Tuesday, 29 September 2020 01:09

குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம்

Rate this item
(3 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 83

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா. கருமலையப்பன்


குலக்கல்வி ஒழிப்புப்

போராட்டம்

ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு என்பதாக இரண்டாவது நாள் (24.01.54) மாநாடு கூட்டினோம்.

அம்மாநாட்டின் தீர்மானமாக ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே நிறை வேற்றியிருக்கிறோம். அதாவது,

ஆச்சாரியார் கல்வித் திட்டமாகிய, புதிய 3 மணிநேரக் கல்வித் திட்டத்தை மாற்றிப் பழையபடியே செய்யவேண்டும் என்று சென்னை அரசாங்க மந்திரிசபைக்கு 3 மாத வாய்தா கண்டு ஒரு வேண்டுகோள் விடுவது என்றும்; 3 மாதவாக்கில் அரசாங்கம் இதற்குத் தயவு காட்டிக் கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பெஷல் மாநாடு கூட்டி அதில் தீவிர நேரிடை எதிர்ப்பு நடவடிக்கை எடுத்து மந்திரி சபையைப் பணியச் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று.

தோழர்களே! இந்தக் கல்வித்திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்துகிறார்கள்; அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும்; எவ்வளவு தைரியம்! இந்தக் காலத்தில் இவ்வளவு தைரியமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்களே!

பண்ணாத கொடுமைகளை, அக்கிரமங்களையெல்லாம் செய்கிறார்கள். இவ்வளவும் போதாதென்று நமது மக்களின் கண்ணையும் சேர்த்துக் குத்துகிறதா? ஏன் இந்த அக்கிரமம்? என்றால், பொறு, பொறு! இந்தத் திட்டத்தை டவுனுக்கும் கொண்டு வருகிறேன் என்று சொல்லுகிறார்கள்! இந்த நாட்டில் உழைக்கிறவர்கள் யார்? நம்மவர்கள்தானே? பாடுபட்டு, கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் செய்கிறோம்; உடலால் பாடுபடுகிற வேலைகள் அத்தனையும் செய்கிறவர்கள் திராவிட மக்கள்தானே! இன்னும் சர்க்காருக்கு வரி கொடுப்பது நம் மக்கள் - கிராமத்து மக்கள்தானே கொடுக்கிறார்கள்? இப்படியிருக்கும் போது உழைக்கிற நமது மக்கள் படிக்கக்கூடாது; பாடுபடாத சோம்பேறிக் கூட்டம்தான் படிக்க வேண்டும்; உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று திட்டம் கொண்டு வருவது என்றால் என்ன நியாயம்? இதை எப்படி சகித்துக் கொண்டிருப்பது? இவர்களைச் சும்மா விட்டுவைத்திருப்பதால்தானே, இப்படி யெல்லாம் தைரியமாகச் செய்கிறார்கள்? என்ன அநியாயம்! சாஸ்திரத்திலே, புராணத்திலே, இன்னும் மத, கடவுள், ஆதாரங்கள் எல்லாவற்றிலும் அக்கிரமமான முறையில் எங்களை அடக்கி ஒழிப்பதையே இலட்சியமாகக் கொண்டு வைத்து இருப்பது போதாமல் இன்று நடப்பிலும் அந்தப்படியே செய்யப்பட்டு வருகிறதே!

எங்கள் நாட்டிலே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி எப்படியோ தந்திரமாய் அதிகாரத்தை - ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டு தகுதியில்லாதவனுக்கு எல்லாம், அயோக்கியர்களுக்கெல்லாம், அவர்கள் பார்ப்பன அடிமைகள் - கூலிகள் - பிரச்சாரத்தால் பிழைக்க வேண்டிய கூலிகள் என்பதற்காகவும், அவர்களுக்குப் பதவியும், செல்வாக்கும், பெருமையும் கொடுத்து வருவது என்றால் என்ன நியாயம்? உள்ளபடி யோக்கியன், திறமைசாலிகள், நல்லவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லையே! நாம் கேட்டால், நீ சட்டசபைக்கு வாயேன், வந்து உன் காரியத்தைச் செய்து கொள்ளேன்! என்றா சொல்லுவது?

அந்தச் சட்டசபை யோக்கியதைதான் என்ன? சென்ற தடவை நடை பெற்ற தேர்தலிலே காங்கிரசின் கதி என்னவாயிற்று? காங்கிரஸ் தோற்றுப் போய் எதிர்க் கட்சிகள்தானே மெஜாரிட்டியாய் இருந்தன? உண்மையிலேயே யோக்கியமான ஆட்சியாய் இருந்தால், ஜனநாயகத்தை உள்ளபடியே கருதுபவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மெஜாரிட்டியாய் இருந்த காங்கிரசு எதிர்ப்பாளர்களைக் கூப்பிட்டல்லவா மந்திரிசபை அமைத்திருக்க வேண்டும்? அதைவிட்டு, தேர்தலுக்கே நிற்காத ஒருவரை சட்டத்திற்கு - சட்டத் தத்துவத்திற்கு விரோதமாக - கவர்னர் நாமினேஷன் என்பதன் மூலமாகப் பதவிக்குக் கொண்டு வந்து மந்திரிசபை அமைக்கப் பட்டு விட்டது. இதுதானே சட்ட சபையின் யோக்கியதை !

இதுமட்டுமா? அந்தச் சட்டசபையில் காரியந்தான் எப்படிப் போகிறது? இந்தக் கல்வித்திட்டத்தைப் பற்றியே எடுத்துக்கொண்டாலும் - இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சட்டசபையில் மெஜாரிட்டியான உறுப்பினர்கள் தீர்மானம் செய்யவில்லையா? அந்தத்தீர்மானம் என்னவாயிற்று? வெகு சாதாரணமாக, இது வெறும் சிபாரிசுதானே தவிர, இந்த முடிவை அமல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தள்ளப்பட்டுக் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டதே!

இப்படியிருக்கும்போது, சட்டசபைக்கு நாம் போனால் அவர்களிடம் கூலி பெறுவதல்லாமல் வேறு என்ன செய்யமுடியும்? இன்னும் சொல்ல ஆசைப்படுகிறேன் - இன்றைக்கு இந்த இராஜ்யத்தின் முதல் மந்திரி யாய் இருக்கிறாரே தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவர் எந்த ஜனநாயகத்தின் மீது, எந்த ஓட்டின் மீது, எந்த சட்டசபைத் தன்மையின் மீது மந்திரியா இருக்கிறார்? காரணம் வேண்டும்! எந்தத் தொகுதியிலும் நிற்காமல், யாரிடமும் ஓட்டு வாங்காமல் முன் சொன்னது போல் யார் தயவிலோ மந்திரியாக ஆனார்.

