Monday, 28 September 2020 01:32

போராட்டக் களங்களில் பெரியார் வீட்டுப் பெண்மணிகள்

Rate this item
(7 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 74

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமைலயப்பன்


போராட்டக் களங்களில் பெரியார் வீட்டுப் பெண்மணிகள் 

நாகம்மையார்

கள்ளுக்கடை மறியல் மதுவிலக்குப் பிரச்சாரம் மும்முரமாக நடந்தபோது, காந்தியார் ஒரு பணியிட்டார். கள்ளுக்கு உதவும் மரங்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும் இது அப்பணி. வடநாட்டில் பெரும்பாலும் கள் தருவது ஈச்ச மரங்கள். அவைகளை வெட்டி வீழ்த்துவதால் பெருஞ் சேதம் இல்லை. தென்னாட்டில் அப்படியல்ல. இங்கே கள் இறக்கப் படுவது தென்னை மரங்களில். தென்னையின் பயன் மிக மிகப் பெரியது. இவைகள் அழிக்கப்பட்டால் நாட்டுக்கு பொருட்சேதம் பல. இதைப் பற்றிக் காந்தியார் சிந்திக்கவேயில்லை போலும். காந்தியாரின் பணியைப் பலர் ஏற்றனர். வடநாட்டில் பல இடங்களில் ஈச்ச மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இச்செய்தி, செய்தித்தாள்களில் வந்தன. கண்டார் ஈ.வெ.ரா., காந்தீய வெறியில் மூழ்கியிருந்தார் அல்லவா? தமது தோட்டங்களிலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார். அக்காலத்தில் காந்தீய வெறியினால் தென் னைகளை வெட்டி வீழ்த்திய பைத்தியக்காரர்களில் இவரே தலை சிறந்தவர் என்றும் கூறலாம்.

1921ஆம் ஆண்டில் கள்ளுக்கடை மறியல் மிகவும் புகழ் பெற்றது. ஈரோட்டில் மறியல் மும்முரம் மிகுதி. ஈ.வெ.ரா. மறியலைத் தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மறியல்காரர்கள் தடையுத்தரவை பொருட் படுத்தவில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை புகுந்தனர். 1921 நவம்பரில் ஈ.வெ.ரா.வும் அவரோடு சுமார் 100 தொண்டர்களோடும் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஒருமாதம் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி; நாடெங்கும் கலவரம். இச்சமயம் நாகம்மை யாரும், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர், மறியல் செய்பவர்கள் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர். நாகம்மையாரும் அவருடன் சென்ற தோழர்களும் சிறைப்படுத்தப் பட்டதால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி 10,000 பேர்க ளுக்கு சிறை வேண்டியிருக்குமென்று அதிகாரிகள் கருதி, சென்னை அரசாங்கத்துக்குத் தந்தி கொடுத்து முன்னறிவுடன் தடையுத்தரவை நீக்கினர். அதுசமயம் சர்க்கார் 144 - க்கு மதிப்பற்று வாய்தா காலத்திற்குள் ரத்து செய்யப்பட்டது இது ஒன்றேயாகும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. இவ்வாறு குடும்பத்துடன் தேசத்திற்கு தியாகம் செய்த இராமசாமியாரை இன்று சிலர் நாக்கில் நரம்பின்றி தேசத்துரோகி என்று தூற்றுகின்றனர். என்னே! இக் கற்றுக்குட்டிகளின் பேதமை.

இச்சமயம் பொதுவாகவே இந்தியாவில் நடந்து வந்த ஒத்து ழையாமைக் கிளர்ச்சி சம்பந்தமாகக் காங்கிரசுக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது, இதற்காகப் பம்பாயில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற சர். சங்கரன் நாயர் தலைவர். இம்மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு. இம்மாநாட்டின் நடவடிக்கை துவக்கப்படும் முன்பு திரு. பண்டிட் மாளவியா அவர்களும், சர். சங்கரன் நாயர் அவர்களும் மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கை துவக்கலாம் என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது காந்தியார். ''மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களை கேட்க வேண்டும்" என்று பதிலுரைத்தார். இச்செய்தி அச்சமயம் 19-2-22ஆம் தேதி வெளியான ''ஹிந்து' பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காந்தியார் இவ் வாறு சொன்னதற்குக் காரணம், ஈ.வெ.ரா.வின் மனனவி நாகம்மையார், அவரது தங்கை கண்ணம்மாள் ஆகிய இரு பெண்மணிகளும் மறியலுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆதலால் அவர்களின் கருத்தையறிந்த பின்பே முடிவு செய்ய வேண்டுமென்று கருதிக் கூறியதேயாகும்.

கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன் முதல் முடிவு செய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. அவர்கள் வீட்டில் காந்தியார் முதலிய தலைவர்கள் கூடின காலத்தில் கள்ளுக்கடை மறியல் செய்ய வேண்டு மென்று பேசி முடிவு செய்யப்பட்டது. அம்முடிவுக்கு அடிப்படை ஈ.வெ.ரா.வின் முழு ஆதரவேயாகும். இவ்வுண்மையை இளங்கன் றுகள் சில அறியாதிருக்கலாம், ஆனால் காந்தியாரும், ஆச்சாரியாரும் மறந்திருக்க முடியாது.

- சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் நூலிலிருந்து ...

வைக்கம் போராட்டம்

பெண் தொண்டர்கள் கிளர்ச்சியும்

நாகம்மையின் பங்களிப்பும்

வைக்கம் கிளர்ச்சிக்கெனப் பெண் தொண்டர்கள் குழு ஒன்றை அமைக்க 20-4-1924 அன்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்த விவரம் வருமாறு:


திருவனந்தபுரம், ஏப்ரல் 21

"நேற்று வழக்கம் போல் சத்தியாக்கிரகம் நடைபெற்றது....

ஸ்ரீமான் டி. ஆர் கிருஷ்ணசாமி அய்யர் கொச்சியிலிருந்து வந்து, ஸ்ரீநாராயண ஆசிரமத்தில் (சத்தியாக்கிரக ஆசிரமம் ) விசேஷக்கூட்ட மொன்று நடத்தி வைத்தார். இயக்கத்தைப் பலமாக நடத்திக் கொண்டு போக ஸ்ரீமான்கள் கிருஷ்ணன், அச்சுதமேனன், ஈ.வெ.ராம் சாமி நாயக்கர், கோவிந்தன் (சாணார்) முதலிய 81பேர் புதிய அங் கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஸ்ரீமான் கிருஷ்ணஸ்வாமி ஐயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கைதானால் குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட்டும், பிறகு ஸ்ரீமான் எம்.இ. நாயுடுவும் (எம். எம்பெருமாள் - M. Emperumal Naidu) தலைமை வகிப்பார்கள். அலுமுலா (அலுமுட்டில் என்றும் வருகிறது) கொச்சி கோவிந்தன் என்ற ஈழவர் கஜானாஜி(பொருளாளர்)யாக நியமிக்கப் பட்டார். சீக்கிரத்தில் ஸ்திரீகள் பிரிவொன்று வகுக்கப்பட்டு ஸ்ரீமான் கள் நாயக்கர், கோவிந்தன், மாதவன் ஆகியவர்களின் மனைவிகள் வசம் அதை ஒப்படைக்க உத்தேசம்.

- சுதேசமித்திரன்; 22.04.1924.


இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளிலிருந்து பெண் தொண் டர்கள் கிளர்ச்சியிலீடுபட்டது 20-5-1924 முதல் எனத் தெரிகிறது.

விவரம் வருமாறு;

கொச்சி, மே 21


ஸ்திரீத் தொண்டர்கள்

நேற்றுக் காலை (20-5-1924) ஸ்ரீமான்கள் ராமஸ்வாமி நாயக்கர், எம்பெருமாள் நாயுடு, தாணுமாலைப் பிள்ளை, கோவிந்தன் சாணார் ஆகியவர்களின் மனைவிகள் மேலண்டை கோபுர வாசலையடுத்த ரஸ்தாவில் சென்று ஸத்யாக்ரஹம் செய்தனர். ஸ்ரீமான் சர்மா என்ற இன்ஸ்பெக்டர் சாணாரின் மனைவியை மட்டும் போகவிடாமல் மற்றவர்களைப் போகவிட்டார். ஏனெனில், அம்மாது தீயர் வகுப்பு ஸ்திரீயென்றார். ஸ்ரீமான் நாயக்கர் மனைவியும் மற்ற ஸ்திரீகளும் இன்ஸ்பெக்டருடன் வாதித்தார்கள்... 1 மணி நேரம் போல், ஸ்திரீத் தொண்டர்கள் ஸத்யாக்ரஹம் செய்ய, ஆண் தொண்டர்கள் பிறகு வந்து அவர்களை அனுப்பிவிட்டனர்.

- சுதேசமித்திரன் ; 22.05.1924.


