Tuesday, 29 September 2020 01:10

இந்திய தேசியக்கொடி எரிப்புப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 84

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா. கருமலையப்பன்

 

இந்திய தேசியக்கொடி எரிப்புப் போராட்டம்

இந்திய அரசாங்கத் தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகப் பலர் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, ஒழித்துக்கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட, கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.

எங்களுக்கு, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டாருக்கு, இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு, தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில், இந்திய யூனியனில் இருக்க விரும்பவில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம்; எங்கள் நாட்டைத் தனி, பூரணசுயேச்சை நாடாக ஆட்சி செய்ய எங்களுக்குச் சக்தி உண்டு; சகலவிதத்திலும் எல்லா விதமான வசதியும் உண்டு. மத்தியக் கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

இந்திய யூனியன் அரசியல் சட்டத்தில், சட்டப்படியான கிளர்ச்சியின் மூலம் பிரிந்து கொள்ளப் போதியபடி சட்டவசதி இல்லை; எங்களை, தமிழர்களைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும்படியானதும், தமிழ்நாட்டு மக்களில் 100க்கு 3 வீத ஜனத்தொகை உள்ளதுமான பார்ப்பனர்கள் மத, சமுதாயத் துறையில் எங்களிடம் பெற்ற ஆதிக்கத்தை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பதாலும், தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தில் பெரும்பங்கைக் கொண்டவர்களாக இருப்பதாலும் சட்ட சம்பந்தமான வழிகளையெல்லாம் அடைத்துவிட்டார்கள். ஆனதால், நாங்கள் சட்ட சம்பந்தமான வழி மாத்திரமல்லாமல் வேறு எந்த விதமான வழி மூலமானாலும் பிரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நாங்கள் பிரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், எங்களுக்கு வட நாட்டாரால் நடத்தப்படும் இந்திய அரசாங்கம் ஏற்பட்ட பிறகு தோன்றிய எண்ணமல்ல. வெள்ளையரால் நடத்தப்பட்ட இந்திய அரசாங்கம், சர்வ வல்லமையுடன் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த காலமான 1937-38 இலேயே தோன்றி திராவிட நாடு கிளர்ச்சியை நடத்தி வந்திருக்கிறோம்.

வெள்ளையர் இந்த நாட்டைவிட்டுப் போகும் போது நாங்கள் ஸ்தாபன பூர்வமாகச் சட்டமுறைப்படிக் கிளர்ச்சி செய்திருப்பதோடு, டெல்லிக்குத்தூது சென்று, வெள்ளையர்களிடம் எங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் வடவர்கள் வெள்ளையர்களுக்கு இலஞ்சத்தைக் கொடுத்து எங்கள் விருப் பத்தை இலட்சியம் செய்யாமல் செய்து விட்டார்கள். மற்றும் வடவர் ஆட்சி ஏற்பட்டு, அவர்கள் சுதந்திர தினம் கொண்டாடும்போதே அந்த நாளை நாங்கள் துக்க நாளாகக் கொண்டாடி இருக்கிறோம்.

ஆண்டுதோறும் நாங்கள் பிரிவினை நாளைக் கொண்டாடி வருகிறோம். மற்றும் அரசியல் சட்டம் - எங்களை நிரந்தர அடிமைப்படுத்தும் வடவரின் சர்வாதிகாரச் சட்டம் என்றும், அதைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்றும், எங்கள் மாநாடுகளில் பல தடவை பேசியும், பத்திரி கைகளில் எழுதியும் வந்திருக்கிறோம்.

எங்களுடைய இந்த உணர்ச்சியையே அடியோடு அழிக்கும்படியான தன்மையில், அந்நிய மொழியாகிய இந்தி மொழியை எங்கள் நாட்டிற்குள் அரசியலின் பேரால் பலாத்காரமாய்ப் புகுத்தி, மொழி, கலாச்சாரம், கல்வி முதலிய துறைகளிலும், அரசியலில் ஆட்சிமொழி என்கின்ற தன்மையிலும் புகுத்தி இருப்பதோடு, இந்தி படித்துப் பாஸ் செய்தவனுக்குத்தான் உத்தியோகம் என்கின்ற அளவுக்கு வடவராட்சி துணிந்துவிட்டதால், இந்திய ஆட்சி தமிழ்நாட்டில் கூடாதென்கிற எண்ணம் எங்களுக்கு வலுப்பட்டுவிட்டது?