அந்தப்படி வந்த முதல் மந்திரி, தமக்கு உதவி மந்திரிகளாகத் தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கிறாரே அந்த மற்ற மந்திரிகளின் தகுதி - திறமைதான் என்ன? அவர்களுக்குள்ளேயே - இருப்பவர்களுக்குள் இந்த ஆள்கள் தாம் மந்திரி வேலைக்குத் தகுதியானவர்களா? மந்திரி வேலைக்கு அனுபவஸ்தர்களா? அவர்களுக்கு எந்த அர்த்தத்தில் மந்திரிகளாகப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் நின்று மக்களால் கூடாது என்று துரத்தியடிக்கப்பட்ட ஒருவருக்கு மந்திரிப் பதவி! அது போலவே, தேர்தலிலே நின்றறியாத, யாருக்குமே தெரியாத இன்னும் சொல்லப்போனால் காங்கிரசிலேயே கூட இல்லாத ஒருவர் திடீரென்று மந்திரியாக ஆக்கப்பட்டிருக்கிறார்! இதுவெல்லாம் என்ன நியாயம்? இப்படிப்பட்டவர்கள்தாம் நம்பிக்கையானவர்கள் என்றால், அதன் அர்த்தம் என்ன? சுத்தமான பார்ப்பன அடிமைகளாகவும் தலையாட்டிப் பொம்மைகளாகவும் இருக்க இவர்கள் ஒப்புக்கொண்டு அடிமை முறிச் சீட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்; ஆகவே, அப்படிப்பட்டவர் கள்தாம் வேண்டும் என்பதுதானே அர்த்தம்! உள்ளபடி யோக்கியமான சர்க்கார் நடப்பாய் இருந்தால், இப்படி மக்களால் துரத்தப்பட்ட - மக்களுக்குத் தெரியாதவர்களுக்கா பதவியும், பெருமையும், ஆதிக்கமும் கொடுக்கும்? மக்கள் யாரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, யாரை மக்கள் மதிக்கிறார்களோ அவர்களுக்கல்லவா கொடுக்க வேண்டும்?

இப்படி அக்கிரமம் செய்து கொண்டு, மேலும் செய்கிற மாதிரி - திராவிட மக்கள் படிக்கக் கூடாது என்பதாகக் கல்வித்திட்டம் கொண்டு வருவது என்றால், நமக்கு ஆத்திரம் வராதா? எந்தப் பார்ப்பனர் மீதும் கோபமோ, குரோதமோ இல்லை. ஆனால், அவர்களுடைய நடத்தையும், போக்கும் நம்மைப் பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளுகிற மாதிரி - அதைவிட இந்தப் பார்ப்பனர்களை இங்கே வைத்திருக்கிற வரையில் நம்முடைய இனமக்கள் தலையெடுக்க முடியாது; ஆதலால், இந்தப் பார்ப்பனர்களைக் கண்டிப்பாக இந்த நாட்டைவிட்டுத் துரத்தித்தான் ஆக வேண்டும் என்று சொல்லத்தக்க மாதிரியான அந்த அளவுக்கு அல்லவா எண்ணம் போகிறது!

உள்ளபடி இந்தப் பார்ப்பனர்களைத் துரத்தாதபடிக்கு இந்த நாட்டில் திராவிடர்கள் எப்படி இன்னமும் சகித்துக் கொண்டிருப்பது? எனவே தான், இந்த முடிவுக்கு அதாவது, பார்ப்பானே வெளியேறு! என்ற முடிவுக்கு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. பார்ப்பனர்களின் நடத்தையும், கொடுமையும் அக்கிரமுமேதான் இதற்குக் காரணம்! குத்து வெட்டு வேண்டாம், கலவரம் வேண்டியதில்லை. அந்த நிலை ஏற்படுவதற்கு முன் பார்ப்பனர்களே பேசாமல் வெளியேறிவிடுங்கள்! என்கிறோம். போகவும் முடியாது; இங்கேயேதான் இருப்போம்; இப்படித்தான் செய்வோம்; அதை நீங்கள் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், பலாத்காரமாய்த் துரத்துவதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று பார்ப்பனர்களே சொல்லட்டுமே!

இந்தக் கல்வித்திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்பதாகச் சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம்; இதன் மூலம்தான் படிக்க முடியும்; மக்களைக் கெடுப்பதற்காக இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்று நமக்குச் சொல்லுகிறார்கள். இது எந்த விதத்தில் பொருத்தமானது, யோக்கியமானது என்று கேட்கிறேன். நாங்கள்தான், ஆயிரம் காரணங்களை விளக்கி, இன்னின்ன காரியங்களால் இத்திட்டம் கேடானது என்று சொல்லுகிறோமே! நாங்கள் சொல்லுகிற காரணங்களை மறுத்தால் சரி; அல்லது நாங்கள் சொல்லுவது இன்னவிதத்தில் தவறானது என்று சொல்லுவதானால் நியாயம், அதை விட்டுவிட்டு, என்னமோ - இவர்கள் (பார்ப்பனர்கள் தான் மக்களைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு பாடுபடுகிற மாதிரியும் - எங்களுக் கெல்லாம் அதைப் பற்றிக் கவலையே இல்லை என்றும் பேசுவது என்பது எவ்வளவு தவறானது?

நான் கேட்க ஆசைப்படுகிறேன் - இந்தத் தோழர் ஆச்சாரியார் அவர் களுக்கோ, அல்லது அவருடைய இடத்து மக்களுக்கோ இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி எதில் எங்களைவிட அதிகமான கவலை இருக்கமுடியும்? அவர்களுடைய கவலையெல்லாம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு - பாதுகாப்புக்கு என்பது தவிர, பொதுவுக்கென்று என்ன இருக்கிறது. எங்களைவிட என்ன இந்த நாட்டுக்கு அதிகமாகப் பாடு பட்டுவிட்டார்கள்? இந்தப் பார்ப்பனர்களால் நாம் இந்த 2000, 3000 ஆண்டுகளாக எதில் முன்னேற்றம், மேன்மை அடைந்திருக்கிறோம்? வெள்ளையன் சிறிது முன்னேற்றமடையச் செய்தான். இந்தப் பார்ப்பனர் அவன் இடத்திற்கு வந்து நம்மை பழையபடி கீழே தள்ளப் பார்க்கிறார்கள்; சாண் ஏறினதற்கு முழம் இறக்கிவிட்டார்கள்.

