Monday, 28 September 2020 01:44

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 77

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் : கா. கருமைலயப்பன்

 

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப்பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர்களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகு நாட்களாகிவிடவில்லை. அதற்குள்ளாக மற்றோரிடத்தில் சமத்துவத்தை நிலைநாட்டத் தோன்றியுள்ள சத்தியாக்கிரகதிதைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும் அக்கிரமமும் தொலைய வேண்டுமானால், வெறும் சட்டங்களாலும், எழுத்தாலும், பேச்சாலும் முடியாதென்றும், சத்தியாக்கிரகமும், தியாகமுமே உற்ற சாதனமாகுமென்றும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் சாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு, தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலையவேண்டியது அவசியமாகும். இக் கொடுமைகளை ஒர் பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணிர் விடுவதும், தன் மனச்சாட்சி அறிய செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல.

மேலும், இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பொதுஜனங்களை ஏமாற்றுவதும், எலெக்க்ஷன் பிரச்சாரம் செய்வதும் மிக மோசமான செய்கையாகும். தாங்கள் பிழைக்க வேண்டும்; தங்கள் மக்கள் நன்றாயிருக்கவேண்டும், தங்கள் சமூகத்தார் மேன்மையான ஸ்திதியில் இருக்கவேண்டும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்ப் பட்டிருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய் சாஸ்திரங்களையும் புராணங்களையும், இதிகாசங்களையும், மனுதர்ம சாஸ்திரம் என்னும் அயோக்கிய நூலொன்றையும் காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன், தங்கள் கட்சியைப் பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற, ஆண்மையற்ற சிலரைச் சேர்த்துக்கொண்டு செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் நொறுக்கப்பட வேண்டுமாயின், பொது மக்கள் சர்வ ஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவைகளையெல்லாம் சுட்டிக்காட்டவல்லது சுயமரியாதையும், சத்தியாக்கிரகமும், உண்மையான தியாகமுமே என்று கூறலாம்.

நமது நாட்டிலேயே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள் கண்ணில் தென்படக்கூடாதவர்கள், தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள், தங்கள் வேதத்தைப் படிக்கக்கூடாதவர்கள் என எத்தனையோ இலட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந் நிலைமையில் நமக்கு சுயராஜ்யமும், விடுதலையும் அத்தியாவசியமா? அல்லது முன் கூறியவர்களின் முன்னேற்றமும் சுயமரியாதையும் அத்தியாவசியமா? என்பதைப் பொது மக்களே சிந்திக்கவேண்டும்.

சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள யாவருக்கும் ஏற்பட்டாலன்றி அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஓர் சாதியார் பிழைப்பிற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது, வேறல்ல.

சுயராஜ்யம் கிடைக்குமுன் நம்மவர்களுக்குள் எவ்விஷயத்திலும் ஒற்றுமை, சமத்துவம், சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச் செய்துகொள்ள வேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்துவம் ஏற்படுமானால் பிராமணர்கள்? பாடு திண்டாட்டம் ஆகிவிடுமென்பது உண்மையே. முன்னர் கூறிய நூல்களைக் காட்டிக்கொண்டு பிராமணர்கள் வயிறு வளர்ப்பது நின்றுபோய்விடும். சுயமரியாதை உண்டாகிவிடுமானால், பிராமணர்கள் நிலை இப்போது இருப்பது போலிராமல் கீழ் நிலையடையலாம். இங்ஙணம் நேரிடுமென்பதைக் கருத்தாகக்கொண்டே, இராஜீய பிராமணர்களாகட்டும், சில சர்க்கார் உத்தியோக பிராமணர்களாகட்டும், அவர்கள் மிதவாதிகளோ, சுயேச்சைக் கட்சியோ, ஆச்சாரியாரோ, அய்யங்காரோ, அய்யரோ, பந்துலுவோ, எவராயிருந்த போதிலும் சரி, ஒன்று கூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை, தமிழர்களை எதிர்த்து நிற்கின்றார்கள்.

