Tuesday, 29 September 2020 01:12

காந்தி பட எரிப்புப் போராட்டம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 89

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமலையப்பன் 

காந்தி பட எரிப்பு, காந்தி சிலை அகற்றல் என்பதான காரியங்கள் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குப் பல ஆண்டுகளாகவே உண்டு. அதைப் பொதுமக்களிடத்தில் இந்த 3, 4 ஆண்டுகளாக எனது பொதுக்கூட்டப் பேச்சுகளில் காட்டிக்கொண்டே வந்திருக்கிறேன். அந்த எண்ணமும் பேச்சும் நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று இந்தச் சந்தர்ப்பத்தில் உருவகமாக வெளியாக்கப்படவேண்டிய அவசி யத்திற்குள்ளாகி விட்டது.

காந்தியைப் பற்றிய நீண்ட நாளான எனது கருத்தை அறிய வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் - 1927 முதல் 1931 வரை உள்ள குடி அரசு பத்திரிகையைப் பார்ப்பவர்களுக்கு (அதை முறையாய் வெளியிடப் போகிறேன்) நன்றாக விளங்கும்.

நான் 1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தலைவனாகவும், பிரமுகனாகவும் இருந்த காலத்தில் - காங்கிரசை விட்டு வெளியேறிய காரணம் காந்தியின் செய்கையாலேயே ஆகும்.

1928 இல் என்பது எனது ஞாபகம், காந்தியின் உள்கருத்திலேயே எனக்கு ஏற்பட்ட உறுதியான எண்ணத்திலே, 'இனி, காந்தியை மகாத்மா என்று அழைப்பதில்லை' என்று நான் முடிவு செய்து திரு. காந்தியார்; தோழர் காந்தியார் என்றே எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். குடி அரசு, திராவிடன், இன்றைக்கும் விடுதலை பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும்.

பல கூட்டங்களிலும் - காந்தியை, மகாத்மா காந்தி என்று சொல் என்று பலர் குழப்பங்களும் காலித்தனங்களும் செய்த காலத்திலும் - காந்தியாரின் நடத்தையை, அவர் நமக்குச் செய்த கெடுதியை, துரோகத்தை விளக்கி ஒப்பச் செய்திருக்கிறேன் என்றாலும், இந்தப் பார்ப்பனர்கள் தங்கள் வாயால் ஒரு பார்ப்பனரல்லாத மனிதரை மகாத்மா' என்று அழைத்துத் தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதே என்பது பற்றி மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ஆனாலும், அதற்கு ஏற்ற கருத்துக்களை நான் ஆதரித்ததே கிடையாது.

சில கூட்டங்களில் நான் தாட்சண்யப்பட வேண்டிய தோழர்கள் கூட சிநேகித முறையில், காந்தியை - மகாத்மா என்று சொல்லு' என்று கேட்டுக்கொண்ட காலத்திலும், அவர்களுடன் தர்க்கம் செய்யாமல், 'அய்யா, எனக்கு வெறும் ஆத்மா என்பதிலேயே நம்பிக்கை கிடையாது; அப்படியிருக்க, மகாத்மா என்று சொல்லச் சொன்னால் என் நா எப்படி உச்சரிக்கும்?" என்று சமாதானம் சொல்லி இருக்கிறேன். ஆதலால், நான் ஒன்றும் இன்று எனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டேன். தவிர, நானும் தோழர் இராமநாதன் எம். ஏ. அவர்களும், எங்களது சுயமரியாதைப் பிரச்சாரம் மும்முரமான காலத்தில் காந்தியாரது வருணாசிரமப் பிரச்சாரம் எங்களுக்கு மூட்டிய ஆத்திரத்தால் - எங்கள் தனிப்பட்டமுறைப் பேச்சில், இந்த காந்தியைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று நண்பர்களிடையில் பேசிக் கொண்டு இருந்திருக்க வேண்டும்.