இந்த வலுப்பட்ட எண்ணம் பெற்ற பின்னர்தான், நாங்கள் 17 ஆம் தேதி திருச்சியில் செய்த, வடவராட்சி சின்னமாகிய தேசியக்கொடி என்பதைக் கொளுத்த வேண்டும் என்ற தீர்மானமாகும். அந்தத் தேசியக் கொடி என்பது எங்களுக்கு, எங்கள் தேசத் தேசியக் கொடியல்ல.

இந்திய தேசம் என்பதை எங்களுக்குச் சம்பந்தப்பட்ட தேசமாக நாங்கள் வெகுநாளாகக் கொண்டிருக்கவே இல்லை. நாட்டு இலட்சணப்படி, எங்கள் நாடு எந்த விதத்திலும் இந்திய நாடு என்பதுடன் இருந்ததாக இருக்க நியாயமே இல்லை. சரித்திர சம்பந்தப்பட்டவரையில், வெள்ளையர் காலத்தைத் தவிர, வேறு எந்தக் காலத்திலும் எங்கள் நாடு தனித்த சுதந்திர நாடாகவே இருந்து வந்திருக்கிறது.

மத சம்பந்தமான புராண, இதிகாசங்கள் சம்பந்தப்பட்டவரை தமிழ்நாடு (திராவிட நாடு) தவிர்த்த இந்திய நாடு திராவிட நாட்டிற்கு எதிரி நாடாகவும், அந்த இந்திய மக்கள் (ஆரியவர்த்தம் - ஆரிய மக்கள் ) திராவிட மக்களுக்கு எதிரிகளாகவும் இருந்து வந்ததாகவே அறியக் கிடக்கின்றது.

ஆகவே, இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவது, இந்தியக் கூட்டாட்சி என்பதில் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்கச் சம்மதப்படவில்லை' என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதேயாகும்.

- விடுதலை ; 20.07.1955.

இந்திக் கிளர்ச்சி

கொடி கொளுத்திக் காட்டுவது என்று திராவிடர் கழகம் தீர்மானித்த பிறகு, அரசியல் உலகில் ஒரு பரபரப்பு - சென்சேசன்' ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிப் பெரிதும் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கிறவர்களே அதிகம் பேசுகிறார்கள்.

இதில் சிலருக்குக் கொடியைப் பற்றிக் கவலையில்லாமல் வேறு விசயமாய் மகிழ்ச்சியும் கவலையும் ஏற்பட்டிருக்கலாம். அதாவது, காமராசரின் எதிரிகளுக்கு ஒரு மகிழ்ச்சி என்னவெனில், காமராசருக்குப் பொதுமக்களிடம் பெரிய ஆதரவிருந்து வருகிறது. இப்போது இராமசாமி கொடி கொளுத்தப்போவதால் அவன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துத்தான் தீரவேண்டும் ; விசயம் இந்திப் பிரச்சினையானதால் இந்த இந்தி எதிர்ப்பு, நாட்டு மக்கள் எல்லோரும் வரவேற்கும்படியான காரியமாகும்; இப்போது இராமசாமி மீது எடுக்கும் நடவடிக்கையில் காமராசர் பொதுமக்கள் ஆதரவை இழந்து விடுவார்; செல்லுமிடங்களில் கறுப்புக்கொடி (1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் இராஜாஜிக்குப் பிடித்ததுபோல்) பிடிக்கும்படியான நிலைமை வந்துவிடலாம். ஆனதால், இந்தக்கொடி கொளுத்துவது காமராசரைத் திண்டாட்டத்தில் கொண்டுவந்து விட்டது. இது ஒரு நல்ல சம்பவம் என்று காமராசரின் எதிரிகள் மகிழ்ச்சிக் கூத்தடிப்பார்கள்.

அதுபோலவே காமராசரின் நண்பர்கள், இது ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறதே; இது எப்படி முடியுமோ? என்று கவலைப்படுவார்கள். இதுதான் பரபரப்புக்கு முக்கியமான காரணம். மற்றபடி, இந்தக் கொடி கொளுத்துவது ஒரு சாதாரண விசயம். பிள்ளையார் உடைக்கப்பட்டதைவிட இது ஒன்றும் முக்கியமான காரியமல்ல. அது கடவுள் சங்கதி; இது ஆட்சி சங்கதி. அது ஒரு மொத்தைக் களிமண்ணைப் பொறுத்தது - இது ஒரு முழம் அல்லது ஒரு சாண் துணியைப் பொறுத்தது. இந்த இரண்டு காரியமும் யாரிடமும் எவ்வித பலாத்காரம் கொண்டதுமல்ல - நாசத்தைக் கொண்டதுமல்ல.