கொச்சி, மே 22 "கனத்த மழை பெய்து கொண்டிருந்தும் தொண்டர்கள் தங்களிடத்தை விட்டு அசையாமல் ஸத்தியாக்ரஹம் செய்கின்றனர். ஸ்திரீத் தொண்டர்கள் மற்றவர்களுடன் சம்பந்தி போஜ்னம் செய்து வருகின்றனர். இன்னும் அதிகமாகத் தொண்டர்கள் வேண்டு மென்று கமிட்டியார் கேட்கின்றனர்.

- சுதேசமித்திரன் ; 22.05.1924.


ஸ்ரீமான் நாயக்கரின் மனைவி நேற்றும் பிடிவாதமாக ஸ்ரீமான் சாணாரின் மனைவியைத் தடுக்கப்பட்ட ரஸ்தாவில் அழைத்துச் செல்ல எத்தனித்தபோது, ஒரு பிராமணர் கோபத்துடன் அம்மாதிரி உத்தரவை மீறக்கூடாது என்று கண்டித்தார். கனத்த மழை பெய்தும் ஸ்திரீகள் தங்களிடத்தை விட்டு அசையாமல் சத்தியாக்கிரகம் செய்தனர்.

- சுதேசமித்திரன்; 23.05.1924.

நாகம்மையார்

கோவிலுக்குள் நுழைந்தார்!

சூத்திர வகுப்புப் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுத்ததாக, 15.06.1924 சுதேசமித்திரன் ஏட்டில் வெளி வந்த செய்தி தெரிவிக்கிறது.

கோவில் மதில்களுக்கு வெளியே உள்ள பொதுச்சாலைகளில் தீண்டப்படாதார் நடக்கக் கூடாது என்பதும்; சாதி இந்துக்கள் என்கிற சூத்திரர் - குறிப்பாகப் பெண்கள் கோவிலுக்குள் போகக் கூடாது என்பதும் இந்து மத ஆசாரம். இதையும் மீறினார் ஈ.வெ.ரா. நாகம்மை.

இந்நிகழ்ச்சி பற்றிய பின்வரும் செய்தி இதை எண்பிக்கிறது.

கொச்சி, சூன் 20

இராட்டையில் நூற்றுக் கொண்டே கிளர்ச்சி

வயதான பெண்கள் பங்கேற்பு

வைக்கத்தில் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. வைக்கம் கோவிலுக்கு உள்ளே சாதி இந்துப் பெண்களான திருமதி நாயக்கரும் மற்றும் உள்ள பெண்களும் நுழையக்கூடாது என தேவஸ்வம் போர்டு தடை செய்திருந்தது. அதையும் மீறி இவர்கள் நுழைந்து விட்டார்கள்: இது பற்றி தேவஸ்வம் போர்டு ஊழியர் ஒருவர் சத்தியாக் கிரக ஆசிரமத்துக்கு வந்து அங்கிருந்த பொறுப்பாளர்களிடம், திருமதி நாயக்கர் கோவிலுக்குள் நுழைந்தது கடுமையான குற்றம் (Grievous error) என்றும், சாதி இந்துக்கள் கோயிலுக்குள் நுழைய இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில், சாதி இந்துவான அவர் அப்படிச் செய்தது அடாதது என்றும் கூறிக் கண்டித்துவிட்டுச் சென்றார்.

- தி இந்து (ஆங்கில நாளிதழ் ); 21.06.1924.


இதைத் தொடர்ந்து, கோவில் மேலவாசலில் 3 பெண் தொண்டர்கள் கிளர்ச்சி செய்தனர் என மாவட்ட நீதிபதியின் அறிக்கை (20-6-1924) தெரிவிக்கிறது.

சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 24-6-1924 வாக்கில் ஈ.வெ.ரா., மதுரை வழக்கறிஞர் நாராயணன், சத்தியவிரதன், சாத்துக்குட்டி நாயர், கே.ஜி.குஞ்சி கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் கூடித் திட்ட மிட்டனர். மேல் சாதி (சவர்ணர்கள்)க்காரர்களின் எதிர்ப்புக் கிளர்ச்சியைச் சந்திக்கும் தன்மையில், பெண் தொண்டர்களை அதிக எண்ணிக்கையில் மேல்வாசலுக்கு அனுப்புவது என்று முடிவு செய்து அவ்வாறே அனுப்பினர்.

ஏனெனில், சவர்ணர்கள் அச்சமயம் சிறப்புக் கூட்டம் நடத்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்ய முடிவு செய்துவிட்டனர். துண்டு அறிக்கையும் வெளியிட்டு விட்டனர்.

பெண் தொண்டர்கள் பெரிய எண்ணிக்கையில் குவிந்து விட்டனர்.

"........ பிரஸ்தாப ரஸ்தாவில் தடுக்கப்பட்ட ஹிந்து சமூகத் தினர்களே பெரும்பாலும் தொண்டர்களாக இருக்கிறார்கள்......." தடுக்கப்பட்ட மேலண்டை வாசலில் ஸ்ரீமதிகளான கல்யாணியம்மாள், பார்வதியம்மாள், கரும்பியம்மாள், கருத்தகுஞ்சம்மாள், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் பந்துக்களான லட்சுமியம்மாள், மாரக்காயம்மாள் இவர்கள் நின்று சத்தியாக்கிரகம் செய்தது கல் மனதையும் கரையச் செய்யவல்லது ......... மதுரை ஸ்ரீமான் நாராயண அய்யர் இங்கு அரிய வேலை செய்து கொண்டிருக்கிறார். ஸ்ரீமான்களான கோவிந்தன் சான்றோரும், இராமசாமி நாயக்கரும் குடும்ப சகிதம் தாமதித்து (தங்கி) வருகிறார்கள்......'' என்று, விருதுநகர் ஸ்ரீமான் க.பெ. சங்கரலிங்க நாடார் எழுதுகிறார்.

- சுதேசமித்திரன்; 25.07.1924, பக் -8.


நாகம்மை தண்டிக்கப்பட்டார்

பெண் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து, தேசிய கீதம் பாடிக் கொண்டும், இராட்டையில் நூற்றுக் கொண்டும் நிதி திரட்டினர்.

கொச்சி, ஆகஸ்டு 4

"ஸ்ரீமான் ராமஸ்வாமி நாயக்கர் மனைவி மற்ற ஸ்திரீகளோடு பிரச்சாரவேலையும் பண வசூலும் செய்து வருகிறார். சாது எம்.பி. நாயரின் மனைவியும் அவருடன் வேலை செய்கிறார். பாடிக் கொண்டும், ராட்டினம் சுற்றிக்கொண்டும் இந்த இரண்டு தொண்டர்களும் போக்குவரத்துக்குத் தடையாயிருந்ததாகக் குற்றஞ்சாட்டப் பட்டு 5ரூ அபராதம் விதிக்கப்பட்டார். அபராதம் கொடுக்க மறுத்து கோர்ட்டு கலையும் வரை காவலில் இருந்தார். விசாரணைக்கு முந்தி 8 தினங்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தார்...."

 - சுதேசமித்திரன்; 05.08.1924. 


ரிவோல்ட் பத்திரிகை

வெளியீட்டாளர்

ரிவோல்ட் என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையின் பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.04.1928இல் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு போலீசார் ரிவோல்ட் என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவதாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:-

இப்பவும் மேற்படி பிரசில் ரிவோல்ட் என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் குடிஅரசு என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. REVOLT என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச் சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார். இதன்மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரியவில்லை.

- குடிஅரசு; 22.04.1928.


கண்ணம்மாள்

சிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி

ராமசாமி என்று சொன்னால் நான் குறிப்பிடும் ஆளை நீங்கள் சட்டென்று கண்டு பிடிக்க மாட்டீர்கள் தோழர் ராமசாமி என்று சொன்னாலும் அவர் உங்கள் கைக்கு அகப்படமாட்டார். தோழர் ராமசாமி என்று கூற வேண்டும் இல்லையேல், ஈ.வெ.ராமசாமி என்று சொல்லவேண்டும் அல்லது குடிஅரசு என்று குறிப்பிட வேண்டும்.

இப்படி தெளிவாகச் சொன்னால்தான் அவர் உங்கள் கவனக்கைக்குள் சிக்குவார் அல்லது வேறொரு வகையில் குறிப்பிட்டாலும் குறிப்பிடலாம். அதுதான் தமிழ்நாடு முறை. தமிழ்நாடு என்றால் தமிழ் தேசத்தைக் குறிப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள். சென்னையில் நடைபெறும் தினசரி பத்திரிகையான தமிழ்நாடு வைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

அந்தப் பத்திரிகைக்கு ராமசாமி நாயக்கர் என்று அழைப்பதில் தான் பிரீதி அதிகம். தோழர் ஈ.வெ.ரா. அந்த நாயக்கர் பட்டத்தையும், அதற்குரிய ஸனத்தையும் வாபஸ் செய்து வெகு நாளாயிற்று என்பது தமிழ்நாடுக்குத் தெரியாதென்பதல்ல. குடிஅரசாலும் அதைத் தழுவிய குட்டிப் பத்திரிகைகளாலும், அதன் கோஷ்டியாராலும் தோழர் ஈ.வெ.ரா.உச்சரிக்கப்படுங் காலத்தில் ரத்து செய்யப்பட்ட நாயக்கர் பட்டத்தைச் சேர்க்காமல் வெறும் ராமசாமி என்று மொட்டையாக உச்சரித்து வருவதைத் தெரிந்தும், அறிந்தும் அதன் காரணத்தை உணர்ந்தும் இப்படி பிடிவாதமாக அந்த வாலையும் சேர்த்து எழுதி வருவதிலிருந்து தமிழ்நாடுக்கு ஜாதிப்பட்டத்தின் மேலுள்ள காதலை நன்கு அறியலாம். இவ்வகையில் தமிழ்நாடும் சுதேசமித்திரனும் ஒரு தனிரகம்.