நண்பர் ஆச்சாரியார் அவர்களும் நானும் காந்தியாரைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது பல விஷயங்கள் பேசினோம் என்றாலும் காந்திக்குத் தெளிவான புத்தி (Clear Thinking) கிடையாது, மிகவும் (Clear Thinking) எல்லாம் குழப்பமான எண்ணம்தான்; அதோடுகூடத் தனக்கு எல்லாம் தெரியும் என்கின்ற எண்ணம் உள்ளவர்' என்பதாகப் பேசிக் கொண்டு இருந்திருக்கின்றோம்.

வேறு பல விஷயங்களும் உண்டு; அவை பின்னால் வெளிவரும். இவை ஒரு புறமிருக்க, காந்தியால் நமது தமிழ்நாட்டுக்கு - தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் - பொருளியல் - சமுதாய இயல் ஆகியவைகளில் ஏற்பட்ட கேடுகள் அளவிலடங்காதவை என்றாலும், இன்று அது வளர்ந்து விரிந்து மாபெரும் கேடு ஏற்படும் அளவுக்கு - அதாவது, இனிப் பரிகாரம் செய்ய முடியாத அளவுக்குப் பரவி, பலம்பெற ஆரம்பித்து விட்டதால் ஓர் இரண்டு மூன்றாண்டுகளாக எனது உள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த எண்ணம் வெளியாக்கப்பட வேண்டியதாக ஆகிவிட்டது. இனி அது எந்தவிதத்தாலும் தங்காது; வெளியிட பிரச்சாரம் செய்யத் தயங்காது.

'உலகம் போற்றும் உத்தமர்' என்று சிலர், மதசம்பந்தமான முறையில் பேசுவது போல், காந்தியைப் பற்றிக் கூறுவது உண்டு. இது பார்ப்பனரில் ஒரு சிறு கூட்டத்திற்குச் சாமியாரான சங்கராச்சாரியை, அவர் தானே தான் கடவுள் என்ற தன்மையை 100 க்கு 90 ஆத்திகர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எல்லாப் பார்ப்பனரும் அவரை லோக்குரு, ஜகத் குரு என்று எப்படிச் சொல்லுகிறார்களோ அதுபோலும், நாமும் எப்படி அவரை லோக்குரு ஜகத்குரு என்று எப்படிச் சொல்லுகிறோமோ அது போலும், காந்தியைக் காங்கிரசுக்காரர்கள், உலகம் போற்றும் உத்தமர் காந்தி, மகான் காந்தி, காந்தி மகான் என்று அவசியத்தை முன்னிட்டு - மற்ற மக்களை ஏய்ப்பதை முன்னிட்டுப் பேசுவதாலும் ; பத்திரிகைக்காரர்கள் பார்ப்பனருக்கு அடிமையாகி வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் அவர்களும் அப்படி எழுதுகிறார்கள். நான் அப்படிப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. எனக்குக் காந்தியை நன்றாகத் தெரியும். ஜின்னாவுக்கும், அம்பேத்கருக்கும் காந்தியை எவ்வளவு தெரியுமோ - அதற்குச் சற்று மேலாகவே எனக்குத் தெரியும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். காந்தியை வெளியாக்க வேண்டிய முக்கியமான அவசியம் - காங்கிரசுக்காரர்களையோ, சட்டசபை மெம்பர்களையோ, பத்திரிகைக்காரர்களையோ, பாமர மக்களையோ திருத்திவிடலாம் என்கின்ற எண்ணத்தால் அல்ல. மற்றென்ன வென்றால், நமது பின் சந்ததிக்கு - விஷயத்தைச் சொல்லி விளக்கி விட்டுப் போனால், பயன்படுகிறபோது பயன்படட்டும் என்கின்ற எண்ணமும்; மோசடிக்கார நம் எதிரிகளின் கூலிகள் தங்கள் வாழ்வுக்கு இனிமேலாவது - காந்தி மகான் சொன்ன வழி என்று சொல்லி மக்களை ஏய்க்காதிருக்கட்டும் என்பதுமாகும்.