இன்றைக்கு இருக்கிற எவர்தானாகட்டும்; ஆச்சாரியாரேதான் ஆகட்டும், என்னைவிட அதிகமாக என்ன இந்த நாட்டுக்கு பாடுபட்டு விட்டார்கள்? அல்லது மற்றவர்களுடைய உழைப்புக்கு, நாணயத்திற்கு, தியாகத்திற்கு - என்னுடைய பொதுநல உழைப்பு என்பது என்ன? எவ்வளவு குறைந்தது என்ன என்று சொல்ல முடியும்? இவர்கள் கூட அல்ல; இவருக்குப் பெரியவர்கள் என்று சொல்லப்படுகின்ற நேரு, இராசேந் திரபிரசாத் போன்றவர்கள்தான் ஆகட்டும். என்ன, என்னைவிட அதிக மாகப் பாடுபட்டுவிட்டார்கள் என்று கேட்க ஆசைப்படுகிறேன்.

இந்த ஆச்சாரியாரும், பிரசாத்தும், நேருவும் 4 முறை, 5 முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள் என்றால் நான் 13 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அந்தஸ்தில், பணம் காசில் இவர்களில் யாருக்கு நான் குறைந்தவர் என்று சொல்ல முடியும்? இரண்டு தலைமுறையாக நாங்கள் பெரிய வியாபாரக் குடும்பம்; செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ள நல்ல பெரியதனக் குடும்பக்காரர்களாயிற்றே! மற்ற எந்தப் பார்ப்பனத் தலைவர்கள் என்பவர்களாகட்டும், அவர்களுடைய முன் தலை முறையை எடுத்துப்பார்த்தால் அவர்கள் புரோகிதர்கள்தானே! அவர்கள் வீதிவிளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கிறபோதே அந்தஸ் துள்ளவனாக, பெருமைக்கு உரியவனாகத்தான் நானிருந்தேன்.

இன்னும் பாடுபட்டோம் என்று சொல்லுகிற மற்றவர்கள் - நேரு, பிரசாத், ஆச்சாரியார் உள்பட அத்தனை பேரும், இன்று அந்தப் பாட்டுக்குப் பலனை அனுபவிக்கிறார்கள்; இராஜபோகம் அனுபவிக்கிறார்கள்; 10 இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சேர்க்கிறார்கள். ஆனால், நான் இந்தப் பொதுவாழ்க்கை என்பதன் பேரால் இத்தனை ஆண்டு பாட்டுக்கும் இன்றுவரை நான் ஏதாவது பலன், பதவி, பணம் அடைந்திருக்கிறேனா? சொல்ல முடியுமா? வேண்டுமானால், இந்தக் காரியத்துக்கு வந்ததனால் எனக்கு என் சொந்தத்தில் ஏராளமான பொருள் நட்டத்தையும், எதிர்ப்பையும் அனுபவித்திருக்கிறேன் என்று தான் சொல்லமுடியுமே தவிர, ஒரு செல்லாத காசு அளவாவது இலாபம் பெற்றிருப்பேனா? அப்படி இருக்கும் போது என்னைப் பார்த்து, எங்களுக்குத்தான் மக்கள் மீது கவலை, உனக்கு இல்லை என்றால், என்ன யோக்கியதை என்று தானே கேட்க வேண்டிவரும்? ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதம் இருக்கிறது என்றால் இந்த முறையிலா நடந்து கொள்வது? ஒரு முறை வேண்டாமா?

என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதி இல்லை; திறமையில்லை என்கிறார்கள்; படிக்கவும் வசதி தரமாட்டேன் என்கிறார்கள்! பெரிய படிப்பு படிக்க வசதியில்லை - விடமாட்டேன் என்கிறார்கள். கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல் - கல்வித்திட்டம் என்ற பேரால் அவனவன் சாதித் தொழிலுக்குப் போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள். அடக்கு வது என்றால் இப்படியா? எதிரி என்றால் வாழவே கூடாது என்றா நினைப்பது? இதுதான் பெரிய பண்பு என்பதா?

உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு - திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக் கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை, போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான, உயிர்நிலைப் போராட்டமாகக் கருதுகிறோம்.

இப்போதே சொல்லுகிறேன்; இந்தக் கல்வித்திட்டம் எடுக்கப் பட்டால் மட்டுமே போதாது; நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடியான விகிதாச்சாரம், பார்ப்பானுக்கு 100க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும். இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான - உரிமையான பிரச்சினைகள், இந்த இரண்டு காரியங்கள் நிறைவேறுவதற்காக இந்த இனம் கடைசிவரை உயிரைப் பணயம் வைத்துப் போராடியே தீரும்! இதில் சந்தேகமே இல்லை. உள்ளபடி சொல்லுகிறேன்; இந்தப் பார்ப்பனர்களை ஒழிக்கிறோமோ இல்லையோ - எங்களிலே 1,000 பேர் இந்த முயற்சியில், பார்ப்பனர்களை வெளியேற்றுகிற இந்த நல்ல காரியத்திலே, சாவோம்! ஓர் ஆயிரம் பேர் செத்துவிட்டால் என்ன! இந்த இனத்துக்கு நட்டம் வந்துவிடப் போகிறது? நான் பலமுறை கூறியது போல் இந்த நாட்டுத் திராவிட மக்களின் எண்ணிக்கையில் இந்தச் சாவு என்பது - தலை வாருவதில், சிக்கெடுப்பதில் கழியும் ஒரு சில முடிகள் போன்றதுதானே தவிர, பெரிய நட்டம் ஒன்றுமில்லை. ஆனால், இந்த 1,000 பேரில் பகுதி வீதம் பார்ப்பனர்கள் தீர்க்கப்படுகிறார்கள் என்ற நிலைமை ஏற்படுமானால் உள்ளபடி அந்தச் சமுதாயத்துக்கு அது எவ்வளவு கேடு, நட்டம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கட்டும்! நாங்களும் தயாராய் இருக்கிறோம் என்று மடி கட்டுவதும், கசரத் பழகுவதும் பார்ப்பானுக்கு முட்டாள்தனமாக - போங்கால மாகவே முடியும்.

உள்ளபடி ஆச்சாரியாருக்குச் சொல்ல விரும்புகிறேன்; அவர் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ, இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாய் இருக்கப் போகிறது. சும்மா நான் டூப் (Dupe) விடவில்லை. இதை நன்றாக உணர்ந்து கொள்ளட்டும். திராவிட மக்கள் இன்னும் இந்தக் கொடுமைகளையும் அக்கிரமத்தையும் நிச்சயமாகச் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப்பதும் தவறான காரியம் ; தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்றே சொல்லுவேன்.

கடைசியாகச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்; தோழர்களே! இனி அகிம்சை, அமைதி என்று பேசிக்கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. ஏன் என்றால், அனுபவத்திற்கு அவை பயன்பட வில்லை. எந்த முறையால் காரியம் கைகூடுமோ அந்த முறையைக் கையாளுவோம்; அதற்குப் பலாத்காரம், அராஜகம் என்ற பெயர் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல்!