தோழர் ராமசாமி இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? கோயமுத்தூரில், உயரமான சுற்றாலைச் சுவர்களுடன் கூடிய நல்ல கெட்டிக் கட்டடத்தில் இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட அறைக்குள் இருக்கிறார். அவர் சாப்பிடுகிற சாப்பாடு சர்க்கார் சாப்பாடு. இந்த மகத்துவம் யாருக்கு கிடைக்கும். ஆனால் அவர் முன்போல பிரசங்கம் பண்ண முடியாது. பேப்பருக்குத் தலையங்கம் எழுத இயலாது.

குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு. மற்ற நேரத்தில் வேலை, மாலை 5 அடித்ததும் அறைக்குள் அதற்கப்பால் அயர்ந்து தூங்க வேண்டியதுதான். ஆனால் மூட்டைப்பூச்சிகளின் இஞ்ஜக்ஷன் சிகிச்சையும், கொசுக்களின் ரீங்காரகானமும் மட்டும் உண்டு. தோழர் ராம சாமி ஜெயிலுக்குள்ளிருப்பது இது நாலாவது தடவை. இவர்தான் மட்டிலும் ஜெயிலுக்குள் போகவில்லை, தன்னோடு உடன் பிறந்த தங்கை தோழியர் கண்ணம்மாளையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்.

அண்ணனுக்கு ஆறு மாதம், தங்கைக்கு மூன்று மாதம். இதோடு போகாமல் தலைக்கு முன்னூறு ரூபாய் அபராதம்; இது செலுத்தப்படாவிடில் இன்னும் ஒவ்வொரு மாதம் அதிகமான ஜெயில் வாழ்வு. இத்தனை உபத்திரவம் எதனால் தெரியுமா? சென்ற 29.10.33இல் குடிஅரசு பத்திரிகையில் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று எழுதப்பட்டிருந்த தலையங்கந்தான். குடி அரசுக்கும், மேற்படி அண்ணன் தங்கைக்கும் உள்ள சம்மந்தத்தை தான் நீங்கள் அறிவீர்களே. குடிஅரசின் பத்திரிகாசிரியர் அண்ணன் ஈ.வெ.ரா., அதன் பதிப்பாசிரியர் தங்கை கண்ணம்மாள், இதனால் இந்த இரண்டு பேருக்குமே தண்டனையும் அபராதமும்.

தோழர் நாயக்கர் (தமிழ்நாடுவின் அனுமதியை எதிர்பார்த்து நாயக்கர் வார்த்தையை உபயோகிக்கிறேன்) தோழியர் கண்ணம்மாள் இருவரும் ஜெயிலுக்குப் போனது பற்றி நான் இங்கு வாழ்த்துக் கூறவில்லை. அவர்கள் பொதுவேலையில் இறங்கியது முதல், நாளது வரை செய்த சேவைகளை, செய்த தியாகங்களை டைரி எழுதி கண், காது, மூக்கு வைத்து சித்திரம் வரையவும் முற்படவில்லை. ஜில்லா மாஜிஸ்திரேட் செய்த தீர்ப்பை சரி என்றோ, தப்பு என்றோ அப்பீல் ஜட்ஜ்மெண்டு கூறவும் முன்வரவில்லை.

தோழர் ராமசாமி இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுகொண்டார் என்பதை எடுத்துக்காட்டவே இந்தப்பாடுபடுகிறேன். ஆனால் என் உள்ளத்தில் உதயமாகும் எண்ணங்களை படம் பிடித்துக் காட்ட எனக்கு சக்தி இல்லை. அந்த சக்தி இருந்தால் இந்த குடி அரசு வழக்கையும், அதில் ஏற்பட்ட தீர்ப்பையும் ஈ.வெ.ரா. எப்படி ரசித்தார் என்பதை இந்தப் பேனா நர்த்தனத்தில் சித்திரம் தீட்டிவிடுவேன், சிலையாகக் கூட சிற்பம் சித்தரித்துவிடுவேன், அந்த அளவு சக்தி தான் எனக்கு ஏற்படவில்லை. வசனநடை சித்திரத்தில் இல்லாமல் போனாலும் கவிநடைச் சித்திரத்தில் ஒருவர் படம் தீட்டிக்கொண்டிருக்கிறார். அந்த ஓவிய நிபுணர்-சிற்ப சாஸ்திரி-யார் தெரியுமா? அவர்தான் பாரதிதாசன். அவர் தீட்டிவரும் சித்திரம் முடிவடைந் தததும் அதை நகர தூதன் வாசகர்களும் கண்டு களிக்கலாம்.

தோழர் ராமசாமி ஒரு பொல்லாத கிழவர், மகா பிடிவாதக்காரர். எதில் தலையிட்டாலும் பிறர் பின்தொடர முடியாத ஒரே ஓட்டந்தான், பொது சேவையில்தான் இப்படி என்று நினைக்கீறீர்களா? அல்ல. அவர் செய்த மிளகாய் வியாபாரத்திலும் அதே ஒட்டந் தான். மதுவிலக்குப் போராட்டத்தில் முதல் மெடல் பெற்றவர் இந்த தாத்தாதான். ஒத்துழையாமைக் காலத்திலும் அவரால் நடத்தப்பட்ட ஈரோடு டீம்தான் ஜெயித்து தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் நடந்த பந்தயத்திலும் ஈ.வெ.ராவுக்குத்தான் கெலிப்பு.

இன்னுஞ்சொல்ல வேண்டுமா? ஒரு பானை சோத்துக்கு இரண்டொரு பருக்கை மட்டும் பதம் பார்த்தால் போதும். சுயமரி யாதை இயக்கம் அதன் தத்துவம் இப்போது எப்படி ஓடிக்கொண்டி ருக்கிறதென்பதை நீங்கள்தான் பார்க்கிறீர்களே. சீர்திருத்தத் தொண்டனுக்கு ஓய்வு நேரமோ, இளைப்பாறும் மண்டபமோ கிடையாது என்று ஒரு பெரியார் சொல்லியிருக்கிறார்.

அதை நிதர்சனமாகக் காணவேண்டுமானால் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. சரித்திரத்தில்தான் காணமுடியும். இரண்டொரு பேனாக்காரர்கள் தான் இந்த இடத்தில் என்னை மிரட்ட சிறைவாசம் ஓர் இளைப்பாறும் மண்டபம் என்று எண்ணி என்னை ஜெயிக்கப் பார்க்கிறீர்களா?

சீர்திருத்தக்காரன் ஜெயிலுக்குள் இளைப்பாறுவதேது? உள்ளே இருக்குங்காலத்தில் அவன் மனம் என்ன பாடு படுந்தெரியுமா? உண்மையான சீர்திருத்தக்காரனுக்கு அப்போதுதான் நிஜமான ஆவேசம் ஏற்படும், சிறைவாசத்தில் தான் அவன் செய்யப்போகிற யுத்தத்திற்குப் படையை எப்படி அணிவகுத்து நிறுத்துவதென்பதற்குப் பிளான் போடுவான்.

தோழர் ராமசாமிக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்தது பற்றி வெகு சந்தோஷம். ஆனால் தண்டனையைப் பற்றி மட்டும் அவருக்குக் கொஞ்சம் வருத்தம். யாருக்குத்தானிருக்காது? சும்மா, காட்டில், மரத்துக்கு மரம் பறந்து கிளைக்குக் கிளை தாவி நினைத்த நேரங்களில் பாடித்திரிந்த பறவையைப் பிடித்துக் கூட்டுக்குள்போட்டு அடைப்பதுபோல அறைக்குள்ளிட்டு அடைத்தால் எந்த மனிதன் தான் வருத்தப்படமாட்டான்?

தோழர் ராமசாமிக்கு அந்த முறையில் வருத்தம் அல்லவே அல்ல. பொசுக்கென்று ஆறுமாதம் கிடைத்தது. அதிகமாகக் கிடைக்குமென்று நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையை இரண்டொருவரிட மும் சொல்லி வந்தார். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்தது.

