Tuesday, 29 September 2020 01:10

இராமன் பட எரிப்புப் போராட்டம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 85

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா.கருமலையப்பன்

 

இராமன் பட எரிப்புப்

போராட்டம் 

 

நமது போராட்டம்

ஆத்திகப் பிரச்சாரமும், பக்திப் பிரச்சாரமும் செய்யும் பார்ப்பனத் தலைவர் திரு.இராஜாஜி அவர்கள் இராமன் கடவுள் அல்லன், அவன் ஒரு வீரன் என்று சக்ரவர்த்தித் திருமகனார் என்ற தமது கட்டுரையில் தெளிவாக எழுதி இருக்கிறார்.

சங்கராச்சாரியாரும் இராமன் கடவுள் அல்லன்; ஓர் ஆதர்சன புருஷன் மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தவன் என்று கூறி இருக்கிறார்.

காலஞ்சென்ற மறைமலை அடிகள், டி.கே.சி., திரு.வி.க., வி. பி. சுப்பிரமணிய பிள்ளை, பி. சிதம்பரம் பிள்ளை முதலிய புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இராமன் கடவுள் அல்லன்; இராமாயணம் கடவுள் கதை அல்ல என்று கூறி இருக்கிறார்கள்.

வால்மீகியும் தனது இராமாயண இலக்கியத்தில் இராமன் பெண்ணைக் கொன்றவன்; பெண்ணை மானபங்கப்படுத்தியவன்; மறைந்திருந்து எதிரிகளைக் கொன்றவன்; துரோக காரியங்களுக்கு உடந்தையாக இருந்தவன் என்றெல்லாம் கூறி இருக்கிறார். இவ்வளவுதானா?

காந்தியாரே நான் போற்றும் இராமன், இராமாயண இராமன் அல்ல என்றும், காட் என்று சொல்லும்படியான உருவமற்ற, பெயர்ச் சொல் அல்லாத - அதாவது ஒரு வஸ்து அல்லாத சர்வ சக்தியான இராமன் என்றும் கூறி இருக்கிறார்.

ஆகவே, நானும் இராமாயணப் பாத்திரங்களில் ஒன்றான இராமாயண இராமனிடம், கடவுள் இலட்சணப்படி ஏதாவது கடவுள் தன்மையோ, ஒழுக்கமோ, நாணயமோ, சாதாரண அறிவோ இருக்கின்றதா என்றும்; இல்லாவிட்டாலும் துரோகம், வஞ்சம், பேடித்தனம், பேராசை, மதுவருந்தல், புலால் உண்ணல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்கக் குணங்கள் என்பவைகளாவது இல்லாமல் இருக்கிறதா என்று துருவித்துருவிப் பார்த்து, இல்லை என்ற முடிவுக்கே வந்திருக் கிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, வழி காட்டியாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத்தக்கவனாகக் கருதக்கூடாது என்பதற்காகவே - இராமாயண இராமனைக் கொளுத்துங்கள் என்கிறேன்.

இம்மாதிரிக் குணங்கள் இல்லாத இராவணன் கொளுத்தப் பட்டான்; ஆண்டுதோறும் கொளுத்தப்படுகிறான்.

இந்த இராவணன் மீது சுமத்தப்படுகிற ஒருதலைப்பட்சமான - மறைமுகமான குற்றங்களைவிடப் பன்மடங்கு தெளிவான, பிரத்தியட்சமான குற்றங்கள் புரிந்த இராமனைப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்காக ஏன் கொளுத்தக் கூடாது?

- விடுதலை; 27.07.1956.

நேர்மையான எதிர்ப்பு இல்லை

திராவிடர் கழகம் இராமன் உருவத்தை எரிப்பது பற்றி இன்று வரை நேர்மையான - வாத முறைக்கு ஏற்ற எதிர்ப்பு ஒன்றுகூடக் காணப்படவில்லை.

