Tuesday, 29 September 2020 01:12

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 87

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா.கருமலையப்பன் 

 

சாதியைப் பாதுகாக்கும்

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்  

 

திராவிடர் கழகத் தனிமாநாடு

அன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! சென்ற தடவை திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதான பிரச்சனைகள் வந்த போது பெரும்பாலான அங்கத்தினர்கள் இந்த தீர்மானம் மத்திய நிர்வாக கமிட்டியில் செய்வதைவிட இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டி, அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்று, அதன் பின்பு சிறிது நாள் தவணைகொடுத்து பிரச்சாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்த தீர்மானத்தின் கருத்துப்படி எப்போது கூட்டுவது என்று முயற்சி செய்துவந்தோம். டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டொரு தடவை சொன்னேன். இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல இடங்களில் பலவிதமாக நடத்தினார்கள். தஞ்சையில் எனது பிறந்த நாள் விழாவை சிறிது விசேஷமா நடத்த வேண்டும் என்று கருதி எனது எடைக்கு எடை வெள்ளி கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி விழா நடத்த முயற்சி செய்தார்கள். இந்த விழாவுக்கு பெரும்பாலான மக்கள் வருவார்கள், வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணிப்பார்க்கிறபோது எல்லா மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. முன் குறிப்பிட்டு வைத்திருந்த தனிமாநாட்டை இப்போதே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை, அதாவது செலவும் தொந்தரவும் இருக்காது; எல்லோரும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கருதி விழாவையொட்டியே தனிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ரொம்ப நெருக்கத்தில் அதாவது (20.10.57ல் நினைத்து) பத்து நாட்களில் துவக்கப்பட்டது. இருந்த போதிலும் நாட்டில் உண்டான கிளர்ச்சி, உணர்ச்சி இங்கு மக்களை கொண்டு வந்து சேர்த்து விட்டது. இது மிக மிகப்பாராட்டத்தக்கதாகும் .

தஞ்சை முன்னணியில் உள்ளது

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும் என்னுடைய முயற்சிக்கும் போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல; நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும் நடத்திய காலத்திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு என்னை தலைவனாக்க பெரும் ஆதரவளித்ததுக் கூட தஞ்சைதான் என்றால் மிகையாகாது. எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10, 15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலை சிறந்த கட்டுப்பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு

உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால், டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித்தான் சொல்லிவிட்டு வந்தேன்.

எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரி யாதை இயக்க காலமுதல். சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு. ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரி களும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில்1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை. இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம். என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு. எல்லாவற் றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு. தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல். காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு, வழிகாட்டிக்கு இது வரை நடந்திராத மரியாதை நடக்கிறபோது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிக மான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை என்று சொல்லுவதுதான் எனது வழக்கம். நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது. ஒருவர் நாலு லட்சம் என்கிறார்; ஒருவர் மூன்று லட்சம் இருக்கும் என்கிறார்; உள்ளப டியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. எல்லோருடைய கணக்கும் குறைவாகத்தான் இருக்கும். மழை அருமையான உதவி செய்தது. காலையில் மழையில்லை எல்லோரும் மழை போய்விட்டது போய்விட்டது என்றார்கள். ஊர்வலம் முடியும்வரை மரியாதையாகக் காத்துக் கொண்டிருந்தது. இவ்வளவு தான் தாங்குவேன் இனிமேல் தாங்கமாட்டேன் என்று சிறு தூறல் போட ஆரம்பித்துவிட்டது. நான் எப்படியோ ஆகட்டும், மாநாடு காலையிலேயே நடந்துவிட்டது போங்கள் என்று கூறி விட்டேன். இனிமேல் வசூலித்த பணத்தை திருப்பியா கொடுத்து விடப்போகிறார்கள் எங்காவது தாழ்வாரத்தில் வைத்தாவது கொடுத்துவிடுவார்கள். நானும் அவ்வளவு சல்லீசாக விட்டுவிட்டுபோய் விடமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் என்று கூறிவிட்டேன். எப்படியோ அதோடு மழை நின்று விட்டது. மாநாட்டு பந்தல் ஈரமாக இருக்குமே எப்படி உட்காருவார்கள் என்று கவலைப்பட்டேன். இப் போது என்னடா என்றால் எள் விழக்கூட இடமில்லாதபடி அளவு வசதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

சிறைக்கு வழிகூட்டும் மாநாடு

இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படத்தக்கது மான மாநாடாகும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லுகிறேன். திராவிடர் கழகத் தனிமாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு, முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்பு மாநாடு தான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச்சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. இந்தமாநாட்டின் பலன், வெற்றி அதுவாகத்தான் இருக்கும்.

கூடிய விரைவில் அரசாங்கவிருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக்கூடியதல்ல, முன்பெல்லாம் சாதாரணம், ஆனால் அது இப்போது லேசில் கிடைப்பதாக இல்லை. பிள்ளையாரை உடைத்தோம்; ராமனைக் கொளுத்தினோம்; இன்னும் பல காரியங்கள் செய்தோம்; ஏன் என்று கேட்க ஆளில்லை! ராஜாஜி காலத்திலும் எதுவும் செய்யவில்லை. இல்லாவிட்டால் இப்போது காமராசர்தான் விட்டு விட்டார் என்று அவரை சுட்டுத் தள்ளி விடுவார்கள். இப் போது அவருக்கும் பதில் சொல்ல சுலபமாகிவிட்டது. ராஜாஜி காலத்திலேயே ஒன்றுமில்லை நான் என்ன அதிசயம் என்று கூறிவிடு கிறார். பார்ப்பனர்கள் தூண்டுதல் என்ன ஆனாலும் சரி! இப்போது அரசாங்கத்தை மிகவும் நெறுக்குகிறார்கள். மேலிடத்திலிருந்தும் பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் இன எதிரிகளும், ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? என்று நெறுக்குகிறார்கள். எதனால்? குற்றம் கண்டுபிடித்தா? எல்லோருக்கும் பொறாமை! நாம் நினைக்க முடியாததை, சொல்லமுடியாததை இந்த கூட்டம் செய்கிறதே நம்யோக்கியதை வெளியாகிவிடுகிறதே; இந்த கூட்டம் இருப்பதால் நாம் பிள்ளைப்பூச்சியாக இருக்க வேண்டியுள்ளதே; இவர்களை அடக்கினால்தான் நமக்கு மரியாதை இருக்கும் என்று அரசாங்கத்தை நெறுக்குகிறார்கள்; பல முயற்சிகள் நடக்கின்றன.