கைது செய்யப்பட்டது, தோழர் ராமசாமிக்கு ரெட்டை சந்தோஷம். இந்த சாக்கில் உள்ளே போய்விட்டு வந்தால் ஊக்கம் ரொம்ப ஏற்படுமென்பது அவரது ஆசை. இந்த ஆசையை அனுப விப்பதற்காகவே அவர் எதிர் வழக்காடவில்லை என்று நினைக்கிறேன். எத்தனையோ பேர்கள் எடுத்துச் சொல்லியும் எவ்வளவோ தொண்டர்கள் கெஞ்சிக் கேட்டுங்கூட இந்தத் தாடிக்கார கிழவன் ஒரே பிடிவாதமாய் சாதித்துவிட்டாரம்.

அப்பப்பா! இருந்தாலும் இந்தப் பழுத்த வயதில் இவ்வளவு பிடிவாதங் கூடாது. எதிர் வழக்காடுவதில் தான் இவ்வளவு முரட்டுத் தனமென்றால் வாக்கு மூலமாவது வகையோடு கொஞ்சம் ஈனஸ்வரத்தில் கொடுத்திருக்கக்கூடாதா? குடிஅரசுத் தலையங்கம் ஒரு படியைத் தாண்டியிருந்ததென்றால், இவரது வாக்குமூலம் ஒன்பத்தி ரெண்டு படியையும் தாண்டிவிட்டது.

கடைசியாகப் பப்ளிக் பிராசிகியூட்டர் தனது ஆர்குமெண் டைப் பேசும்போது பார்க்கவேண்டுமே. இவரது குறும்புத்தனத்தை அவர் பேசும்போது பத்திரிகை வாசகங்களைப் படித்துக்காட்டி இந்த இடத்தில் ராஜத்துவேஷம் இருக்கிறது. இந்த இடத்தில் பொதுவுடமைப் பிரச்சாரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டும்போது தோழர் ராமசாமி ஸ்பிரிங் பொம்மையைப்போல தலையை அசைத்து அசைத்து ஆட்டிக்கொண்டு, அதற்குத் துணையாக ஆள்காட்டி விரலையும் பலகையில் அடித்துக் கொண்டு பப்ளிக் பிராசிகியூட்டர் சொல்லுவதெல்லாம் வாஸ்தவம் எனச் சொல்லுவதுபோல தலையாட்டி வந்தார். தீர்ப்புக் கூறியதும் அவரது முகப்பொலிவுப் படம் பிடிக்கக்கூடியதாகவிருந்தது.

இவரை கோயமுத்தூர் ஜெயிலில் போட்டதால் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அதுதான் ராஜகோபாலாச்சாரி - ராமசாமி சந்திப்பு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கும் ஈ.வெ.ராமசாமிக்கும் அக்காலத்திலிருந்த நேசபான்மையை தமிழ்நாடு நன்றாக அறியும்.

இரண்டு பேரும் இணைபிரியாதிருந்த காலமும் ஒன்றிருந்தது. அண்ணன், தம்பிகள்கூட அவ்வளவு மரியாதையோடும், வாஞ்சை யோடும், வாத்சல்யத்தோடும் இருந்திருக்கமாட்டார்கள். வைதீக ஒத்துழையாதாராகக்கூட இருந்த இவ்விருவரும் பேசிய பேச்சுக்கள் வால்யூம் கணக்கில் சேரும். புட்டாலும் புடமுடியாது என்று சொல்லக்கூடிய விதமாக தோழர்கள் ராமசாமியும், ராஜகோபாலாச் சாரியாரும் இருந்ததுபோல் 1925க்கு மேல் இருவரும் அரசியல் சத்துருக்களாய் மாறினர்.

குருகுலப் போராட்ட காலத்தில் தோழர் ஆச்சாரியார் நடந்து கொண்ட தோரணையிலிருந்து ஆச்சாரியார் சமத்துவக் கற்பில் ராமசாமி சந்தேகங்கொள்ள ஆரம்பித்தார். அதற்கு பிறகுதான் பிராமணர்களென்றால் தோழர் ராமசாமிக்குப் பச்சநாவியாகிவிட்டது. அந்த சனியன் பிடித்த குருகுலக் கிளர்ச்சிதான் இணைபிரியாதிருந்த அவ்விருவரையும் வெட்டிவிட்டதென்று சொல்ல வேண்டும்.

சுயமரியாதை இயக்கங்கண்ட பின் இவ்விருவரும் சந்தித்ததே கிடையாதென்று சொல்லாம். எங்கேனும் தப்பித்தவறி முகத்தோடு முகம் மோதிக்கொண்டிருந்தாலும் இருவரும் பேசியிருக்கக் கூடிய சந்தர்ப்பமே வாய்த்திருக்காது.

தோழர் ராமசாமியை ஜெயிலுக்குள் கண்டதும் தோழர் ராஜ கோபாலாச்சாரிக்கு தூக்கி வாரிப்போட்டது போலிருக்கும். ராஜ துவேஷத்தின் காரணமாக தோழர் ராமசாமி சிறைக்கு வந்தாரென் றும் கேள்விப்பட்டதும் அதைவிடப் பெரும் வியப்பாக இருந்திருக்கலாம். தோழர் ராமசாமி கோவை சிறைக்குள் நுழையும்போது தோழர் ஆச்சாரியார் உள்ளே இருக்கிறார்.

ஈ.வெ.ரா. இம்மாதிரி சிறைக்கு வர சந்தர்ப்ப மேற்படாது என்ற நினைப்பு ஆச்சாரியாருக்கு உண்டு. அதனாலேயே அவர் அவ்வாறு ஆச்சரியமடைந்திருக்கலாமென்று நான் கூறினேன். இந்த இரண்டு பேருக்குள்ளும் இருந்த பழைய அன்பு அவ்விருவரையும் கோவை ஜெயிலுக்குள் கூட்டி வைத்துவிட்டது. பழைய சினேகிதர்கள் புதிய முறையில் கூடிக்குலாவும்போது என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் நெஞ்சம் எப்படி நெகிழ்ந்தது என்பதையும் நான் அறியேன். அதை நீங்கள் அறிய ஆசைப்படுகின்றீர்களா? ஆம் என்றால் அவர்களைச் சந்தித்து நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

- நகரதூதன்; 1934.

ஈ.வெ.ராமசாமிக்கும்

சா.ரா.கண்ணம்மாளுக்கும் ஜே! (ஈ.வெ.கி.)

நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா.கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் குடிஅரசில் எழுதிய இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் தொடரப்பட்ட ராஜ நிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி. டபிள்யூ. வெல்ஸ் அய்.சி. எஸ் அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்.

அதாவது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், மேற்படி அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்.

எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது, தண்டிக் கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தற்போது நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்தி ருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.

ஆயினும் நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பது தான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையானது நமது காரி யாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் 110 என்பதாகும். நமது தோழர்கள் சிறைப் பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமந்தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமையாக ஒரு சங்கம் அவைகளின் தாலுகா தலைநகரில் ஏற்பட வேண்டும்.

அப்படி ஏற்படுகிற தாலுகாக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலுகாக்களின் ஜில்லாக்களின் தலைநகர்களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கத்திலும் அங்கத்தினர்கள் ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரச்சாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும் படியாகவும் சர்க்கார் மீது எவ்வித துவேஷம் உணர்ச்சி உண்டாக்கா மலும் நமதியக்க உணர்ச்சியையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரச்சாரம் செய்து வரவேண்டும்.

அதனால் மக்களுக்குள் ஒரு வித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி அறியாமையையும் அடிமைப்புத்தியையும், மூடப் பழக்க வழக்கங்களையும் வேரோடு களையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்.

அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிராயங்களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள்.

நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கைகளையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரச்சாரத்தின் மூலமும், எழுதவேண்டிய பிரச்சாரத்தின் மூலமும் எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அநேக மாயிரக்கணக்கான எதிர்ப்புகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல்களுக்கும் எதிர்பார்த்துத் தயா ராகவுள்ள தியாகத்@தாடுள்ளவர்களுக்கேதான் அவைகள் கைகூடி வரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம்.

ஆகையால், நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கையை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்து கொண்டு தான், தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழிக் காயங்களால் இராப்பகலின்றி உழைத்து வந்தவர்கள்.
இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக்காகவும் சிறைப்பட்டார் களோ அந்தந்த கொள்கையும், எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ணமுடைய ஒவ் வொருவரும் இனிச் செய்ய வேண்டியதென்னவென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங்களும், பிரச்சாரங்களுமே உற்றதுணையாகும்.

ஆகையால், அவைகளை முன் தெரிவித்துக் கொண்டபடி நிறுவி பிரச்சார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமது இயக்கத் தோழர்களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம். மற்றும் நமது கொள்கைச் சமதர்மமும், சமத்துவமுமான தற்கேற்றபடி நமதியக்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் சமானமான வர்களேயாவர்கள்.

நமது ஈ.வெ.ரா.உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார்களாகையால் தற்பொழுது நமது இயக்கப் பிரச்சாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவரும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையிலில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்.

