Monday, 28 September 2020 01:43

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

Rate this item
(4 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 76

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமைலயப்பன்

 

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

குருகுலம் குருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப் பற்றி நான் தெளிவாய் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கிறேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப் பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவரகவனித்திருக்கமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.

குருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜூலு நாயுடு பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தியிருக்கிறேன். சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச் சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன். குருகுலத்திற்குத் தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடம், அவர்கள் குரு குலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும்படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் அவர்கள் நான் சொன்ன காலத்தில் நிரம்பவும் பரிதாபமாய் ஏதோ தேசத்திற்காகக் கஷ்டப்பட்டவர்கள்; அவர்கள் விஷயத்தில் நாம் இவ்வளவு கணக்குப் பார்க்கக் கூடாது; பொது ஜனங்களுக்கே இவையெல்லாம் தெரியும்; நாம் இவர்கள் காரியத்திற்குத் தடையாய் நிற்பதாய் அவர்கள் ஏன் நினைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

டாக்டர் நாயுடு சொன்னதாவது; பாரத மாதா கோவில் கட்டுகிற விஷயத்தில் நான் தெரிந்தேதான் செய்து வருகிறேன். குருகுல விஷயத்தில் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

ஸ்ரீமான் அய்யர் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிற மாதிரி ஒரு ஆசிரமம் நம் தமிழ்நாட்டிற்கு வேண்டியதுதான். நீங்கள் சொல்லுகிற மாதிரி வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால், அதை 5 நிமிஷத்தில் நிறுத்தி விட என்னால் முடியும் என்று சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் மன வருத்தத்தையும் காட்டிக்கொண்டு சிநேக முறையில் சில கடின பதங்களை உபயோகித்தேன். பிறகு கொஞ்ச நாளைக்குள் திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வ.வே.சு. அய்யர் அவர்கள் மறுபடியும் 5000 ரூபாய் காங்கிரஸிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, நானும் ஸ்ரீமான் தண்டபாணிப்பிள்ளை அவர்களும் கண்டிப்பாய்ப் பணம் கொடுக்கக்கூடாது; முன் கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது என்று சொல்லி அங்கு நடக்கும் சில கொடுமைகளை எடுத்துச்சொன்னோம்.

ஸ்ரீமான் வ.வே.சு. அய்யர் அவர்கள் நான் அப்படிச் செய்வேனா? அந்த இடம் நிரம்பவும் வைதீகர்கள் நிறைந்துள்ள இடமானதாலும், சமையல் செய்கிறவர்கள் ஒப்புக் கொள்ளாததாலும் இவ்வித வித்தியாசங்கள் இனிக் கொஞ்ச நாளைக்கு இருக்கும். சீக்கிரம் மாற்றி விடுகிறேன். அதுவரையில் நானும் சாதம் சாப்பிடுவதில்லை. அதற்காகத்தான் நிலக்கடலை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரும் போது, ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தாங்கள் நிலக் கடலை சாப்பிடுவதால் நாயக்கர் சொல்லுகிற ஆட்சேபனை தீர்ந்து போகுமா? இவ்வளவு தூரம் இவர்கள் சொல்லும்படியாய் வைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தங்கள் பேருக்குக் கெடுதல் வந்து சேரும் என் குழந்தைகளைக் கூட ஆசிரமத்திற்கு அனுப்பலாம் என்றிருந்தேன். இவைகளைக் கேட்டபின் நானும் அனுப்பப் போவதில்லை. இந்த ஆவ லாதிகளைச் சரி செய்து விட்டு, மேல் கொண்டு காங்கிரஸைப் பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் நாயுடு, எனக்கும் இம்மாதிரி ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சீக்கிரத்தில் ஆவலாதிகளுக்குக் காரணமான வித்தியாசங்களையெல்லாம் ஒழித்து விடுவதாகச் சொன்னார்.

ஸ்ரீமான் அய்யர் அவர்கள் இவ்வித வித்தியாசமெல்லாம் பாராட்டுகிறவர்கள் அல்ல. ஆனால், எப்படியோ திருநெல்வேலி பிராமணர் செல்வாக்குள்ள இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டுப் போய் விட்டது; ஆனாலும் சீக்கிரத்தில் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சொல்கிறபடி நடக்கும் என்கிற நம்பிக்கையின் மேல்தான் நான் சும்மாயிருக்கிறேன் என்று சொன்னார்.

நான், இவ்வளவையும் ஒழுங்கான பிறகுதான் மேல் கொண்டு ரூபாய் கொடுப்பதைப் பற்றி யோசிக்கப்படும். இந்த நிலைமையில் யோசித்தால் முன் ரூபாய் கொடுத்ததே தப்பு. தங்களுக்கு ரூபாய் கொடுக்கத் தீர்மானித்த மீட்டிங்களில் நான் இல்லை. இருந்திருந்தால் சரியானபடி ரிக்கார்டு செய்து கொண்டுதான் ரூபாய் கொடுத்திருப்பேன்.

அதுசமயம் செக்கில் கையெழுத்துப் போடும் வேலை எனக்கென்று ஒதுக்கப்பட்டு வைத்திருந்தும், இந்த ஒரு செக்குக்கு மாத்திரம் ஏற்பாட்டுக்கு விரோதமாய் எப்படியோ என் கூட்டுக் காரியதரிசியால் கையெழுத்துப் போட்டு செக்கு வெளியாகிப் பணம் வெளிப்பட்டு போய்விட்டது. கிரமமாய்ப் பார்த்தால் அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க வேண்டும் என்று சொன்னேன். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் மன வருத்தத்துடன் உலகில் எல்லாரும் தர்மம் செய்வார்கள். நமது நாயக்கரோ செய்த தர்மத்தைத் திருப்பி வாங்க வேண்டுமென்கிறார் என்று சொன்னார்கள்.

நிற்க; பின்னால் கொஞ்ச நாளைக்குள்ளாகவே மறுபடியும் 'தமிழ்நாடு' பத்திரிகை குருகுலத்தைப் பற்றியே விளம்பரங்களும் வசூல் குறிப்புகளும் பிரசுரித்து வந்தது. இதனால் இழிவுப்படும் பிராம்ணரல்லாதாரே தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் பணம் கொடுத்து வருவதாய் அறிந்து டாக்டர் நாயுடு, இந்த மாதிரி தமிழர்களின் இழிவுக்காக நடத்தப்படும் குருகுலத்திற்குப் பண உதவி செய்யும்படி எழுதுகிறார். அதனால் ஏமாந்த வெகுஜனங்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். இதைப்பற்றிப் பல தடவைகளில் நான் சொல்லியும் கேட்கவில்லை என்று பலபேரிடம் நான் டாக்டர் நாயுடு பேரில் குற்றம் சொல்லிக்கொண்டு அதற்கு ஓர் எண்ணத்தையும் கற்பித்து வந்தேன். டாக்டர் நாயுடுவுக்கும் எனக்கும் பொதுவான சிநேகிதர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது டாக்டர் நாயுடுவிடம் உங்களுக்கு ஏன் தப்பபிப்பிராயமிருக்கிறது? நீங்கள் இரண்டு பேரும் இப்படி இருக்கலாமா என்று கேட்டார். நான் குருகுலத்தை விளம்பரம் செய்தைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லிக் குருகுலத்திலிருந்து வெளியான ஒரு பையன் சொன்ன சில விஷயங்களையும் சொல்லி மலேயா நாட்டில் குருகுலத்திற்குத் தமிழர் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாய் வெளியான ஒரு பத்திரிகையையும் காட்டினேன்.