நான் மதிக்கத்தக்க இரண்டு நபர்களிடமிருந்து இராமன் உருவம் கொளுத்தப்படக்கூடாது என்று ஒரு வேண்டுகோள், அதா வது, ஒருவகை எதிர்ப்பும்; கொடி கொளுத்துவதைத் தடை செய்யும் படி சர்க்காரைக் கேட்டுக்கொள்ளும் மற்றொரு வகை எதிர்ப்பு ஒன்றுமாக இரண்டு எதிர்ப்புகளைப் பத்திரிகையில் பார்த்தேன்.

இந்தக் கணவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர், இவர் மக்கள் பிரதிநிதி, உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார்கள். இவர்கள் இருவரும் யார் என்றால் வரதராஜூலு நாயுடு அவர்களும், குன்றக்குடி மடாதிபதிகளுமாவார்கள்.

டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களைப்போல் சட்டசபையில் இருநூற்றுக்கு மேற்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் டாக்டர் நாயுடுவைத் தவிர, மற்றவர்கள் யாரும் எந்தவித மறுப்பையும் முணுமுணுப்பையும் காட்டவில்லை என்பது மாத்திரமல்லாமல், பல சட்டசபை மெம்பர்கள், பார்லிமெண்ட் மெம்பர்கள் ஆகியவர்கள் கமிட்டிக் கூட்டத்திலிருந்து படம் கொளுத்துவதை ஆதரித்து இருக்கிறார்கள். மதப் பிரதிநிதிகளில் குன்றக்குடி சுவாமிகள் ஒருவர் தான் தனது எதிர்ப்பைக் காட்டி இருக்கிறாரே தவிர, மற்றபடி எந்த மடாதிபதியும் எரிப்பதைப்பற்றி ஓர் ஆட்சேபணையோ, அதிருப்தியோ கூடக் காட்டவில்லை.

பிள்ளையார் உடைப்புக்கு வெளிப்படையாகக் காட்டப்பட்ட எதிர்ப்புகளில் 100இல் ஒரு பங்கு கூட இதில் காணப்படவில்லை. இராமன் என்கிற கடவுளால் சொந்தத்தில் பயன்பெறும் பார்ப்ப னர்களில் எவரும் கூட வாய் திறக்கவில்லை.

டாக்டர் நாயுடுவின் எதிர்ப்புக் காரணங்கள் எவராலும் மதிக்கத் தகுதியற்றதாகும். மற்றும் அந்த எதிர்ப்பில் அரசியல் வாசனை தான் காணப்படுகிறதேயன்றி, சீர்திருத்த இயல் உணர்ச்சி காணப்படவில்லை.

மடாதிபதி அடிகளாரும் ஒரு மடத்தின் அல்லது மதத்தின் அதிபதியாக, பிரதிநிதியாக இருப்பவர். இப்படிப்பட்ட சீர்திருத்தக் காரியத்திற்கு அரசாங்கத்தை நாடினால் மதம், கடவுள் காப்பாற்றப் படுமா என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவரது எதிர்ப்பில் தைரியமோ, உண்மையோ இருந்தால் மக்களை அணுக வேண்டியது பயனளிக்கும் காரியமாகும்.

நான், இராமன் படத்தை எரிக்க ஆசைப்படுவதானது - இராமன் கடவுள் என்று கருதப்படுவது ஒழிய வேண்டும் என்கின்ற கருத்தின் மீது அல்லாமல், வேறு ஒரு உள் கருத்தும் கொண்டு அல்ல. அப்படி ஏதாவது இருப்பதாக எதிர்ப்பவர் மற்றும் யாரும் இதுவரை சொல்லவில்லை.

நான் ஒரு புரட்சிகரமான சமுதாய சீர்திருத்தவாதி. அதற்கே என் உடல், பொருளை ஒப்படைத்துவிட்டு, ஆவியையும் ஒப்படைக்க வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். அதோடு கூடவே, என் தொண்டுக்கு அறிவையும் ஆராய்ச்சியையுமே அடிப்படையாய்க் கொண்டு இருக்கிறேனே அல்லாமல், மதவாதிகள், மதத் தலைவர் கள்போல் வெறும் நம்பிக்கையையும், மூடமக்கள் மரியாதை யையும், சர்க்காரிடம் தஞ்சமடைவதையும் அல்ல.