காந்தியால் நம் சமுதாயத்திற்கு - நம் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? காந்தியால் நாம் ஏமாற்றப்பட்டோம்; காந்தியால் நம் நாடு வடவனுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்தப்பட்டது. காந்தியால் மக்களிடம் இருந்த ஒழுக்கங்கள் அடியோடு நாசமாகி எல்லாத் துறைகளிலும் ஒழுக்கக் கேடும், நாணயக்கேடும் வளர்ந்து இன்று ஒரு துறையிலாவது ஒரு மனிதனிடத்திலாவது - ஒழுக்கம், நாணயம் என்பது இல்லாமல் போனதோடு அயோக்கியத்தனம், பித்தலாட்டம், வஞ்சகம், துரோகம் இல்லாமல் - அப்படி நடக்காமல் எவரும் வாழமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

அரசியல் துறை ஆபாசக் களஞ்சியமாக, பித்தலாட்ட ஊற்றாக ஆகிவிட்டது.

மனிதனுக்கு மான ஈன உணர்ச்சி சிறிது கூட நினைக்கவே முடியாமல் போய்விட்டது.

ஜனநாயகம் என்றால், ஓட்டர்கள்தாம் முட்டாள்கள் என்றால், பிரதிநிதிகள் 100க்கு 99 அயோக்கியர்கள், வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.

ஜனநாயகம் என்றால், 10 ஆயிரம் முதல் 100 ஆயிரம் வரை செலவு செய்தால் தான் ஒருவன் பிரதிநிதி ஆக முடிகிறது.

இதற்குப் பெயர், காந்தி மகான் காட்டிய வழி; காந்தியார் தேடித் தந்த சுதந்திரம் - சுயராஜ்யம் என்றால், மக்கள் மீது தவறா? காந்தி மீது தவறா? என்பதை யோசித்துப் பாருங்கள்! மற்றவர்கள் இதை மறைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அவர்களது பிழைப்பு இந்தப் பித்தலாட்டத்தின் மீது அமைந்து விட்டது. எனக்கு அந்த நிலைமை இல்லை. நான் மக்களுக்காக வாழ்கிறேன்; மக்களுக்காக எனது பொருளை ஒப்படைத்து இருக்கிறேன்; மற்றும் மக்களுக்காகச் சாகப் போகிறேன். (என் உயிரைக் கொடுக்கப் போகிறேன்) அப்படிப்பட்ட நான், ஏன் இந்த மோசடியை மூடி வைக்க வேண்டும்?

காந்தி பெற்ற சுயராஜ்யத்தில் நாட்டு மக்களுக்கு ஏதாவது பங்கு உண்டா ? யாராவது எந்தப் பத்திரிகைக்கார யோக்கியனாவது எடுத்துக் காட்டட்டுமே, பார்க்கலாம்! மந்திரிக்குச் சம்பளப் பெருமை, சட்டசபை மெம்பருக்கு படிப் பெருமை தவிர, சொந்த வாழ்வுக்கு வசதி - இதைத் தவிர, அவர்கள் தங்களால் ஆகக்கூடியது இன்னது என்று சொல்லட்டும்; அல்லது தங்களால் ஆனது இன்னது என்று சொல்லட்டும்.

தமிழ்நாட்டில் பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் ஆதிக்கமும் சுரண்டலும் எதற்காக இருக்க வேண்டும்? இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அவனவன் பங்குக்குமேல் ஏன் இருக்க வேண்டும்? காந்திமகான், இருக்கவேண்டும் என்று சொன்னார் என்றால் அந்தக் காந்தி முதலில் ஒழியவேண்டுமா, வேண்டாமா?

சாதிகளைக் கடவுள் உற்பத்தி செய்தார் என்பதால் தானே - அந்தக் கடவுள் முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறி, எரிக்கவும் உடைக்கவும் செய்கிறோம்.

சுயராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் வந்து 10 ஆண்டுகள் ஆகப் போகிறது; ஜனநாயக - பொதுஜன ஓட்டுத் தேர்தல்கள் இரண்டு நடந்து விட்டன. இன்றும் இந்த நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன் (அரிஜன்) இருக்கிறான் என்றால் இது காந்தி மகான் தேடிய சுயராஜ்யம்; இதில் அப்படித்தான் இருக்கும் என்றால், அந்தக் காந்தி மகான் உருவம் இந்த நாட்டில் இருப்பது நாட்டு மக்களுக்கு மானக்கேடா இல்லையா? யோக்கியமான பத்திரிகைக்காரர்கள், அரசியல் வாழ்வுக்காரர்கள் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்!