- புரட்சி; 28.01.1934.

நாயக்கர் சிறைபட்டார்!

குடிஅரசு ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிறை தண்டனைப் பெற்றிருக்கும் விவரத்தை மற்றொருவிடத்தில் காணலாம். சென்ற அக்டோபர் மாதம் குடிஅரசு பத்திரிகையில் வெளியான தலையங்கம் ராஜத்துரோகமுள்ளதென்ற குற்றத்திற்காக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்திரேட் இவ்வழக்கை விசாரித்து நாயக்கருக்கு 6 மாதம் வெறுங்காவலும், ரூபாய் 300/- அபராதமும் விதித்திருக்கிறார்.

நாயக்கர் தமிழ்தேசத்திற்கு செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்கமுடியாது. பெரும் தன்வந்தராகவும், ஈரோடு முனிசிபல் சேர்மன், தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் ஆகிய பதவிகளை வகித்து உல்லாசமாயிருந்த ராமசாமி நாயக்கர் 1915ஆம் வருடம் முதற்கொண்டு தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார். கோயமுத்தூர் ஜில்லா மகாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மகாநாட்டிற்கும் 1915, 1917 ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாரும் அறிவார்கள், பிறகு காங்கிரசில் சேர்ந்து ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றியதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதே இல்லை.

1924ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க, வைக்கத்தில் சக்தியாகிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர். அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயமுத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலி ருந்து விலகி வரதராஜலுநாயுடு உள்பட எல்லா தேசியவாதிகளையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ததும், சுயமரியாதை இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். ஐரோப்பாவில் யாத்திரை செய்து ருஷியாவை தரிசித்ததின் பயனாக பொதுஉட மைக் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார். அவருக்கும், நமக்கும் மாறுபட்ட கருத்துகள் என்ன விருப்பினும், நமக்கு நியாயமென்றுபட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் நாயக்கர் முதல் ஸ்தானம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய,சமூக, அரசியல் துறைகளில் நாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும் அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத் தேசத்தினர் ஒரு நாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்.

பலவித ரோகங்களுக்குட்பட்டு, வயது சென்ற இக்காலத்தில் அவரை சிறைக்கனுப்பியது சர்க்காருக்கு அழகல்லவென்றே கூறலாம். கண்மூடித்தனமான பழைய ஆட்சிமுறைகள் முறிந்து, புதிய அரசியல் அமையப்போகும் இச்சந்திகாலத்தில், அரசாங்கத்தை தூஷித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டுவதும், அதற்காக தண்டிப்பதும் சிறுபிள்ளைத்தனமேயாகும்.

காலதேச வர்த்தமானத்தை அறிந்து நடந்துகொள்ளும் நல்லறிவு சர்க்காருக்கு என்றுதான் உண்டாகுமோ தெரியவில்லை, ராமசாமி நாயக்கரையும், அவருக்குத் துணையாகவிருக்கும், அவருடைய சகோதரி கண்ணம்மாள் அவர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.

- தமிழ்நாடு தலையங்கம்; ஜனவரி - 1934.

தோழர்கள் ஈவெ.ராமசாமி,

சா.ரா.கண்ணம்மாள்

கைது செய்யப்பட்டார்கள்

டிசம்பர் 20 மாலை இரண்டு மணி சுமாருக்கு மூன்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர்களும், நான்கு சப் இன்ஸ்பெக்டர்களும், பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களும் மோட்டாரிலும், மோட்டார் பஸ்களிலுமாக புரட்சிக் காரியாலயத்திற்கு வந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களோடு சுமார் அரை மணி நேரம் தனித்துப்பேசிக் கொண்டிருந் தார்கள். பின்னர் புரட்சி காரியாலயத்தின் LETTER FILE களைப் பரி சோதனை செய்தும், பார்வையிட்டும் 46 கடிதங்களைக் கைப்பற் றியதோடு ககீஉகுகு - PRESS & BOOK - லிருந்து மூன்று கடிதங்களின் முக்கியாம் சத்தையும் குறித்துக் கொண்டார்கள். 29.10.33 குடி அரசு பிரதிகளில் பலவற்றையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

மற்றும் குடிஅரசுப் பதிப்பகப் புஸ்தகங்களையும், பலவற்றைக் கவனித்துவிட்டு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களை சற்று தங்களுடன் வரும்படியும் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மாளிகையையும் பார்க்கவேண்டுமெனவும் அழைத்துச் சென்றார்கள். அதன்படி மோட்டாரில் புரட்சிக் காரியாலயத்திலிருந்து வீடு சேர்ந்து பரிசோதனை செய்துவிட்டு தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் வீட்டுக்கு வந்து அங்கு தோழர் ஈ.வெ.ராமசாமி தங்கியிருக்கும் இடத்தையும் பார்ப்பதற்காகவென்று கேட்டுக் கொண்டு அங்கு சென்றார்கள். சிறிது நேரத்தில் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்துச்சென்றார்கள்.

அங்கு இருவருக்கும் இ.பி.கோ.124 ஏ.செக்ஷன்படி பொதுவுடமை பிரச்சாரத்திற்காகவென்றும் இராஜ நிந்தனைக்காகவென்றும் குற்றம் சாட்டியிருப்பதாகவும் சொல்லி கைது செய்தனராம். குடிஅரசு பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் ச.ரா.கண்ணம்மாள் கைது செய்யப்பட்டதும் பெரிதும் உற்சாகத்தோடு தோழர் ஈ.வெ.ரா.அவர்களோடு உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மாலை 5.30 மணி ரயிலில் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், சப்.இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் ஹெட் கான்ஸ்டேபிளும் ஆக மூவரும் ஒரே கம்பார்ட் மெண்டில் கோவைக்கு பந்தோபஸ்துக்காக சென்றார்கள்.

அன்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏராளமான போலீஸ் ஜவான்களோடு பஸ்ஸில் தோழர்கள் ஈ,.வெ.ரா அவர்களையும், சா.ரா.கண்ணம்மாள் அவர்களையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று காவலில் (Lockup) வைத்திருந்தார்கள்.

மறுநாள் காலை கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் மிஸ்டர் G.W.வெல்ஸ் I.C.S. முன்பு ஆஜர் செய்தனர். அவர் அவர்களை ஜனவரி மாதம் 4ஆம்தேதிவரை ரிமாண்டில் வைத்திருக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, சா.ரா.கண்ணம்மாள் ஆகிய இருவர்களும் கோவை சென்ட்ரல் ஜெயிலில் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். நண்பர்கள் பலர் போய் பார்த்து வருகிறார்கள்.

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஏழாவது தடவையாக இது சமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

1922-ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு - தண்டனையடைந்தும் - 1942 ஆம் வருடம் மே மாதத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமை விலக்குக்காக செய்த சத்தியாக்கிரகப்போரில் கைது செய்யப்பட்டு தண்டனையடைந்தும், அருவிக்குத்தி ஜெயிலிலிருந்தும் அதே வருஷம் நவம்பர் மாதத்தில் மறுபடியும் தீண்டாமை விலக்குக்காக கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் கடினகாவல் தண்டனை அனுபவித்தும், மீண்டும் 11.9.1924இல் கதர் பிரசார காலத்தில் ராஜதுரோகமாய் பேசினதாய் ஈரோட்டில் கைதியாக்கப் பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டு சென்னைக்கு கூட்டிக்கொண்டு போகப்பட்டு 3 மாத காலம் வரைக்கும் விசாரணை நடந்து அந்த வழக்கை சர்க்காரே வாபஸ் வாங்கிக்கொள்ளப்பட்டதும் - பின்னர் தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்த காலத்தில் 5.8.28 இல் இ.பி.கோ.143.1.88, 2ஆவது பிரிவுப்படி ஈரோட்டில் அவர் மாளிகையிலேயே கைது செய்யப்பட்டு பின்னர் கேசு சர்க்காரால் வாய்தா இல்லாமலேயே ஒத்தி வைக்கப்பட்டதும் - மறுபடியும் இதுபோலவே சர்க்கார் - திருச்சியில் கத்தோலிக்க கிறிஸ்தமதச் சட்டப்படி இந்த வருஷ ஆரம்பத்தில் கைது செய்து விடப்பட்டதும் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

இதுமாத்திரமல்லாமல் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது 1946 வருஷம் கோவை ஜில்லா கலெக்டரும் - முனிசிபல் சேர்மனும் சேர்ந்து பப்ளிக் ரிகார்ட் ஆக்டுபடி ஒரு வழக்குத் தொடரப்பட்டு அதை சர்க்கார் வாபஸ் வாங்கிக்கொண்டதும், 1924 வருஷம் 124ஏ செக்ஷன்படி வழக்குத் தொடுத்து வாரண்டு பிறப்பித்து கைது செய்து 2, 3 மாதகாலம் தள்ளித்தள்ளி வாய்தா போட்டு விசாரணை நடந்து தோழர் ஈ.வெ.ரா. ஜாமீன் கொடுப்பதில்லை என்று எதிர்வாதம் செய்தும் கூட சர்க்கார் அந்தவழக்கையும் வாபஸ் வாங்கிக் கொண்டதும் இங்கு வாசகர்களுக்கு ஞாபகமூட்ட ஆசைப்படுகிறோம்.

