Tuesday, 29 September 2020 01:11

பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 86

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா.கருமலையப்பன்

 

பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்

சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி சுயமரியாதைச் சங்கம் உண்டாக்கி பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறேன். உண்மையிலேயே இன்றைக்கு இருப்பதெல்லாம் இரண்டே சாதிதான். ஒன்று பார்ப்பன சாதி, மற்றொன்று சூத்திர சாதி. ஒன்று எசமான சாதி, மற்றொன்று அடிமை சாதி. பின்னால் சூத்திர சாதியெல்லாம் ஒன்றுகூடி விட்டால் நம் பாடு திண்டாட்டமாகப் போய்விடுமே என்று சக்கிலியன், பறையன், செட்டியார், முதலியார் என்று ஒன்றை ஆயிரம் சாதியாகப் பிரித்து வைத் தானேதவிர, உண்மையில் இரண்டே சாதிகள்தான் உண்டு. மனுதர்மம், பாரதம், இராமாயணம் முதலிய சாஸ்திரங்களில் இருப்பவையெல்லாம் இரண்டே சாதிகள்தான். அதுதான் ஒன்று எஜமான் சாதி; மற்றொன்று அடிமை சாதி. பார்ப்பான் ஏர் உழமாட்டான்; கான்ஸ்டேபிள் வேலைக்கு வரமாட்டான். கீழ்த்தரமான வேலை யெல்லாம், அதாவது "எசமானே" என்று கூப்பிடுகிற வேலையெல்லாம் நமக்கு. உயர்ந்த வேலைகள் 'டேய்' என்று கூப்பிடுகிற வேலையெல்லாம் அவனுக்கு. இந்த ஏற்பாட் டுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக அவ்வளவு கட்டுப்பாடாகத் தொல்லை கொடுக்கிறான். இவையெல்லாம் பார்க்கும் போது சுயராஜ்ஜியமாவது (விடுதலையாவது) வெங்காயமாவது, நாட்டை பழையபடி வெள்ளைக்காரன் ஆண்டாலும் சரி. ரஷ்யக்காரன் ஆண்டாலும் சரி, சீனாக்காரன் ஆண்டாலும் சரி, கவலையில்லை; இந்த வடநாட்டானும் பார்ப்பானும் ஒழியணும் என்று கருதுகிறேன். இதற்காகவேதான் 1952 இலிருந்து பாடுபடுகிறேன். இனி பயப்படக்கூடாது; நமக்குப் பெரிய பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றன. அற்ப காரியங்களுக்கு எதற்கு ரகளை என்று கருதுகிறேன். இந்த அய்லண்ட் கிரவுண் டிலே (தீவுத்திடல்) மீறிக் கூட்டம் நடத்தினால் என்ன...? 8 நாளைக்குத் தண்டிப்பான்; செய்யமுடியாதா?

கண்ணீர்த்துளிக் கட்சிக்காரர்கள் பார்ப்பான் கிட்ட செலவுக்கு வாங்கிக் கொண்டு " பார்ப்பனீயம்" தான் கூடாது என்கிறார்கள். கம்யூனிஸ்டுக்குத் தலைவனோ பார்ப்பான். அதே மாதிரி சோஷலிஸ்ட், காங்கிரஸ் சங்கதி கேட்கவே வேண்டியதில்லை. நமக்கு ஒருத்தரும் உதவி பண்ணுவதில்லை . இங்கே ஒரு மாதம் தங்கி, தினம் 50, 50 பேராகப்போய் அய்லண்ட் கிரவுண்டிலே (தீவுத்திடலிலே) கூட்டம் நடத்திப் பார்க்க வேண்டும். எவனாவது கேட்டால், எங்க ஊரிலே இருக்கிறது; எங்களுக்குச் சொந்தமில்லாமே யாருக்கோ சொந்தமாவதா? என்று சொன்னால், எவன் என்ன பண்ணுவான்? 500 ஸ்டேஷன்களில் (இரயில்வே நிலையங்களில்) உள்ள இந்தி எழுத்தை அழிக்கத் தார் பூசு என்றால், ஒரே (நிலையத்தை) ஒரு ஸ்டேஷனை கல்லக்குடி ' என்று மாற்றப் போகிறேன் என்கிறார்கள். தமிழரசுக் கழகக்காரர்கள் வேறு குறுக்கே வருகிறார்கள். இந்தி எழுத்துக்களை அழித்தோம். இன்றைக்குத் தமிழ் எழுத்தை மேலே போட்டுவிட்டான். எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது.

'பிராமணாள் ஓட்டல்' என்று பெயர் பலகையில் போட்டு வைத்தி ருக்கிறானோ! என்ன நியாயம்? இரண்டு பெண்கள் இருக்கும் போது ஒரு பெண்ணைப் பார்த்து " இந்த அம்மா பதிவிரதாசிரோன்மணி" என்று சொன்னால், மற்றப் பெண்ணுக்கு என்ன அர்த்தம்? அதுபோல 100க்கு 97 பேராக இருக்கிற எங்கள் மத்தியில், சாதியே இல்லையென்கிற ஒரு அரசாங்கத்தில், லைசென்ஸ் வாங்கி 'பிராமணாள் ஓட்டல்' என்று போட்டால் மற்றவர் சூத்திரன்தானே? 'பிராமணாள்' என்று போட்டிருப்பதைத்தார் பூசி அழித்தால் என்ன? 144 சட்டப்பிரிவை என்ன செய்வது என்று யோசித்து முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதை இப் போது சொல்லிவிட்டால் அதற்கான பந்தோபஸ்து செய்து விடுவார்கள்.

பார்ப்பான் உன்னைத் தேவடியாள் மகன் என்கிறான். நீ அங்கே போய்ச் சாப்பிடுவது பலகாரமா? வேறே சங்கதியா? என்று கேட்டு மறியல் செய்ய வேண்டும். கோவிலுக்குப் போகிறவர்களிடம் அங்கே போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

ராஜகோபாலாச்சாரியார் வெளிப்படையாக ஜாதியைக் காப்பாற்று வதுதான் என் வேலை என்று சொல்லிவிட்டார்.

விடுதலை ; 07.10.1956.

பிராமணாள் பெயர் அழிப்புக் கிளர்ச்சி

பெரியார் அறிக்கை பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் 1957 மே 5 ஆம் தேதி தமிழ் நாட்டில் அநேக முக்கிய இடங்களில் நடைபெறலாம். அழிப்புப் பணியில் ஈடுபடுகிறவர்கள் அருள் கூர்ந்து எந்தவிதமான கலவரத்திற்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். அதுபோலவே ஓட்டல்காரர்களோடு எந்தவிதமான வாக்குவாதத்துக்கும், கைகலப்புக்கும் கண்டிப்பாக இடம் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோலவே போலீஸ் காவல்துறை அதிகாரிகளிடமும், அவர்கள் கைது செய்ய நேர்ந்தால் அவர்களுடன் எந்தவிதமான வாக்கு வாதமும், சம்பாஷணையும் வைத்துக் கொள்ளாமல், மரியாதையான முறையில் கைதியாக இணங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

தாங்களாக அழிக்க இணங்காமல், நம்மையும் அழிக்க விடாமல் எந்த ஓட்டல்காரராவது, சிற்றுண்டிக் கடைக்காரராவது, தடை செய்வார்களானால் அவர்களிடம்,

''நாங்கள் எங்கள் கழகத் திட்ட ஏற்பாட்டின்படி உங்கள் கடைக்கு முன்னால், சர்க்கார் இடத்தில் நின்று கொண்டு, உங்கள் கடைக்குச் சாப்பிட வருகிறவர்களை வணக்கமாக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதன் மூலம் உணவருந்தச் செல்ல வேண்டாம் என்று சொல்லப்போகிறோம்''

என்று சொல்லி வேண்டுகோள் செய்ய வேண்டிவரும் என்று சொல்லி விட்டு வந்து உணவருந்த வருகிறவர்களை வெளியில் நின்று வேண்டிக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த வேண்டுகோளைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒரு நாள் மாத்திரம் நடத்திவிட்டு, ஆங்காங்குள்ள நிலைமையை, நடப்பைத் தொடர்ந்து செய்வதற்கு ஆங்காங்குள்ள வசதியை, ஜில்லா கமிட்டி மூலம் எனக்குத் தெரிவிக்க வேணுமாய் வேண்டிக் கொள்கிறேன். பிறகு ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் ஏதாவதொரு கடையைத் தெரிந்தெடுத்து அங்கு தொடர்ந்து நடத்தலாமா என்பதைப் பற்றி யோசித்துத் தெரிவிக்கலாமென்றிருக்கிறேன்.

இனி, சென்னையைப் பொறுத்த அளவில், அழிப்புக்கு ஏதாவது தடங்கல் ஏற்படுமானால் அப்படிப்பட்ட கடைகளில் ஒரு கடையை நாளைய தினமே தெரிந்தெடுத்து - தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குச் செய்வது என்றும் இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறேன்.