நிற்க; பிராமணர்கள் அநியாயம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல; திருவிதாங்கூரிலும் அதிகமாக இருக்கிறதை வைக்கம் சத்தியாக்கிரகத்தின் மூலமாய் யாவரும் அறிவார்கள். திருவாங்கூர் கவர்ன்மெண்டார் இவ்வநியாயங்களுக்கு உடந்தையாயிருக்கின்றார்களோ எனச் சிலர் சந்தேகிக்கக்கூடும். திருவிதாங்கூர் இராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் சாதி, மத வித்தியாசமில்லாமல் பொதுஜனங்கள் அனுபவிக்கலாம் எனச் சில வருடங்களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக, கவர்ன்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய சாதிகளாகிய நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மாநாடுகளில் பொது ரஸ்தாக்களிலும், பொதுக் குளங்களிலும் சாதி, மத வித்தியாசங்கள் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர், செய்து வருகின்றனர். ஆக, பொது ஜனங்களின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடைஞ்சலாயிருப்பவர்கள் பிராமணர்களேயாவார்கள். இதிலும் மலையாள நம்பூதிரி பிராமணர்களைவிட, அங்கு பிழைக்கவும், அங்குள்ள கோயில் சோற்றைச் சாப்பிடவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பிராமணர்களே அதிக இடைஞ்சல் செய்பவர்களென்று கூறத்தக்க ஆதாரமுண்டு.

இவர்களின் இடைஞ்சல்களும், தொந்தரவும் தொலைய வேண்டுமானால் சத்தியாக்கிரகந்தான் சிறந்த வழி. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.

தமிழ் நாட்டினர், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும் ஒத்தாசை செய்தார்களோ, அவ்வாறே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் தாங்கள் நன்கொடையளித்தும், ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்.

பிராமணர்கள் பலரும், மற்ற வகுப்பாரைச் சார்ந்த சில சுய நலக்காரர்களும் இச் சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாய் இருப்பார்களென்பது உண்மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர் வெகு சிலரேயானபடியால் பொதுமக்கள் இவர்களைப்பற்றிக் கவனிக்கவேண்டிய அவசியமே இல்லை. தங்கள் கடமை எதுவோ, எது நியாயமெனத் தங்கள் மனத்தில் படுகிறதோ, அதை மாத்திரம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, இப்படிப்பட்ட சமயத்தில் இத்தகைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம். தமிழ் நாட்டுத் தேசிய வாலிபர்களானாலும் சரி, மற்றும் எந்தக் கட்சியைச் சேர்ந்த எவரேயானாலும் சரி, அனைவரும் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டு செய்ய அவசியமேற்படும்போது தயாராயிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தமிழ் நாட்டார் சுசீந்திரத்தில் உரிமைப் போர் நடப்பதற்குத் தங்களாலியன்ற நன்கொடையைக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுமாகுக !

- குடிஅரசு; 31.01.1926.

திருவாங்கூரில்

மறுபடியும் சத்தியாக்கிரகம்

திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம்; இம்மாதிரி நாகர்கோவிலைச் சேர்ந்த கோட்டார் டாக்டர் எம்.எம்பெருமாள் நாயுடு அவர்கள் நமக்கு எழுதியிருக்கிறார். மழைவிட்டும் தூறல் விடவில்லை என்று சொல்லுவதுபோல் வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து தெருவில் நடக்கும் உரிமை பெற்றால், அது வைக்கத்திற்கு மாத்திரம்தான் செல்லும்; மற்ற இடங்களுக்குச் செல்லாது என்கிற வியாக்கியானம் செய்து கொண்டு, அங்குள்ள வர்ணாசிரமிகள் மறுபடியும் உபத்திரவம் செய்வதாய்த் தெரிகிறது.

வைக்கம் சத்தியாக்கிரகம் சம்பந்தமாய் திருவாங்கூர் அரசாங்கத்தார் எவ்விதமான உத்திரவும் போடவேயில்லை. வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குச் சர்க்காரர் செய்ததெல்லாம் தெருவில் ஜனங்களைத் தடுக்க நிறுத்தியிருந்த காவலர்களை எடுத்து விட்டதுதான் அவர்கள் செய்த வேலை. இதற்காக ஓர் உத்தரவு போடும்படி சர்க்காரைக் கேட்டதற்கு அவர்கள் தாங்கள் வெகு வருஷங்களுக்கு முன்னதாகவே, பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாசமில்லாமல் பொது ஜனங்கள் அனுபவிக்கத்தக்கது என்று உத்திரவு போட்டிருக்கிறோம் என்று மறுமொழி சொல்லி விட்டார்கள்.

