Tuesday, 29 September 2020 01:15

கருவறை நுழைவுப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன் நூற்றாண்டு வெளியீடு : 91

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமலையப்பன்


கருவறை நுழைவுப்

போராட்டம்

 

சூத்திரன் என்கின்ற

இழிவு நீக்கக் கிளர்ச்சி!

இந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும், " சூத்திரர்கள்", "கீழ்ப் பிறவியாளர்" என்று சட்டம், சாஸ்திரம் முதலியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, "கோவில்கள் முதலியவற்றில் மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பவற்றில் பிரவேசிக்கக்கூடாதவர்கள்" என்று இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம். நம் கிளர்ச்சிகளால் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் செல்லலாம்; ஜாதி (பிறவி) காரணமாக எந்த மனிதனுக்கும், எந்தவிதமானத் தடையும், பாகுபாடும் இல்லை என்று சட்டத்தில் செய்யப்பட்டும், கோயிலில் கடவுள் சிலை வைக்கப் பட்ட இடத்திற்குள் மட்டும் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் செல்லக் கூடாது என்ற நிபந்தனை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனைக்குப் பார்ப்பனரல்லாத மக்கள் "கீழ்ஜாதியார்", "இழிஜாதி யார்" என்று இருக்கப்பட வேண்டும்; ஆக்கப்பட வேண்டும் என்கிற காரணம் எப்படியென்றால், மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பது இடத்தைப் பற்றியதே தவிர, கடவுளைப் பற்றியதாக இல்லை. மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிராத சாஸ்திர, சடங்கு முறைப்படி வைக்கப்பட்ட எந்தக் கடவுளையும் யாரும் நெருங்கலாம், தொடலாம். நெருங்கித் தொட்டுக் கும்பிடலாம். ஆனால், மூலஸ்தானத்தில் இருக்கும் சிலைக்கு அருகில் மாத்திரம் பார்ப்பனர் அல்லாதவர்கள் செல்லக்கூடாது. அதாவது அந்த அறைக்குள் செல்லக்கூடாது என்பதுதான் தடையின் தத்துவம்.

இதன் கருத்து என்னவென்றால், முறைப்படிக் கும்பாபிஷேகம் கிருஷ்ணன், கந்தன், கணபதி, சூரியன், சந்திரன் முதலிய எவையானாலும் - எந்தக் கோயிலுக்குள்ளும் மூலஸ்தானம் என்பதற்குள் இல்லாம்லிருந்தால் நெருங்கலாம் - தொடலாம் என்பதாகத்தான் இன்று அனுபவத்தில் இருந்து வருகிறது. எனவே, மூலஸ்தானத்திற்குள் மனிதன் பிரவேசிப்பதால் எந்தக் கடவுளுக்கும் எவ்விதப் புனிதமும் கெட்டுப் போவதில்லை. மூலஸ்தானத்திற்குத்தான் புனிதம் கெட்டுவிடுகிற தாம். அதுவும் பார்ப்பனரல்லாத மனிதர்கள் சென்றால் தான் கெட்டு விடுகிறதாம்.

மற்றப்படி பூனை, எலி, பல்லி, கரப்பான் பூச்சி முதலிய ஜந்துக்கள் எதுவேண்டுமானாலும் போகலாமாம்; கடவுளையும் தொடலாம். நாம் போகக்கூடாதாம். அதுவும் இந்திய தேசத்தில், அதுவும் சில பார்ப்பன ஆதிக்கமுள்ள சில மாகாணங்களில் மாத்திரம்தான். இங்கு நாம் போனால் "புனிதம்" என்பது கெட்டு விடுகிறதாம்.

அடுத்த மாகாணமாகிய ஒரிசாவில் ஜெகந்நாத்திலுள்ள இந்தியாவிலேயே உயர்ந்த கோயிலான பூரி ஜெகநாத் என்கின்ற கிருஷ்ணன் கோயிலில் யாரும் மூலஸ்தானத்திற்குள் சென்று கிருஷ்ணன் சிலையைச் சுற்றி வந்து அவனின் காலைத் தொட்டுக்கும்பிடலாம்.

மற்றும் காசி, பண்டரிபுரம் முதலிய கோயில்களிலும் மூலஸ்தானத் திற்குப் புனிதம் இல்லை. யாரும் நெருங்கலாம் தொடலாம்.

ஆகவே, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத மக்களாகிய நம்மை இழிவுபடுத்தவும், கீழ்மைப்படுத்தவும் சட்டத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிற ஏற்பாட்டை நாம் உடைத்தெறிய வேண்டியது நம் ஜீவிதக் கடமையாக இருக்கிறது.

இதை நாம் வெகு நாளைக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இந்தக் காரியத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவிதமான சம்பந் தமுமில்லை. கடவுள் நம்பிக்கைக்காரர்களும் இந்தத் தடையைத் தகர்த்து எறியலாம்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் மனிதாபி மான உரிமையை முன்னிட்டு இந்தத் தடையைத் தகர்த்தெறியலாம், எறியவேண்டும்.

எனவே, இந்த இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக்குப் பார்ப்பனரல்லாத 'இந்துக்கள் எல்லாரும் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது நமக்கு இருக்கும் இழிவு - நிரந்தரமான இழிவு - என்பது இந்த "மூலஸ்தானத்தடை" என்பதுதான்.

"மூலஸ்தானத்திற்குள் பிரவேசிக்க உரிமையுள்ள பார்ப்பான் என்பவனுக்கு ஒரு நிபந்தனையும் இல்லை. பூணூல், உச்சிக்குடுமி இரண்டு மாத்திரம் இருந்தால் போதும். அவன் எதையும் குடிக்கலாம்;

எதையும் சாப்பிடலாம்; யாரையும் தொட்டுக்கொள்ளலாம்: யாருடனும் உட்காரலாம், எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம்.
எனவேதான், இந்தத் தடை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதில் ஒவ்வொரு பார்ப்பனரல்லாத "இந்து" மனிதனும் கலந்து கொள்ளவேண்டியது அவசியமான காரியம் ஆகும்.

காங்கிரஸ்காரர்களும் - கம்யூனிஸ்ட்களும் - தி.மு.க.காரர்களும் - தி.க.காரர்களும் எல்லோரும் ஆண், பெண் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது மானாபிமானக் கடமையாகும். ஆகையால் உடனடியாகக் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களைக் கொடுக்க விரும்புகிறேன்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி போல், வைக்கம் கிளர்ச்சி போல் இக்கிளர்ச்சித் தொடர்ந்து 5, 6 மாதங்களுக்கு மேல் நடத்தப்பட வேண்டியது வரும். ஆதலால், அதற்கு ஆகும் பெருந்தொகை நன்கொடையாக வேண்டி இருக்கும். வசூலிக்க ஆசிரமம் மாதிரி இடம் - பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொண்டு, தினமும் அய்ம்பது பேருக்குக் குறையாமல் சாப்பாடு போட்டுக் கைவசம் வைத்து இருக்க வேண்டியதாகவும் இருக்கும் இதனால் ஒரு நல்ல பிரச்சாரம் பலனும் ஏற்படும். ஆகவே உடனே இஷ்டப்படும் தோழர்கள் தங்கள் பெயரைக் கொடுக்க வேண்டுகிறேன்; கிளர்ச்சி என்பது எந்தவித பலாத்காரமும் இல்லாமல் அமைதியான தன்மையில் நடைபெறும். ஆதலால். யாரும் இதில் கலந்து கொள்ளலாம்.

- விடுதலை: 13.10.1969.

கிளர்ச்சித் தத்துவம்

இழிவு நீக்கக் கிளர்ச்சித் துவக்குவது என்பது அனேகமாய் உறுதி செய்து விட்டேன்.

இதைப் பலாத்காரம், துவேஷம் இல்லாமல் நடத்துவது என்று உறுதி கொண்டிருக்கிறேன். வெற்றியா? தோல்வியா? என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இந்தக் கிளர்ச்சியின் தத்துவம், கோயில் மண்டபத்திற்குள், சில கோயில்களில் நாடார் முதலிய பல வகுப்பார்களும், மற்ற எல்லாக் கோயில்களுக்குள்ளும் பஞ்சமர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது சக்கிலி, பறையர், பள்ளர் என்று அழைக்கப்பட்டிருந்தவர்கள் நுழைந்தால், சட்டப்படி அது என்ன குற்றம் என்று கோயில் பிரவேசத்திற்கு முன்பு இருந்ததோ, அந்தத் தவறு, அந்தக் குற்றம் என்பதுதான் இதற்கும் ஏற்படலாம்.

கோயில் பிரவேசம் என்பதை முதன் முதல் நான்தான் ஈரோட்டில் ஆரம்பித்தேன். அப்போது மாயவரம் நடராஜன்; பொன்னம்பலம், குருசாமி , ஈஸ்வரன் ஆகியவர்களுடன் கருப்பண்ணன், பெயர் ஞாபகமில்லாத மற்றொருவர் ஆகிய இரு பறையர் என்னும் தோழர்களோடு, ஈரோடு கோயிலுக்குள் பிரவேசித்து, அதற்கு ஆக சர்க்காரே வழக்குப் போட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டு, அது அப்பீலில் ரூ.25 அபராதம் என்று குறைக்கப்பட்டு வழக்கு முடிந்தது (இது என் ஞாபகம்).

அதன் பிறகு தான், அதுவும் திருவனந்தபுரத்தில் மகாராஜா கோயில் பிரவேச உரிமை செய்த பிறகு, நம் அரசாங்கம் எல்லா இந்துக்களுக்கும் கோயில் பிரவேச உரிமை உத்தரவு செய்தார்கள்.

அதையும் " சூத்திரர்கள் போகும் இடம் வரையில் தான் "பஞ்சமர்" செல்லலாமே ஒழிய, "பிராமணர் செல்லும் இடத்திற்குப் பஞ்சமர் போகக் கூடாது" என்று காந்தி வியாக்கியானம் செய்து தடை விதித்தார்; அதையும் எதிர்த்து நான் கிளர்ச்சி செய்ததன் பயனாய், காந்தி "பிராம்ணர் உட்பட எல்லோருமே சூத்திரர் போகும் இடம் வரையில் தான் போகலாம்” என்று வியாக்கியானம் செய்து ஓர் உத்தரவுப் போடச் செய்தார். அதுதான் இன்று அமலில் இருப்பதாக அர்த்தம். ஆனால் அது சில கோயில் களில் நடை பெறுகிறது. சில கோயில்களில் நடைபெறுவதில்லை .