ஆகவே, இன்றைய சர்க்கார் அடக்குமுறை செய்து தீர வேண்டிய சந்தர்ப்பம் இது. தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் கூட ஊரார் வாயை அடைக்கவாவது பிடித்து தீருவார்கள். ஆகவே தான், தோழர்களே! முன்பே இது என்னை சிறை செல்ல வழிய னுப்பு மாநாடாக இருக்கும் என்றேன்.

இன்றைய லட்சியம் முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால், அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்குமேல் எவனும் இல்லை எல்லோரும் சமம் என்ற இந்தநிலை நமக்குதான் அவசியமாகத் தோன்றுகிறது. ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடு பட்டே சாப்பிட வேண்டும். ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லா சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம் நாம். இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது.

மற்ற நாடுகளில் எள்ளி நகையாடுவர்!

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். சாதாரணமாக அரசாங்கமே யோக்கியமான, பொதுமக்களுக்கான, மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்தில் இல்லாத அரசாங்கமாக இருக்குமானால் ஒரு வரியில் செய்து விடலாம்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போட்டிருக்கிறார்களே! தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு விரோதம்தான். ஆனால் தீண்டாமை ஒழிக்க வேண்டு மென்பது அரசாங்கத்திற்கு அரசியல் சூதாட்டத்திற்காக அவசிய மாக இருந்தது; செய்தார்கள். அதுபோல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது?

சாதி ஒழிய பரிகாரம் ஏன் பண்ணக்கூடாது என்று கேட்டால், இப்படி பேசுகிறேன்; அப்படி பேசுகிறேன் என்று எழுதுகிறார்களே தவிர பேசுவதில் என்ன தப்பு? சாதி ஒழிய வேண்டும் என்பதால் என்ன கெட்டுப் போகும்? சர்க்கார்தான் ஏன் ஆதரவு தரக்கூடாது என்று கேட்பவர்களைக் காணோமே!

இது என்ன சுயராஜ்யம்?

ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமையில்லையென்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை; ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம்கூட பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல், குத்தாமல் காரியம் சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?

ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்? (கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக்கானவர்கள் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்? அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்? (நாங்கள் செய்வோம் என முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அதைத்தவிர வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ் சாதி? இதற்கு பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்று தானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூர் சம்பவம்

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே! என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்து விடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா? சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? அந்த மாதிரி சொன்னான். அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்று சொன்ன போது எப்போது சொன்னான்? எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டு’ என்றதும் ஒருவனையும் காணோம்! ஓடிவிட்டார்கள்! பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள்! சி.அய்.டி.ரிப்போர்ட்டில் அதுபோலக் காணவில் லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால் வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலை வந்தால் எந்த மடையன்தான் சும்மா இருப்பான்? ஆண்மையாக இருக்க வேண்டி யதுதான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்.

வீண்மிரட்டல் பலனளிக்குமா?

ஆறு மாதமாக கிளர்ச்சி நடக்கிறது 750 பேரை கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல். குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்கு பயந்து விட்டு விடக் கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை. சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கரையில்லை, குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டிலொன்று முடியவேண்டும்

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீரவேண்டும்! என்று லட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும் வெங்காயத்தையும் நம்பினால்போதுமா? எதைச்செய்தால் தீருமோ, அதைச் செய்தால்தானேமுடியும்? (சொல்லுங்கள்; செய்கிறோம்! என்ற லட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி)சட்டத்தின் மூலம் தீராது, பார்லிமெண்டின்மூலம் தீராது என்றால் வீட்டில் போய்படுத்துக் கொள்ள வேண்டியதுதானா?

பார்ப்பானுக்கு மட்டும் தான் அரசாங்கமா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் தானா? தந்திரமாக பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்கு போக முடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம், இல்லாவிட்டால் சாகிறோம், சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை. நம்மை அடக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம்

நம் அரசாங்க மந்திரிகளை இழுத்துப்போட்டு இவர்கள் தான் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதோ படம் போட்டுக் காட்டுகிறார்கள். மந்திரிகள் உட்கார்ந்து கொண்டு சிங்கத்தைவிட்டு பார்ப்பனர்களை கடிக்க விடுகிறார்கள். பார்ப்பனர்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள். நான்தான் சிங்கமாம். இப்படி படம் போடுகிறார்கள். காமராசர் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள். பதினாயிரக்கணக்கில் போகிற பத்திரிகை இந்தியா பூராவும் போகிற பத்திரிகை இவ்வளவு அயோக்கியத்தனமாக எழுது கிறான்? பத்திரிகைக்காரர்களுக்கு மானம் மரியாதை இருந்தால் நான் சொல்வதற்கு பரிகாரம் சொல்ல வேண்டாமா? நீங்கள்தான் மக்கள்; நாங்கள் மக்கள் அல்ல, ராஜ்யம் அவர்களுடையதுதானா?

துரோகிகளால் வந்த ஆபத்து

நம் பிரகலாதன்கள் அவர்களுக்கு அடிமையாகப் போவதால் தானே இவர்களுக்கு இவ்வளவு அகந்தை வருகிறது? வேறுநாட்டில் இதுபோல் இருந்தால் ஒரு ராத்திரியில் வெடிகுண்டு வைத்துகட்டிடத்தை இடித்து நொறுக்கிவிடமாட்டானா? துருக்கியில், பாகிஸ்தானில், இங்கிலாந்தில், ஜெர்மனியில் இதுபோல ஒருநிலைமை இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த மானங்கெட்ட நாட்டில் தானே இவ்வளவு கொட்டம் அடிக்கும் போதும் கட்டிடம் இருக்கிறது? அவன் வாழ்கிறான்.

வீண்மிரட்டலுக்குப் பணிவதா?

ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான் கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை எப்படி எந்தஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்று தான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சக்கணக் கான குரல்) நாலு பேர் சாவது ஜெயிலுக்குப் போவதென்றால் போகிறது. என்ன திருடிவிட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 - க்கு 97 பேராக உள்ள நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே, நடப்பது நடக்கட்டும் பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அந்தமாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் எனக்கு இருபது இடங்களில் கத்தி கொடுத்துள்ளார்கள்! எதற்கு கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை, முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத்தின்னவா? உன்னால் ஆகும்வரை பார், முடியாவிட்டால் எடுத்துக்கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத் தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு, நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது! இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் காத்திருப்பதா?

செல்வாக்கை தப்பாக உபயோகிக்கமாட்டேன்

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக ’வெட்டு குத்து’ என்று சொல்லமாட்டேன். வேறு மார்க்கம் இல்லையென்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்; மனைவியை புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100 - க்கு 10 பேர்தான் இருக்கும். 100 - க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தப்பான காரியத்திற்கு உபயோகப்படுத்தமாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேணடும்.

இன்றா ஏற்பட்டது இந்த உணர்ச்சி?

பார்ப்பானைக் கொல்லுவதும் பார்ப்பானைக் குத்துவதும் இன்று நேற்றல்ல, அந்த காலத்திலேயே நடந்துள்ளதே! பார்ப்பான் எழுதி வைத்துள்ள புராணங்களைப் பார்த்தாலே தெரியுமே? இரணி யன் சொல்லியிருக்கிறான்; இது பாகவதம் 7ஆவது ஸ்கந்தம் 2 ஆவது அத்தியாயம் இன்ஜிக்கொல்லை பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரி மொழிபெயர்ப்பு புரோகரசிங் அச்சுக்கூடப் பதிப்பு 715-716 ஆவது பக்கங்களில் உள்ளது.

இரண்யன் சொன்னது

இரண்யன் சொல்கிறான் ஓ! தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள்; தாமசியாமல் அப்படி செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் பூமிக்குச் சென்று தபசு, யாகம், அத்யயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள். பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரமங்களுக்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள் என்றான். அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர் அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டியை எடுத்து கோவில்களையும் பிரகாரங்களையும் கோபுரங்களையும் பிளந்தார்கள். சிலர் ஜுவாலைக் கொள்ளிகளைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள். இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியில் மறைந்து சஞ்சரித்தார்கள்!

எதில் இது - பாகவதத்தில் !

கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. அந்த காலத்தில் பித்தலாட்டம் செய்து எப்படியோ பார்ப்பனர்கள் ஜெயித்துவிட்டார்கள். இந்த காலத்தில் என்ன பித்த லாட்டம் செய்தாலும் அவர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.

பார்ப்பான் புத்திசாலியாக இருந்தால், பார்ப்பானைச் சேர்ந்த வன் புத்திசாலியாக இருந்தால் இந்து மதத்தில் சாதி கிடையாது சாதியை உண்டாகும் சாஸ்திர புராணங்கள் இந்து மதத்திற்கு சம்பந் தப்பட்டவை அல்ல என்று சொல்ல வேண்டும். இந்த 1957லும் இதற்கு பரிகாரம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? ஆதனால் தான் மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம் இல்லாததால் இந்த மாதிரி எண்ணங்கள் எண்ண வேண்டியுள்ளது இந்த காரியத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டாமா? சாதியில்லை என்று கூட எவனும் சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன் என்றதும் 8 நாளில் துடிதுடித்துக்கொண்டு பதில் சொன்னாயே! இதற்கு அதேபோல பரிகாரம் சொல்லாத காரணம் பார்ப்பானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால் சர்க்கார்தான் ஏமாந்து போகும்! பார்ப்பான் தான் ஏமாந்து போவான்! நாம் ஏமாறமாட்டோம் இன்னும் செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. அதெல்லாம் செய்து பார்த்து ஒன்றும் நடக்கவில்லையென்றால் கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம்.

- (03.11.1957 அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து தந்தை பெரியார் அவர்கள் பேசியது)

- விடுதலை; 08.11.1957.

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

சூதாடிய குற்றத்துக்காகவா? கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா? கொள்ளைக் குற்றத்துக்காகவா? கொலைக் குற்றத்துக்காகவா? மோசடிக் குற்றத்துக்காகவா? பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்திற்காகவா? பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா? சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா? என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய் தேன்! சிறை சென்றேன்! சர்க்கார் கண்விழிக்கவில்லை. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தைக் கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் மனதை மாற்றலாமா என்று கருதி அதைச் செய்தேன்? 

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ? எந்தப் பொருளுக்கேணும் நாசமுண்டா ?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?

சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறைவாசஞ் செய் தான், என்பதை விடப் பெரும்பேறு, முக்கியக்கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

(தந்தை பெரியார் அறிக்கை - விடுதலை ; 09.11.1957)

 

நான்

மூன்று ஆண்டுக்கோ,

பத்து ஆண்டுக்கோ,

நாடு கடத்தலுக்கோ,

தூக்குக்கோ,

மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும்கூட, அவைக ளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப்போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே!

நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விட வேண்டியதில்லை.

பயந்துவிட மாட்டீர்கள்.

சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் போர் வாங்காதீர்கள் !

ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் (விருப்பப்பட்டவர்கள்) தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.

- விடுதலை; 11.11.1957.

 

தந்தை பெரியார் அறிக்கை

அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்பு களே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்படவேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வட நாட்டான் ஆதரவுகளும் ) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும். இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத் தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரிசபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆதலால், பொதுமக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை.

புதிய சட்டம் செய்ததன் பயனாகவும் என் மீது வழக்குத் தொடுத்திருப்பதன் பயனாகவும், எனக்கு என்ன சம்பவிக்கும் என்பதைவிட மந்திரிகள் மீது பொதுமக்களுக்கு ஆத்திரமும் துவேஷமும் (வெறுப்பும்) ஏற்பட வேண்டுமென்ற கருத்துத்தான் பார்ப்பனர்களுக்கு முக்கியமானது?