வாழ்வுக்கு - ஒருவன் மானத்தை விற்கிறான்; ஒருவன் நாணயத்தை, ஒழுக்கத்தை விற்கிறான்; ஒருவன் மனைவியை, மகளை விற்கிறான். ஆகவே, இவர்கள் ஒரு டிகிரி இரண்டு டிகிரி , 5 டிகிரி, 10 டிகிரி வித்தி யாசக்காரர்களே தவிர பொதுவில் - விற்கக் கூடாததை விற்கிறவர்கள்தாமே?

நாளைக்குக் கொண்டாடப்போகும் சுதந்திரவிழா - பிராமணன், சூத்திரன், பறையன் இல்லாத நாட்டுச் சுதந்திர விழாவா, மக்களை ஏமாற்றி மோசம் செய்த, யோக்கியப் பொறுப்பற்ற சுயநல வஞ்சகர்கள் சுகவாழ்வுக்கு நடத்தும் நாட்டுச் சுதந்திர விழாவா என்று கேட்கிறேன்.

யோக்கியமான, மானமுள்ள பத்திரிகைக்காரர்கள் சொல்லட்டும், பார்க்கலாம்! திருடனைத் திருடன் மிரட்டலாம்; திருடாதவனைத் திருடன் எப்படி மிரட்ட முடியும்? மந்திரிசபை காங்கிரசுக்காரர்களே! சட்டசபை மெம்பர்களே! யோக்கியப் பொறுப்பு கடுகளவுமில்லாத பத்திரிகைக்காரர்களே!

நாளைக்கே காந்தி படத்தைக் கொளுத்தப் போவதில்லை.

நாளன்றைக்கே காந்தி சிலையை அப்புறப்படுத்து என்று கேட்கப் போவதில்லை ! நல்லபடி நாடு முழுதும் பிரச்சாரம் செய்து - நான் சொல்லாமலே பொதுமக்கள் அந்த வேலைகளைச் செய்ய முன்வரும் படி, அல்லது நானே செய்யச் சொல்லும்படி சொல்லப்போகிறேன்! கண்டிப்பாய் சொல்லப்போகிறேன். அதற்குள் உங்கள் துரோகத்தையும் விஷமத்தையும் செய்து பாருங்கள்.

மற்றவை பின்னால்,

- விடுதலை ; 13.08.1957.

காந்தி பொம்மை உடைப்பு

'காந்தி பொம்மையை உடையுங்கள்'

ஆளுக்கொரு காந்தி பொம்மையை உடையுங்கள்; வீட்டில் மாட்டியுள்ள படத்தை ரோட்டில் வீசி எறியுங்கள். இப்படிச் செய்தால் நம் உணர்ச்சியைக் கண்டு துரோகம் செய்யப் பயப்படுவார்களே! மந்திரிகள் 'நாடு பிரியக்கூடாது' என்று சொல்லமாட்டார்களே!

'காந்தி இன்னின்ன துரோகம் செய்து எங்களை அடிமையாக்கி விட்டார்' என்று விவரம் சொல்லிக் கொளுத்து என்கிறேன். நீங்கள் வேண்டுமானால், காந்தி ஒன்றும் செய்யவில்லை; நான்தான் செய்தேன் என்று தைரியமாகச் சொல்லுங்கள்! முடியுமா?

காந்தி ஒன்றும் அபூர்வ புருஷர் அல்லர். பார்ப்பான், அப்படிப் பாமர மக்கள் நம்பும்படி - மகாத்மா ஆக்கினான். இப்போதல்ல; அப்போதே நான் குடி அரசில்' இதை எழுதி இருக்கிறேன். ரிஷிகளுக்கு எவ்வளவு அறிவோ அவ்வளவுதான் காந்திக்கும். அவரைப் பார்ப்பனர்கள் மகாத்மா ஆக்கிவிட்டார்கள்! மகாத்மா வேஷத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவருக்கு வேலை சரியாய்ப் போகிறது' என்று எழுதியிருக்கிறேன்.