என்னோடு போராட்டத்திற்கோ, எதிர்ப்புக்கோ வருபவர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி விசயங்களில் எப்படி நடந்து கொண்டாலும் - அறிவு ஆராய்ச்சித் தன்மையைச் சிறிதளவாவது ஆதாரமாய்க் கொண்டு பிரவேசிக்க வேண்டியது நேர்மையான எதிர்ப்புக்கும் பண்புக்கும் ஏற்ற காரியமாகும்.

நான் இராமன் படத்தைக் கொளுத்த வேண்டுமென்பதற்கு ஏராளமான இராமன் சம்பந்தப்பட்ட நூல்களை ஒரு தடவைக்கு 100 தடவை படித்து ஆராய்ந்து பார்த்ததோடு, சுமார் 30, 40 ஆண்டு ஆராய்ச்சியில் கழித்துவிட்டு, ஆயிரக்கணக்கான கூட்டங்களில் - கோடிக்கணக்கான மக்களிடம் பேசி மெய்ப்பித்துவிட்டு பல புலவர்களையும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்பவர்களையும் ஏற்கச் செய்துவிட்ட பிறகுதான் கொளுத்தச் செய்கிறேன்.

மற்றும், 1922 இல் காங்கிரஸ் மாநாட்டில் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று சொல்லிவிட்டு, 1925 ஆம் ஆண்டு முதல் இராமாயண ஆராய்ச்சி என்னும் பேரால் அநேகக் கட்டுரைகளை எனது குடி அரசு, பகுத்தறிவு, திராவிடன், விடுதலை ஆகிய வார, மாத, தினசரி பத்திரிகைகளில் வெளியாக்கி, கோடிக்கணக்கான மக்களைப் படிக்கச் செய்து, 4 அணா, 2 அணா, 1 அணா, 72 அணா விலையுள்ள புத்தகங்களாக 10 ஆயிரம், 20 ஆயிரம் கணக்கில் வெளியிட்டு, மக்களிடம் விற்று விட்டுக் கொளுத்த வந்திருக்கிறேன்.

மற்றும் எரிப்பது பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே சேதி வெளியிட்டும், பல இடங்களில் எரிக்கப்பட்டும் இருக்கின்றன.

இவ்வளவு ஆதாரத்தின் மீதும், பலத்தின் மீதும், ஆமோதிப்பதின் மீதும் நடத்தப்படுகிற ஒரு காரியத்தை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்றும், தடை செய் என்றும் பொறுப்புள்ள மரியாதை நம் கருத்தைக் கூறாமல் இருக்க முடியும்? மற்ற வேறு யாராவது இருந்தால் நான் இவ்வளவு இலட்சியம் செய்ய மாட்டேன்.

நான் இராமனைக் கொளுத்த, பல காரணங்கள் ஆதாரத்துடன் சொல்லி விட்டுக் கொளுத்துகிறேன். அந்த ஆதாரங்களை இதுவரை யாரும் மறுத்துக் கூறவில்லை .

டாக்டர் நாயுடு அவர்களும், சுவாமிகளும் கொளுத்துவதில் தங்களுக்குச் சிறிதாவது அதிருப்தி இருக்குமானால், அதை அவர்கள் வேண்டாம் என்றும் தடை செய் என்றும் எழுதுவதன் மூலம் நீதியாக நடந்து கொண்டவர்களாக ஆகிவிடமாட்டார்கள்.

என் உள் கருத்தையறிந்து நான் சொல்லுங்காரணங்களை, காட்டும் ஆதாரங்களை எடுத்துத் தலைப்பில் காட்டி, அதை மறுத்து அல்லது சமாதானம் சொல்லி - கொளுத்த வேண்டாம்; கொளுத்து வது தப்பு என்று சொல்லுவது எதிர்ப்புப் பண்பாகும்; நமக்கும் உதவி செய்ததாகும். அப்படிக்கில்லாமல் மக்கள் மனம் புண்படும் என்பது, மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பவருக்குத்தான் கவலைப்படத் தக்கதாகுமே தவிர, மக்களை மூடத்தனத்தில் இருந்து - அதனால் ஏற்பட்ட இழிவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பவனுக்கு மக்கள் மனம் புண்படுவது என்பது மதிக்கத்தக்கதாகுமா?