ஆதலால், அக்கருத்து வெற்றியடையும்படியாக நடந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். புதிய சட்டத் துக்குப் பொதுமக்கள் காட்ட வேண்டிய எதிர்ப்பு என்னவென்றால், பதினாயிரக்கணக்கான மக்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தி அத்தாட்சி காட்டுவதுதான். இதுவரையில் திராவிடர் கழகத் தோழர்களுக்கு இம்மாதிரியான நல்வாய்ப்பு கிடைக்கவில்லை; இனியும் கிடைக்குமாக என்பது சந்தேகம்தான்.

ஆதலால், கழகத் தோழர் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- விடுதலை ; 16.11.1957.

சட்டத்தைக் கொளுத்துங்கள் !

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்! சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் ''சாதியைக் காப்பாற்றித்தான் தீரவேண்டும்'' என நமக்குச் சவால் விட்டு இருக்கின்றனர். இந்தச் சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தா விட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!

சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!

- விடுதலை ;16.11.1957.

 

26 ஆம் தேதி கிளர்ச்சியில்

நீதிமன்றத்தில் கூற வேண்டியது நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை .

ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிச்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை . ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதி மன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை . நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

- விடுதலை ; 23.11.1957

 

 தந்தை பெரியார் சிறை புகு முன்

விடுத்துள்ள அறிக்கை!

நான் இன்று தண்டனை அடையப்போவது உறுதி. ஏன் என்றால் இந்தியப் பிரதமர் என்னும் பதவியில் உள்ள பண்டித ஜவ ஹர்லால் நேரு அவர்கள் எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிக்கே வந்து எனது வழக்கு நடைபெறும் நியாயத்தல நீதிபதியாகிய செஷன்ஸ் ஜட்ஜ் அவர்கள் முன்னிலையில் இருந்து பார்ப்பனர்களைக் கொல்லு என்று சொல்லி இருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும். அது மாபெரும் தேசத்துரோகக் குற்றமாகப் பாவிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவன் ஜெயிலில் இருக்க வேண்டியவன்! என்பதாகச் சொல்லி தூண்டிவிடும்படியான அளவுக்குப் பேசிவிட்டுப் போயிருக்கும்போது, எந்த நீதிபதிதான் என்னைத் தண்டிக்காமல் விட்டு விட முடியும்? அதுபோலவே அரசமைப்புச் சட்டம் எரித்ததாகக் குற்றம்சாட்டி ஜெயிலில் பிடித்து அடைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் 3000 குற்றவாளிகள் பற்றியும், அந்தக்குற்றம் தேசத்துரோகக் குற்றமாகும், அவர்கள் கடினமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள்! என்பதாகவும் விசாரணை செய்துத் தீர்ப்புக் கூறவேண்டிய மாஜிஸ்திரேட், நீதிபதி முன்னிலையிலும் சொல்லி விட்டுப் போயிருக்கும்போது எந்த ஜட்ஜ்தான், எந்த மாஜிஸ்திரேட் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டியாமல், கடினமாகத் தண்டியாமல் விடமுடியுமா?

உதாரணமாக, பண்டிதநேரு அவர்கள் திருச்சிக்கும், தமிழ் நாட்டில் மற்ற ஊர்களுக்கும் வந்து இப்படியாகப் பேசுவதற்கு முன் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் போட்ட வழக்குகள், இவர் வந்து இந்தப் படிப் பேசியபின் 9 மாதம், 1 வருடம், 1லீ (ஒன்றரை வருடம்) 2 வருடம் வீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் என்னை ஜட்ஜ் தண்டிக்கப்போவது உறுதி. நான் தண்டிக்கப்பட்டால் பொதுமக்களும் குறிப்பாக கழகத் தோழர்களும், இந்தத் தண்டனையும் நம் கழக முயற்சிகளும் வெற்றிபெறும் நாள், பயனளிக்கும் காலம் நெருங்கிவிட்டது; பூக்க, காய்க்க ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு கழகப் பணி ஆற்ற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்; பங்குகொள்ள வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும். எப்படியோ இது ஒரு இனப் போராட்டமாகப் பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள்.

ஆதலால், கழகத் தோழர்களும், மற்றவர்களும் எவ்விதமான பலாத்காரமான, இம்சையான, கொல்வதான, நாசகரமான காரியம் எதையும் செய்ய முன்னடையாமல், மனதிலும் செய்ய நினைக்காமல் பிறர் சொல்லும்படியும் நடவாமல் சாந்தத்தோடும் சமாதானத்தோடும் கழகப்பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். மற்றும் இன்று நம் தோழர்கள் 3000 பேருக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டுக் கடினமாகத் தண்டனைக் கொடுமை வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் செய்த எந்தவிதமான குற்றங்களுக்கு ஆகவும் அல்ல. அதாவது நாம் நம் உரிமைக்கு விரோதமாய், நீதிக்கு விரோதமாய், எவ்வித காரியமும் செய்துவிடவில்லை. யாருக்கும் எவ்விதமான கேடும் செய்துவிட வில்லை; ஏற்பட்டுவிடவுமில்லை.