அதோடு தமிழ்நாட்டு சுயராஜ்யக்கட்சி சூழ்ச்சிகளையும் சொல்லி அதையும் டாக்டர் நாயுடு ஆதரிக்கிற விதத்தையும் சொன்னேன். அதற்கவர் டாக்டர் நாயுடு அவர்களுக்கு இவ்விஷயங்களை எடுத்துச் சொல்லி வேண்டியது செய்கிறேன். ஆனால் சில பிராமணர் தந்திரம் தங்களுக்குத் தெரியாததா? டாக்டர் நாயுடு இதை வெளிப்படுத்தினார், வேறு சில பிராமணரல்லாதாரையே டாக்டர் நாயுடுவுக்கு விரோதமாய்க் கிளப்பிவிட்டு நமக்குள்ளேயே சண்டை பிடித்துக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டுத் தாங்கள் காரியத்தை நடத்திக்கொள்வார்களே? பிறகு எழுதினவர்தான் தனியாக நிற்க வேண்டும் என்று சொன்னார். உடனே நவசக்தி முதலிய பிராமணரல்லாத பத்திரிகைகள் எல்லாம் கண்டிப்பாய் நாயுடுவை ஆதரிக்கும். அநேக பிராமணரல்லாத பத்திரிகைகள் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் யார் முன்னே எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் இந்த விஷயத்திற்கு எதிரிடையாய் யோக்கியப் பொறுப்புள்ள பிராமணரல்லாத பத்திரிகைகளோ, பிராமணரல்லாத பிரமுகர்களோ முன்வரமாட்டார்கள் என்பது எனது உறுதி என்று சொல்லி உடனே குருகுல நடவடிக்கையை வெளிப்படுத்தும்படி மேற்படி நண்பரைக் கேட்டுக் கொண்டேன். அதற்கேற்றாற்போல் டாக்டர் நாயுடுவுக்கும், குருகுலவாசி ஒரு வரிடமிருந்து ஒரு கடிதமும், மலேய நாட்டிலிருந்து ஒரு கடிதமும் வந்திருந்த சமயமும் ஒத்துக் கொண்டது. உடனே உண்மையை வெளியிட்டார். நானும், சில பிராமணரல்லாத பத்திராதிபர்களுக்கு இது விஷயத்தில் நியாயம் செய்யும்படி எழுதினேன். அவர்களும் மற்றும் நான் எழுதாத சில பத்திரிகைக் கனவான்களும் இந்த முதல் வியாசத்தை தமிழ்நாடு பத்திரிகையிலிருந்து தங்கள் பத்திரிகையில் எடுத்துப் போட்டும், மற்றும் தங்கள் மனசாட்சிக்கொப்ப ஆதரித்தும் வந்தனர். இவை எல்லாவற்றிலும் தனவைசிய ஊழியன், குமரன் இவ்விரு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தங்கள் மனசாட்சிப்படி தைரியமாய் உதவி செய்ததைத் தமிழ்மக்கள் மறக்க முடியாது. இவற்றின் பலனாய் தமிழர் வசிக்கும் வெளிநாடுகளிலும் இவ்விஷயங்கள் பரவி தற்காலம் குருகுல விஷயமாய் மாத்திரம் அல்லாமல் பிராமணர், பிராமணரல்லாதார் என்பாருக்குள் வெகுகாலமாய் அடங்கிக்கிடந்த வேதனைகள் எல்லாம் வெளிக்கிளம்பின. இவைகளையெல்லாம் நான் திருவண்ணாமலையில் கூடிய தமிழ்நாடு மாகாண கான்பரன்சில் தலைமை வகித்த காலத்தில் முகவுரையிலும், முடிவுரையிலும் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறேன்.

அதற்கேற்றாற் போல் மகாத்மாவும், இவை ஒழியாமல் வெறும் ஒத்துழையாமை ஒத்துழையாமை என்று வாயில் சொல்லிக் கொண்டிருப் பதில் என்ன பிரயோஜனமென்று கருதி, கதர், தீண்டாமை இவை இரண்டும் மாத்திரம் நடக்கட்டும். மற்றதெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடலாம் என்று பெல்காம் காங்கிரஸில் காலம் குறிப்பிடாமல் ஒத்துழை யாமையை ஒத்தி வைத்துவிட்டார். இனி ஒத்துழையாமையை ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லிக் கொள்ளலாமே ஒழிய, காங்கிரசில் காரியத்திலோ, தத்துவத்திலோ, கொள்கையிலோ இல்லை.

இத்தோடு கூடவே தேவஸ்தான ஆக்ட் என்று சொல்லப்படும் இந்துமத தர்மபரிபாலன மசோதா ஒன்றும் வந்தது. இதைப்பற்றியும் ஜனங்கள் ஒன்றும் அறியாதபடி மதம் போய்விட்டது. மடம் போய்விட்டது. கோயில் போய்விட்டது என்று வெறும் பச்சை அழுகை அழுது கொண்டு மந்திரிகளையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மாத்திரம் திட்டுவ தோடல்லாமல், அந்த மசோதாவையே தொலைத்துப்போட பிராமண பத்திரிகைகளும் பிராமண ராஜீயத் தலைவர்கள் என்போர் பலரும் தங்கள் பத்திரிகைகளில் எழுதவும், மேடைகளில் நின்று பேசவுமாய் அட்டகாசம் செய்து வந்தனர். இதை நம்பிக் கொண்டு பிராமணரல்லாத ராஜீயத் தலைவர் என்போர்கள் பலரும் ஒத்துப்பாடிக் கொண்டு வந்தார்கள்.

இதையும் பார்த்துச் சகிக்காமல் ஒத்துழையாமையோ ஒத்திப் போடப்பட்டாய் விட்டது. இனி இதைப் பற்றிச் சும்மா இருப்பது ஒழுங்கல்லவென்று நினைத்தே டாக்டர் நாயுடுவுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் நான் காயலாய்ப் படுக்கையில் இருந்து கொண்டே சொந்தமாய் இனி நீங்கள் வாய்மூடிக் கொண்டிருக்கக்கூடாது, மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியையும் பிராமணர்கள் வைவதைப்பற்றி நமக்கு ஒன்றும் அவ்வளவு வருத்தமில்லை. ஆனால் நல்ல சட்டத்தைப் பாழடிக்கப் பார்க்கிறார்கள். இதை நீங்கள் சகித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கண்டிப்பான கடிதம் ஒன்று எழுதிவிட்டு, நானும் என் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்த திராவிடன் பத்திராதிபருக்கு பதில் எழுதுகின்ற முறையில் எழுதிவிட்டேன். டாக்டர் நாயுடுவும் உடனே தனது அபிப்பிராயத்தை எழுதிவிட்டார். மறுபடியும் சில பிராமணர்கள் சென்னையில் ஒரு கூட்டம் கூட்டி மசோதாவைக் கட்டுப்பாடாய் எதிர்ப்பதற்கென்று ஒரு சபை அமைத்ததைப் பார்த்து ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒன்று எழுதி எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களுக்கும் அனுப்பினேன். அதற்கு இவ்விரண்டு தலைவர்களும் பதிலெழுதவேயில்லை. (அதன் காரணத்தைப் பற்றிச்சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம்) மாறுதல் வேண்டாதார் என்று சொல்லப்படும் அநேக பிரமுகர்கள் இதை ஆதரித்து இது சம்பந்தமான எவ்வித பிரச்சாரத்திற்கும் தாங்கள் உதவி செய்வதாய் எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.