அந்தப்படி செய்வதில் மாலை சுமார் 5 மணி முதல் சுமார் 8 மணி வரையில் தொண்டர்கள் இந்தப் பணியைச் செய்து வரவேண்டியது. வெளியூர்களில் நடத்தப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியும் சென்னையில் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வெளியூர்களிலிருந்து தொண்டர்கள் வரவேண்டிய விஷயம் பற்றியும் பின்னால் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சமயம் நாளைய தினம் அழிப்பு வேலைக்காக நான் கலந்து கொள்ளும் ஓட்டலிலேயே நாளை முதற்கொண்டே தொண்டர்கள் வேண்டுகோள் பணி துவக்கமாகலாம். எதற்கும் விவரமான வேண்டு கோள் அறிக்கை நாளை மறுதினம் வெளியிடலாமென்று இருக்கிறேன்.

- விடுதலை ; 04.05.1957 

பிராமணாள் சின்னங்களை

அகற்றும் நாள் வரப்போகிறது

நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறப் போகிற ஓட்டல் பெயர்ப் பலகையில் "பிராமணாள் ' ஒழிப்புக் கிளர்ச்சியைப் பற்றி விளக்கம் தருவதற்கே இங்கு வந்தேன். நான் இன்று பேச வேண்டிய இடம் சேலம். அங்கு நடைபெறும் கூட்டத்திற்கு வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. போஸ்டர்கள் போட்டு நகரெங்கும் ஒட்டப் பட்டுவிட்டன. நம்முடைய 'விடுதலை' நாளேட்டிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஏற்காட்டின் மலையிலிருந்து வந்தபோது வீட்டின் வாசலில் சேலத்து ஓட்டல் சங்கத்தின் கடிதம் ஒன்று என்னிடம் கொடுத்தார்கள். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன். என்னுடைய வேண்டுகோளைப் பத்திரிகையில் கண்டவுடன் உடனடியாக அவசரக்கூட்டம் போட்டு, சேலத்திலுள்ள எல்லா ஓட்டல் காரர்களே அழிப்பதற்கு முனைந்துவிட்டார்கள். அங்கே ஓட்டலைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. பின்பு வேறு விஷயங்கள் பேசிப் பயனில்லை என்ற காரணத்தினால் நட்டமானாலும் பரவாயில்லை என்று இங்கே வந்தேன்.

ஜனநாயக அரசாங்கத்தில் உரிமையிருக்கிறது என்று சொல்லுகிறார்கள். என்ன உரிமையிருக்கிறது? நடுத்தெருவில் ஒருவன் வேட்டியில்லாமல் போனால் அதைக் கேட்க எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அதுபோல் கேட்க எனக்கும் உரிமையிருக்கிறது. ஒருவன் அடிக்கிறான் என்றால் அதைத் தடுக்க ஒருவனுக்கு உரிமையிருக்கும் போது மற்றவர்களுக்கும் உரிமையில்லையா?

'பிராமணாள்' என்று பெயர்ப் பலகையில் எழுதப்பட்ட ஓட்டலினுள் எல்லோரும் பிராமணர்களா இருக்கிறார்கள்?" சோறு விலைக்கு விற்கிறவன் பிராமணனாக மாட்டான்; அவன் சண்டாளன்; பாலை விற்கிறவன் பிராமணியத்தை அடைய மாட்டான்' என்று மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறதே? உண்மையிலேயே பிராமணாள் இங்கு இருப்பதாகக் காட்ட முடியுமா? அப்படியே இருப்பதாகப் பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், குடிப்பவன், திருடுகிறவன், சூதாடுகிறவன், தில்லுமுல்லு செய்கிறவன் எல்லோரும் பிராமணன் என்றால் அதைக் கண்டிக்க மற்றவர்களுக்கு உரிமை வேண்டாமா? அப்படிக் கேட்டால் பிராமணர்களைக் குற்றம் கூறுகிறோம் என்றால் என்ன நியாயம்?

1926 ஆம் ஆண்டு ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம்' துவக்கத் திலிருந்தே "நம்மை அடிமைப்படுத்தி வரும் பார்ப்பனர்கள் ஒழிய வேண்டும். அவர்களால் உண்டாக்கப்பட்ட சாஸ்திர - இதிகாச புராணங்கள் ஒழிக்கப்படுவதோடு, இதன் பெயரால் பார்ப்பனர்கள் வயிறு வளர்த்து வரும் கடவுள்களை உடைத்து ரோடுக்குச் சல்லிப் போட வேண்டும்” என்று கூறி வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் முன் கூட்டிப்பார்த்தால் 1924 ஆம் ஆண்டு நான் காங்கிரசிலிருந்து வெளியேறிய அந்தக் காலத்திலிருந்தே மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன். எந்த மனிதனுக்கும் சாதியின் பெயரால் பட்டமோ, அதன் பெயரால் எந்த வித நிலைமையும் இருக்கக் கூடாது என்றும், சாதிப் பெயர் சாஸ்திரத்தில் - புராணத்தில் இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று எழுதியிருப்பதோடு மட்டுமன்றி, பல கூட்டங்களிலும் பேசியும், மாநாடுகள் மூலம் தீர்மானங்களும் போட்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து தான் சுயமரியாதைக்காரர்களான திராவிடர் கழகத்தினராகிய நாங்கள் செய்து வருகிறோமே தவிர, இன்று திடீரென செய்யப்படுவதாக யாரும் கருத இடமில்லை.

ஓட்டல்காரர்கள் லைசென்ஸ்படி பஞ்சமர்கள் - சூத்திரர்கள் என்று சொல்கின்ற எல்லோரும் இங்கே வரலாம் என்ற சட்டம் இருக்கும் போது, பிராமணாளுக்கு மட்டும் என்று போட்டிருந்தால், எல்லோருக்கும் இடமில்லை என்றால், ஆறுமாத தண்டனை என்று சொல்லுகிறவர்களைப் போய் கேட்க வேண்டிய விஷயத்தை விட்டு விட்டு என்னிடம் ஏன் வருகிறார்கள்?

கிறிஸ்தவர்கள் - முஸ்லிம்கள் - பறையன் என்ற பெயரால் தீண்டாதவனாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடம் உண்டு என்று ஒப்புக் கொண்ட ஒரு பொது இடத்தில் எவ்வளவு உரிமையுள்ளதோ அதுபோல இருப்பதாகக் கட்டுப்பட்டுத்தானே ஓட்டல் நடத்துகிறார்கள்?

பொது இடத்திலுள்ள சத்திரம் யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் முனிசிபாலிட்டியோ, டிஸ்ட்ரிக்ட் போர்டோ யாருடையதாக இருந்தாலும் திராவிட இனத்துக்கு இழிவு காட்டுகிற எழுத்துக்களை அழித்தே தீருவோம் என்று முன்பு அழித்திருக்கிறோம். பட்டுக்கோட்டை தோழர் அழகிரிசாமியின் சமாதிக்கு மாலையிட்டு மரியாதை செய்யப் போயிருந்தபோது அந்த இடுகாட்டில், சூத்திரர்கள் சுடுமிடம், பிராமணாள் சுடுமிடம் சவுராஷ்டிரர்கள் சுடுமிடம் என்று கல்லில் செதுக்கி நாட்டப் பட்டிருந்தது. அதைக் கண்ட நான் இது எவ்வளவு நாட்களாக இருக்கிறது என்று அங்குள்ளவர்களைக் கேட்டேன். தஞ்சாவூர் ராஜா இருந்த காலத்திலிருந்து இதுவுமிருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப் பெயர்களை எடுத்துவிடும்படி, முனிசிபாலிட்டியாருக்குக் கடிதம் எழுதிக் கேட்பது; மறுத்தால் அதற்கு வேண்டிய நடவடிக்கையாக நாம் மேற்கொள்வது என்று, உடனே தீர்மானம் போட்டார்களோ என்னமோ உடனடியாக அகற்றப்பட்டது. எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் நம்மை இழிவுபடுத்திக் காட்டும் பெயர்களைப் பார்க்கிறபோது வேதனையாகத் தான் இருக்கிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் மனிதனுக்கு மனிதன் உயர்த்திக் காட்டும் நிலைமையை மாற்றித்தான் ஆக வேண்டும் என்று சொல்கிறேன், இன்றல்ல, நீண்ட காலமாக ஒருநாள் பிராமணன் உயர்சாதி என்று காட்டும் சின்னங்களை அகற்றும் நாள் வரத்தான் போகிறது.

உன் உரிமைக்குச் சட்டம் என்றால், எங்களுடைய உரிமைக்கு எது என்று தெரிந்து கொள்ளத்தான் போகின்றோம். மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு தன்மை இருக்கிறதே அதை எல்லாம் ஒழிக்கத்தான் போகிறோம்.

நம் நாட்டிலே ரிஷிகள் - ஞானிகள்-முனிவர்கள் - சித்தர்கள் என்று கூறுகிற எவனாவது, சொல்லியிருக்கிறானா, கோவிலுக்குள் எல்லாரும் போகலாம் என்று? கோவிலைப்பற்றி, கடவுளைப்பற்றி எழுதப்பட்டிருப்பவை அனைத்தையும் போட்டு தீ வைத்து சாம்பலாக்கு என்று சொன்ன பின்புதான் சட்டம் வந்தது. எல்லோரும் கோவிலுக்குள் போகலாம் என்று.