தோழர்களே! இப்பெருத்த போராட்டத்தில் கலந்து கொள்ள எல்லா மக்களும் தயாராய்ப் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வாருங்கள்!

கூடவே சொல்லிக் கொள்கிறேன்; இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் பெருமையும் செல்வாக்கும் கிடைக்கும்; தேர்த லுக்கு நின்று மந்திரியாகலாம் - அதாவது ஜெயிலுக்குப் போய் வந்தவுடன் நாமினேஷன் பாரத்திற்கு ஓடுவது என்கின்ற எண்ணத்தின் மீது யாரும் வரவேண்டாம். எதற்குச் சொல்லுகிறேன்; இன்றைக்கும் பொது வாழ்வு என்பது 100 க்கு 90 பாகம் சுயநலத்துக்கும், சொந்த இலாபத் துக்கும், வாழ்வுக்கும் ஆகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொது வாழ்க்கை என்பதை ஓர் ஏணிப்படியாக வைத்துக் கொண்டு, தாங்கள் மேலே மேலே ஏறுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாப் பொதுநல வாழ்வுக்காரர்கள் என்பவர்களுமே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனாலேயே பொதுவாழ்வுக்கு மதிப்பு இல்லை; சுயநலம் தவிரப் பலனும் இல்லை.

நான் மிகப் பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்; பொதுவாழ்வில் எந்தவிதமான இலாபத்தையும் கருதாமல், எந்தப் பெருமையும் - சட்டசபை, ஜில்லா போர்டு என்பதாக எதையும் கருதாமல் கை நட்டப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு உள்ளதையும் விட்டு விட்டு, உள்ளபடி பொது நன்மை என்கிறதையே இலட்சியமாகக் கொண்டு யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகத்தார் என்கிற இந்த ஒரு கழகத்தாரைத் தவிர வேறு யாருமேயில்லை. மற்றவர்கள் எல்லாம் பாடுபடுவார்கள் என்றால் அந்தப் பாட்டை எலெக்ஷனுக்கும் மற்ற வாழ்வுக்கும் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள்; பலர் அதனாலேயே வயிறு வளர்க்கிறார்கள். மற்றும் எடுத்துப் பாருங்கள், ஒவ்வொருவரும் பொதுவாழ்வுக்கு வந்தபோது அவர்களுக்கிருந்த யோக்கியதை, அந்தஸ்து, செல்வம் முதலியவைகளை - அவர்கள் இன்றைக்கு இந்தப் பொதுவாழ்வின் பேரால் எல்லாத் துறையிலும் எத்தகைய பெருமையான வாழ்வு நடத்துகிறார்கள் என்பவைகளை!

எனவே தோழர்களே! இதை ஓர் ஏணியாகக் கருதி மேலே போவது என்பதாகக் கருதாமல், தங்களைத் தாங்களே ஏணியாகக் கருதிக் கொண்டு சமுதாய மக்கள் முன்னேறப் பயன்படுவதாய்ப் பாடுபட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்திற்கு வரும்போது வீட்டில் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வாருங்கள்.

(நூல்: புரட்சிக்கு அழைப்பு. 31.01.1954 இல் சென்னையில் சொற்பொழிவு)


குலக்கல்வித் திட்டத்தை

ஒழித்துக் கட்டுவோம்!

இன்றேல் செத்தொழிவோம்!

இந்த நாட்டு மக்களாகிய நாம் சூத்திரர்கள் இழிஜாதி மக்களாக இருந்து வருகிறோம். இந்த இழிவுகள் இன்று நேற்றல்ல, 2000, 3000 ஆண்டுகளாக இருக்கின்றன, இவைகளை அதாவது இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் உணரவேண்டும், ஏதோ நம்மவர்களில் சில பேர் பூணூல் போட்டுக் கொள்வதாலோ, நாமம் போட்டுக் கொள்வதாலோ, கோவில் கட்டுவதாலோ, உயர்ந்தவர்கள், பெரிய ஜாதி என்று கருதிக் கொள்ளாதீர்கள். இவைகளை எல்லாம் செய்வதால்தான் சின்ன ஜாதி என்பதை நாமாக ஒப்புக் கொள்வதாகும். நான் இவைகளையெல்லாம் சும்மா சொல்லவில்லை; புராணங்களைப் பார்த்து - சரித்திரங்களைப் பார்த்து - ஆதாரங்களைப் பார்த்துச் சொல்லுகின்றேன். திராவிடர் ஆகிய நாம் அனைவரும் ஆண்ட பரம்பரையினர்; இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்; இந்த நாட்டு வளமையெல்லாம் நம்முடையது; நம்மை இந்த நாட்டுக்கு வந்த அந்நியர்களான பார்ப்பனர்கள் இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கி வைத்துவிட்டார்கள். பார்ப்பான் நமக்கு அறிவே இல்லாமல் முட்டாள்களாக்கினான்; அதைச் சொன்னால் பாபம்; இதைச் சொன்னால் பாபம்; கடவுளையோ, பார்ப்பானையோ, கோவிலையோ குற்றம் சொன்னாலும் பாபம் என்று மிரட்டி வைத்தான். அதன்படி பணக்காரர்களும் அவர்களை வணங்கினார்கள். அதைப் பார்த்து ஏழை எளியவர்களும் பின்பற்றினார்கள்; இது நீண்ட நாட்களாக இருந்துவரும் இழிவுத்தன்மை ஆகும்.

நம் உடம்பில் ஒரு சாதாரண புண் இருந்தால், அதற்கு மருந்து போட்டால் ஆறிவிடும்; ஆனால், அழுகிப்போன, அதாவது புரையோடிப்போன புண்ணாக இருந்தால், காரமான மருந்தை வைத்துக் கட்டுகிறோம். அதற்கும் புண் ஆறவில்லை என்றால், புண் உள்ள பகுதியை வெட்டு என்று வைத்தியர் கூறுகிறபடி செய்வோம்; இல்லாவிடில் உயிருக்கு ஆபத்து என்ற நிலைமைதான் ஏற்பட்டு விடும். அதுமாதிரி நமது சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த இழிவுத் தன்மையைச் சூத்திர தன்மையை ஒழிப்பதற்கு நாங்கள் காரமான மருந்தாகச் சொல்லுகின்றோம், முடியாவிடில் வெட்டித்தான் ஆக வேண்டும் என்று கூறுகிறோம்.

இந்த 1954 ஆம் வருடத்திலும் நாம் பார்ப்பனர்களால் இழிஜாதி மக்களாய் ஆக்கிவைக்கப்பட்டிருக்கும் தன்மையை உணரவில்லை. இன்னமும் நமக்கு மானமில்லை, உணர்ச்சியில்லை என்றே சொல்ல வேண்டும். முட்டாள்தனமாகச் சோம்பேறிப் பார்ப்பான் கையில் நாம் பாடுபட்ட காசைக் கொடுத்து விட்டு சிவனே, கடவுளே என்று வீடு வந்து நிற்கின்றோம்.