போகட்டும்; டாக்டர் நாயுடு அவர்களுக்காவது என்னளவு ஆராய்ச்சி இருக்க அவசியமிருக்காது. அவர் முதலாவதாக ஓர் அரசியல்வாதி; இரண்டாவதுதான் அவருக்குச் சமுதாயம். ஆனால், சுவாமிகள் அப்படியல்லர்; அவர்கள் எவ்வளவோ நூல்கள், மத சம்பந்தமான புராண இதிகாசங்கள், மக்கள் வரலாறுகள் ஆகியவைகளைப் படித்து ஆராய்ச்சி செய்து, உண்மை கண்டிருக்க வேண்டிய வராவார்கள். அவர்கள் உண்மையில் சமய மக்களால் அந்தப்படி கருதப்படத்தக்கவர் ஆவார். அப்படிப்பட்ட அவர்கள் நான் கூறி வருகிற காரணங்கள் ஒன்றுக்குக்கூடச் சிறிதளவு சமாதானமும் கூறாமல், கொளுத்துவது தவறு என்று கூறினால் அது எப்படி மதிக்கத் தக்கதாகும்? இப்போதும் சொல்லுகிறேன்:

இராமன் கதை நடந்ததல்ல; சரித்திர சம்பந்தமானதல்ல; நீதிக்கோ படிப்பினைக்கோ ஏற்றதல்ல. ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்குத் திராவிடர்கள்மீது (தென் இந்திய மக்கள் மீது) எற்பட்ட துவேஷம், பொறாமை, வஞ்சக எண்ணம் ஆகியவை பெற்ற பிள்ளைகள்தாம் இராமாயணக் கதை என்று சொல்லுகிறேன். இராமாயணம் முதலிய ஆதாரங்களும், இராமன் முதலிய கடவுள்களுமேதான் டாக்டர் நாயுடுகாரு, சுவாமிகள், நான் உட்பட அநேக கோடித் தென் இந்தியப் பழங்குடி மக்கள் - கீழ்ச்சாதியாய், இழி பிறப்பாய் ஆக்கப்பட்டதோடு, 3,000 ஆண்டுகளாக இன்னும் இருக்கச் செய்து வருவதற்குக் காரணமாகும்.

இதை ஒழிக்க டாக்டர் நாயுடு அவர்களும், சுவாமிகளும் செய்த, செய்து வருகிற, செய்யப் போகிற காரியங்கள் யாவை?

பார்ப்பான் அயோக்கியன் என்று சொல்லுவது மாத்திரம் போதுமா? ரோஷம், மானம் இல்லாதவனை வைவதற்கும், செத்த பாம்பை அடிப்பதற்கும் என்ன பிரமாதமான பேதம் இருக்க முடியும்?

இப்பவும் காலம் தாண்டிவிடவில்லை. இராமன் சங்கதி எப்படியோ போகட்டும். இதுபோன்ற மற்ற கடவுள்களுக்காவது இந்தக்கதி வராமல் இருக்க விரும்புகிறவர்களானால் அவற்றின் ஆதாரங்களில் இருந்து - அதுவும் இப்பெரியார்கள் மதிக்கும் ஆதாரங்களிலிருந்து இக்கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு நான் எடுத்துக் காட்டுவதை ஆதாரக் காரணங்களோடு மறுத்துவிட்டு, உடைக்க வேண்டாம்; கொளுத்த வேண்டாம் என்று கட்டளை இடட்டும் என்று பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி இல்லாவிட்டால், நண்பர் ஆச்சாரியாருக்கும், அணுகுண்டு சாமிகளுக்கும் மித்திரன், இந்து, தினமணி, கல்கி, ஆனந்த விகடன், மகாலிங்க அய்யர்களுக்கும், இப்பெரியார்களுக்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.