பிறகு, டாக்டர் நாயுடு குருகுலத்தைப் பற்றி வெளியில் பிரச்சாரத்திற்குப் போயிருந்த காலத்தில் அங்கு நடந்த சம்பவங்களும், பத்திரிகைகளில் வெளிவந்த சம்பவங்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்கூட்டம் கூட்ட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டன. அந்தக்கூட்டத்திலும் பலவித தீர்மானங்கள் வந்தன. அவைகளில் ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக் கூட்டத்தாரால் கொண்டு வரப்பட்டது. அதாவது குருகுலம் ஒரு குறிப்பிட்ட கொள்கைப் படி நடக்காததால் அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 5000 ரூபாய் கொடுத்ததற்காக வருந்துகிறது என்பது. இது நிர்வாகக் கமிட்டியில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் அவர்களால் திருத்திச் சொல்லப்பட்டு எழுதியது.

இரண்டாவது, ஆசிரம நிர்வாகங்களில் மற்றவர்கள் பிரவேசிக்கக் கூடாது. ஆச்சாரியார் சொல்லுகிறபடியே விட்டுவிடவேண்டும். ஆனால், இவ்வளவு தூரம் குருகுல விஷயம் விவாதத்திற்கிடமாய் விட்டதால் அங்கு சமபந்தி போஜனம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுபோல் ஒரு திருத்தப்பிரேரேபனை ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு டாக்டர் ராஜன் அவர்களால் ஆமோதிக்கப்பட்டது.

மூன்றாவது, மனிதன் பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளக் கூடாது. இந்தக் கொள்கைகளை தேசீய விஷயங்களிலும் தேசீய ஸ்தாபனங்களில் பொருள் பெற்று தேசிய உணர்ச்சியுடன் நடத்தி வரும் குருகுலத்திலும் நடைபெறும்படிச் செய்ய வேண்டுமென்றும் இது நடைபெற சப் கமிட்டி ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்றும், என்பது போன்ற ஒரு திருத்தப் பிரேரோபனைஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்டது. இது நானும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுமாய்ச் சேர்ந்து எழுதப்பட்டதாகும்.

இவைகளில் ஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்கள் தீர்மானம்தான் நிறைவேறியது. உடனே, டாக்டர் நாயுடுவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்கமிட்டிக்கு நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் நடக்கும் போதும், நடந்து முடிவடைந்து கொண்டிருக்கும் போதும் சிலர் ராஜினாமா செய்து விட்டார்கள். பிறகும் இவர்களைப் பின்பற்றி 4, 5 பேர் ராஜினாமா கொடுத்துவிட்டார்கள். இதற்குப் பிறகு குருகுல வாதம் ஒரு விதமாய் முடிவு பெறுமா என்கிற கவலையுடன் நானும், ஸ்ரீமான்கள் எஸ். ராமநாதன், ஏ.வி.தியாகராஜா ஆகிய மூவருமாய்ச் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்கமிட்டியாரால் நியமிக்கப்பட்ட சப் கமிட்டியார் என்கிற தன்மையில் ஒரு தடவையும், குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்த தமிழர் கூட்டத்து நிர்வாக சபை யார் அழைப்புக்கிணங்கி, அவர்களுடன் ஒரு தடவையுமாக இரண்டு தடவை குருகுலத்திற்குப் போயும் வந்திருக்கிறேன். இதன் ரிப்போர்ட்டுகள் பின்னால் வரும். வாசகர்களும், நண்பர்களும் இதிலிருந்து குரு குல விஷயமாய் எனதபிப்பிராயத்தையும் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளக்கூடும் என்று நினைக்கிறேன்.

- குடிஅரசு; 12.07.1925.

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசிய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும் படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும்.

அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்து கொண்டு வந்திருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள பிராமணரல்லாதார் பத்திரிகைகளும், பிராமணரல்லாதார் தலைவர்களும் எவ்வளவோ உதவி செய்ததின் பலனாய் முடிவில் வெற்றி கிடைத்ததோடு தமிழ்நாட்டிற்கே ஓர் புதிய உணர்ச்சியையும் உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும் கலைந்து போய் விட்டது என்பது உலகமே அறியும்.

அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல், குரு குலத்தால் வயிறு வளர்த்த சில பிராமணர்கள், குறிப்பாய் சிறீமான் தி.ரா. மகாதேவய்யர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் அனுப்பியிருக்கிறார். அதில் குருகுலம் ஒழுங்காய் நடந்து வருகிற பாவனையாகவும், தானே அதில் ஆச்சாரியாராய் இருக்கிறது போலும், சுயராஜ்யக்கட்சியாரின் தேசீயத்திட்டம் போல் கல்விக்கு ஏதோ பல திட்டங்கள் வைத்திருப்பது போலும் பாசாங்கு செய்து பிள்ளைகளை அனுப்பும்படி பெற்றோர்களைக் கேட்கிறார். பிராமணரல்லாத பெற்றோர்கள் இம்மோச விளம்பரத்தை நம்பி தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொடுத்து ஏமாந்து போகாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குருகுலம் அங்கு நன்றாய் நடந்து கொண்டிருப்பதாய் சிறீமான் வ.வே.சு. ஐயர் சொல்லிக்கொண்ட காலத்திலேயே நாம் அங்கு போயிருந்த சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் நடத்தப்படும் முறையையும் பார்த்தோம். சிறீமான் மகாதேவய்யர் என்று சொல்லப்படுகிறவரும், அவர் குழந்தைகளும் கூனி முறை என்பதாகப் பேர் வைத்துக்கொண்டு தாங்கள் பழங்களும், தேங்காயும், வெல்லமும், கரும்பும், மாம்பழமும், முந்திரிப் பருப்பும், பேரீச்சம் பழமும், சாரப் பருப்பும் போன்றவைகளைச் சாப்பிட்டுக்கொண்டு ஆஸ்ரமத்தில் படிக்க வந்த மற்ற பிள்ளைகளுக்கு, பிள்ளை ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 வரையிலும் பெற்றுக்கொண்டு மாதம் ஒன்றுக்கு 4 ரூபாய் கூடப் பெறாத மாதிரியில் கஞ்சி சாதமும் அரிசிக்களியும், உப்பு, காரமில்லாத அரிசி உப்புமாவும், புளியில்லாத குழம்பும் இம்மாதிரி பதார்த்தங்கள் ஜெயிலைவிட மோசமான கவலை யற்ற நிலையில் பக்குவஞ்செய்து போட்டுக்கொண்டு இருந்ததை நாமும் நம்முடன் வந்த மற்றும் சில நண்பர்களும் நேரிலேயே பார்த்தோம்.