ஆதலால், இப்பொழுது சர்க்காரர் பேரில் குற்றம் கூற இடமில்லை. பிராமணர்களொழிந்த நாயர் முதலிய பிராமணரல்லாத உயர்ந்த ஜாதியாரென்று சொல்லப்படுகிறவர்களும் தங்கள் வகுப்பு மகாநாடுகளின் மூலமாக பொது ரஸ்தாக்களிலும், பொதுக் குளங்களிலும், சகல இந்துக்களும் தாராளமாய் நடமாடலாமென்கிற தீர்மானத்தையும் ஏகமனதாய்த் தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆதலால், இப்பொழுது சம உரிமைக்கு இடைஞ்சலாயிருப்பவர்கள் பிராமணர்களென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி ஒவ்வொரு காரியங்களுக்கும் சம உரிமைக்கு விரோதமாய் நின்று கொண்டு மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் இந்த ஜாதியார், எத்தனை நாளைக்கு இப்படியே வாழக்கூடுமென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்நாட்டுச் சகோதரர்களே!

சுசீந்திரத்தில் டாக்டர் எம். எம்பெருமாள் நாயுடு அவர்கள் எழுதியிருப்பதுபோல் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசிய மேற்படுமேயானால், வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு நமது கடமையைச் செய்தது போலவே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்துக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சார்பாக டாக்டர் எம்.எம்பெருமாள் நாயுடு அவர்களுக்குத் தமிழ்நாடு தனது கடமையைச் செய்யத் தவறாது என்று வாக்குக் கொடுக்கிறோம்.

- குடிஅரசு; 17.01.1926.

மறுபடியும்

சத்தியாக்கிரகத்தை துவக்குங்கள்

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால், ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டதுபோல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ, கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால், சத்தியாக் கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு; 23.05.1926.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொதுஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களைச் சில பொதுத்தெருக்களில் நடக்க விடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அதன் பிறகும் அதே ராஜ்யத்தில் மற்றும் பல பொதுத்தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்கள் உபத்திரவப்படுவதும், சிற்சில இடங்களை அந்தச் சர்க்கார் அனுமதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆகவேண்டுமென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்திய தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் எல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும் படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தைத் திடீரென்று நிறுத்தும்படி செய்துவிட்டார்கள்.

இம்மாதிரி மேற்படி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோடு போட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு ரூபா பத்தாயிரம்வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இம்மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்பந்தப்பட்டவர்களும், அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக்கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும், சுற்றுப் பக்கத்துப் பிரமுகர்களுடனும், தொண்டர்களுடனும் கலந்து, சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பிவிட்டு, அதற்குள் தேவையான பிரச்சாரம் செய்து தக்க ஆதரவைத் தேடிக்கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண் காரியத்தில் பிரவேசித்து அனாவ சியமாய் சிறை சென்று வருகிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்துகூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கபடி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.

- குடிஅரசு; 04.09.1927.

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40 வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3 மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர் கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது. அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொது ஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்யமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோட்டில் நடக்கக்கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாபசாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமூகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மத விரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போர்

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அதுபோன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்யத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று, பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்தபிறகு அந்த வழி நடைப்பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடையதாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாற்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்தவருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலீசு சூப்பிரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின்போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண் ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரச்சாரம், எதிர் பத்திரி கைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற்கெல்லாம் வெளிப்படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

இந்திய மன்னர்கள்

நிற்க; எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றியான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப் படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும். அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக் கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரக மானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக்கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம்கிடைப் பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமூக சீர்திருத் தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக்காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவதுடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

விளையாட்டுப் பேச்சு

இன்றைய தினம் சுசீந்திரத்தில் தெருவில் நடக்கத் தடைப்படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத்தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர்களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டுப் பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டி யார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர்கோவிலிலாவது, திருநெல் வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றி பெற்றவர்களாவோம். இந்த சத்தியாக்கிரகமானது 1925 வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப்பட்டதாகும். அவ்வாக்குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படுகின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்புப் பலம் இருக்க நியாயமிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.

ஆகையால், சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசிய வாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள்! எதிர்பாருங்கள்! என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு; 01.06.1930. 

Read 638 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.