நான் தவறு செய்யலாம்; என் ஆராய்ச்சியும் குருடன் யானை கண்ட காட்சி போல் என்னைத் தவறான வழியில் இழுத்து விட்டிருக்கலாம். அப்படி இருந்தாலும் அதில் அதிசயமிருக்காது. ஆனால், அதைத் திருத்துவது எப்படி? என்னைக் குறை கூறுவதும், என்னைத் தண்டிக்கச் செய்வதும் திருத்துவதாகிவிடுமா? காரியத்தை நிறுத்திவிடுமா? 1956 ஆம் ஆண்டில் இவை எளிதில் நடக்கக்கூடிய காரியமாகிவிடுமா? உண்மையில் பெருமையும், போற்றுதல் மரியாதையுமுள்ள இவர்கள் இப்படி நடந்து கொண்டால், அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும், சமயத் தலைமைக்கும் அறிஞர்களிடம் எப்படிப் பாராட்டுதலும் போற்றுதலும் கிடைக்க முடியும்?

எனக்குக் கெட்ட பெயர் வருவது பற்றியோ, எனக்குத் தண்டனை கிடைப்பது பற்றியோ, என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதாவது இலட்சியம் செய்வதாயிருந்திருந்தால் நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்து இருக்க மாட்டேன். இப்படி நடந்து கொண்டவர்கள் கதியும், சரித்திரமும் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்திருக்கிறேன் என்பதோடு, என்னைத் திருத்த அறிவும், ஆராய்ச்சியும், அன்பும்தான் நல்ல வழியேயொழிய, இவை பயன்படாதது என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்நாளில் தமிழர்களுக்கு நீண்ட நாளாக இருந்து வருகிற காட்டுமிராண்டித் தன்மையான கடவுள் - சமயப் பற்றும், பெரும் அளவுக்கு இருந்துவரும் இழிநிலையும் ஆகியவைகளில் கடுகளவாவது குறைந்தாலும் நான் வெற்றி பெற்றவனாவேன்.

மன்னித்தருள்க!

- விடுதலை ; 30.07.1956.

இராமன் படத்தைக்

கொளுத்தியது குற்றமல்ல

இராமன் கடவுள் அல்லன், இராமாயணக் கதையின் பாத்தி ரமான இராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியனல்லன் எனக் கருதுபவர்கள் யாரும், நாட்டு நன்மையை, சமுதாயச் சுயமரியாதை யைக் கருதுபவர்கள் யாரும் இராமன் படத்தைக் கொளுத்தலாம்.

இந்த உரிமையை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் ஆகஸ்டு 1 ஆம் தேதி இராமன் படம் கொளுத்தும் கிளர்ச்சி நாளாகக் கொண்டாடத் தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

அரசாங்கமும் நல்ல வாய்ப்பாக மக்கள் உரிமையில் பிரவேசிக் காமல் இராமன் படம் கொளுத்துவதன் பயனாய்க் குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படக்கூடாது என்று கருதி, பொதுக் கூட்டத்தில் கொளுத்த விடக்கூடாது என்று கருதி, பொதுக் கூட்டத்திற்கும் அது சம்பந்தமான ஊர்வலத்திற்கும் தடை விதித்தது.

என்றாலும், உரிமையுள்ள காரியம் நடைபெற்றால் கலவரம் உண்டாகும் என்று கருதினால், அதற்கு அரசாங்கம் பாதுகாப்புச் செய்ய வேண்டுமே ஒழிய, காரியத்தைத் தடை செய்ய அல்ல என்பது என் கருத்து. இன்றும், மதுரை முதலிய இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. மற்றும், தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்கள் உள்ள இடங்களில் சூரசம்ஹார உற்வசவங்கள் நடைபெறுகின்றன. இராவணனை இழிவுபடுத்தி, இராவண பக்தர்கள் மனம் புண்படும்படி தினமும் பல காலட்சேபங்களும், பல பாட்டுக் கச்சேரிகளும், பல தெருக்கூத்துக்களும், டிராமாக்களும் நடைபெறுகின்றன.