இப்பொழுது கோவை சென்டிரல் சிறைச்சாலையிலிருக்கும் நமது இரு தோழர்களின் வழக்கையும் அமுல் நடத்த சென்னை சர்க்கார் பிரத்தியோகமாய் ராவ் சாகேப் கே.ராகவேந்திரா ராவ் பப்ளிக் பிராஸிகூட்டர் அவர்களை நியமித்திருக்கிறார்கள்.

வழக்கு விசாரண கோவை ஜில்லா கலெக்டர் முன்பாகவாவது செஷன்ஸ் நீதிபதி முன்பாகவாவது 04.01.1934 இல் கோவையில் நடைபெறும்.

- புரட்சி; 24.12.1933.

தோழர் ஈ.வெ.ரா. மீது

ராஜ நிந்தனை வழக்கு (Sedition Case)

கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் முன் விசாரணை

சுயமரியாதை இயக்கத் தலைவரும், குடிஅரசு ஆசிரியருமான தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீதும், அவருடைய சகோதரியும், மேற்படி பத்திரிகையின் பப்ளிஷருமான தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்கள் மீதும் இ.பி.கோ. 124(ஏ) பிரிவின்படி தொடரப்பட்டிருக்கும் வழக்கு 12-1-1934ஆம் தேதி கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட்டு தோழர் எ.ஙி.வெல்ஸ் அய்.சி.எஸ். முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாமீனிலிருந்து வரும் தோழர் கண்ணம்மாளும் வந்திருந்தார்.

சர்க்கார் தரப்பில் பப்ளிக் பிராஸிகியூட்டர் ராவ்சாஹிப் கே.ராக வேந்திரராவும், தோழர் ராமசாமிக்காக வக்கீல் தோழர் நஞ்சுண்டையாவும், தோழர் கண்ணம்மாளுக்காக தோழர்கள் டி.டி.ஆர். பிள்ளை, ஈரோடு ஈ.வி.வேணுகோபால் ஆகியவர்களும் ஆஜராகியிருந்தனர்.

தோழர் ராமசாமி சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று தன்னிடம் தெரிவித்திருப்பதால்தான் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதில்லை என்று வக்கீல் தோழர் நஞ்சுண்டைய்யா மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.

தோழர் கண்ணம்மாளின் வக்கீல் தோழர் டி.டி.ஆர். பிள்ளை மட்டும் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார்.

பப்ளிக் பிராசிகியூட்டர் ராவ் சாஹிப் கே.ராகவேந்திரராவ் பிராசிகியூஷன் கேசை எடுத்துரைக்கும்பொழுது 1ஆவது எதிரி ஒரு பிரபலஸ்தரென்றும், பத்திரிகையில் அச்சுச் சட்டத்தின்படி தன் பெயரைப் பிரசுரிக்கக் கடமைப்பட்டிருந்தும் 1ஆவது எதிரி அப்படிச் செய்யவில்லையென்றும் அவர் பத்திரிகையின் பத்திராதிபர் என்பதற்கு சாட்சியம் இருக்கிறதென்றும் 2 ஆவது எதிரிதான் பிரசுரிப்பவர் என்று கூறியிருப்பதுடன் பத்திரிகையிலும் பிரசுரித்திருக்கிறாரென்றும் கூறினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வி. ரங்கசாமி அய்யரை விசாரித்த போது அவர் கூறியதன் சாரமாவது:- நான் கோவை ஜில்லாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கின் சம்பந்தமாக பிராதை தாக்கல் செய்யும்படி எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உத்திரவிட்டார். எனக்கு முதல் எதிரியின் கையெழுத்து தெரியும். சோதனை செய்த சமயம் அவர் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

குறுக்கு விசாரணையில் சாட்சி கூறியதாவது:-

1. மேற்படி வியாசத்தின் பூர்ண மொழிபெயர்ப்பு என்று இந்த மொழிபெயர்ப்பைக் கூறமுடியாது. ஆனால் பல முக்கிய பாகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நான் குடிஅரசு பத்திரிகையை தொடர்ச்சியாக வாசிக்கும்படியானவன் அல்ல. 23.3.1933, 16.7.1933, 12.11.1933 ஆகிய தேதிகளின் குடிஅரசுப் பிரதிகளை இந்த வழக்கின் சம்பந்தமாக வாசித்திருந்தாலும் இருக்கலாம்.

இந்த வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவைகள் ஏதேனும் மேற்படி பிரதிகளில் இருக்கிறதா என்பதை கவனிப்பதற்காக அவைகளை நான் வாசித்தேன். 1932-33 ஆகிய வருஷங்களில் பிரசுரித்தவைகளை நான் வாசித்திருக்கிறேன்.

மேற்படி பத்திரிகையின் பொதுவான நோக்கத்தைப்பற்றிய ஓர் இரண்டு கேள்விகளை வக்கீல் டி.டி.ஆர்.பிள்ளை கேட்க ஆரம்பித்த போது, சர்க்கார் வக்கீல் இதை ஆட்சேபித்தார். முடிவில் மேற்படி கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டன.

தொடர்ந்து சாட்சி கூறியதாவது:- சட்ட மறுப்பு இயக்கத்தை யாவது, சர்க்காரை ஆதரித்து எழுதியதையாவது படித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. காங்கிரஸ் செயல்களையும், காந்தியடிகளின் தத்துவங்களையும் கண்டித்து எழுதியிருந்த சில வியாசங்களையும் நான் படித்திருக்கிறேன்.

அடுத்தபடியாக கவர்ன்மெண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராவ்சாஹிப் சரவண முதலியார் விசாரிக்கப்பட்டார். தான் இந்த வேலையில் 17 வருடங்களாக இருப்பதாகவும் வழக்கில் சம்பந்தப் பட்ட தலையங்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகவும் அது சரியான மொழிபெயர்ப்பென்றும் கூறினார்.

குறுக்கு விசாரணையில் தலையங்கத்தின் சாராம்சத்தை தனது கடமையில் ஒன்றாகக் கருதி கவர்ன்மெண்டு கேட்காமல் தானே மொழிபெயர்த்துக் கொடுத்ததாகவும் இந்தக் கோர்ட்டில், தான் ஆஜராக வேண்டியிருந்ததால் தலையங்கத்தின் முழு மொழி பெயர்ப்பு தயாரித்ததாகவும் தலையங்கத்தில் சில எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் தலையங்கத்தின் 5, 6, 7, 8 பிரிவுகளை தனது சாராம்சத்தில் சேர்க்கவில்லையென்றும் மேலும் காந்தி, காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்களைப்பற்றிய பாகங்களையும் தான் சேர்க்கவில்லையென்றும் தனது மொழிபெயர்ப்பு தலை யங்கத்தின் சரியான மொழி பெயர்ப்பல்லவென்று கூற முடியாதென்றும் இத்தலையங்கம் கவர்ன்மெண்டின் கல்வி இலாகாவைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறதென்றும் இந்த இலாகாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றும் தலையங்கத்தில் சில ஜனங்களின் நன்மைக்குத் தகுந்தவாறு செய்யப்படவில்லையென்று கூறப்பட்டிருக்கிறதென்றும் சொன்னார்.

வக்கீல் சொன்னதின் பேரில் சாட்சி தலையங்கத்தை மறுபடியும் வாசித்தார். வாசிப்பதிலிருந்து தனது அபிப்பிராயம் என்ன என்று மறுபடி குறுக்கு விசாரணை செய்யப்பட்டதில் சாட்சி சரியான அபேட்சகர்களைத் தேர்தலுக்கு அனுப்பும்படி தலையங்கத்தில் ஓட்டர்களைக் கேட்கப்பட்டிருக்கிறதென்றும், தலையங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கண்டனம் செய்கிறதா? அல்லவா? என்று தான் கூறமுடியாதென்றும், தற்கால அரசாங்கம் எடுபட வேண்டுமென்று வாசிப்பதிலிருந்து தெரியவருகிறதென்றும் கூறினார்.

அடுத்த ஜில்லா மாஜிஸ்டிரேட் குமாஸ்தாக்கள் தோழர்கள் ராகவேந்திரராவும், ரங்கநாதய்யரும் விசாரிக்கப்பட்டனர்.

கடைசியாக ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்து அய்யர் விசாரிக்கப்பட்டார். தான் ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலிருந்து அளிக்கப்பட்ட ஒரு சர்ச்சு வாரண்டின் காரணமாக குடிஅரசு ஆபீசைச் சோதனை செய்து சில கடிதங்களைக் கைப்பற்றியதாகவும் சோதனை 1ஆவது எதிரி பத்திரிகையின் ஆசிரியர் என்பதை நிரூபிக்கச் செய்யப்பட்டதென்றும், இந்தப் பத்திரிகையை அநேகம் பேர் வாசிக்கிறார்களென்றும் கூறினார்.