இப்போது நாம் தொடங்கப்போகும் கிளர்ச்சியிலும், மூலஸ் தானத்திற்குள் சென்ற தவறு ஒன்றுடன் - பிராமணனுக்கு என்று ஒதுக்கி வைத்த அர்த்த மண்டபம் என்னும் இடத்தில் பிரவேசித்ததுமான ஒரு தவறும் சேர்ந்து, இரண்டு குற்றமாகக் கருதப்பட்டாலும் கருதப்படலாம். ஏனெனில் கோயில்களில் பிராமணர்களுக்கு மாத்திரம் என்கின்ற இடம் பல கோயில்களில் இருக்கிறது.

ஆகவே, நம் கிளர்ச்சியின் தத்துவம் ஜாதி அடிப்படைக் கிளர்ச்சி தானே தவிர, புனிதத் தன்மை பற்றிய கிளர்ச்சி அல்ல என்பதோடு, சாஸ்திரம், ஆகமம், சட்டம் என்பவை மேல் ஜாதிக்காரர்கள் - பார்ப்பனர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, மாற்றக் கூடாத "அதாவது சுத்தம் - அசுத்தம் - புனிதம்" என்பதான காரியம் என்பதல்ல.

நாமும் நம் முயற்சியினால்தான் மான உரிமையைப் பாதுகாத்துப் பெற வேண்டியவர்களாக இருக்கிறோமே ஒழிய, யாராலும் கொடுக்கப் படும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். நம் நாட்டில், நம் சமுதாயத்தில், சமுதாய இழிவு நீக்கிக்கொள்ளும் உரிமை பெறுவதற்குத் திராவிடர் கழகம் ஒன்றுதானிருக்கிறது. நம் சமுதாய இழிவு "மதத்தின்படி" என்றிருந்தாலும், அது பார்ப்பனர் இஷ்டப்படி, - தயவுப்படி சட்டத்தினால் ஆக்கப்பட்டு, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் பார்ப்பன ஆதிக்க அரசாங்கமானதால், இழிவைப் பாதுகாக்கத்தக்கபடி பார்ப்பனர் சட்டம் செய்யவும், அதைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவும் இருந்து வருகிறது. உலகில் நம் நாடு உள்பட சமுதாய இழிவு போக்கப்பட வேண்டுமானாலும், காப்பாற்றப்பட வேண்டுமானாலும், பலாத்காரம் - நாசவேலை, கொலை இல்லாமல் எங்கும் நடந்ததில்லை. ஆனால் நாம் தான் - திராவிடர் கழகம் தான் பலாத்காரம், கொலை, நாசவேலை இல்லாமல் (மானம் பெற) பாடுபடுகிறோம்.

தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர் இன்று தங்கள் உயர்ஜாதித் தன்மையோடு வாழ்கிறார்கள் என்றால், அது கண்டிப்பாக காந்தியைக் கொலை செய்ததால் தானே ஒழிய, தருமத்தினால் அல்ல.

இன்று காந்தி உயிரோடு இருந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருந்திருக்காது; காங்கிரசே இருந்திருக்காது. மதத்தை அதாவது பார்ப்பன உயர்வையும் நமது இழிவையும் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டமே செய்யப்பட்டிருக்காது அவர் கோவிலை விபச்சாரி வீடு என்றும், காங்கிரசைக் கலைக்க வேண்டும் என்றும் சொன்னவர்.

காந்தியைக் கொல்ல ஏற்பாடு செய்த பார்ப்பனத் தலைவருக்கு, பார்ப்பனர் ஒரு இலட்ச ரூபாய் சேர்த்துக் கொடுத்தார்கள். கொன்ற குடும்பத்திற்கு மாதம் பல நூறு ரூபாய் கொடுத்து வருகிறார்கள்.

இதில் பிர்லா, பஜாஜ் கூட்டத்தாரின் ஆதரவும் நன்கொடையும் உண்டு .

ஆதலால், நம் சமுதாயம் இவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்காக ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தித் தொண்டாற்றி வர வேண்டும். அதற்கு நல்ல அளவுக்குப் பணம் சேர்க்க வேண்டும்.

இதற்கு ஏற்ற சமயம் இதுதான்.

பணம் தாராளமாய்க் கிடைக்கும். ஆட்கள்தான் வேண்டும். அதிலும் இந்தத் தொண்டுக்குக் கல்யாணம் ஆகாத ஆண் - பெண், பெண்டு பிள்ளைகள் இல்லாத தனி நபர் போன்றவர்களால்தான் முடியும். எனவே தோழர்களே உடனே முன்வாருங்கள். வேறு தொல்லை களை உதறித் தள்ளிவிட்டுத் துறவிகளாக வாருங்கள். நமக்குச் சங்கராச்சாரி இல்லை , மடாதிபதிகள் இல்லை , திராவிடர் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. அதனால் உத்தியோகம், பதவி, ஆட்சி உரிமை பெற்றது மாத்திரம் போதாது, மானம் பெற வேண்டும்.

- விடுதலை: 14.10.1969.

கிளர்ச்சி

சூத்திரர் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான காரியமே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை மற்றும் இதில் பலாத்காரம் என்பதும் இல்லை .

அதிலும் இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை - மானம் பெற வேண்டும் என்பதற்கு ஆக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ - வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்னும்) சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் - அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள்; உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகளாகவும், கலெக்டர்களாகவும், உப அத்தியட்சகர்களாக வும் (துணைவேந்தர்கள்); மடாதிபதிகளாகவும், சமீபகாலம் வரை மகாராஜாக்களாகவும், அரசர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்தவர்கள், இருப்பவர்கள். பல கோடி ரூபாய்க்குச் சொந் தக்காரர்களான பிரபுக்கள் உட்பட உள்ளவர்கள் சமுதாயத்தில் கீழ்ப் பிறவியாக, கீழ் மக்களாக, கடவுள் என்கின்ற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியில் நிற்க வேண்டியவர்களாக தலைமுறைத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக் கப்பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால், இது இதுவரைச் செய்யாமலிருந்ததுதான் மானங்கெட்டத் தன்மையும் - இமாலயத் தவறுமாகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வது என்பது ஒரு நாளும் ஒரு விதத்திலும் தவறாகவோ, கூடாததாகவோ ஆகாது, ஆகவே ஆகாது.

நீக்ரோக்களுக்கும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவி பேதம், நிறபேதம், நாகரிக பேதம் நமக்கும், பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான ஆளும் ஜாதியாரான பிரபுக்களான வெள்ளையர்களோடு எல்லாத் துறையிலும் சரிசமமாகக் கலந்து, உண்பன, உறங்குவன, பெண் கொடுக்கல் வாங்கல் உட்பட கலந்து புழங்குகிறார் கள். ஆனால், நம் நாட்டில் 100க்கு மூன்று பேரே உள்ள கூட்டம், பிச்சை எடுப்பதையும், உழைக்காததையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்க் கொண்ட, பிழைப்பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக, நாணயமாக இருக்கவேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கிற கூட்டம், தங்களை மேல்பிறவி' என்றும், நம்மைக் கீழ்ப்பிறவி, இழி பிறவி, பொது இடமாகிய கடவுள் என்கின்ற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக் கூடாத மிகமிக இழித்தன் மையானவர்கள் என்பதான நிபந்தனையை நாம் ஏற்றுக்கொண்டு, கட்டடத்திற்கு, அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை நிலைக்க விடலாமா? என்பது தான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

வேறு நாடுகளில் இப்படிப்பட்டக் கொடுமையான, இழிவானத் தன்மை எந்த சமுதாயத்திற்கு இருக்குமானாலும் எவ்வளவோ கொலை, பலாத்காரம், நாச வேலைகள் நடத்தி ஒழிக்கப்பட்டிருக்கும்? அப்படிக் கொடுமை இந்த நாட்டில் இருந்து வருகிறதென்றால், இது யாருடையத் தவறு? யாருடைய மானங்கெட்ட ஈனத்தனம்? என்று ஒவ்வொரு தமிழனையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். மற்றும் இது விஷயத்தில் நாம் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றால், அதனால் யாருக்கும், எந்த நபருக்கும் ஒரு தூசி அளவு நட்டமும், கேடும் இல்லாத ஒரு காரியமாகும். கடவுள்களைப் பூசை செய்கிறப் பூசாரி வேலை, பார்ப்பனருக்குத்தான், மேல் ஜாதிக்காரருக்குத்தான் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என்றாலும், கோயில் பூசை செய்பவன் பார்ப்பானல்ல, மேல் ஜாதிக்காரனுமல்ல, குருக்கள் என்கின்ற ஒரு ஜாதியானாவான் என்றும் சொல்லப்படுகிறது. ஆதாரங்களிலும் இருக்கிறது.

அந்தக்குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்களே ஆவார்கள் என்றும் சில ஆதாரங்களில் இருக்கின்றன. மற்றும் ஒரு குறிப்பிட்ட ஜாதியார்தான் பூசாரியாக இருக்க வேண்டுமென்கின்ற நிபந்தனை எந்த ஆதாரத்திலும் இல்லை .

"குருக்கள்கள், அர்ச்சகர்கள் என்பவர்கள் வீட்டில், பார்ப்பனர்கள் என்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள்; பெண் கொடுக்கல், வாங்கலும் செய்யமாட்டார்"களாம். இந்த நிலையில் இருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்து மக்கள் - பார்ப்பனரல்லாதார் மட்டும் நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சாத்தாணி என்கின்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். பல கோயில்களில் ஆண்டிகள் பண்டாரங்கள் என்கின்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். மற்றும் நாம் மூலஸ்தானம் என்பதற்குள் செல்வதால் அந்த இடத்திற்கோ, சாமிக்கோ எந்தவிதப் புனிதமும் கெட்டுப்போவதில்லை சிலையைத் தொடவேண்டாம் என்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நெருங்கக்கூடாது, அந்த அறைக்குள் படி தாண்டக்கூடாது என்பது என்ன நியாயம்? உற்சவக்கடவுள்கள், சிலைகள் என்பவற்றிடம் எல்லாம் எல்லா ஜாதியாரும்; எல்லா மக்களும் நெருங்குகிறார்கள்.

மூலஸ்தானத்திற்கு வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக் கிரகங்கள் என்கின்ற கடவுள்கள் முதலிய சிலைகளிடம் எல்லோரும் நெருங்குகிறார்கள்.

எனவே, இந்தக் கர்ப்பக்கிரகம்” என்கின்ற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை, இழிமக்கள், இழிபிறப்பாளர்கள் என்று ஆக்கப் படுவதற்காகத்தான் இருந்து வருகிறதே அல்லாமல் மற்றப்படி வேறு எந்த புனிதத் தன்மையையும் பாதுகாக்க அல்ல என்பதே நம் கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத்தன் மையும் கெட்டு விடுவதில்லை என்பதும் நம் உறுதி. மற்றும் "உள்ளே செல்ல வேண்டும்" என்கின்ற நமக்கும் உண்மையில் எந்தப் புனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை .

நம் இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்கு ஆகத்தான் செல்லுகிறோம்.

ஆகவே தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா இல்லையா? என்ன சொல்கிறீர்கள்? அவசியம் என்றால் வாருங்கள் போகலாம். உடனே பெயர் கொடுங்கள்.

- விடுதலை ; 15.10.1969.

கிளர்ச்சியைத் துவக்கும் இடம்

சூத்திரன் என்னும் இழிவுநீக்கக் கிளர்ச்சிக்கு இதுவரை இந்த மூன்று நான்கு நாட்களாக கிளர்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த கையொப்பங்கள் சுமார் நூறு பேர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

அவற்றில் குறிப்பிடத்தகுந்தவர்கள் பாண்டிச்சேரி திரு.ப.கனகலிங்கம் (தெ.ஆ. மாவட்ட தி.க. துணைத் தலைவர்) அவர்களும், சிதம்பரம் திரு. கு. கிருட்டிணசாமி (தெ.ஆ. மாவட்ட தி.க.தலைவர்) அவர்களும், மனைவி உட்பட அவர்கள் குடும்பத்தினர்களும் ஆவார்கள். மற்றும் பலரும் இருந்தாலும் அவர்கள் பெயரைப் பின்னால் வெளியி டலாம் என்றிருக்கிறேன்.

கிளர்ச்சிக்கு இடம் தேர்ந்தெடுப்பதில் திருச்சியிலும், சீரங்கத்திலும் உள்ள தோழர்கள் பலர், "சீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலேயே நடத்த வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் அவ்வூர் கோயில் பிரபலமடைந்த கோயிலாக இருப்பதேயாகும்.

அடுத்து மன்னார்குடி கோயில் தஞ்சை மாவட்டத்தவர்கள் குறிப்பிட்டு விருப்பம் தெரிவித்தார்கள்.

சீரங்கத்தில் நடத்துவதானால் ஒரு தோழர் இடம் வசதி முதலியவை செய்து தருவதாகவும், மற்றொரு தோழர் ஓர் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவிக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மன்னார்குடி மிக்க வசதியான இடம் என்றே தோன்றுகிறது. ஆகவே இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டு இடத்திலுமோ துவக்குவதாக இருக்கலாம். இதற்காக நன்கொடை பணமும் தேவை இருக்கிறது. நல்ல அளவுக்கு நன்கொடை கிடைக்குமானால் மற்றும் இரண்டொரு இடங்லும் துவக்க முடியும்.

எப்படியும் ஓர் இடத்திலாவது துவக்குவது என்பது உறுதி என்றே கருதுகிறேன். கிளர்ச்சியில் ஈடுபடும் தோழர்கள் மிக்கப் பொறுப்பும், அடக்கமும், கட்டுப்பாட்டுக்கு அடங்கி, இராணுவ கேப்டன் போல் நடப்ப வர்களாகவும், எந்த விதத்திலும் பலாத்கார உணர்ச்சி இல்லாமல் கிளர்ச்சியினால் ஏற்படும் எல்லா பலன்களையும் பொறுமையோடும், வீரத்தோடும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

கிளர்ச்சியை விரும்புகிறவர்கள் - கிளர்ச்சியில் கலந்து கொள்ள வசதியில்லாதவர்களாக இருந்தால் - தக்க நன்கொடை அல்லது உணவுப் பண்டங்கள், தொண்டர்கள் வசதிக்குத் தேவையான சாதனங் கள், படுக்கை, உணவுப் பண்டங்கள் அளிப்பதன் மூலம் தங்கள் ஆதரவைக் காட்டிக் கொள்ளலாம். 50 தொண்டர்களுக்குக் குறையாமல் கிளர்ச்சிக் காரியாலயத்தில் இருக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கிளர்ச்சி ஒரு மாபெரும் சமுதாயத்தின் மானத்தைப் பொறுத்த விஷயமானதால், எல்லாத் தமிழ்மக்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இந்தக் கிளர்ச்சி யாருக்கும் எந்த மதத் தத்துவத்திற்கும் எவ்விதக் குறையோ அசவுகரியமோ ஏற்படுத்தக் கூடியதல்ல.

மற்றும் (14-10-69) இன்றைய மதுரையிலிருந்து வெளிவரும் "தினமணி' பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில், "இந்துக்கள் அல்லாதோர் கர்ப்பக்கிரஹத்துக்குள் அனுமதி" என்ற தலைப்பில் -

"இந்துக்கள் அல்லாதோர் விபூதியும், குங்குமமும் அணியும் பட்சத்திலும், சட்டையைக் கழற்றும் பட்சத்திலும், அவர்களைக் கோவில்களின் கர்ப்பக்கிரஹத்துக்குள் அனுமதிப்பதன் சாத்தியத்தை பரிசீலிக் கும்படிக் கோவில் டிரஸ்ட் போர்டுகளுக்கு ஆலோசனை கூறப்போவ தாக இந்து அறநிலையக் கமிஷனர் திரு. கே. நரசிம்மன் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்."

என்கின்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு விளக்கவில்லை. இது பற்றி அமைச்சர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை என்றாலும், நம் கடமையை நாம் செய்ய வேண்டி இருக்கும்.

- விடுதலை ; 16.10.1969.

மூலஸ்தானப் பிரவேசம்

"மூலஸ்தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக்கூடாது" என்பது கோயில் சம்பந்தமாக அல்லது ஓர் பொது இடம் சம்பந்தமாக அரசாங்கத்தார் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதானே ஒழிய, அது எந்தவிதத்திலும் ஒரு மத சம்பந்தமான தத்துவம் ஆகாது. எந்த விதத்திலும் ஒரு புனிதமான காரியமோ, யாருக்காவது மனம் புண்படுவதைத் தடுக்கும்படியான காரியமோ என்று சொல்ல முடியாது. "கோவில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இனமக்கள் செல்வது" என்பது எவ்வளவு சாதாரணக் காரியமோ அதைவிட சாதாரணக் காரியமேயாகும். "கோயிலுக்குள்ளாகவோ மூலஸ்தானத்திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான், இன்ன ஜாதியார்தான் செல்லலாம்; இவரிவர் செல்லக்கூடாது" என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சாஸ்திர நியமனமும் இல்லை .

இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. கோயில் நிருவாகத்திற்கு டிரஸ்ட் பதவிக்கு இன்ன ஜாதியராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. மத விரோதமும் சாஸ்திரவிரோதமும் சட்ட விரோதமும் இல்லை .

நான் சுமார் 20 ஆண்டுகள் ஈரோடு தாலூக்கா தேவஸ்தானக் கமிட்டிச் செயலாளனாகவும், தலைவனாகவும் இருந்திருக்கிறேன். சாத்தாணி இனத்தாரை அர்ச்சகராக நியமித்து இருக்கிறேன்; நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்துகொண்டேதான் இந்தத் தாலுக்கா தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக, செயலாளனாக இருந்திருக்கிறேன். மற்றும் ஈரோடு, பவானி, திருப்பூர், கோபி தாலுக்கா கமிட்டித் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். இதுபற்றிக் கலெக்டருக்குச் சிலர் நான் நாத்திகன் என்று புகார் எழுதி, அவர் என்னை அதிசயமாக "நாயக்கரே நீர் நாத்திகரா?" என்று கேட்டார். "ஆம்" என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே இந்துதானே என்று தானே கேட்டுக்கொண்டு சும்மா இருந்து விட்டார்.

இதை நான் 20, 30 ஆண்டுகளுக்கு முன் குடிஅரசுலும், பிறகு 'விடுதலை'யிலும் எழுதி இருக்கிறேன்.

இன்றும் விஷ்ணு கோயில்கள் பலவற்றில் மூலஸ்தானத்திற்கும், மற்றவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையில் கதவு நிலவுதான், வாயிற்படிதான். அதாவது, சுமார் ஓர் அடி அளவு இடம் தூரம் தான் இருக்கிறது. "பிரசாதம் வாங்க கையைக் கதவைத் தாண்டி உள்ளே நீட்டலாம். பூசாரிக்குக் கூட நெற்றியில் நாமம், விபூதிதான் இருக்க வேண்டுமே யொழிய, அவன் ஸ்நானம் செய்து விட்டு வரவேண்டும் என்றோ, சுத்தமான வேஷ்டிக் கட்டிக்கொண்டு வரவேண்டுமென்றோ திட்டம் கூடக் கிடையாது.

அவர்களின் அனேகர் மாமாவாக இருப்பார்கள் என்பதோடு, தாசிகளிடம் சங்கமம் - இதழ் அமுதம் பருகுபவர்களாகவும் இருப்பார்கள். மாலையில் நாம் கோயிலுக்கு அனுப்புகிற செண்பகப்பூ, மனோரஞ் சிதப்பூ உள்ள பூமாலையில் உள்ள பூ, இரவு 10 மணிக்குத் தாசி விட்டிற்குப் போனால், அந்தத் தாசியின் தலையில் பார்க்கலாம் (அந்த காலத்தில் இந்த பூக்கள் எங்கள் நந்தவனத்தில் மாத்திரம்தான் உண்டு). ஆக மூலஸ்தானப் பிரவேசத்திற்கும், கர்ப்பக்கிரகப் பிரவேசத்திற்கும் சட்டம், சாஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும் கிடையாது இந்து மதம் என்பதற்கே கிடையாது.

நெற்றிக்குறி என்பதும் அதிகாரத்தாலும் - செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய அதற்குச் சட்டமோ, சாஸ்திரமோ, நிர்பந்தமோ கிடையாது.

ஆகவே, ஜாதி பேதம், மதபேதம் என்பவை அனுஷ்டானத்தில் இல்லை; சட்டத்திலும் இல்லை; சாஸ்திரத்திலும் இல்லை.

உண்பன, தின்பன வகையிலும், பெண் கொடுப்பன, கொள்வன என்பவற்றிலும் சட்டப்படியே தடை நீக்கப்பட்ட பிறகு, ஒரு நிலக் குறிப்பான இடத்திற்கு, மூலஸ்தானத்திற்கு மட்டும் உண்டு என்றால், இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதோடு, இதனால் சமுதாய இழிவும் அமல்படுத்துவது என்றால் எவ்வளவு மானக்கேடான காரியம் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.

- விடுதலை ; 18.10.1969.

நம் சமுதாய இழிவை நீக்கவே

கர்ப்பக்கிருகத்துக்குள் செல்லும்

கிளர்ச்சியைத் துவக்குகிறோம்!