இவை குறித்து அநேகருக்கு வெகுநாள்களாகவே மன வேதனை இருந்துவந்தும், அவற்றைச் சரியானபடி வெளியாக்கித் தடுக்க இதுவரை மக்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. காரணம் என்னவென்றால், வெள்ளை ஆட்சி இருந்ததாலும், அந்த ஆட்சியில் பார்ப்பனர்களே ஆதிக்கக்காரர்களாக இருந்ததாலும் இது விசயத்தில் எளிதில் நியாயம் பெற முடியாமல் மாமூல் என்ற சாக்கில் தடைப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போது சுயராஜ்ஜியம், மக்கள் ஆட்சி என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்தப் பெயரை வைத்துக் கொண்டு கோவில் நுழைவு, சம்பந்தி ஏற்பாடு மற்றும் அரசர்கள், ஜமீன்தார்கள் ஒழிக்கப்பட்டவை முதலிய - அநேக ஆயிரக்கணக்கான, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இருந்து வந்த மாமூல் காரியங்களும், மாமூல் கருத்துகளும், நடப்புகளும் மாற்ற மடைந்துவிட்டன.

அப்படி இருக்க, இந்த நாட்டைத் தவிர, உலகில் வேறு எங்குமே நடப்பில், கருத்தில் இல்லாத காட்டுமிராண்டித் தன்மை கொண்ட புராணக் கதைகளை ஆதாரமாய்க் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடந்த காரியங்கள் நீக்க முடியாத மாமூலாகிவிடுமா? தீண்டாமையை ஒழித்ததும், தீண்டப்படாதவன் சமைக்கும் சாப்பாட்டைப் பார்ப்பான் சாப்பிட்டுத்தான் தீர வேண்டும் - இல்லாவிட்டால் வெளியே போ என்பதும் ஒருவர் மனத்தையும் புண்படுத்தவில்லை என்றும், புண்படுத்தினாலும் கவலை இல்லை என்றும் கூறும்போது - கடவுள் தன்மை எற்படாத காகி தத்தை, பொம்மையைக் கொளுத்தினால் யாரோ ஒருசிலர் மனம் புண்படும் என்று தடங்கல் காரியம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பது தான் என் கருத்தோழிய வேறில்லை. அதனால் தான், சர்க்கார் உத்தரவை மீற நேரிட்டது. காரியம் வெற்றிகரமாய் முடிந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் 1 ஆம் தேதி மாத்திரம் 4,000, 5,000 பேர்கள் தடையை மீறி, இராமன் படக் காகிதத்தைக் கொளுத்த முன்வந்து இருக்கிறார்கள். இதில் போலீசார் தங்களால் ஆனவரை கழித்து, ஒரு 1,000, 1,500 பேர்களை மட்டும் கைது செய்து, அதிலும் பலரை ஸ்டேசனுக்கு அழைத்துப்போய் ரிக்கார்டு செய்யாமல் பலரை விரட்டிவிட்டு, ஒரு சிலரை மாத்திரம் லாக்கப்பில் வைத்தி ருப்பதுமான திருவிளையாடல்கள் செய்திருக்கிறார்கள்.

31 ஆம் தேதி அன்று, நான் - போலீசார் யாரையும் பிடிக்காமல் பலாத்காரம் உபயோகித்து அடித்து விரட்டி, ஒருவரும் கொளுத்த முன்வரவில்லை; சட்டம் மீறவில்லை என்று காட்டிவிடுவார்கள் என்று கருதியே (அந்தப்படி சர்க்கார் உத்தரவு செய்திருப்பதாகச் சேதி வந்ததாலேயே) உங்களுக்கு விருப்பமானால் உத்தரவு அமலில் இருக்கும் நாள் வரை கொளுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