ஆதலால், சுயராஜ்யம் என்கிற பெயரினால் ஜனங்கள் ஏமாந்து போய் அதற்குள்ளிருக்கும் தந்திரங்களை அறியாமல் சுயராஜ்யக் கட்சிக்குள் விழுவதுபோல் குருகுலம், ஆஸ்ரமம் என்கிற பெயர்களினால் பெற்றோர்கள் ஏமாந்து போய் அதன் இரகசியத்தை அறியாமல் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பலி கொடுக்காதிருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பொது ஜனங்களின் நன்மையை உத்தேசித்து மனதார அறிந்ததையும், நேரில் பார்த்ததையும் தான் இங்கு எழுதியிருக்கிறோமே தவிர, மற்றபடி வேறு எந்தக் காரணத்தையும் உத்தேசித்தல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சேரமாதேவி குருகுலம்

காலஞ்சென்ற வ. வே.சு.அய்யரால் ஸ்தாபிக்கப்பட்ட சேரமாதேவி ஆசிரமம் இம்மாதம் 7 - ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள பல பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆசிரமத்தை நடத்தும் பெரிய பொறுப்பை, சென்னை கோகுல அரிஜன காலனி ஸ்தாபகரான பத்தமடை பி.என்.சங்கரநாராயணய்யர் பலர் வேண்டுகோளின்படி எற்றுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால், ஆசிரமப் புனருத்தாரண வேலை, சபை கூட்டும்போதே கண்ணில் குட்டிக்கொண்ட மாதிரியே ஆரம்பமாகியிருக்கிறது. 1934 முதல் நாளிதுவரை ஆசிரமத்தில் நடந்த வேலைகளைப் பற்றி யாரோ ஒரு எல்.என். கோபால்சாமி ஒரு அறிக்கையைப் படித்தாராம். அப்பால் ஆசிரமம் நடத்துவதைப் பற்றி ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாம்.

தோழர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளையும், தூத்துக்குடி ராமசாமியும் பேசுகையில், "வெளியில் பல பேர்களின் அபிப்பிராயத்தில் இந்த ஆசிரமத்தில் முன் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் வரா வண்ணம் தடுக்க, தனி நிலைமையில் ஒருவரிடம் ஒப்புவிப்பதைவிட சிலரைச் சேர்த்தே நிர்வாகம் நடத்தச் சொல்வது சிலாக்கிய" மென்றும், மேலும், ஆசிரமத்துக்குத் தலைமை வகிக்க ஒரு பிராமணரல்லாதார் இருந்தால் நலமென்றும் கூறினார்களாம்.

ஆசிரமத்தின் பூராச்சொத்தையும் நிர்வகிக்க காந்தியாரிடம் அதிகாரம் பெற்ற திருச்சி டாக்டர். டி. எஸ். எஸ். ராஜன் பேசுகையில் " இம்மாதிரி தேசிய ஸ்தாபனத்தைப் புனருத்தாரணம் செய்யும் விஷயத்தில் சமூக வித்தியாசங்களைப் புகுத்தியதைப் பற்றி வருந்துவதாகவும், ஆசிரமம் நடைபெற வழியில்லாமல் திகைக்கும் போது சென்னை சங்கர நாராயணய்யரைக் கேட்டு அவர் ஏற்றுக் கொண்டிருப்பதினால் ஒரு வருஷத்துக்கு அவர் நடத்த எல்லோரும் இசைந்து ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும், அப்படி ஒத்துழைக்க சம்மதமில்லாவிட்டால் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் ஒரு வருஷம் கழித்து மறுபடியும் இங்கேயே ஆசிரமத்தில் கூட்டம் கூடி, நிலைமை திருப்திகரமாயில்லாவிட்டால் வேறு ஏற்பாடு அப்பால் செய்யலாமென்றும் தெரிவித்தாராம். தோழர் கூத்தநயினார் பிள்ளை " வகுப்பு வாதத்தை "க் கிளப்பியது "தினமணி" காற்றாடிக்கும் பிடிக்கவில்லை. தோழர் கூத்தநயினார் பிள்ளையைப் பற்றி காற்றாடி குத்தலாக எழுதியிருக்கிறது. "பிராமண சமூகத்திலும் பிற்போக்காளரானதால் சாகிப்களும், ராஜா பகதூர்களும் இல்லாமலில்லை. அதனால் அந்த சமூகத்தின் பொதுக்குணத்தைச் சந்தேகித்துப் பேசுவது நேர்மையாகாது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்புவாதம் பேசுவதால் பிராமணரல்லாதார் சமூகமே வகுப்புவாதிகளென்று சொல்ல முடியுமா?" என்று காற்றாடி கேட்கிறது.

தேசிய ஸ்தாபன விஷயத்தில் வகுப்புவாதத்தைப் புகுத்தக் கூடாது என்பது உண்மையானால் - ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்புவாதம் பேசுவதால், பிராமணரல்லாதாரெல்லாம் வகுப்புவாதிகள் அல்லவென்பது மெய்யானால், காங்கிரஸ்காரர் அபிப்பிராயத்தில் வகுப்புவாதியல்லாத ஒரு பிராமணரல்லாதாரிடம் சேரமாதேவி குருகுலத்தை ஒப்பு விக்கக் கூடாதா? காங்கிரஸ் ஸ்தாபனங்களும், கதர், தீண்டாமை ஒழிப்பு இந்திப்பிரச்சார ஸ்தாபனங்களும் பிராமணர்கள் ஆதிக்கத்திலும், தலை மையிலும் இருந்து வருகையில் சேரமாதேவி ஆசிரமத்தையாவது ஒரு பிராமணரல்லாதார் நிர்வாகத்தில் விட்டு ஒரு பரிட்சை பார்க்கக்கூடாதா?

"மகத்தான தியாகங்கள் செய்த - இன்னும் செய்யத் தயாராயிருக்கிற பிராமணர்கள் இன்று காங்கிரசில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்தக் கூடிய முறையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் பேசலாமா?" என்று காற்றாடி மீண்டும் கேட்கிறது. ஆனால், மகத்தான தியாகங்கள் செய்த - இன்றும் செய்யத் தயாராயிருக்கிற பிராமணரல்லாதார் ஒருவராவது காங்கிரசில் இல்லையா? தியாகமும், காங்கிரசும், தேசியமும் பிராமணர்களுக்கு மட்டும் காபிரைட்டா? ''வகுப்பு வாதம் பேசாதே! பேசாதே!" என்று கூச்சல் போட்டுக் கொண்டே காங்கிரஸ் பிராமணர்கள் எல்லா ஸ்தாபனங்களையும் பார்ப்பன ஆதிக்கத்தில் ஆக்குவதுதான் தேசியமோ?

இப்பொழுதாவது தோழர் கூத்த நயினார் பிள்ளைக்குச் சுயமரியாதையுணர்ச்சி வந்தது போற்றத்ததக்கதே. இந்த சம்பவம் மூலம் பார்ப்பனர்களின் வகுப்புவாதத்தைக் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் உணருவார்கள் என்று நம்புகிறோம். ஆசிரமம் நடைபெற வழியில்லாமல் இருக்கையில் சென்னை சங்கர நாராயணய்யரைக் கேட்டுக் கொண் டதாகவும், அவர் பெரிய மனது வைத்து ஒப்புக் கொண்டதாகவும், டாக்டர் ராஜன் கூறுகிறார்.