இதை இன்றைய நம் மந்திரிமார்களே சொல்லிவிட்டார்கள்; சொல்லியும் வருகிறார்கள். அப்படியிருந்தும் இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான, பத்திரிகைகளின் கட்டுப்பாடான பொய் விஷமப் பிரச்சாரத்தின் காரணமாகவும், மத்திய அரசாங்க அதிபர்கள் ஆதிக்கக்காரர்களின் சர்வாதிகாரக் கட்டளைக்காவும் வேறு மார்க்கமில்லாமல் இணங்கி தீரவேண்டிய அவசியத்தின் காரணமாக ஏற்பட்டவைகளாகும். ஆதலால், நம் மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கும், சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும், பார்ப்பனரல்லாத போலீசு, நீதி, நிருவாக அதிகாரிகளுக்கும் எவ்வித பந்தமும் இல்லை என்பதாகக் கருதி அவர்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் கொள்ளாமல் இருக்க வேண்டும். பலாத்கார, இம்சையான, நாசமான, செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம் அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் உறவை நீக்க வேண்டும். அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும். அவர்களுடன் எவ்வித உறவாடலும் சம்பந்தமும் கூடாது. கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை நாம் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது. பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க (புறக்கணிக்க) வேண்டும். அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக்கூடாது. அவர்களைக் கண்டிப்பாக நமது நன்மை தீமை ஆகிய காரியங்களுக்கு அழைக்கவோ சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும்விட அவர்கள் பூசை செய்யும், தொண்டு செய்யும் எந்தக் கோவிலுக்கும் தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவேகூடாது. அவர்களுக்கு உணவுப்பண்டங்கள் விற்பதோ கொடுப்பதோ கூடாது. நம்முடைய வண்டி வாகனக்காரர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது. இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகிநிற்க வேண்டும். எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் (புறக்கணிப்புச்) செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்றும் இந்தப் பார்ப்பனர்களைப் போலவே வட நாட்டார்களையும் கருத வேண்டும். பார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்பது மேலே எடுத்துக் காட்டிய அவ்வளவையும் வட நாட்டாருடனும் வைத்துக் கொள்ள வேண்டும்; நடந்து கொள்ள வேண்டும். உடனடியான நிருமாணத் திட்டமாக வடநாட்டான் கடைகளை வியாபாரத்துறைகளில் பகிஷ்கரிக்க புறக்கணிக்க ஏற்பாடு செய்ய கழக செயற்குழுவைக் கூட்டி யோசித்து நடத்த வேண்டும். வட நாட்டான் கடைகளில் நம் மவர் வியாபாரம் செய்யக்கூடாது என்று நம்மவர்களை வடநாட் டான்கள் வியாபார தலங்களில் நின்று சமாதான முறையில் சாந்தமான தன்மையில் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்விதக் காரியங்களை அரசாங்கத்தார் தடுத்தால் அதற்கு மாத்திரம் நாம் இணங்காமல் இருக்கலாம் என்பது எனது கருத்து.

தமிழ்நாடு முழுவதிலும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கழகங்களை ஏற்படுத்த வேண்டும். ஒரு இலட்சம் உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். அங்கத்தினர் களைச் சேர்ப்பதற்கு நல்லபடி படித்த பெண்களை மாவட்டத்திற்கு இருவர் அல்லது மூவர் வீதம் தேவையான அளவுக்கு அலவன்ஸ் கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் ஃபாரங்கள் இலட்சக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்து, சேர்க்கச் செய்ய வேண்டும்.

அவர்கள் மூலமே இயக்கப் புத்தகங்களையும் இந்த அறிக்கை முதலியவற்றையும் குறைந்த விலைக்கு விற்கச் சொல்ல வேண்டும். இந்தப் பெண்களுக்குச் சிவப்புக்கரை போட்டக் கருப் புச்சேலை, சிவப்பு ரவிக்கை சப்ளை செய்ய வேண்டும். திருமதி நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார், ஆனைமலை ராமகிருஷ் ணம்மாள் முதலியவர்கள் இந்த நிருவாகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது இருவர் ஆண் தோழரை இக்காரியத்திற்கு ஏற்படுத்தி அவர்களுக்கும் தேவையான அவலன்ஸ் கொடுத்து இந்த வேலைகளைச் செய்யச் செய்ய வேண்டும். முழுநேரத் தொண்டர்களாக வரும் ஆண்களையும், பெண்களையும் ஏற்று அவர்களுக்கு உணவு, போக்குவரத்துச் செலவு அளித்து மேற்படி வேலை செய்யச் செய்யலாம். ஒவ்வொருவரின் வேலையையும், செய்த அளவையும் அறிந்து வேலைக்குத்தக்கபடி உற்சாகப்படுத்தி அலவன்ஸ் கொடுத்து வேலை செய்யச் செய்ய வேண்டும்.

மற்றக் கட்சிக்காரர்களைப்பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, காங்கிரசைப் பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, மந்திரிகளைப் பற்றியோ எவ்விதக் குற்றம் குறைகளும் நம் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது. அவர்கள் நம்மீது சுமத்தும் விஷமப்பிரச்சாரக் குற்றங்களுக்குக் கண்ணியமான முறையில் சமாதானம் சொல்லலாம். நமது இயக்கத்தின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் என் கின்ற முறையில் உயர்திரு.தி.பொ.வேதாசலம் அவர்களும், திருமதி. மணியம்மை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் வெளியில் இருக்கிறார்கள். திரு.வேதாசலம் அவர்கட்கு உடல் நலம் சரியாக இல்லாததால் முழுப்பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமுடியுமா என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. என்றாலும் தோழர்கள் அவர்களது கட்டளையை மதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். திருமதி.மணியம்மையார் கூடுமான அளவு தக்க பேச்சாளர்களுடன் நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். அங்காங்குள்ள நமது கழகம் அமைத்தல், மெம்பர் (உறுப்பினர்) சேர்த்தல், புத்தகம், அறிக்கை விற்றல் ஆகிய காரியங்களைக் கவனிப்பார்கள்.

நான் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டிக்க பட்டு சிறைவாசம் செய்து திரும்பிவரும் வாய்ப்பு இருந்து வந்து சேருவேனேயானால் ஒரு லட்சம் அங்கத்தினர், மூவாயிரம் கழகங்கள், 1500 ரூபாய்க்குக் குறையாத அறிக்கைப் புத்தக விற்பனைக் கணக்கு காண்பேனேயானால் நானும் மற்றும் அன்பான தோழர்கள் 3000 பேரும் சிறை சென்றது நல்ல பயன் அளித்தது என்றே கொள்ளுவோம். பல நண்பர்கள் நமக்குக் கூடுமான அளவு பொருளுதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு நண்பர் பெரும் அளவுக்கு அதாவது 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித் துள்ளார். இந்தச் சிறைப்பிடிப்பில் போக முடியாமல் வெளியில் இருப்பவர்களும், சிறைப்பிடித்து நாள் கணக்கில் வைத்திருந்து விடுதலையானவர்களும் மேற்குறித்த எனது வேண்டுகோள் பணிக்கு நல்ல ஆதரவு தரவும், எங்கள் தண்டனைக் கால அளவுக்கு முழு நேரத்தொண்டு செய்யவும், பலர் தாங்களாகவே முன் வந்திருக்கிறார்கள்; தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லையென்றாலும் அவர்களது முழு சம்மதத் துடன் பெயர்களை மணியம்மையார், திருவாளர்கள் வேதாசலனார், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் யோசித்து வெளியிடுவார்கள். அவர்களைக் கழகத்தோழர்கள், அபிமானிகள் (பற்றாளர்கள்) ஆதரவாளர்கள் நல்லபடி பயன்படுத்திப் கொள்ள வேண்டுகிறேன்.