நான் எண்ணியதற்கு விரோதமாக நாடு முழுவதும் - சிறப்பாகச் சென்னையிலும், போலீசார் சிலரை விட்டுவிட்ட போதிலும் மிகவும் நேர்மையாக நடந்து 1,000 பேர்கள் போல - நகரில் 100 பேர்கள் போலப் பிடித்து ரிக்கார்டு செய்து விட்டார்கள். பல இடங்களில் படம் கொளுத்தப்பட்டுவிட்டதாகவும், அதற்கு அதிக போலீஸ் ஒன்றும் தடபுடல் செய்யாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாகவும் சேதி வந்தது; இதை ஒருவாறு அறிந்த உடனே எனக்கு இனியும் மற்ற நாள்களுக்குத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று கருதி, திடீர் பிரேக் போட்ட மாதிரி, நான் கைதான உடனே அறிக்கை எழுதி, மணியம்மையிடம் கொடுத்து விட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டேன். 31 ஆம் தேதி அறிக்கையினால், பல தோழர்கள் நாளை மறுநாள் கொளுத்தலாம் என்று கருதி இருப்பார்கள். உதாரணமாக, சென்னையில் இருந்து பெருங்கூட்டம் வந்து இன்றைக்கு மாத்திரம் அனுமதியுங்கள் என்று பெருந்தொல்லை கொடுக்கிறார்கள் என்றாலும் அவர்களது ஏமாற்றத்திற்கு வருந்தி சமாதானம் சொல்லிச் சரிப்படுத்தினேன்.

7, 8, 10 நாள்களுக்கு இயக்கம் நடக்கும் என்றும், தினம் 500, 1000 பேராவது பிடிபடவேண்டும் என்றும் கருதிப் பலர் ஏமாந்து விட்டார்கள் என்பது உண்மைதான்.

இது மாத்திரமல்ல; என்னையும் நண்பர் குருசாமியையும் கைது செய்து அழைத்துப் போய் வைத்து, நாங்களும் புத்தகம், படுக்கை முதலியவைகளுடன் தயாராய் இருந்தும், திடீரென்று, இருட்டாய் விட்டது; நீங்கள் வீட்டிற்குப் போகலாம் என்று கமிஷனர் எங்களுக்குச் சொன்னபோது நாங்கள் எவ்வளவு ஏமாற்ற மடைந்து இருப்போம்? இந்தப் பேச்சைக் கேட்டவுடன், ஏதோ கிரிமினல் குற்றத்திற்குத் திடீரென்று எனக்கு ஓர் அரஸ்ட் வந்ததைப் பார்த்தால் எப்படி என் மனம் பக்கென்று திகைப்பும், பய உணர்ச்சியும் ஏற்படுமோ அதுபோலத் திடீரென்று ஆய்விட்டது.

என்ன அய்யா ! இப்படி வீட்டிற்குப் போ என்கிறீர்களே; எனக்குப் புரியவில்லை; இப்படிக் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும் என்று கமிஷனர் அவர்களைக் கேட்டேன். அவர், பெரிய வாளை எல்லாம் இவ்வளவுதான் செய்ய முடியும் என்றார்; எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. இந்த என் ஏமாற்றம் எப்படியோ இருக்கட்டும்; நாளைய தினம் போலீஸ் அதிகாரிகள், பிடித்தவர் களையெல்லாம் திடீரென்று விடுதலை செய்து விட்டார்களானால் பிடிப்பட்டவர்கள் அத்தனை பேரும், ஏதோ ஒரு மாதம் அல்லது 15 நாள்கள் குறைந்தது இந்த உத்தரவு அமலில் இருக்கும் வரையிலாவது ஜெயிலில் இருக்கலாம் என்று வந்தோம்; இப்படி நம்மை அவமானப்படுத்துவதுபோல் விரட்டி விட்டார்களே; இனி எப்படி வெளியில் தலைகாட்டுவது? என்று எவ்வளவோ ஏமாற்றமும் வேதனையும் அடைவார்கள், பொதுக் கிளர்ச்சி விழாவில் இது சகஜம், எனக்கு எத்தனையோ தடவை மக்கள் பரிகாசம் செய்யும்படியான அவமானமே ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் நான் பயப்பட்டால் மேலே கிளர்ச்சி நடக்கவே நடக்காது. ஆதலால், யாரும் ஏமாற்றமடைந்ததாகக் கருதக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

என் பொதுநலக் கிளர்ச்சி வியாபாரம் எல்லாம், குறைந்த செல்வில் (தியாகத்தில்) பெரிய லாபம் (வெற்றி) என்ற கொள்கையைக் கொண்டது. ஆதலால், பொதுமக்கள், போலீஸ், அரசாங்கங்கள், நாம் ஆகிய எல்லோரும் - இந்த நிகழ்ச்சி அதிகச் செலவு, தொல்லை இல்லாமல் வெற்றிகரமாய் முடிந்திருப்பது பாராட்டத்தக்கதே யாகும்.