ஆனால், வெறும் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அந்தக் களிமண் பொம்மை எப்படி கடவுள் சின்னமோ, அப்படியே இந்த மேற்படி அளவு துண்டுத் துணி ஆட்சி சின்னம் என்பதாகச் சொல்லிக் கொள்ளப்படுவதாகுமே ஒழிய, அறிவாளிகள் பிரமாதமாகக் கருதிக் கொள்ளப்பட இடமில்லை. கடவுள் சின்னம் என்பது ஒழுக்கத்தையும் எல்லா மக்களுடைய உள்ளத் திருப்தியையும் பொறுத்தது; ஆட்சிச் சின்னம் என்பது நீதியையும் எல்லா மக்களுடைய திருப்தியையும் பொறுத்தது. அது மத சாஸ்திரத்தைப் பொறுத்தது; இது அரசியல் சட்டத்தைப் பொறுத்தது. இவற்றில் ஒழுக்கம், நேர்மை இல்லாமல் சாஸ்திரத்தையும் சட்டத்தையும் கருதிக்கொண்டு இந்த இரண்டையும் காப்பாற்றப் புறப்படுவது கைபலமே அல்லாமல் நியாய பலத்தைப் பொறுத்தததல்ல.

ஆனால், பொதுமக்கள் இந்த இடத்தில் ஒரு விசயத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். அதாவது, உடைப்பவர்களும், கொளுத்துபவர்களும் என்ன எண்ணத்தைக் கொண்டு அப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பற்றியதாகும்.

பக்தர்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தவிதமான தொல்லையையும், அவர்களது காரியங்களுக்கு எந்தவிதமான தடையையும், ஏற்படுத்துவதற்காக அல்லவேயல்ல. மற்றெதற்கு என்றால், பிள்ளையார் என்பதையும் நாங்கள் எங்கள் கடவுளாகக் கருதவில்லை. அதுபோலவே, இந்திய யூனியன் ஆட்சி என்பதை நாங்கள் எங்கள் சர்க்காராக, ஆட்சியாகக் கருதவில்லை. இவை எங்களுக்கு இஷ்டமில்லாத காரியங்கள்; அதன் காரணங்கள் இன்ன இன்னவைகள் என்று விளக்கி வந்திருக்கிறோம்; விளக்கி வருகிறோம். அந்த எண்ணங்களைப் படிப்படியாகத் தீவிரப்படுத்திக் காட்டுவதற்காக இப்படிச் செய்கிறோம். இதனால் எங்களுக்கு வேறு எவ்விதக் கெட்ட எண்ணமுமில்லை.

இந்திய யூனியன் ஆட்சியை ஒழித்து, கவிழ்த்து எங்கள் ஆட்சியை இந்தியாமீது சுமத்தவோ, இந்தியாவை நாங்கள் எங்களுக்கு அடிமைப் படுத்திக் கொள்ளவோ அல்ல; அல்லது இந்தியாவை மற்றொரு நாட்டா னுக்குக் கைவசப்படுத்தவோ, காட்டிக் கொடுக்கவோ அல்ல; அதாவது நாங்கள் துரோகிகளுமல்லர்; எதிரிகளுமல்லர்; யுத்தம் தொடங்குகிற வர்களுமல்லர்.