கடைசியாக பலாத்காரம், இம்சை, நாசவேலை, கலவரம், சாந்த சமாதான பங்கம், தனிப்பட்டவர்களிடம் நேரிடையான வாக்கு வாதம், கலவரம் ஆகிய காரியங்கள் எதுவும் சிறிதும் தலைகாட்ட இடமில்லாமல் என்னுடைய தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அவர்கள் எனக்கு எதிரிகளும் கழகத்திற்குக் கேடு செய்பவர்களும் ஆவார்கள்.

என் பிறவி காரணமாக, என் இன இழிவுக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் என் இனமக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும், தாய்நாடான தமிழ் நாட்டை பனியா, பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும் சுரண்டலில் இருந் தும் மீட்டு சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன்.

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

- விடுதலை; 15.12.1957.

 

பெரியார் கைது

பெரியார் அவர்கள் சீரங்கம் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில் சூபரிண்டென்ட் திரு.எஸ். சோலை அவர்கள் பெரியார் மாளிகைக்கு வந்து பெரியார் அவர்களை கிரிமினல் புரொசீஜர் கோடு 151ஆவது பிரிவுப்படி (குற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டப்பிரிவு) உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ந் தேதி அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காகக் கைது செய்வதாகக் கூறி தமது காரில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 8 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டார். பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப் பட்டுள்ளார்கள்.

பெரியார் அவர்கள் சீரங்கம் கூட்டத்தை முடித்துக் கொண்டு, எக்ஸ்பிரஸ் டிரெயின் மூலம் சென்னைக்கு வந்து நவ. 26ந் தேதி சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம்ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதைத் தடுக்கவே முன்னேற்பாடாக போலீசார் கைது செய்தனர் என்று நம்பப்படுகிறது. நேற்று மாலை பெரியார் அவர்களைக் கைது செய்ய போலீசார் பெரியார் மாளிகைக்கு வரும் போது அங்கு கழகத் தோழர்கள் யாரும் இல்லை. எல்லோரும் சீரங்கம் கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். பெரியார் கைது செய்யப் படும்போது, திரு.ஆனைமலை நரசிம்மன் அவர்களும் திருமதி. மணியம்மையார் அவர்களும் மட்டும் உடன் இருந்தார்கள்.

- விடுதலை; 26.11.1957.

 ஆம், கொளுத்தினேன்

சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ். வரதராசன் முன்னிலையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்க ளின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.

முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர். நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.

போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார். அடுத்து தோழர்கள் தாமோதரன் அபி பூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்டபுத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர். கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பகவல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது.

நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண் மையா? எனக் கேட்டனர். ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.

கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்ட ணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு, இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.

கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ்கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார். தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறி னார்கள். தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை யும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழி யன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்தியநாதன் ஆகியோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர். கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.

- விடுதலை; 27.11.1957.

 

பார்ப்பன அடிமை ஆட்சிக்கு முதற்பலி!

திருச்சி சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமி மாண்ட கொடுமை திராவிடர் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைக்கிணங்க, சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை அடைந்து திருச்சி மத்தியசிறையில் அனுபவித்துவந்த பட்டுக்கோட்டைத் தோழர் ராமசாமி அவர்கள் நேற்று மாலை இறந்துவிட்டார்.

இந்தச் செய்தி அறிந்த நகர திராவிடர் கழகத் தோழர்களும் தலைவர் தோழர் தி.பொ.வேதாசலம் முதலியவர்களும் இன்று காலை முதல் சிறைவாயிலில் இறந்த தோழரின் பிரேதத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டைத் தோழர்கள், உறவினர்கள் வருகையை சிறை அதிகாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் வந்த பின்னர்தான் பிரேதம் தரப்படும் என்றும் சொல்லப் படுகிறது.

திருச்சியிலிருந்து இந்த துக்கச்செய்தி கிடைத்ததும் நேரில் பார்ப்பதற்காக திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் இன்று பகல் ஒரு மணிக்கே தனிக்காரில் திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுடன் தோழர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா, கடலூர் கி. வீரமணி எம்.ஏ. ஆகியவர்களும் சென்றார்கள்.

சிறையில் நமது தோழர் இறந்த துக்க செய்தி கேட்ட திராவிடர் கழகத் தோழர்கள் ஆங்காங்குள்ள கழகக் கட்டிடங்களில் பறந்து கொண்டிருந்த கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் இறக்கி பறக்க விட்டனர்.

- விடுதலை ; 09.03.1958. 

 

திருச்சி சிறையில் நடக்கும் பயங்கரக் கொடுமை!

வீரர் வெள்ளைச்சாமி நேற்று பலி!

மற்றும் நால்வர் மரணவாயிலில்! 

கழகத் தோழர்கள் பழிவாங்கப்படுகின்றனரா?

உயிர்நீத்த வீரர் சடலத்தையும் கொடுக்க மறுக்கும் விபரீதம்

திருச்சி மத்திய சிறையில் சாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்ட கழக வீரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்றே எண்ணப்பட வேண்டியிருக்கிறது. நேற்று மற்றுமொரு தோழர் மரணத் தருவாயில் மத்திய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கே மாண்டிருக்கிறார். மேலும் நான்கு தோழர்கள் மிக்க நோய்வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

திருமதி. மணியம்மை வருகை

திருச்சி சிறையில் நடக்கும் கொடுமைகளுக்கு ஆளாகி பட்டுக் கோட்டை தோழர் ராமசாமி இறந்த செய்தி கேட்டு திருமதி ஈ.வெ. ரா.மணியம்மை அவர்கள் தோழர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதா, வீரமணி எம்.ஏ. ஆகியோருடன் திருச்சிக்கு விரைந்து சென்று இரவு 10 மணியளவில் திருச்சி மத்திய தி.க. நிர்வாகக்குழுத் தலைவர் தி.பொ.வேதாசலம் அவர்களை சந்தித்து விவரம் அறிந்தார்.