எதிரிகள் வேதனைப்படுவார்கள். அது இயற்கைதானே! அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமானால் நான் சாகவேண்டும் அல்லது எதிலாவது நான் தோல்வி அடைய வேண்டும். அது அவர்கள் அவசரத்துக்கு ஏற்றபடியோ, எளிதிலோ நடக்க மாட்டேன் என்கிறது; அதற்கு நாம் என்ன செய்யலாம்!

கடைசியாக, இன்று முதல் இனி யாரும் இந்தக் கிளர்ச்சி விஷயமாய் தடை உத்தரவு நாள் வரையில் என்ற எனது வேண்டு கோள்படி யாதொரு நடவடிக்கையும் செய்யாமல் இருக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறேன். மறுகிளர்ச்சியை எதிர்பாருங்கள்.

இந்த நல்ல முடிவுக்கு உதவி செய்த எல்லோருக்கும் எனது நன்றி. வணக்கம்.

- விடுதலை ; 02.08.1956.

இராமன் பட எரிப்பு ஏன்?

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை போன்றதாகும் என்பது விளங்கப்படவேயாகும். பொதுவாக, பிள்ளையாரை, நம் நாட்டில் இராமனை வணங்குபவர்களைவிட அதிகமான மக்கள் வணங்குகிறார்கள் என்றாலும், பிள்ளையாரிடம் பொய், வஞ்சகம், சாதி ஆணவம், ஒரு சாதியைக் கெடுத்து அழித்து மற்றொரு சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றதான வகுப்புணர்ச்சி முதலியவை மிகமிகக் குறைவு; அருமையுமாகும். ஆனால், இராமன் அப்படி அல்லன்; அவனைப் பற்றிய கதைகள் பல என்றாலும் அத்தனை யின்படியும் இராமன் பிறவியில் இருந்து இறப்புவரை நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும் நல்ல மனிதத் தன்மைக்கும் மாறான - கூடாத தன்மையைக் கொண்டவனாகச் சித்திரிக்கப் பட்டிருக்கிறான்.

இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் - முக்கியமானதுமான சாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் இராம்னின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் சாதியைக் காப்பாற்றப் பிறந்து, சாதியைக் காப்பாற்றிவிட்டுச் செத்ததேயாகும். நம் நாட்டில் சமுதாயத் திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும் முதல் இலட்சியச் செய்கையாக, ஸ்லோகச் சொல் காரியமாக, துவக்கக் குறியாக இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆக வேண்டும். இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கெட்ட (Criminal and Immoral) பிரச்சாரம் ஆகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும், ஒரு மனிதன் தனைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்னப் பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்கார னாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து ஏண்டா, எங்கம்மா இழுத்தால் திமிரிகிட்டு ஓடப் பார்க்கிறாய்? என்று பையனை அடித்தால் அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, தாய் அபிமானம், தாய் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப் பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால், இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. இந்த மாதிரி தியாகிகள் - அதாவது உயிருக்குத் துணிந்து உயிரினும் சிறந்ததான மானத்தைத் துறந்து (மற்றவற்றைத் துறந்தது என்பது மிக மிக அற்பமேயாகும்) மக்கள் பழியை ஏற்று, இக்காரியத்தைச் செய்யக் கூடியவர்கள் எளிதில் ஏற்படமாட்டார்கள்; ஏற்பட்டாலும் முன்வர மாட்டார்கள்; முன்வந் தாலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; அனுமதித்தால் மாற்றார்கள் வாழவிட மாட்டார்கள். தமிழனுக்கு இன்று தன்மானம்தான் தேவை. இது தாயினும் (மதத்தினும்) உயிரினும் (கடவுளினும்) சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது உயிரை விட்டாவது மானத்தை, மனிதத் தன்மையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றவே இராமனைக் கொளுத்தச்சொன்னேன், சொல்கிறேன்.

- விடுதலை ; 04.08.1956.

Read 676 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.