குறுக்கு விசாரணையில் 2 ஆவது எதிரியின் கடிதங்களை என்றும் தான் பார்க்கவில்லையென்றும், 2 ஆவது எதிரி ஈரோடு முனிசிபாலிட்டியில் ஒரு கவுன்சிலர் என்றும், 1ஆவது எதிரி சமூக சீர்திருத்தத்தில் வேலை செய்பவரென்பது தனக்குத் தெரியுமென்றும் கூறினார்.

சாட்சி விசாரணை முடிந்த பிறகு, தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தனது ஸ்டேட்மெண்டை தாக்கல் செய்தார். (அத்தியாயம் 46அய் பார்க்க) வழக்கு இம்மாதம் 15ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

15, 16, 17 ஆகிய மூன்று தினங்களிலும் வழக்கு விசாரணை நடந்தது. அதுசமயம் 2 ஆவது எதிரி தோழர் கண்ணம்மாளுக்காக ஆஜரான வக்கீல் தோழர் டி.டி.ஆர்.பிள்ளை தமது வாதத்தைத் தொடர்ந்து கூறுகையில், மேற்படி வியாசமானது, ராஜ நிந்தனையைக் கற்பிக்கவில்லையென்பதாகவும், பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் மாணவர்களுக்குச் சிறுவயதிலேயே மதத்தைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் அதிகமாகப் போதித்து விடுவதால், மற்ற விஷ யங்களை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு அவகாசமில்லாமல் போய்விடுகின்றதென்ற கருத்துடனேயேதான் அது எழுதப்பட்ட தென்பதாகவும், கல்வி இலாகாவை நிர்வகிக்கச் செலவழிக்கும் பணத்திற்குத் தகுந்த கைமாறு கல்வி அபிவிருத்தியில் இல்லை என்ற ஒரு வருத்த மேலீட்டினால்தான், மேற்படி வியாசத்தில் கூறப் பட்டுள்ளனவென்பதாகவும், காங்கிரசும், காந்தியும்கூட, ஏழை மக்களின் நன்மைக்காகப் பாடுபட தவறிவிட்டார்கள் என்பதாகவும், அவர்கள் முதலாளி வர்க்கத்தாரை ஆதரிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பதாகவும் கூறினார்.

மேற்படி வியாசத்தில் மற்ற ஸ்தாபனங்களைப்பற்றி கூறியிருப்பதற்குக் காரணம், சிலர் காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்து காங்கிரஸ் சட்டசபைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்தபோது அபிப்பிராய பேதப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு விலகி வெளியே வந்து வேறு பல கட்சிளை ஏற்படுத்திக் கொண்டு சட்டசபைகளுக்குச் சென்று பதவிகளை வகிக்க முற்பட்டு பதவி கிடைத்ததும் ஏழை மக்களின் நன்மைகளை அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதே என்று கூறிவிட்டு, தாம் கூறிய வற்றிற்கு, ஆதாரமாக சில ஹைகோர்ட்டு தீர்ப்புகளை எடுத்து உதாரணங்கள் கொடுத்தார்.

மற்றும் பத்திரிகைகளுக்குச் சில சுதந்திரங்கள் இருக்கின்றன வென்பதையும், மக்களின் அறிவு பல வழிகளிலும் விசாலமாய்க் கொண்டுவரும் இக்காலத்தில், இந்தியாவிற்கு இன்னும் பல சீர் திருத்தங்களைக் கொடுக்கவேண்டுமென்று பெரிய நிபுணர்கள்யாவரும் கூறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் வரப்போகும் சீர்திருத்தத் தேர்தல்களில் ஏழைகள்பால் நன்மைகொண்டு உழைக் கும்படியானவர்களை சட்டசபைகளுக்கு அனுப்பவேண்டும் என்ற நோக்கத்துடனேயே மேற்படி வியாசத்தில் முக்கியமாக எழுதப்பட் டிருக்கிறதேயொழிய வேறு எந்தவிதமான துவேஷத்தையும் மனதில் கூட மேற்படி பத்திராதிபர் நினைத்திருக்கவில்லை என்பதாகவும் எலக்ஷன்களில் எல்லாம் அநேகமாக பணக்காரர்கள் அபேட்சகர்களாக நின்று வெற்றி பெறுகிறார்களேயொழிய ஏழை மக்கள் சட்ட சபைக்குச் செல்ல பாத்தியமில்லாமல் இருக்கிறது என்றே கூறியி ருப்பதாகவும் கூறிவிட்டு தமது வாதத்தை முடித்துக் கொண்டார்.

முதல் எதிரி தோழர் ஈ.வெ.ராமசாமிக்காக ஆஜரான வக்கீல் தோழர் நஞ்சுண்டைய்யா தமது வாதத்தில், வியாசத்தில் ராஜத் துவேஷமான விஷயங்கள் சிறிதேனும் கிடையாதென்றும், சட்ட சபைகளைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயேதான் எழுதப்பட்டதாகவும் கூறி பல ஆதாரங்களை எடுத்துக்காட்டினார். வக்கீல்களின் வாதங்கள் முடிவுற்றன.

வழக்கு இம்மாதம் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபொழுது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகக் கலெக்டர் அறிவித்துள்ளார். மறுபடியும் வழக்கு 22ஆம் தேதிக்கு வாய்தா போடப்பட்டிருக்கிறது.

- குடிஅரசு, புரட்சி; 21.01.1934.

மணியம்மையார்

இராவண லீலா

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் இராம லீலா என்ற பெயரில் இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோருடைய உருவப் பொம்மைகளைக் கொளுத்தி தேசிய விழாவைப் போன்று நடத்தி வருகிறார்கள். இராமனையும் இராமாயணத்தையும் முன்னிலைப்படுத்தி இந்திய அரசியலை இந்துமதத் திற்குள் அடைக்கும் போக்கு காலங்காலமாக பார்ப்பனர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் காலந்தொட்டு இராமயண எதிர்ப்பு என்பது இம்மண்ணில் வலுப்பட்டுக் கொண்டு தான் வருகிறது. இராமாயணம் எரிக்கப்பட்டது; இராமன் படம் கொளுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து டில்லியில் இராமலீலா நடைபெற்றுக் கொண்டு வந்தது. பிரதமர் உள்ளிட்ட பெரும்பதவியில் இருப்@பாரும் அதில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர்.

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மணியம்மையார், 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 24 இல் தந்தை பெரியாரின் முதலாண்டு நினைவு தினத்தை நடத்துவதையொட்டி, டிசம்பர் 25 இல் இராமன், இலட்மணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை சென்னையில் நடத்திக்காட்டினார்.

முன்னதாக, திராவிட இனத்தின் தலைவர்களைக் கொச்சைப் படுத்தி நடக்கும் இராம லீலாவைத் தடுத்து நிறுத்தும்படியும் அதில் பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கலந்து கொள்வது மதச்சார்பின் மைக்கு எதிரானது என்றும் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு மணியம்மையார் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய இந்திரா காந்தி,

அன்புள்ள திருமதி மணியம்மை அவர்களுக்கு!

தங்களது அக்டோபர் 26 கடிதம், தந்தி ஆகியவை கிடைக்கப் பெற்றேன்.

நான் உங்களது கழகத்தின் பொதுச்செயலாளருக்கு எழுதியிருந்ததில் குறிப்பிட்டிருந்ததுபோல இராம லீலாவில் இனப் பிரச்சி னைக்கோ, குறுகிய பிராந்திய உணர்ச்சிக்கோ எந்தவித முக்கியத் துவமும் இல்லை. அந்தக் காவியம் மதத்தோடு சார்ந்துள்ள ஒன்று என்ற போதிலும், இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அது ஒரு மக்கள் விழா என்கிற தன்மையிலேயே இருக்கிறது. நமது மதச் சார்பின்மைக் கொள்கைக்கு இராம லீலா முரணானது என்ற கொள்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய மதச்சார்பின்மைக் கொள்கை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை எந்த மதத்திற்கெதிராகவும் வெறுப்புக்காட்டுவது அல்ல. மதவேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுப்பதாகும். நமதுநாட்டிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் அவர் மதவாதியாக இருந்தாலும் சரி; அல்லது கடவுள், மதத் தைப்பற்றிக் கவலைப்படாதவராக இருந்தாலும் சரி; அவருடைய நம்பிக்கையை வலியுறுத்துவதற்கோ, பின்பற்றுவதற்@கா உரிமையுண்டு. இந்த விஷயத்தில் அரசியலைப் புகுத்துவது மிகவும் துரதிருஷ்ட வசமானதாகும் என்று தமிழர்களின் உணர்வை மதிக்கத் தவறிவிட்டார்.