வைக்கம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தெருவில் நடக்கக் கூடாது என்று சொன்ன காரணத்தால் மறியல் நடத்தியதன் பலனால்தானே திருவாங்கூர் கோயில் திறக்கப்பட்டது. நிழல் பட்டால் பாவம் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் செய்த கொடுமை கொஞ்சமா? நம் நிழலும், கண்பார்வையும் மேல் விழுந்தால் எவ்வளவோ மோசமானது என்று கூறுகிற சாஸ்திரம் ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்குப் போக வேண்டுமானால், முடக்கத்தில் வரும்போது ஹோ என்று சத்தம் போடவேண்டும். இந்த சத்தத்தைக் கேட்டு தீண்டப்படா தவன் வருகிறான் என்று பார்ப்பனர்கள் வெளிவர மாட்டார்கள். அப்படியிருந்த காலத்தில் செய்த புரட்சி, சர்.சி.பி. இராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக இருந்த காலத்தில் இராஜா பிறந்த தினத்தின் பெயரைச் சொல்லி எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று சொன்னார்கள்.

இந்துமதத்தின் பெயரால் இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் செய்த கொடுமையை வாய்விட்டு சொல்ல முடியாது. அந்தக் கொடுமையின் காரணமாகத்தான் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஆரிய சமாஜம், முஸ்லிம் போன்ற ஸ்தாபனங்கள் உண்டாயின.

(ஈரோட்டில்) நண்பர் குருசாமி முதலியவர்கள் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் எல்லோருக்கும் உரிமையும் விகிதாச்சாரமும் வேண்டுமென்று கூறிக்கொண்டே வருகிறோம். இன்று அழிக்கப்படும் பிராமணாள்' என்ற கிளர்ச்சியில் பலனில்லை என்றால் மறியல் செய்யப்போகிறோம்.

பிராமணாள் என்ற சொல்லை எப்படி இழுக்கென்று திராவிடர்க்கு கருதுகிறோமோ அதுபோலவே கோவிலில் நடைபெறும் சமஸ்கிருதத்தையும் கருதுகிறோம். நம் நாட்டிலே உள்ள தமிழ் மொழி ஆட்சி மொழி ஆகிவிட்ட பிறகு இங்கு ஏன் சமஸ்கிருதம்? சர்க்கார் இதைக் கேட்கவில்லையானால் நாங்கள்தானே இதைக் கேட்க வேண்டும். உள்ளே இருப்பது குழவிக்கல் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்குத் தமிழில் சொன்னால் என்ன? சாமி செத்தாபோகும்? இப்படிக் கேட்டால் பார்ப்பான் என்ன சொல்கிறான் என்றால் நாம் பார்ப்பனனைத் துவேஷிக்கிறோமாம். அப்படியானால் போலீஸ்காரன் குற்றம் செய்த வனை அடிக்கிறான் என்றால் போலீஸ் துவேஷம் என்று சொல்ல முடியுமா? இதனால்தான் மானம் அற்ற நம் திராவிட இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்னை வகுப்புவாதம் பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். வகுப்புவாதம் என்றால் என்ன பொருள்? எனக்கு ஏன் கீழ் சாதி? எனக்கு ஏன் நான்காம் சாதி? வகுப்புவாதம் என்றால் எங்கள்  வகுப்புக்கு உள்ள உரிமையைவிட அதிகம் கேட்டால் வகுப்புவாதம் என்று சொல்லலாம். எங்களுக்கு உள்ள உரிமையைக் கொடு என்று கேட்பது எப்படி வகுப்புவாதமாகும்?

சட்டசபைக்குப் போக வேண்டுமானால் பார்ப்பானுடைய தயவு வேண்டும். தான் எழுதும் பத்திரிகையில் பிராமணர்கள்' என்றுதான் எழுத இயலும். இதைத்தானே காண்கிறோம்? இந்த ஈனப் பிறவிகளால் எப்படி நமக்குள்ள உரிமையைத் துணிந்து கேட்கவோ, எழுதவோ முடியும்?

தமிழர்களால், நடத்தப்படுகின்ற பத்திரிகைகளுக்கு நாட்டில் ஏது செல்வாக்கு? நாம் நம்முடைய தோழர்களுக்குச் சொல்லி அந்தப் பத்திரிகை நம்மவர்களால் நடத்தப்படுகிறது; அதை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும், அதை வாங்கிப் படிக்கிறார்கள் என்றாலும், பார்ப்பனனுடைய காலடியில் வீழ்ந்துதானே கிடக்கிறார்கள்? அவர்களைப் பற்றி எழுதுகிறார்கள். ஆகவே, இவர்களைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ கவலையில்லை. நம்முடைய வேலையை நாம் செய்து கொண்டு போவோம் என்ற எண்ணத்தின் மீதுதான் செய்கின்றோமே தவிர, மற்றபடி ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டு எதையும் இதுவரையில் நாம் செய்யவில்லை .

இந்நாட்டில் மலையாளிகளின் அட்டகாசம் எல்லாத் துறைகளிலும் அதிகமாகவே இருந்தது. அதைக் கண்டு என்னுடைய 78 ஆவது ஆண்டு பிறந்த தினத்தின் போது அறிக்கைவிட்டேன். சர்க்கார் இரண்டாகப் பிரிந்ததும் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. உத்தியோகத் துறையிலும் கொஞ்சம் குறைந்திருக்கிறது; என்றாலும் இனியும் விட்டுக் கொடுக்க முடியாது. அதன் பிறகு கொடி கொளுத்துவேன் என்று சொன்னேன். அதைக் கேட்டவுடன் காரியம் எப்படி நடந்தது? யாருடைய மனமும் நோகாமல், யாரையும் அடிக்காமலும், யாருக்கும் அதிகமான தொந்தரவு கொடுக்காமலும் காரியம் சாதித்தோம். அதுபோலவே இந்தியை அழித்தோம். பிள்ளையாரை உடைத்தோம். இராமன் படத்தைக் கொளுத்தினோம். இதனால் நன்மையில்லை என்று சொல்ல முடியுமா? அதுபோலத்தான் நாளை நடைபெறும் உணவு விடுதியின் பிராம்ணாள்' சொல் அழிப்பும். இதில் வெற்றிபெற முடியவில்லையானால் முன்பு வடநாட்டான் கடை முன்பு நின்று கொண்டு மறியல் செய்தது போல் முதலில் ஒரு ஆயிரம் பேர்களை விட்டுப்பார்ப்போமே! எத்தனையோ கிளர்ச்சி செய்தோம். அதுபோலவே இதையும் செய்வோம்.

இந்த எதிர்ப்பின்போதும், வடநாட்டுக்கடை மறியலில் நடந்தது போல் கைது செய்து கொண்டு போனால் இரண்டு நாள் கழித்து வெளி வந்ததும், மீண்டும் தொடங்கினால் போகிறது. இதில் நமக்கென்ன நட்டம்?

இதில் சர்க்காருக்கும் ஓட்டல்காரருக்கும் புத்தி வரவேண்டும். இதனுடய அடிப்படைக் காரணம் என்னவென்று அறிவில்லையானால் முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு நாம் வந்து விடுவோம்.

நாங்கள் இதுவரை செய்த காரியங்களில் கலவரம் நடந்ததில்லை. இதிலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது. வேடிக்கை பார்ப்பவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டும்.

சர்க்காருக்கு ஒரு கடமையிருக்கிறது. சட்டமும் இருக்கிறது. அவர்களுடைய கடமையைச் செய்துதான் தீரவேண்டிவரும். ஓட்டல்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமது முடிவைப் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் உண்டு. நாங்கள் அழிக்கப் போகும் போது அழிக்க வேண்டாம் என்று சொன்னால் சரி என்று கேட்போம். பின்பு மறியல் செய்வோம். அதையும் தடை செய்தால் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்போம். முன்பு இந்தி எதிர்ப்பு மறியலின் போது சென்னை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பு மறியல் செய்தபோது போலீஸ்காரர்கள் அங்கு நிற்காதே என்று சொல்லுவார்கள். பின்பு எங்கே நிற்கச் சொல்லுகிறார்களோ அங்கே நிற்போம். இரண்டு நிமிடம் கழித்து கைது செய்து கொண்டு போவார்கள்.

அந்த நிகழ்ச்சியை அப்பொழுது எந்தப் பத்திரிகையும் போட வில்லை. பின்பு இன்று நான்கு பேர் கைது என்று போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரியும்படியான வாய்ப்பு வந்தது.

இந்தக் கிளர்ச்சி தொடர்ந்து மறியல் செய்வது சென்னையில் மட்டுந்தான். இது நீண்டு போகுமேயானால் எல்லா ஊர்களுக்கும் பரவித்தான் தீரும். இந்த போராட்டம் நமக்கும், ஓட்டல்காரருக்கும் அல்ல. சாதியைக் காப்பாற்றுவேன் என்று சொல்கிற ஆச்சாரியாருக்கும், நமக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு வேலை செய்கிறார்கள். ஆச்சாரியார் தன்னுடைய ஆயுள்வரை இந்த வேலையை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார். ஆகவே நமக்கும் நம்முடைய கழகத் திற்கும்தான் அதிகத் தொல்லைகளும், கஷ்டங்களும் உண்டு. இதைச் சட்டசபை மூலம் தீர்த்துக்கொள்ள முடியாதா என்று கேட்கலாம்.