எவராவது, எந்தக் கட்சிக்காரர்களாவது பொதுஜனங்களுக்குப் பாடு படுபவர்கள் என்று வருகின்றவர்களைப் பாருங்கள். காந்தியார் உட்பட எல்லோரும் எதற்காக உங்களிடையே வந்தார்கள்? பட்டம் பதவிக்குப் போக வேண்டும்; இரண்டொருவர் மந்திரியாக வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன? எவராவது இந்த நாட்டு மக்களாக இருக்கிறார்களே என்று கவலைப்பட்டவர்கள் உண்டா? பாடுபட்டவர்கள் உண்டா? எங்களைத்தவிர பாடுபட்டவர்கள் வேறுயார்? வேறெந்த நாட்டிலாவது, உலகத்திலாவது பார்ப்பான் இருக்கின்றானா? பறையன் இருக்கின்றானா? எந்த நாட்டிலாவது தலையில் பிறந்தவன் ஒரு ஜாதி; இடுப்பில் பிறந்தவன் ஒரு ஜாதி; காலில் பிறந்தவன் ஒரு ஜாதி என்று இந்த மானமற்ற இழிவான நாட்டைத்தவிர வேறு எங்காவது உண்டா?

அற்புத, அதிசய விஞ்ஞான நாடுகளில் எல்லாம் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. ஆனால் இந்த விஞ்ஞான காலத்தில் இவைகளை எடுத்துச் சொல்ல எந்த ஆளும் எந்தக் கட்சியும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் கூட இல்லை. அவர்கள் ஏதோ இரண்டு பணக்காரர்களைப் பற்றிப் பேசிவிட்டுப் போவார்களே தவிர, அவர்களும் பார்ப்பானைப் பற்றி மறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டார்கள். ஏன்? அந்தக் கட்சியும் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சி. அதுமட்டுமல்ல. இந்த நாட்டில் எந்தக் கட்சியும், அது காங்கிரசாயிருந்தாலும், கம்யூனிஸ் டாயிருந்தாலும், சோஷியலிஸ்டாய் இருந்தாலும், பிரஜா சோஷியலிஸ் டாய் இருந்தாலும், அது எல்லாம் பார்ப்பன ஆதிக்கக் கட்சிகள்தான். பார்ப்பன ஆதிக்கம் இல்லாத கட்சி, பார்ப்பன எதிர்ப்புக்கட்சி என்று ஒன்று இருக்கிறதென்றால் அது திராவிடர் கழத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.

நாங்கள் பார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்? நமக்கென்ன வேறு வேலையில்லையா? சும்மா இருக்க முடியாமலா இந்தப்படி சொல்லுகிறோம்! உலகத்தில் எங்கும் இல்லாதபடி இந்த 1954 - ஆம் வருடத்திலும் நான் மேல்ஜாதி, நீ கீழ்சாதி என்று இன்னமும் சொல்லி வருகின்ற, ஒரு இனத்தைப் பாடுபடுபவன் சூத்திரன், பாடுபடா தவன் சோம்பேறி சுகவாழ்வு பெறவுமான தன்மையில் சமுதாய அமைப்பை அமைத்துக் கொண்டு, இதுதான் கடவுள், இதுதான் மதம், இந்தப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்று வைத்துக் கொண்டு, இந்தப்படியான தன்மையிலேயே அரசியலையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு நம்மை ஏறி மிதித்துக் கொண்டிருக்கிற ஒரு இனத்தைப்பார்த்து, வெளியேறு என்று சொல்லுவதில் தவறு என்ன? இதைத்தவிர வேறு வழிதான் என்ன, திராவிட மக்கள் விடுதலை பெறுவதற்கு? மக்கள் இடையில் இந்த உணர்ச்சி ஏற்படவேண்டும்; எல்லோரும் மனிதர்கள்தான் என்கிற முறை வரத்தான் பாடுபடுகின்றோம்.

இந்தக் காரியத்தைச் சும்மா செய்துவிட முடியாது. பெரும் புரட்சி நடைபெற்றாக வேண்டும். அப்பேர்ப்பட்ட புரட்சிக்கு மக்கள் தயாராய் இருக்கவேண்டும். உள்ளபடி யோக்கியன், கெட்டவன் என்பதைத்தவிர, அவன் தாழ்ந்த ஜாதி, இழிந்த ஜாதி என்பதை இந்த நாட்டை விட்டு ஓட்டவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இன்றைய வேலையாகும்.

இந்தநாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச்சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக்காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான், இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள், என்பதாக. இப்படிப்பட்ட முட்டாள் மக்களை ஏய்த்து வரும் பார்ப்பானிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவனிடம் சாவி கொடுத்து விட்டுப்போனால் தங்களுக்கு லாபம் என்று கருதிப் பார்ப்பனரிடம் ஆட்சியை ஒப்புவித்தான். ஆனால் வெள்ளைக்காரன் கொஞ்சம் ஓரளவுக்குத் தமிழனுக்குப் புத்திவர வசதி செய்து விட்டுப் போனான்: இந்த வெள்ளைக்காரனாலும் சுயமரியாதை பிரச்சாரத்தினாலும் மக்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தது.

ராஜாக்களுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது. திருவாங்கூர் மற்ற ராஜ்யங்களில் கோவிலைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடச் சொன்னார்கள். வெள்ளைக்காரன் இங்கு வந்ததும், பார்ப்பனர் தாம் பதவிக்கு வரும் மாதிரியில் ஏற்பாடு செய்து கொண்டனர். அந்தப்படிக்கே கல்வி முறையையும் உத்தியோகத் தகுதியையும் ஏற்பாடு செய்து கொண்டனர், உதாரணமாக, ஒரு வக்கீல் வேண்டும் என்றால் 18 வருடம் ஆகும்; அதில் பார்ப்பான்தான் வக்கீலாக முடியும். காரணம் அவன் பிச்சை யெடுத்தாவது அவன் மக்களைப் படிக்க வைக்க முடியும். அதற்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும், அவன் ஜாதி உயர்வு இருக்கிறது. பல அக்கிரமங்கள் செய்து அவனே சகல உத்யோகத்தியோகங்களிலும் அமர்ந்தான்.