திரு.வேதாசலம் அவர்கள் கழகத் தோழர்களுடன் காலையிலிருந்தே மத்திய சிறை அதிகாரிகளைக் கண்டு சிறையில் உயிர் நீத்த தோழரின் சடலத்தை கழகத்தினரிடம் அளிக்குமாறு வேண்டியும் அதிகாரிகள் தர மறுத்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதன் மேல் மீண்டும் திருமதி.மணியம்மை அவர்கள் திரு. வேதாசலம் அவர்களுடனும் தோழர்கள் எம்.ஆர்.ராதா, வீரமணி ஆகியோருடனும் சிறை அதிகாரிகளை சந்தித்து கேட்டுப் பார்த் தனர். பிணம் கொடுக்க மறுக்கப்பட்டதன் மேல் தலைமை அமைச் சருக்கு இது பற்றி வேண்டுகோள் விடுத்து தந்தி அடித்தார்கள்.

மற்றொரு வீரர் மரணம்

இதற்கிடையில் சிறையிலிருந்து மிக ஆபத்தான நிலைமையில் திருச்சி மத்திய சிறையிலிருந்து அனுமதிக்கப்பட்ட கழக வீரர் தஞ்சை மாவட்டம் மாயூரம் வட்டம் மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த திரு.பொன்னுச்சாமி மகன் திரு. வெள்ளைச்சாமியும் ஆஸ் பத்திரியில் சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மரணமடைந்த செய்தி கேட்டு திடுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்து அந்த சடலத்தை வாங்கி வந்தனர்.

சாதி ஒழிப்பு வீரருக்கு மரியாதை

வீரர் திரு.வெள்ளைச்சாமியின் சடலத்தை பெரியார் மாளிகையில் மாலையிட்டு எல்லோரும் காணும்படி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளை அறிந்த திருச்சி கழகத்தோழர்கள் திரண்டு வந்து இறந்த வீரருக்கு மரியாதை வணக்கம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

வீரர் ராமசாமியின் சடலத்தைப் பெற முயற்சி

திருமதி.மணியம்மை அவர்களும் தோழர்கள் எம்.ஆர்.ராதா, கி.வீரமணி அவர்களும், சிறை அதிகாரிகள் பட்டுக்கோட்டை வீரர் ராமசாமியின் சடலத்தைக் கொடுக்க மறுத்து விட்டதனால் சென்னையில் முதலமைச்சர், உள்நாட்டு அமைச்சர், சிறை மேலதிகாரி ஆகியோரைக் காண மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்கள்.

சென்னையில்

சென்னையில் திருமதி.ஈ.வெ.ரா.மணியம்மை அவர்களும், திருச்சி வழக்கறிஞர் திரு.பி.ரெங்கசாமி அவர்களும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்டு கேட்டதற்கு அவர்கள் இது விஷ யமாகக் கவனிப்பதாக வாக்களித்ததன் மேல் இருவரும் திருச்சியில் மாண்ட வீரர்களுக்கு இறுதி மரியாதை தெரிவிக்கவும் திருச்சி நகரில் நடக்கும் வீரர் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகவும் இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இறந்த வீரர்கட்கு அனுதாபம் காட்ட கழகக் கொடிகள் பாதி அளவில் பறக்க விடப்பட்டுள்ளன.

திருச்சியில் சவ அடக்க ஏற்பாடு

திருச்சி நகர மக்கள் இன்று இரு சடலங்களையும் வீரர்களுக்கான மரியாதையுடன் மாபெரும் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யத்தக்க ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

- விடுதலை; 10.03.1958.

 

 சாதி ஒழிப்பு வீரத்தியாகிகளுக்கு

திராவிட மக்களின் இறுதி அஞ்சலி!

திருச்சி சிறையில் வீரமரணம் எய்திய

தோழர்கள் ராமசாமி, வெள்ளைச்சாமி சவ அடக்கம்!

திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் தலைமையில் மாபெரும் ஊர்வலம்!

லட்சம் மக்களுக்குமேல் துயரமுகத்துடன் மவுனமாய் உடன் சென்றனர்.

இடுகாட்டில்

மறைந்த மாவீரர்கட்கு

நினைவுச் சின்னம் எழும்!

சாதி ஒழிப்புப் போரில் சிறையேற்று அனுபவித்து வந்த திருச்சி சிறை அதிகாரிகள் கொடுமைக்குள்ளாகி முதற்பலியாகிய பட்டுக் கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு வீரத் தியாகிகளுக்கும் திருச்சி, தஞ்சை மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் நேற்று திரண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

இருசடலங்களும் திருமதி. ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் தலைமையில் நகரில் மாபெரும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப் பட்டு முனிசிபல் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதியில் வீரத்தியாகிகளைப் பாராட்டியும் சிறை அதிகாரிகளின் கொடுமையைக் கண்டித்தும் ஓர் அனுதாபக்கூட்டம் நடத்தப்பட்டது.

வீரர்களை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும்.

சாதி ஒழிப்பு வீரர்களின் மரணச் செய்தி கேட்டு திடுக்கிட்ட மக்கள் நேற்று காலையிலிருந்தே திருச்சி பெரியார் மாளிகையிலும் திருச்சி மத்திய சிறை வாயிலிலும் ஏராளமாகக் கூடி விட்டனர். திருச்சி மாவட்டம் கரூர், லால்குடி மண்ணச்சநல்லூர் பக்கங்களிலிருந்து தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர், தஞ்சை, மன்னார் குடி, பட்டுக்கோட்டை பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் விரைந்து சென்றனர் திருச்சிக்கு.