இன்றையத் தினம் மாபெரும் அறிஞரும் அனேக காரியங்களைச் சாதித்தவருமான அறிஞர் அண்ணா அவர்களின் 61 - ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், என்னுடைய 91 - ஆம் பிறந்தநாள் விழாவையும் முன்னிட்டு இதனை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் மாண்புமிகு அமைச்சரோடு என்னையும் கலந்து கொள்ளச் செய்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். பொதுவாகப் பிறந்தநாள் விழாவிலே யாருக்காகப் பிறந்தநாள் விழா கொண்டாடு கின்றோமோ அவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்வதும், அவர்களைப் புகழ்வதும் வழக்கம். அது மட்டும் போதாது அவர்களது கொள்கைகள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள், அக்கொள்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி மக்களை அவர்களது கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்ய வேண்டும்.

அண்ணா அவர்கள் உண்மையிலேயே ஓர் அதிசய மனிதர். இந்தியாவிலேயே அவரைப்போல் வேறு யாருமில்லை. அண்ணா அவர்களின் பெருமையைச் சொல்ல வேண்டுமானால், அவர் இயற்கை எய்தி அவரது உடல் சமாதிக்குக் கொண்டு செல்லும் போது வந்த மக்கள் கூட்டம் ஒன்றே போதும். எதிரி பார்ப்பான் பத்திரிகைகள் கூட 25 இலட்சத்திற்கும் மேல் மக்கள் கலந்து கொண்டதாகச் செய்தி வெளியிட்டதென்றால், அதைவிட வேறு என்ன வேண்டும்? காந்தியாரைச் சுட்டுக்கொன்றான். காந்தியாரை மனிதனாகக்கூட மதிக்காமல் மக்கள் மகாத்மாவாக மதித்தார்கள். இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லி எத்தனையோ பேர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் கொல்லப்பட்ட போது கூட 2 இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாகத்தான் அன்றைய பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கின்றன.

அண்ணா அவர்கள் காந்தியைப் போல் கடவுள் - மதத்தை நம்பாமல் அதற்கு எதிராகக் கடவுள், மதம், சாஸ்திரம் சம்பந்தமானவை என்பவை பொய் என்று பிரச்சாரம் செய்ததோடு, இராமனை எரிக்க வேண்டும், இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று சொல்லி எரித்து, பல பெரும் புலவர்களையெல்லாம் வாதிட்டு வென்றவர் அதோடு மட்டுமல்லாமல் இவற்றைப் பிரச்சாரம் செய்து மக்களின் ஆதரவை யெல்லாம் திரட்டிச் சமுதாயத்துறையை அடிப்படையாக வைத்துக் கடவுள் - மத சம்பந்தமில்லாத ஆட்சி அமைத்தவராவார். இது போன்ற ஆட்சி இந்தியாவில் வேறு எங்குமே அமையவில்லை . சரித்திரம் தோன்றிய நாள் முதல் - அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருகிறவரை - பார்ப்பானைப் பாதுகாக்கிற, பார்ப்பானுக்கு அடிமையாயிருக்கிற - பார்ப்பான் சொற்படிக் கேட்கிற ஜாதியை, மதத்தை, கடவுளைக் காப்பாற்றுகிற ஆட்சிதான் இதுவரை நடந்ததே தவிர, மனித சமுதாயத்திற்கான ஆட்சி நடைபெறவே இல்லை. இந்தியாவிலேயே அண்ணா ஒருத்தர்தான் அந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தவரா வார். அவர் மறைந்தாலும் அதே கொள்கைக்கேற்ற அமைச்சர்களை வைத்துக்கொண்டு இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி இங்குதான் நடை பெறுகிறது. தமிழ்நாட்டைத்தவிர ஆந்திரா, கேரளா, மைசூர், மற்ற மாநிலங்கள் எல்லாம் கலகம், கலவரம், பலாத்காரம் என்று தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில்தான் அமைதியாக ஆட்சி நடக்கிறது. அதற்குக்காரணம் அண்ணாதான் ஆவார்கள்.

மற்றும் அண்ணாவின் ஆட்சியால் நடைபெற்ற மற்றொரு காரியம் என்னவென்றால், அதற்கு முன் அடா என்று கூப்பிடுகிற உத்தியோகங்கள் பூராவும் 100 - க்கு 100 நமக்குத்தான் இருந்தது. சாமி என்று கூப்பிடுகிற உத்தியோகம் பூராவும் பார்ப்பனருக்கே இருந்தது. அண்ணா ஆட்சியில்தான் நம் பங்கு நமக்கு வரவேண்டும் என்கின்ற தன்மையில் நம் மக்களுக்கு நிறைய உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டன.

இன்றைக்கு அமைச்சர்களை எடுத்துக்கொண்டால் 13 பேர் இருக்கிறார்கள் என்றால், 13 பேரும் தமிழர்கள். 18 அய்க்கோர்ட் ஜட்ஜூகள் இருக்கிறார்கள் என்றால், அதில் 14 பேர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். 4 பேர்தான் பார்ப்பனர்கள். இன்னும் இரண்டு மாதம் போனால் நம்ம வர்கள் 16 பேரும், பார்ப்பனர்கள் 2 பேரும்தான் இருப்பார்கள். இப்படிப் பெரிய உத்யோகங்களில் எல்லாம் இன்று நம்மவர்கள் இருக்கும் படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஒன்றும் தயவுக்காகச் செய்ததில்லை. இது தமிழ்நாட்டில் 100 - க்கு 97 பேராக இருக்கிற மக்களுக்கு அவர்கள் விகிதாச்சாரப்படி இல்லையென்றாலும், இதற்கு முன்னெல்லாம் இருப்பதைவிட அதிகமான உத்தியோகங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

ஆட்சிப் பொறுப்பிலிருக்கிற , இவ்வளவு கட்டுப்பாடாக இருக்கிற வேறு எந்த ஸ்தாபனமும் இந்தியாவிலேயே இல்லை. இதற்குக் காரணம் அண்ணாவே ஆவார்கள். மத்திய ஆட்சியை எடுத்துக் கொண்டால் அங்கு, கட்சித் தலைவருக்கும், பிரதமருக்கும் குடுமியைப் பிடித்துக்கொண்டு சண்டை நடப்பது போலிருக்கிறது. ஒருவரை ஒருவர் கவிழ்க்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட் டிலே காங்கிரஸ் தலைவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதுபோல, கட்சியைவிட்டு நீங்கும்படிச் செய்திருக்கிறார்கள். காமராஜருக்கும், சுப்ரமணியத்திற்கும் தினமும் சண்டை; மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இடையிலேயே இரத்தம் குடிக்க பக்தவத்சலம். இப்படி உட் பூசல் இந்தத் திமுகழகத்தில் அது போல சொல்வதற்கு எதுவுமில்லை. மந்திரிகள் முதல் தொண்டர்கள் வரையில் கட்டுப்பாடாக நடந்து கொள்கின்றனர். மற்றவர்கள் பார்த்துப் பாராட்டத்தக்க வகையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நம்முடைய போராட்டமெல்லாம் சமுதாய சம்பந்தமான போராட்டம்தான் ஆகும். காங்கிரஸ் ஏற்பட்டதே வெள்ளையனுக்குத் தொண்டு செய்ய - துதிபாடவே ஆகும். காங்கிரசின் முதல் பிரச்சாரமே வெள்ளைக்காரன் கடவுளுக்குச் சமம்; அவன் ஆட்சி கடவுளின் ஆட்சிக்குச் சமம் என்பது தான். இது போன்று முதலில் தீர்மானம் போட்டுத்தான் மாநாடு கூட்டம் எல்லாம் ஆரம்பிப்பார்கள். இப்படி இருந்த ஸ்தாபனம் துலுக்கர்கள் - பார்ப்பனரல்லாதார்கள் போட்டியின் காரணமாகத் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டு தேசியம், - சுதந்திரம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. இந்தத் தேசியம் - சுதந்திரம் என்பதும் பார்ப்பன சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டுத் தான் ஆகும். இப்படி நம் நாட்டில் நடந்த எந்தப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அது சமுதாயப் போராட்டமாகத்தானிருக்குமே ஒழிய வேறில்லை. நம் மக்கள் முட்டாள்களாக இருந்தவரை காங்கிரஸ் வளர்ந்து கொண்டிருந்தது. நம் பிரச்சாரத்தால் மக்கள் அறிவு பெற அறிவுபெற அது இப்போது தேய்ந்து கொண்டே வருகிறது. காமராசர் ஒருவரை விட்டால் வேறு வழியில்லை என்றாகிவிட்டது. நம் நாட்டில் நடைபெற்ற - நடைபெறுகின்ற அரசியல் போராட்டம், தேசியம் என்பதெல்லாம் சமுதாயப் போராட்டமேயாகும். அதில் தான் நாமும் ஈடுபட்டிருக்கின்றோம். இதில் ஈடுபட்டு நாம் பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றோம்.

இன்றைக்கு 50 வருஷத்திற்கு முன் நம் நிலை எப்படி இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. இந்த 10 ஆண்டுகளில் நாம் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பது இன்றைக்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை . தானாக வந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக நடைபெற்ற போராட்டங்கள், கிளர்ச்சிகள் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நம் இயக்கம் தோன்றுவதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களை நாயினும் கேடாக, மிகமிகக் கீழ்மக்களாக நடத்தினார்கள். திராவிடர் கழகம் ஏற்பட்டு ஒவ்வொன்றாகப் போராடி, ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிந்து கொண்டு வந்ததால் தான் இன்று இந்த நிலையில் நம் மக்களிருக்கிறார்கள்.

1940- லேயே ரயில்வே ஸ்டேஷனில் சாப்பிடும் இடங்களில், ஹோட்டல்களில், சாத்திரங்களில், பள்ளிக்கூடங்களில் எல்லாம் பிராம்ணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் சாப்பட்டிற்குத் தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பார்ப்பனர் தண்ணீர் குடிப்பதற்கென்று தனிப் பானையும், சூத்திரர்கள் தண்ணீர் குடிக்க தனிப்பானையும் வைக்கப் பட்டிருந்தன. சூத்திரர், பிராமணாள் என்ற பெயர்ப் பலகைகள் மாட்டப்பட்டிருந்தன. வீதியிலேயே நடக்க விடாமல் சிலரை ஒதுக்கி வைத்திருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் வீதியில் நடக்கக்கூடாது என்பதோடு, கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றிருந்தது. நம்மிலே சில சாதியார் நாடார்கள், வாணியச்செட்டியார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்றிருந்தது. இதற்கெல்லாம் கிளர்ச்சி செய்தது நாம்தான் - திராவிடர் கழகம்தான் ஆகும். இதற்கெல்லாம் விரோதமாக இருந்தவர் காந்தி; முட்டாள்கள் இன்று காந்தி நூற்றாண்டு விழா நடத்துகிறார்கள். அவர் தான் தீண்டாமையை ஒழிக்க, கோயில் பிரவேசத்திற்கு பாடுபட்டார் என்கிறார்கள். தீண்டாமை, சாதி இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர். திராவிடர் கழகத்தின் கிளர்ச்சிகள் ஒன்றும் வெற்றி பெறாமல் போகவில்லை . சாதியின் பெயரால் பல தடைகளை, சாஸ்திரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பெற்றிருந் ததைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போராடி, தடைகளை உடைத்து வெற்றி பெற்றிருக்கின்றோம். நம் இயக்கமும், அறிஞர் அண்ணா அவர் களும் இதைச் செய்திராவிட்டால் இன்றைக்கும் நாம் அந்த பழைய நிலைமையிலேயே தான் இருந்திருப்போம்.