சட்டசபையில் இரண்டு கட்சிகள்தான் இருக்கின்றன. ஒன்று சாதியை ஒழிக்கும் கட்சி. மற்றொன்று சாதியை ஆதரிக்கும் கட்சி.

ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி; இரண்டாவது அதிகாரத்திலுள்ள கட்சி. அவர்களுடைய யோக்கியதையையும், இவர்களுடைய யோக்கியதையையும் எப்படி என்று பார்க்க வேண்டாமா?

ஒரே ஆள்; ஒரே யோக்கியதை உள்ளவர்களுக்கு மத்திய சர்க்காரில் 85 ரூபாயும், மாகாண சர்க்காரில் 65 ரூபாயும் ஏன்? போலீஸ்காரனுக்கு 45 ரூபாய்; தபாலாபீசில் வேலை செய்கிறவனுக்கு 90 ரூபாய்; ரயில் வேயில் வேலை செய்யும் கேட் கீப்பருக்கு 80 ரூபாய் என்றால் எதற்காக இந்த பேதம்? தங்களுடைய வாழ்வுக்கென்று பார்ப்பான் இடம் வைத்துக் கொண்டான். அதனால்தான் எல்லாப் பார்ப்பனர்களையும் வேலையில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்கிறார்கள். பஞ்சப்படியில் கூட அவர்களுக்குத்தானே உயர்ந்தது. நம்முடைய கோரிக்கைகள் இவ்வளவு சுலபத்தில் அங்கு போக முடியாது. இந்தப் பேதம் ஏன் என்று கேட்க நாதியில்லையே இந்த நாட்டில்.

வெள்ளையன் ஆட்சி இங்கு நடந்தபோது அவர்களுக்கு ஏன் உயர்ந்த சம்பளம்? நம் நாட்டவருக்கு மட்டும் ஏன் தாழ்ந்த சம்பளம் என்று காந்தியார் கேட்டாரே? அதன் மூலமாகத்தானே அவருடைய கட்சி வளர்ந்தது? மத்திய சர்க்காரிலுள்ள மந்திரிகளுக்கு 3000 ரூபாய் சம்பளம்; இங்குள்ளவர்களுக்கு 1500 ரூபாய் சம்பளம்; எதற்காக இந்தப் பேதம்? இதைப் பற்றி எந்த மந்திரியாவது கேட்க முடியுமா?

நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் பொய்யும், புரட்டும் கொண்டதாகவும், அவனவன் பதவி, சம்பளம், பர்மிட் போன்ற தனித்தனி தொழில் வைத்துக் கொள்ளவும்தானே இருக்கிறது.

சக்கிலி வைக்கிற செருப்புக் கடைக்கும், பார்லிமெண்ட் மெம்பர், நாடாளுமன்ற உறுப்பினர் வைக்கும் அதே கடைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சக்கிலி வைத்திருந்தால் அவன் கடையில் கூட்டம் இருக்காது; வியாபரமும் நடக்காது. பார்லிமெண்டு மெம்பர் கடையானால் நல்ல லாபமும் கூட்டமும் உண்டு. இதனால் பொது மக்களுக்கு என்ன லாபம்?

மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமானால், முதலாவது நல்ல ஒழுக்கமும் நேர்மையும் இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் ஓட்டலிலுள்ள பிராமணாள்' பெயரை ஒழிக்கிறோம். இதன் பலன் பிறகுதான் தெரியும்.

இந்த நாட்டிலே கம்யூனிஸ்டு கட்சி, சோஷியலிஸ்டு கட்சி இன்னும் பல உதிரிக் கட்சிகளும் இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் அவரவர்கள் வெளிநாட்டானைக் காப்பியடிப்பார்கள். பணக்காரன், மிராசுதாரர் இல்லாத நாடு எது? இரண்டொரு நாடுகள் போக மீதி 100க்கு 90 இல் பணக்காரன் இருக்கிறான். எஜமான் இருக்கிறான். மிராசுதாரர் இருக்கிறான். ஏழையும் இருக்கிறான்; எந்த நாட்டிலும் இல்லாதது போலவும் இங்கு மட்டும் இருப்பதாகவும் சொன்னால்தானே தன் கட்சியை நடத்த முடியும்? நமக்கு அப்படி இல்லை; வேறு எந்த நாட்டிலும் செய்யாத காரியத்தை நாம் செய்கிறோம்; வேறு எந்த நாட்டிலும் இல்லாத பார்ப்பன இனம் இங்குதான் இருக்கிறது. பொதுவாக மக்களுக்குச் செய்ய வேண்டிய பணியை நல்லெண்ணம் இருந்து செய்தால் போதும்.

உலக நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா, எகிப்து, அரேபியா, துருக்கி, இவைகளில் இல்லாத, பார்க்க முடியாத பறையன், சக்கிலி, பார்ப்பான் என்ற ஆயிரம் பேதங்கள் கொண்டவை இங்குதானே? இதை ஒழிக்காமல் சட்டசபைக்குப் போய் என்ன பயன்? காரணம் கம்யூனிஸ்டுகள் கேரளத்தில் சட்டசபைக்குச் செல்லும்போது சட்டத்திற்குக் கட்டுப்பட்டுத்தானே மந்திரியாகப் போனார்கள். பின்பு எப்படிப் பணக்காரர்களை ஒழிக்க முடியும்?

மதத்திற்கோ? சாதிக்கோ கெடுதலாக ஒன்றும் செய்ய மாட்டோம் என்று நான்கு மாதங்களுக்கு முன்பு ஏன் சட்டசபைக்குப் போக வேண்டும்? இன்று எல்லாக் கட்சிக்காரனும் சொல்லுகின்ற திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ்காரன் வைத்திருக்கிறான். அதனால் தான் வெற்றி பெற்றான். 130 - க்கு 15தானே வரமுடிந்தது. மக்களை ஏமாற்றத் தெரிந்த வர்கள், பணத்தைச் செலவு செய்தும், காங்கிரசைத் தோற்கடிக்க முடியவில்லையே! ஏன்? கம்யூனிஸ்டு, சோஷியலிஸ்டுகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டுதானே நின்றார்கள்; வரமுடிய வில்லையே? காரணம் என்ன? இவர்களிடம் கொள்கை இல்லை! காங்கிரஸ்காரன் இவர்கள் எல்லாருடைய கொள்கையும் தன்னிடம் இருப் பதாகச் சொன்னான்; வெற்றி பெற்றான். இன்னும் பத்து எலக்ஷன், அய்ம்பது ஆண்டுகள் நடந்தாலும் இப்படித்தான் நடக்கம். மக்களுக்கு வேண்டிய புதுக்கொள்கை வந்தால்தான் மாற்றம் காணமுடியும். நேரு சொல்கிறார், சோஷியலிசம்தான் எங்களின் திட்டம் என்று. காங்கி ரஸ்காரர்களிடம் எல்லா கட்சியின் கொள்கையும் அடங்கிக் கிடக்கின்றன. ஆகவே, அவர்களை எளிதில் எதுவும் செய்துவிட முடியாது.

ஆகவே, சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி செய்துவிட்டு, அதை மீறி நான் முன்பு செய்தது பொய்ச் சாத்தியம் என்று கூறினால் வெளியில் கொண்டு வந்து தள்ளுவார்கள். ஆகவே, இந்த நிலைமைகள் நமக்குத் தேவையில்லை.

நமக்கிருக்கும் இழிநிலை மாறி சூத்திரர்கள், பஞ்சமர்கள், நான்காம் சாதி என்ற பேதம் ஒழிந்து எல்லோரும் ஓர் இனமக்கள் என்ற நிலை மைக்குக் கொண்டு வந்தால் தான், நாமும் நம் இனமும் மானமுள்ள மனிதத் தன்மையடைந்ததாக எண்ண முடியும். அந்த இழிநிலையைப் போக்க நாளையதினம் (05.05.1957) ஈடுபடும் கிளர்ச்சியிலும், அதைத் தொடர்ந்து ஆண், பெண் எல்லோரும் ஈடுபடவேண்டுகிறேன்.

- விடுதலை ; 05.05.1957.

அரசாங்கத்துக்கு

அறிவிப்பு

பார்ப்பனர்கள் தங்கள் சுயநல வியாபாரத்தை முன்னிட்டு நடத்தும் ஓட்டல், சிற்றுண்டிச் சாலைகளில் தங்களை மேல்ஜாதியார் என்று காட்டிக்கொள்ளுவதற்காகப் பலர் "பிராமணாள் ஓட்டல் " என்பதாகப் பெயர்ப்பலகை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஓட்டல்கள் அரசாங்கத்தாரிடம் அனுமதி பெற்று நடத்துவதால் 100க்கு 100 அது பொது இடமேயாகும்.

பொது இடத்தில் ஜாதிக்குறிப்பு இருக்கவிடக் கூடாது என்பது திராவிடர் கழகக் கொள்கையாகும்.