சேரமாதேவி குருகுல நிர்வாகத்துக்கு ஆள் தேட சென்னைக்கு ஏன் செல்லவேண்டும்? திருநெல்வேலி ஜில்லாவில் வேறு ஆள் கிடையாதா? சென்னையிலிருக்கும் பத்தமடை பிராமணர் ஒருவர்தானா ஆகப்பட்டார்? சேரமாதேவி குருகுலம் அரசியல் சம்பந்தமற்றதென்றும், எல்லாக் கட்சியாருடைய ஒத்துழைப்பும் அதற்குத் தேவையென்றும் ஒருவர் கூறினார். அப்படியானால் பத்திரிகையில் ஏன் விளம்பரம் செய்திருக்கக் கூடாது? வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருக்கும் இக்காலத்திலே ஆசிரம் நிர்வாகத்தை ஏற்று நடத்தத் திறமையுடைய பட்டதாரிகள் கூட முன்வரக்கூடுமே.

வ.வே.சு அய்யர் ஊரார் பணத்தை வசூல் செய்து ஆசிரமம் ஸ்தாபித்தார். அதன் நிருவாகப் பொறுப்பை மகாதேவய்யர் கத்தியவார் பனியா காந்தியிடம் ஒப்படைத்தார். அவர் ஆசிரமச் சொத்தை நிருவாகம் செய்யும் பூரா அதிகாரத்தையும் ஸ்ரீரங்கம் அய்யங்கார் டாக்டர்டி. எஸ். எஸ். ராஜனிடம் விட்டுக்கொடுத்தார். ஸ்ரீரங்கம் அய்யங்கார் இப்பொழுது பத்தமடை அய்யரை சேரமாதேவி ஆசிரமத்துக்கு சர்வாதிகாரியாக்கி விட்டாராம். பாருங்கள் ஊரார் பணம் படும்பாட்டை!

- குடிஅரசு; 13.06.1937.

குருகுலம் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே

திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியில் காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்டு வந்த பரத்துவாச ஆசிரமம் என்றும், குருகுலம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வந்த ஒரு ஸ்தாபனத்தைப் பற்றிய கதைகள் பூராவும் தென் இந்திய மக்களுக்கு ஞாபகமிருக்குமென்றே கருதுகிறோம். இந்தக் குருகுலக் கதைதான் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, பி. வரதராஜூலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் முதலியவர்கள் பார்ப்பனர்களுடைய அதிருப்திக்காளாகவும் காங்கிரசில் இருந்து விலகவும் நேர்ந்த காரணமாகும்.

காங்கிரஸ் உதவி

இந்தக் குருகுலமானது " தேச பக்தர்களையும் தேசிய வீரர்களையும் உற்பத்தி செய்வதற்கு ” ஆரம்பிக்கப்படுகிறது என்று தோழர் வி.வி.எஸ். அய்யர் ஆரம்பித்தபோது சொன்ன காரணமாகும். அதற்கு ஆக மாகாண காங்கிரசை உதவித்தொகை கேட்டபோது மாகாண காங்கிரஸ் கமிட்டியானது ஒரே அடியாய் பத்து ஆயிர ரூபாய் சாங்கிஷன் செய்துவிட்டது. ஏனெனில், அந்தக்காலத்தில் திலகர் நிதிப்பணம் ஒட்டாஞ் சல்லி போல் குவிந்து கிடந்தது. யாராவது ஒரு பார்ப்பனர் விண்ணப்பம் போட வேண்டியதுதான் தாமதம். உடனே சாங்கிஷன் ஆகிவிடும். அந்தக்காலத்தில் தோழர்கள் ஈ. வெ. ராமசாமியும் ஒரு கே.எஸ்.சுப்பிரம்ணிய அய்யரும் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசிகளாய் இருந்தார்கள். இப்படி இருவர் கூட்டுக் காரியதரிசிகளாய் இருந்ததில் இவர்களுக்குள் காங்கிரஸ் வேலை பிரித்துக் கொள்ளப்பட்டது. அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமிக்குப் பிரச்சாரமும், செக்கில் கையெழுத்து போடும் வேலையும் தோழர் சுப்பிரமணிய அய்யருக்கு மற்ற கடிதப் போக்குவரத்தும் கடிதங்களுக்கும் ஆதாரங்களுக்கும் கையெழுத்துப் போடும் வேலையுமாக பிரித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வ.வே.சு. அய்யர் குருகுலத்துக்குச் சாங்கிஷனான ரூபாய் பத்து ஆயிரத்துக்கு தோழர் ஈ. வெ. ராமசாமியை செக்கு கேட்டபோது தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ரூபாய் கொடுப்பதில் குருகுல விதிகள் அடங்கிய ஆதாரமும் அந்தப்படி நடத்துவதாக ஒப்புக் கொண்ட ஆதாரமும் கொடுத்துவிட்டு செக்கு வாங்கிக் கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டார். இதற்குத் தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் சம்மதித்து போனவர் ராமசாமிக்கும் தெரியாமல் கூட்டுக் காரியதரிசியிடம் 5,000 ரூபாய் செக்கு வாங்கிக் கொண்டு போய்விட்டார். இந்த விபரம் 4 நாள் பொறுத்து தோழர் ஈவெரா.வுக்குத் தெரிய வந்த உடன், ஆபீசில் கூட்டுக் காரியதரி சிகளுக்குள் அபிப்பிராய பேதம் வந்து ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தை இல்லாத அளவுக்கு மனஸ்தாபம் வந்து விட்டது.

மறுஉதவி மறுத்த காரணம்

ஆகவே, மறு 5,000 ரூபாயை ஈ.வெ.ரா.வைக் கேட்க முகமில்லாமல் போனதாலும் நிர்வாகக் கமிட்டியில் நியாயம் கிடைக்காதென்று கருதியதாலும் தோழர் வ.வே.சு. அய்யர் ஒரு மாகாணக் கமிட்டிக் கூட்டத்தில் டாக்டர் டி. எஸ். எஸ். அவர்கள் வீட்டில் "முன் தீர்மானிக்கப்பட்ட 10,000 ரூபாயில் 5,000 ரூபாய் போக பாக்கி 5,000 ரூபாய் இன்ன மும் கொடுக்கப்படவில்லை" என்று புகார் கூறி உடனே கொடுக்கும்படி உத்தரவு போட வேண்டுமாய் ஒரு தீர்மானத்தை ஒரு பார்ப்பனரைக் கொண்டு பிரேரேபணை செய்யும்படி செய்தார்.

அதுசமயம் தோழர் ராமசாமி குருகுல நிபந்தனைகளும் அந்தப் படி நடத்தி வருவதாய் உத்தரவாதமும் வந்தால் ரூபாய் கொடுக்கப்படும் என்றும், முன் வாங்கிக் கொண்ட 5,000 ரூபாயே தன் தகவல் இல்லாமல் முறைக்கு மாறாகக் கொடுக்கப்பட்டு விட்டதென்றும் எடுத்துக் கூறினார்.

அதுசமயம் கூட்டதில் சிறிது அசமாதானம் காணப்பட்டதுடன் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மீதும் சிலருக்கு அதிருப்தி இருப்பதாய்க் காணப்பட்டது. ஏனெனில், தோழர் வ.வே.சு.அய்யர் அவர்களுக்கு அப்போது அவ்வளவு செல்வாக்கு இருந்ததும் டாக்டர் ராஜன், தோழர் சி. ராஜ கோபாலாச்சாரியார் முதலியவர்கள் அவரிடத்தில் அவ்வளவு மரியாதை வைத்திருந்ததும் காரணமாகும்.