இப்போதும் நாம் ஒரு புதிய கிளர்ச்சிக்குத் தயார் செய்து கொண்டி ருக்கிறோம். அதாவது கோயில்களில் சிலை இருக்கிற கர்ப்பக்கிரகத் திற்குள் பார்ப்பனர்கள் மட்டும் தான் செல்லலாம் நாம் செல்லக்கூடாது என்று தடை வைத்திருக்கிறார்கள். காரணம் நாம் சூத்திரர்கள், கீழ்ச் சாதிக்காரர்கள், இழிபிறவிகள் என்பதேயாகும் இந்த கீழ்சாதித் தன்மை இப்போது கோவில்களில் மட்டும் அனுசரிக்கப்பட்டு வருவதால், அதைப் போக்க நாம் அதற்குள் செல்வது என்று திட்டம் போட்டிருக்கி றோம். அதற்குள் போகிறதனாலே நமக்கு ஆகவேண்டியது ஒன்று மில்லை. ஆனால் பார்ப்பான் மட்டும் போகலாம், நாம் போகக்கூடாது என்று நம் இழிவை நிலைநிறுத்தும் வகையில் இருப்பதால், அந்த இழிவைப் போக்கிக் கொள்ள நாம் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டியி ருக்கிறது. பெரிய கோவில் - உலகத்திலேயே பேதமில்லாத கடவுள் இருக்கிற இடம் பூரி ஜெகந்நாதம். அங்குள்ள கோவிலில் முடி திருத்து கிறவர் தான் பூசாரியாக இருக்கிறார். அங்கிருக்கிற சாமியை யார் வேண்டுமானாலும் தொட்டுக்கும்பிடலாம். அதனால் எந்தப் புனிதமும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் காசி. அங்கு நாய் செத்தால் கூட மோட்சத்திற்குப் போகும் என்பார்கள் அங்குள்ள கோயிலில் இருக்கிற சாமியை யார் வேண்டுமானாலும் தண்ணீரைக் கொண்டு போய் அபிஷேகம் செய்து, தொட்டுக் கும்பிடலாம்; பண்டரிபுரம் - அங்கும் யார் வேண்டுமானாலும் சாமியைக் கட்டிப் பிடித்துக் கும்பிடலாம் அங்கெல்லாம் இல்லாத தடை இங்கு மட்டும் எதற்காக இருக்க வேண்டும்?

கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லக்கூடாது, சிலையைத் தொடக்கூடாது என்கிற இந்த பேதத்தை வைத்துக் கொண்டு நம்மை எல்லாம் கீழ்ச் சாதி என்று ஆக்கிவைத்திருக்கிறான். ஒரு சாமி பூசை செய்கிறவன் அறையில் இருந்தால் தான் தொடக்கூடாது என்கிறான்; அதே சாமி வெளியிலிருக்கும் போது மனிதன் தொடுவது மட்டுமல்ல, நாய்கள் கூட நக்கிவிட்டுச் செல்கின்றன.

முட்டாள்தனமாக வைத்து நம் சாதி இழிவை நிலைநிறுத்தி கொண்டிருக்கின்றான் என்பதைத்தவிர, வேறு எதற்குமல்ல. மற்ற வனை ஒழித்தது போல இதையும் ஒழித்தால்தான் சூத்திரன் - பார்ப்பான் என்கின்ற பேதம் ஒழியும். இந்தக் கிளர்ச்சியைச் சென்னை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி ஆகிய நான்கு இடங்களில் ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றேன். நீங்கள் எல்லாம் நிறையப்பேர் இதற்குப் போக வேண்டும். இதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

கிளர்ச்சி என்பது நமக்குப் புதிது அல்ல; சிறை செல்வதும் புதிதல்ல. சட்டம் கொளுத்தி - பிள்ளையார் சிலை உடைத்து, இராமன் படம் எரித்துப் பலமுறை சிறை சென்றிருக்கின்றோம். அதுபோல, சமுதாயத் துறையில் நாம் சாதித்திருக்கின்றவை பல உண்டு.

நம் இழிவைப் போக்க நாம் பல கிளர்ச்சி செய்திருந்தாலும் இக் கிளர்ச்சி மிக முக்கியமானதாகும். இதில் நம் மக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒன்றும் பாடுபட வேண்டியதில்லை. வேப்பெண்ணெய்யைக் குடிக்க வேண்டியதில்லை. போய் நுழைய வேண்டியது தடுத்தால் நின்றுவிட வேண்டியது அவ்வ ளவுதான். இங்குள்ள உங்களிலேயும் வசதிப்பட்டவர்கள் நாங்கள் கிளர்ச்சியில் சேருகிறோம் என்று பெயர் கொடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். நமக்கிருக்கிற வேலையெல்லாம் மந்திரியாக வேண்டுமென்பதோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்பதோ அல்ல. கலெக்டராக வேண்டுமென்பதோ அல்ல. நம் சமுதாயத்திலிருக்கிற இழிவை ஒழிக்க வேண்டும் என்பதேயாகும்.

12.10.1969 அன்று திருச்சியில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு,

- விடுதலை ; 20.10.1969.

கிளர்ச்சியில் பங்குபெறும் தோழர்கள் !

தஞ்சை மாவட்டத்தில் "சூத்திரன் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சியில் பங்குபெற விரும்புகிறவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில், தோழர். சி.விசுவநாதன் (பட்டுக்கோட்டை) அவர்கள் ஈடுபட்டுத் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்கின்றார்கள். கிளர்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள தோழர்கள், தோழியர்கள் நேரில் நமக்கு அனுப்பு வதோடு அவரிடமும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- ஈ.வெ.ராமசாமி.

வேண்டுகோள்!

தமிழர்களின் பிறவி இழிவுநீக்கக் கிளர்ச்சிக்கு அதாவது, கோயில்களில் "சூத்திரர் செல்லக்கூடாத இடம்", "கர்ப்பக்கிருகம்", "மூலஸ்தானம்" என்று பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் செல்லும் கிளர்ச்சியில் கலந்துகொள்ள இஷ்டமுள்ள ஆண், பெண்கள் ஆகியோர் தயவு செய்து உடனே தங்கள் பெயரைக் கையொப் பத்துடன் எனக்கு அனுப்பிக்கொடுக்க வேண்டுகிறேன்.

- ஈ.வெ.ராமசாமி

கரப்பான், பல்லி செல்லும் கர்ப்பக்கிருகத்துக்குள்
மனிதன் சென்றால் தீட்டா?

இன்றைய தினம் இந்த ஊரிலே இழிவு நீக்கக் கிளர்ச்சியை எப்போது? எப்படித் துவங்குவது என்பது பற்றிச் சிந்தித்துத் தீர்மானம் செய்வதற்காக, சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 50 பேரில் 45 பேர் வந்திருந்தார்கள். அழைப்புப்படி ஆதரவாளர்களும் சுமார் 1000 பேர்கள் வந்திருந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். இந்தக் கிளர்ச்சியை நவம்பர் 26-ஆம் தேதி நடத்தலாம் என்று மனதில் வைத்துக் கொண்டிருந்தேன். முதலில் உத்தேசித்த மன்னார்குடியில் மட்டும் கிளர்ச்சியை வைத்துக் கொள்ளலாம், அதில் வெற்றி பெற்று எல்லாக் கோயில்களையும் திறந்து விட்டுவிட்டால், நிறுத்திக் கொள்ளலாம். அப்படியில்லாமல் அந்தக் கோயிலை மட்டும் திறந்து விட்டுவிட்டு மற்றக் கோயில்களுக்குள் போகக்கூடாது என்றால், அடுத்த ஊர்க்கோயிலில் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்.

ஆனால், தற்போது தேதியை (நவம்பர் 26 என்றிருந்ததை ஜனவரி 26 என்று) மாற்றிவிட்டதால் என்ன அனுகூலமென்றால், ஒரு கோயில் என்றிருந்ததை சீரங்கம் - திருவானைக்காவல், காஞ்சீபுரம் முதலிய பல ஊர்க் கோயில்களிலும் நடத்துவது என்பதாகும். மற்றும் இப்போது அரசியலில் பெரும் குழப்பமாக இருக்கிறது. அதனால் நம் சர்க்காருக்கும் வேறு காரியங்களில் கவனம் செலுத்த வேண்டிய வேலை இருக்கிறது.

எனவே, கொஞ்ச நாள் அவகாசம் கொடுக்கலாம். அதற்குள் இந்தக் குழப்பங்கள் எல்லாம் முடிந்து ஒரு முடிவு ஏற்பட்டு விடலாம் என்று நினைத்துத்தான் ஒத்தி வைக்க வேண்டி வந்தது. எப்படியானாலும் நாம் தான் நடத்தியே ஆகவேண்டும். ஆதலால், இதை இதற்கு மேல் தள்ளிப் போடுவதற்கு இல்லை. இதற்காக இதுவரை நம்மைத் தவிர, வேறு யாரும் யோசிக்கவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. நாம் தான் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

இதற்கிடையில் குன்றக்குடி அடிகளார் ஒரு கடிதம் எழுதியிருக் கிறார்கள். அதில் இந்தக் கிளர்ச்சி அவசியமானதுதான், செய்ய வேண்டியதுதான். ஆனால், நாத்திகர்களாகிய நீங்கள் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்றப்படி அதற்குப் பரிகாரமாக, தாங்கள் என்ன? எப்போது செய்ய போகிறோம்? என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. என்றாலும் அவர்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுக்கும் வகையில் தாங்கள் செய்வதாக இருந்தால் இன்னும் 2 மாதத்தில் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்கும், அதற்குள் அவர்கள் ஒரு முடிவு எடுக்க விட்டால் நாமே அதை நடத்துவதற்கும், 2 மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம். இந்த இரண்டு மாதத்தில் ஒரு பிரச்சாரப்படை ஏற்பாடு செய்து, ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு இதை எடுத்து விளக்குவதற்கும் மக்களின் பெருவாரியான ஆதரவைத் திரட்டுவதற்கும் - இது வசதியாக இருக்கும் என்று கருதுகின்றேன். அண்ணா இருந்தால் அவரிடம் சொல்லியே இதைச் செய்திருக்கலாம். நம் பொல்லாத வாய்ப்பு அவர் மறைந்து விட்டார். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இந்தக் கொள்கை உடையவர்கள் என்றாலும், காங்கிரஸ்காரர்கள் இதை வைத்துக் கொண்டு. மக்களிடையே தவறான பிரச்சாரம் செய்வார்களே என்று பயப்படுகிறார்கள்.