இதை ஓட்டல்காரப் பார்ப்பனர்களும் ஒப்புக் கொண்டிருப்பது போலவே காட்டிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்த விஷயத்தில் நமக்கும் பார்ப்பனர்களுக்கும் கருத்து வேற்றுமை இல்லை. அப்படி இருந்தும் பார்ப்பனர்கள் தங்கள் சோறு - சிற்றுண்டிக் கடைகளில் 'பிராமணாள்' என்று பெயர் பலகையில் விளம்பரம் போட்டிருப்பதற்குக் காரணம் அந்தப்படி பெயர்ப்பலகை உள்ள கடைகள் மாமிச பதார்த்தம் விற்க தடை என்று பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு அடையாள மாகவே போடப்பட்டிருக்கிறது'' என்று சமாதானம் சொல்லுகிறார்கள். இதிலிருந்து எந்த ஓட்டல் பார்ப்பனரும் தன்னைப் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளத் தனக்கு உரிமை இருக்கிறது என்பதாக வாதாட முன்வரவில்லை என்பது தெரிகிறது.

ஆனால், அந்தப்படி பெயர் போடக் காரணம் மரக்கறி பதார்த்தம் விற்கிற கடை என்று தெரிவிப்பதற்காகவே என்று சொல்லுவது உண்மையாய் இருக்குமானால் அந்தப்படி மரக்கறி பதார்த்தங்கள் ஓட்டல் என்று அவர்கள் விளம்பரம் போட்டுக் கொள்ளுவதை நாம் ஆட்சேபிப்பதில்லை.

இந்த நிலையில் எப்போது பார்ப்பனர்களுக்கே தாங்கள் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளுவது சரியல்ல என்று கருதுகிறார்களோ அப்போது ஏன் அந்தப் பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

“இப்போது இங்கு உரிமை பற்றிய தகராறு இல்லை. சொல்லைப் பற்றிய தகராறுதான் இருக்கிறது''

இந்த நிலையில் அந்தச் சொல் மற்றவர்களை (திராவிடரை) இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சொன்னால் ஏன் அதை மாற்றிவிடக் கூடாது என்றுதான் கேட்கிறேன்? இதற்காக ஏன் தகராறு நடக்க வேண்டும்? இந்தத் தகராறை விஷமத்தனம் என்ற கூறுவதானால் இதை எதிர்ப்பதை அயோக்கியத்தனம் என்றுதானே சொல்ல வேண்டும்? ஓட்டல் முதலாளிகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதாவது ஒரு வார்த்தையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பும் காட்டவில்லை.

"ஆனதால் அதை எடுத்துவிடச் சொல்லுவது சட்ட விரோதமோ உரிமை விரோதமோ ஆவதில்லை". தவிர " அப்படிப்பட்ட ஓட்டலுக்குச் சென்று உணவருந்தாதீர்கள்'' என்று கேட்டுக்கொள்ளுவதும் மறியல்" செய்வதும் எந்தச் சட்டப்படியும் தடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படிக் கேட்டுக் கொள்ளுவதன் மூலம் கலகம், சமாதானபங்கம், பலாத்காரம் ஏற்படுகிறது என்பதாகக் காணப்பட்டால் கட்டாயம் அப்படிப்பட்ட காரியம் ஏற்படாமல் தடுக்கச் சர்க்காருக்கு உரிமை உண்டு - என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் அப்படிப்பட்ட நிலை யாரால் ஏற்படுகிறது - எந்தச் சட்டவிரோதமான காரியம் செய்வதால் ஏற்படுகிறது - என்பவைகளைச் சர்க்கார் தீர விசாரித்துத் தெரிந்து, அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர மற்றப்படி - சட்டப்படி நடக்க உரிமையுள்ள காரியங்களைத் தடுப்பது சர்க்காரே சட்டவிரோதமாய் நடந்து சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் மக்களையும் சட்டம் மீறும் படியான கட்டாயத்திற்கு ஆளாக்குகிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்போது இதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால், இந்த மறியல் என்பதை ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களால் நடந்தால் போதும் என்று கருதின நான், சர்க்காரின் இந்த நியாய விரோதமான - சட்ட விரோதமான காரியத்திற்குப்

பிறகு நேரம், காலம் இல்லாமல், இடம் இன்னதுதான் என்பதாக இல்லாமல், நபர்கள் இத்தனை பேர் தான் என்பதில்லாமல் மறியல் செய்து இந்த உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சர்க்காருக்குத் தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவத்தில் எதுவும் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட சர்க்காரை அவமதிக்கக் கருதிவிட்டால், அந்த ஆணவமும், அதிகாரமும் பலம் குறைந்ததாக ஆகிவிடலாம்.

- விடுதலை ; 09.05.1957.

ஆகஸ்ட் கிளர்ச்சி

சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சம்பந்தமாக, சட்டசபையில் ஏற்பட்ட பிரஸ் தாபத்தின் பேச்சின் போது, போலீசு மந்திரி அவர்கள் பேசிய பேச்சுக்களில் இருந்தும், பார்ப்பனர்கள் இருந்துவரும் நிலையில் இருந்தும், ஜாக்கிரதையாக சிந்தித்துப் பார்ப்போமானால், மறியல் காரியம் என்பது வேறுவிதமான நிலைமை ஏற்பட்டாலொழிய குறைந்தது ஒரு ஆண்டு காலத்துக்குக் குறையாமல் நீண்ட நாளைக்கு நடந்து வரும் போல் தெரிகிறது.

இந்த மறியலால் திராவிடர் கழகத்திற்கு இதுவரை எந்த விதமான கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டுவிடவில்லை. சர்க்கார் தொண்டர்களைக் கைது செய்வது என்பதில் சர்க்கார் எவ்வளவு அதிக்கிரமமான முறையைக் கையாண்ட போதிலும், அது ஒன்றும் கழகத்திற்குப் பெருங்கேடாகவோ, சகிக்க முடியாததாகவோ ஆகிவிடவில்லை . 1938-இல் ராஜாஜி அவர்கள் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் அய்ந்து ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்குமேல் 15 நாள் முதல் கொண்டு இரண்டு ஆண்டு வரையில் கடின காவல் தண்டனையும், 2000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டும், சர்க்கார் இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று வாக்குறுதி அறிக்கை கொடுக்கும் வரை மறியல் நிறுத்தப்படவில்லை. அதற்குப் பிறகும் இராமசாமி ரெட்டியார் முதல் மந்திரியாக இருந்த காலத்தில் கும்பகோணத்தில் தொண்டர்களை உத்தரவு மீறியதற்கு ஆக மலையாளப் போலீசை விட்டு முழங்கால்களாகப் பார்த்து முட்டி முட்டியாகக் குண்டாந்தடியால் அடிக்கச் செய்தும், தொண்டர்கள் மேலும் மேலும் வந்து குவிந்து, சர்க்கார் பின்வாங்கும் வரை அடி வாங்கிக் கொண்டு அந்த உத்தரவை கேன்சல் செய்யும்படி செய்தார்களே ஒழிய யாரும் ஓய்ந்துவிடவில்லை. இப்போது அப்படிப்பட்ட தண்டனையும் இல்லை; அப்படியிருக்க, மறியல் எத்தனை நாள் ஆனாலும் தொடர்ந்து நடந்துதான் தீருமே ஒழிய நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படாதென்பது உறுதி.

ஜெயில் கொடுமையும், எந்தவிதத்திலும் ஆச்சாரியார் காலக் கொடு மையைவிட அதிகக் கொடுமையானது என்று சொல்லிவிட முடியாது. தினம் 3 பேர்கள் அனுப்பப்பட்டு வருவதால் ஒரு ஆண்டுக்கு 1000 பேர்கள்தான் தேவைப்படுவார்கள். பணச்செலவும் அதிகம் ஆகி விடாது. மக்கள் தேவைக்கு தாராளமாய் உதவி வருகிறார்கள்.

சர்க்கார் அபராதம் என்று ஆளுக்கு ரூ.150 வீதம் போட்டாலும் ஒருவரிடமும் வசூலிக்க முடியாது. ஏனெனில் பணம் உரிமை இல்லாதவர்களாகத்தான் அனுப்பப்படுகிறார்கள். சிலர் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளே தவிர பிள்ளைகளுக்குச் சொத்துரிமை இல்லை என்றே சொல்லலாம்.

போலீசார் பணவசூலுக்கு வந்தால் வீட்டுக்காரர்கள் தைரியமாக இங்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கண்டிப்பாகச் சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்கள். பார்ப்பன அதிகாரியோ, மலையாள அதிகாரியோ அதிக்கிரமம் செய்வார்களானால் அது ஒரு தனிக் கலகமாக முடிந்து ஊர் சிரிக்க ஏற்பட்டு விடும். ஆகவே, நீண்டநாள் ஒரு சிறு காலட்சேபம் போல் இந்தக் கிளர்ச்சி நடந்து வந்து, நாட்டில் ஒரு பெரும் புரட்சிக்கு லாயக்கான பார்ப்பன வெறுப்பும், புரட்சி உணர்ச்சியும் ஏற்பட உதவும் என்பது திண்ணம். ஆகையால் இதற்கு எப்போது முடிவு என்று யாரும் கவலைப்படவேண்டியது இல்லை.