இவற்றையெல்லாம் மீறி இரண்டொரு நம்மவர்கள் படித்து வந்தனர். அதுவும் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத்தான் ஆச்சாரியார் அவர்கள் தமது திட்டமாகச் சொல்கிறார். அதாவது கிராம மக்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். அவன் சிரைக்கணும், வெளுக்கணும், சட்டிப்பானை செய்யணும் என்று சொல்லி விட்டார். உங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம் 3 மணிநேரம்தான்; மற்ற நேரமெல்லாம் நம் பிள்ளைகள் கழுதை மேய்க்க வேண்டும், இதற்குப் பெயர் புது ஆரம்பக் கல்வித் திட்டமாம், இப்படிப்பட்ட திட்டத்தை எதிர்ப்ப தற்குத்தான் ஈரோட்டில் மாநாடு கூட்டினோம். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். சட்டப்படி போராடவேண்டும் என்று சர்க்கார் சொல்லுகின்றது. அதாவது சட்டசபைக்குச் சென்று மந்திரி பதவியைக்கைப் பற்றி இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும் என்று சொல்லுகிறது. சட்ட சபைக்கு நாம் போக முடியுமா? இன்னும் சொல்கிறேன்; யோக்கியன் சட்டசபைக்குப் போக முடியுமா? தேர்தலில் நிற்பதற்கே முதலில் 250 ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும்; பார்லிமெண்டுக்கு 500 ரூபாய் டிபாசிட் கட்டவேண்டும்; 200, 300 போலிங் ஆஃபீஸ்களுக்கு (வாக்குச் சாவடிகளுக்கு) ஆள் வைக்கவேண்டும்; அதற்கு ஆள் ஒன்றுக்கு 1 ரூபாய் கூலி என்றாலும் 300 ரூபாய் போல் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட நம் மக்களுக்கு ஓட்டுப்போடும் தகுதியோ, அறிவோ இல்லாததால் நம் ஜனங்களுக்கு எது எப்படி ஆனாலும் சரி என்று 4 அணா கொடுத்தால்போதும் என்று தம் ஓட்டைப் போட்டு விடும் நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படி இருக்கும்போது யார் சட்டசபைக்கு வரமுடியும்? அப்படியும் போனால்தான் அங்கேபோய் என்ன செய்ய முடியும்? எடுத்துக் கொள்ளுங்களேன், சட்டசபையில் ஆச்சாரியாரின் கல்வித்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேறியது. ஆனால் ஆச்சாரியார் அவர்கள் இது ஒரு சிபாரிசு என்று கூறிவிட்டார். இப்படி இருக்கும்போது சட்டசபைக்குப் போய்த்தான் என்ன செய்ய முடியும்? அதோடு இந்த ஜனநாயகம், சட்டசபை என்பது எல்லாம் தேர்தலில் நிற்காதவர்களும், தேர்தலில் தோற்றவர்கள் எல்லாரும் மந்திரிகளாக வரக்கூடிய கேவலமான தன்மையில் இருக்கிறது. இந்த நிலைமை இருக்கும்போது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பெரிய புரட்சியின் மூலம்தானே காரியம் சித்தியாகும்? நம்மில் 100, 1000 பேர் பலியாக வேண்டி வந்தாலும் தயார் என்று கச்சைக் கட்டிக்கொண்டு முன் நின்றால் தானே முடியும்!

ஆந்திரா எப்படிப் பிரிந்தது? அங்கே போராடத் தயாராகி விட்டார்கள், எதற்கும். நேரு தாம் இருக்கின்ற வரை ஆந்திராவைப் பிரிக்கமுடியாது என்றார். அதற்கு ஆக ஆந்திர மக்கள் சும்மா இருக்கவில்லை. ரயிலை நிறுத்தினார்கள்; அதன் டிரைவரை உதைத்தார்கள்; ஒரு மாதம் வரை சரியான நேரத்துக்கு வண்டிபோக முடியவில்லை. பல சட்டத்துக்குப் புறம்பான செயல்களையெல்லாம் துணிந்து செய்து நஷ்டத்தை உண்டாக்கினார்கள். உடனே ஆந்திராவைச் சட்புட்டென்று பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.

மற்றும் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரி காரியங்களைச் செய்து, அதாவது தாங்கள் ஆகஸ்டு கிளர்ச்சி செய்துதான் சுதந்திரம் பெற்றதாகக் கூறிவருகின்றனர், இதனால் தான் நானும் 3 மாத நோட்டீஸ் கொடுத்து சுட்டால் சுடட்டும் என்று போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றேன். எப்படியும் இந்தக் கல்வித்திட்டத்தை ஒழித்துத் தீர வேண்டும். வாத்தியார்கள் எதிர்த்தார்கள்; அதோடு போனமாதம் பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநாடு நடந்தது, 400 பேர் கூடினார்கள். இதில் ஆச்சாரியார் அவர்கள் தந்திரமாக ஒரு ஆளை அனுப்பி அதில் பேசி ஏமாற்றப் பார்த்தார். ஆனால் அங்கே அந்த ஆளை வெளியேற்றச் சொல்லிக் கலவரம் நடந்து அந்த ஆள் வெளியேறும்படியாகி விட்டது. மற்றும் ஜில்லா போர்டுகளும், முனிசிபாலிட் டிகளும் இதை எதிர்த்து தீர்மானம் போட்டன. இவ்வளவுக்குப் பிறகும் ஆச்சாரியார் அவர்களும், நகரங்களுக்கும் இக்கல்வித் திட்டத்தை விஸ்தரிக்கின்றேன் என்று கூறுகிறார் என்றால், நம்மை மடையர்கள் என்று கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆகவேதான், கிளர்ச்சிக்குப் படை திரட்டுகின்றோம். இரத்தம் சிந்தத் தயாராயிருக்கின்றோம். இப்போது ஆள்கிறவர்கள் பார்ப்பனர்; உதைப்பார்கள்; சுடுவார்கள்; எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சட்டத்தால் செய்ய வேண்டியதெல்லாம் முடிந்து போய்விட்டன. ஆகவே, அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களைச் சட்டத்தை மீறிக் காரியங்களைச் செய்து தான் நாம் போராட வேண்டியுள்ளது. அந்த நிலைமைக்குச் சர்க்காரே நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒன்று அந்தப் படிப்புத் திட்டத்தை ஒழித்துக்கட்டு, அல்லது அங்கேயே சாவு என்று சொல்லி உங்கள் இளைஞர்களை அனுப்பவேண்டும். தாய்மார்களும் களத்தில் குதிக்க வேண்டும்; இந்தப் போராட்டத்தில் இரண்டி லொன்று பார்த்துவிட வேண்டியதுதான்.

- விடுதலை; 26.02.1954.

சாதி ஒழிப்பும்

ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பும்

ஒன்றே

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித் திட்டம், ஆகையால்தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய வேண்டுமாயின் சாதிக் குறை பாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது. நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல்லாரும் சூத்திரர்கள்தானே, ராஜாக்கள் எல்லாரும் சூத்திரர்கள்தானே? பணம் மட்டும் சேர்ந்து விட்டால் சூத்திரப் பட்டம் போய் விடுமா?