தமிழர்களை இழிவுபடுத்தும் இராம லீலாவைத் தடை செய்யாவிட்டால் சென்னையில் நாங்கள் இராவண லீலா நடத்துவோம் என்று 30-10-1974 விடுதலை இதழில் தோழர்களுக்கு அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டார் மணியம்மையார். அதில், நமது இலட்சியங்களை இதுநாள்வரை வெறும் அலட்சியத் தாலேயே கொன்றுவிடலாம் என்று கருதி வந்த டில்லி ஆட்சியின் தலைவர்கள், இனி அதுமுடியாது என்பதை நல்லவண்ணம் உணர்ந்து கொண்டார்கள் என்பதற்கு அடையாளம் நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு உடன் பதில் வந்திருப்பதே போதுமானது. பிரதமர் மிகப்பெரிய நிலையில் உள்ளவர் என்றாலும் நமது தெளிவான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவோ, அவருடைய மதச் சனாதன நடவடிக்கைகளை நியாயப்படுத்தவோ அவரால் முடியவில்லை. நமது நாட்டில் உள்ள நாலாந்தரப் பார்ப்பனர்களின் வாதங்களை உள்ளடக்கியதாகவே அவர் கடிதம் இருக்கிறது. நமது தலை வர் தந்தை பெரியார் அவர்கள் வகுத்த லட்சியங்கள் வெற்றியை நோக்கி நடைபோடத் துவங்கிவிட்டன என்பதற்கு இவைகள் அச்சார அறிகுறிகளாகும். எனது உடல்நிலை பற்றிக்கூட நான் கவலைப் படவில்லை. தலைவர் அருமைத் தந்தையின் நினைவுநாளை யொட்டி, நமது இயக்கத்தோழர்கள், பகுத்தறிவாளர்கள் இவர்களைக் கூட்டி மாபெரும் இன எழுச்சிப் பெருவிழாவாக இராவண லீலா நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தன்மானம் பொங்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் தாய் மார்களும் நமது தோழர்களும் அவ்விழாவில் கலந்துகொண்டு, அன்று வைக்கும் தீ என்றென்றும் அணையாத தியாக அநீதியை, மூடநம்பிக்கையைச் சுட்டெரிக்கும் பெருந்தீயாக இருக்கவேண்டும்!

தயாராகுங்கள் அருமைத் தோழர்களே! தயாராகுங்கள், கருஞ்சட்டை மாவீரர்களே கொள்கைகளுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராவீர்! எந்தவித அடக்குமுறைகளையும் நமது கட்டுப்பாடு தன்னலமறுப்பு என்ற அடக்குமுறைகளால் வெல்லுவதற்குத் தயாரா வீர்! இதனைத் தவிர வேறு வழியில்லை. தயாராவீர், தயாராவீர்! என்று அன்போடும், உரிமையோடும் இதனால் விண்ணப்பித்துக் கேட்டுக்கொள்கிறேன் என்று தோழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், 28.11.1974 விடுதலையில், வருகின்ற ஆண்டு முதல் நமது எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து வடநாட்டவர் இராம லீலாவைத் தேசிய விழாப்போன்று நடத்த முன் வருவார்க ளேயானால் நாமும் அதேமுறையில் நமது தனித் தமிழ்நாட்டுத் தேசிய விழா என்ற பெயரிலேயே தமிழகம் முழுவதிலும் இராவண லீலாவை நடத்திக் காட்டுவோம். அவர்கள் எந்த நாளில் செய்கிறார் களோ, அதே நாளில் நாமும் இங்குச் செய்யலாம். என்றைக்கு அவர் கள் அக்கொடும் நிகழ்ச்சியை, அதாவது தமிழ்ப்பெருவேந்தர் இராவணன், அவர் தம் குடும்பத்தினரைக் கொளுத்துவதைப் பெரும் விழா இராம லீலா என்ற பெயரில்நடத்துவதை நிறுத்துகிறார்களோ அன்றைக்கே நாமும் நமது விழாவினை, அயோக்கிய ராமனைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நிறுத்துவோம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்வோம்....

....தோழர்கள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை நல்கு வதோடு பெரும்அளவிற்குச் சென்னைக்குத் திரண்டு வரவேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் வேண்டிக் கொள்கிறேன். அதோடு மட்டுமன்றி நாம் நடத்தும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மத்திய சர்க்கார் உத்திரவின்பேரில் நமது சர்க்கார் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மேற்கொள்ளலாம்.அதற்கெல்லாம் நாம் தயாராகவே இருக்கவேண்டும் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன் என்று தொழர்களைகளம் காணத் தயார்படுத்தினார்.

இராவண லீலா நடப்பதற்கு முதல்நாள் தந்தை பெரியாரின் முதலாமாண்டு நினைவுநாள் நிகழ்ச்சி தொடங்கப்பெற்று சிறப்பாக நடைபெற்றது. நாடெங்குமிருந்தும் பெரியார் தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் சென்னையில் குவிந்திருந்தனர். அடுத்தநாள் நடைபெற இருந்த இராவண லீலா வேலைகளும் தயாராகியிருந்தது.

இந்நிலையில், அன்று இரவு கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் கி.வீரமணி, திருவாரூர் கே.தங்கராசு, தோலி ஆர்.சுப்ரமணியம் (தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) கா.மா.குப்புசாமி (தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர்) பொத்தனூர் க.சண்முகம் (சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்) ஏ.டி.கோபால் (வடாற்காடு மாவட்ட திராவிடர் கழக செயலாளர்) என்.செல்வேந்திரன் (திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர்) கு.இராமகிருட்டிணன் (கோவை மாவட்டத் திராவிடர் கழக அமைப்பாளர்) ஆகியோர் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

திடீரென்று எட்டு முக்கிய தோழர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இருந்தாலும் @தாழர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, அறிவித்தபடியே சென்னை பெரியார் திடலில் 25.12.1974 அன்று மாலை 6.40 மணிக்கு, முறையேய 18, 17, 16 அடி உயரத்தில் செய்யப்பட்ட இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோருடைய உருவப் பொம்மைகளை பல்லாயிரக்கணக்கான தோழர்களின் முழக்கம் விண்ணதிர ஒலிக்க மணியம்மையார் தீ வைத்துக் கொளுத்தினார்.

தந்தை பெரியார் மறைந்து விட்டாலும் அவர் ஊட்டிய கொள்கைகள் மறைந்து விடவில்லை என்பதை உலகுக்குப் பறை சாற்றும் நிகழ்ச்சியாக மணியம்மையார் நடத்திய இராவண லீலா அமைந்தது. பார்ப்பனீயத்தின் துருப்புச் சீட்டாக இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வரும் இராமன், மணியம்மையாரால் தீயில் வெந்து சாம்பலானதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்தியாவையே சென்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்து இராமனைக் கொளுத்தியது தந்தை பெரியாரின் தன்னலமறுப்பு கருஞ்சட்டைப் படை.

பார்ப்பன சனாதன இந்துமதத்தின் கதாநாயகன் இராமன் எரிந்து கரியாகிப் போனதும் மணியம்மையார் மற்றும் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் (தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர்) தஞ்சை இரா.இராசகோபால் (தஞ்சை வட்டக் கழகத் தலைவர்) குடந்தை ஆர்.பி.ஸ்டாலின் (தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) சேலம் சித்தையன், பெண்ணாகரம் பி.கே. ராமமூர்த்தி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி (மாநில மாணவர் திராவிடர் கழக அமைப்பாளர்) கரூர் வீரண்ணன் (கரூர் வட்ட தி.க, துணைச் செயலாளர்) கே.கே.பொன்னப்பா (கரூர் வட்ட தி.க செயலாளர்) து.மா. பெரியசாமி (திருச்சி மாவட்ட தி.க செயலாளர்) எஸ்.கண்ணன் (வட ஆற்காடு மாவட்ட தி.க. துணைச்செயலாளர்) ஏ.தியாகராசன் (வில்லிவாக்கம் தி.க. தலைவர்) பெரியகுளம் ச.வெ.அழகிரி (மதுரை மாவட்ட தி.க செயலாளர்) வி.ஆர்.வேங்கன் (அரூர் வட்ட தி.க. தலைவர்) ஆகிய 14 கழகத்தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கில் சென்னை எழும்பூர் அய்ந்தாவது மெட்ரோ பாலிடன் நீதிபதி 09.09.1976 ஆம் தேதி கழகத்தோழர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது 700 ரூபாய் அபராதம் விதித்தார்.

மேல்முறையீடு செய்யப்பட்டபோது, செஷன்ஸ் நீதிமன்றத் தில் 25.04.1977 ஆம் தேதி கூடுதல் நீதிபதி எஸ்.சோமசுந்தரம்,

அவர்கள் ஒரு வகுப்பாரின் மதத்தையோ அல்லது மதநம்பிக் கையையோ புண்படுத்தும் வகையில் ஒரு குரோதமான உட்கருத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றும் கருதி அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பளித்து வழக்கிலிருந்து மணியம்மையார் உள்ளிட்ட 14 தோழர்களை விடுதலை செய்தார். 

Read 1253 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.