இதன் மத்தியில் (1957) ஆகஸ்ட் முதல் தேதி வருவதால், அந்தத் தேதியை வழமை போன்று ஆகஸ்டு கிளர்ச்சியாகக் கொண்டு தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் உள்ள கழகத் தோழர்கள் ஆகஸ்ட் ஒன்று ஆம் தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஆங்காங்குள்ள பார்ப்பனர்கள் ஓட்டல்களில், அது பிராமணாள் ஓட்டல்' என்ற பேர் போட்டி ருந்தாலும் சரி, வெறும் ஒட்டலாயிருந்தாலும் சரி, பார்ப்பனர் ஓட்ட லாயிருந்தால் அவை எல்லாவற்றிலும் தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் போக்குவரத்து மக்களுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல் நின்று கொண்டு சாந்தமும், சமாதானமும் ஆனதன்மையில் ஓட்டலுக்கு உணவருந்தச் செல்லும் தமிழ் மக்களைப் - பார்ப்பனர் அல்லாதவர்களள மாத்திரம் பார்த்து,

"அய்யா, இந்த ஓட்டல் பார்ப்பானுடையது. இந்தச் சாதி நம் குடியை, வாழ்வைக் கெடுத்த சாதி. நம்மை ஏமாற்றி பாடுபடாமல் நமது உழைப்பைச் சுரண்டிக் கொழுத்திருப்பதோடு நம்மைச் சூத்திரன், தாசிமகன், பறையன், சக்கிலி, சண்டாளன், கீழ்சாதி, இழிமகன் என்றெல்லாம் சட்டம், சாஸ்திரம், வேத, புராண, இதிகாசங்களில் எழுதி வைத்துக்கொண்டு, அந்தப்படியே நடத்தி வருகின்றனர். இந்தப் பார்ப்பன ஓட்டலில் நாம் சென்று உணவருந்துவது இழிவு! இழிவு! மகா இழிவு! மானங்கெட்ட கீழ்த்தர இழிவு! அய்யா, அருள் கூர்ந்து அங்கு செல்லாதீர்கள்'' என்று கைகூப்பி , குனிந்து, கெஞ்சிக் கேட்டு திரும்பிப் போகும்படி செய்ய வேண்டும். இந்தப்படி நோட்டீசு போட்டு விநியோகிக்க வேண்டும். அன்று காலை முதல் நம்பிக்கையான தொண்டர்கள் வசம் உண்டியல் பெட்டி கொடுத்து, ஒரு நயாபைசா முதல் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி வசூல் என்று நல்ல தொகை வசூல் செய்து உடனே "விடுதலை" காரியாலயத்துக்கு வந்து சேரும்படி மணி ஆர்டர் (M.O) அனுப்பப்பட வேண்டும். மறியல் செய்த விவரத்தையும் எழுதி அனுப்ப வேண்டும்.

இந்த இரண்டு காரியமும் நடந்தேறுவதை முன்னிட்டுத்தான் அடுத்தத் திட்டம் காண வேண்டும்.

போலீசாருடன் தகராறு சிறிது கூட கூடாது. சர்க்கார் பொது தடையுத் தரவு போட்டால் அதைச் சென்னையைப் போல் தாராளமாக மீறலாம். ஏனென்றால் அந்த உத்தரவு சட்டவிரோதமானதால் மீறி சர்க்காரின் சட்ட விரோதமான காரியத்தால் தண்டனை அடையலாம். அப்போதுதான் ஜனநாயகம் என்பது முட்டாள்களால் தெரிந்தெடுக்கப்பட்ட யோக்கியப் பொறுப்பற்றவர்கள் ஆட்சி என்பது ருஜுவாகும் (மெய்ப்பிக்கப்படும்). ஆனால் கலவரம், சமாதான பங்கம், வெறுப்பு, துவேஷம் ஆகியவை களுக்கு அனாவசியமாய் இடம் கொடுக்கக் கூடாது.

- விடுதலை ; 23.07.1957.

 

பெரியார் வேண்டுகோள்

தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்களுக்குப் பெரியார் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் :

மாவட்டத் தலைமைக் கழகத் தலைவர் அவர்களே! செயலாளர்களே! நிருவாகிகளே!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி நாடு முழுவதும் - அதாவது தமிழ்நாடு ஊர்கள் முற்றிலும் பார்ப்பனர்களின் சிற்றுண்டி, உணவுச் சாலைகளில் தமிழர்கள் உணவு அருந்தச் செல்லுவதை வேண்டாமென்று வேண்டிக் கொள்ளுதல் மூலம் தடுப்புக்கிளர்ச்சி நடத்த வேண்டியது அவசியமென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக கழகப் பிரமுகர்கள், நீங்கள் என்ன செய்யப் போகி றீர்கள்? அருள் கூர்ந்து உடனே கமிட்டி நிறுவி ஒவ்வொரு கடைக்கும் வேண்டுகோள் வீரர்களை ஏற்பாடு செய்து நல்ல வண்ணம் வெற்றிய டையும்படியாகப் பாருங்கள்!

இது மிகமிக முக்கியமான வேலை, இதிலிருந்துதான் பார்ப்பனரின் சமுதாயம், அரசியல், அறிவுத்துறை ஆகிய வாழ்வுகள் நம்மை இழிவுபடுத்தி அழுத்தியிருக்கும் நிலையிலிருந்து மீளுவதற்கு வழி ஏற்படப் போகிறது. இந்தத் தடுப்பு என்பது சின்னக் காரியம் அல்ல. அருள் கூர்ந்து ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாகக் கிளர்ச்சி நடத்த வேண்டுகிறேன். இந்த ஒரு காரியத்திற் காகத்தான், இன்றைய தினம் இந்த நாட்டில் நம்முடைய முயற்சிக்கு யாராலும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல், மனப்பூர்வமாக வெற்றிக்கு ஆதரவும், ஆசியும் அளிக்கும்படியானதாக இருக்கிறது. இதில் அரசாங்கத்திற்கோ, சட்டத்துறைக்கோ எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. பார்ப்பனர் மத்திய அரசாங்கத்தில் ஏகபோக ஆதிக்கத்தில் இருப்பதனால். அவர்களுக்குப் பயந்து கொண்டு நம் அரசாங்கம் தவறான வழியில் தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறதே ஒழிய, நம்முடைய கொள்கைக்காக அல்ல; அதாவது சாதி ஒழிப்பு என்பது அரசாங்கத்திற்கு மாறானதல்ல.

சட்டத்திலும் சாதி இருப்பதற்கு இடமில்லை. இந்தியாவின் பிரதம மந்திரி என்பவரும் சாதி ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்றே சொல்லியிருக்கிறார். நமது தமிழ் நாட்டு முதல் மந்திரியாரும் சாதி ஒழிய வேண்டியது அவசியம் என்று சொல்லி இருக்கிறார். நம் நாட்டில் முதல் மந்திரி உள்பட இன்றைய எல்லா மந்திரிகளும் (ஒருவ ரைத் தவிர) சட்டப்படி, சாஸ்திரப்படி சூத்திரர், தாழ்ந்த சாதியார், கடைச் சாதியார் என்கின்ற இழிவுக்கு உட்பட்டவர்களே ஆவார்கள். ஆதலால் இந்தச் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி அவர்களுக்கு உள்ளூர எதிர்ப்பாகவோ, அதிருப்தியாகவோ இருக்க நியாயமில்லை. ஆதலால், மற்ற திராவிட மக்களாகிய நாம் அதாவது இந்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் 100 - க்கு 90 பேருக்கு மேற்பட்டவர்களாக உள்ள எண்ணிக்கை கொண்ட நாம் - எல்லோருமே அதுபோல கீழ்ச்சாதி, இழிமக்கள் என்பதாக தாழ்த்தப்பட்டு வருகிறோம். ஆகையால், இந்தக்கிளர்ச்சியில் நாம் முன்னணியிலிருந்து தொண்டாற்றி மக்களுக்கு வழிகாட்டி நடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நிற்க, இக்கிளர்ச்சியை மக்களுக்குத் தெரிவிக்கவும், அவர்களுக்குச் சிறிதாவது இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தவும், குறைந்த அளவு ஆகஸ்ட் 1 ஆம் தேதியாவது ஆங்காங்கு உள்ள தோழர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தை விளக்கி காசு, பணம் அரிசி, காய்கறிகள் (முதலிய சமையல் சாதனங்கள்) பின்னால் ஏலம் போடும்படியான ஏதாவது இரண்டு புது காசுகள் பெறும்படியான சாமானாவது - ஒரு சாமான் ஆகியவைகளைச் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்குப் பிச்சை என்பதாகக் கேட்டு வசூல் செய்யவும்.

அருள் கூர்ந்து கவனிக்கவும்! கவனிக்கவும்! கவனிக்கவும்!

- விடுதலை ; 24.07.1957.

ஓட்டல், கோயில் இரண்டிலும்

பார்ப்பானின் உயர்விடம்

தொலைய வேண்டும்

இப்போது சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். சாதிக்கு அடிப்படை வருணாசிரமம்தானே? இவைகளுக்கு ஆதரவு இராமா யணத்தில் பார்க்கலாமே! கடவுள் கதை என்பதில் எவ்வளவு ஆபாசம்! சீதை இராவணன் உருவத்தை எழுதி மகிழ்ந்ததாகவும் இருக்கிறதே! தங்கள் சூழ்ச்சிக்கேற்ப கற்பனைகளையெல்லாம் புகுத்தி எழுதியிருக்கிறார்கள்! இராமாயணம் எப்பொழுது நடந்தது என்று யாராவது கூற முடியுமா? தேவாசுர யுத்தமா அது? இல்லை பார்ப்பான், திராவிடர் யுத்தம்தான். இதுதான் உண்மை .