மனித சமுதாயத்தின் மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை ஒழிப் பதற்காகவும், மற்ற நாட்டு மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடு படுவதாகும். சமுதாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம் மக்களுக்குள்ள இழிவுகளைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத் துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே, திராவிட மக்களுக்கு இழைத்த கேடுகளை ஒழிக்கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி.பி.மல்லசேகரா) மாநாட்டைத் திறந்து வைத்தவர். எல்லா இந்திய தாழ்த்தப்பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம்பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப்போது இங்கு ஷெட்யூல் வகுப்பு ஸ்தாபன சார்பாக மாலையிட்ட நண்பர்.

நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங்களை ஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு மாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும் வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழிய வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத் தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கிவிடும்.

இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திரமான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும்.

இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம முறைப்படிதான். இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன் என்றே கூப்பிடுகிறார்கள். சில பார்ப்பன அடிமைகள் திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள்.

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல்லாரும் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால் நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப் படி முஸ்லிம் என்கிறான்.

பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள் மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது. இது தான் ரகசியம், வேறு ஒன்றுமில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்க வேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை.

வருணாசிரம முறைப்படி நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100 - க்கு 10 பேர் படித்து விட்டோம். அந்தப் படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை சாமி என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் சாமி என்கிறார்கள். அதுவும் மாறிக்கொண்டு வருகிறது.

திராவிடர்களாகிய நாம் இங்குக் குடிபுகுந்த அந்நியனை, பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று என்று சொல்கிறோம். சர்க்காரால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேருவும் சென்னைப் பிரதமர் ஆச்சாரியாரும், பார்ப்பனரே வெளியேறு என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகிவிடுமே என்று பயப்படுகிறார்கள்.

ஏன்? பார்ப்பானே வெளியேறு என்பதற்கும் வெள்ளையனே வெளியேறு என்பதற்கும் சிறிதும் வித்தியாசமில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக் காரனாம், உழைத்து உண்பவர்களாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல் ஜாதிக்காரனே வெளியேறு என்கிறோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்தி வந்தோம்.

வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித்தனமாக ரயிலைக் கவிழ்த்துத் தண்டவாளத்தைப் பிடுங்கினதாலே வெள்ளையன் இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதிகாரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால்தான் இவனுங்களுக்குப் பார்ப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள் என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான்.

அதுவும் வெள்ளைக்காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி தம் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்ததால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்து கொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான். பிரசிடெண்ட் (குடியரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம்.

ஒரு சாதாரண புரோகித குடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்காரனிடம் சாவி வாங்கியதும் சம்பளம் மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு 500- க்கு மேல் சம்பளம் வாங்க மாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா.

இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளையடிக்கிறார்கள்; சுகவாழ்வு வாழ்கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள்ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக் காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கினார்கள். நாலணா தந்தியைப் பனிரெண்டணா ஆக்கினார்கள்.

மைலுக்கு 3 காசு; 4 காசு ரயில் சார்ஜ் (கட்டணம்) 5 -6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில் செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில்தான் செய்ய வேண்டும். 1/2 நாள் தான் படிக்கவேண்டுமாம்.

இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கி விட்டார்கள். ஆகையால்தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால்தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம்.

உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழு மைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு ஆள், ஒரு கழகம் இருக்கிறதென்றால் திராவிடர் கழகமும் நாங்களும்தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர சாதி ஒழிய வேண்டும் என்று சொல் பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானாகட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தியார் சாதியைக் காப்பாற்ற வேண்டும்; அது நீடித்திருக்க வேண்டும்; என் மூச்சே வருணாசிரமம் காப்பாற்றப்படத்தான் என்றுதானே சொன்னார்.

தீண்டாமை ஒரு வழக்கம்; தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்துவிட்டதால் சக்கிலி வேறாய் விட்டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய்விட்டதா?

டெல்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ஜாதி ஒழிக என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத்தவிர, வேறு எங்காவது ஜாதி இருக்கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்தானே, ஜாதி ஒழிக்கவேண்டுமென்று அவர்கூட ஒருவரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர்தான் அரசமைப்புச் சட்ட கர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார்களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் சலுகைகொடு என்றுதான் கேட்டார்.

உடனே பார்ப்பான் சலுகை கொடுத்துவிட்டான். அவர்களின் விகிதா சாரப்படி 100- க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன் என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக் குட்டிகளைக் கொண்டு வந்து பஞ்சமர்கிட்டே உங்கள் விகிதாசாரம் 100- க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கேபோவான்? அதுபோல் அவர்களில் 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான் தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப்பட்டவனுக்கு, பாக்கியெல்லாம் அவன் சாக்கில் பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய் இருக்கிறோம்.

எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதை பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்கமுடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்பதாகப் பித்தலாட்டம் செய்கிறான். தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப்பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! அராசங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்து தான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளாதிருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத்கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத்கருக்கு உயிர் மேல் கவலையில்லையென்றாலும், கொன்று விடு வதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன் இருந்தாலும் ஒன்றிரண்டு நன்மைகளாவது செய்ய முடியுமே என்ற எண்ணத்தில் அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டார் என்பதாக. அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார். மறுத்ததன் காரணமாக அவரைக் கொல்ல முயற்சி செய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.

பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே சூத்திரப்பட்டம் போய் விடுகிறதா? கவர்னராக இருந்த சர்.கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன் இவர்களெல்லாரும் சூத்திரர்கள்தானே? சாதிஒழிய சூத்திரப்பட்டம் போக நாங்கள்தானே பாடுபடுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களினால், புராணத்தினால், கடவுளால் ஏற்பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான் இவைகளை ஒழித் தால்தான் சாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லுகிறேன். இவர்கள் கடவுள், மதத்தை ஒழித்தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய சிநேகிதர்கள்தான் சிவராஜும் அவரது மனைவியாரும்; அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமி படம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிரா விட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள்தான் அவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு ஜல்லி போட் டால்தான் இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.

தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு சூத்திரன் என்ற பட்டத்தைத் தோளில் போட்டுக்கொண்டு நம் மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள், மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழியமுடியும்.

- விடுதலை; 27.02.1954.