1930க்கு முன்னமேயே, காந்தி ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்குப் போகும் போது வழியில் அவரை மடக்கி, துரோகி ஒழிக' என்று கூவி, அவர் காரில் கண்டதைப் போட்டிருக்கிறார்கள். காங்கிரசுக் கூட்டத்தில் காந்தி, என்னை ஒழிக என்கிறார்கள்; இவர்களா என்னை ஒழிப்பார்கள்? அது பகவான் கையில் இருக்கிறது' என்று பேசியிருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ் கோஷ்டியினர்தான் அப்படி வழியில் மடக்கிக் கண்டதைப் போட்டு, காந்தி ஒழிக!'' என்றவர்கள்.

தாகூர் சொல்லியிருக்கிறார்; காந்தி காட்டு மனிதன்; இவருக்கு என்ன அனுபவம்? இவரது கொள்கை மோசமான கொள்கை' என்று. அதற்குக் காந்தி தாகூரைப் பற்றி, இந்தத் தாகூருக்கு என்ன தெரியும்? கவி என்றால் கவிதை பாடி, பணக்காரர்களிடம் கூலி வாங்கிச்சுகபோகமாக இருப்பார்கள்; விடுதலையைப் பற்றி இவர்கள் பேசுவது தப்பு என்று பேசினார். மக்களை உசுப்பிவிட்டு அவர்கள் தாகூர் வீட்டில் கல் போட ஓடினார்கள்; அவர் பயந்து, மறுநாளே காந்தியை மகாத்மா' என்று சொல்லிவிட்டார்.

இப்போது மராட்டி, குசராத்தி சண்டை வந்தபோது காந்தி படத்திற்குச் செருப்பு மாலை போட்டார்கள்! குசராத்தி - ஆரியன் - மராட்டி - திராவிடன். இப்போது மராட்டியனிடம் திராவிட உணர்ச்சி ஊட்டினால் வளரும். அங்கு அந்த இராஜ்யங்களின் அமைப்பை ஓர் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான். அந்தக் காலத்தில் காந்திக்குச் செருப்பு மாலை போட் டார்கள். நேரு, அங்கு எப்படிப்போவதென்று யோசனை செய்தார். அவருக்கும் செருப்பு மாலை போட்டான். இதெல்லாம் விளம்பரமாகவில்லை; சுபாஷ் சந்திரபோஸ் ஓடியது யாரால்?

ஆந்திரர், மலையாளி இவர்கள் நாடாளப் பணமின்றித் தவிக்கிறார் கள்! பெட்டி வெறும் பெட்டியாக இருக்கிறது என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதோதாண்ட ஆரம்பித்தாகி விட்டது; அரைக்கிணறு தாண்டியதும், போதும் இவ்வளவு என்றால், கீழே பாதாளத்திற்குப் போக வேண்டியது தான். ஆகவே, வேகமாகத் தாண்டியாக வேண்டும்.

நான், தேசியக் கொடியை எரிக்கப் போகிறேன் என்றதும் வழிக்கு வந்தார்களா, இல்லையா? அதுபோல் வந்து கேட்கட்டுமே! ஏன் ரகளை செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று. இனிமேல் சட்டம் போட வேண்டும்; திட்டினால் இன்னது; கொளுத்தினால் இன்னது என்று.

காந்திக்கும் எங்களுக்கும் சொந்தத் தகராறு ஒன்றுமில்லை. அவர் இடத்தைப் பிடிக்கப் போட்டி போடவில்லை; எங்களுக்கும் சொந்தத்திற் கும் எதுவும் வேண்டுமென்று செய்யவில்லை. இதற்கு ஒரு மாநாடு கூட்டி விசயத்தை விளக்கிக் கேட்கப் போகிறேன்; சம்மதம் கொடுக்க வில்லையென்றாலும், நானாவது செய்து விட்டுப்போய் உட்கார்ந்து விடுவேன்.

காந்தி நாடு என்று பெயர் வை, காந்தி சகாப்தம் என்று பெயர் வை என்று நீ சொன்னாயே? என்று என்னைக் கேட்கிறார்கள். அவர்களால், கொளுத்துவதற்கு நான் சொல்லும் காரணங்களை மறுக்க முடியவில்லை.