நமக்குச் சரித்திரம் கிடையாது. புலவர்கள் எதை எதையோ எழுதி வைத்துள்ளார்கள். பார்ப்பான் சரித்திரத்திற்குப் பதிலாக புராணத்தைப் புகுத்தியுள்ளான். அதை நம்பியே கெட்டுவிட்டனர் மக்கள். நமக்கு ஏது தமிழ் வருடம்? புத்தன் தன் ஆண்டுக்கணக்கை எழுதுவான் - மகம் தியன் எழுதுவான் - குருநானக் பிறந்த வருடம் கணக்கிட்டு சீக்கியன் எழுதுவான்; தமிழன் எந்த வருடத்தை எழுதுவது? நான் பிரமாதி வருடத்தில் பிறந்தேன். இப்போது பிரமாதி போய் 18 வருடம்தானே ஆகிறது? அப்போது எனக்கென்ன பதினெட்டு வருடம்தானே ஆகிறது? ஏதோ உருவத்தைப் பார்த்து இன்னம் அறுபது சேர்க்க வேண்டும். இதிலே என்னய்யா கணக்குப் போட முடிகிறது? இந்த யோக்கியதையில் தான் புராணக் கணக்குப் போடப்பட்டிருக்கிறது? வருஷம் எப்படி வந்தது என்பதற்கும் ஒரு விசித்திரக் கதை!

நாரதர் - கிருஷ்ணனிடம் கூடி இவர்களுக்குப் பிறந்ததுதான் வருஷமாம்! இம்மாதிரி மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறோம்.

அரசியலிலும் சுதந்திரம் நமக்கு வரவில்லை . நம்மைத் தவிர வேறு யாரும் இதைத் துணிந்து சொல்லுவதில்லை. எல்லாம் சுதந்திர நாளென்று சொல்லி, வரும் ஆகஸ்டில் கொண்டாடப் போகிறார்கள். அது சுதந்திரமா காது. காரணம் பார்ப்பான், வட நாட்டானிடம் இருந்து நாம் இன்னும் விடுதலையடையவில்லை .

தோழர்களே! சாதியில் நாம் நாலாவது இனம். இப்படி 2000 ஆண்டுகளாக இருக்கிறோம்! முதலில் இதைப் புத்தர்தான் கண்டித்தார். பின்பு வள்ளுவர் ! அதற்குப் பின் வேறு யார்? புத்தர் கால்நடையாக மிகக் கஷ்டப் பட்டுப் பிரச்சாரம் செய்தார். இந்தச் சாதி வேறுபாட்டைக் களைந்து, சமத்துவ சமுதாயம் உண்டு பண்ண, வள்ளுவர் ஏதோ இரண்டு பாட்டுடன் சரி. அதற்குப் பின்பு நான் தானே தினமும் பிரச்சாரம் செய்கிறேன்? வேறு யார் ஏன் நாம் சூத்திரனாக இருக்கிறோம் என்று எவரும் கேட்பதில்லையே?

அந்தக் காலத்தில் நம்மவரில் சிலர் சந்தியாவந்தனம் பண்ணினார்கள். பூணூல் போட்டிருந்தார்கள்; இப்போதுதான் இல்லை.

ஜனங்களுக்குப் புத்தி ஏது? அவனவன் தான் மற்றவனை விட உயர்ந்த சாதி என்று சொல்லிப் பெருமைப்படுகிறானே! இது அயோக்கியத்தனம் அல்லவா? பார்ப்பானுக்கு இவன் இழிமகன்தானே? என்னைப் பொறுத்த அளவில் நான்தான் சாதியை ஒழித்தேன். அந்தக் காலத்தில் பாய் நெய்கிறார்களே, அவர்கள் வீட்டில் சாப்பிட்டேன். எப்படியோ சாதி என்றால் கசப்பாகப் போய்விட்டது! எங்கள் வீட்டிலே என்னை உள்ளே விடமாட்டார்கள் ! என் தாயார் சாகும் வரை என்னைத் தொடமாட்டார்கள். நான் நீர் குடித்த செம்பைக் கவிழ்த்து வைத்து தண்ணீர் தெளித்து எடுத்து வைப்பார்கள். அவ்வளவு ஆஸ்திகம்! நான் கவலைப்படாமல் சாய்பு , வாணியச் செட்டியார் வீட்டில் சாப்பாட்டை வெளுத்துக் கட்டினேன்.

இதற்கு முன்னர் சாதி அடையாளம் இருந்தது. இதெல்லாம் மறையக் காரணம் நான்தானே. என் தலை சாய்ந்தால் பிறகு எல்லோரும் பார்ப்பான் காலில் விழுந்து விடுவார்களே! இருபது வருடமா வேறு யார் என்போன்று குடி அரசு , பகுத்தறிவு, விடுதலை, சுயமரியாதை இயக்கம் நடத்தி வருகிறார்கள்? காங்கிரசுகூட தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒரு கொள்கையைக் கடைபிடிக்கவில்லையே? ஒரு கொள்கைக்காகவே இயங்கி வருவது திராவிடர் கழகம்தான். நாற்பது வருடத்திற்கு முந்தி நம் வாழ்க்கை என்ன? ஆதித்திராவிடர் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலையில் தானே இருந்தார்கள்? ஆதித்திராவிடரைச் சேர்க்காத பள்ளிக்கு கிரான்ட் (உதவித்தொகை) இல்லை என்று சொன்னோமே. அதற்குப் பின்புதானே சேர்த்தார்கள்?

பார்ப்பான் ஒழிந்தால்தானே சாதி ஒழியும்? இப்போ பார்ப்பான் நம் காலில் சிக்கிய பாம்பு! காலைக் கடித்து விடுவான்! எடுத்தால் போச்சு விடாதீர்கள்! பார்ப்பான் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை . காரணம் தமிழன் கையில் அதிகாரம் இருக்கிறது. காமராசரைத் தவிர கம்யூனிஸ்டோ, கண்ணீர் துளி மூலவரோ வந்திருந்தாலும் நம்மை அழித்து விட முயற்சி செய்திருப்பார்களே?

எதற்காகப் பொது இடத்தில் - லைசென்ஸ் வாங்கிய இடத்திலும் பிராமணன் என்று போட வேண்டும்? காரியம் ஆவதற்காகச் சாதிப் பெயரை விட்டு விடுகிறவன் கூட சாதிப்பெயரை ஏன் எச்சில் இலை போடும் இடத்தில்கூடப் போட வேண்டும்? வேண்டுமானால் சைவ ஓட்டல், மாமிசமில்லாத ஓட்டல் என்று போடேன்! பிராமணன் என்று ஏன் போட்டுக் கொள்கிறாய் என்றால், யாராவது வந்து சாப்ஸ் இருக்கா என்று கேட்பார்களாம்! இது அயோக்கியத்தனமான பதில் இல்லையா?

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பார்ப்பான் கடைகளில் எல்லாம் மறியல் செய்யப்போகிறோம். ஆம், நாங்கள் கேட்பது பார்ப்பான் கடைக்குப் போகாதீர்கள் என்பதே. இது எங்கள் மத்திய கமிட்டித் தீர்மானம். சாதி இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று பார்ப்பான் ஓட்டல் மற்றொன்று பார்ப்பான் பூசை செய்யும் கோவில்! இந்த இரண்டிலும் ஒழிக்க வேண் டும் பார்ப்பானை. இல்லையேல் நாம் முன்னுக்கு வர முடியாது.

இவைகளைச் செய்ய சட்டசபைக்குச் சென்றால் ஒன்றும் முடியாது. அங்கே சென்றால் லைசென்ஸ் வாங்கலாம்; இவற்றுக்கெல்லாம் வெளியில் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய வேலை பார்ப்பான் கடைக்குப் போகக் கூடாது. கரூரில் நல்ல தமிழர் கடை இருக்கிறது. ஆகையினால் பார்ப்பான் கடைக்குச் செல்லாது, பார்ப்பான் காபி கடை மூடப்பட்டது என்று செய்ய முயற்சியுங்கள்.

- விடுதலை ; 30.07.1957.

 

பிராமணாள் அழிப்பு

சென்னை இராஜ்ய ஆட்சியாளருக்கும், கவர்னர் பெருமான் அவர்களுக்கும், சென்னை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்வதாவது:

நம் நாட்டில் இருந்து வரும் சாதிப்பிரிவுகள் ஒழிந்து, மக்கள் யாவரும் சாதிப்பிரிவற்ற ஒரே சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தார் இலட்சியமாகவும், முயற்சியாகவும் இருந்து வரும் என்கின்ற எண்ணத்தின் மீதே, இந்த வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டில் இந்திப் பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சரும் ஆகிய இரு கனவான்களும் சாதிப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறார்கள். உத்தியோகங்களில் 'குவார்ட்டர் சிவில் லிஸ்ட்' என்பதாக நீண்டகாலமாய்ப் பதிப்பித்து வந்த புத்தகத்தில், ஒவ்வொரு உத்தியோகர்களுடைய சாதியைக் காட்டும் குறிப்பை இப்போது எடுத்துவிட்டார்கள்.