படையினருக்குப்

பாராட்டுகள்

இந்தக்கூட்டம், ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்புப்படையை வரவேற்கும் கூட்டமாகும். உங்களுக்குத் தெரியும் நண்பர் ஆச்சாரியார் பதவிக்கு வந்ததும் நான் அவரைப் பாராட்டினேன்; மற்றவர்களைவிட ஆச்சாரியார் எவ்வளவோ மேல் என்று பேசினேன். கம்யூனிஸ்டுக்காரர்களைவிட, பிரகாசத்தைவிட ஆச்சாரியார் பரவாயில்லை என்று துணிந்து எழுதினேன்; அவரை ஆதரித்தேன். நாம் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் போவதில்லை; மந்திரியாக முயல்வதில்லை; தேர்தலில் நிற்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதெல்லாம் இல்லாமல் உன்னால் என்ன முடியும்? என்றார்கள். அதற்குப் பதில் சொன்னேன்; யார் வந்தாலும் நமக்கான காரியங்களைச் செய்யும்படி பார்த்துக் கொண்டாலே போதும் என்று. ஆச்சாரியார் இந்தக் கல்வித் திட்டம் குறித்து மிகவும் பிடிவாதமாக இருந்தார். அதனால்தான் நானும் மிக உண்மையாகக் கண்டித்தேன். நானே வருந்தும்படியாக அவர் பதவியை விட்டுப் போகும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்றைக்கு காமராசர் இந்நாட்டின் முதல மைச்சராக வந்துள்ளார். இனிப் பலரும் சொல்லப் போகின்றார்கள், காமராசரும் பெரியாரும் ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துப் போசுகிறார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைய தினம் இக்கல்வித்திட்டம் எடு படும்படியான செய்தி வந்தது குறித்து நாம் பெருமைப்பட வேண்டியது தான். நாடு முழுவதும் பாராட்டுக் கூட்டம் போடவேண்டியுள்ளது. பெரும்பாலும் அந்தப்புகழ் எல்லாம் காமராசருக்கே போகும்.

நாமும் இந்தத் திட்டத்தை எதிர்த்தோம்; மற்ற எல்லாக் கட்சிக்காரர்களும் இத்திட்டத்தை எதிர்த்தார்கள்; இது குறித்து காமராசரும் எதிர்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லிய அதே காமராசர், தான் பதவிக்கு வந்ததும் அதை எடுக்காமல் இருப்பாரானால் என்ன ஆகியிருக்கும்? அவரும் இந்த சுப்பிரமணியம், பக்தவத்சலம் முதலியவர்களுடன் சேர்ந்து கொண்டு கல்வித்திட்டத்தை ஆதரித்துக் கொண்டு இருந்தால், என்ன ஆகியிருக்குமோ என்னால் சொல்லவே முடியாது. நமக்கு மகிழ்ச்சிக்குக் காரணம், திராவிடன் முதல் மந்திரியாக வந்ததாகும். காமராசர் வந்ததும் ஆச்சாரியாரின் சீடர்களுக்கு எப்படியோ இருக்கும். அதோடு, இந்த நாட்டில் இருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும், பார்ப்பனக் கூலிகளுக்கும் எப்படியோ இருக்கும். அவர்களுக்கெல்லாம் இந்த மந்திரிசபையே பிடிக்காது. ஆகவே, நாம் காமராசர் மந்திரி சபையை ஆதரித்துத்தான் தீர வேண்டும். எப்போதுமே ஆதரிக்க வேண்டியது தானா என்பது பற்றி இப்போது ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை. 1924 - முதல் 1954 - வரை ஒரு தமிழன்கூட முதன்மந்திரியாக வர முடியவில்லை. சுப்பராயன், சுப்பராயலு ரெட்டியார், பிரகாசம், ஓமாந்தூர் ரெட்டியார், ராசகோபாலாச்சாரியார் இந்த மாதிரியாக பார்ப்பானும், ஆந்திராக் காரனும்தான் இருந்திருக்கின்றார்கள். அப்படிக்கில்லாமல், முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் முதலமைச்சராக வந்திருக்கின்றார். இவர் மந்திரிசபையும் 15 நாளில் தீர்ந்து போகாத மாதிரி இவர் வாய்தா பூராவும் இருக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இரண்டாவது, முதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரிசபை இது. இந்தக்காரியம் மிகமிகப் பெருமையானது. இன்றைக்கே அக்கிரகாரம் பேசுகிறது, நம்முடைய ஆச்சாரியார் எங்கே? இந்தச் சாதாரண காமராசர் எங்கே? என்று. நான் சொல்லுகிறேன் போய்ப்பாரேன்; இப்போது எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று! காமராசர் இந்தத் திட்டத்தை எடுத்தால் அவரை எதிர்ப்போம் என்று சில காங்கிரஸ்காரர்கள் பேசினார்களாம்! நாளைக்கு அவர்கள் யாரை எதிர்க்கின்றார்களோ பார்க்கலாம். சட்டசபையில் இப்போதுள்ள திராவிடப் பார்லிமென்டரி கட்சியில் 23 பேர் இருக்கின்றார்கள். நாளைக்கு அவர்கள்தாம் எதிர்க் கட்சியாய் இயங்கப் போகின்றார்கள். காமராசர் ஆட்சி இந்தக் கம்யூனிஸ்டுகளுக்குத்தான் பெரிய மண்டைக் குடைச்சல்! இந்தக் கம்யூனிஸ்டுகள் ஆச்சாரியாரிடம் நல்ல முறையில் பல பலன்களை அடைந்து வந்தார்கள். இந்தக் கம்யூனிஸ்டுகள் இந்த மந்திரிசபை மாற்றத்தைப் பற்றிச் சொன்னார்களாம், குடுமி போய், கிராப் வந்திருக்கிறது என்று. இதனால் என்ன லாபம்! என்றார்களாம். இவர்களும்தானே இந்தக் கல்வித்திட்டத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டார்கள்? இப்போது, குடுமி போய் கிராப் வந்தால் என்ன செய்யும் என்று தெரிகிறதா? ஆச்சாரியார் இப்போது அடிக்கடி எங்களை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள் வதன் அர்த்தம் அவர் இந்து மகாசபைக்கு அனுகூலமாக இருக்கிறார்; அது வடநாட்டில் தற்போது சற்று வளர்ந்து வருகின்றது. அதன் மூலம் ஏதாவது பதவி அடைய முயற்சிக்கிறார். இந்த நாட்டில் இருக்கும் பத்திரிகைக்காரர்களுக்குப் பெரிய வேதனை. எப்படி இந்தப் பார்ப்பான் இல்லாத மந்திரி சபையைக் கவிழ்ப்பது என்றுதான் யோசித்து வருகிறார்கள். தினமணி இன்னும் ஒரு மாதத்தில் எதிர்க்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்க்கும். எல்லாவற்றிற்கும் பிறகு, மெதுவாக இந்து எதிர்க்கும் என்பதாகக் கூறி படையினருக்குப் பாராட்டுகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

- விடுதலை; 15.05.1954. 

Read 1404 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.