எங்கள் நாட்டு ஆட்சி எங்களுக்கு வேண்டும். எங்கள் நாட்டுக்குள் எங்கள் மொழி அல்லாதது ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக, கல்வி மொழியாக இருக்கக் கூடாது. இந்தியை வலியுறுத்தும் ஆட்சி எங்கள் (தமிழ்) நாட்டிற்கு வேண்டாம் என்பதை ஆட்சியாளருக்குக் காட்டுவதற்காக - ஒரு கிளர்ச்சிக் காரியமாக இதைச் செய்கிறோம். அதுவும் ஏன் செய்கிறோம் என்றால் மற்றவிதமாகச் செய்யப்பட்ட காரியங்கள் கவனிக் கப்படவில்லை; கேலி செய்யப்பட்டுவிட்டன. இந்திய யூனியன் ஆட்சி ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் தமிழ் நாட்டில் இந்தியைப் புகுத்துவது ஜனநாயகமா? இங்குத் தமிழர்கள் 100க்கு 90 பேர்கள் ஆவார்கள்; மீதி 100க்கு 10 பேர். பாக்கியுள்ள மக்களிடம் இந்த ஜனநாயக ஆட்சி, இந்தியைப் பற்றி யோக்கியமான முறையில் ஓட்டுக் கேட்கட்டுமே! அப்படியில்லாமல், இந்திய யூனியன் அரசாங்கத்திற்குள் தமிழ்நாடு ஒரு இராஜ்யமாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. (அது என்றென்றைக்கும் விடுபடுவதற்கு இல்லாமல் சட்டம், ஆட்சி அமைத் துக்கொண்டு) ஆதலால் யூனியனிலுள்ள 20 நாடுகள் சொல்லுகிறபடி தான் தமிழ்நாடு கேட்டு ஆக வேண்டும் என்றால் நாங்கள் பரிகாரம் தேடிக் கொள்வது எப்படி?

- விடுதலை ; 21.07.1955.

கொடி எரிப்பு ஒத்திவைப்பு

ஆகஸ்டு 1 ஆம் தேதி, இந்திய யூனியன் கொடி கொளுத்தப்படும் என்கின்ற திராவிடர் கழகத் தீர்மானம் சம்பந்தமாக, சென்னை அரசாங்க முதன் மந்திரி திரு.காமராசர் அவர்களது அறிக்கையைப் பார்த்தேன்.

அவ்வறிக்கையானது நான் விரும்பியபடி மத்திய அரசாங்கத்திற் காகவும், சென்னை அரசாங்கத்திற்காகவும் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள் தரும்படியாக விடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தமிழ் நாட்டவர் மீது இந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து, கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணருகிறேன். ஆகவே, நான் எனது தீர்மானம் அமல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால், எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமல் நடத்துவதில் அரசாங்கத்தாரால் இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாக மக்கள் தெளிவாகக் கருதும்படி நடந்து கொள்ளுமோ அல்லது இவ்வளவு நாள் நடந்து கொண்ட மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும், செய்கைக்கும்) சம்பந்தமில்லாத மாதிரி நடந்து கொள்ளுமோ என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் - முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலி கமாகவே ஒத்திவைத்து, திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொதுமக்களையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்றைக் குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மற்றபடி, அவ்வறிக்கையில் கொடி கொளுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரியப்படுத்தி இருப்பது பற்றி நானோ, பொதுக்களோ எவ்விதம் ஆச்சரியமும்படத் தேவையில்லை. மக்கள் அரசாங்கத்தினுடைய கொடியைக் கொளுத்தினால், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று எந்தப் பைத்தியக்காரனும் நினைத்துக் கொண்டிருக்க மாட்டான். அடக்கு முறையினுடையவும், தண்டனையினுடையவும் கடைசி எல்லையை எதிர் பார்த்துத்தான் திராவிடர் கழகம் கொடி கொளுத்தத் தீர்மானம் செய்திருக்கிறது. இதை உலகறியவும் செய்திருக்கிறது. ஆதலால், அந்தச் சொற்களுக்காக அறிவாளிகளுக்கு நான் ஏதும் சமாதானம் சொல்லத் தேவையில்லை.

என்னுடைய இந்தக் கொடி கொளுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பாக வீணர்கள் செய்த ஆர்ப்பாட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல் செயலில் இறங்க முன்வந்து மடிகட்டிப் பெயர் கொடுத்த - மொழிப் பற்றும், ஆண்மையும், மானமும், துணிவும் கொண்ட பதினாயிரக்கணக்கான வீர சிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும், உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, கொடி கொளுத்தும்படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கச்சிரம் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

வீண் பொய்க் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும் மனமாரப் பாராட்டுவதுடன், உறுதிமொழிக் கேற்ப நடந்து கொள்ளுமென்றே நம்புகிறேன். வணக்கம்.

- விடுதலை ; 31.07.1955.

தேசியக்கொடி எரிப்பு

தலைவரவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!

இந்தப் பார்ப்பனர்கள்தாம் இப்படிக் காலிகளைக் கிளப்பிவிட்டனர் என்றால் மந்திரி கோவிந்தவல்லப் பந்த் அவர்கள், கொடி கொளுத்துவது பெரிய இராஜத்துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும் என்று கூறுகிறாராம். அதன் பிறகுதான் கொடி கொளுத்துவோர் பட்டியலில் ஆயிரக்கணக்கில் பெயர் வந்தவண்ணமிருக்கின்றது. அன்றியும் எந்தச் சட்டப் படி, என்ன குற்றம் என்பதே இதுவரை யாருக்கும் புலப்படவில்லை !