காங்கிரசில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி

ஆரம்பம் ஆனபோதிலும் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் "நிபந்தனை இல்லாமல் முன் கொடுத்ததே தவறு'' என்றும் "இப்போது மறுபடியும் கொடுக்க முடியாது'' என்றும் " வேண்டுமானாலும் முன்போலவே, வேறு ஒரு காரியதரிசி கையெழுத்துக் கொண்ட செக்கு வாங்கிக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை" என்றும் கோபமாகச் சொல்லி உட்கார்ந்தவுடன் அந்தக் கூட்டத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வாசனை அப்போதுதான் முதன் முதலாய் கிளம்ப ஆரம்பித்து விட்டது.

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தோழர் டாக்டர் வரதரா ஜூலு அவர்கள் " அய்யர்வாள் குருகுலத்தில் சாப்பாட்டில் ஜாதி பேதம் பாராட்டுவதாக எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால், நான் அவற்றை தமிழ்நாடு (வாரப்பதிப்பு)வில் பிரசுரிக்கவில்லை ” என்று சொன்னார்.

மற்றொருவர் (அதாவது குருகுலத்துக்குத் தன் பிள்ளையை படிப்பிக்க அனுப்பியிருப்பவர்) எழுந்து சாப்பாட்டில் மாத்திரம் ஜாதி வித்தியாசம் இல்லை. படிப்புச் சொல்லிக் கொடுப்பதிலும் காட்டப்படுகிறது'' என்றார். இவர் இப்போதும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்தில் இருக்கிறார்.

மற்றொருவர் குருகுலத்தில் வாத்தியாராய் இருப்பவர், அவர் தோழர் ஈ.வெ.ரா.வின் சமீபத்தில் வந்து ரகசியத்தில் "கடவுள் பிரார்த்தனையில் கூட ஜாதி வித்தியாசம் காட்டப்படுகிறது” என்று சொன்னார்.

இப்புகார்களின் விளக்கங்களாவன:

சாப்பாட்டில் ஜாதி வித்தியாமென்பது சாப்பிடுவதில் பார்ப்பனர்களுக்கு வேறு இடமும், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடமும் பிரிக்கப்பட்டிருந்ததாகும். படிப்பில் ஜாதி வித்தியாசமென்பது பார்ப்பனர்களுக்கு சமஸ்கிரு தத்திலும், சில பாடங்களும் பார்ப்பனரல்லாதாருக்கு தமிழில் மாத்திரம் பாடமும், பாட புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.

கடவுள் பிரார்த்தனையில்

ஜாதி வித்தியாசமென்பது

பிள்ளைகள் காலை, மாலை பிரார்த்தனைகள் செய்யும் போது பார்ப்பனப் பிள்ளைகள் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனைப் பாட்டுகளும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தமிழில் தேவாரம் முதலிய பாட்டுக்களும் சொல்லிக் கொண்டு பிரார்த்தனை செய்யச் செய்வதாகும்.

இவற்றை வெளிப்படுத்தியவுடன் அய்யர் அவர்களுக்கு கோபம் வந்து மீசையும், தாடியும் படபடவென நடுங்க " இவற்றையெல்லாம் ஒரு வித்தியாசமெனச் சொல்வது துவேஷங்களைக் கற்பிக்கும் " என்றும், "இதனால் தான் - இந்த தொல்லையால்தான் நான் சாதம் சாப்பிடாமல் நிலக்கடலைப்பருப்பும், தேங்காயும், வெல்லமும் சாப்பிடு " வதாகவும், ''குருகுலம் வைத்துள்ள இடம் மிகவும் வைதிகர்கள் இடமானதால் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று” என்றும் கோபத்தோடு சமாதானம் சொன்னார். இந்தச் சமாதானத்தால் இந்தப் புகார்கள் உண்மை என்று விளங்கிவிட்டவுடன் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் சாஸ்திரியார் ஆகியவர்கள் அப்படியானால் அந்த இடத்தை ஏன் தெரிந் தெடுத்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவ்வளவுதான் தாமதம். அங்குள்ள மற்றவர்கள் - பார்ப்பனரல்லாதார்கள் அய்யர் அவர்களைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வேற்றுமை உணர்ச்சி பலப்பட்டவுடன் அந்தப் பிரச்சினை அதுசமயம் மெல்ல நழுவ விடப்பட்டு விட்டது. பாக்கி 5,000 ரூபாய் கொடுக்கப்படவில்லை.

பின்விளைவு

அடுத்தாற் போல் திருச்சியிலேயே கூட்டப்பட்ட ஒரு மாகாண வருஷாந்தர கூட்டத்தில் நிர்வாக சபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் போது தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் காரியதரிசியாக இருந்து செய்த வேலையையும் கொஞ்சநாள் இடைக்காலத் தலைவராக இருந்து செய்த வேலையையும் பாராட்டி தீர்மானம் செய்து பதிந்துவிட்டு புதுவருஷத்துக்கு ஈ.வெ.ரா. அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தேர்தல் நடந்த உடன் தோழர் ஈ. வெ.ராமசாமி அவர்கள் மீது தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னை முஸ்லிம் தோழர் ஒருவர் (தோழர் எஸ். சீனி வாசய்யங்கார் பாதுகாப்பில் இருந்தவர்) அதை ஆதரித்தார்.

திரு . வி. க. முதலியார்

உடனே. தோழர் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கு கோபம் வந்து எழுந்து மிக்க படபடப்போடு அய்யர் அவர்களிடத்தில் தனக்கு அதிக மரியாதை உண்டென்றும் ஆனால் இச்செய்கையை வெறுப்பதாகவும் கூறி, ஒரு உபந்யாசம் செய்தார். அதாவது, பாழும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அய்யர் கொண்டு வந்து இன்று புகுத்திவிட்டார் என்றும், காங்கிரஸ் ஏற்பட்டு இத்தனை காலத்துக்கு இன்றுதான் ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவரானார் என்றும் இவரது நடத்தையைப் புகழ்ந்து பாராட்டி தீர்மானம் செய்து 10 நிமிஷ காலத்துக்குள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதற்கு அன்பர் ராமசாமியார் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதுதான் காரணமே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்றும் அவர் போன்றவர்கதியே இப்படியானால், இனி, தம் போன்றவர் கதி என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டி இருக்கிற தென்றும் கூறி கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்தார். பிறகு அத்தீர்மானம் 100 க்கு எதிராக 10 என்கின்ற அளவில் தோல்வி அடைந்தது. அந்த 10 வீதமும் தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் சிப்பந்திகளேயாகும்.

அய்யரின் பண வசூல்

இது இப்படியே ஒருபுறம் புகைந்து கொண்டு இருக்க, ஆசிரமத்துக்கும் கெட்டபேர் வளர்ந்து வருகிற நிலையில் இருக்க, அய்யர் அவர்கள் சென்னை மாகாணத்தைவிட்டு வெளி இடங்களில் பணம் வசூலிக்கச் சென்றார். அதுசமயம் பத்திரிகைகளும் அய்யர் அவர்களை வானம்ளாவப் புகழ்ந்து பேசி வசூலுக்குப் பெருங்கொடை கொடுக்க சிபாரிசு செய்தன. தினம் தோறும் 1,000, 2000 ரூபாய் வசூலாவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன.