பல ஆதாரங்களில் சாதிகளைக் காட்டக் கூடாது என்று அரசாங் கத்தால் திட்டப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாதியின் பெயரால் பள்ளிக்கூடங்கள் இருக்கக் கூடாது என்றும், அப்படி ஏற்படுமானால் அதற்கு அனுமதியும் உதவித்தொகையும் கொடுக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கத்தாரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில விசயங்களில் சாதி மட்டுமல்ல - இனத்தின் பெயரைக்கூடக் குறிப்பிடக் கூடாதென்று - சில விளம்பரப் பலகைகளில் இனப் பெயரை அரசாங்கம் மாற்றிவிட்டது. உதாரணமாக, திராவிடன் என்று காணப்பட் டதையெல்லாம் அழித்துவிட்டுத் தமிழன், தமிழ்நாடு என்று போடப் பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணங்களில் சாதிப்பெயர் காட்டக் கூடாதென்றும், மாணவர்களைத் தெரிந்தெடுத்துச் சேர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் கமிட்டியார் - செலக்ஷனில் நேரில் வரும் மாணவர்களை 'நீ என்ன சாதி?' என்று கேட்கக் கூடாதென்றும் ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவைகளெல்லாம் சாதிப்பிரிவை உத்தேசித்துச் செய்யப்பட்ட ஏற்பாடுகளே தவிர, சாதிக்குள்ளிருக்கும் உட்பிரிவையோ, பேதத்தையோ பொறுத்ததல்ல. சாதிப்பிரிவு விசயங்களில், நம் நாட்டில் முக்கியமாக அனுபவப்பூர்வமாகக் காணப்படுவதெல்லாம் இரண்டே சாதிகள் என்கின்ற பிரிவுதான். அதாவது, ஒன்று பிராமணன், மற்றொன்று சூத்தி ரன் என்கிற வார்த்தை இழிவாயிருக்கிறது என்கிற காரணத்தால், எதிர்ப்பு எற்பட்டதன் பலானக, பிராமணனை மட்டும் பிராமணன் என்றே சொல்லிக்கொண்டும் எழுதிக்கொண்டும் வருவது பழக்கத்தில் வருவதோடு, சூத்திரர்களைப் பொறுத்த வரையில் 'பார்ப்பனரல் லாதார்' (Non-Brahmin) என்றும், 'திராவிடன்' என்றும், சில சந்தர்ப்பங்க ளில் 'தமிழன்' என்றும் இப்படிப் பலவாறாகச் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், பிராமணன் ஒரு சாதி. அவன் நீங்கிய மற்ற எல்லா இந்து மக்களையும் - அதாவது, சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய எந்தச் சாதிக்காரர்களையும் இந்தச் சூத்திர சாதிக்குள்ளாகவே அடக்கினர். தங்களைப் பிராமணன், சத்திரியன், வைசியன் என்று சொல்லிக்கொள்ளுகிற பொற்கொல்லர் (ஆசாரி), படையாச்சி (வன்னி யர்), நாடார்கள், நாயுடு மார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், வாணியச் செட்டியார்கள் முதலிய பலரைச் சூத்திரர்களுக்கு உண்டான அந்தஸ்தில் வைத்துத்தான் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லப்படுவ தோடு, அவர்கள் சூத்திரர்களாகவே பாவிக்கப்பட்டும் வருகிறார்கள்.

மற்றும் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால், தங்களை வைசியர்கள் என்றே சொல்லிக்கொண்டு மற்ற பெருவாரியான மக்களிடம் உண்பன, தின்பன வைத்துக் கொள்ளாமல் தனித்து விலகி நிற்கும் 'ஆரிய வைசியம்' என்று சொல்லிக் கொள்ளும் கோமுட்டிச் செட்டி யார்களையும், நகரத்தார் என்று சொல்லிக் கொள்ளம் நகரத்துச் செட்டியார்களையும் சூத்திரர் வகுப்பிலேயே சேர்த்து - சூத்திரர்களா கவே (Non-Brahmin) பாவிக்கப்பட்டும் வருகிறார்கள். எதற்காக இவை களைக் குறிப்பிடுகிறேன் என்றால், சாதி முறையில் அரசாங்கத்தாராலும், பார்ப்பனர்களாலும், அனுபவத்தினாலும் - இரண்டே சாதிப் பிரிவுகள் தான் பழக்கத்திலிருந்து வருகின்றன என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

இந்த இரண்டு பிரிவுகளில், 'பிராமணாள்' தவிர மற்ற பிரிவு மறைக்கப்பட்டுவிடுவதில் யாருக்கும் கவலையில்லை. பிராமணர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் தங்கள் சாதியை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபடுகிறார்கள். காரணம், அவர்கள் மேல் சாதி உரிமை பெற்றிருப்பதனால். அதன் பயனாக மற்ற சாதிகளுக்குப் பெரிய தொல்லை இருப்ப தனால், சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்கிற கிளர்ச்சி அவசியம் தோன்றலாயிற்று. அது எப்படியோ, அரசாங்கக் கொள்கையிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது; நடைமுறையிலும் சில காரியங்கள் செய்யப் பட்டு வருகின்றன. ஆனால், எப்படியோ - தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாகவோ பார்ப்பனருக்கு மத்திய அரசாங்கம் ஒரு உரிமை கொடுத்து வருகிறது. அதாவது, அரசாங்கம் அனுமதி கொடுத்து நடைபெறும், நடக்கச் செய்யும் பார்ப்பனர்களின் உணவு விடுதிகளில், பிராமணர் விடுதி' என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கிறது.

சாதியின் அனுபவ ஆதிக்கமெல்லாம் பெரிதும் உணவினாலேதான் வரையறுக்கப்படுகிறது; சாதியை ஒழிக்க வேண்டுமென்கிறவர்கள், அந்த உணவுத் தன்மையில் தான் ஒழிக்கப் பாடுபடவேண்டும். அப்படியிருக்க, எதற்காக உணவு விடுதியில் சாதிப்பெயர் போட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்? இப்படி அனுமதிப்பது அரசாங்கத்தின் கொள்கைக்கும் நடப்பிற்கும் முரண்பட்டதாகும். இதை அரசாங்கம் சீர்திருத்தவில்லையானால் மக்கள் முயற்சித்துச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

பார்ப்பனர்கள் தங்களை மேலானசாதியென்று - மேலே குறிப்பிட்ட மற்றவர்களைப் போல், அவர்கள் வீட்டிலிருந்து சொல்லிக் கொள்ளட்டும். 'பிராமணாள் வீடு' என்று அவர்கள் வீட்டில் வேண்டுமானால் போர்டு போட்டுக் கொள்ளட்டும்; பூணூல் போட்டுக் கொள்ளட்டும்; நமது மேல்படுவதில்லையென்று எட்டி ஓரமாக நடந்து கொண்டு போகட்டும்; இவைகளைப் பற்றிப் பொதுமக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அரசாங்கத்தார் - ஏன், பிராமணன்' என்று போட்டுக்கொண்டு வியாபாரம் நடத்திப் பணம் சம்பாதிக்கவும், மற்றவர்களை இழிவு படுத்தும் குறியைக் காட்டவும் இடங் கொடுக்க வேண்டும்? அந்தமாதிரி விளம்பரப் பலகை இருக்க இடங் கொடுப்பதிலிருந்து சாதி உணர்ச்சி தோன்றுகிறதா? இல்லையா? என்பதைத்தான் அரசாங்கம் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

ஆதலால், நான் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்வதெல்லாம் - உணவு, சிற்றுண்டிச்சாலைகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுப்பதில் அந்த அனுமதிச் சீட்டு நிபந்தனைகளில், லைசென்ஸ்தாரர் சாதிப் பெயர் போடக்கூடாது' என்று குறிப்பிட வேண்டும் என்பதுதான்.

இதைச் செய்ய, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சில நகர சபைத் தலைவர்களைக் கொண்டு லைசென்சுகளில் குறிப்பிடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அப்பொழுது முனிசிபல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிராத காரியங்களை முனிசிபாலிட்டியார் செய்தால், அது சட்ட விரோதம் என்று சொல்லி அபிப்பிராயம் கொடுக்கப்பட்டுவிட்டது; அதனால் அது நடை பெறவில்லை . அதற்குப் பிறகுதான், பல இடங்களில் கிளர்ச்சிகளால் மறைக்கப்பட்டன; இரயில்வே பிளாட்பாரங்களில் கூடப் பிராமணர் ஓட்டல்' 'பிராமணாள் சாப்பிடுமிடம்' என்பவைகள் மறைக்கப்பட்டன.

ஆதலால், அரசாங்கத்தாராவது, கவர்னர் பெருமானாவது அருள் கூர்ந்து 05.05.1957 ஆம் தேதிக்கு முன் அமுலுக்கு வரும்படியாக - ஓர் அவசர அறிக்கை வெளியிட்டு விட்டால் இதற்காக நேரடி நடவடிக்கை - கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியமிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

- விடுதலை ; 27.04.1957.

Read 1259 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.