வக்கீல்கள் எல்லாம் சட்டப்புத்தகத்தைப் புரட்டிப்புரட்டிப் பார்த்தும், இப்பேர்ப்பட்ட முக்கிய விசயத்தைப்பற்றிச் சட்டத்தில் ஒன்றுமே தென்படவில்லை. கொடியைக் கொளுத்தினால் என்ன தண்டனை விதிப்பது என்பதைப் பற்றி அரசாங்கமே இன்னமும் சட்டப்பூர்வமாக ஒன்றும் முடிவு செய்யவில்லை.

அப்படி இருக்க, தெருவில் திரியும் ஆண்டிகளெல்லாம், கொடியைக் கொளுத்தினால் உயிரைக் கொடுத்துக் காப்பேன் என்று மிரட்டுகின்றனர்.

இவர்கள் மிரட்டுலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா? அப்படித்தான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப் போல் மூன்று மடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்ன மும் உயிருடன் இருக்க ஆசைப்படுபவன் அல்லன், போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.

நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறை வாசம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவனிக்காது உடல் நிலையில் பல விதமான குறைகளிருந்தும் டாக்டரிடம் சரி செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஏன்? சொந்தச் செலவில் ஏன் காசை வீணாக்க வேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செல்லவிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது.

நான் விரும்பியபடியே சர்க்கார் உறுதிமொழி கிட்டியது. என்னுடைய விருப்பப்படி சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி கொடுத்தால் போதும் என்றேனோ, அதன்படி வாக்குறுதி தந்துவிட்டது. இந்தி மொழி தமிழ்நாட்டார் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்ற ஒரே உறுதிமொழி கொடுத்தால் போதும் என்றேன்.

இவ்வாக்குறுதியை அடைந்த பிறகு, நான் இக்கிளர்ச்சியை நடத்து வதென்பது சரியல்ல; ஆனால், அரசாங்கமும் இதுவரை அப்படித்தான் கூறிவந்திருக்கிறது. பெரிய தலைவர்களும், மந்திரிகளும் கூட இந்தியை விரும்பாதவர்களிடத்தில் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறி வந்துள்ளார்கள். இன்றைக்கு நடைமுறையில் அப்படிக் காணவில்லை. பிரதமர் நேருவிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர் காமராசர்.

நேரு அவர்கள் கூட காமராசரிடம் அப்படித்தான் கூறினாராம். நாங்கள் எத்தனையோ முறை இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளோமே என்றாராம். முதலில் காமராசரைக் கண்டவுடனேயே நேரு புன்முறுவல் கொண்டு கிண்டல் செய்தாராம். நாயக்கரும், தாங்களும் கட்டிப்புரளுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்விதமிருக்க, உங்கள் ஆட்சியிலேயே நாயக்கர் ஏதேதோ செய்யப் போகிறாராமே? என்று கேட்டாராம். அதற்கு முதன் மந்திரி அவர்கள் எல்லாம் உங்களால் வருவதுதான் என்றாராம். என்ன என்று கேட்டவுடன், இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப்படுத்துவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இதுபோன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள் என்றாராம். பிறகுதான், நம்மிடமா குற்றம் உள்ளது? அப்படியானால் உடனே சென்று இனி கட்டாயப்படுத் தக்கூடாது என்பதாக அறிக்கை வெளியிடுங்கள் என்றாராம். அதன்படி தான் காமராசர் அவர்களும் அறிக்கை வெளியிடும்படியாகியது.

அந்த அறிக்கையை வெளியிடுமுன் ஒரு சிலர் என்னிடம் கொண்டு வந்து காட்டி, இப்படி வெளியிட்டால் போதுமா என்று என் சம்மதம் கேட்டனர். நானும் அதைப்பார்த்து, ஒரு சில திருத்தங்களைச் சொல்லி, அதன்படி இருந்தால் போதுமென்றேன். அப்படியே திருத்தங்கள் செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.