இங்கு இருக்கிற கோயில்களைவிட சிறப்புடையதாகவும், புண்ணியம் நிறைந்ததாகவும் கருதப்பட்டு வருகின்ற - காசி - பண்டரிபுரம்,- ஜெகநாத் முதலிய ஊர்களில் உள்ள கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் சிலையைத் தொடலாம், கட்டிப் பிடித்துக் கொண்டு தங்கள் குறைகளைச் சொல்லலாம் என்றிருக்கிறது. இங்கும் கூட கர்ப்பக்கிருகத்திற்குள் இல்லாத கடவுள் சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டுக் கும்பிடலாம். இங்கும் துவாரக பாலகர்கள் - நவக்கிரங்கள் - நந்திபரிவார தேவதைகள் முதலிய வெளியே இருக்கிற மற்ற எல்லாச் சிலைகளையும் (சாமிகளையும்) யாரும் தொடலாம் என்றிருக்கும் போது, கர்ப்பக்கிருகத்திற்குள் ஓர் அடி தூரத்தில் இருப் பதை மட்டும் தொடக்கூடாது என்றால், இவற்றுக்கு எல்லாம் விட அது எந்தத் தன்மையில் உயர்ந்தது? இவற்றை எல்லாம் இல்லாத சிறப்பு அதற்கு மட்டும் - அந்த இடத்திற்கு மட்டும் என்ன இருக்கிறது? நம் மக்களை கீழ்ச் சாதியாக, சூத்திரனாக ஆக்குவதைத்தவிர மற்றபடி இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டுகின்றேன். நம்மை நாத்திகன் நீ போகக் கூடாது. தொடக்கூடாது என்று ஆஸ்திகன்' சொல்கின்றானே ஒழிய, எந்த ஆஸ்திகனும் முன்வந்து தன் இழிவிற் குப்பரிகாரம் செய்வதுகூடக் கிடையாது.

நிற்க; கூட்ட ஆரம்பத்தில் கடவுள் மறுப்புச் சொன்னார்கள். அதில் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்புகிறவன் அயோக்கியன், - வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னார்கள். சில முட்டாள்கள் உனக்கென்ன அதிகாரம் இந்த மாதிரி சொல்வதற்கு என்று என்னிடம் நேரில் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இது எங்கள் வழக்கம்; இப்படித்தான் சொல்வோம் ; கடவுளை வணங்காத கடவுள் நம்பிக்கையற்ற எங்களை ஆழ்வார், நாயன்மார்கள் என்கின்ற அறிவிலிகள் எல்லாம் புலையன், மூர்க்கன், மடையன் பிறவி என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். "பக்தர்கள்" என்பவர்கள் இதைப் பாடுகிறார்கள்; பிரச்சாரம் செய்கிறார்கள் அப்படி அமலில் இருக்கிற போது நாங்கள் சொல்வது மட்டும் எப்படித் தவறாகும் என்று கேட்கிறேன்.

இந்தச் சங்கராச்சாரி பார்ப்பனர் உள்பட, பார்ப்பனர் எல்லோரும் மனுதருமம் என்ன வென்றால், "பார்ப்பான் சூத்திரனுக்குக் (நமக்கு) கடவுள்"

"சூத்திரன் பார்ப்பானைத் தான் வணங்க வேண்டும்,''

"பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து அவன் ஏவல்களைக் கேட்க வேண்டும்”,

"சூத்திரன் தாசி புத்திரன்" "நாலாம் சாதி" என்பதோடு நாம் - பார்ப்பனத்தியைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பிறந்தாலோ அல்லது பார்ப்பன விபச்சாரியுடன் நாம், 'சூத்திரன் கூடி இருந்து பிள்ளை பிறந்தாலோ அந்தப் பிள்ளைக்கு சூத்திரன் சொத்தில் பங்கு உண்டு. ஒரு பார்ப்பனன் " சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குப் பார்ப்பான் சொத்தில் பங்கு கிடையாது." அப்பிள்ளை தாசி பிள்ளையாகவே கருதப்படும் என்று சட்டத்தில் எழுதி வைத்திருக்கின்றான். இவை எல்லாம் அனுமதிக்கப் பட்டபோது நாம் சொல்லுவது தவறா?

பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும் மதமுமே யாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே அழிந்துவிடும். அதனால் தான் அவற்றில் கை வைக்க விடாமல் நம்மைத் தடுக்கின்றான்.

கர்ப்பக்கிருகத்திற்குள் இருக்கிற சாமியிடம் கரப்பான், பல்லி, பூனை, எலி முதலிய ஜீவன்கள் எல்லாம் செல்கிறபோது அவற்றை எல்லாம் விட சிறப்புடைய மனிதன் மட்டும் செல்லக்கூடாது, தொட் டால் தீட்டு என்றால் அது என்ன சாமி என்று கேட்கிறேன்?

நம் மக்களை இழிவுப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தவிர, வேறு எதுவும் அதில் கிடையாது. ஆனதனாலே கடவுள் என்பதும், புனிதம் என்பதும் பெரும் பித்தலாட்டமேயாகும். சாதியைக் காப்பாற்ற, இழிவை நிலை நிறுத்த பார்ப்பனர்களால் செய்யப்பட்ட சூழ்ச்சியே இதுவாகும்.

இந்தக் கடவுள் என்பவற்றில் யோக்கியதையைப் பார்ப்போமானால் மிக இழிவான, ஒழுக்கக் கேடான மனிதனின் நடவடிக்கைகளைவிடக் கீழ்த்தரமானவையாகவே புராணங்களில் காணப்படுகின்றன.

பெரும்பான்மையான மக்களால் கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, வணங்கப்பட்டு வருகின்ற சிவன், விஷ்ணு, கந்தன், பிள்ளை யார், இராமன், கிருஷ்ணன் என்பவர்களைப் பற்றியும், பார்ப்பனரால் எழுதப்பட்டவைதான் இந்த இதிகாச புராணங்கள் என்பவையாகும். இந்தக் கதைகளை நீங்களே படித்துப் பாருங்கள், இதில் ஏதாவது ஆபாசமில்லாமல் அறிவிற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்? எனக்கூறி இராமன், கந்தன், பிள்ளையார், இராமன், கிருஷ்ணன் ஆகியோர் பிறப்புப் பற்றி அந்தந்த புராணங்களில் உள்ளதை எடுத்துப் படித்துக்காட்டியதோடு, அதில் உள்ள ஆபாசங்களையும் எடுத்துக் காட்டி, இதையெல்லாம் உண்மை என்று நம்பினால் தான் ஒருவன் கடவுளை நம்பின ஆஸ்திகனாக இருக்க முடியும். இவ்வளவு ஆபாசமாக உலகில் வேறு எந்த அறிவிலியும் கடவுளை உண்டாக்கவில்லை . கிறிஸ்தவன் கடவுளை உண்டாக்கினான் என்றால், அவன் பரமண்டலத்தில் இருக்கின்றான், உருவமற்றவன், அன்பானவன் என்று சொல்லி நழுவிக் கொள்கின்றான். முஸ்லிமும் அப்படித்தான் உருவ மற்றவன், எண்ணம்தான் கடவுள் என்று சொல்லி நழுவிக் கொள்கின்றான். பார்ப்பானைப் போலக் கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி பிள்ளைக்குட்டி, மனிதனைப்போல உருவம் 3 தலை, 5 தலை, 6 தலை, 6 கை, 12 தலை, 7 வேளை படையல் அவனைக் கொன்றது, இவனைக் கொன்றது, 1000, 10,0000, 1,00,00,000 அசுரர்களைக் கொன்றது என்றெல்லாம் கதை சொல்லவில்லை இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான கடவுள்களை உண்டாக்கினவனெல்லாம், பரப்புகிற வனெல்லாம் யோக்கியனா? அயோக்கியனா? என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான கடவுளிடம் தானய்யா நாம் போனால் தீட்டு என்கின்றான் பார்ப்பான். இதைப் பற்றி நம்மில் எவருக்குமே ரோஷம் வரவில்லை !

"அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்; அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில் உள்ளே வரக்கூடாது என்கின்றானே உனக்கு மானமில்லையா, ரோஷமில்லையா? அங்கு இனியாவது போகாதே" என்று 20, 30 வருஷமாகச் சொல்லியும் எவரும் கேட்கவில்லை. வெளியே நின்று கொண்டு சூத்திரத் தன்மையை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனியும் காலம் கடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதால், நாங்கள் உள்ளே செல்வது என்று தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் போவது பிடிக்கவில்லையென்றால் மற்ற ஆஸ்திகர்கள் போகலாமே! நீங்களும் போகாமல், எங்களையும் போகக் கூடாது என்றால் பின் யார் வந்து இதைச் செய்வார்கள்? சமுதாயத்துறையில் எங்களைத் தவிர இந்த நாட்டில் வேறு தொண்டாற்றக் கூடிய ஆளே இல்லையே!

கோயிலுக்குள் இன்று எல்லா சாதி மக்களும் - ஆதிதிராவிடர்கள் உட்பட செல்கிறார்கள் என்றால், இது யாரால்? காந்தியாராலோ, மற்றவர்களாலோ அல்லவே! நம்மால் தானே முடிந்தது. முதன் முதல் ஈரோட்டில் - மறைந்த தோழர் குருசாமி, நடராசன், பொன்னம்பலம், முதலியவர்களும், ஈஸ்வரனும் தங்களோடு ஆதித்திராவிடர் தோழர் களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்கள். அதற்காக வழக்குப் போட்டார்கள். கீழ்க்கோர்ட்டில் அப்படிச் செய்தது தவறு என்று சொல்லி ஆளுக்கு 75 ரூபாய் அபாராதம் போட்டார்கள். அய்க் கோர்ட்டில் அப்பீல் செய்தோம். அவன் போனது குற்றம் இல்லை என்று - அபாராதம் கட்டத் தேவையில்லை என்று தீர்ப்பு செய்துவிட்டான். அதன் பின் கூட இவர்கள் கோயில்களைத் திறந்து விடவில்லை.