குறிப்பாக "தமிழ்நாடு” (வாரப்பதிப்பு) பத்திரிகையும், "நவசக்தி'' பத்திரிகையும் அய்யர்வாளை அதிகமாகப் புகழ்ந்து பொதுஜனங்களைப் பணம் கொடுக்கும்படி சிபாரிசு செய்து எழுதி வந்தன. இந்தச் சமயத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி மேற்படி இரு பத்திரிகைக்கும் இறுதிக்கடிதம் எழுதி வசூலுக்குச் சிபாரிசு செய்யாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டும் பயன் ஏற்படாமல் போனதால் தோழர் ஈ.வெ.ரா. இரண்டொரு இடங்களிலும் பேசும்போது டாக்டர் நாயுடு அவர்களைக் கண்டித்து பேசியதில் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே தோழர் தண்டபாணி பிள்ளை அவர்களை ஈ.வெ.ரா.விடம் அனுப்பி காரணம் கேட்டு சமாதானம் செய்து வரச் சொன்னார்.

டாக்டர் நாயுடு ,திரு.வி.க ,ஈ.வெ.ரா. 

ஒப்பந்தம்

அந்த சமயம் தோழர் ஈ.வெ.ரா.வும் தோழர் திரு. வி. கல்யாண சுந்திர முதலியார் அவர்களும் மாயவரம் தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் கேசுக்காகவோ அல்லது அவர் விடுதலைக்காகவோமாயவரம் சென்று இருந்தபோது தோழர் தண்டபாணி அவர்கள் அங்கு வந்து சேர்ந்து " இம்மாதிரி சில பொதுக் கூட்டங்களிலும், சில பேச்சுக்களிலும் டாக்டர் நாயுடு அவர்களைக் கண்டித்துப் பேசியது நியாயமா?" என்று கேட்டார். அதற்கு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் " தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் குருகுலம் என்கின்ற பெயரில் ஒரு ஸ்தாபனம் வைத்து காங்கிரசிடமும் பார்ப்பனரல்லாத பெருமக்களிடமும் பெருவாரியாக பணம் வசூலித்து வருணாசிரம் போதனை செய்து வருவதை நாயுடு அவர்கள் தெரிந்து இருந்தும், எச்சரிக்கை செய்யப்பட்டும் அய்யரை ஆதரிப்பது நியாயமா?" என்று கேட்டார். அதற்கு தோழர் தண்டபாணி அவர்கள் "முதலியார்வாள் ஆதரிப்பதால் நாயுடு வாளும் ஆதரிக்கிறார்” என்றார். உடனே அருகிலிருந்த தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் "டாக்டர் நாயுடு ஆதரிப்பதால் தான் நான் ஆதரித்தேன்" என்று கூறி திருச்சியில் ஈ.வெ.ரா. பேரில் அய்யரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தான் நடந்து கொண்டதை ஞாபகப்படுத்தினார்.

உடனே அங்கு ஒரு ஒப்பந்தம் நடந்தது. அதாவது இனி யாரும் குருகுல வசூலை ஆதரிக்கக்கூடாது என்றும் வசூல் செய்வதைக் கண்டித்து எழுதவேண்டும் என்றும் ஒப்பந்தம் நடந்தது.

குருகுலத்துக்குப் பணம் கொடுப்பது தேசிய பாவம்

அந்தப்படியே வஞ்சனையில்லாமல் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே குருகுல விஷயமாய் தனக்கு வந்திருந்த இரண்டு மூன்று இந்திய கடிதங்களையும் இரண்டொரு மலேயா நாட்டுக் கடிதங்களையும் குறிப்பிட்டு தமிழ்நாடு" (வாரப்பதிப்பு) பத்திரிகையில் ஒருதலையங் கம் எழுதி "குருகுலத்திற்கு பணம் உதவுவது தேசிய பாவம்” என்று எழுதி விட்டார். அதைப் பார்த்தபின் முதலியார் அவர்கள் “ நவசக்தி' யில் வழக்கம் போல் அதாவது முதல் இரண்டு எழுத்தை இரண்டு தரம் சேர்த்துச் சொல்வதுபோல் ஒரு தலையங்கம் எழுதினார்.

ஆனால், அதன் கருத்து அய்யரின் குருகுலத்தில் ஜாதி வித்தியாசம் இருக்கிறது என்றும் இவ்வித்தியாசம் ஒழிக்கப்படாமல் அய்யர்வாள் பணம் வசூல் செய்வது ஆதரிக்கத்தக்கதல்லவென்றும் விளங்கக் கூடியதாகும். இவ்வளவுதான் நடந்தது. உடனே " தமிழ்நாடு " ஆபீசுக்கும், "நவசக்தி'' ஆபீசுக்கும் பார்ப்பனக்கூட்டம் போவதும் வருவதும் மிரட்டுவதும் கெஞ்சுவதுமாய் இருந்தது. தோழர் திரு. வி.க. முதலியார்வாள் பயந்துவிட்டார். நல்லதுமில்லாமல், கெட்டதுமில்லாமல் நாயுடு அவர்களைப் போர் முகத்தில் தள்ளிவிட்டு ஜாடையாய் ஒதுங்கிக் கொண்டார்.

நாயுடு வெற்றி

டாக்டர் நாயுடுவாளுடைய இத்தலையங்கத்தைப் பார்த்த பின் அவருக்கு அநேக பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தன. தோழர்கள் தண்டபாணி பிள்ளை அவர்களும், பவானி சிங்கு அவர்களும் நன்றாய் சாவி கொடுத்தார்கள். டாக்டர் நாயுடுவும், தமிழ் நாடு முழுவதும் சரியானபடி இரவு பகலாய் அலைந்து திரிந்து ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணினார். இதனால் குருகுலத்துக்கு என்று மலாய் நாட்டில் வசூலித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30,000 ரூபாய் வரையில் அய்யருக்குக் கொடுக்கப்படாமல் நின்றுவிட்டது.

நாயுடு - நாயக்கர் மீது

நம்பிக்கை இல்லா தீர்மானம்

"டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராயும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயும் இருந்து கொண்டு இம்மாதிரி கிளர்ச்சி செய்வது தவறு'' என்று பார்ப்பனர்கள் இவர்கள் மீது கமிட்டியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார்கள். முதலில் நாயுடுகார் மீது கொண்டு வந்தார்கள். டாக்டர் ராஜன் அவர்களும், தோழர் சி.ஆர். ஆச்சாரியாரும் அத்தீர்மானத்தின் மீது பேசினார்கள். அது தோழர் ஈ.வெ. ரா.வால் எதிர்க்கப்பட்டு தோல்வி அடைந்தது. அதன்பின் டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானம் அக்கூட்டத்திலேயே ஈ.வெ.ரா.வால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விரு தீர்மானங்களிலும் பெரிதும் பார்ப்பனர் ஒருபுறமும், பார்ப்பனரல்லாதார் ஒரு புறமுமாக ஓட்டுக் கொடுத்தார்கள்.