நானும், வெளியிட்ட எனது அறிக்கையை அவர்களிடம் காட்டவும், அவர்களும் போராட்டத்தை விட்டுவிட்டதாகவே வெளியிடச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வளவு ஏமாந்தவனல்லன்! எனவே, நான் தங்கள் அறிக்கையை நடைமுறையில் பார்க்க வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை; ஆனால், அதுவரை தற்காலி கமாக நிறுத்திவைத்துள்ளேன் என்பதாகக் கூறி, அதன்படியே போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளேன்.

இவ்வுண்மைகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்கின்றன. காமராசர் எச்சரிக்கை என்றும், நாயக்கரின் போராட்டம் வாபஸ் என்றும் எழுதுகின்றன. நாட்டின் நலனுக்கென்று உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அறிவாளிகளைக் கொண்ட பத்திரிகைகள் ஒன்றாவது கிடையாது. எல்லாம் பார்ப்பான் நலனுக்கே - பார்ப்பானுடைய ஆதரவிலேயே - பார்ப்பனர்களாலேயே நடத்தப்படு வதால் பித்தலாட்டமும், பொய்யும், புளுகும், லம்பாடித்தனமுமாகவே நடந்து கொள்கின்றன.

இதனால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழியின்றிப் போய்விடுகின்றது. இப்பத்திரிகைகள் அத்தனையும், நம் நாட்டை வடநாட்டவர்களுக்குக் காட்டிக் கொடுப்பவைகளாகத்தாம் உள்ளன.

- விடுதலை ; 03.08.1955.

வடவரின் ஆட்சிக்கொடி

தமிழரின் கொடியாகுமா?

தலைவரவர்களே! தோழர்களே தாய்மார்களே!

தமிழ்நாட்டில், வடநாட்டு மொழி எப்படித் தேசியமொழி ஆகும்? அதைப்போல், தமிழ்நாட்டில் வடவரின் ஆட்சிக்கொடி எப்படி ஆட்சிக் கொடி ஆகும்? தமிழ்நாட்டின் ஆட்சிக் கொடி வேறு; இன்றுள்ள வடவரின் ஆட்சிக் கொடி வேறு.

அது வடநாட்டுக்கு ஆட்சிக் கொடியாகலாம்; எங்களுக்கு அக்கொடி ஒரு கையலகத் துணிதானே? கை அகலத் கந்தல் துணிக்குள்ள மதிப்பைத்தானே நாங்கள் கொடுப்போம்!

பாரதமாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால் அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை; அதனிடத்தில் நாணயமிருந்தால், உண்மையான நேர்மை இருந்தால் மதிப்புக் கொடுக்கத்தான் வேண்டும். அதன் அந்தஸ்து அதனிடத்து உள்ள உயரிய குணத்தைப் பொறுத்துத்தான் உள்ளது. ஏன்? மனிதனுக்கு அந்தஸ்து எப்படி உயருகிறது? அவனிடம் உள்ள நேர்மை, உயரிய குணம், அறிவு, ஆண்மையைப் பொறுத்துத்தானே உள்ளது? இவைகள் இல்லையேல் அவன் வெறும் அடிமுட்டாள், மடையன் என்றுதானே பொருள்? இப்படித்தானே இன்றைய அரசாங்கக் கொடி? ஏன், இன்றைய ஆட்சியாளர்களே அப்படி உள்ளதைப் பார்க்கின்றோம்.

காங்கிரசுக்காரர்கள் என்றால் தாய்நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்! நாம் கேட்பது நம்முடைய நாட்டை, நம் நாட்டில் அந்நிய மொழி கூடாது என்று நான் மறுக்கிறேன்.

- விடுதலை ; 04.08.1955.

கம்யூனிஸ்டுகளும்

கொடி எரிப்பும்

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

கம்யூனிஸ்டுகளை எடுத்துக் கொள்வோம். உலகத்தில் அறிவு பிறக்குமிடம் அங்கேதான் உள்ளதென்பார்கள்; அறிவாளிகளை உற்பத்தி செய்யுமிடம் அதுவே என்பார்கள்?

ஆனால், நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தமட்டிலும் அத்தனையும் பொய்யாகிவிட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடும் அராஜகச் செயல் கொண்டவர்களையும் கொண்டுள்ளது இந்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி என்று மெய்ப்பிக்கிறார்கள். அப்பேர்ப் பட்டவர்களிடமிருந்து வரும் பதில், குமரன் காப்பாற்றிய கொடி அல்லவா? அதை எப்படி எரிப்பது? என்கிறார்கள்.

குமரனுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. குமரன் இந்தக் கொடியினையாகாப்பாற்றினார்? குமரன் காலத்தில் எந்த மூலையில் இவர்கள் கிடந்தார்களோ தேடிப்பிடிக்கவும் முடியாதே? குமரன் காலத்தில் இந்தக் கொடி கர்ப்பத்தில் கூடி இருந்திருக்காதே? சுதந்திரம் வரும் என்று நினைத்தது யார்? இந்தக் கொடி ஆட்சிக் கொடியாக வரும் என்று கனவிலும் நினைத்தவர் உண்டா ? அப்படி இருக்க குமரனுக்கும் இந்தக் கொடிக்கும் என்ன சம்பந்தம்?

குமரன் ஒருவன் உயிர்விட்டுக் காப்பாற்றிய கொடி இதுவானால், தாளமுத்து - நடராசன் என்ற இருவர் உயிர்விட்டது இந்திக் கிளர்ச்சிக் காகவல்லவா? குமரன் ஓர் ஆள்; எங்களில் இருவர் பலியானோமே! இதை யார் இன்றைக்குக் கூறுகிறார்கள்?

குமரன் காப்பாற்றியதால் அந்தக் கொடியை எரிக்க முடியாதா? அந்தத் துணியென்ன அவ்வளவு அழுக்குப்படிந்த கந்தல் துணியா? மண்ணெண்ணெய் ஊற்றினால் இன்னும் சிறிது நேரம் கொழுந்துவிட்டு எரிகிறது! அல்லது அந்தக் கொடி வாட்டர் புரூஃப் துணியைப் போல் ஃபயர்புரூஃப்துணியால் செய்யப்பட்டதா?

ஓர் உருண்டைக் களிமண் பிள்ளையார் ஆன சங்கதிதானே - முழத் துணி அரசியல் கொடி ஆனது? மண்ணுக்குள்ள மதிப்புத்தானே பிள்ளையாருக்கு என்பதை நிரூபித்தோம். அதைப்போல், முழக்கந்தல் துணிக்குள்ள மதிப்புத்தான் உன் கொடிக்கு என்பதையும் நிரூபிக்கிறோம்.

ஆனால், பிள்ளையார் பெயரைக் கூறிச் சுரண்டி வாழும் உனக்குப் பிள்ளையார் தெய்வமாகத் தோன்றலாம். அதைப் போல், இக்கொடியால் உனக்குச் சவுகரியம் அடைய வசதி இருப்பதனால் உனக்குப் பெரிதாகத் தோன்றலாம். குமரன் காத்து வளர்த்த, பாரதமாதா கொடி என்று எது வேண்டுமானாலும் கூறலாம். அதைப் போலத்தானே, இராமாயணமும், இராமனும், சீதையும் மற்றும் பதிவிரதைகளும் கூறப்பட்டனர்? அவர்கள் வண்டவாளங்களே வெளிப்படுகையில் இக்கொடியைக் கொளுத்துவது பெரிய காரியமில்லை.

- விடுதலை ; 05.08.1955.

கடவுளும்

தேசியக்கொடியும்

தலைவரவர்களே! தோழர்களே ! தாய்மார்களே!

நேரு அவர்கள், கடைசிக் கூட்டத்தில், கொடி கொளுத்துவதாகச் சொன்னவர்களைப் பற்றி மிகவும் துடுக்காகப் பேசி இருக்கிறார். அவருடைய பைத்தியக்காரத்தனமான காரியங்களில் இதுவும் ஒன்றாகும். கொடி எரிப்பதைப்பற்றிப் பேசினதின் கருத்தெல்லாம் - திராவிடக் கழகத்தாரை வையவேண்டும், மிரட்ட வேண்டும் என்பதைத் தவிர, அதில் அவசியமோ, அறிவுடைமையோ என்ன இருக்கிறது?

கொடி கொளுத்துவதாகச் சொல்லப்பட்டவுடன் குறிப்பிட்ட தேதிக்குள்ளாகவே இவ்விசயம் ஏதோ ஒரு அளவுக்குச் சமரசமாக முடிந்து போன பிறகு - அதை மறுபடியும் சர்க்கார் தரப்பிலேயே ஏன் கிளப்ப வேண்டும்? கிளப்புவது மாத்திரமில்லாமல் ஏன் பேச வேண்டும்? இது, கொளுத்துகிறதாகச் சொன்னவர்களைத் தூண்டிவிடுகிறது போலும், அவர்களுக்கு ஆத்திரமூட்டுவது போலும் நினைக்கிறது என்பதே தவிர, வேறு என்ன சொல்லமுடியும்? இதிலிருந்தே இந்த அரசாங்கத்தை ஏதாவது மிரட்ட வேண்டுமானால் கொடி கொளுத்துகிறோம் என்று சொல்லுவதே போதுமானது என்று தெரிகிறதா, இல்லையா?