திருவனந்தபுரத்தில் சில சாதியார் ரோட்டில் நடக்கக்கூடாது என்று தடை இருந்தது அதற்காக அங்குப் போய் வைக்கம் என்ற ஊரில் 6 மாதம் கிளர்ச்சி செய்தோம். அதனால் நான் 6 மாதம் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தேன். அப்போது திடீரென்று ராஜா செத்துவிட்டார். அதன்பின் பட்டத்திற்கு வந்த ராணி எங்களோடு சமரசம் செய்து கொள்வதற்கு முன்வந்த போது, ஒரு பார்ப்பான் திவான், இராஜாஜி ஆகியோர் நமக்கு அந்தப் பெருமை வந்துவிடக்கூடாது என்று கருதி, காந்தியாரைக் கொண்டு சமரசம் பேசச் சொன்னார்கள். ராணி வீதிகளையெல்லாம் திறந்துவிட்டு விடுகிறேன்; கோயில் பிரவேசம் செய்யக்கூடாது இதற்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நாளைக்கே ரோடுகளைத்திறந்து விட்டு விடுகிறேன் என்று காந்தியாரிடம் சொன்னதும், காந்தியார் என்னிடம் வந்து நிலைமையை விளக்கி, இதற்கு ஒத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதன்பின் நான் ஒத்துக்கொண்டேன். வீதிகளில் யார் வேண்டுமானாலும் செல்ல உரிமையுண்டு என்று சட்டம் செய்து விட்டார்கள். அதன்பின் பல மாநாடுகள் போட்டு, "கோயில் எல்லோருக்குமே பொதுவானது அதற்குள் நம்மை விடமாட்டேன் என்கின்றார்கள்; இனி இந்துவாக இருப்பதில் பயனில்லை; நாமெல்லாம் முஸ்லிம்களாக வேண்டியது தான்" என்று சொன்னதும் சிலர் முஸ்லிம்களாக மாறினார்கள்; சிலர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். முஸ்லிமாக மாறிய ஒரு புலையன் தடை செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்ற போது நீ புலையன் எப்படி இந்த இடத்திற்கு வரலாம் என்று கேட்க, நான் புலையனல்ல; முஸ்லிம். என்னைத் தடுக்க முடியாது என்று அவன் சொல்ல, அங்கிருந்தவர்கள் அவனை அடிக்க, அவன் இறந்துவிட்டான். உடனே முஸ்லிம்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர். இராணுவம் வந்து கலகத்தை அடக்க வேண்டியதாயிற்று. அப்போது திவானாக இருந்த சர். சி. பி. ராமசாமி அய்யர் மகாராணியிடம் இப்படியே விட்டால் இந்துக்கள் யாவரும் முஸ்லிம்களாகி விடுவார்கள். இந்தக் கலவரத்தை இந்து - முஸ்லிம் கலவரமென்று வெளியிட்டால் நாடு பூராவும் கலகம் ஏற்பட்டு அடக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்ற சொல்லி, அதைத் தொழிலாளர் கலவரம் என்று செய்தி வெளியிடச் சொன்னதோடு, எல்லா கோயிலுக்குள்ளும் இந்துக்கள் என்பவர்கள் யாவரும் செல்ல உரிமையுண்டு என்று பிரகடனம் செய்து, கோயில்களை எல்லாம் திறந்துவிட்டார்கள்.

முதன் முதல் இந்தியாவிலேயே கோயிலுக்குள் எல்லோரும் செல்லலாம் என்று திறந்துவிடப்பட்டது திருவனந்தபுரத்திலேயாகும். அதன்பின் நாங்கள் போகக்கூடாது என்றிருக்கிற கோயிலை இடி, சாமியை உடை என்று ஆரம்பித்ததும், அதன்பின் தான் "சூத்திரர்கள் செல்கிற இடம் வரையில் ஆதித்திராவிடர்களும் செல்ல உரிமையுண்டு" என்று ஆக்கினார்கள். அதன்பின் பார்ப்பான் செல்கிற இடம் வரை உரிமை வேண்டும் என்ற ஆரம்பித்ததும் பார்ப்பனர்களும் நாம் செல்கிற இடம் வரைதான் செல்லவேண்டும் என்று ஏற்பாடு செய்தார்களே ஒழிய, நடைமுறையில் அது இல்லை காங்கிரஸ், காந்தி, கோயில், பிரவேச மென்பதெல்லாம் நம் கிளர்ச்சிக்குப்பின்தான் செய்யப்பட்டது ஆகும்.

நாம் புனிதத்தை கெடுக்க என்று நினைத்துக் கொண்டு கர்ப்பகிரு கத்திற்குள் பிரவேசிக்கவில்லை. நம் மக்களை இழிவுபடுத்துகிற ஸ்தாபனமாக - இடமாக அது இருக்கக்கூடாது என்பதால் தான் போகிறோம்.

நமக்கு இருக்கிற கடவுள், மதம், சாஸ்திரம் அது சம்பந்தமான பண்டிகைகள், அதற்காக நம் மக்கள் செய்கின்ற செலவுயாவும் நம் இழிவை, சூத்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காகவேயாகும். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மதத்திற்காகச் செலவு செய்கிறார்கள் என்றால், பள்ளிக்கூடம், அனாதைப் பிள்ளைகள் பாதுகாப்பு, ஆஸ்பத்திரி என்று பொது நன்மைக்காகச் செலவு செய்கின்றார்கள். நம்மைப் போல ஒரு சாதிக்காரனுக்காக மாத்திரம் செலவு செய்ய வேண்டியது, நம் பொருளை ஒரு சாதிக்காரன் மட்டும் அனுபவித்துக் கொண்டு நம் உழைப்பைப் பயன்படுத்தித்தின்று கொண்டு - நம்மைச் "சூத்திரன்" என்று அழைக்க வேண்டியது என்றால், இதை இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருப்பது? நம் பிள்ளை குட்டிகளாவது மானத்தோடு சூத்திரத் தன்மையற்று வாழ வேண்டுமா இல்லையா? நம் இழிவை, சூத்திரத்தன்மையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கிளர்ச்சியாகும்.

இன்றையத் தினம் நடைபெறுகின்ற நம்முடைய அரசாங்கம் இதற்கு எதிரியல்ல; கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கை இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது என்றாலும், செய்தால் காங்கிரஸ்காரன் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏதாவது தொல்லை கொடுப்பானே என்று பயப்படுகிறது.

இன்றையத் தினம் அசிங்கமான போராட்டம் டில்லியிலே காங்கிரஸ்காரர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் யார் ஜெயிப்பார்களோ தெரியவில்லை. அது பற்றி நமக்குக் கவலையில்லை. பிரதமருக்கு அனுகூலமாக இருப்பது ஒன்று பெண்பிள்ளை என்பது, இரண்டாவது அதிகாரம் கையில் இருக்கிறது என்பது, மூன்றாவது ஸ்தாபனம் கையில் இருப்பது. இதைக் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இன்றைக்கு டில்லியிலே இருக்கிற காரியாலய ஆஃபீசைக் கைப்பற்றுவதற்காக இந்த அம்மாளைச் சேர்ந்த கோஷ்டியொன்று சென்றிருக்கிறது. இது தொடர்ந்து ரகளையாகிக் கொண்டுதான் இருக்கும் போல் தோன்றுகிறது. இன்றைக்கு நம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை "காங்கிரஸ்காரன் வந்தால் தொல்லை தான் கொடுப்பான்" இந்த ஆட்சியை ஒழிக்கத்தான் பாடுபடுவான். ஆனதால் பிரதமரை ஆதரிப்பதுதான் சரியாகும் என்று கருதுகிறார்கள். அது சரிதான். எப்படி இருந்தாலும் பொதுவாக நம் ஜனங்கள் இன்றைய ஆட்சியை ஆதரிக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.

இந்த ஆட்சி வந்த பின்தான் பெரும்பான்மையாக பதவியிலிருந்த பார்ப்பான்கள் குறைந்து வருகிறார்கள் குறைந்து கொண்டே வருகிறது! செக்ரட்டரியேட்டில் சீஃப்செகரட்டரி என்பவர் இதுவரை ஒரு பார்ப்பனர் இருந்தார். மந்திரிகளையே ஆட்டுவார் இந்தப் பார்ப்பனர். இப்போது ரிட்டையாரானார். அந்த இடத்தில் இப்போது ஒரு பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுப்பது என்று தீர்மானித்தும் செகரட்டரியேட்டில் முதல் மெம்பராக இருந்த மணி என்கின்ற அய்.சி.எஸ்., பார்ப்பனர் தனக்குத்தான் அப்பதவியைக் கொடுக்க வேண்டும்; இன்னொருவருக்குக் கொடுப்பது தவறு என்று சொல்லி, ராஜினாமா கடிதத்தை வைத்துக் கொண்டு மிரட்டலாம் என்று பார்த்தார் நம் முதல்வர் கொஞ்சமும் தயக்கம் செய்யாமல் அந்தக் கடிதத்தை வாங்கி ராஜினா மாவை ஒப்புக்கொண்டதாக உடனே கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டார். அந்த மணி என்கின்ற பார்ப்பனர் இந்த ஊரில் கலெக்டராக வேலை பார்த்தவர் ஆவார். வேலையை ராஜினாமா செய்ததும் பார்ப்பன ரெல்லாம் இப்போது அலைகிறார்கள். எப்படியாவது சமாதானம் செய்து புகுத்திவிடலாம் என்று பார்க்கிறார்கள். 3,000 ரூபாய்குமேல் சம்பளம் உள்ள பதவியில் - எப்படியாவது புகுந்து கொள்ள வேண்டுமென்று அந்தப் பார்ப்பனரே முயற்சிப்பதாகக் கேள்வி.

குளத்து மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் சென்றால் குளத்திற்கு என்ன அதனால் நஷ்டம்? அவன்தான் மலத்தோடு அலைய வேண்டும் அதுபோல ஆகிவிட்டது அந்தப் பார்ப்பனரின் நிலைமை! அரசாங்கத்தில் எந்த உத்தியோகம் காலியானாலும் முதலில் தமிழர்களுக்கே கொடுக்கிறார்கள். தமிழர்கள் என்றால் நீங்களும், நானும்தானே! கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களது பிள்ளைக் குட்டிகள் மட்டுமல்லவே! நம் மக்கள்தானே அனுபவிக்கிறார்கள் !