திருவாரூரிலிருந்து தோழர்கள் முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப் மற்றும் பல தோழர்கள் திருச்சியை அடைந்தனர். திரு.தி. பொ.வேதாசலனார் அவர்கள் சிறையிலிருந்து வீரத்தியாகி ராமசாமியின் சடலத் தைப் பெற்று வர தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்தார். திருமதி. ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்கள் வழக்கறிஞர் திரு.பி.ரெங்கசாமி அவர்களுடன் சென்னையில் அமைச்சர்களையும் மேல் அதிகாரிகளையும் கண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக்கோரி சம்மதம் பெற்று திருச்சியை மாலை 6 மணிக்கு அடைந்தார்கள்.

வீரர் சவம் பெரியார் மாளிகைக்கு அனுப்பப்பட்டது

சென்னையிலிருந்து மேலிடத்து உத்தரவு பெற்ற பின்னர் சிறை அதிகாரிகள் திரு.வேதாசலனார் அவர்களை அழைப்பித்து அவர்களிடம் பட்டுக்கோட்டை தோழர் ராமசாமியின் சடலத்தை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர். வேனில் சடலத்தை வைத்து பெரியார் மாளிகை வரை கொண்டு வந்து கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். அவ்விதமே சடலம் கொண்டு வரப்பட்டு பெரியார் மாளிகையில் வைக்கப்பட்டது.

வீரர்களுக்கு அஞ்சலி

பெரியார் மாளிகையில் வீரத்தியாகிகள் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இருவரின் சடலங்களும் அலங்கரித்து வைத்திருந்த இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து மலர் மாலைகளை அணிவித்து இறுதி வணக்கம் செலுத்திச் சென்றனர்.

மாபெரும் ஊர்வலம்

வீரத்தியாகிகளின் சடலங்களை தனித்தனியாக இரு வண்டிகளில் அலங்கரித்து வைத்து கருப்புத் துணியால் போர்த்தி மலர் மாலைகளை அணிவித்து மாபெரும் ஊர்வலமாக முனிசிபல் இடு காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருமதி.ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் தலைமை

ஊர்வலத்துக்கு திருமதி.ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் தலைமை வகித்து எவ்வித குழப்பமும் நடைபெறா வண்ணம் அமைதியாக நடத்திச் சென்றார்கள். ஊர்வலத்தின் முன் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை வீரர்கள் அணிவகுத்து மவுனமாகச் சென்றனர். திருச்சி நகரோ என்றுங் கண்டிராதபடி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் துக்கத்துடன் மவுனமாகச் சென்றது குறிப்பிடத் தக்கதாகும்.

போலீசார் ஏராளமானவர்கள் தொடர்ந்து வந்தனர். நகரெங்கும் போலீசு காவல் கெடுபிடி அதிகமாயிருந்தது.

ஊர்வலம் செல்கை

இந்த மாபெரும் ஊர்வலம் தென்னுர் மரக்கடை, மயிலம் சந்தை, பெரிய கடைத்தெரு, சிந்தாமணி ரோடு வழியாக காவிரிக் கரை மயானம் சென்றடைந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். வழி நெடுகிலும் இரு மருங்கிலும் தாய்மார்களும் குழந்தைகளும் குழுமி நின்று கண்ணிர்மல்கினர். போலீசார் கெடுபிடி அதிகமாகயிருந்தும் எவ்வித அசம் பாவிதமும் நடைபெறவில்லை. ஊர்வலத்தின் முன்பு, சாதி ஒழிப்புப்போரில் சிறைதண்டனை ஏற்று சிறையில் மாண்ட பட்டுக் கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய தியாகிகளுக்கு எங்கள் பணிவான மரியாதை உரியதாகுக. என்று எழுதப்பட்ட பானர்கள் எடுத்துக் கொண்டு முன் சென்றனர் அணிவகுத்து.

மாபெரும் அனுதாபக் கூட்டம்

மயானத்தில் திரு.தி.பொ.வேதாசலம் அவர்கள் தலைமையில் அனுதாபக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருமதி.மணியம்மையார், திரு.தங்கராசு, கி.வீரமணி ஆகியோர் பேசினார்கள். பிரேதங்களை பின்னர் நினைவுச்சின்னம் எழுப்புவதற்கு வசதியாக முனிசிபல் மயானத்தில் தனியான இடத்தில் வீர வணக்கத்துடன் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று காலை திருமதி.ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் அவர்களைக் கண்டு பட்டுக்கோட்டை ராமசாமியின் பிரேதத்தை சிறை அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்காதது பற்றிக் குறிப்பிட்டபோது, அதற்கு முதலமைச்சர் அவர்கள் பிரேதத்தை கொடுத்தால் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் ஏதாவது கலவரம் நிகழக்கூடுமோ என்று அஞ்சியே கொடுக்கமாலிருந்திருக்கலாம் என்று கூறினார். அதற்கு மணியம்மையார் அவர்கள் அந்தப்படி ஊர்வலம் எடுத்துச் சென்றால் ஊர்வலத்தில் எந்தவித குழப்பமோ கலவரமோ இல்லாமல் அமைதியாக நடத்திச் செல்கிறோம் என்று உத்தரவாதம் சொல்லியதன்படியே போலீசார் கெடுபிடி இருந்தும் ஊர்வலத்தில் எந்தவித குழப்பமுமின்றி அமைதியாக ஊர்வலம் மயானத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை; 11.03.1958.

 

களப்பலியான

கழகத்தோழர்கள் 

பட்டுக்கோட்டை இராமசாமி (08.03.1958)

மணல்மேடு வெள்ளைச்சாமி (09.03.1958)

திருச்சி சின்னச்சாமி (07.09.1958)

லால்குடி நன்னிமங்கலம் கணேசன் (30.07.1958)

வாளாடி பெரியசாமி (22.12.1958)

இடையாற்றுமங்கலம் நாகமுத்து

இடையாற்றுமங்கலம் தெய்வானையம்மாள்

மாதிரிமங்கலம் ரெத்தினம்

கோவில் தேவராயன்பேட்டை நடேசன்

திருவையாறு மஜீத்

காரக்கோட்டை இராமய்யன்

புதுமணக்குப்பம் கந்தசாமி

பொறையாறு தங்கவேலு

மணல்மேடு அப்பாத்துரை

கண்டராதித்தம் சிங்காரவேலு

திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன்

தாராநல்லூர் மஜீத்

கீழவாளாடி பிச்சை

Read 1434 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.