கொடியைப் பற்றி பிரமாதப்படுத்தியதும், அதை எரித்ததால் உலகத்தையே சுட்டெரித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும்வீண்பேச்சே தவிர, மற்றபடிக் கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? செய்வதற்கு இவர்கள் கையில் என்ன சரக்கு இருக்கிறது? அரசியல் சட்டத்திலாகட்டும், கிரிமினல் பீனல் கோடிலாகட்டும் - கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது? என்ன காரியம் செய்தால் இன்ன குற்றமாகும் என்பது ஒருவனுக்குத் தெரிந்தால் தான, அந்தக் காரியத்தை ஒருவன் செய்யாமல் இருக்க முடியும்? வீண் பூச்சாண்டி காட்டுவதைக் கொண்டு யார் பயப்படுவார்கள்? அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது; ஆதிக்கம் தங்கள் கையில் இருக்கிறது; ஆதலால் எதையும் பேசலாம் என்பதே தவிர, மற்றபடி இதில் என்ன நியாயமோ நேர்மையோ இருக்கிறது?

கொஞ்ச நாளைக்கு முன்பு சட்டசபையில் பண்டித நேருவைப் போலவே வீரர் பேசினார். அதாவது, வேறு எது செய்தாலும் நான் சும்மா இருப்பேன்; இராமனையே, சீதையையோ குறை சொன்னால் கொன்று போடுவேன் என்பதாகப் பேசினார். அதற்கும் பண்டித நேரு அவர்கள் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

உலகத்தையே படைத்ததாகக் கூறப்படும் கடவுள்களே எங்களிடம் அகப்பட்டுத் திண்டாடும் நேரத்தில் உன் அரசாங்கக் கந்தல் துணியாகிய கொடி எம்மாத்திரம்? அதன் யோக்கியதை தெரியாதவர்கள் அதைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடலாம். அதன் பித்தலாட்டம் தெரியாத மூடர்கள் அதைத் தாயின் மணிக்கொடி - புனிதத் தன்மை கொண்ட பாரதமாதாவின் கொடி என்றெல்லாம் புகழலாம். அக்கொடியின் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் சோம்பேறிகளும் எல்லா அயோக்கியத் தனங்களும் துணிந்து செய்ய முற்படுபவர்களும் அதை வானளாவப் புகழ்ந்து பேசலாம்.

ஆனால், அதன் யோக்கியதை என்ன என்று தெரிந்த நாங்கள், மற்ற வர்களுக்கும் அதன் யோக்கியதையை வெளிப்படுத்த முற்படுகிறோம்; தாயின் மணிக்கொடியின் அந்தஸ்து - கந்தல் துணிக்குள்ள அந்தஸ்து கூடக் கிடையாது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறோம். ஒளிவு மறைவாகச் செய்வதாகக் கூறவில்லை; யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் கொளுத்துவதாக அண்டர் கிரவுண்டு வேலை செய்யவில்லை; பகிரங்கமாக முச்சந்திகளில் கொளுத்துகிறோம்; தெருக்களில் கொளுத்துகிறோம்; அவரவர் வீட்டின் முன் பல பேர் அறியக் கொளுத்துகிறோம் என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்தோம். தெரிந்தவுடன் உங்களால் என்ன செய்ய முடிந்தது?

கொடியைக் கொளுத்தினால், நாடே அழிந்தாலும் - கொடியைக் கொளுத்த விடமாட்டேன் என்கிறாயே! பாட்னாவில் மாணவர்கள் எரித்தார்கள்; என்ன செய்தாய்? உன் வீரப்பிரதாபம் அப்போது எங்கே போனது? அப்படி இருக்க, நாங்கள் எரித்தவுடன் என்ன செய்து விடுவாய்? உன்னையே எவனோ ஒருவன் அடிக்க வந்தான் என்று பத்திரி கையில் செய்தி பறந்ததே அவனை உன்னால் என்ன செய்ய முடிந்தது?

- விடுதலை ; 12.10.1955. 

Read 1133 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.