காமராஜர் காலத்திலே படிப்புக் கொடுத்தார்; மறுக்கவில்லை. நன்றி செலுத்த வேண்டியது தான் அவரால் நமக்கு இந்த அளவுக்கு உத்தியோகங்கள் கொடுக்க முடியவில்லை. காரணம் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் இருந்ததுதான் ஆகும். அய்க்கோர்ட் ஏற்பட்டு எவ்வளவோ காலத்திற்குப் பிறகு திரு. ஒ.பி.ராமசாமி ரெட்டியார் மந்திரியான பிறகுதான் ஒரு தமிழர் அய்க்கோர்ட், ஜட்ஜாக முடிந்தது. இப்போது 18 பேர்ஜட்ஜ் இருக்கிறார்கள் என்றால், 14 பேர் பார்ப்பனரல்லாதவர்கள், 4 பேர்கள்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இப்போது இன்னும் சில மாதங்களில் இன்னும் இரண்டு காலியாகப் போகிறது. அதற்கும் தமிழர்களைத்தான் போடுவார்கள். இப்படித் தமிழர்களுக்குப் பலத்துறைகளிலும் நன்மை செய்து கொண்டு வருகிறார்கள். இந்த ஆட்சியை நம் கண்போல் காக்க வேண்டும். ஏன் சொல்லுகிறேன் என்றால், நம்முடைய முயற்சியெல்லாம் நம் இனத்திற்குப் பாடுபடுவதுதான் ஆகும்.

(16.11.1969 அன்று திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

- விடுதலை ; 20.11.1969.

மிருகத்தைவிட மோசமான

காட்டுமிராண்டி வாழ்க்கை ஏன்?

நம்மிடையே உள்ள சில அறிவற்றவர்கள் உங்களுக்குத்தான் கட வுள் நம்பிக்கை கிடையாதே, பின் ஏன் நீங்கள் கோயிலுக்குள் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அத்தோடு நம் பெருமதிப்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி அடிகளார்; நீங்கள் சாமி நம்பிக்கை இல்லாதவர்கள்; நீங்கள் ஏன் போகிறீர்கள்? நான் அதைச் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். நாம் கோயிலுக்குள் போவது பக்தியாலோ, அங்கிருக்கிற கல்லை வணங்குவதற்கோ அல்ல; நாம் சூத்திரர்கள்; ஆகவே அங்குப் போகக் கூடாது என்றிருக்கிற தடையைப் போக்கி, நாம் இழிவைப் போக்கிக் கொள்வதற்காகவே ஆகும்.

மன்னார்குடி, மதுரை, சீரங்கம், பழனி, திருவண்ணாமலை இப்படி முக்கியமான கோயில்கள் என்பவை எல்லாவற்றிலும் ஆரம்பிக்க இருக்கிறோம். முதலில் ஒரு கோயிலில் ஆரம்பிப்பது; பிறகு முக்கியமாகக் கருதப்படுகிற ஒவ்வொரு கோயிலிலும் ஆரம்பிப்பது என்றிருக்கின்றோம். அதற்குள் நம் முதலமைச்சரவர்கள் எங்கள் ஆட்சி யில் இதை ஆரம்பித்து இருக்கிறீர்களே இதற்கொன்றும் பரிகாரம் இல்லையா? என்று கேட்கிறார்.

நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன்; கோயிலுக்குள் எல்லோ ரும் செல்வதற்கு உரிமை வேண்டும் என்று. அதற்கேற்பப் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்பதில்லை. எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும், அர்ச்சனைக்கு உரிய முறையினைப் பயின்றால் அவர்களை அர்ச்சகராக ஆக்குவதில் அரசாங்கத்திற்குக் கருத்து வேறுபாடு கிடையாது என்றும், கர்ப்பக்கிரகம் வரை யாவரும் செல்வ தற்கான வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும், சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் நேற்று இரவு அந்த அறிக்கையை விட்டார்.

அதில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- கோயிலிலே சாமி கும்பிடுறவனுக்குப் பேதம், தரம், வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது எங்களது கொள்கை ஆகும்.

பூசை செய்வதற்கும் ஒரே சாதிக்காரர்தான் செய்யவேண்டும் என்பதில்லை. அதற்குரிய படிப்பைப் படித்த எந்தச் சாதிக்காரரும் பூசை செய்ய உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த உறுதிமொழியை ஏற்று அய்யா கிளர்ச்சியைக் கைவிட்டு விடுவார்கள் என்று கருதுகிறேன் என அறிக்கை விட்டிருக்கிறார்.

கிளர்ச்சியின் தத்துவம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். நாங்களும் அந்தக் கொள்கை உடையவர்கள்தான் என்பதைத் தெளிவாகத் தமது அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, நாம் இதுபற்றிச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின் றோம். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இப்போது நம்முடைய இலட்சியத்திற்கு இணங்கி உள்ளார்கள். நாளை மாநாட்டில் இது பற்றி முக்கியமானவர்களைக் கலந்து கொண்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும். முதல்வரின் இந்த அறிக்கை வரவேற்க வேண்டியது மட்டும் அல்லாமல் மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

இங்கு அரசாங்க ஊழியர்கள் எல்லாம் எனக்கு விருந்து அளித்துப் பாராட்டினார்கள். இதற்கு முன் எல்லாம் என்னைப் பார்ப்பதற்கே பயப்படுவார்கள். இப்போது நமக்கு விருந்து அளித்தார்கள் என்றால், அதன் பொருள் அவர்கள் நம் தீவிரமான கொள்கைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் ஆகும்.

தோழர் கலியமூர்த்தி அவர்கள் பல ஆண்டுகளாக இதுபோல் பாராட்டு விருந்து நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு விழாவில் நம் அமைச்சர் மாண்புமிகு நடராசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு அவருக்கு எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்குக் கூட்ட ஆரம்பத்தில் கடவுள் மறுப்புச் சொன்னார்கள். நாம் எல்லாம் மனிதர்கள்; நமக்கு எல்லாம் அறிவு இருக்கிறது. மற்ற ஜீவன்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பான பகுத்தறிவைப் பெற்றிருக்கிற மனிதன், சுமார் கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவன். பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அவன் பெற்றிருக்கிற அறிவால் ஏதாவது பயன் அடைந்தானா என்றால் கிடையாது.

மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறது என்றால், மிருகங்களின் வாழ்வைப் போலத்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது. குழந்தைகள் பெறவேண்டியது. அதைக் காப்பாற்றி அதற்குத் திருமணம் செய்யவேண்டியது, பின் அது குட்டிப் போட வேண்டியது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்று சாகிறவரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும் அதன் நல்வாழ்விற்குப் பாடுபடுவதிலுமே கழிகிறதே ஒழிய, பகுத்தறிவு உடைய மனிதன் தன் சமுதாயத்திற்குப் பயன்படுவது கிடையாது.

மிருகங்கள் கூடக் குட்டிப் போட்டால் அந்தக் குட்டி தானாக இரை தேடுகிறவரைதான் காப்பாற்றும். தானாக என்றைக்கு இரை தேடத் தொடங்குகின்றதோ அன்றைக்கே அதைத் தன்னிடம் இருந்து பிரித்து விட்டுவிடும். பகுத்தறிவுள்ள மனித ஜீவன் ஒன்று தான் அழிகிறவரை தான் போட்ட குட்டிகளைக் காப்பாற்றுவதிலேயே காலத்தைக் கழிக்கிறது. இதுதான் பகுத்தறிவு பெற்ற ஜீவனுக்குக் கடமையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

நம் மக்களின் அறிவு பயன்படாமல் போனதற்கு மற்றொரு காரணம், கடவுள் நம்பிக்கையே ஆகும். உண்மையாக எவனாவது கடவுளை நம்புகின்றானா என்றால், அதுவும் கிடையாது.

கடவுள் நம்பிக்கையுள்ளவன் கடுகு அளவு அறிவு இருந்தாலும் ஆஸ்பத்திரிக்குப் போவானா. அப்படிப் போகிறவன் எப்படிக் கடவுள் நம்பிக்கை உடையவனாக இருக்க முடியும்.

கடவுள் நம்பிக்கைக்காரன் எல்லாம் நம்பிக்கையைக் கொண்டு கடவுளை நம்பு என்று சொல்கிறானே தவிர, அறிவைக் கொண்டு இதுதான் கடவுள், உன் அறிவால் பார்க்க முடியும் என்று எவனுமே கூறவில்லை. கடவுள் இருக்கிறார் நம்பு; நம்பினவனுக்குத்தான் கடவுள்; நம்பாதவனுக்குக் கிடையாது என்கிறான். நாம் முட்டாள் தனமான இந்தக் கடவுள் நம்பிக்கையால் மடையர்களாக, அறிவிருந்தும் அதைப் பயன்படுத்த முடியாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.

பொதுவாகப் பார்த்தால் நம் நாட்டிலிருக்கிற ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் தேசத்திலிருப்பதற்கு, ருசியும் இருக்காது - வாசனையும் இருக்காது; இந்தக் குளிருக்கே இப்படி என்றால், அங்கு (மேல் நாட்டில்) தண்ணீர் வரும் குழாய் குளிர்ச்சியால் தண்ணீர் பனிக்கட்டியாகி நீர் வராமல் அடைத்துக் கொள்ளும் அவ்வளவு குளிர் நிறைந்த நாடுகள் அவை. குளிர்ப்பிரதேசத்தில் உள்ளவனைவிட உஷ்ணப் பிரதேசத்தில் உள்ளவனுக்கு அறிவு அதிகம். ஆனால், இந்தக் கடவுள் நம்பிக்கையால் நாம் மடையர்களாக இருக்கிறோம். கடவுளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அறிவிற்கு முதன்மை கொடுத்ததால் அவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் கடவுளுக்கு முதன்மை கொடுத்து, அறிவை ஒதுக்கி வைத்திருப்பதால் இன்றைக்கும் காட்டு மிராண்டிகளாக இருக்கின்றோம்.

எவன் ஒருவன் அறிவைக் கொண்டு சிந்திக்கின்றானோ, அறிவைக் கொண்டு சாஸ்திர, சம்பிரதாயங்களை ஆராய்கின்றானோ அவன் நரகத்திற்குப் போவான் என்று சாஸ்திரத்தில் எழுதி வைத்திருக்கின்றான். அதனால், நம் மக்கள் அறிவைக்கொண்டு எதையும் சிந்திக்காது அறிவைப் பயன்படுத்தவே பயப்படுகின்றனர்.

இன்றைய தினம் நாம் முன்னேற்ற காலத்தில், பகுத்தறிவு வளர்ச்சிக் காலத்தில் இருக்கிறோம். நம் நாடும் மற்ற உலக மக்களைப் போன்ற அறிவு பெற்று, மேல் நாட்டாரோடு போட்டி போடக்கூடிய நிலையில் இருக்கவேண்டுமானால், அறிவிற்கு முதலிடம் கொடுத்துச் சிந்திக்க வேண்டும். அதற்கு நம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக மாறவேண்டும்.

(31.01.1970 அன்று கீழ்வேளூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

- விடுதலை ; 31.01.1970.

Read 1767 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.