

ஆச்சாரியார் முதல் மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம், பிரகாசம், கம்யூனிஸ்டு, பொறுப்பற்ற உதிரிகள் என்பவர்கள் ஆட்சியைவிட, நமக்கு நன்றா கக் கண்டித்து, எதிர்த்துப் போர் துவக்க வசதி இருக்கக் கூடிய ஓர் ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும் உலக அனுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவது மேல் என்று கருதி ஆதரித்தேன்.

இதற்குக் காரணம், தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்து கொண்டிருக்கிற முறை பற்றிய அனுபவம் எனக்குச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அதுபோலவே ஆட்சிக்கு - கவர்மெண்டுக்குக் கவுரவம் இருக்கிற மாதிரியிலேயே பெரிதும் நடந்து வருகிறார் என்றாலும், தனது வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்து கொள்வானோ அதுபோல் - தேவர் களுக்கு இராமன் நடந்து கொண்டது போல்தான் நடந்து கொண்டிருக்கிறார்.

நம்மில் துரோகிகள், அநுமார்கள், விபீஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

ஆனதால், நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவைகள் கூறி இருப்பது போல, வருணாசிரம் வியாதியை ஒழிக்கக் கடைசிச்சிகிச்சையாக, நாளது மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி , மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் மூலதேவன் - தெய்வம் என்று கருதப்படுகிறதற்கு என்று உருவாக்கி இருக்கும் செயற்கை உருவகணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாக பொதுமக்களை, அதாவது, மனு வருணாசிரம தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களையும் - திராவிடர் கழகத் தோழர்களையும், சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

அன்று பிள்ளையார் அல்லது கணபதி உருவம் என்பதை - மண்ணால் செய்த பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள். சர்க்கார் 144 தடை உத்தரவு போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள். அவரவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! நரகாசூரனைக் கொன்றதாகப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதுபோல், உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள்!

புத்தர்பிரான் வருணாசிரம தர்மத்தையோ இந்த வருணாசிரம் தேவர்களையோ ஏற்றுக் கொண்டவர் அல்லர்; அவற்றை ஒழிப்பதே புத்த மதத்தின் உட்கருத்து; முதல் கருத்து!

இந்தத் தேவர்களை, தெய்வங்களை நாம் வணங்குவது - ஏற்பது - மிகுதியும் முட்டாள்தனமும் மானமற்ற தன்மையுமாகும்.

நமக்குக் கடவுள் என்பதெல்லாம், நம் நடத்தையில் - சத்தியம், நாணயம், தயவு, உபகாரஞ்செய்தல், துரோகம் செய்யாமலிருத்தல் ஆகியவைகளாகும்.

- விடுதலை ; 07.05.1953.

பெரியார் மாளிகைகைக்

கொளுத்த முயற்சி

நாடெங்கும் மண் பிள்ளையார் உருவ உடைப்பு - அதாவது, உருவ வழிபாடு வெறுப்புக் கிளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்குமேல் வெற்றிகரமாக நடந்தது குறித்து எனது உளமகிழ்ந்த மகிழ்ச்சி,

சில இடங்களில் சிறிய கலவரங்களும், ஓரளவுக்குப் பலாத்காரமும் நடந்ததாகப் பத்திரிகைகளில் சேதிகள் காணப்படுகின்றன. ஆனால், நமக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து இவை மிகைப் படுத்தி வெளியிடப்பட்ட செய்திகளாகத் தோன்றுகின்றன.

சில இடங்களில் எனது உருவப்படங்கள் கொளுத்தப்பட்டதாகவும், எனது உருவம் என்று சொல்லி புல் (வைக்கோல்) கொடும்பாவி கட்டிக் கொளுத்தியதாகவும் காணப்படுகின்றன. இது உண்மை யாயிருக்கலாம்; இதை வரவேற்கிறேன். கொடும்பாவி கட்டி இழுக்கும் செயலுக்கு இச்செய்கை புத்தி கற்பிக்கும் என்றே கருதுகிறேன். அன்றியும், இப்படிப்பட்ட செய்கை, உருவ வணக்கத்தை ஒழிக்கக் கருதும் உண்மையான மக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்றே கருதுகிறேன்.

மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், நான், 28-ந்தேதி பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயன்பேட்டைக்குக் கழகத் திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்குத் திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000 பேர்கள் வரைதடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால், பெரியார் வாழ்க! என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள்.

விஷயம் என்னவென்றால், என் மாளிகையைக் கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர்திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடி விட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியதுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள்.

இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி, என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படித் தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீசு வந்தவுடன் அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய்ப் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம், மற்றும் 2,3 பந்தங்களும், ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார், அந்த வாலிபனை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய்விட்டனர்.

இதன் விளைவு என்னமோ ஆகட்டும்.

புத்தருக்கும், புத்தர் ஸ்தாபனங்களுக்கும் ஏற்பட்ட நிலைமைகள் நமக்கும் ஏற்பட்டே தீரும். அது எதிர்பார்த்துத்தான் நாம் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதால், நமக்கு இதில் ஏமாற்றம் ஒன்றுமில்லை.

கொலை, இரத்தக்களரி, கொளுத்தல் இல்லாமல் - ஒரு கொள்கை, அதுவும் புரட்சிகரமான கொள்கை ஏற்படுவது என்பது என்றுமே முடியாத காரியமாகும். ஆதலால், இது கழகத்திற்கு ஒரு சோதனை; கழகத் தோழர்கள் இதைச் சமாளிக்கத் தயாராயிருக்க வேண்டும். நம்மால், எங்கும் எவ்விதச் சிறு பலாத்காரமான காரியமும் ஏற்படக் கூடாது. இது விஷயத்தில் அரசாங்கத்தின் ஆதரவையும் அனாதரவையும் ஒன்று போலவே பாவிக்க வேண்டும்.

இதற்குத் தயாராயிருக்க முடியாதவர்கள் ஒதுங்கிக் கொள்வது வரவேற்கத்தக்கதாகும். எனக்குப் பின், எப்படி நடந்து கொள்ளுவது என்பது பற்றித் துணிவுடன் சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

- விடுதலை ; 30.05.1953.

எல்லா கடவுள்களும்

ஒழிந்தே தீரும்!

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என் பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் 1000 க் கணக்கிலே, 10000-க் கணக்கிலே ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப்போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக் கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லா பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப் பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்ததால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந்திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப்போது புதிதாக இந்த 3000 பிள்ளையார்கள்போல் உற்பத்தியானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளையாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது, நம்மை சூத்திர னாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை - காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஓப்புக்கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இது வரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி - சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையார் உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியாயங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட்டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் - கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங்களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவைகளின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

- விடுதலை; 11-07-1953.

பிள்ளையார்சிலையுடைப்பு

நீதிபதி தீர்ப்பு!

மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத்துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோ தானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டி ருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக, விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளை யார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள்; நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, இவர்கள் திடீரென்று உடைக்க வில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப் பற்றி மூன்றுமாத காலமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல்படுகிறீர்கள்? என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார் உருவ வழிபாடு வேண்டாம் என்று.

நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98 சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும். கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்? அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு? அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்.

ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம். வக்கீல் தனது, ஃச்தீ ணூஞுணீணிணூt - அ முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.

புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்யரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று, புத்தர் ஜெயந்தி என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து மதிப்பளிக்கிறார்கள். புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?

புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நபிகள் தினம், என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது, அவர் கூற்றுக்கள்தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பதுதான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில்கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வரையரையில் நிறுத்து கின்றார்கள்.

நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள், எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30 வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.

புத்தர் கொள்கை பிரச்சார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை. நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20 வருடங்களாக நாம் வழ வழவென்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம். கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம்; உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை. அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற விக்ரகங்களை உடைக்கும் வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள். மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.

- விடுதலை; 29.01.1954. 

Read 2597 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.