டாக்டர் ராஜன், இராஜகோபாலாச்சாரி

ராஜிநாமா

மற்றும் குருகுல நடத்தையைக் கண்டித்தும், தீண்டாமை ஒழிய வேண்டியதுடன் ஜாதி பேதமும் ஒழிய வேண்டுமென்றும் குருகுலத்தில் காட்டப்படும் ஜாதி வித்தியாசத்தை உடனே நிறுத்தி விட வேண்டுமென்று அய்யரைக் கேட்டுக் கொள்வதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிமிஷத்திலேயே தோழர்கள் சி. ராஜ கோபாலாச்சாரி யார், டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரியார், கே.சந்தானம், என்.எஸ். வரதாச்சாரியார் முதலிய 10 பார்ப்பனர்கள் ராஜினாமா கொடுத்து விட்டார்கள்.

அதன்பின், அய்யர் அவர்கள் எதிர்பாராத விதமாய் கால் தவறி பாபநாசம் மடுவில் வீழ்ந்து தன் மகளுடன் இறந்துபோனார். பிறகு குருகுல விஷயமாய் பார்ப்பனரல்லாதார் கமிட்டி ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நியமித்து விசாரித்து குருகுலத்தைக் கைப்பற்ற ஏற்பாடு செய்தது. அது பலிக்கவில்லை . அக்கமிட்டியில், ஈ.வெ.ரா., டாக் டர் நாயுடு, எஸ். ராமநாதன், டாக்டர் ஆரியா, ராய.சொக்கலிங்கம், சொ. முருகப்பா, வை.சு.ஷண்முகம், எ.வி. தியாகராஜா முதலியவர்கள் வேலை செய்தார்கள். அக்கமிட்டி தோழர் தூத்துக்குடி மகா தேவையருடன் பெரும் போர் நடத்தி காந்தியார் வரை இவ்விஷயம் போய் அவர்களும் வழவழ என்று சமாதானம் சொல்லிவிட்டார். அதாவது ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்று கேட்பதும், தீர்மானம் செய்வதும் குற்றமல்லவென்றும் மறுப்பதும் குற்றமல்லவென்றும் அவரவர் இஷ்ட மென்றும் பொருள்படும்படி சொல்லி விட்டார்.

அன்று முதல் நாயுடுகார் மீது பார்ப்பனர்கள் கட்டுப்பாடாகப் போர்தொடுத்து அவர்கள் தலையில் கையை வைத்துவிட்டார்கள். தோழர் ஈ.வெ.ராவிடம் செல்ல முடியவில்லை. அவரும் காங்கிரசை விட்டு வெளிப்படையாய் வெளியில் வந்து விட்டார். டாக்டர் நாயுடு வெளிவர முடியாமல் தேசியம் பேசிக்கொண்டு அவர்களுக்குள்ளாக இருந்ததால் பார்ப்பனர்கள் சுலபத்தில் அவருக்குத் தொல்லை கொடுக்க முடிந்தது.

அவரைத் தேர்தலிலும் பலமாகத் தோற்கடித்தார்கள். அவரது பத்திரிகைகளையும் நிறுத்தும்படி செய்துவிட்டார்கள். பாவம்! முதலியார் அவர்களோ, டாக்டர் நாயுடு அவர்கள் நிலையை படிப்பினையாகக் கொண்டு வெகு ஜாக்கிரதையாகப் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.

மறுபடியும் பார்ப்பன ஆட்சி

இந்தமாதிரி நிலையில் குருகுலம் நிறுத்தப்பட்டதோடு அதன் சொத்துக்கள் தோழர் காந்தியார் வசம் ஒப்புவிக்கப்பட்டுவிட்டது. தோழர் காந்தியார் மறுபடியும் ஆசிரமத்தையும், சொத்துக்களையும் டாக்டர் ராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஆதிக்கத்திலேயே விட்டுவிட்டார். டாக்டர் ராஜன் அதை இப்பொழுது மற்றொரு சென்னை பார்ப்பனரின் சர்வாதிகாரத்தில் விட்டு இருக்கிறார்.

அதைப் பொறுக்க மாட்டாத ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் அதாவது, தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை குருகுலத்தின் நன்மையை உத்தேசித்து குருகுலத்தின் பழைய கதைகளை ஞாபகமூட்டி இப்போதாவது பார்ப்பனரல்லாதார் இடமாவது அல்லது பார்ப்பனரல்லா தாரும் கலந்த கமிட்டி இடமாவது குருகுலத்தை ஒப்புவிக்கக்கூடாதா? இவ்வளவு கலகம் நடந்தும் இனியும் பார்ப்பனரிடம்தானா ஒப்புவிக்க வேண்டும்? என்று கேட்டுவிட்டார்.

தோழர் திருநெல்வேலி கூத்தநயினார் பிள்ளை உண்மை காங்கிரஸ்வாதி. வயிற்றுப் பிழைப்புக்கோ, பதவி மோகத்துக்கோ காங்கிரசுக்கு வந்தவர் அல்ல. தன் காலில் நிற்கக் கூடிய சவுகரியம் உடையவர். அப்படி இருந்தும் அவரை இப்போது காங்கிரஸ் பார்ப்பனர்கள் உடனே வகுப்பு வாதி என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதற்குச் சமாதானம் சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டிய நிலைமை தோழர் சாவடி கூத்த நயினார் பிள்ளைக்கு வந்து விட்டது. அந்த சமாதானத்தில் அவர் சொல் லுவதாவது: "குருகுலத்தின் பழைய சரித்திரத்தை முன்னிட்டு இந்த ஆசிரமத்திற்கு ஒரு பார்ப்பனரல்லாதாரை நியமிப்பது நல்லது என்று பொதுவாகக் கருதப்படுகிறது என்று நான் கூறினேன் " இதனால் நான் வகுப்புவாதி ஆய்விட்டேனா? என்று அழுகிறார்.

அது எப்படியோ போகட்டும். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் 100 - க்கு 97 பாகம் பார்ப்பனரல்லாதார் இடம் வசூலித்த பணத்தில் ஏற்படுத்தப்பட்ட குருகுலம் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற பேதத்தாலேயே தமிழ்நாட்டில் ஒரு பெருத்த புரட்சியை உண்டாக்கிவிட்டு அதனாலேயே அழிப்பட்ட ஒரு குருகுலத்தை மறுபடியும் புனருத்தாரணம் செய்ய முயற்சிக்கும் போது மறுபடியும் ஒரு பார்ப்பனரே சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவதென்றால் பார்ப்பனர்களின் தைரியம் எப்படிப்பட்டது என்பதைப் பொதுஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்பியே பழைய கதைகளுடன் இவ்விஷயத்தை வெளிப்படுத்துகிறோம்.

ஆகவே, எப்படிப்பட்ட சுயமரியாதையும், வீரமும் உள்ள பார்ப்பனரல்லாதாரானாலும் வயிறு வளர்த்துக் கொள்ளவும், பதவி பெறவும் மாத்திரம்தான் காங்கிரசில் இருக்க முடியுமே ஒழிய, கலப்படமில்லாத ரத்த ஓட்டமிருந்தால் அரை விநாடிகூட காங்கிரசில் இருக்க முடியாது என்பதை இச்சம்பவம் ருஜூப்பிக்கிறது.

- குடிஅரசு; 20.06.1937.

Read 1533 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.