நான் சமயம் போல் பேசுகிறேன் என்று மக்களுக்குத் தோன்றச் செய்யவேண்டும் என்றே இப்படிக் கேட்கிறார்கள். குறும்பாகச் சொல்வ தென்றால், நான் அன்று சொன்னேன், கேட்டாய்; இப்போதும் நான் சொல்கிறேன் - கேளேன்! என்று நான் சொல்லிவிடலாம்.

காந்தி நாடு என்று வைக்கலாம் என்று சொன்னேன். முதலில் இந்தியா என்பதே கற்பனைச் சொல்; இப்படிக் கற்பனைச் சொல்லை வைத்துக் கொண்டு உயிரை வாங்குவதைவிட உனக்குத்தான் காந்தியிடம் அதிக மரியாதை இருக்கிறது என்றாயே - அவர் பெயரை வைத்து விட்டுப் போயேன் என்று யோசனை சொன்னேன். சுயநலக்காரர்கள் அதை வைக்கவில்லை; என்ன செய்வது என்று யோசனை கேட்டார்கள், சொன்னேன். அதுபோலவே தான், காந்தி சகாப்தம் என்று வைக்கச் சொன்னேன். நமக்கென்று வருடமே இல்லை. வெள்ளைக்காரன் கிறித்து பிறந்து 1957 வருடம் என்று வைத்திருக்கிறான். நமக்கு இருப்பது பிரபவ, விபவ என்ற ஆரியக் கதைப்படி உள்ள 60 வருடங்கள் தாம், இதைக் கொண்டு காலத்தைக் கண்டுபிடிக்க முடியாது. நான் பிரமாதி ஆண்டில் பிறந்தேன். இப்பொழுது கணக்குப் பார்த்தால் 19 வயதுதானே ஆக வேண்டும்? எனக்கு எழுபத்தொன்பது என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் என் தாடியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். சரித்திரத்திலேயே புரட்டு ஏற்பட இது ஒரு காரணம். கல்வெட்டில் - கலியுகாதி, பிரபவ வருடம் என்று போட்டிருப்பான். கலியுகாதி என்பது பித்தலாட்டம்; அறிவுக்குப் பொருத்தமும் ஆதாரமும் அற்றது. பிரபவ என்று சொன்னால் - எந்தப் பிரபவ என்று சொல்ல முடியாது. இப்படி நமக்கென்று ஒரு சகாப்தம் இல்லாமல் அழிப்பதைவிட, காந்தி பெயரைத்தான் வையேன் என்று யோசனை சொன்னேன். அவ்வளவுதான்.

காந்தி துரோகம் செய்தாரா, இல்லையா என்று உங்கள் அறிவைக் கொண்டு யோசியுங்கள்.

- விடுதலை ; 23.08.1957.

சட்டத்தின் மூலம் சாதியைக் காப்பாற்றிய காந்தி

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

காந்தி சிலையைத் தொட்டால் சும்மா விடுவோமா? என்கிறார்கள். என்ன செய்வார்கள்? காந்தியார் படத்தைக் கொளுத்துவதற்குக் காரணம், காந்தி நம்மைச் சூத்திரர்களாக இருக்க உதவியதுதானே? மந்திரிகள் சூத்திரர்களாக விரும்புகிறார்களா? மந்திரிப்பதவி என்பது எல்லா உணர்வையும் விட்டுக்கொடுத்து விடுவதுதானே? தீண்டாமை விலக்கு மாநாட்டிலே சாதி ஒழியக்கூடாது என்ற தீர்மானமே போட்டார் காந்தியார் சம்பந்தி போஜனத்தையும், சாதி ஒழிப்பு என்ற விசயத்தையும் தீண்டாமை லீக்கில் இருந்து எடுத்துவிட வேண்டுமென்று பிர்லா சொன்னார். அவருடைய பணத்திற்காக ஆதரித்தார் காந்தியார்.

காந்தியார் படத்தை எரிப்பதையும் சிலையை உடைப்பதையும் இந்தியாவில் எந்தப் பத்திரிகையாலும் செய்தி ஸ்தாபனங்களாலும் உலகத்தின் பார்வையிலிருந்து மறைக்க முடியாது.

சாதி இந்தியாவிலிருக்கிறது. பார்ப்பான் சாதித் தலைவனாக இந்தியாவிலிருக்கிறான். அவனே, அரசியல், பொருளியல், சமூக இயல் இவைகளுக்கும் தலைவனாக இருக்கிறான். காந்தியார் பார்ப்பனச் சமூகத்தைக் காப்பாற்றி இருக்கிறார்; மற்ற இனங்களை அவர்களுக்கு அடிமைகளாக ஆக்கி இருக்கிறார். அந்தக் கொடுமை தாங்க முடியாத தென்னாட்டு மக்கள், காந்தியின் சிலையை உடைக்கிறார்கள். இதனை நேருவால் நிவர்த்திக்க முடியவில்லை என்று உலகம் தெரிந்து கொள்ளும். உலக அரசியலில் சமாதானத் தூதுவராக நேரு பறக்க முடியாது; இந்த நிலையை உண்டாக்கியே தீருவேன்.

- விடுதலை ; 03.10.1957.

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி,

காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது; எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.

இன்று காங்கிரசுக்காரர்கள் சொல்லுகிறார்களே, வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது என்று; அதுபோல் காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு.

ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை - எங்களுக்குக் காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார்.

நம்மவனோ - நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக்கொண்டு, சூத்திரன் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால் நெருப்பு சுடாமால் விடுமா? தெரியாதது போலவே இருந்துவிட்டால் சூத்திரப்பட்டம் இல்லாது போய்விடுமா?

இந்தியா பூராவிலும் அகில இந்திய காங்கிரஸ் 70 வருடமாக இருக்கிறது; இந்தக் காங்கிரசு வந்தபின் நமக்கு ஏற்பட்ட இலாபமென்ன? பார்ப்பானுக்கு ஏற்பட்ட இலாபமென்ன? என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டாமா?

காங்கிரஸ் வந்த 50 வருடத்தில் பார்ப்பான் 100க்கு 100 பேர் படித்தவன்; பார்ப்பாத்தியும் படித்தவள் ஆகிவிட்டனர். 70 வருட காங்கிரஸ் அவர்களை அந்த அந்தஸ்தில் வைத்துவிட்டது. அதே காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துத் தீர்மானங்களுக்குக் கைதூக்கிப் பலப்படுத்திய நம் கதி என்ன? 100க்கு 18 பேர் படித்திருக்கிறார்கள். இந்தப் 18 பேரும் எப்படிப் படித்தவர்கள்? பார்ப்பனனைப் போலவா படித்தவர்கள்? அதில் 10 பேர் சும்மா கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள்; அவ்வளவுதான். வெள்ளைக்காரன் போகிற போது 12 பேர்தான் படித்தவர்கள்; சுதந்திரம் வந்து 10 ஆண்டு ஆகியும், அதுவும் காமராசர் வந்ததால் இன்று 100க்கு 18 பேர் படித்தவர்கள். காமராசர் வராவிட்டால் இன்னும் குறைந்திருக்கும்.

இராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும் போது, சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார் என்று பேசினார்; சாதி ஒழியக்கூடாது என்று சொல்லும் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி? என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம் தர்மத்தை (சாதியை)க் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதன் படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன? என்பது அந்தப்புத்தகம்.

தீண்டாமை ஒழிப்பிற்காக அண்டச்சபிள்ஸ் லீக் (Untouchables League) என்ற அமைப்பு வைத்திருக்கிறார்கள்; நிறைய ஃபண்டும் கொடுத்திருக்கிறார்கள் அதற்கு . அத்தீண்டாமை ஒழிப்புச் சங்கத்திற்கு ஒரு கமிட்டி நியமித்திருக்கிறார்கள். அந்தக் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் பேசும் போது, சமபந்தி போஜனம் செய்ய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும்; அப்போதுதான் தீண்டாமை போகும் என்று பேசினார். அது மற்ற மெம்பர்களுக்குப் பிடிக்கவில்லை; அவர்கள் காந்தியிடம் புகார் சொன்னார்கள்.

அதன் பேரில் காந்தி ஒரு ஸ்டேட்மெண்ட' கொடுத்திருக்கிறார். என்னஸ்டேட்மெண்ட்? 'தீண்டாமை ஒழிப்பிற்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை; சம்பந்தி போஜனம் செய்ய வேண்டுமென்பது வேறு - தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது வேறு ' என்று ஒரு ஸ்டேட்மெண்ட் காந்தி கொடுத்தார். இதைத் தெரிந்ததும், அந்தக் கமிட்டி மெம்பர் ராஜி னாமா கொடுத்துவிட்டுப் போய்விட்டார். பிறகு 'யங் இந்தியா' என்ற பத்திரிகையில் காந்தி, சாதிமுறை என்பது நல்ல அமைப்பு; அது இருக்க வேண்டும்; அதாவது வருணாசிரம தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று எழுதி வந்தார்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன்.

அப்போது காந்தி, 'தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக்கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும் என்றேன். அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது இராஜாஜிக்குத் தெரியும். கோயிலுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம்.

கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது, இராஜாஜி, காந்தியிடம், ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால், கோயிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான் என்றார். அதற்குப் பிறகும், சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள்.

நான், சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றிவிட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாக்கவும் - பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவுந்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக, 'காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி, மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால் தான், காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருக்கக் கூடாது - அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு - சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். ஆகா! காந்தி படத்தை எரித்தால் இரத்தக்களரி ஆகும்! என்கிறார்கள். ஆகட்டுமே - என்ன நஷ்டம்?

பொறுப்புள்ளவர்கள் பதில் சொல்லவில்லை. மந்திரிகள் சொன்னார்கள் என்றால், காந்தி படத்தை எரிப்பது தவறு என்று சொல்லவில்லை. எரித்தால் மக்கள் மனம் புண்படும்; மக்கள் மனம் புண்படாமலிருக்க நடவடிக்கை எடுப்போம்' என்றார்களே தவிர, காந்தி படம் எரித்தால் தவறு என்று கூறவில்லை . காந்தி பேரில், அவர்கள் இன்னின்ன தவறு செய்தார் என்று நான் கூறுகிறேனே; எரிக்கக் கூடாது என்பவர்கள் அவர் தவறு செய்யவில்லை என்று சொல்ல வேண்டாமா? வேறு என்ன செய்தால் சாதி ஒழியும் என்றாவது சொல்லட்டுமே! இல்லை, சாதி ஒழியக் கூடாது என்றாவது சொல்லட்டுமே!

காந்திதான் வருணாசிரம் தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார். 1927இலேயே காந்தி, மகாத்மா பட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள பார்ப்பன அடிமையாகிவிட்டார்' என்று எழுதினேன். அது முதலே தோழர் காந்தி என்றுதான் நான் போடுவேன்; மகாத்மா என்று போடுவதில்லை. பிறகு காந்தியார் என்று போட்டோமே தவிர - மகாத்மா என்று போடவில்லை. காந்தி சமுதாயத்துறையில் பெரிய கேடு செய்து விட்டார்.

அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வடநாட்டானுக்கு அடிமையாக்கிவிட்டுப் போனது, சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டுக்கு அடிமைகளாக்கி விட்டார்.

பெயர் தமிழ்நாடு, தமிழ்நாடு என்பது போலவே ஒவ்வொரு நாடும் தனி; எல்லாம் சேர்ந்து ஒரு யூனியன் - கூட்டாட்சி என்று சொல்லிப் பிரிக்கவே முடியாது என்று எழுதிவைத்துவிட்டான்.

வடநாட்டான் காங்கிரசுக்கு நிறையப் பணம் கொடுத்தான்; எங்களுக்கெல்லாம் தெரியும். நாங்கள் தேசாபிமானத்தால் அவன் கொடுக்கிறான் என்று நினைத்தோம். நம்மை வடநாட்டுக்கு விற்கும் வினை என்று தெரியாது. மாகாண அரசுக்கு எந்த உரிமையுமில்லை .

- விடுதலை; 09.10.1957.

Read 1708 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.